புலி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் பூச்சாண்டிகளும்....



தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச்செயலாளர் தமிழ்ச்செல்வனின் மரணத்தையொட்டி மீண்டும் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவு xஎதிர்ப்பு என்னும் இருவேறுமுகாமகளிலிருந்தும் பலத்த விவாதங்களும் கண்டனங்களும் கிளம்பியிருக்கின்றன. தமிழ்ச்செல்வனின் மரணத்தையொட்டி நடைபெற்ற இரங்கல் ஊர்வலத்திற்குத் தமிழக அரசு தடைவிதித்திருந்தது.

இவ்வூர்வலத்தில் கலந்துகொள்வதாயிருந்த, தற்போது திமுக கூட்டணியிலிருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டும் கலந்துகொள்ளவில்லை. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்தேசபொதுவுடைமைக் கட்சியின் தலைவர் மணியரசன் போன்றோர் தடையை மீறி ஊர்வலத்தில் கலந்துகொண்டு கைதாகியிருக்கிறார்கள். 'இந்திய அரசு தமிழர்களை ஏமாற்றிவிட்டது' என்றும் 'கருணாநிதி தமிழினத்திற்குத் துரோகம் செய்துவிட்டார்' என்றும் கர்ஜித்திருக்கிறார் வைகோ.

மறுபுறத்திலோ பெரியார் திராவிடர்கழகத்தினர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து கோபியில் வைக்கப்பட்டிருந்த தட்டி, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கண்டனத்திற்குப் பிறகு காங்கிரசாரால் கிழிக்கப்பட, தமிழகத்தின் பல்வேறுபகுதிகளிலும் பெரியார் தி.க தோழர்கள் இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

முதல்வர் கலைஞர் தமிழ்செல்வனுக்கு இரங்கல் விடுத்ததே சட்டவிரோதமானது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் இதுகுறித்து கேள்விகேட்பதற்குத் திராணியற்ற வைகோதான் கருணாநிதி மீது பாய்ந்திருக்கிறார். வைகோவைப் பொறுத்தவரை அவருக்கென்று இருந்த பல சாதகமான முகமூடிகள் கழன்றுவிழுந்திருக்கின்றன. பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகிய சில திராவிட இயக்கபோக்கின் அம்சங்களையும் இழந்துவிட்ட வைகோவிற்கு மிஞ்சியிருப்பது புலி ஆதரவு அரசியல் வேடம் மட்டும்தான்.

ஆனால் அதிலும்கூட சமீபகாலமாகத் திருமாவளவன் போன்றவர்கள் வைகோவை விடவும் தீவிரமாகப் புலி ஆதரவு அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தன் கடைசிக் கோவணமும் கழற்றப்படுமோ என்னும் பதட்டம் வைகோவிற்கு.

நெடுமாறனைப் பொறுத்தவரை ஈழ ஆதரவு அரசியலில் தன் இடம் பறிபோய்விடக்கூடாது. புலிகளைத் தமிழகத்தில் யார் ஆதரித்தாலும் தான் மட்டுமே அவர்களுக்கு ஞானத்தந்தையாக விளங்கவேண்டும் என்னும் அரிப்பு உண்டு. நெடுமாறனின் தமிழ்த்தேசியக் கருத்தியல் தளம் வெள்ளாளக் கருத்தியலும் முதலாளியமுமே என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியுமென்றாலும் சமீபத்திய உதாரணம், நெடுமாறன் தலைவராய்ப் பங்குபற்றும் உலகத்தமிழர் பேரமைப்பு தமிழகத் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு 'உலகபெருந்தமிழர் விருது' வழங்கியிருப்பதைச் சொல்லலாம். (இப்போக்கைக் கண்டித்து அரங்கிலிருந்து ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் தோழர் நீலவேந்தன் மற்றும் பெரியார்திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை.கு.ராமகிருட்டிணன் ஆகியோர் வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.)

பொள்ளாச்சி மகாலிங்கம் வெளிப்படையான இந்துத்துவ ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஷாகா கூட்டங்களுக்கு நிதியுதவி செய்பவர், இந்துத்துவத்தைப் பரப்புவதற்காகவே 'ஓம்சக்தி' என்னும் பிற்போக்கு இதழை நடத்திவருபவர். தொழிலாளர் விரோத மற்றும் உலகமயமாக்கல் ஆதரவுப் போக்கைக் கடைபிடித்துவருபவர். இவருக்கு விருது வழங்கி மகிழும் நெடுமாறனின் அரசியல் லட்சணம் எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை மீண்டும் மீண்டும் விளக்கத்தேவையில்லை.

ஒருபுறம் புலிகள் ஆதரவு, இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை நடத்தி வந்தாலும் மறுபுறம் இரட்டைக்குவளை உடைப்புப் போராட்டம் போன்ற சாதியொழிப்புப் போராட்டங்களைப் பெரியார் தி.க முன்னெடுத்து நடத்திவருகிறது. ஆனால் சாதியமைப்பிற்கு எதிராகவோ, இந்துசாதியத்தால் நாள்தோறும் ஒடுக்கப்பட்டுவரும் உள்ளூர்த்தமிழர்களுக்கு ஆதரவாகவோ ஒரு புல்லையும் பிடுங்கிப்போட்டதில்லை நெடுமாறன்.

இலங்கைத்தமிழர்களுக்கு உணவுபொருட்கள் போகவேண்டுமென்று உண்ணாவிரத நாடகம் நடத்தி தானே இலங்கைக்குச் சென்று உணவுபொருட்களை அளிக்கப்போவதாக சாகசவாத பயாஸ்கோப் ஓட்டும் நெடுமாறனுக்கு தமிழகத்தில் எத்தனை கிராமங்களில் ஊரிலிருந்து சேரிக்குத் தண்ணீர் வருவதில்லை என்பது தெரியுமா? தலித்துகள் வாயில் மலந்திணிக்கப்படுவது வெறுமனே செய்திகளாயிருந்தது மாறி, நிகழ்வுகளாக மாறிவருகின்றன. இதுகுறித்தெல்லாம் நெடுமாறனின் 'தமிழ்த்தேசியம்' கவலைப்படாதா?

இப்படியாக ஒருபுறம் வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் சாகசவாதப் படம் ஓட்டியே தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளமுயற்சிக்க மறுபுறம் புலிகள் எதிர்ப்புப் பிரச்சாரம் பார்பனப் பாசிஸ்ட்களாலும் காங்கிரசு தேசிய வெறியர்களாலும் முடக்கிவிடப்பட்டு வருகிறது.

புலி ஆதரவுப் போராளி வைகோவிற்கு தன் சகோதரி ஜெயலலிதாவை எதிர்த்துக் கேட்க துணிவில்லை. கருணாநிதியோ புலிகள் விசயத்தில் காங்கிரசைப் பகைத்துகொள்ள முடியாது. இனி என்ன நடக்கும்? வழக்கம்போல 'புலிகள் ஊடுருவல் புராணங்களை' தினமலர், துக்ளக், ஜெயா பார்ப்பனப் பாசிசக் கூட்டணி ஆரம்பித்துவிட்டது.

