2006 தீபாவளியையொட்டித் தமிழகத்தில் அதிகமான தாதாப் படங்கள் வெலிவந்தன. இவை பெரும்பாலும் 'சிட்டி ஆப் த காட்' என்கிற மேற்கத்தியப் படத்தின் தழுவல் என்று பரவலாக பேசப்பட்டது.
தினத்தந்தி குழுமத்திலிருந்து வெலிவரும் 'கோகுலம் கதிர்' என்கிற மாத இதழ் 'தாதாக்களின் பிடியில் தமிழ்ச்சினிமா' என்று தலைப்பட்டு இந்த தாதாப் படங்களை விமர்சித்திருந்தது. 'புதிய பார்வை' என்னும் நடுவாந்திர இலக்கியப்பத்திரிகையும் 'தமிழ்ச்சினிமாக்களில் தாதாக்கள்' என்ற தலைப்பில் இதையொட்டிய விமர்சனங்களை முன்வைத்தது. என்கவுண்டர்களை நியாயப்படுத்தும் போலீஸ்சினிமாக்கள் குறித்து இத்தகைய கடுமையான விமர்சனங்கள் வருவதில்லை என்பதிஅ நாம் அவதானிக்கலாம்.
திரைவன்முறை குறித்து அலறும் இந்த மனோபாவத்திற்கு அடிப்படையாக நான் கருதுவது
1. போலீஸ்காரர்களிடம் அடிவாங்காத, சாதி/மத/ இனக்கலவரங்களால் பாதிக்கப்படாத அல்லது குறைந்தபட்சம் அதைப் பார்த்தேயிராத நடுத்தர வர்க்கமனம் மட்டுமே இந்த திரை வன்முறையைக் கண்டு அலறுகிறது.
2. இந்தியச்சமூகம் என்பதே வன்முறையானதுதான். ஆனால் அந்த வன்முறை கட்புலனாகாத வன்முறை. அரூவமான வன்முறைக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கும் இந்தியமனம் தூலமான வன்முறையைக் கண்டதும் அதைப் புரிந்துகொள்ளமுடியாமல் (அ) ஏற்றுக்கொள்ள முடியாமல் அலருகிறது.
தமிழில் முதன்முதலில் என்கவுண்டரை அறிமுகப்படுத்தியது சீவலப்பேரி பாண்டி. அதற்கு முன்னும்கூட ஏராளமான போலீஸ் சினிமாக்களும் தாதா சினிமாக்களும் வந்திருந்தபோதிலும் அவையெல்லாம் தமிழ்ச்சினிமாவின் கமர்சியல் பார்முலாவுக்குள் அடங்குபவை. நாலு தாதாப் படங்கள் வெற்றிபெற்றால் தொடர்ச்சியாக தாதாப் படங்கள் வருவதும் ஆறு போலிஸ் படங்கள் வெற்றிபெற்றால் அடுத்தடுத்து போலீஸ் படங்கள் வருவதுமே தமிழ்ச்சினிமாவின் சூத்திரவிதி.
முதன்முதலாக என்கவுண்டர்ஸ்பெசலிஸ்ட் என்கிற சொல்லாடலைத் தமிழ்த்திரையில் அறிமுகப்படுத்தி அதை நியாயப்படுத்தியதும் கௌதம்மேனனின் 'காக்க காக்க'. போலிஸ் ஆவி உடலில் புகுந்த கௌதமின் அடுத்த படமாகிய 'வேட்டையாடு விளையாடு' படமும் இதேவகைப்பட்டதே.
போஒலிஸ்காரர்கள் தாதாகக்ளால் துன்புறுவது, மிரட்டப்படுவது, போலிஸ் என்கவுண்டர்களை தன்போக்கில் தீபாவளித் துப்பாக்கி போல சகட்டுமேனிக்குச் சுட்டுப்போடுவதுமாக கௌதமின் படங்கள் அடிப்படைத் தர்க்கங்களையும் தொலைத்தவை. வேட்டையாடு விளையாடு படத்தில் ராகவன் என்னும் போலிச் அதிகாரியின் முதல்மனைவியை எம்.எல்.ஏவின் ஆட்கள் கொலைசெய்துவிட கொஞ்சமும் நம்பவியலாது அந்த எம்.எல்.ஏவை சுட்டுக்கொல்லும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம்.
அவரது இரண்டு படஙக்ளுக்கும் பாரதூரமான வித்தியாசங்கள் இல்லை. மு7தல் படத்தில் கதாநாயகனின் பெயர் அன்புச்செல்வன் என்ற நல்ல தமிழ்ப்பெயரென்றால் இரண்டாவது படத்தில் வில்லன்களின் பெயர்கள் அழகிய தமிழ்ப்பெயர்கள், அந்தப் படத்தில் ஜோதிகா காதலி என்றால் இந்தப் படத்தில் இரண்டாம் காதலி என்பதுபோன்ற சில்லறை விஷயங்களைத் தவிர.
ஹாரிச்ஜெயராஜின் இசை, தாமரையின் கவித்துவ வெளிகளுக்கு அழைத்துச்செல்லும் வரிகள் என்பதைத் தவிர்த்துவிட்டால் அடிப்படைத் தர்க்கங்களுமற்ர சினிமாகக்ள்தா கௌதமுடையவை.
பட்டியல், ஆச்சார்யா, புதுப்பேட்டை, டான்சேரா என்னும் நான்குப் படங்களை இப்போதைக்கு உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
இவற்ரில் காணப்படும் சில ஒற்றுமைகள்
1. இந்தப் படங்கள் என்கவுண்டரின் பின்னுள்ள மோசடியையும் வன்முறையையும் தோலுரிக்கின்றன.2. தாதாக்கள் உருவாவதற்கான நியாயமான சூழல் காரணங்களை விபரிக்கின்றன.3.

பருத்திவீரன் - சர்ச்சைகள் இரண்டு




முதலில் மேலோட்டமாக...


பருத்திவீரன் படம் ஆரம்பித்த அரைமணிநேரத்திற்குள்ளாகவே 'ஏண்டா இந்தப் படத்திற்கு வந்தோம்' என்றாகிவிட்டது. வழக்கம்போல கிராமத்துச் சின்னப்பசங்களின் காதல். இதையே அரைமணிநேரம் காட்ட 'ஆட்டோகிராப்' போல ஒரு கேவலமான சினிமாவாக இருக்கும்போல என்ற நினைப்பை விலக்கமுடியவில்லை. அதுவும் அந்தப் பெண்ணைச் சிறுவயதில் கிணற்றில் தவறிவிழுந்துவிட அந்தப் பையன் காப்பாற்ற அதுவே காதலாக மாறுகிறது என்பதும் நம்பமுடியாத லாஜிக்.

அதன்பிறகு ப்ரியாமணியின் நடிப்பு நம்மைக் கொஞ்சம் நிமிர வைக்கிறது. ஆனால் அவர் காதலில் உறுதியாக நிற்பதற்கும் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும் காதலுக்காகவே உயிரைத் துறப்பதற்கும் எந்த வலுவான காரணமுமில்லை. ஆனால் கதாநாயகியின் குரலிலிருந்து உடல்மொழி வரை பெண்மையின் சாயலே தெரியாமல் கம்பீரமாகப் படைத்ததற்காக இயக்குனரைப் பாராட்டியே ஆகவேண்டும்.

கார்த்தியைப் பொறுத்தவரை படத்தின் முதல்பாதிவரை அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் கஞ்சாகருப்புவையே நினைவுபடுத்துகின்றன. (அந்த அலட்டல் உடல்மொழி). பிற்பகுதியில் தேறிவிடுகிறார். ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ப்ரியாமணி அளவிற்கு கார்த்தியால் ஈடுகொடுத்து நடிக்கமுடியவில்லை. கிளைமாக்சில் சிவகுமாரை ஞாபகப்படுத்திவிடுகிறார்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது இசை. குறிப்பாக மணற்பரப்பில் நடக்கும் சண்டைக்காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசை வேறு ஒரு பரிமாணததைத் தொட்டிருக்கிறது. பாடல்கள்தான் தேறவில்லை. வழக்கம்போல இளையராஜா 'அறியாத வயசு...' என்று ஆரம்பிக்கும்போது 'ஹய்யோ...' என்று தோன்றுகிறது.

சரவணன், பொன்வண்ணன் மற்றும் படத்தில் பாலியல் தொழிலாளியாக வருபவரிலிருந்து பச்சை குத்துபவர் வரை வரும் அசல் மனிதர்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். இப்போது இந்தப் படம் குறித்து எழுப்பப்படும் இரு சர்ச்சைகள் குறித்து உரையாடுவோம்.

