மேகம் நழுவிய தடயம்




என் மனசு இருட்கிடங்கு.
ஒருநாள் வெடிக்க
ஒளியாய்ச் சிதறினேன்.
------------------


கனவின் சாம்பலில்
மக்கிக்கிடந்தன சிறகுகள்.
கிளறிப்பார்த்த கோழியின் கால்களில்
தட்டுப்பட்டது
அதன் சிறகுகள்.

-------------------

வலி மிகுதியாய்க் கொண்டே வருகிறது.
அழவேண்டும்போல இருக்கிறது.
அழுவதற்கும் கையாலாகாத மனம்
மட்டுமே இப்படிக்
கவிதைகள் எழுதுகிறது.

------------------------

கொலை குறித்தும்
தற்கொலை குறித்தும்
யோசித்துக்கொண்டிருப்பவனின் மனம்
ஒரு மதுக்கோப்பைக்குள்ளும்
புத்தகத்துக்குள்ளும்
அல்லது சுய மைதுனத்திற்குள்ளும்
தற்கொலையோ
கொலையோ செய்து முடிக்கிறது
இப்போது பிணமாய்
மிஞ்சியிருப்பதெல்லாம்
சில திரவத்துளிகள் மட்டுமே.

-----------------------

கோப்பைகளின் உலகம்










நான் கொண்டாட்டத்தோடு வந்தேன்.
நீயோ துயரங்களோடு அமர்ந்திருந்தாய்.
மனித வாசனை ரத்தக்கவிச்சியாய் மாறிப்போனது.
அடையாளங்கள் சிலுவைகளாய்ப் போன பொழுதில்
புன்னகையையும் திருடக்கொடுத்துவிட்டு
மரணத்தின் இருள் கவிந்த உன் விழிகளில்
தரிசிக்கிறேன்
தென் திசையிலிருந்து சேதிசுமந்துவரும் கடலலைகள்
ரத்தக்குளம்பாய் மாறிவருவதையும்
தன் கர்ப்பத்தைக் கிழித்து
வெளித்தள்ளப்பட்ட சிசுவோடு
தெருக்களில் அலையும் பெண்ணையும்.
இப்போது என் கோப்பை உடைந்து நொறுங்குகிறது..
கணீங்

--------

சிகரெட்டைத் தட்டிய சாம்பல்கிண்ணத்தில்
வந்துவிழுந்தது இரண்டுகண்னீர்த்துளி.
இப்படித்தான் கடவுள் வந்துசேர்ந்தார்
தன் பெருத்த பிட்டங்களோடு.
இந்த இடத்தில் கடவுளைச் சந்திக்க
நான் விரும்பவில்லை.
தன் சுவாசத்தைப் போல
அழுகியமுட்டைநாற்றம் வீசும்
அந்த இடத்தை அவரும் விரும்பவில்லை.
மதுவருந்த அவர் மறுத்துவிட்டார்.
குடி கடவுளுக்கு விலக்கப்பட்டிருந்தது.
நான் கோப்பையை எடுத்துக்கொண்டேன்.
களைப்பும் அயர்ச்சியும் ஓங்க
நாற்காலியில் சாய்ந்த கடவுள்
விசும்பி அழத் தொடங்கினார்.
புணராமலே பிள்ளை பெற்றுக்கொண்டிருப்பதனால்
தன் குறி துருப்பிடித்திருப்பதாய்ப்
புலம்பத்தொடங்கினார்.
நான் கடவுளின் இடத்தில்
கோப்பையை வைத்தேன்.

கலவியைப் பற்றியதும் மரணத்தைப் பற்றியதுமான இருகவிதைகள்


போகம் 1

"எலும்பு நொறுங்கும்படி
இறுக்க அணைத்து
உன் உதட்டோடு
முத்தமிட வேண்டும்"
"தயவுசெய்து என்னைக்
கொலைசெய்ய
முயற்சிக்க வேண்டாம்.
இதோ விஷத்தைத் திறந்துவிட்டேன்.
செத்துப்போகிறேன் நானே".


போகம்2

சலனமற்று ஓடும் நதியில்
குதித்து இறங்குகிறேன்.
ஓயாது சீறும்
அலைகளின் ஓசையில்
மௌனத்தைச் சிதைக்கிறாய்.
இறுக்கி அணைக்கிறேன்.
அருவி உடைந்து சிதறுகிறதுகண்ணாடிச்சில்லுகளாய்.
பேயாய் ஓடும் காட்டாற்றில்
அடித்துச் செல்லப்பட்டு
கரையொதுங்குகிறேன் பிணமாய்.