தனது கூட்டணியைத் தக்கவைத்துக்கொள்ளவும் 'சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும்' கருணாநிதி தனது அரசு எந்திரத்தை 'முடுக்கிவிடுவார்'. இப்போதே 'தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக' பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜி.பி அறிவித்துள்ளார்.

இன்னும் சிலதினங்களில் யாராவது அப்பாவி ஈழத்தமிழர் வெடிகுண்டுடன் 'கண்டுபிடிக்கப்பட்டு' கைது செய்யப்படுவார். 'புலிகளின் ஊடுருவல்' தடுத்து நிறுத்தப்படும். ஜெயலலிதா ஆட்சியில் சகல துவாரங்களிலும் பெவிகால் ஒட்டியிருக்கும் தமிழ்த்தேசிய வீராதிவீரன்கள், வீரபத்திரப் பேரன்கள் 'வீர முழக்கம்' செய்யத்துவங்கி விடுவார்கள். வைகோ, நெடுமாறன் மாதிரியான 'வாடகை மாவீரன்களுகு' தமிழ்நாடு முழுதும் பொதுக்கூட்டம் போட ஒரு நல்ல வாய்ப்பு.

தமிழ்நாடு முழுதும் ஆயிரக்கணக்கில் முகாம்களில் அடைத்துவைக்கபட்டிருக்கும் இலங்கை அகதித் தமிழர்கள் ஏற்கனவே 'நாயினும் கீழான வாழ்வு' வாழ்கின்றனர். அவர்களின் குறைந்தபட்ச வாழ்வுரிமையை உறுதிசெய்ய எந்த ஓட்டுபொறுக்கிக் கட்சிகளோ தமிழ்த்தேசிய மாவீரன்களோ முயற்சித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வசிக்கும் அகதித் தமிழர்கள் குறித்து புலிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களோ கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இனி நடக்கப்போகும் நாடகத்தில் அரசின் கடும் கண்காணிப்பிற்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகப்போவது தமிழகத்தில் வசிக்கும் அப்பாவி இலங்கை அகதிகளே..ஆகமொத்தம் மீண்டும் தமிழகத்தில் தொடங்கப் போகிறது, 'ஆடு புலி புல்லுக்கட்டு' நாடகம்.

கற்றது தமிழ் - ஒரு தாமதமான விமர்சனம்













'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியான அன்றே பல நண்பர்கள் போன் செய்து, "நீங்கள் அவசியம் படம் பார்க்கவேண்டும், அதுபற்றி எழுதவேண்டும்" என்றார்கள். ஆனால் கடைசிவரை சென்னையில் அப்படத்தைப் பார்ப்பதற்கான சூழல் அமையவில்லை. இப்போது திண்டுக்கல்லில் கள்ளக்குறுந்தகடு (?) வழியாகவே பார்க்க நேர்ந்தது.

அப்படம் பற்றி வலைத்தளங்களில் எழுதப்பட்ட விமர்சனங்களைத் திட்டமிட்டே படிக்கவில்லை. உயிர்மை இதழில் சாருநிவேதிதாவின் விமர்சனம் மட்டும் படித்திருந்தேன். படத்தை வெகுவாய்ப் பாராட்டியிருந்த சாரு, அப்படத்திலுள்ள தெளிவின்மையைக் குறிப்பிட்டு தனிப்பட்ட உளவியல் அல்லது சமூகச்சிக்கல் ஆகியவற்றில் ஏதாவதொன்றைத் தேர்ந்கெடுத்து விபரித்திருந்தால் சிறப்பாகவிருந்திருக்குமென்று கருத்து தெரிவித்திருந்தார். (சாருவின் தேர்வு தனிமனித உளவியல் நெருக்கடி)

கற்றது தமிழ் முன்வைக்கும் அரசியலோடு ஒத்த கருத்துடைய வேறுசில நண்பர்களின் கருத்தோ, 'இத்தகைய அரசியல் நிலைப்பாடு உடையவன் ஒரு சைக்கோவாக கொலைகளைச் செய்யும்போது அதன் அடிப்படையே தகர்ந்துவிடுகிறது' என்பதாகவிருந்தது.

திரைப்படம் வந்து பலநாட்களாகி, பல ஊர்களில் தூக்கப்பட்டபிறகு எழுதப்படும் விமர்சனம் என்பதால் விரிவாக எழுத விருப்பமில்லை. ஒரு சில கருத்துக்களை மட்டும் பகிர்ந்துகொள்ள ஆவல்...

இதுமாதிரியாக காட்சியமைப்புகளிலும், காட்சி விபரிப்புகளிலும் கவித்துவம் தெறிக்கும் திரைப்படத்தை இதற்குமுன் தமிழில் பார்த்ததில்லை. பிரபாகர் தான் சந்தித்த முதல் சாவாக, தன் நாய் டோனியின் சாவைச் சொல்கிறான். மனிதர்களே மதிக்கப்படாத தமிழ்ச்சினிமாவில் நாய் மதிக்கப்படுவது அபூர்வம்தானே!

தாயின் சதைத்துணுக்குகள் சிதைந்து தெளிக்கும் மரணத்தின் குரூர வாசனை, பால்யவயது காதல் என்றவுடன் 'ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கய்யா' என்ற அலுப்பு தோன்றுவதற்குள், இல்லாத புலி இல்லாத பாலைவனம் குறித்துக் காணும் நீண்டகனவு குறித்த கதையளப்பு கவிதை.

இப்படியாக பிரபாகரின் தன்வரலாற்றுக் கதைமொழிதல் முழுவதுமே கவிதை, கவிதை, கவிதை... போலீசு என்னும் அதிகார நிறுவனத்தைச் சரியாகவே தோலுரித்துக்காட்டியிருக்கிறது படம்.

படத்தின் மய்யமான இரு பிரச்சினைகளுக்கு வருவோம். சாரு மற்றும் நண்பர்கள் சொன்ன பிரச்சினை... கற்றது தமிழ், தான் முன்வைக்க விரும்பிய அரசியல் குறித்துப் பெரிதாய்ச் சமரசம் செய்துகொண்டதாய் எனக்குத் தெரியவில்லை. மேலும் அமெரிக்காவில் படித்துவந்த அனந்தரங்கனிடம் பிரபாகர், "அமெரிக்கா போய் வந்தும் இன்னும் நீ நாமம் போடுவதை விடலையா?' என்று கேட்கும் காட்சியிலாகட்டும், பிரபாகர் 'இந்த நாட்டில என்ன நடக்குதுன்னே புரியலை, ஒருவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்புஷ்ஷுக்கு புரியலாம்' எனச் சொல்லும் காட்சிகளிலும் சரியகவே அரசியலை முன்வைத்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.

ஒருவசதிக்காக சொல்வதாகவிருந்தால் ஷங்கரின் படங்களுக்கு எதிரான கதையாடல் என்றே 'கற்றது தமிழ்' படத்தைச் சொல்லலாம். குற்றங்கள் புரிந்தபிறகு, தன்னுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவைப்பது, அந்த வாக்குமூலம் குறித்து 'மக்கள் கருத்து' என ஷங்கரின் அதே உத்தியைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ராம்.