சர்ச்சை 1 :

14.03.2007 ஆனந்தவிகடனில் ஞானி, சுஜாதா உள்ளிட்ட பலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கொடூரமானது, வன்முறையானது என்று கண்டனம் தெரிவிக்கின்றனர். சுஜாதாவோ இன்னும் ஒருபடி மேலே போய் இதற்காகவே 'பருத்திவீரன் படத்திற்கான நட்சத்திரங்களில் ஒன்றைப் பிடுங்கலாம் என்கிறார். (பிடுங்குவதில்தான் சுஜாதா எக்ஸ்பர்ட் ஆயிற்றே.)

இதற்கு மறுப்பு தெரிவித்து தினத்தந்தி பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள பருத்திவீரன் படத்தின் இயக்குனர் அமீர் 'சேகர்கபூருக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா' என்று சீறியுள்ளார். இந்தக் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே உணர்கிறேன். சேகர்கபூரின் 'பண்டிட் குயின்' படத்தில் பூலானைப் பலர் தொடர்ச்சியாகப் பாலியல் பலாத்காரம் செய்வதை வலியோடும் துயரத்தோடும் சித்தரித்திருப்பார் சேகர். அந்தளவிற்கான சித்தரிப்பின் நுட்பம் பருத்திவீரனில் இல்லையென்றாலும் ஓரளவிற்கு அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

உண்மையில் வழக்கமாய்த் தமிழ்ச்சினிமாக்களில் வரும் கதாநாயகனால் காப்பற்றப்படுவதற்காகவே கதாநாயகி 'கற்பழிக்கப்படும்' காட்சிகளை விடவும் நாகரிகமாகவும் உண்மையாகவும்தானிருக்கிறது பருத்திவீரனின் உச்சகட்ட காட்சி.

ஆனால் இதுமாதிரியான காட்சிகளே இருக்கக்கூடாது என்று ஞானி போன்றவர்கள் வாதிடுவதின் காரணம் புரியவில்லை. ஒவ்வொரு இனக்கலவரத்தின்போதும் மதக்கலவரத்தின்போதும் பலியாவதென்னவோ பெண்ணுடல்தான். ஈழத்திலிருந்து வாச்சாத்தி, குஜராத் வரை இதுதான் நிலைமை. (சமீபத்தில் நந்திகிராமத்திலும் இத்தகையக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளதாய் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன).

குஷ்பு சர்ச்சையின்போது கலாச்சாரப் பாசிஸ்ட்களுக்கு எதிராய் நின்ற ஞானி, திருமணத்திற்கு முன்பான பாலுறவு குறித்த திறந்த விவாதத்தைத் தொடங்கிவைத்த ஞானி இந்தக் காட்சிக்கு மட்டும் ஏன் எதிராய் நிற்கிறார் என்பதை அவர்தான் விளக்கவேண்டும்.

சர்ச்சை 2 :

பருத்திவீரன் திரைப்படம் குறவர் இன மக்களை இழிவுபடுத்துவதாக அம்மக்களின் அமைப்புகள் போராடுகின்றன, வழக்கும் தொடுக்கப்படுகின்றன. புதியதமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் உண்மையில் குறவர் இனமக்கள் குறித்து நியாயமான சித்தரிப்புகளே படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தேவர்களின் சாதிவெறி குறித்து காத்திரமான குரலை எழுப்பியிருக்கிறது 'பருத்திவீரன்' படம். குறிப்பாக அந்த குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்ணைத் தேவர்கள் கொலை செய்யும்போது ஒரு பன்றியை அடித்துக் கொலைசெய்யப்படுவதைப் போலவே கொலைசெய்கின்றனர். இத்தகைய நுட்பமான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

தேவருக்கும் குறவர் இனப்பெண் ஒருவருக்கும் பிறந்த ஒரு பையனை கடைசிவரை தேவர்கள் ஏற்றுக்கொள்ளாத சாதிவெறியையே படம் பேசுகிறது. தமிழ்த்திரைப்படத் துறையில் தேவர்களை விமர்சித்து ஒரு படம் வருவது என்பதே அரிதானதுதான். உண்மையில் தேவர்கள்தான் இந்த படத்திற்கு எதிராகக் கோபம் கொண்டிருக்கவேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாகத் திரும்புவது புரியாத புதிராக இருக்கிறது.

உண்மையில் நாம் பருத்திவீரனைக் கண்டிக்க வேண்டியதெல்லாம் ஒரு பாடல்காட்சியில் பால்மீறிகளை மிகக் கேவலமாகச் சித்தரித்திருப்பதற்குத்தான்.

தாதாசினிமா vS போலிஸ் சினிமா - அதிகாரத்தை விசாரணை செய்தல்



2006 தீபாவளியையொட்டித் தமிழகத்தில் அதிகமான தாதாப் படங்கள் வெளிவந்தன. இவை பெரும்பாலும் 'சிட்டி ஆப் த காட்' என்கிற மேற்கத்தியப் படத்தின் தழுவல் என்று பரவலாக பேசப்பட்டது.

தினத்தந்தி குழுமத்திலிருந்து வெளிவரும் 'கோகுலம் கதிர்' என்கிற மாத இதழ் 'தாதாக்களின் பிடியில் தமிழ்ச்சினிமா' என்று தலைபபிட்டு இந்த தாதாப் படங்களை விமர்சித்திருந்தது. 'புதிய பார்வை' என்னும் நடுவாந்திர இலக்கியப்பத்திரிகையும் 'தமிழ்ச்சினிமாக்களில் தாதாக்கள்' என்ற தலைப்பில் இதையொட்டிய விமர்சனங்களை முன்வைத்தது. என்கவுண்டர்களை நியாயப்படுத்தும் போலீஸ்சினிமாக்கள் குறித்து இத்தகைய கடுமையான விமர்சனங்கள் வருவதில்லை என்பதை நாம் அவதானிக்கலாம்.

அறிவுஜீவிகள் என்று சொல்லப்படுபவர்களிலிருந்து பொதுப்புத்தியால் நிறைக்கப்பட்ட பொதுமனம் வரை திரைவன்முறை குறித்து அலறும் இந்த மனோபாவத்திற்கு அடிப்படையாக நான் கருதுவது
1. போலீஸ்காரர்களிடம் அடிவாங்காத, சாதி/மத/ இனக்கலவரங்களால் பாதிக்கப்படாத அல்லது குறைந்தபட்சம் அதைப் பார்த்தேயிராத நடுத்தர வர்க்கமனம் மட்டுமே இந்த திரை வன்முறையைக் கண்டு அலறுகிறது.
2. இந்தியச்சமூகம் என்பதே வன்முறையானதுதான். ஆனால் அந்த வன்முறை கட்புலனாகாத வன்முறை. அரூவமான வன்முறைக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கும் இந்தியமனம் தூலமான வன்முறையைக் கண்டதும் அதைப் புரிந்துகொள்ளமுடியாமல் (அ) ஏற்றுக்கொள்ள முடியாமல் அலறுகிறது.

தமிழில் முதன்முதலில் என்கவுண்டரை அறிமுகப்படுத்தியது சீவலப்பேரி பாண்டி. அதற்கு முன்னும்கூட ஏராளமான போலீஸ் சினிமாக்களும் தாதா சினிமாக்களும் வந்திருந்தபோதிலும் அவையெல்லாம் தமிழ்ச்சினிமாவின் கமர்சியல் பார்முலாவுக்குள் அடங்குபவையே. நாலு தாதாப் படங்கள் வெற்றிபெற்றால் தொடர்ச்சியாக தாதாப் படங்கள் வருவதும் ஆறு போலிஸ் படங்கள் வெற்றிபெற்றால் அடுத்தடுத்து போலீஸ் படங்கள் வருவதுமானதே தமிழ்ச்சினிமாவின் சூத்திரவிதி.

முதன்முதலாக என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்கிற சொல்லாடலைத் தமிழ்த்திரையில் அறிமுகப்படுத்தி அதை நியாயப்படுத்தியது கௌதம்மேனனின் 'காக்க காக்க'. போலிஸ் ஆவி உடலில் புகுந்த கௌதமின் அடுத்த படமாகிய 'வேட்டையாடு விளையாடு' படமும் இதேவகைப்பட்டதே.

போலிஸ்காரர்களும் அவர்களது குடும்பங்களும் தாதாக்களால் துன்புறுவது, மிரட்டப்படுவது, போலிஸ் என்கவுண்டர் என்ற பெயரில் தன்போக்கில் தீபாவளித் துப்பாக்கி போல சகட்டுமேனிக்குச் சுட்டுப்போடுவதுமாக கௌதமின் படங்கள் அடிப்படைத் தர்க்கங்களையும் தொலைத்தவை. வேட்டையாடு விளையாடு படத்தில் ராகவன் என்னும் போலிஸ் அதிகாரியின் முதல்மனைவியை எம்.எல்.ஏவின் ஆட்கள் கொலைசெய்துவிட கொஞ்சமும் நம்பவியலாது அந்த எம்.எல்.ஏவை சுட்டுக்கொல்லும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம்.

