முரளிமனோOகர் - ஒரு பின்நவீனத்துவ சிறுகதை முயற்சி(?)
இது ஒரு பின்நவீனச்சிறுகதை என்பதால் நான்லீனியர் முறையில்தான் எழுதவேண்டுமென்று தமிழகத்தின் பின்நவீன எழுத்தாளர்களாகிய வரவணையான், சாருநிவேதிதா, புஷ்பாதங்கதுரை ஆகியோர் தெரிவிக்கின்றனர். ஆனால் ஈழத்தின் புகழ்மிக்க இலக்கியவாதிகளான பெயரிலி, டிசேதமிழன், நிவேதா, தமிழ்நதி, பி.எச்.அப்துல்ஹமீது போன்றோர் நோன்லீனியர் முறையில்தான் எழுத வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். கடைசியில் இந்திய ஈழ இலக்கிய ஒப்பந்த முறையில் நாநோ முறையில் எழுதுவது என்று தீர்மானமாயிற்று.
இந்த ஒப்பந்தம் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்ததென்றும், இனி, 'புகலிட இலக்கியம்தான் தமிழ் இலக்கியத்திற்குத் தலைமை தாங்கமுடியும்' என்று எஸ்.பொ கதைக்கமுடியாது, கதைதான் விடமுடியுமென்று வசந்தன் என்ற எழுத்தாளர் எழுதுகிறார். நநோவோ நேநோவோ தமிழில்தான் பெயர்வைக்கவேண்டுமென்றும் இல்லையேல் மதுக்கடைகளைப் பூட்டும் போராட்டம் நடத்தப்போவதாகவும் மருத்துவர் ராமதாசு அறிவித்துள்ளார். மதுக்கடைகளைத் திறந்துவைப்பதாலேயே இதுபோன்ற புதிய சிந்தனைகள், உளறல்கள், குழப்பங்கள் உண்டாகின்றன என்பது அவரது எண்ணம் (அ) கண்டுபிடிப்பு.
சரி, கதை தொடங்குகிறது. இல்லையில்லை கதை எங்கிருந்தும் தொடங்குவதில்லை. கதை ஏற்கனவே இருக்கிறது என்று மறுபடியும் குறுக்கிடுகிறது பி.ந. வரலாற்றின் அடுக்குகளில் காலம் நழுவிப்பின் செல்லும்பொது கட்டபொம்மன் வாளைச்சுழற்றிக்கொண்டிருக்கிறான்.
"யாருக்கு வேலைபார்த்தாலும் வேலைபார்க்கலாம், ஆனால் இந்த எழுத்தாள நாய்களுக்கு மட்டும் வேலைபார்க்கக்கூடாது, அதுவும் பின்நவீன எழுத்தாளன்களுக்கு.." என்று புலம்பிக்கொண்டிருந்தான். விதி வலியது என்பதால் அவன் செர்வாண்டீஸ் என்ற பி.ந. எழுத்தாளனிடம் வேலைபார்த்துக்கொண்டிருந்தான். செர்வாண்டீசோ தன் ஆதித்தாயின் தொன்மத்தடங்களைத் தேடியலைவதால் அதற்கெனவே குதிரை வளர்த்துவந்தான். அதைப் பராமரிக்கும் பொறுப்புதான் யூனூசுக்கு.
திடீரென்று முகமதுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. கட்டபொமன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த நேரமும் ஹிட்லர் தூக்கிலிடப்பட்ட நேரமும் ஒரே நட்சத்திரத்திலேயே அமைந்திருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்ட செர் உடனடியாக ஜெர்மனுக்குக் கிளம்பிவிட்டான். (ஒருபுறம் இஸ்ரேலை ஆதரிப்பது, மறுபுறம் யூதர்களைக் கொலைசெய்யும் இட்லரை ஆதரிப்பது அவனின் இரட்டைவேடத்தையே காட்டுகிறது என்று முனிவேலுக்கவுண்டர் என்ற எழுத்தாளர் 'குகை இருட்டு' என்ற இலக்கியப்பத்திரிகையில் எழுதியிருந்தார்.)