ஆனால் சங்கரின் சாகசநாயகன்கள் போல பிரபாகர், தான் செய்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை. மேலும் ஷங்கர் படத்தின் 'மக்கள் கருத்துக்கள்' பொதுப்புத்தியைக் கட்டமைக்க விரும்பும் ஒத்துப்பாடல்களாக இருக்கும். ஆனால் கற்றது தமிழ் படத்தில் வரும் 'மக்கள் கருத்துக்களோ' 'வயிற்றெரிச்சலில் பேசறான் சார்' என்று மாற்றுக்கருத்தையும் பதிவுசெய்கிறது.

மேலும் ஒரு தனிமனிதன் சந்திக்க நேர்கிற சிக்கலிலிருந்தே தனக்கான சமூகக்கருத்தை உருவாக்கிக்கொள்கிறான் என்னும் அடிப்படையில் ராமின் கதைசொல்லல் முறை முற்றிலும் சரியானது என்றே நான் கருதுகிறேன். வெறுமனே அரசிய்ல் பிரச்சினையை மட்டும் பேசியிருந்கால் ஒரு பிரச்சாரம் என்பதைத் தாண்டாது தன் கலைத்தன்மையை இழந்திருக்கும், அல்லது சாரு சொல்வதைப் போல வெறுமனே தனிமனித உளவியல் சிக்கல் பற்றி மட்டுமே பேசியிருந்தால் மாதந்தோறும் வெளிவரும் இரண்டுமூன்று தமிழ் சைக்கோ சினிமாவிலொன்றாக 'கற்றது தமிழ்' வந்துபோயிருக்கும்.

இன்னொரு பிரச்சினை, பெண்களின் பனியனிலுள்ள வாக்கியங்கள் குறித்த விமர்சனம், மற்றும் கடற்கரையில் காதலர்களைச் சுட்டுக்கொல்வது ஆகிய இருகாட்சிகள். பிரதியிலிருந்து தனித்து எடுத்துப் பார்த்தால் இரண்டுமே ஆணாதிக்கப்பாசிசம்தான். ஆனால் வருமானம், சமூகப்படிநிலை, நுகர்வுக்கலாச்சாரம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தற்காலத்திய மணவுறவுகளின் பின்னணியில் பார்த்தால் அக்காட்சிகளுக்கான நியாயங்கள் விளங்கும்.

இன்றைய நகர்ப்புறம் சார்ந்த காதல், முழுக்க பொருளாதார ரீதியிலான தேர்வுகளாகவே இருக்கின்றன. நான் சமீபத்தில் கேள்விப்பட்ட தகவல், சில கணிப்பொறி நிறுவனங்களில் அங்கு பணிபுரியும் ஆண்/ பெண்ணைக் காதலித்து மணந்தால் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் உண்டாம். ஆக குடும்பத்தோடு கொத்தடிமைகள்.

இன்னொருபுறம் சாதிமறுப்புத்திருமணங்களுக்கான விளம்பரங்கள்கூட மாதம் 30000/- ரூபாய் வருமானமுள்ள ஆணை வேண்டிநிற்கின்றன. இங்கு புதியதொரு வர்க்கச்சூழல் உருவாகியுள்ளது. அதிக வருமானம் பெண்களின் சுயச்சார்பான பொருளாதாரச்சார்பு போன்ற சில சாதகமான அம்சங்களை உருவாக்கியிருந்தாலும் மறுபுறத்தில் எந்த சமூகப்பொறுப்புமற்ற சம்பாதிக்கும் ஆண், பெண் பிராணிகளின் கூட்டத்தையே உருவாக்கியிருக்கிறது. இந்த சூழலின் அடிப்படையிலேயே 'கற்றது தமிழ்' திரைப்படத்கை அணுகமுடியுமென்று கருதுகிறேன்.

ஆனால் கற்றது தமிழ் திரைப்படம் தோல்வியடைந்ததற்கு படத்தின் 'இருண்மை அல்லது தெளிவின்மை' மட்டுமே காரணமென்று நான் கருதவில்லை.

திண்டுக்கல்லில் இப்படம் குறித்து விசாரித்தபோது பலருக்கும் இப்படம் குறித்து அதிகமும் தெரியவில்லை. வீட்டு வாடகை ஏறுவது, ஸ்பென்சர்பிளாசா, சத்யம் தியேட்டர் குறித்த விவரங்கள் சென்னையைத் தாண்டி தெரியாத அல்லது பாதிக்காத இடங்களில் இப்படத்தின் தீவிரம் சென்னையைத் தவிர பிற பகுதிகளால் இப்போதைக்கு உணரப்படப்போவதில்லை.

மேலும் கணிப்பொறியை அலாவுதீனின் அற்புதவிளக்காய் நினைத்து அதற்குப் பழக்கப்படுத்த தன் குழந்தைகளைப் பயிற்று வரும் பெற்றோர்கள் மற்றும் வருமானம் மற்றும் கேளிக்கையையே நோக்கமாய்க்கொண்ட இளையதலைமுறையினரும் நிச்சயமாய் இப்படத்தைப் புறக்கணிக்கவே செய்வர்.இப்படத்திற்கெதிராக அய்.டி துறையைச் சேர்ந்த நண்பர்கள் குறுஞ்செய்திகளின் மூலமாக ஒரு பெரிய பிரச்சாரமே செய்ததாய் அறிந்தேன். அந்த 'மக்கள் கருத்தி'ல் வரும் இளைஞனைப் போல, 'வயிற்றெரிச்சல்' என்றும், 'ஒழுங்காப் படிச்சிருந்தா ஏன் இப்படி இருக்காங்க?' என்றோ அந்த நண்பர்கள் தனக்கான நியாயத்தை உருவாக்கிக்கொள்ளவும் செய்யலாம்.

ஆனால் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (இப்போது ராஜிவ்காந்தி சாலை)யில் அமைந்துள்ள டைடல் பார்க்கைக் காண நேர்ந்தால் அதன் எதிரே சுவர்களில் வரையப்பட்டுள்ள புராதன மற்றும் நவீனம் கலந்த அழகிய ஓவியங்களையும் காண நேரலாம். அந்த ஓவியத்திரைகளுக்குப்பின்னேதான் கூவமுமிருக்கிறது. டைடல் பார்க்கிற்கான அடிப்படைவசதிகளை அரசு செய்துதருவதற்கு வரிசெலுத்தும் உழைக்கும் எளிய மக்களுமிருக்கிறார்கள் என்பதையும் அந்த நண்பர்கள் நினைவில் வைத்துக்கொண்டால் நல்லது.

டோண்டு சொன்ன நியாயமும் கருணாநிதியின் 'ஒருகுலத்துக்கொருநீதி'யும்...