அவரது இரண்டு படஙக்ளுக்கும் பாரதூரமான வித்தியாசங்கள் இல்லை. முதல் படத்தில் கதாநாயகனின் பெயர் அன்புச்செல்வன் என்ற நல்ல தமிழ்ப்பெயரென்றால் இரண்டாவது படத்தில் வில்லன்களின் பெயர்கள் அழகிய தமிழ்ப்பெயர்கள், அந்தப் படத்தில் ஜோதிகா காதலி என்றால் இந்தப் படத்தில் இரண்டாம் காதலி என்பதுபோன்ற சில்லறை விஷயங்களைத் தவிர. ஹாரிஸ்ஜெயராஜின் இசை, தாமரையின் கவித்துவ வெளிகளுக்கு அழைத்துச்செல்லும் வரிகள் என்பதைத் தவிர்த்துவிட்டால் அடிப்படைத் தர்க்கங்களுமற்ற சினிமாக்கள்தான் கௌதமுடையவை.

பட்டியல், ஆச்சார்யா, புதுப்பேட்டை, டான்சேரா என்னும் நான்குப் படங்களை இப்போதைக்கு உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் காணப்படும் சில ஒற்றுமைகள்
1. இந்தப் படங்கள் என்கவுண்டரின் பின்னுள்ள மோசடியையும் வன்முறையையும் தோலுரிக்கின்றன.
2. தாதாக்கள் உருவாவதற்கான நியாயமான சூழல் காரணங்களை விபரிக்கின்றன.
3. நியாயவான்களகவே போலிஸ் அதிகாரிகளைச் சித்தரிக்கும் போலிஸ் படங்களுக்கு மாறாக தாதாக்களுக்கும் போலிஸ் மற்றும் அரசியல்கட்சிகளுக்கிடையேயான தொடர்பை அம்பலப்படுத்துகின்றன.
4 பொதுவாக இதற்குமுன் வந்த தாதாப்படங்களில் எல்லாம் தாதாக்கள் பணக்காரர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்கு உதவும் சமூகக்காவலர்களாகவே இருப்பார்கள். உதாரணம் : நாயகன், ரஜினியின் பல படங்கள். ஆனால் இந்தப் படங்கள் அப்படியான மக்கள்காவலர்களாக தாதாக்களைக் காட்டாமல் அவர்களின் எதார்த்தமான இருப்பையே காட்டுகிறது.

இவற்றினிடைக் காணபப்டும் சில வித்தியாசங்களையும் தொகுத்துக்கொள்ளலாம்.

1. முடிவு. இப்படத்தின் எல்லா முடிவுகளும் ஒரேமாதிரியான்வையல்ல. வெவ்வேறுவகையான சாத்தியங்களை உள்ளடக்கியவை.பட்டியலின் இறுதிமுடிவு கூலிப்படையினர் மற்றும் தாதாக்களின் பாதுகாப்பற்ற இருப்பைக் காட்டுகிறது. மேலும் அதிகாரவர்க்கம் தனக்குத் தேவையானபோது உறபத்தி செய்துகொள்ளவும் தேவையில்லாதபோது தீர்த்துக்கட்டவும்ம்முடியும் என்பதை அப்பட்டமாக முகத்தில் அறைகிறது.டான்சேராவில் தாதா போலீசால் சுட்டுக்கொல்லப்படுகிறான். புதுப்பேடையிலோ அரசியல் அதிகார மய்யத்தை நோக்கி நகர்கிறான்.

2. சமூகப்பின்னணி. பெரும்பாலும் தாதாக்களும் கூலிப்படையினரும் விளிம்புநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.பட்டியலில் குறிப்பிட்ட சாதியப்பின்னணி சுட்டப்படவில்லையாயினும் இரண்டு இளைஞர்களும் அனாதையாகக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். சேராவிலும் பீப்பிரியாணிக்கடை வைக்க அனுமதிக்கப்படும் அளவிற்கு ஒரு சாதி, புதுப்பேட்டையில் மீனவர், ஆச்சாரியாவில் மட்டும்தான் தாதாவாகும் இளைஞன் பார்ப்பனர். ஆனாலும் பார்ப்பனர்களாலேயே ஒதுக்கப்படும் உஞ்சவிருத்திப்பார்ப்பனர். பசிக்காக ஒரு முஸ்லீம் பெரியவரிடம் பன் வாங்கிச் சாப்பிட்டதற்காகவே அவனும் அவனது குடும்பமும் பார்ப்பனர்களால் ஒதுக்கப்படுகிறது. கடைசியில் நிர்க்கதியாக அந்த இளைஞன் நிற்கும்போது அந்த முஸ்லீம் பெரியவரே அந்த இளைஞனை அழைத்துச்செல்கிறார்.
முஸ்லீம்களைத் தேசவிரோதிகளாகவும் குண்டுவைப்பவர்களாகவும் மட்டுமே சித்தரிக்கும் தமிழ்ச்சினிமாக்களுக்கு மத்தியில் முஸ்லீம் தன்னிலையை இணக்கமாக அணுகியதைப் பாராட்டத்தான் வேண்டும். மேலும் கதாநாயகன் பார்ப்பனராக இருந்தபோதும் எந்தவிடத்திலும் பார்ப்பனீயத்தை நியாயப்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.

3.நகைச்சுவை . இந்த நான்குப்படங்களிலும் ஆச்சாரியாவில் மட்டுமே நகைச்சுவைக்காட்சிகள் வருகின்றன. ஒருவேளை விறுவிறுப்பான படத்தின் வேகத்திற்கு நகைச்சுவை என்பது தடையாக இருக்கலாம் என்று மற்றப் படங்களின் இயக்குனர்கள் நினைத்திருக்கலாம். அதேநேரத்தில் கவுதமின் போலிஸ் படங்களிலும் நகைச்சுவை இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஆச்சாரியாவில் வரும் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பும் பார்ப்பனரான ஆச்சாரியாவையும் அதிகார வர்க்கத்தின் ஏவல்நாய்களான போலிஸ்துறையினரையும் படம் முழுவதும் பகிடி பண்ணித்தீர்க்கிறார்.

இந்தப்படத்தில் பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. குறிப்பாக 'புதுப்பேட்டை' படத்தின் மிகப்பெரிய பலவீனம் பாலகுமாரனனின் வசனம். மற்றொன்று அரசியல்வாதிகளைப் பற்றிய ஆழமான மேலோட்டமான சித்தரிப்புகள். அரசியல் தலைவர்களின் ஊழல்களையும் அதிகார முறைகேடுகளையும் அவை சுட்டிக்காட்டுகின்றன என்றபோதிலும் அவை மேலெழுந்தவாரியான தெலுங்குப்படங்களையொத்த சித்தரிப்புகளாகவே இருக்கின்றன. ஆயுத எழுத்து போன்ற படங்களிலும் இத்தகைய சித்தரிப்புகளே இருந்தன. இதைவிட ஆர்.கே.செல்வமணியின் சில படங்களும், மணிவண்ணனின் 'அமைதிப்படை' போன்ற ஒரு சில படங்களும் நுட்பமாகச் சித்தரித்திருப்பதை இங்குக் கவனத்திற்கொள்ளலாம்.

இந்த தாதாப் படங்கள் விளிம்பு நிலையிலிருந்து வந்த கதைமாந்தரையே களனாகக் கொண்டிருப்பதால் சில எதிர் அரசியல் கூறுகளும் தென்படுகின்றன. குறிப்பாக புதுப்பேட்டையில் 'எங்க ஏரியா உள்ள வராதே..' பாடலைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அதேபோல இன்னொரு பாடலான 'வர்றியா..'.

'வர்றியா' என்னும் ஒற்றை விளிச்சொல் இளைஞர்கள் விபச்சாரத்திற்குப் பெண்களை அழைப்பதாகத் தொடங்கி, விபச்சாரப் பெண்கள் இளைஞர்களை அழைப்பதாக தொடர்ந்துப் பின் பொதுவான அழைப்பாக விரிந்து கடைசியில் அது போலிஸ்காரனை நோக்கி முடிகிறது.

இதேபோல டான்சேரா படத்தின் ஆரம்பக்காட்சியில் வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞனிடம் அவனது நண்பர்கள் 'பசிக்கிறது' என்கிறார்கள். உடனே 'வாங்க, கோமாதா சாப்பிடலாம்' என்று அழைத்துச்செல்கிறான். கடைசியில் அவன் பீச்சில் பீப்பிரியாணிக்கடைதான் வைக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவச்சொல்லாடல்களே நிறைந்த தமிழ்த்திரை வெளியில் கோமாதாவைச் சாப்பிடுவது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத கலகம்.

ஆனால் இதை அடிப்படையாக வைத்து தாதாச் சினிமாக்களை மாற்றுச்சினிமாக்களாகவோ, தாதாக்களை அதிகாரத்திற்கான எதிர்நிலை முன்னுதாரணங்களாகவோ நாம் கட்டமைத்துவிடமுடியாது. ஏனெனில் தாதாக்கள் இந்த சமூகத்தால் உருவாக்கப்படுகிறார்கள் என்பதோடு அதிகாரவர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படுகிறார்கள் என்பதும் உண்மை.