அரவிந்தன் ஆலகண்டன் பள்ளியில் படிக்கும்போதே தகப்பன்காளி என்னும் தன் தந்தையின் கையெழுத்தைப் பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் போட்டிருந்தார் என்று எழுத்தாளர் முரளிமனோகர் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இதற்கு மறுப்பு எழுதிய அரவிந்தனோ முரளிமனோகரின் ஹாபியே மொட்டைக்கடிதாசி எழுதுவதுதான் என்றும் அப்படி ஒருமுறை 'வெடிகுண்டு இருக்கிறது' என்று போலீஸ்டேசனுக்கு எழுதிய மொட்டைக்கடிதாசியில் தெரியாமல் கடைசியில் 'அன்புடன் முரளிமனோகர்' என்று எழுதி மாட்டிக்கொண்டார் என்றும் பதிலுக்குக் குற்றம் சாட்டியிருந்தான்.
இந்த இலக்கியச் சண்டைகளில் சுவாரசியமாகிப்போன முகமதுயூனூஸ் தானும் எப்படியாவது வம்புபேசி எழுத்தாளனாவது என்று கங்கணம் கட்டிகொண்டான். இதற்காக செர்வாண்டீசின் பழைய கையெழுத்துப்பிரதிகளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.
அதில் 'டட்ச் ட்ரீட் ஒரு கட்டவிழ்ப்பு' என்ற கட்டுரையில் முரளிமனோகருக்கும் திராவிட விழியான் என்ற எழுத்தாளருக்கும் நடந்த விவாதத்தை முன்வைத்து ஒரு கட்டுரை வரைந்திருந்தான்.
திராவிட விழியான் : டட்ச் ட்ரீட் முறையில் எனக்கொரு சந்தேகம் இருக்கிறது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு செட் மசாலா போண்டா, ஒரு பாஸந்தி, ஒரு மசால் தோசை சாப்பிடுகிறீர்கள்.
நான் வெறும் மெதுவடை மட்டுமே சாப்பிடுகிறேன். வரும் பில்லை சரிபாதியாக பகிர்ந்துக் கொண்டால் அது நியாயமாகுமா?
அவரவர் சாப்பிட்டதற்கு ஏற்ப அவரவர் தொகையை தருவதே முறை
முரளிமனோகர் : யார் என்ன சாப்பிட்டாலும் பில் மொத்தமாகப் பகிர்ந்து கொள்ளப்படும். ஆகவே யார் வருவதாக இருந்தாலும் வயிற்றில் இடம் வைத்து கொண்டு வாருங்கள் என்று ஒவ்வொரு முறையும் கூறுவேன். இதில் ஒளிவு மறைவே இல்லை.
முரளிமனோகரின் இந்த சொல்லாடல்கள் சமூகசமத்துவத்தை மறுக்கின்றன. சமமற்றவர்களுக்கான சமமற்ற வாய்ப்புகள் என்னும் சமூகநீதியை மறுப்பதால் இது அடிப்படையில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தேயாகும்' என்று கட்டவிழ்த்திருந்தான் செர்வாண்டீஸ்.
திடீரென்று செர்வாண்டீசின் பிரதிகளில் தோன்றிய முரளிமனோOகர் 'அந்த பன்னாடைக்கு டட்ச் ட்ரீட்டெல்லாம் தெரியாது, அவனுக்குத் தெரிந்ததெல்லாம்...' என்று கெட்டவார்த்தையில் திட்ட ஆரம்பித்திருந்தார். எப்படி இங்கே போலிமுரளிமனோகர் வந்தார் என்பது முகமது யூனூசுகுத் தெரியவில்லை. ஆனால் பிந்தையப் பிரதிகள் முழுவதையுமே முரளிமனோOகரே எழுத ஆரம்பித்திருந்தார்.
பின்நவீனத்துவ எழுத்தாளன் என்பவன் சினிமாவுக்கு வசனம் எழுதவேண்டும் அல்லது ஏதாவது வாரப்பத்திரிகையில் கிசுகிசு எழுதவேண்டும் என்று நிர்நிர்மாணம் அடிப்படை விதி எண் (295) கூறுவதால் முகமது யூனூஸ் மிட்நைட்கழுகார் என்ற புனைபெயரில் ஒரு வாரப்பத்திரிகையில் எழுதிய கிசுகிசு.
தமிழாய் மணக்கும் ஒரு இணைய இதழ் தன் திரட்டியில் வரும் கட்டுரைகளைத் தொகுத்து 'தி பார்க்' என்ற பெயரில் தொகுப்பாய்க் கொண்டு வருவது தெரிந்ததே. இந்தவாரம் 'தி பார்க்' இதழோடு டூண்டோ சிறப்பிதழ் ஒன்று இலவச இணைப்பாய் வழங்கவுள்ளது'.