புலி அரசியலிடமிருந்து விடுதலை அடைவோம்!






தற்போதுள்ள சூழ்நிலையில் புலிகள் மீது மாற்றுக்கருத்தாளர்கள் முன்வைக்கும் விமர்சனங்களையட்டி நண்பர்களுக்கிடையில் நடைபெற்ற விவாதங்கள், விவாதங்களின் இடையே இணைய வாசகர்கள் முன்வைத்த கருத்துக்கள், கண்டனங்கள், அணிச்சேர்க்கை என எல்லாவற்றையும் நண்பர்கள் கவனித்து வந்திருக்கலாம். இத்தகைய விவாதங்களைத் தொடங்கி வைத்தவர்களும் தொடர்ந்து சென்றவர்களும் இலக்கிய நண்பர்களே. இவர்கள் அனைவருக்குமே சமூகத்தில் சின்னஞ்சிறு பிரிவினரிடமாவது அசைவுகளை ஏற்படுத்திய பங்களிப்பு பெருமை உண்டு. ஆனால் அவையெல்லாம் ஒருகட்டத்தில் திசை மாறிப் போய் அரசியலற்ற பேச்சுக்கள் உற்பத்தியாகி, தனிநபர் தாக்குதலாய்க் குறுகிப்போனதையும் துயரத்துடன் அவதானிக்க வேண்டியிருந்தது.

வால்பாறையிலும் மதுரையிலும் என்ன நடந்ததென்று தெரிந்துகொண்டவர்கள், சென்னை தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் நடத்திய ‘பன்முக வாசிப்பில் ஈழக்கவிதைகள்’ அரங்கத்தில் என்ன நடந்ததென்று தெரிந்து கொள்வதிலும் தவறில்லை. பொதுவாக கவிதைத்தொகுப்பு குறித்த விமர்சன அரங்கம் என்பதால் கூட்டத்தின் முற்பகுதி முழுவதும் கவிதைத்தொகுப்பு பற்றியதாகவே இருந்தது. கவிஞர் லதாராமகிருஷ்ணனின் பேச்சுதான் கூட்டத்தின் போக்கை மாற்றிப் போட்டது. லதாராமகிருஷ்ணனின் கோபம் முழுக்க கவிஞர் தாமரை எழுதிய ‘கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்’ என்ற கவிதையைப் பற்றியதாக இருந்தது.

முகாம்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும்போது இத்தகைய ‘பொறுப்பற்ற, உணர்ச்சிவசப்பட்ட’ கவிதைகளும் பேச்சுகளும் தமிழர் நலன்களுக்குத்தான் பாதகம் விளைவிக்கும் என்றும் மேலும் ஒரு கவிஞர் நம் நாட்டின் மீது சாபம் விடுவதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்றும் இந்த கவிதையை எழுதிய தாமரை, ஈழத்தமிழரா, இந்தியத்தமிழரா என்று தெரியவில்லை என்றும் பேசினார் லதா. லதாராமகிருஷ்ணனின் பேச்சைக் கைதட்டி வரவேற்ற சிலரில் ஒருவராக சுகன் இருந்தார் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றுதான். பின்பு பேச வந்த சுகன் தானொரு பவுத்தமரபைச் சேர்ந்தவன் என்று இலங்கையின் அரசியல் வரலாற்றை முன்வைக்கும்போதுதான் இலங்கையின் தேசியகீதம் தமிழிலும் பாடப்பட்டது குறித்து பாடிக்காட்டினார். இளங்கோவனின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ நூலை விமர்சிக்கும்போது சோமிதரன், ‘புலி இருக்கிறவரையிலும் எதிர்ப்பு அரசியல் பேசினீர்கள். செத்தபிறகும் அதே அரசியலைப் பேசுவதில் என்ன நியாயம்?’ என்று கேட்டார். எல்லோருடைய பேச்சையும் தூக்கிச் சாப்பிட்டது என்னவோ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரனின் பேச்சுதான்.

ஈழத்தில் முஸ்லீம்களைப் புலிகள் வெளியேற்றியது குறித்து, தலித்துகள் ஒடுக்கப்பட்டது குறித்து, மலையகத்தமிழரின் பாடுகள் குறித்து, புலிகளால் கொலைசெய்யப்பட்ட மாற்றுக்கருத்தாளர்கள் குறித்து என எதைப் பற்றியுமே பேசக்கூடாது. அதற்கான தருணம் இது இல்லை என்றார். இடைமறித்த கருப்புப்பிரதிகள் தோழர் நீலகண்டன், ‘தோழர் உங்களது வாதங்களை ஏற்றுக்கொண்டாலும் கூட புலிகளைத் திருஉருக்களாகக் கட்டமைக்கிற உங்களைப் போன்ற இயக்கங்கள் முஸ்லீம்களை வெளியேற்றியபோது ஒரு சொல்லும் பேசியதில்லையே’ என்றொரு கேள்வியைப் போட்டார்.