அவர்கள் அதிகாரவர்க்கத்தைக் காக்கும் சேவகர்களாக பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் தேவை முடிந்துவிட்டதென்றோ அல்லது காட்டிக்கொடுப்பார்கள் என்றோ தோன்றும்போதோ அதே அதிகாரவர்கக்ம் அவர்களைத் தீர்த்துக்கட்டுகிறது. ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால் கடந்த ஜெயலலிதா அரசால் திமுக தலைவர் கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது அதைக்கண்டித்துப் பேரணி நடந்தது. அப்போது திமுகவினரைப் பேரணியிலேயே வெட்டியது அயோத்தியாகுப்பம் வீரமணி கும்பல்தான் என்பதும் அதற்குப்பின்னணியில் ஆளும் அதிமுக அரசு இருந்தது என்பதும் ஊரறிந்த ரகசியம். ஆனால் அதே வீரமணியத்தான் அதிமுக அரசு என்கவுண்டர் மூலம் தீர்த்துக்கட்டியது.

மேலும் தாதாக்களும் கூலிக்கொலையினரும் விளிம்புநிலைச் சமூகங்களிலிருந்தே வந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் பலசமயங்களில் அந்தச்சமூகங்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர்.பல போராட்டங்களை ஒடுக்கவும் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். நடுத்தரவர்க்கத்தினர் மட்டுமின்றி விளிம்புநிலை மகக்ளும்கூட தாதாகக்ளின் மீது ஆத்திரமே கொள்கின்றனர். கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் கோட்டையான சென்னையில் பாதி இடங்களை அதிமுக கைபப்ற்ற முடிந்ததன் ரகசியங்களிலொன்று அது எண்கவுண்டர் மூலம் பல ரவுடிகளை 'ஒழித்துக்கட்டி அமைதியை நிலைநாட்டியது'மாகும்.

எனவே குறைந்தபட்சம் ஹிட்ச்ஹாக்கின் பிளாக்மெயிலைப்போல போலிசின் அதிகாரத்தையும் தந்திரத்தையும் அம்பலப்படுத்தும் படங்களாவது தமிழ்ச்சூழலில் வரவேண்டும். எண்கவுண்டர், போலிசு, ராணுவம் போன்ற அதிகார நிறுவங்களுக்கு எதிரான பரப்புமுறையை மக்களிடம் கொண்டுபோக வேண்டும். அப்போதுதான் நம்மால் அதிகாரத்திற்கெதிரான சிறு உடைப்புகளையாவது நிகழ்த்தமுடியும்.

( 10.02.2007 அன்று புதியகாற்று இதழால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தமிழ்ச்சினிமா அகமும் புறமும்' என்னும் கருத்தரங்கில் பேசிய பேச்சின் சுருக்கம்)

வேதம் புதிது - வேறு சில கேள்விகள்
























"பாலுங்கிறது பேரு, தேவர்ங்கிறது எங்க வாங்கின பட்டம்?"
- கேள்வியை முன்வைத்து சில கேள்விகள்


"பூணூலை அறுப்பது தனிநபரின் உரிமையையும் மத உரிமையும் பறிக்கிறது" என்று அலறுகிறது பாரதிய ஜனதாக் கும்பல். ஆனால் அறுப்பதும் எரிப்பதும் எதிர்வன்முறைதான். பூணூல் அணிவதுதான் முதல் வன்முறை

- புதியஜனநாயம் ஜனவரி 2007 (பக் - 6)


'வேதம் புதிது' திராவிடர் கழகத்தினராலும் இடதுசாரிகளாலும் கொண்டாடப்பட்ட படம்.

பார்ப்பன எதிர்ப்பை வெளிப்படையாக முன்வைத்தது, அதனாலேயே பார்ப்பனர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தது, பிறகு எம்.ஜி.ஆரின் முன்முயற்சியால் (அக்கிரகாரத்தில் கழுதையைத் தடை செய்த அதே எம்.ஜி.ஆர் ஆட்சிதான்) வெளிவந்தது என்று பல பெருமைகளை உள்ளடக்கிய படம். குறிப்பாக அந்த 'பாலுங்கிறது பேரு, தேவர்ங்கிறது எங்க வாங்குன பட்டம்?"- கேள்வி. சரி, இந்தக் கேள்வியை வேறு சில வாசிப்புகளுக்கு உட்படுத்துவோம்.


படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் பாலுத்தேவர் (சத்யராஜ்) ஒரு நாத்திகர். அவர் பெரியாரியரா, அல்லது மார்க்சியரா என்பது சுட்டப்படவில்லை. ஆனால் அவர் படத்தில் ஓரிடத்தில் பேசும் வசனம் " அன்பே சிவமென்றால் அவன் கையில் சூலாயுதம் எதுக்கு?".


இந்த வாசகம் தமிழகத்தில் தி.கவினரால் சுவரெழுத்து செய்து பரப்பப்பட்ட வாக்கியம். அவர் பெரியாரிய அனுதாபி. ஆனாலும் சாதிப் பட்டத்தைத் தாங்கிச் சுமக்கிறார். இருக்கலாம், எனக்குத் தெரிந்து ஒரு பெரியவர், பெரியார் காலத்திலிருந்து இயக்கத்தில் இருப்பவர், பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்தவர் இன்னும் வன்னிய சாதி உணர்விலேயே வாழ்கிறார். இப்படியாக வன்னியப் பெரியாரிஸ்ட், தேவர் பெரியாரிஸ்ட், வெள்ளாளப் பெரியாரிஸ்ட் ஆகிய பெரியாரிஸ்ட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் கூட. ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் யாரும் சாதியைத் தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதில்லை.


தாய், தந்தையை இழந்த பார்ப்பன அனாதைச் சிறுவன் பாலுத்தேவரின் வீட்டில் சரணடைகிறான். அங்குள்ள பஞ்சாரத்தில் அடைக்கப்பட்டிருக்கும் கோழிகளையும், பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளையும் பார்த்து முகம் சுழிக்கிறான். உடனே ஆடுகளும் கோழிகளும் அங்கிருந்து மறைகின்றன. இதற்குப் பெயர்தான் தமிழ்நாட்டில் 'பார்ப்பன எதிர்ப்புப்படம்'.
இதைத்தான் உயர்குடியாக்கம் என்கிறோம், உட்செரித்தல் என்றும் சொல்கிறோம். பார்ப்பனப் பண்பாடு பிற பண்பாட்டுக் கூறுகளை உட்செரித்து அழிப்பது.


சரி, படத்தின் மய்யமான கேள்விக்கு வருவோம். "பாலுங்கிறது பேரு, தேவர்ங்கிறது எங்க வாங்கின பட்டம்?" - இந்தக்கேள்வியை பாலுவிடம் கேட்பது யார்?


தன் சாதிய அடையாளமான சம்பிரதாயமான பூணூலைக் கூடக் கழற்றாத பாப்பாரக் குஞ்சுதான் கேட்கிறது, "தேவர்ங்கிறது எங்க வாங்கின பட்டம்?"தேவர் என்பது எங்கேயும் வாங்கின பட்டம் இல்லைதான், ஆனால் அதேநேரத்தில் பூணூலும் யேல் பல்களைக் கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் இல்லையே?


தன்னுடைய சாதிய அடையாளத்தைத் துறக்காத எவனும்/வளும் சாதி சமத்துவம் பற்றி பேசத் தகுதியில்லாதவர்கள். இப்போதும் கூட இதேமாதிரியாக சில பார்ப்பனக்குஞ்சுகள் பூணூலைப் போட்டுக்கொண்டே கேட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள், "காலம் மாறிப் போச்சு ,ரிசர்வேஷனெல்லாம் எதுக்கு?, சாதி பற்றி ஏன் சார் பேசறீங்க?, நீங்கதான் சார் சாதி பற்றியெல்லாம் நினைக்கிறீங்க, இப்பெல்லாம் யாருசார் சாதி பார்க்கிறது" "பார்ப்பனர்களிடம் சாதிவெறி இல்லை, பி.சிக்கள்தான் எஸ்.சிக்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்"....இப்படியாக.


சரி, பாரதிராஜாவிடம் வருவோம். இந்தக் 'பட்டம்' கேள்வி உளப்பூர்வமாகவே கேட்கப்பட்ட கேள்வி என்றால் உங்களிடம் ஒரு கேள்வி.

அந்தக் கேள்வியை பார்ப்பனச் சிறுவன் கேட்டபிறகு பாலுத்தேவரிடம் அந்த சிறுவன் சொல்வான், "நான் கரையேறிட்டேன், நீங்க எப்ப ஏறப்போறேள்". உடனே யாரும் அடிக்காமலே காற்றில் பாலுத்தேவரின் கன்னத்தில் அறை விழும்.