சிலமாதங்களுக்கு முன்பு வலைப்பக்கங்களில் ஒரு விவாதம் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. தெருக்களில் சாதிப்பெயரை நீக்குவது குறித்தான தமிழக அரசின் நிலைப்பாடு குறித்ததே அச்சர்ச்சை. டோண்டு ராகவன் அவர்கள் தெருக்கள் மற்றும் பொதுவிடங்களில் சாதிப்பெயர்களை நீக்கக்கூடாது என வாதாடினார். அத்தகைய வலதுசாரி நிலைப்பாட்டை ஜனநாயகச் சக்திகளான நாமனைவரும் எதிர்த்தோம். ஆனால் டோண்டுவின் வாதத்தில் ஒரு நியாயமிருந்ததை நாம் மறுக்கமுடியாது. அனைத்து சாலைகள் மற்றும் பொதுவிடங்களில் தலைவர்களின் பின்னுள்ள சாதியொட்டு நீக்கப்பட்டாலும் நந்தனத்தை ஒட்டியுள்ள முத்துராமலிங்கத்தின் சிலையும் சாலையும் முத்துராமலிங்கத்தேவர் சிலை மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சாலை என்றே அதிகாரப்பூர்வமாக அறியப்படுகிறது. வேறு ஏதும் தமிழக அரசியல் ஆளுமைகள் அவர்களது சொந்த சாதிச்சங்கத்தவரைத் தவிர மற்றவர்களால் சாதிப்பெயரால் அழைக்கப்படுவதில்லை. இந்தியாவிலேயே 30களில் சாதிப்பெயர்களை நீக்குவது குறித்து தீர்மானம் போட்டு இன்றளவும் பெருமளவிற்குப் பொதுவெளியில் சாதிப்பெயர்கள் புழங்கப்படாமலிருப்பதற்குக் காரணம் தோழர். பெரியார் ஈ.வெ.ராதான். ஆனால் அத்தைகய ஜனநாயக உணர்வை அவமானப்படுத்துவதாகவே முத்துராமலிங்கம், தேவர் என்னும் சாதிப்பெயர் சுமந்து சிலைகளாகவும் சாலைகளாவும் நிற்கிறார்.

இத்தகைய கீழ்த்தரமான விளையாட்டுகளை ஆரம்பித்ததில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. 1995 - 1996 தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய மோதல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரால் ஒரு போக்குவரத்துக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதே. அப்போது முக்குலத்துச் சாதிவெறியர்கள் ஒரு பள்ளரின் பெயர் சூட்டப்பட்டதற்காக அப்பேருந்துகளில் ஏற மறுத்துக் கலவரம் விளைவித்தனர். நியாயமாகப் பார்க்கின் வன்கொடுமைச் சட்டத்தில் கைதுசெய்யபப்ட வேண்டிய சாதிவெறியர்களின் ஆலோசனைக்கிணங்க, சுந்தரலிங்கத்தின் பெயரை மட்டுமல்லாது தேசியச்சின்னங்களிலிருந்த அனைத்து அரசியல் தலைவர்களின் பெயர்களையும் நீக்கியது இதே கருணாநிதிதான்.

இப்போது மீண்டும் அதே சாதிவெறியர்களின் வேண்டுகோளையேற்று மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயரைச் சூட்டியுள்ளார் கருணாநிதி. இந்த 'ஒரு குலத்துக்கொரு நீதி' நடவடிக்கைகளை யார் கண்டிக்கப்போகிறார்கள்?

பின் குறிப்பு :

விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டப்பட்டதற்கு சி.பி.எம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால் அத்தகைய சாதித்தலைவருக்கு அஞ்சலி செலுத்தியது மற்றும் கட்சி அமைப்புகளிலும் தேர்தலின்போது வேட்பாளர் தேர்விலும் வட்டார அளவிலான பெரும்பான்மை சாதிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து சி.பி.எம் வெளிப்படையாக விளக்கமளிக்க முன்வரவேண்டும். மேலும் முத்துராமலிங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தனது கட்சி அமைப்புகளின் மூலம் பொதுவெளியில் நிகழ்த்த முன்வருமா என்பதும் கேட்கபப்டவேண்டிய கேள்வியே.

"தேவர் காலடி மண்ணைச்' சரணடையுமா பெரியார்பூமி?

பசும்பொன் முத்துராமலிங்கம் என்னும் மக்கள்விரோதியின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன. தமிழக அரசு முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டுவிழாவையொட்டி தபால்தலை வெளியிட்டுக் கவுரவித்திருக்கிறது. நான்குநாட்களுக்கு அப்பகுதியில் அரசுவிடுமுறையும் அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்து ஒடுக்கப்பட்டோர்விடுதலைமுன்னணி தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கிறது. இதைவிடக் கொடுமை, குண்டர்சட்டத்தில் அதிகம் தலித்துகளே கைதுசெய்யப்படுவதால் குண்டர்சட்டத்தை நீக்கவேண்டும் என்று தலித் அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காத தமிழக அரசு முத்துராமலிங்கத்தின் பிறந்த நாளையொட்டி தென்மாவட்டச் சாதிமோதல்கள் தொடர்பான வழக்குகளை (கொலை, பாலியல்பலாத்காரம் தவிர்த்து) திரும்பப்பெற்றிருக்கிறது.

ஜெயலலிதாவோ தான் இவ்விழாவிற்காக மூன்று கோடி ஒதுக்கியதாகவும் ஆனால் திமுக அரசு அய்ம்பது லட்சம் மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார். 'புரட்சிப்புயல்' வைகோவோ தான் தான் கருணாநிதியைவிட நீண்டகாலமாக குருபூசையில் அஞ்சலி செலுத்தியவன் என்று உரிமைகோருகிறார். சரத்குமார், பா.ம.க இவர்களெல்லாம் அஞ்சலி செலுத்துவதால் அரசியல் ரீதியாக ஆதாயமென்ன என்று விளங்கவேயில்லை.

தலித்மக்களின் காவலன் திருமாவளவனோ தலித்துகளை வெட்டிச்சாய்த்த முத்துராமலிங்கம் நூற்றாண்டுவிழாவை அரசு விடுமுறையாக அறிவிக்கவேண்டும் என்று கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்தது அறிந்ததே. சாதிக்கு அப்பாற்பட்டதாகக் காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் குருபூசையில் அஞ்சலி செலுத்தியிருக்கின்றன. அதிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேவர் சமூகத்தைச் சேர்ந்தவரான நல்லகண்ணுவைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறது.

இந்தளவிற்குக் கொண்டாடபடவேண்டியளவிற்கு முத்துராமலிங்கத்தின் 'சமூகப் பங்களிப்புதான் என்ன?

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முக்குலத்தோர், குறிப்பாக பிரமலைக்கள்ளர்கள் குற்றப்பரம்பரையினராகக் கருதப்பட்டனர். காவல்நிலையத்தில் தங்கள் இருப்பைப் பதிவுசெய்யவேண்டியவர்களாக அறிவிக்கப்பட்டனர். குற்றப்பரம்பரைச்சட்டம், ரேகைச்சட்டம் ஆகிய சனநாயகமற்ற இத்தகைய கொடூரச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் முத்துராமலிங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதே. அத்தகைய போராட்டங்கள் நியாயம் வாய்ந்தவையே.