கடவுளைக்கொன்றவன்


கண்ணப்பநாயனாரின்கண்களை நசுக்கி
தாண்டவமாடத்
தொடங்கினான் ருத்ரன்.
சித்தார்த்தன் தன் பயணத்தைத் தொடங்கியிருந்தான்.
அவனின் ஒரே ஒரு மௌனப்புன்னகையில்
அங்குலிமாலாவின் கழுத்து
மலர்களால் நிறைந்தது.
சரயுநதிக்கரையில்
கிருஷ்ணனின் பிணம்
மிதக்கத் தொடங்கியபோது
என் தங்கை
புத்தனைப் பிரசவித்திருந்தாள்.

வெளிச்சம் ஒருபுள்ளியிலிருந்து....


இன்று காலை
ஒரு கொலையுடன் தொடங்கியது.
எதிர்ப்பட்டோரிடமெல்லாம்
தன் சதையை அரிந்து
வழங்கிக்கொண்டிருந்தது பிணம்.
வாங்கமறுத்த மனிதர்கள்
விலகிச்சுற்றி நடந்தனர்.
வழிந்து பரவிய ரத்தத்தை
பிரியத்துடன் நக்கிச்சுவைத்து
கடந்து பறந்தன பறவைகள்.

ஒரு கவிதையாகியிருக்கலாம், என்ன செய்வது?



இந்த நீ எல்லாம் ஒன்றல்ல. ஆனால் நீ ஆவதற்கான காரணம் ஒன்று.







கவிதை எழுதத் தெரியாத கணங்களில்
ஒரு சொல்லாய் இருந்தாய் நீ.
அன்பால் உலகை நிறைத்த
உன் கதகதப்பால்
தொடங்கியது என் உலகம்.
பிறப்பும் வீடும் எல்லாவற்றையும்
தீர்மானிக்கும் தேசத்தில்
அந்த கடைசி மெழுகுவர்த்தியும்
அணைந்துபோன இரவில்
காணாமல் போனாய் நீ.
திசைகள் பற்றிய அக்கறையற்ற என்னிடம்
திசைமாறி வந்துசேர்ந்த நீ வேறு.
வாழ்வு என்பது பிரிவுகளாலானது
என்பதால் ஒரு புள்ளியில்
மறைந்துபோனாய் நீயும்.
இப்போது வந்துசேர்ந்த நீயோ
இன்னும் புதியவளாயிருக்கிறாய்.
சிக்கலான அறிவாயுமிருக்கிறாய்.
சமயங்களில் கிறுக்குத்தனமாய்ஓடிக்கொண்டிருக்கும் நதிபோலநடந்துகொள்கிறாய்.
எதிர்ப்படும் ஏதேனுமொரு கரத்தைப்
பற்றத்துடிக்கும் என்னை
நிதானமாய் விலக்கிவிட்டுச் சொன்னாய்
அதிகம் எதிர்பார்க்காதே
நமக்கிடையிலானது நட்புதானென்று.
உண்மையைத்தான் சொன்னாய்.
ஆனால் உண்மை யாருக்குத் தேவை.
அன்பு தொடங்கும்போதே
உண்மையை மறுத்துத்தான் தொடங்குகிறது.

கடவுள் என்று ஒன்று இருந்தால் அது அல்லாஹ்வாக இருக்கட்டும்



பிலாலுக்கும் மால்கமுக்கும்....

இரு தசாப்தங்களாய்
மனு போட்டும் வரவில்லை
சுடுகாட்டுப்பாதை

பிணங்களுக்காய்ச் சண்டைபோட்டு
பிணங்களானோம்.

உப்புக்கரிக்கும்
காலத்தின் சுவையில்
முளைத்த முடிவின் இறுதியில்
வரவே முடியாத
சுடுகாட்டுப் பாதையில்
அலறியடித்து
வந்துசேர்கிறார்கள்
உங்கள் ஆதினங்களும் அமைச்சர்களும்.

நாமெல்லோரும் ஒன்று
என்னும்
உன் வார்த்தைகளுக்கு அடியில்
நசுங்கிப்போனதென்னவோ
'நான்' மட்டும்தான்.

எனக்கு வேண்டும் நான்.

கலிமாக்களுக்கும் ஹதீஸ்களுக்கும் பின்னும்
காய்ச்சிச் சூடேறிய ஈயமும்
நாக்கில் அழுந்த இறங்கும்
ஆயுதமும்
இல்லைஎன்பதே போதுமானதாயிருக்கிறதெனக்கு.
ஒரு சேவலின் உச்சிக்கொண்டையாய்
மைக் கொண்டு
பாங்கு ஓதும் பள்ளிவாசல் குளத்தில்
நான் கழுவிக் கரைய வேண்டும்
என்னின் முந்தையக் கறைகளை.