கொதித்துப்போன மகேந்திரன், ‘நீங்கள் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்’ என்று நீலகண்டனைச் சொல்லி அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். ‘சுகன் உங்கள் வயது என்ன?’ என்ற மகேந்திரன் கேள்விக்கு சுகன் பதிலளிக்க மறுத்துவிட்டார். (‘நீயெல்லாம் சின்னப்பையன், உனக்கு அனுபவம் பத்தாது’ என்பதைத் தவிர இந்த கேள்வியின் தொனிக்கு வேறு என்ன அர்த்தம்?) உடனே மகேந்திரன், ‘சுகன் உங்களுக்கு பௌத்தம்ன்னு என்னன்னு தெரியுமா, இந்திய தேசியக்கொடியில அசோகச்சக்கரம் ஏன் இருக்கு தெரியுமா, காக்கா ஏன் கறுப்பா இருக்குன்னு தெரியுமா?’ என்று கிளாஸ் எடுக்கத் தொடங்கினார். இருக்கட்டும். இப்போது மய்யமான கேள்விக்கு வருவோம். ‘புலிகளைப் பற்றி இப்போது விமர்சிப்பது காலப்பொருத்தமில்லாததா?’.

திறந்த மனதோடு உரையாடுவோம் நண்பர்களே. ஈழத்தமிழர்களுக்கான தமிழக ஆதரவிற்கும் ஈழப்போராட்டத்தின் வயது இருக்கும். என் அப்பா புலிகளை ஆதரித்தார். என் அண்ணன் பள்ளியில் படித்த திமுக மாணவனாக இருந்தபோது, ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில்ஸ்டார், பிரபாகரன் சூப்பர்ஸ்டார்’ என்று மாணவர் ஊர்வலங்களிலும் திமுக நடத்திய டெசோ பேரணிகளிலும் கோசம் போட்டார். நான் கல்லூரி படிக்கும்போது பிரபாகரனின் படத்தைப் பாக்கெட்டில் வைத்துத் திரிந்தேன். திமுக ஈழ ஆதரவை அம்போவென்று போட்டு விட்டு ஓடியபோதும் அதிமுகவிற்கு அப்பட்டமான ஈழ எதிரி ஜெயலலிதா தலைமையேற்றபோதும் மாறி மாறி வந்த இரு கட்சி அரசாங்களாலும் புலிகளை ஆதரித்த குற்றத்திற்காக எத்தனையோ சின்னஞ்சிறு இயக்கத்தலைவர்கள் சிறைப்பட்டார்கள், பலரது கட்சியின் இயக்கமே பாதிக்கப்பட்டது. ஆனாலும் தலைவர்களே, ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம் என்று எமக்குக் கற்றுக்கொடுத்து உணர்வூட்டிய தலைவர்களே, ஈழத்தில் முஸ்லீம்கள் என்ற மக்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது என்று நீங்கள் கற்றுக்கொடுக்கவேயில்லையே! தலித்துகள், மலையகத்தமிழர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன என்று ஈழத்தை ஆதரித்து தெருவில் இறங்கிப் போராடிய இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தவேயில்லையே! தலித் அரசியல் மேலெழுந்து வந்த நாட்களில் ‘பிரபாகரன் ஒரு தலித்’ என்று கூசாமல் பொய்சொல்லி, ‘எல்லாம் நம்பாளுகதான்’ என்று ஊத்திமூடினாரே ‘மாவீரன்’ நெடுமாறன்.