ஆனால் இத்தகைய போராட்டங்களுக்குப் பிறகு அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட முக்குலத்துச் சமூகம் தனக்குக் கீழுள்ள சாதிகளை ஒடுக்கும் கொடூரச் சமூகமாக மாறிப்போனதில் முத்துராமலிங்கத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது. முத்துராமலிங்கம் உள்ளிட்ட தேவர் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்காத பிறசாதியினர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டன. முத்துராமலிங்கம் மேடைகள் தோறும் சாதிப்பெருமிதத்தை முழங்கிவந்தார். அண்ணாதுரை, காமராசர் குறித்த அவரது விமர்சனங்கள் சாதியரீதியாக இழிவுபடுத்துபவையாகவே அமைந்தன.


தலித்துகளின் ஆலய நுழைவுப்போராட்டம் மற்றும் தலித்துகளுக்கு நிலமளித்தது ஆகியவற்றைத் தலித்துகளின் மீதான கரிசனமாகக் கூறுவர். ஆனால் ஆலயநுழைவுப்போராட்டத்தைப் பொறுத்தவரை அவரது 'பங்களிப்பு' என்பது தலித்துகளுக்கு எதிராக அடியாட்களை அனுப்பாதது என்பதாகவே இருந்தது.

அவரது தலித்மக்களின் மீதான அணுகுமுறை என்பதும் மேல்நோக்கிய பார்வையாகவே இருந்தது. பெருந்தன்மையாகச் சில சலுகைகளைத் தலித்துகளுக்கு அளித்தால் போதும் என்பதே அவரது நிலைப்பாடு. தலித்துகள் மறுக்கப்படட் உரிமைகளைத் தாங்களாகக் கையகப்படுத்தும்போது அவர்களுக்கு எதிராக நின்றார். இதற்கான மகத்தான உதாரணம்தான் போராளி இம்மானுவேல் சேகரனின் படுகொலை.

மேலும் முத்துராமலிங்கத்தின் அரசியல் முற்றமுழுக்க வலதுசாரித்தன்மைவாய்ந்ததே. அவரது தேசியம், இந்துமதம் குறித்த நிலைப்பாடுகள் இந்துத்துவச்சக்திகளின் நிலைப்பாடுகள்தான் என்பதுபோக, முத்துராமலிங்கம் அபிராமத்தில் இந்துமகாசபையின் தலைவராகவுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமயங்களில் அவரது வன்முறைச்செயல்பாடுகள் முஸ்லீம்களுக்கு எதிராகவும் திரும்பின. 'தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்' என்னும் அவரது கூற்று இன்றைய தமிழக இந்துத்துவச்சக்திகளால் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்.

பார்வர்ட்பிளாக் என்னும் இடதுசாரிக் கட்சியை ஒரு வலதுசாரிக் கட்சியாக மாற்றிய 'பெருமை' முத்துராமலிங்கத்திற்கே உண்டு. இந்தியாவில் வேறெங்கும் பார்வர்டு பிளாக் இப்படியொரு சாதிக்கட்சியாகச் சுருங்கியதில்லை. தமிழகத்தில் பல்வேறு பார்வர்ட்பிளாக்குகளில் செயல்பட்டுவரும் தேவர்சாதி வெறியர்களுக்கோ 'பார்வர்ட் பிளாக்கின்' பொருளே தெரியாது. இந்தியதலைமைகளுக்கோ அதுகுறித்த அக்கறைகளுமில்லை.

மேலும் காங்கிரசு என்னும் நிலப்பிரபுத்துவக் கட்சிக்கு எதிராக வளர்ந்துவந்த திமுகவை நோக்கிய முத்துராமலிங்கத்தின் விமர்சனங்களைப் படித்தாலே அவர் எவ்வளவு பெரிய பிற்போக்குச்சக்தி என்பதை விளங்கிக்கொள்ள இயலும். திமுகவின் மொழிப்போராட்டம், வரம்பிற்குட்பட்ட பார்ப்பன எதிர்ப்பு, மதச்சார்பின்மை, முஸ்லீம் ஆதரவு, வடவர் எதிர்ப்பு ஆகியவற்றை முத்துராமலிங்கம் இந்தியப் பெருந்தேசியம் மற்றும் இந்துத்துவ நிலைப்பாடுகளின் அடிப்படையிலிருந்து விமர்சனம் என்றபெயரில் கொச்சைப்படுத்தினார். (சமயங்களில் திமுகவின் மீதான ஜீவாவின் விமர்சனங்களைப் பைத்தாலும் முத்துராமலிங்கத்திற்கும் ஜீவாவிற்கும் வித்தியாசங்கள் தெரியாது)

சாதியச்சமூகமாய் விளங்கும் இந்தியச்சமூகத்தில் பல்வேறு சாதிகளும் அமைப்புகளாகத் திரள்வதும் தனக்கான கோரிக்கைகளை முன்வைப்பதும் தவிர்க்கவியலாததே. ஆனால் தமிழகத்தில் வன்னியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சாதியமைப்புகள் பெரியார், அம்பேத்கர் போன்றவற்றை குறைந்தபட்ச தந்திரமாக திரு உருக்களாக முன்வைத்தும் சமூகநீதி என்னும் பெயரில் தங்களது பங்குகளை வலியுறுத்தியுமே தங்கள் சாதி அரசியலைக் கட்டமைத்திருக்கின்றன.

ஆனால் முக்குலத்துச் சாதியமைப்புகளோ அத்தகைய நெகிழ்வுத்தன்மை வாய்ந்தவைகளோ அல்லது சமூகநீதியை ஒத்துக்கொள்பவையோ அல்ல. அவை தங்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைகள் எதையும் முன்வைப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறத்திலோ அவற்றின் கோரிக்கைகளே இட ஒதுக்கீட்டை நீக்கவேண்டும், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை அகற்றவேண்டும் என்பவையாகவே அமைந்திருக்கின்றன.

முக்குலத்தோர் ஒரு குறிப்பிடத்தகுந்த அதிகாரச்சக்தியாக உருமாறத்தொடங்கியது எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எனலாம். ஒருபுறம் தீண்டாமையை மறைப்பதற்காக நாடார்கள் பார்ப்பனர்களை அழைத்துத் திருமணங்களை நடத்துவது, உள்ளூர்க் கோயில் பணிகளில் பங்கெடுத்துக்கொள்வது என்றெல்லாம் தொடங்கிய செயல்பாடுகள் 80களில் முற்றமுழுக்க அவர்களது சமூக உரிமைகளுக்காகப் போராடிய சுயமரியாதை இயக்கத்திடமிருந்து விலகி இந்துத்துவச் சக்திகளிடம் அடையாளங்காணச்செய்து இந்துமுன்னணிக்கு வழிகோலியது.

