வலைப்பதிவாளர்களுக்கான விருதுகள் அறிவிப்பு
கதையளப்பு 1
தமிழ்ச்சமூகத்தில் வாழ்வதே நெருக்கடியானதுதான். படிக்கும்போது என்ன படிக்கிறாய் என்று கேட்பார்கள். சொன்னால் 'ஏன் அந்த கோர்ஸ் கிடைக்கலையா' என்பார்கள். பிறகு என்ன வேலை பார்க்கிறாய் என்று கேட்பார்கள். வேலைபார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கல்யாணம் ஆகலையா என்பார்கள். அந்த எழவையும் பண்ணியபிறகு 'ஒரு வருஷமாச்சு இன்னும் குழந்தை பிறக்கலையா' என்பார்கள். கடைசியாக இன்னும் நீ சாகலையா என்பதைத் தவிர அடுத்தவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே கழிவதுதான் தமிழ் வாழ்க்கை.
இத்தகைய அவஸ்தைகளுக்கு மத்தியில் அரசும் தமிழ்ச்சினிமாக்காரர்களும் இலக்கியவாதிகளும்தான் ஏதாவது காமெடி பண்ணி நம்மை ரிலாக்ஸ் ஆக்குவார்கள். அந்தவகையில் அரசு வழங்கும் 'காமெடி டைம்' விருதுகள் திடீரென்று இந்த வருடத்திற்கான சிறந்த சினிமா என்று அருணாச்சலத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். கனகாவுக்கு கலைமாமணி விருது கொடுப்பார்கள். வைரமுத்து, மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுப்பார்கள். அந்த வரிசையில் அடுத்த சாகித்ய அகாடமி விருது குத்திசைக்கவிஞர் பேரரசுக்குக் கொடுக்கப்படவிருக்கிறது என்று 'நம்பத்தகாத' வட்டரங்கள் தெரிவிக்கின்றன.
இதைவிடக் காமெடி, அருணாச்சலத்தைச் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கும்போது சினிமாக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் சாகித்திய அகாடமி விருதை வைரமுத்துவுக்குக் கொடுத்துவிட்டால் இலக்கிய வியாதிகளுக்கு வருமே கோபம்.
சுந்தரராமசாமி, சுந்தரராமசாமி என்று ஒருவர் இருந்தார். அவர் மூன்று நாவல்கள் எழுதினார், சில சிறுகதைகள் எழுதினார், பல கவிதைகள் எழுதினார், அப்புறம் எழுத்தாளர்களோடு சேர்ந்து தோசை சாப்பிட்டார், அவர்களுக்கு வீட்டிலேயே சாப்பாடு ஆக்கிப் போட்டார், சினிமா போஸ்டர்களை வெறித்து வெறித்துப் பார்த்தார், (இவையெல்லாம் நான் கிண்டலுக்காக சொல்லவில்லை. சு.ரா இறந்தபோது அவருக்கு எழுத்தாளர்கள் எழுதிய அஞ்சலிக்கட்டுரைகளைப் படியுங்கள்), அவ்வப்போது சரக்கடித்தார், ஜவுளிக்கடை நடத்தினார், டைட்டானிக் ஹீரோ, ரஜினிகாந்த் ஆகியோரின் போஸ்களில் புதுவை இளவேனில் என்னும் தலித்தை வைத்து போட்டோ எடுத்து கண்காட்ச்சியும் நடத்தினார், காலச்சுவடு என்னும் இலக்கியக் கம்பெனியை ஆரம்பித்து அதை இந்து வாரிசுரிமை அடிப்படையில் தன் மகனை மேனேஜராக நியமித்தார், கடைசியில் செத்தும் போனார். இத்தகைய சாதனைகளுக்கு நியாயமாக அவருக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் வருடாவருடம் அவருக்கு அந்த விருது கிடைக்காது. உடனே தேர்வுக்கமிட்டியில் அரசியல், அரசாங்கத்திற்கு அறிவு கிடையாதுது என்கிற ரீதியில் கண்டனங்கள் எழும். அவருடைய இலக்கியக் கம்பெனியான காலச்சுவடுவில் எழுத்தாளர்கள் கட்டுரை எழுதுவார்கள். சாகித்திய அகாடமி விருதுக்குத் தகுதியானவர்கள் யார் என்று அவர்கள் எழுதும் பட்டியலில் வெவ்வேறு எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். அதோடு எல்லோருடைய பட்டியலிலும் தவறாமல் இடம்பெறும் பெயர் 'சுந்தரராமசாமி'. ஆனால் கடைசிவரை அவருக்கு இந்தக்கொடுப்பினை கிடைக்கவில்லை. இந்தவருடம் புலம்ப அவருமில்லை. பெரியார் நெஞ்சில் முள்ளோடு செத்துப்போனதைப்போல சு.ராவின் நெஞ்சில் தைத்த முள் 'சாகித்திய அகாடமி விருது'.