திறந்த மனதோடு உரையாடுங்கள், இப்போது நடந்துள்ள வீழ்ச்சிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலைக்கும் வெறுமனே கருணாநிதியும் சோனியாவும் ராஜபக்சேவும் மட்டும்தான் காரணமா? பிரபாகரனின் அரசியல் காரணமேயில்லையா? 15 ஆண்டுகாலத்திற்கும் மேலாக முன்வைக்கப்பட்ட மாற்றுக்கருத்துகளைப் புலிகள் புறங்கையால் தள்ளியதில் இந்த வீழ்ச்சிக்குப் பங்கில்லையா? மனச்சாட்சி தொட்டுச் சொல்லுங்கள், தமிழகத்தில் நீங்கள் கருணாநிதியைத் திட்டுவதைப் போல ஈழத்தில் பிரபாகரன் மீது ஒரு சிறுசொல் விமர்சனமும் வைத்துவிட முடியுமா? இன்னும் எத்தனைகாலத்திற்குக் கருணாநிதியைத் திட்டி புலிகளின் அரசியல் வறுமையையும் முட்டாள்தனத்தையும் மறைக்கப்போகிறீர்கள்?

புலி ஆதரவாளர்கள் அனைவரையும் ஒருதட்டிலோ ஒருதராசிலோ நான் நிறுத்த விரும்பவில்லை. தேநீர்க்கடையில் தலித்துக்களுக்கு எதிரான இரட்டைக்குவளையை உடைத்தும் போட்டுத்தான் புலிகளை ஆதரித்து சிறைசென்றார் கொளத்தூர்மணி. ஆனால் திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் பீ திணித்தபோது மவுனம் சாதித்து, புலிகளுக்கு மட்டும் முகவர் வேலை பார்ப்பவர் நெடுமாறன். தலித்துகளின் பிரச்சினையைக்கூட விட்டுவிடுவோம், தமிழ்த்தேசியவாதி என்ற அடிப்படையிலே கூட காவிரிப்பிரச்சினைக்குக் கூட மக்கள் இயக்கம் கட்டாதவர் நெடுமாறன்.

பிரபாகரனுக்கு எப்படி எந்த அரசியலும் கிடையாதோ, அதுபோல நெடுமாறனுக்கும் எந்த அரசியல் வஸ்துவும் கிடையாது. பிரபாகரனாவது இறுதிநாட்களுக்கு முன்பு வரை ராணுவரீதியில் தந்திரங்கள் வகுக்கும் புத்திசாலியாக இருந்தார். நெடுமாறனோ அதுகூடத் தெரியாத அப்பாவி. சிட்பண்ட் கம்பெனிகளைப் போல அவர் அவ்வப்போது நடத்திவரும் தமிழ்த்தேசிய இயக்கங்களுக்காவது ஏதாவது அரசியல், வேலைத்திட்டம் இருந்ததா, அவர் முன்வைப்பது தனித்தமிழ்நாடா, தமிழ்த்தேசியத்திற்குச் சுயநிர்ணய உரிமையா, வர்க்கம், சாதி பற்றி அவர் கருத்து என்ன? ஒரு மண்ணும் கிடையாது. பொத்தாம்பொதுவான தமிழ்த்தேசிய டம்மிபீஸ். இப்படிப்பட்ட ஒருவர்தான் ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு இயக்கத்தின் தலைவர். ஈழத்தில் பிரபாகரன் புலிகளின் தலைவர்.

நான் முன்பே சொன்னபடி புலி ஆதரவாளர்களை ஒருபடித்தானதாக கருதவில்லை. ஆனால் புலிகளின் மீது விமர்சனங்கள் வைப்பவர்களை மட்டும் அ.மார்க்ஸ், ஷோபாசக்தி, சுகன், ரயாகரன் என அனைவரையுமே ஒருதராசில் நிறுத்தி, ‘ராஜபக்சேவிடம் காசுவாங்கியவர்கள்’ அல்லது ‘இலங்கை அரசின் ஆதரவாளர்கள்’ என்று எப்படி முத்திரை குத்திவிட முடிகிறது? அப்படி குத்தி விடுவதற்கு முன்னால் உங்கள் அருகில்தான் மணியரசன் இருக்கிறாரே, அவரின் முகத்தையாவது கண்ணாடியில் பார்க்கலாமே.

மணியரசனின் ‘தமிழ்த்தேசப்பொதுவுடைமைக் கட்சி’யிலிருந்து ராசேந்திர சோழன் விலகி அமைப்பு தொடங்கினாரே. அப்போது ‘த.தே.பொ.கவிலிருந்து ஏன் விலகினோம்’ என்று சிறுவெளியீடு கொண்டுவந்தாரே. ‘புலம் பெயர்ந்த தமிழர்கள் அன்பளிப்பாய்த் தந்த பணத்தைக் கட்சி நிதியில் சேர்க்காமல் தனக்குக் கலர் டி.வி வாங்கிக்கொண்டார்’ என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினாரே! புலிகளோடு கொடுக்கல் & வாங்கல் கணக்கு வைத்திருந்த தமிழகத்துத் தலைவர்கள், உலகம் முழுக்க உள்ள புலிப்பினாமிச் சொத்துக்களைப் பாதுகாத்து வருபவர்கள் குறித்து ஒரு சின்ன விமர்சனமாவது வைப்பீர்களா?