பசும்பொன் என்று ஒரு படம் எடுத்தீர்கள். அதன் கதை வசனம் உங்கள் சாதிக்காரரான சீமான். நடித்தவரும் கள்ளர் சாதிக்காரரான சிவாஜிகணேசன். அப்படத்தில் 'தேவரய்யா' என்று ஒரு பாடல் வருகிறது. அதை எழுதியவரும் கள்ளரான கவிப்பேரரசு வைரமுத்து.


இதற்காக யாரை எங்கே எதைக்கொண்டு அடிப்பது?

ஜான் ஆபிரகாம்- ஒரு அசல் கலைஞன்















'அக்கிரகாரத்தில் கழுதை' படத்தில் ஒரு காட்சி







ஜான் ஆபிரகாம் கிழித்துப்போடப்பட்ட நெருப்புக்குச்சியைப்போல இருந்தான் எப்போதும். காற்றைப்போல அலைந்தான். மனிதர்களிடம் முரண்டு பிடித்தான், முரண்பட்டான். சண்டை போட்டான். ஆனால் எப்போதும் மனிதர்களை நேசித்தான்.


1937- கேரளமாநிலம் குன்னங்குளம்தான் அந்த அக்கினிக்குஞ்சை ஈன்றது. அவனது தந்தை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த கம்யூனிஸ்ட். ஆனாலும் அவனது குடும்பம் சனாதன கத்தோலிக்கக் குடும்பமாகவே இருந்தது. 1965ல் பூனா திரைப்படக் கல்லூரியில் படித்துத் தங்கப்பதக்கம் பெற்றான் ஜான்.
இந்தியச்சினிமாவில் இரண்டுவிதப் பள்ளிகள் இயங்குகின்றன. ஒன்று சத்யஜித்ரேவுடையது. மற்றொன்று ரித்விக் கட்டக்குடையது. கட்டக்கின் தலைமாணாக்கனாக ஜான் திகழ்ந்தான். வாழ்க்கை முழுதும் சினிமா எடுக்கும் தாகத்தோடு அலைந்தான். வணிகச்சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், குடியை வெறுப்பவர்கள் அனைவராலும் விலக்கப்பட்டவனாகவும் வெறுக்கப்பட்டவனாகவும் விளங்கினான் ஜான்.


1969ல்தான் அவனது முதல்படம் 'வித்யார்த்திகளே இதிலே இதிலே' வெளியானது. சில குழந்தைகள் விளையாண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களது விளையாட்டில் பங்களாவின் காம்பவுண்டில் இருந்த பிள்ளையார் சிலை உடைந்துபோகிறது. பிறகு அந்த குழந்தைகள் தங்களுகுள் காசு பங்கிட்டு மீண்டும் அந்த பிள்ளையார் சிலையை நிறுவுகிறார்கள். ஆனால் படம் அதோடு முடியவில்லை. மீண்டும் குழந்தைகள் விளையாட ஆரம்பிக்கிறார்கள். மீண்டும் உடைந்து சிதறுகிறது சிலை.


1978ல்தான் அவனது புகழ்பெற்ற தமிழ்ப்படம் 'அக்கிரகாரத்தில் கழுதை' வெளியானது. ஒரு பார்ப்பனப் பேராசிரியர் ஓய்வுபெற்றுத் தன்கிராமத்திற்கு ஒரு கழுதைக்குட்டியோடு வருகிறார். அதனால் அவருக்கும் அக்கிரகாரத்துப் பார்ப்பனர்களுக்கும் இடையில் தகராறு வருகிறது. ஆனால் பேராசிரியர் வீட்டில் வேலைபார்க்கும் தலித்பெண் லட்சுமி கழுதை மீது மிகுந்த பிரியத்தோடு இருக்கிறாள். பேராசிரியர் ஊரில் இலாதபோது கழுதை கோயிலில் கட்டப்படுகிறது. இந்த இடைவெளியில் லட்சுமி யாராலோ 'கெடுக்கப்பட்டு' கர்ப்பமாகிறாள்.


லட்சுமியின் குழந்தை இறந்து பிறக்கிறது. அதற்குக் காரணம் கழுதைதான் என்று பார்ப்பனச் சனாதன மிருகங்கள் முடிவுகட்டிக் கழுதையைக் கொன்றுவிடுகின்றன. ஊர் திரும்பிய பேராசிரியர் சுடுகாடு சென்று கழுதையின் மண்டையோட்டை லட்சுமியிடம் கொடுக்கிறார். லட்சுமி ஒரு மரண நடனம் ஆடி அதை அங்கிருக்கும் தலித்துகளிடம் கொடுக்கிறாள். மண்டையோட்டில் தீ பற்றியெரிகிறது, அந்த தீ அக்கிரகாரத்திற்கும் பரவுகிறது.


1980ல் வெளியான ஜானின் 'செறியச்சண்டே க்ரூர கிருத்தியங்கள்' நிலவுடைமையின் உட்சபட்ச கொடூரத்தைச் சொல்கிறது. செறியச்சன் ஒரு குறுவிவசாயி. அந்த ஊரிலுள்ள நிலப்பிரபுவின் கொடுமைகளைக் கண்டு புத்தி பேதலித்துப் போகிறான். பிறகு அந்தக் கொடுமைகளையெல்லாம் தானே இழைத்தவன் என்று நினைக்கத்தொடங்குகிறான். போலிஸ் கலவரத்தை முன்னிட்டு ஊருக்கு வரும்போது ஓடிப்போய்மரத்தில் ஏறிக்கொள்கிறான். இன்றளவும் உலகமயமாகல் யுகம் வரை முதலாளித்துவத்தின் இரக்கமற்ற மனசாட்சி மனநோயாளிகளை உற்பத்தி செய்வதை ஜான் நெகிழ்வாய்ச் சொல்லிச்செல்கிறான்.


பிறகு ஜானும் அவனது நண்பர்களும் சேர்ந்து 'ஒடேசா' சினிமா இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர். மக்களிடமிருந்து பணம் வசூல் செய்து வினியோகஸ்தர்களையும் தயாரிப்பாளர்களையும் புறக்கணித்து மக்களிடமே படம் போட்டுக்காண்பிக்கிறான் ஜான்.


'அம்ம அறியான்' என்கிற அந்தப் படம் அம்மாவின் மீதுள்ள பாசத்தையும் ஒரு நக்சல்பாரி இளைஞனின் தற்கொலையயும் சொல்லிச்செல்கிறது. இசையில் ஈடுபாடுமிக்க ஒரு இளைஞன் அதே சாகச உணர்வோடும் கலைஞனுக்கே உரிய மெல்லிய மனசோடும் இயகக்த்திற்கு வருகிறான். ஆனால் தற்கொலை செய்துகொள்கிறான். டெல்லிக்குப் பயணம் செய்யும் புருஷன் என்கிற இளைஞன் வழியில் அந்த பிணத்தைப் பார்க்கிறான். எப்படியாவது அவனது தாயிடம் அவன் இறந்துவிட்ட செய்தியைச் சொல்லிவிட வேண்டும் என்கிற அவனது முயற்சியே 'அம்ம அறியான்'.


'அம்மாக்கள் நல்லவர்கள். புரிந்துகொள்ளக்கூடியவர்கள். அம்மாவிடம் சொல்லிவிட்டே புரட்சி செய்யப்போகலாம், தப்பில்லை' என்கிறான் ஜான்.


சினிமா பற்றிய அவனது ஒரு சில கருத்துக்கள்.

"நான் குட்டநாட்டுப் புலையனோடு பிரெக்ட் பற்றியோ மாசேதுங் பற்றியோ பேசமுடியாது. யார் எனக்குப் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குப் புரியும்படி படம் எடுக்கவேண்டும்"


"படங்களுக்கு சிம்பாலிக் ஷாட் தேவையில்லை. நான் ஒரு கழுதையைக் காட்டுகிறேன் என்றால் அது கழுதைதான். உது உங்களுக்குப் போப்பாகத் தெரிந்தால் அது உங்களது சுதந்திரம்"


"ஸ்டார் ஓட்டலில் தங்கிப் பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கும் நடிகையை ஏழையாக நடிக்க வைக்க கம்யூனிஸ்ட்கள் படாத பாடு படுகிறார்கள். உணர்வுகளைத் தூண்டிப் படம் எடுத்துக் காசு பறிப்பதில் இங்கே பூர்ஷ்வா சினிமாக்காரர்களும் கம்யூனிஸ்ட் சினிமாக்காரர்களும் ஒன்றுதான்"


" ஒரு சினிமா என்பது இயக்குனரின் சினிமாதான். ஜான் ஆபிரகாமின் சினிமா ஜானின் சினிமாதான். நிச்சயம் எம்.டி.வாசுதேவன்நாயரின் சினிமா அல்ல. ஒரு இயக்குனர் மடையனாக இருந்தால் மட்டுமே சினிமா திரைக்கதையாசிரியனின் சினிமாவாக இருக்க முடியும்"


"நடிகருக்கு சிறந்த நடிகர் என்று அவார்டு கொடுப்பது முட்டாள்தனமானது. உண்மையில் அந்த விருதை இயக்குனருக்குத்தான் கொடுக்க வேண்டும்"


"திராவிடப் பழங்குடி மக்களின் இயல்புகளையே என் சினிமாவில் பிரதிபலிக்க விரும்புகிறேன்".