சரி, அதுபோகட்டும். நம்முடைய வலைப்பதிவாளர்கள் சு.ராவை விட நன்றாக எழுதுகிறார்கள். (என்ன பின்னூட்டம் பாலா மட்டும் சு.ரா மாதிரி கேணத்தனமாக எழுதுவார்). இவர்களுக்கு விருதுகள் கொடுக்கப்படவேண்டியதுதானே ஞாயம்? ஆனால் எனக்கு இந்த ஸ்டார் குத்துவது போன்ற குத்துவேலைகள் எல்லாம் தெரியாது. போனமுறை சந்தித்தபோது ஒரு நண்பர் புலம்பினார். 'போனமுறை சிறந்த வலைப்பதிவாளரைத் தேர்ந்த்கெடுக்கும் குழுவின் ஜூரி பத்ரி. அவர் முகமூடியைத் தேர்ந்தெடுத்தார். இந்த வருடம் முகமூடி ஜூரி, அவர் பத்ரியைத் தேர்ந்தெடுக்கிறார்' என்று.ஆகமொத்தம் இன்னும் ஒரு இருபதாண்டுகளுக்கு பத்ரியும் முகமூடியும் மட்டுமே விருது பெறும் அதிர்ஷ்டசாலிகள் என்பதால் நாமே இந்த விருதுகளைக் கொடுத்தால் என்ன தோன்றியது. இந்த விருதுகள் தனித்துவமிக்க பட்டங்களாகவும் இருக்கும். சிலவிருதுகள் தமிழ்ச்சமூகத்திற்குச் சேவைசெய்தவர்களின் பெயர்களைத் தாங்கியதாகவுமிருக்கும். இனி விருதுகள்....
செந்தில் - கண்ணதாசன் விருது( கவிதைகளுக்கு அல்ல, குடிப்பதற்கு மட்டும்)
யெஸ்.பாலபாரதி - மொக்கைவேந்தன்
லக்கிலுக் - அனானிச்செம்மல்
நாமக்கல் சிபி - மிஸ்டர் ஒயிட்
(பல சமயங்களில் 'வித்தியாசமான' பதிவுகள் என்ற பெயரில் ஒண்ணுமேயில்லாத பதிவைப் போடுவதால்)
தூயா - மசால்மாமணி
தமிழ்நதி - கண்ணீர்க்காவியக் கலைஞி
(கனடாவில் இவர் இருந்தபோது மக்களுக்குச் சிறந்த தொண்டாற்றியதற்காக கனடிய அரசே இவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவர் செய்த தொண்டு - சிலகாலம் கவிதைகள் எழுதாமல் இருந்தது)
பொன்ஸ் - குழந்தை எழுத்தாளர்
விடாதுகருப்பு - வசைஞானி
உணர்வுகள் - வெள்ளாளவேங்கை
ராம.கி - தனித்தமிழ்ச்சித்தப்பா
(ஏற்கனவே மறைமலையடிகள் தனித்தமிழ்தந்தையாக இருப்பதால்)
பெயரிலி - இடாலோகந்தசாமி
பொட்டிக்கடை சத்யா - டாக்டர் ராஜசேகர் விருது
( எவனா இருந்தா எனக்கென்ன, எங்கடா உங்க எம்.எல்.ஏ, இதுதாண்டா போலிஸ், நாந்தாண்டா பேமானி போன்ற 'மரியாதையான' படங்களை எடுத்தவர்)
செந்தழல் ரவி - இயக்குனர் கர்ணன் விருது
(பல 'ஏ' படங்களை வெளியிடுவதால்)
குழலி - சமூகநீதி ஸ்பெசலிஸ்ட்
ஓகை - 'பார்' பாரி
சின்னக்குட்டி - வலையுலகப் பயாஸ்கோப்
கொசுபிடுங்கி - துப்பறியும் சாம்பு
கதையளப்பு 2 : இன்னும் ஞாபகத்திற்கு வரும் பெயர்களைத் தொடர்ந்து எழுதுகிறேன். டோண்டுராகவன் அவர்களை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொளவில்லை. இலவசமாகக் கிடைக்கிறார் என்பதற்காக எவ்வளவுதூரம்தான் அடிப்பது?
கதையளப்பு 3 : நான் எது எழுதினாலும் இதுதான் பின்நவீனத்துவமா, பின்ப்நவீனத்துவக் கவிதையா, ஒன்னுமே புரியலை என்றெல்லாம் எழுதி சமயத்தில் நாம் எழுதுவதுதான் பின்நவீனத்துவமா என்று எனக்கே கன்ப்யூஸ் ஆகும் அளவிற்குப் பின்னூட்டமிட்டு அனானிகள், சுனாமிகள், பாலாகக்ள், போலிபாலாக்கள், போலி பாலாவுக்குப் போலி பாலாக்கள் பீதியைக்கிளப்புவதால் இந்த ஜாலியான பதிவு. இதை யாராவது பின்நவீனப்பதிவா என்று கேட்டால்....அழுதுடுவேன். நீங்களும் எனக்கு விருதுகள் வழங்கி வஞ்சம்தீர்த்துக்கொள்ளலாம்.