தங்களது சமூகத்திற்கான பங்குகளைக் கோரி அரசியல் பயணத்தைத் துவங்கிய மருத்துவர் ராமதாஸ் மற்றும் பழனிபாபா கூட்டணி தமிழகமெங்கும் எம்.ஜி.ஆர் ஆட்சியை விமர்சிக்கத்தொடங்கியது. அந்நேரத்தில் எம்.ஜி.ஆர் இந்துமுன்னணியை மறைமுகமாய் ஆதரித்து ஊக்குவித்தார். மறுபுறத்தில் தனக்கு முதன்முதலாக வெற்றியைத் தேடித்தந்த சாதி என்பதால் (திண்டுக்கல்லில் மாயத்தேவர்) தேவர் சமூகத்தின் மீது கரிசனம் காட்டினார். பொன்.பரமகுரு உள்ளிட்ட பல முக்குலத்தோர் காவல்துறை உள்ளிட்ட துறைகளில் நிரப்பப்பட்டனர். கட்சியிலும் திருநாவுக்கரசு, காளிமுத்து என முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தரப்பட்டன.

இந்த நிரப்பல் ஜெயலலிதா வருகைக்குப் பின் ஜெயா - சசி கூட்டணி மூலம் உச்சத்தை எட்டியது. பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகள் கிளைவிடத்தொடங்கின. அனைத்து அமைப்புகளும் தங்கள் ஞானகுருவாக முத்துராமலிங்கத்தையே ஏற்றுக்கொன்டன. முத்துராமலிங்கத்தைக் கடவுளாக்கி மொட்டையடித்தல், காதுகுத்துதல், பால்குடமெடுத்தல் ஆகிய கேலிக்கூத்துக்கள் எவ்வித விமர்சனங்களுமின்றி அரங்கேறின.

தமிழ்ச்சூழலில் ஆரம்பித்த காலத்திலிருந்தே தேவர் அரசியல் என்பது முற்றமுழுக்க பெரியாரின் அரசியலுக்கு எதிரானதேயாகும். கமுதி முதுகுளத்தூர் கலவரத்தின்போது முத்துராமலிங்கத்தைக் கைதுசெய்யவேண்டுமென்று குரல்கொடுத்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. பெரியார் இறந்தபோது இரங்கல் அறிக்கை வெளியிடாத நிறுவனங்கள் இரண்டு, அவை சங்கரமடம் மற்றும் தமிழகப் பார்வர்ட் பிளாக் கட்சி.

முக்குலத்தோர் அமைப்புகள் வலதுசாரித் தன்மையை அடைந்ததற்கு இன்னொரு உதாரணம் முருகன் ஜீ என்னும் தேவரால் ஆரம்பிக்கப்பட்ட 'பாரதீய பார்வர்ட் பிளாக்'. இந்துவெறியன் பிரவீண் தொகாடியாவைத் தமிழகத்திற்கு அழைத்து சிறுபான்மையினருக்கு எதிராக மதுரையில் திரிசூலம் வினியோகித்தது பாரதீய பார்வர்ட் பிளாக். மேலும் 'ஈ.வெ.ராமசாமியின் மறுபக்கம்' என்னும் பெரியாரைக் கொச்சைப்படுத்தும் அவதூறுகள் நிரம்பிய ஒரு நூலை வெங்கடேசன் என்னும் தலித் ஒருவரைக் கொண்டு எழுதச் செய்து தனது கட்சி வெளியீடாகக் கொணர்ந்தது.

இவ்வாறாக தேவர் அரசியலின் வலதுசாரித்தன்மை மற்றும் நிலப்பிரபுத்துவப் போக்குகளுக்குப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்த்திரையுலகில் இறுதிவரை கடவுளர் வேடமேற்று நடிக்காததால் 'லட்சிய நடிகர்' எனப் புகழப்படுபவர் எஸ்.எஸ்.ராசேந்திரன் என்னும் எஸ்.எஸ்.ஆர். இன்றுவரையிலும் கூட அவர் நாத்திகராயிருக்கலாம். ஆனால் பசும்பொன்னில் முதல் அஞ்சலி அவருடையதே. திராவிட இயக்க அரசியலும் வெறுமனே பகுத்தறிவுவாதமுமே சாதியத்தை நீக்கம் செய்திருக்கிறதா என்பதற்கான பதில்தான் 'லட்சியநடிகர்'.

தமிழ்த்தேசியம், நவீன இலக்கியம், முற்போக்கு என்றெல்லாம் பல்வேறு வேடங்களில் இருந்தபோதும் தேவர் அரசியல் அதைத்தாண்டி பல்லிளிக்கத் தவறுவதேயில்லை. 'தமிழால் ஒன்றுபடுவோம்' என முழங்கி 'தமிழ்ச்சான்றோர் பேரவையை'யும் நந்தன் இதழையும் ஆரம்பித்தவர் ஆனாரூனா என்னும் அருணாச்சலம். நந்தன் நின்றுபோன கடைசி இதழவரையிலும் அம்பேத்கரின் ஒரு சிறு புகைப்படமும் வெளியிடாத நந்தன் தான் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளையொட்டி அவரது புகைப்படத்துடன் கட்டுரை வெளியிட்டது.

இன்றைய 'நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் சிறுபத்திரிகைகளில்' ஒன்று புதியபார்வை. இவ்விதழ் நடராசனால்(சசிகலா) நடத்தப்படுவது. இவ்வாண்டு முத்துராமலிங்கத்தின் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. முத்துராமலிங்கத்தின் மறுபிறவி என்று ஒருவரின் தத்துப்பித்துப் பேட்டியையும் வெளியிட்டிருக்கிறது.

காலச்சுவட்டின் பார்ப்பனீயத்தை விமர்சிக்கும் கனவான்கள் புதியபார்வையின் தேவர் சாதீயத்தைக் கண்டிக்காதது ஏன்? உண்மையிலேயே சமூக அக்கறை உடைய எழுத்தாளர்கள் 'புதியபார்வை' இதழைப் புறக்கணிக்க வேண்டும். பார்ப்பனர்களிடம் காணப்படக்கூடிய அளவுகூட ஜனநாயகச் சக்திகளை முக்குலத்தோரிடம் காணமுடிவதில்லை.

வீரசாவர்க்கருக்குச் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மய்யநீரோட்டத் தேர்தல் கட்சிகளும் கூட முத்துராமலிங்கத்தின் திருவடியைச் சரணடைகின்றன. தேவர் அரசியல் என்பது பாசிசமாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் வளர்ந்துவரும் சூழலில், உண்மையில் நடைமுறையில் பார்ப்பன எதிர்ப்பை விடவும் தேவரிய அரசியலெதிர்ப்பு என்பது கடுமையானதாகவும் வன்முறைகளை முகங்கொள்வதாகவுமிருக்குமெனினும் இதை உடனடியாக எதிர்த்துப் பணியாற்றுவதும் முத்துராமலிஙகத்தின் திருவுருவைக் கட்டவிழ்த்து நாறடிப்பதும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, நக்சல்பாரித் தோழர்களின் முன்னுள்ள அத்தியாவசியக் கடமையாகும்.