ஜானிடம் கடைசிவரை இருந்த வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.

" எனக்கு சினிமாவின் மூலம் ஒரு சல்லிக்காசு கூட லாபம் வேண்டாம். நான் பசியை ஜெயித்தவன். எனக்கு மேற்கூரை தேவையில்லை. ஆகாயத்தின் கீழ் படுத்துறங்குபவன் நான். நான் இயற்கையின் மைந்தன். புழுதியே எனக்கு இதம். எனக்குத் தேவையெல்லாம் என்னைச் சினிமா எடுக்க அனுமதியுங்கள்"


சாகும்வரை 'நான் ஒரு கம்யூனிஸ்ட்' என்று பெருமையாய்ச் சொல்லித் திரிந்த அந்தக் கலைஞன் சந்தித்த இன்னல்கள் சொல்லி மாளாது.

அவனது 'அக்கிரகாரத்தில் கழுதை' படத்திற்கு சிறந்த மாநிலப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. ஆனால் அப்போதைய எம்.ஜி.ஆர் அரசில் செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் 'அந்தப் படம் பார்ப்பனர்களின் மனதைப் புண்படுத்துவதாகக்' கூறி தமிழகத்தில் அந்தப் படத்தைத் தடை செய்தார். "முட்டாள் அமைச்சர், மோசமான சினிமாத் தயாரிப்பாளர்" என்று ஆர்.எம்.வீயை வருணிக்கிறான் ஜான்.


ஒருமுறை மலையாளத்தில் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவில் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் சக்கரியாவும் இருக்கிறார். சக்கரியாவும் ஜானும் நண்பர்கள். ஜானின் 'அம்ம அறியானும்' விருதுக்கான போட்டிப் பட்டியலில் இருக்கிறது. சக்கரியா தங்கியிருந்த ஓட்டலில் அவரைச் சந்திக்க ஜான் பலமுறை முயற்சி செய்கிறான். ஆனாலும் அது சரியான காரியமில்லை என்பதால் சந்திப்பதைத் தவிர்க்கிறார் சக்கரியா.


கடைசியாக ஜான் ஒரு டீக்கடையில் காத்திருப்பதாக ஒரு ஆள் மூலம் சக்கரியாவுக்குத் தகவல் அனுப்புகிறான். சக்கரியா எரிச்சலோடு ஜானைச் சந்திக்கச் செல்கிறார். அதற்குள் இந்த விசயத்தை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட ஒரு சினிமா நிருபரும் அங்கே அமர்ந்திருக்கிறார். சக்கரியா கோபத்தோடு ஜானிடம் கேட்கிறார், "என்ன வேண்டும்?"
ஜான் சொன்னானாம், "எனக்கு ஒரு இருபத்தைந்து ரூபாய் கிடைக்குமா?" (இந்த இடத்தில் கண்ணீர் திரையிடுவதைத் தடுக்கமுடியவில்லை ஜான்)


ஜான், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டைப் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்துப் பாதியிலேயே நிறுத்திவிட்டான். 'கோவலனின் கதையை'த் தமிழில் சினிமாவாக எடுக்க வேண்டும் என்பதும் அவனது ஆசை.


எனக்கு அவன் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆச்சரியம் அவன் கடைசியாக எடுத்தது பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி திராவிடர் கழகத்திற்காக பெரியார் பற்றிய ஒரு விவரணப் படம். ஒரு கலகக்காரன் மற்றொரு கலகக்காரன் பற்றிக் கடைசியாகப் படம் எடுத்துவிட்டுச் செத்துப்போனான்.

ஆம், 1987ல் தன் அய்ம்பதாவது வயதில் நண்பர்களோடு மொட்டை மாடியில் குடித்துக்கொண்டிருக்கும்போது கால்தவறிக்கீழே விழுந்து செத்துப்போனான் ஜான்.


ஜான், நீ உயிரோடிருந்தால் உன்னோடு மதுவருந்தி உனை முத்தமிட்டிருக்கலாம் ஜான். ஆனால் இப்போது நீயோ ஒரு புத்தகமாகச் சுருங்கிவிட்டாய். இப்போது மிஞ்சுவதெல்லாம் கண்ணீரும் உன் மீதான இனம் புரியாத பிரியமும், பெருமூச்சும், உன் 'அக்கிரகாரத்தில் கழுதை' என்கிற மாபெரும் கலைப்படைப்பு வெளியான அதே 1978ம் ஆண்டில்தான் நான் பிறந்தேன் என்கிற மகிழ்ச்சிப் பெருமிதமும்தான், ஜான்.

வெயில் மற்றுமொரு தேவர் படம்?



பலரும் பத்திரிகைகளும் பாராட்டியதால் 'வெயில்' படத்தைப் பார்க்க நேர்ந்தது (டி.வி.டியில்தான்). ஆனால் நான்கு சீன்களுக்குள் எழுந்து வரும்படியாகிவிட்டது.


முதல் எரிச்சல் 'வெயிலோடு விளையாட்டி வெயிலோடு உறவாடி..' என்னும் முதல் பாடல். பாடலாசிரியர் என்ன வரிகளை எழுதியிருக்கிறாரோ அதை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு கலைஞன் தேவையில்லை. கார்பன் பேப்பர் போதும்.

கௌதமிடமும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. 'காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடித்திரிவதுந்தன் முகமே..' என்று தாமரை எழுதினால், கௌதம் காலையில் எழுவது, படுக்கை, காதலனைத் தேடுவது என்று காட்டிக்கொண்டிருப்பார், எதோ பிராக்டிகல் கிளாஸ் டெமான்ஸ்டிரேசனைப்போல. வெயிலிலும் 'அண்ணாச்சி கடையில் எண்ணையில் குளித்த புரோட்டா" என்றால் புரோட்டாக் கடையைக் காட்டுகிறார்கள்.


அதேபோல 'அழகி'யில் ஆரம்பித்து இந்த சின்னவயது கிராமத்துக் காதலை சலிக்கச்சலிக்க காட்டுகிறார்கள். சின்னவயதில் காதலிக்கக்கூடாது என்றில்லை, (என் முதல்காதலின் போது வயது பத்து). ஆனால் அதை எதோ சக்சஸ் பார்முலாவாக ஆக்கும்போதுதான் எரிச்சல் வருகிறது.


படத்தில் முக்கியமான எரிச்சல் வேறு. பரத் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு விளம்பரக் கம்பெனி நடத்துகிறார்.அதில் பொறாமைப் படுகிறவர்கள் இன்னொரு தேவர் கட்டைப்பஞ்சாயத்துக்காரரான போஸ் என்பவரிடம் முறையிடுகின்றனர். போஸ் கூப்பிட்டு பரத்தை எச்சரிக்கிறார். அப்போது பரத் சொல்கிறார், "அண்ணே தைரியம் இல்லாட்டி இந்த தொழிலில் பிழைக்க முடியாது. பீயள்ளத்தான் போகணும்".
தேவர்கள் பீயள்ளக்கூடாதா என்ன? நான் எழுந்துவந்துவிட்டேன்.

மண்- ஈழத்துத் தமிழ்ச்சினிமா - விமர்சனம்



மண்ணில் ஒரு ரத்தத்துளி தெறித்துவிழுவதிலிருந்து படம் தொடங்குகிறது.


கனகராயன்பாளையம் என்பது இலங்கையிலுள்ள ஒரு அழகிய கிராமம். இங்கு பெரும்பாலும் வெள்ளாளர்களும் பிற ஆதிக்கச்சாதியினருமே நில உடைமையாளர்களாக இருக்கிறார்கள்.தலித்துகளும் மலையகத்தமிழர்களும் விவசாயக்கூலிகளாக இருக்கிறார்கள்.

பாடசாலைகளிலும் வெள்ளாள ஆதிக்கமே நிலவுகிறது. 'ஆறுமுகநாவலர் தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றினார்' என்னும் பாடத்தை ஒப்பிக்க முடியாத தலித் மாணவன் கனகரத்னம்(எ) கணேசனை பரமசிவம்பிள்ளை என்னும் வெள்ளாள வாத்தி தண்டிக்கிறார்.

அங்குள்ள ஒரு வெள்ளாள நில உடைமையாளரின் மகன் பொன்னம்பலம்(எ)பொன்ராசு. பள்ளியில் சகமாணவ்ர்களுடன் விடலைப்பருவலூட்டியில் திளைக்கிறான். அப்போது வவுனியாவில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒருமலையகத்தமிழர் குடும்பம் அங்கு குடியேறுகிறது. அந்த குடும்பத்திலிருந்து லட்சுமி என்னும் மாணவி பள்ளியில் சேர்கிறாள்.