இன்னமும் ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். வரலாற்றில் மீண்டும் இன்னொருவர் உயிர்த்தெழுவார்’ என்று பச்சைப்பொய்யைப் பரப்பி வருகிறாரே! இப்போதாவது ஈழமக்களுக்கான ஒரு வேலைத்திட்டம் இருக்கிறதா இவரைப் போன்றவர்களிடம்! இறுதிநாட்களில் புலிகள் நடந்துகொண்ட விதம் குறித்த தகவல்களைக் கேட்கும்போது மனசு பதறுகிறது.

இலங்கை ராணுவம் செல்லடிக்கும்போது மக்கள் மத்தியில் இருந்துகொண்டே புலிகளும் பதில் செல்லடித்து தமிழ்மக்களைக் கொன்றிருக்கிறார்கள். ‘தாங்கள் தோல்வி அடையப்போகிறோம், சாகப்போகிறோம்’ என்று தெரிந்தும் தமிழ்மக்களைத் துணைப்பிணங்களாக்கியிருக்கிறார்களே புலிகள். இறுதிப்போர் முடிந்தபிறகு மக்களோடு மக்களாக முகாமிற்கு வந்த புலிகளை ‘இவன்தான் புலி, எங்களைப் பிடித்து வைத்திருந்தவன்’ என்று மக்களே ராணுவத்திடம் பிடித்துக்கொடுத்ததாக மிகவும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இது ஏதோ ஷோபாசக்தி போன்றவர்கள் பரப்பும் ‘பொய்கள்’ அல்ல. புலி ஆதரவாளர்களே பகிர்ந்துகொள்ளும் தகவல்கள்தான்.

கடைசிநாட்களில் வன்னிமக்களோடு தொடர்பில் இருந்த புலி ஆதரவாளர்கள் கொஞ்சம் நெருக்கிக் கேட்டால் ‘அவையெல்லாம் உண்மைதான்’ என்று ஒப்புக்கொள்கிறார்கள். மூன்று தசாப்தங்களாக ‘புலிகள்தான் மக்கள், மக்கள்தான் புலிகள்’ என்று சொல்லி வந்தீர்களே, எவ்வளவு விமர்சனங்கள் புலிகளின் மீது இருந்தபோதும் ராணுவப்பகுதியை விட புலிப்பகுதியில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்ததே, அவர்களையும் கொல்லக் கொடுத்தும் கொல்லவும் செய்தார்களே புலிகள். அவர்களைத்தானா விமர்சிக்கக்கூடாது என்கிறீர்கள்!

ஆனால் இத்தகைய பயங்கரவாத, வலதுசாரிய, மக்கள்விரோத, மனித உரிமைகளுக்கு எதிரான, சுதந்திரத்தையும் சமத்துவத்துவத்தையும் ஜனநாயக உணர்வையும் மயிரளவும் மதிக்காத அமைப்பு மீது விமர்சனம் வைப்பவர்கள் மீதுதான் நண்பர்களே, முடிந்தளவுக்குக் கல்லெறிகிறீர்கள். ஈழமக்களின் சாவுகளை வைத்து விளையாடும் ஒரு குரூர விளையாட்டில் கருணாநிதி கூட ஒருகட்டத்தில் நேர்மையாக விலகிவிட்டார். ஆனால், இன்னமும் நீங்கள் தொடரும் இந்த விளையாட்டின் அயோக்கியத்தனத்தை என்னவென்பது!

‘இப்போது புலிகளை விமர்சிக்கக் கூடாது, விமர்சிக்கக் கூடாது’ என்றால் எப்போதுதான் விமர்சிப்பது? சோவியத் யூனியன் உடைந்து சிதறியபிறகு மனநெருக்கடிக்கு ஆளான மார்க்சியர்கள்தானே கம்யூனிச அரசுகள் மீது விமர்சனமும் வைத்து செழுமைப்படுத்தவும் செய்தார்கள். தமிழ்நாட்டிலும் சோசலிசக்கட்டுமானம் குறித்த விவாதம் நடைபெற்றதே. விமர்சனங்களை முன்வைப்பதும், வரலாற்றிலிருந்து பாடங்கற்றுக்கொள்வதுமே புத்திசாலிகளின் வேலை. ஆனால் ‘நாங்கள் புத்திசாலிகள் இல்லை’ என்று நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் என்ன செய்வது?