தீ...தீ..தீ...வாசந்தீ..தீ..தீ

ரண்டு வாரங்களிருக்கும், தீம்புனல் என்னும் அமைப்பு எழுத்தாளர் ஞாநி ஆனந்தவிகடனில் எழுதிய 'விருப்பப்படி இருக்க விடுங்கள்' என்ற கலைஞரைப் பற்றிய கட்டுரைக்கு எதிராகக் கண்டனக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பிரமாண்டமான அரங்கம், அனைவருக்குமான தேநீர், நொறுக்குத்தீனிகள் என ஒருவேளை மல்ட்டிலெவல் மார்க்ல்கெட்டிங் கூட்டத்திற்கு வந்துவிட்டோமோ என குழப்பமேற்பட்டது. கூட்டம் ஆரம்பித்தபிறகு பார்த்தால் 'ஒருவேளை திமுக இலக்கிய அணி கூட்டமோ' என மயக்கம் ஏற்பட்டது. இமையம், சல்மா ஆகிய எழுத்தாளர்கள் கலைஞரைத் தமிழினத்தின் மீட்பராகப் புகழ்பாட அறிவுமதி, வீ.அரசு, அ.மார்க்ஸ் ஆகியோரின் உரைகள் மட்டுமே பொருத்தப்பாடு உடையவையாய் இருந்தன. அ.மார்க்ஸ் "கருணாநிதியை ஞாநி எழுதியதற்காக துடித்துப்போய்க் கண்டனக்கூட்டம் நடத்துபவர்கள் 'பெரியார் பொம்பளைப் பொறுக்கி' என்று வசைபாடப்பட்டபோது ஏன் கண்டனக்கூட்டம் நடத்தவில்லை?' என்றும் 'அதை வெளியிட்டு தொடர்ந்து பெரியாரை இழிவுசெய்த காலச்சுவடு குழுமத்தைச் செர்ந்த மூவர் இதே அரங்கத்தில் இருக்கிறார்களே' என்று கனிமொழியை நோக்கிக் கேள்வியெழுப்பினார். அப்படி எழுதிய ரவிக்குமாரும் சரி, கனிமொழியும் சரி அதுகுறித்து மூச்சுக்கூட விடவில்லை. எனக்க்நென்னவோ கனிமொழி வகையறாக்காளுக்கு கருணாநிதியைத் திட்டுவதை விட ஞாநி அவரது வாரிசு அரசியல் குறித்துத் தொடர்ந்து விமர்சிப்பதே எரிச்சலாக இருக்கிறது என்று கருதுகிறேன்.

நியாயமாகப் பார்த்தால் வேதாந்திக்கு எதிராகத்தான் கனிமொழி இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கவேண்டும். கருணாநிதியைக் காலமெல்லாம் விமர்சிக்கும் ம.க.இ.க தோழர்கள் வேதாந்திக்கு எதிராக வீதிகளில் கூட்டம் நடத்துகிறார்கள். இளவரசி கனிமொழியோ மத்தியதரவர்க்க அறிவுஜீவிகளின் தயவில் தனக்கான இடத்தை உறுதிசெய்துகொள்கிறார். அரசியலில் எந்த வித களப்பணியோ கருத்தியல் பணியோ ஆற்றாத கனிமொழி வெறுமனே தில்லி அதிகார மய்யங்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பயன்படும் ஒரு தொடர்புக்கருவி, நாடார் வாக்குத்திரட்டி மற்றும் தயாநிதிமாறனின் வெற்றிடத்திற்கான நிரப்பு என்பதைக் கனிமொழியின் நெருங்கிய நட்புவட்டமாகிய கார்த்திசிதம்பரம், காலச்சுவடு கண்ணன், மனுஷ்யபுத்திரன் இத்யாதிகளைப் பார்த்தாலே புரிந்துகொள்ள இயலும்.

சரி, அதுபோகட்டும். இப்போது நான் எழுதவந்ததே நவம்பர் குமுதம் தீராநதி இதழில் வாசந்தி எழுதியுள்ள 'ராமனுக்கான போர்' என்னும் கட்டுரை குறித்து. மனசைத்தாண்டி, எலும்பை மீறி, தசையில் உருகிவழிந்திருக்கிறது பார்ப்பனக் கொழுப்பு. ஒருவேளை ராமனுக்காய்க் கலைஞரிடம் நீதிகேட்டு வாசந்தி இடதுமுலையறுத்து தமிழ்கூறு நல்லுலகத்தை எரித்துவிடுவோரோ என்று ஒருகணம் பயந்துபோனேன்.

வாசந்தி கட்டுரையின் சாராம்சம்.

1. பெரியாரோ கருணாநிதியோ எவ்வளவுதான் கடவுள் மறுப்பு பேசினாலும் பக்தியை ஒழிக்கமுடியாது.

2. ஒரு வளர்ச்சித்திட்டத்தை 'ராமன் இருக்கிறாரா இல்லையா' என்று திசைதிருப்பியதன்மூலம் கருணாநிதி தமிழகத்திற்குத் துரோகம் செய்துவிட்டார்.

3. கருணாநிதி ராமனை விமர்சித்ததன் மூலம் அரசியல் சாசனத்தை மீறிவிட்டார்.

4. ராமன் என்கிற ஒருவர் இல்லை என்று தொல்லியல்துறை உச்சநீதிமன்றத்தில் பதிவுசெய்து 'சொதப்பிவிட்டது'.

5. கருணாநிதியின் ராமர் பற்றிய விமர்சனத்தைக் கேட்டு நாத்திகர்களும் கூட முகம் சுளித்தனர்.

6. கருணாநிதியின் அரசு மைனாரிட்டி அரசுதான் என்பதும் மத்திய அரசுடனான செல்வக்கு நீண்டகாலம் நீடிக்கமுடியாது என்பதையும் அவர் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

7. வயதாகிறதே தவிர கருணாநிதிக்கு அறிவுகிடையாது.

வாசந்தியின் மேலோட்டமான அணுகுமுறை மற்றும் பார்ப்பனக்குயுக்தியை மேற்கண்ட அவரது வாதங்களே நிரூபிக்கின்றன. திமுக என்பது கடவுள்மறுப்பு இயக்கமல்ல, கருணாநிதிக்கு அது வேலையுமில்லை. மேலும் நாத்திகம் பேசப்பட்டபோதும் பக்தி இருக்கத்தானே செய்கிறது என்கிற கேள்வியை இப்படியும் தலைகீழாக்கிக் கேட்கலாம். ' சாமி கண்ணைக்குத்திடும் என்பதிலிருந்து தொடங்கி இத்தனை வதை புராணங்கள் இருந்தபோதும் நாத்திகர்கள் என்பவர்கள் இல்லாமல் போய்விடவில்லையே'

அதைவிடுவோம், ஏதோ ராமன் பிரச்சினையை கருணாநிதிதான் முதலில் ஆரம்பித்தார் என்பதைப்போல வாசந்தி கயிறுதிரிப்பதைக் கவனியுங்கள். அவர் ராமனை விமர்சித்ததன்மூலம் சாசனத்தை மீறிவிட்டார் என்றால் இப்போது தெகல்கா அம்பலப்படுத்தியுள்ளதே, மோடி சாசனத்தை மீறவில்லையா? அதுகுறித்து வாசந்திக்கு ஏன் எழுததோன்றவில்லை?

தொல்லியல்துறை சொதப்பிவிட்டது என்கிறாரே வாசந்தி, வேறென்ன செய்யவேண்டும் வாசந்தி எதிர்பார்க்கும்படி சொதப்பாமலிருக்க? ராமன் என்று ஒருவன் வாழ்ந்தான், தசரதனும் கோசலையும் கூடித்தான் குழந்தைபெற்றார்கள், அதற்கு அத்வானிதான் விளக்கு பிடித்தார் என்று மனுதாக்கல் செய்யவேண்டுமா?