அந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது


மூணாம் பார்வை
எல்லாம் இயல்பாகத்தானிருந்தது
சாணம் போட்டபடி நகரும்
எருமைமாடுகளின் தடங்களைத் தொடர்ந்து
பறையனொருவன்
ஊர்த்தெருவைக் கடக்கும்வரை.

ஊரைப்பிளந்து
ஓடியநதி
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
ஒரு ரத்தச்சாட்சியமாய்.

அந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது

ரண்டாம் பார்வை
அந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது
அமைதியாய்
மௌனத்தைச் சுமந்து.

மரம் அனுப்பும்
முத்தச்சருகுகளை சுமந்தபடி
செ ல் லு ம்
அதன் சலசலப்புகளை
மட்டுமே கேட்டறிவீர்கள்.

அதன் அடிவயிற்றில்
புதைந்த மௌனம்
மௌனமும் மௌனமானது.

சிலநேரங்களில் நதி
அபூர்வமாய்ச் சிரிக்கக்கூடும்
சிறுவர்கள் தன் முகத்தில்
சிறுநீர்கழிக்கும்போதும்
சிலிர்ப்பூட்டும்படி
மீன்கள் தொடையை
உரசிக் கடக்கும்போதும்.

அந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது

வெறுப்பின் வழி உன்னை வந்தடைந்ததாய் சொன்னாய்.
தாயின் மடியை மூத்திரத்தால் நனைக்கும் குழந்தை.
தாய் நீ.

பேசும்போது உன் முகம் பார்த்துபேசுவதில்லை என்று கோபித்தாய்.
கடவுளின் முகம்
யாரும் பார்த்தில்லை சகி
இறை நீ.

உன்னிடம் பேசியபிறகு
மரியாதைக்கான அடையாளமாய்த்
தேங்கிநிற்கும்
சில கண்ணீர்த்துளிகள்
வலி நீ.

எப்போதேனும் உன் மீது
கல்லெறிந்து பார்க்க
ஆசை வரும்.
நதி நீ.

காதலைக் கதைத்தல்

உன் சுடிதார் துப்பட்டா
தனக்குச் சிறகாக வேண்டி வண்ணத்துப்பூச்சிகள் தவமிருந்தபொழுதுகளில்
சந்தித்தேன் உன்னை.
உன் கன்னக்கதுப்புகளில்
ஒளிந்திருந்த புறா
நீ சிரிக்கும்போது மட்டும் சிறகசைத்தது.
என் சொற்புலங்களை
ஆக்கிரமித்து நகரமறுத்த நீ
உன் பார்வைகளை
வேறு எங்கேனும்
நகர்த்தியிருக்கலாம்
அல்லது நானாவது....
உனக்குக் கண்களை வழங்கிய
காலம் எவ்வளவு கொடுமையானது
.பிரியத்துக்கும் பிரியமானவளே!
உன்னோடு பேசமுடியாது
உதடுகடித்து
வார்த்தைகளை விழுங்கியபோது
சிதைந்துபோனது
உனக்கான முத்தங்களும்தானடி.
காற்றில் அலைபாயும்
உன்பச்சைத் தாவணியாய்ப்
படபடக்கும் காதலைக்
கட்டுப்படுத்த இயலாது
கைபிசைந்து நின்று
கூந்தலில் புதைந்த
மலர்களில் மனசழிந்து
உன் அதரங்களில்
வழியும்புன்னகையை
உண்டுயிர்த்து
உன் கொலுசின் மணிகளை
பனித்துளிகளோடு ஒப்பிட்ட பொழுதுகள்
எத்துணை இனிமையாயிருந்தன.
உன் கணுக்கால்களில் தெரிந்த
மஞ்சள் வெடிப்புகளைக்
கணக்கிட்டபடிநகர்ந்துகொண்டிருந்தது
என்னின் விரயமான பகல்களும்
கனவுமயமான இரவுகளும்.
உன் நினைவு ஆட்டும்
நேர்க்கோட்டு வழி
அசைந்துகொண்டிருக்கிறேன்
வெறும்பிம்பமாய் மட்டும்.
கொஞ்சமும் இரக்கமற்று
சட்டென நகர்ந்துபோகும்
காலத்தைக் கொல்லடி
குறைந்தபட்சம் உன்பார்வையாலோ
புன்னகையாலோ.

என் உள்ளங்கை கதகதப்பன்றி தருவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது?