‘‘90களுக்குப் பிறகான உலகப் பொருளாதாரச் சூழல், செப்டம்பர் 11க்குப் பிறகான உலக அரசுகளின் ராணுவத்தன்மை இவற்றைப் புலிகள் கணக்கில் எடுக்கவில்லை’’ என்றுதானே அ.மார்க்ஸ் ‘புத்தகம் பேசுது’ பேட்டியிலே சொன்னார். அப்போது அவரை அரைலூஸ§ என்றீர்களே. இப்போது சொல்லுங்கள் குழலி, அரைலூஸ§ யார், அ.மார்க்சா, பிரபாகரனா?

சரி, எல்லாமே முடிந்தது , இனி வேறு அரசியல் பேசலாம் என்றாலும் மீண்டும் மீண்டும் பிரபாகரனின் அசரீரிதானே கேட்கிறது. ‘இந்தியாதான் தமிழீழம் அமைத்துத் தரும்’ என்றுதானே ருத்திரகுமாரன் பேசுகிறார். இந்திய அரசிற்குச் சாபம் கொடுத்து தாமரை கவிதை எழுதுவார். ஆனால் சாகும் வரை பிரபாகரனும் புலிகளும் இந்தியாவை எதிர்த்து ஒரு விமர்சனமும் வைக்க மாட்டார்கள். இன்னமும் இந்தியாவையும் ஒபாமாவையும்தான் நம்புவோம் என்றால் யாரைப் படுகொலைகளுக்குத் தின்னக் கொடுக்க இன்னமும் புலி அரசியல் பண்ணப் போகிறீர்கள்?

எந்த சுயவிமர்சனமும் செய்யாமல் புலிகளின் அதே அரசியலை அதே புலிகளின் குரலில் செய்வது தவறில்லை. ஆனால் புலிகளின் தவறுகளை விமர்சித்து மாற்று அரசியலைப் பேச முனைவது மட்டும் துரோகமா நண்பர்களே! நானும் புலிகளை விமர்சிக்கிற அனைவரது கருத்துக்களையும் கேள்விகள் எதுவுமற்றுக் கேட்டுக்கொள்ளச் சொல்லவில்லை! லதாராமகிருஷ்ணனின் அபத்தமான இந்தியச்சார்புப் பேச்சிற்குக் கைதட்டுகிற சுகனின் நிலைப்பாட்டை என்னால் ஆதரிக்க இயலாது. இலங்கை அரசை அவர் ஆதரிக்கிறார் என்று கருதவில்லை. ஆனால் இலங்கை அரசிற்கு எதிராக அவரிடமிருந்து விமர்சனங்கள் வருவதில்லை என்பதாலேயே சுகனின் அரசியலை மறுக்கிறேன். ஆனால் புலிகளை விமர்சிக்கிற அதே நேரத்தில் தனது பிரதிகள் அனைத்திலும் இலங்கை அரசையும் விமர்சிக்கிற ஷோபாசக்தியையும் விலக்கி வைப்பது எவ்வகை நீதி?

தோழர்களே! புலிகளாலும் இலங்கை ராணுவத்தாலும் இறுதிநாட்களில் கொல்லப்பட்ட வன்னி மக்களின் பிணங்களின் மீது சிந்தியுங்கள்! நண்பர்களே, நீதியின் பேராலும் அன்பின் பேராலும் ஜனநாயகத்தின் பேராலும் யோசியுங்கள்!

புலி அரசியலிலிருந்து விடுதலை பெறாமல் தமிழர்களுக்கு விடுதலை இல்லை. இவ்வளவு சொல்லியும் ‘‘இருக்கிறவரும் இருப்பவரும் வருபவருமாகிய சர்வ வல்லமை பொருந்திய கர்த்தராகிய தேவனே! உன்னை ஸ்தோர்த்திக்கிறோம்!’’ (வெளி 11 -& 17) என்று தொடர்ந்தீர்களானால் என்ன செய்வது! இறுதிநாட்களில் பிரபாகரனின் அப்பத்தையும் ஒயினையும் பங்கிட்டுக் கொண்டவர்களாயிற்றே! பரிசுத்தமடைவீர்களாக!