அவளைத் தன் அருகில் அமரவைக்க அனுமதிக்கவும் மறுக்கிறாள் கேலீஸ் என்கிற வெள்ளாளச்சிறுமி. விளையாட்டிலும் அவளைச் சேர்த்துக்கொள்வதில்லை. அங்கு வேலைபார்க்கும் குணசீலன் என்னும் தலித் அவர்களுக்கு அறிவுரை கூறி லட்சுமியை அவர்களோடு விளையாடச்செய்கிறார்.

இதற்கிடையில் பொன்ராசுவுக்கும் லட்சுமிக்கும் இடையில் காதல் அரும்புகிறது. குணசீலனும் லட்சுமியை விரும்பினாலும் லட்சுமி விரும்புவதென்னவோ பொன்ராசுவைத்தான். லட்சுமியின் தந்தை ஒரு வெள்ளாள பண்ணையாரால் திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். லட்சுமியின் தாய்மாமன் ராஜா இதயநோய் உள்ளவன். இன்னொரு வெள்ளாள நில உடைமையாளரின் பண்ணையில் வேலைசெய்யும்போது பாதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சையின்றி இறக்கிறான்.

லட்சுமிக்கும் பொன்ராசுவுக்கும் ஒருகட்டத்தில் உறவு ஏற்பட கர்ப்பமாகிறாள். பொன்ராசுவின் தந்தையோ இருவருக்கும் திருமணம் செய்துவைக்க மறுக்கிறார். குணசீலனின் ஆலோசனையின் பேரில் தங்கையா போலிசை நாட வெள்ளாள பண்ணையாரின் பணபலத்திற்கு முன்னால் போலீஸ் வாயடைத்துப்போகிறது.

பொன்ராசுவும் 'கீழ்சாதி நாயைக் கட்டிக்க' விருப்பமில்லாமல் லண்டன் சென்றுவிடுகிறான். லட்சுமியின் வீட்டில் ஒவ்வொருவராக இறந்துவிடுகிறார்கள்.

18 வருடங்களுக்குப் பிறகு கனகராயன் பாளையம் பற்றி ஆவணப்படம் எடுக்க கனகராயன்பாளையம் வருகிறான் பொன்ராசு. அவனது உதவிக்கு இரு இளைஞர்கள் வருகிறார்கள்.
முடிவில்தான் தெரிகிறது, அந்த இளைஞர்களில் ஒருவன் பொன்ராசுவால் ஏமாற்றப்பட்ட லட்சுமியின் மகன். அவன் பொன்ராசுவை மரத்தில் கட்டிப்போட்டு துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறான்.

படம் இப்படியாக முடிகிறது, ' இதுவரை வணங்குவதற்காக மட்டுமே குனிந்த கைகளில் முதன்முதலாக துப்பாக்கி ஏந்தப்பட்டது' .

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய விஷயங்கள்.
கதாநாயகியாக வரும் ஷானாவின் நடிப்பு. கண்களில் விளையாடியிருக்கிறார். கதாநாயகனின் விடலைப்பருவக்குறும்புகள். பாடசாலையில் நிலவும் தீண்டாமை வேறுபாடுகளைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுவது.
இன்னொன்று கேமராவில் கொள்ளை கொண்ட ஈழத்து நிலப்பிரதேசத்தின் அழகு. அடப்பாவிகளா இந்த அழகுப்பூமியிலா இவ்வளவு கொலைகள் நடக்கின்றன, பிணங்கள் விழுகின்றன என்று கதறத்தோன்றுகிறது. உண்மையில் ஈழத்தின் பசுமை பாய்ந்த வயல்வெளிகளை முத்தமிடத்தோன்றுகிறது (நிச்சயம் மொழிப்பற்றாலோ, தமிழீழப் பாசத்தாலோ அல்ல). ஈழத்துத் தமிழ்தான் உண்மையிலேயே பாரதி சொன்னதுபோல 'இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே'தான்
.
அதேபோல பாராட்டப்பட வேண்டிய முக்கியமான விஷயம், 18 வருடங்களுக்குப் பிறகு தாயகம் திரும்பும் பொன்ராசு காதலியைக் கைவிட்டதற்காக மனம் வருந்தவில்லை, ஆனால் போரினாலும் கலவரங்களாலும் சிதைக்கப்பட்ட வீடுகளையும் பாடசாலைகளையும் இழந்த உறவுகளையும் நினைத்தே கண்ணீர்விடுகிறான். தாயகப்பெருமிதம், இழந்த மண் குறித்த ஏக்கம் இவற்றின்பின் ஒளிந்திருப்பது நிலப்பிரத்துவ மதிப்பீடுகளும், குறுகிய சாதிய வெறியும்தான் என்பதைக் கோடிட்டுக் காட்டியதற்காக 'மண்' படத்தைப் பாராட்டலாம்.


அதேபோல பொன்ராசுவின் நண்பன் ஒருவன் இயக்கத்திற்குச் சென்றுவிடுகிறான். 18 வருடங்களுக்குப் பிறகு லண்டனிலிருந்து திரும்பி கும்மாளமாய்க் குடித்து பார்ட்டி கொண்டாடும் பொன்ராசுவைப் துப்பாக்கி ஏந்திய இயக்கப் பாதுகாவலர்கள் சகிதம் பார்க்க வரும் அந்த நண்பனிடமும் (போராளி?) பொன்ராசுவின் சாதிய உணர்வுகுறித்தோ, ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படட் அநீதி குறித்தோ எந்த கேள்விகளும், விமர்சனங்களும் இல்லை. இத்தகைய மெல்லிய நுணுக்கங்களைப் படம் தொட்டுக்காட்டியிருக்கிறது.


எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்தில் நிலவும் சாதியப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய முதல் தமிழ்ப்படம் என்பதால் 'மண்' படத்தை நிறையவே பாராட்டலாம்.


அதேபோல படத்தில் பல பிரச்சினைகளும் இருக்கின்றன.

குறிப்பாக மலையகத்தமிழர்களாக வரும் வாகைசந்திரசேகரும் 'காதல்'சுகுமாரும் ஈழத்துத்தமிழ் பேசாமல் தமிழகத்தமிழே பேசுகிறார்கள். உண்மையில் மலையகத் தமிழர்களின் உச்சரிப்பு எப்படியிருக்கும்? ஈழத்து நண்பர்கள்தான் பதில் சொல்லவேண்டும்.


அழகியல் உணர்வென்று பார்த்தால் சாதாரண தமிழ்ச்சினிமாவின் தரத்தைத் தாண்டவில்லை 'மண்'. இதிலேயும் விரகப்பாடல், குத்துப்பாடல், பிரச்சாரப்ப்பாடல் சம்பந்தமில்லாமல் ஒலித்து இம்சைப்படுத்துகிறது. இசை சுமார் ரகம்தான்.

இளமைக்காலங்களில் உடல்மொழியில் விளையாடிய சந்திரசேகருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, படம் முழுக்க நடிக்கவே தெரியாதவர் போல இருக்கிறார். 'காதல்' சுகுமாரும் அப்படியே.

அதேபோல படத்தில் சில கேள்விகளும் எழுகின்றன.
என்னதான் சாதியப்பிரச்சினைகள் ஈழத்தில் இருந்தாலும் இனப்பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் படத்தில் ஒரு காட்சியைத் தவிர எந்தக் காட்சியிலும் இயக்கங்களே வரவில்லை. எந்த கலவரமோ இனப்பிரச்சினையோ காட்டப்படவில்லை. தமிழ்த்தேசியவாதிகள் இனப்பிரச்சினையைக் காட்டி சாதியப்பிரச்சினை குறித்து விவாதிக்காமலே இருப்பதைப் போலத்தானே இதுவும்? மேலும் இயக்கங்களுக்குள் இருக்கும் சாதிய உணர்வுகள் குறித்தும் காத்திரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேபோல வெளியில் மட்டுமில்லாது இயக்கங்களுக்குல் நிலவும் சாதிய உணர்வுகளையும் சொல்வதற்கும் வாய்ப்பாக இருந்திருக்குமே?


என்னதான் ஆதிக்கச்சாதி இளைஞனாக இருந்தாலும் தன் காதலியை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிடுவான் என்பது செயற்கையாகத் திணிக்கப்பட்டது போல இருக்கிறது. ஒருவேளை அந்தப் பெண்ணை 'அனுபவிப்பதுதான்' அவனது நோக்கம் என்றால் அதைத் தெளிவாகக் காட்சிப்படுத்தியிருக்கலாமே? உண்மையாகவே இருவரும் மனமொத்துக் காதலிப்பதுபோலத்தானே காட்சிகள் அமைந்திருக்கின்றன?