அழுந்திப் பதிந்த தடங்களின் வழி
பொசியும் நீரின்
கதைகேட்டுக் குமைந்து
பிணங்களோடு படுத்துறங்கி
கனவின் மார்பில் கால் உதைத்து எழுந்து
நள்ளிரவின் சுவர்களில்
அலறி அடிந்து
நகங்களில் கசியும்
குருதியை அடக்கி கீழுதட்டைக் கடித்துக வலி மறைக்கும் வித்தைகளைக் கற்றதெல்லாம் உன்னிடமிருந்து
என்று நான் சொல்லும்
மொழி புரியுமா எனத் திகைத்துச்சொல்லும்
வார்த்தைகளின் நிணத்தில்
தோய்த்தெடுத்த இதம்.
மின்னலை விழுங்கி
உயிர்த்த குழந்தை நீ.

நீ அகதி, நானோ தேசமறுப்பாளன்


முதலில் நாம் கைகுலுக்கிக்கொள்வோம்.
அது நம்மிருவரின்
பண்பாட்டிற்குப்பொதுவானது
என்று சொல்லப்பட்டது.
உன் வலியை என்னால்
உணரமுடிகிறது.
ஆனால் என்னால் உணரமுடிகிறது
என்பதை உன்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
சிறை என்பது கம்பிகளுக்கும் அப்பால்
விரிந்துகிடக்கிறது என்று வாதிடத்தொடங்குவாய்.
உண்மைதான்.
உன் தலைக்குமேல் எப்போதும்
சுற்றிக்கொண்டிருக்கிறது
ஒரு கருப்புநிற காகம்.
உன் காலடிச்சுவடிகளில் சேகரிக்கமுடிகிறது
சப்பாத்துகளின் இடுக்குகளிலிருந்து
தெறித்துவிழுந்த மணல்துகள்களை.
குலுக்கிய கைகளினிடைப்
பாவிப்பரவிய உன் நடுக்கம்
சொல்கிறதுஎன் மொழி மீதான
உன் இகழ்ச்சியும்
என் சொகுசு வாழ்க்கை மீதான
உன் பரிகாசமும்.
நான் ஆறுதல்களையோ நம்பிக்கைகளையோ
கொண்டுவரவில்லை.
என் அன்பைச் சொல்ல விரும்புகிறேன்
அவ்வளவுதான்.
அடிப்படையிலேயே நாமிருவரும்
வேறானவர்கள்.
உனது எதிர்பார்ப்பு
உன் தேசத்திற்கான விடுதலை.
எனக்கோ தேசத்திடமிருந்து விடுதலை.

தொலைவு



ஒரு துரோகிக்கும்
மாவீரனுக்குமான தொலைவு
அடையாளத்துக்காய்
நாய் சிறுநீர் பெய்துபோகும்
இருமின்கம்பங்களுக்கிடையிலான
தொலைவுதான்.
அந்த மின்கம்பங்களில் ஏதாவதொன்றில்தான்
என் அக்கா
விபச்சாரி என்று பெயர்மாட்டப்பட்டு
கொலைசெய்யப்பட்டிருந்தாள்.

சந்தனாவுக்குச் சில சொற்கள்



கரையில் அலைகள் ஒதுங்கி
நெடுநாட்களாகிவிட்டது,
இப்போது ஒதுங்குவதெல்லாம்
பிணங்கள் மட்டுமே.
உரையாடலின் காலம் முடிந்துவிட்டது.
துப்பாக்கிகள் பேசத்துவங்கிவிட்டன.
இப்போது துப்பாக்கிகள் மட்டுமே
பேசிக்கொண்டிருக்கின்றன.
நீ ஆதர்சத்தோடு
துப்பாக்கிகளைத் தடவும்போது
நான் திடுக்கிட்டுப்போனேன்.
ஒரு குழந்தையைக் கொஞ்சுவதைப் போலவோ
காதலனைத் தழுவுவதைப் போலவோ
பிரியமான புத்தகத்தை
முகர்ந்து பிரிப்பதைப் போலவோ
இல்லை அது.
நீ பிணங்களைத் தடவிக்கொண்டிருக்கிறாய்.
இன்னும் சிலபொழுதுகளில்
நீ பிணங்களைப் புசிக்கத் தொடங்கலாம்
அல்லது புணரத்துவங்கலாம்.
சந்தனா, நீ
துப்பாக்கிகளோடு பேசிப்பேசி
துப்பாக்கிகளாகவே மாறிப்போனாய்
மன்னிக்கவும் துவக்குகளாக.