எந்த நாத்திகர்கள் 'முகம் சுளித்தனராம்? வாசந்தி மாதிரியான 'முற்போக்கு பார்ப்பன நாத்திகர்களா?'

அவரது மைனாரிட்டி அரசு குறித்த வாந்தி மறைமுகமான பார்ப்பன மிரட்டலல்லாது வேறொன்றுமில்லை.

கடைசியான நான் குறிப்பிட்டிருக்கும் அவரது கட்டுரையின் சாராம்சம்தான் கட்டுரை முழுக்க தொனிக்கும் தொனி.

வாசந்தியின் அறிவுநாணயமற்ற செயல்பாடுகளுக்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறிக்கொண்டே போகலாம். 90களில் அவர் இந்தியாடுடேயின் ஆசிரியர்பொறுப்பில் இருந்தபோது வெளிவந்த இலக்கியமலரில் தலித்படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டதையும் திராவிட இயக்கம்குறித்த வெங்கட்சாமிநாதனின் விசம்தோய்ந்த கட்டுரையை எதிர்த்தும் நிறப்பிரிகைத்தோழர்கள் இந்தியாடுடேயின் பக்கங்களைக் கிழித்து மலந்துடைத்து வாசந்திக்கு அனுப்பிவைத்தனர்.

சமீபத்தில் இதே குமுதம் தீராநதியில் பத்திரிகையாளராகத் தனது அரசியல் அனுபவங்களை வாசந்தி தொடராக எழுதிவந்தார். 1991 சட்டமனறத்தேர்தல் சூழலையும் 1996 சட்டமன்றத்தேர்தலையும் சேர்த்துக் குழப்பி எழுதினார். ஒரு இரண்டாண்டுகாலம் பத்திரிகைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு தெரியவேண்டிய குறைந்தபட்சத் தரவுகள் கூட மூத்த பத்திரிகையாளராகக் குப்பைகொட்டிய வாசந்திக்குத் தெரியவில்லை.

வெறுமனே அந்தத் தொடரில் அவரது அறியாமை மட்டும் வெளிப்படவில்லை. சென்ற சட்டமன்றத்தேர்தலையொட்டிய காலகட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் மதிமுக வெளியேறிவிடும் என்னும் நிலை, சின்னச்சின்னப்பிணக்குகளும் ,அதையொட்டிய வதந்திகளும் பரவிக்கொண்டிருந்த நேரம். அந்த இரண்டுவாரத்தில் தீராநதித் தொடரில் வாசந்தி எழுதத் தேர்ந்தெடுத்த சப்ஜெக்ட், வைகோ திமுகவை விட்டு வெளியேற நேர்ந்த சூழல்.

அக்கட்டுரையில் வைகோவைத் திமுகவின் தலைவராக்குவதற்காக விடுதலைப்புலிகள் கருணாநிதியைக் கொலைசெய்ய முயற்சிப்பதாக கருணாநிதி வெளியிட்ட 'உளவுத்துறை அறிக்கை'யில் உண்மை இல்லாமலில்லை என்றும் கருணாநிதியின் பயம் நியாயம்தானென்றும் எழுதினார். எப்படியோ வலிமை வாய்ந்த திமுக கூட்டணி உடைந்தால்போதும் என்னும் மனோவிருப்பமே அக்கட்டுரைகளில் தெரிந்தது.

அதுமட்டுமல்ல, சமீபத்தில் திண்ணை இணைய இதழில் அவர் எழுதி வந்த கட்டுரையில் 'கன்னடர்களுக்கு இனவெறியே கிடையாது' என்றும் 'ராஜ்குமாரின் மரணத்தையொட்டியே கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்றது, அதற்கு முன் பாலாறும் தேனாறும் ஓடி தமிழர்களும் கன்னடர்களும் அந்த ஆறுகளில் ஒன்றாக மாறி மாறிக் குளித்துத் திளைத்தனர்' என்கிற ரீதியிலும் 'கன்னடர்களிடம் இந்தளவிற்கு குறுகிய இனவெறி ஏற்படுவதற்குக் கர்நாடகப்பகுதியில் திமுக தொடங்கப்படதும் அய்.டி. படித்த தமிழ் இளைஞர்கள் கன்னடர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிப்பதுமே காரணம்' என்றும் எழுதித் தனது தமிழின விரோதப் போக்கை நிறுவினார்.

எல்லாவற்றிற்கும் மேலாகத் 'தினவு' என்னும் ஒரு கதையில் மாயாவதிக்குக் கள்ளத்தொடர்பு இருந்ததாக ஒரு புனைவு எழுதி அதைப் பல்வேறு தலித்தியக்கங்கள் கண்டித்தபோதும் அதுகுறித்துக் கள்ள மௌனம் சாதித்தார்.

இத்தகைய வாசந்தி, மாலன் வகையறாக்களே 'முற்போக்காளர்களாக'ப் படம் காண்பிக்கப்படுகின்ற கேலிக்கூத்து ஒருபுறம் தொடர்கின்றதென்றால், இவர்களே தங்கள் சாதியைத் தாண்டிவந்த தாராளவாதப் பார்ப்பனர்களாகக் கட்டமைக்கப்படுவது உண்மையிலேயே சாதியைக் கடந்து வருவதற்கு எத்தனிக்கும் சமூக ஜனநாயக சக்திகளான பார்ப்பன நண்பர்களுக்கு தலைகுனிவே. தீ...தீ... பாப்பாத்தீ... தீ...

நெருப்புக்குஞ்சு

1. 'வாசந்தி இடதுமுலையறுத்து தமிழ்கூறு நல்லுலகத்தை எரித்துவிடுவோரோ என்று ஒருகணம் பயந்துபோனேன்' - இந்த வரிகள் ஆணாதிக்கத் தன்மை கொண்டதாகவோ, ஆபாசமானதாகவோ சிலருக்குத் தோன்றலாம். ஆனால் எனக்கு அப்படி ஒரு மசிரும் தோன்றவில்லை என்பதைப் பதிவு செய்ய விழைகிறேன். 'ராமனுக்கான போர்' என்னும் பிரதியில் கண்ணகி x ராமன் என்னும் எதிர்வுகளைக் கையாள்கிறார் வாசந்தி. எனக்குக் கண்ணகி மீது எந்தக் கரிசனமும் கிடையாதென்றாலும் தட்டையாக வாசந்தி ராமனை அடிப்படையாக வைத்துக் கதையாடினால் கண்ணகியை அடிப்படையாக வைத்து நானும் கதையாடுவேன் என்பதற்காகத்தான்... இந்த ச்ச்சும்மா..

2. கருணாநிதிக்கு வயதாகிறதே தவிர அறிவு கிடையாது என்று வாசந்தி எழுதியிருக்கிறாரே, உடன்பிறப்புகளும் கனிமொழி வகையறாக்களும் என்ன செய்யப்போகிறார்கள்?