கொலையாய் விரிந்த காவி இருள்




























இன்று ஜனவரி30

கணவன் என்ற மிருகம்(2)



ஒரு முத்தத்தைத் தந்துஎன்னை அபகரித்துப்போனாய்.
என் இறைச்சியின் கொதிப்படங்கும் முன்னரே
உன் வேட்டை முடிந்துவிடுகிறது.
கரையோரத்தில்
ஒற்றைத்தூண்டிலோடு

காத்திருக்கும் நீ ஆழங்களில் அமிழ்ந்திருக்கும்
ரகசியங்கள் பற்றிக் கவலையற்றிருக்கலாம்.
ஆனால் ஒருபோதும்
வெல்லமுடியாத என்னை
உன் மொழியால் ஆண்டதாய்ப்
பெருமிதம் கொள்ளும் உனக்கு
கனவுகளில் தீர்த்துக்கொள்ளும்
என் வஞ்சமே பதிலாயிருக்கும்.

dedicated to தோழர்.கவிதா. 'கணவன் என்ற மிருகம்' என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கவிதையைப் பதிவிட்டிருந்தேன். அதில் பலரும் பின்னூட்டம் இட்டிருந்தாலும் பெண் என்ற வகையில் பின்னூட்டமிட்டிருந்தது கவிதா மட்டுமே. என் போன்ற ஆம்பளை நாய்களுக்குக் கவிதை மட்டுமே எழுத முடியும். ஒரு பெண்ணால் மட்டும்தான் வலியை உணர்ந்துகொள்ளமுடியும். thank you kavitha.

என்றான பிறகு...

பூக்களால் நாம்பேசிக்கொண்டிருந்த
பொழுதுகளில்நம் கடிதங்களே
வாசமடித்தனஎழுத்துப்பிழைகளோடு.
பேருந்து தவிர்த்துசுட்டுவிரல்
பிடித்து நடைபயணித்த பொழுதுகள்கவிதை
எழுதுவதற்காய்வீணடித்த பொழுதுகளை
விடச் சுகமானவை.
அன்றொருநாள் பேருந்தில்படாமல்
அமர்ந்தபோது நீ கேட்டாய்"நான் ஒன்றும்
தீண்டத்தகாதவள் இல்லையே?"
இன்று நான் படாமல்உன்
சுடிதாரைச் சுருட்டிக்கொண்டு
விலகி அமர்ந்ததன்
காரணம்விளங்கவேயில்லை எனக்கு.
நான் பரிசளித்த சாவிவளையம்வாங்க
மறுத்த நீவீடு
சென்றுஅழுதிருக்கலாம்
யாருமறியாது.
சூழலால் நீ என்னை உதறினாயெனினும்நீ
என்னை நிராகரித்ததை
விடவும்அதிர்ச்சியாயிருக்கிறதுநீ
யாரிடம் பொய் சொல்கிறாய்?


ஒரு குறிப்பு : தினம் ஒரு பதிவை யாருக்காவது சமர்ப்பிக்கலாம் என்றிருக்கிறேன். முதல் பதிவு 'ரெண்டுலார்ஜ் வலதுசாரி' பாலபாரதிக்கு

கணவன் என்ற மிருகம்

விசாரிப்புகள் ஏதுமற்று
அருகில் படுத்துக்கொண்ட
உன் கரங்கள்
என் இராவுடையைத் துளைத்துக்கொண்டு
நெளிந்து தீர்கின்றன.
வட்டுடையின் கொக்கியைக்
கழற்றவும் அவகாசமற்ற
உன் தீவிரத்தால்
தனங்களில் அரும்பிநிற்கின்றன
உன் பதிவின் கசப்பாய்
சில ரத்தத்துளிகள்.
எல்லாம் முடிந்து எழுந்த நீ
உணவு மேசையில்
உருட்டிய பாத்திரங்கள்
வந்து விழுந்தன
என் செவிப்பறையின் மெல்லியபுலன்களில்.
ஒரு ஆணுறை போலவே
என்னைப் பொருத்தியும்
கலைத்தும் போட்டு
களைப்பினூடாய் நீ உறங்கியபிறகுதான்
எனக்குப் பசித்தது.

ஆதிக்கசாதி நாய்களுக்கு...

நேற்று எம்
முன்னோரின் பெயர் சூட்டவும்
வழித்தெறிந்தீர்கள் பேருந்துகளிலிருந்து
உங்கள் தலைவன்களின் பெயர்களை.

இன்று நாங்கள்
இழுப்பதற்கெனக் கைவைத்தால்
நடுத்தெருவில் நாதியற்று
விட்டுப்போயிருக்கிறீர்கள்
சாமியையும் தேரையும்.

நாளை உம் தெருக்களில்
அத்துமீறி நுழைகையில்
கைவிட்டுப் போவீரோ
உம் தெருக்களை.