எப்படியோ மாவீரர் கதையாடல்களும் சாகசப் பெருமிதங்களும் நிறைந்த ஈழத்துப் பூமியில் நிலவும் சாதியக் கொடூரங்களையும் வெள்ளாள ஆதிக்க வெறியையும் அரைகுறையாகவேனும் சொல்லத்துணிந்ததற்காக 'மண்' திரைப்படத்திற்கு ஒரு ரெட்சல்யூட்.

கதை, வசனம், பாடல்கள், இயக்கம் : புதியவன்.
திரைக்கதை : ராஜ் கஜேந்திரா
ஒளிப்பதிவு : எஸ்.எல்.பாலாஜி
இசை : ஜெர்மன் பாலாஜி

மணிரத்னம் ஒரு போஸ்ட்மாடர்னிஸ்டா?

அன்புள்ள அனானி,

உங்கள் பெயர் எனக்குத் தெரியவில்லை (முட்டாள், பெயர் தெரியாவிட்டால்தான் அனானி, cool down). அடிக்கடி என் பின்னூட்டங்களில் வந்து எனக்கு பின்நவீனம் தெரியாது, சினிமா தெரியாது என்றெல்லாம் 'அருளாசிகள்' வழங்கிப் போகிறீர்கள். நன்றி. இருக்கலாம்.
கார்ப்பரேசன் பள்ளியில் 12ம் வகுப்பு வரை சத்துணவு மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த என் அரைகுறை ஆங்கில அறிவின் விளைவாகப் பின்நவீனம் குறித்து நான் ஏதாவது அபத்தமாக உளறியிருக்கலாம். நான் பின்நவீனத்தில் டாக்டரேட் பண்ணியவன் இல்லை. நான் ஒரு பின்நவீனத்துவவாதி என்று எங்கேயும் சொன்னதாகவும் நினைவில்லை. (postmodern conditionதான் இருக்கிறது, postmodernistஎன்றெல்லாம் யாரும் இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்)

மணிரத்னத்தின் சினிமா குறித்து நான் எழுதும்போது 'ஒரிஜினலாட்டி, காப்பி' குறித்து பி.ந என்ன சொல்கிறது என்று சட்டையைப் பிடித்து உலுக்கியிருந்தீர்கள். உண்மைதான் பின்நவீனம் 'ஒரிஜினல் என்ற ஒன்று கிடையாது' என்றுதான் சொல்கிறது. ஒரிஜினாலிட்டி என்ற பெயரால் ஏற்படும் அறிவின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஆனால் மணிரத்னத்தை விமர்சிக்கும்போது மட்டும் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று தெரியவில்லை? தேவா டியூன்களைக் காப்பியடிக்கிறார் என்று குற்றம் சாட்டப்படும்போது கோபம் வருவதில்லை. ஆனால் மணிக்கு மட்டும் பின்நவீன உதவியோடு வந்துவிடுகிறீர்களே, ஏன்? தேவா ஏன் சாதாரணக் கானா இசையமைப்பாளராக அறியப்படுகிறார்? மணிரத்னம் எப்படிக் கலைஞ்ன் ஆனார்?

ஒரு படத்தைப் பார்த்து உந்துதல் பெறுவது, அதை நம் சூழலில் முயற்சித்துப் பார்ப்பது உலகமகா பாவமில்லை. ஆனால் எந்த பிரச்சினை குறித்து (அ) எந்த சூழல் குறித்துப் படமெடுக்கிறீர்களோ அது குறித்த அவதானிப்பு அவசியம் இல்லை என்று கருதுகிறீர்களா?

'புதுப்பேட்டை' யிலும், 'ஈ'யிலும் வரும் சேரியையும் பாருங்கள். 'ஆயுத எழுத்தில் வரும் சேரியைப் பாருங்கள். சென்னையில் எந்த சேரி அவ்வளவு சுத்தமாக இருக்கிறது? (மணிரத்னம் வகையறாக்கள் வந்து கூட்டிப் பெருக்கினால் ஒருவேளை அபப்டி மாறக்கூடும்)'ரோஜா' படம் காஷ்மீர்ப் பிரச்சினை பற்றிய எந்த உரையாடலைத் துவக்கி வைத்தது? மீண்டும் தேசியக் கற்பிதம் குறித்த உணர்ச்சி மேற்பரப்பில் மட்டும்தானே விளையாடியது?
மும்பை படத்தின் கிளைமாக்ஸில் ஏன் 4பக்க வசனம்? ஏன் மணிரத்னம் என்னும் கலைஞனால் அதைக் காட்சிப்படுத்த முடியவில்லை? ராமர் கோவில் பாபர் மசூதிப் பிரச்சினை குறித்து போகிற போக்கில் 'எல்லோரும் ஒற்றுமையா இருங்கள்' என்று சொல்வதற்குக் கலைஞன் தேவையா? ஏன் மிஸ்டர்&மிசஸ் அய்யர் ஏற்படுத்திய பாதிப்பை மும்பை உருவாக்கவில்லை?

திராவிட இயக்கம் குறித்து எந்த ஆழமான கல்வியும் இல்லாமல் எந்த தைரியத்தில் மணி 'இருவர்' படம் எடுத்தார்? ஒரு படத்தின் மூலம் தாக்கம் பெறுவது என்பது வேறு. தலையைச் சொரிவதிலிருந்து வாயைக் குதப்பிப் பேசுவது வரை காப்பியடிப்பது கலையா? இசை, ஒளிப்பதிவு, தொழில்நுட்பம் போன்ற ஒரு சில அம்சங்களைத் தூக்கிவிட்டால் உலக சினிமாவில் மணிரத்னத்தின் இடம் எது?

எந்த புரிதலும் இல்லாமல் எல்லாவற்றையும் வியாபாராமாக்கி விடும் ஒருவரைக் குறித்து விமர்சித்தால் ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்?

நீங்கள் பின்நவீனப் பண்டிதர் என்பதால் அடையாள அரசியல்(politics of identity), வித்தியாசங்களின் அரசியல்(politics of differences) (அ) மிச்சங்களின் அரசியல்(politics of reminders) பற்றி அறிந்திருப்பீர்கள். சபல்டர்ன் ஆய்வுகள் அடிப்படையிலான வாசிப்புகளின் அவசியத்தையும் அறிந்திருப்பீர்கள். இத்தகைய ஆய்வுகளின் அடிப்படையில் அணுகினால் மணியின் சினிமாக்கள் யாருக்கு ஆதரவாக நிற்கின்றன?

மணியின் படங்களில் பெண்களின் இடங்கள் எவை? காதலனின் உயிர் உருக்கும் பாட்டைக் கேட்டு தன் பர்தாவைத் தடுக்கும் நங்கூரத்தை உதறிவிட்டு ஓடி வரும் பெண்ணின் குலுங்கும் மார்புகளைக் குளோசப்பில் காட்டிய கலைஞன் தானே மணி? ஆயுத எழுத்தில் சேரிப்பெண்ணாக வரும் மீராஜாஸ்மினின் பிரதானப் பணிகள் எவை? மாதவனோடு சரசமாடுவதும், கணவனிடம் அடிக்கடி அறை வாங்குவதும்.

இங்கு மார்க்சியம் தெரிந்த பல பார்ப்பனர்கள் மார்க்சிஸ்ட்களாக இருந்ததை விடப் பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். (எல்லாப் பார்ப்பனர்களையும் சொல்லவில்லை. எம்.என்.ராய், ராகுல்ஜி, ஏ.எஸ்.கே போன்றோர் மீது எனக்கு மரியாதை உண்டு). இப்போது பின்நவீனம் தெரிந்தும் பார்ப்பனர்களாகவே இருக்கிறீர்கள்.

என்னைப் பார்ப்பன வெறுப்பாளன் என்று அடையாளப்படுத்தியிருந்தீர்கள். நான் பார்ப்பன எதிர்ப்பாளனே தவிர பார்ப்பன வெறுப்பாளன் இல்லை. எனக்குத் தமிழ்ச்சூழலில் பின்நவீனத்தை அறிமுகப்படுத்தியவர்களும் பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவும் இந்துத்துவ எதிர்ப்பாளர்கவுமே இருந்தார்கள். நான் கொண்டிருப்பது பார்ப்பன வெறுப்பு என்றால், 'இருவர்' படம் (முழுவதும்) 'ஆயுத எழுத்தில்' வில்லனாக வரும் கதாபாத்திரம் கருப்புச்சட்டை அணிந்திருப்பது, 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று வசனம பேசுவது ஆகியவைகளைக் கொண்டு மணிரத்னம் என்ன வகையான உணர்வுகளைக் கொண்டிருக்கிறார் என்று தயவு செய்து எனக்கு விளக்குங்களேன்.

நன்றி.
சுகுணாதிவாகர்.

மணிரத்னம் நீங்கள் கலைஞனா, திருடனா?



'இயக்குனர் அசிங்கம்' பாலச்சந்தர், 'பார்த்தாலே பரவசம்' வரை நூறு நாடகங்கள் எடுத்திருக்கிறார். 101வது நாடகமாக 'பொய்' ஓடிக்(?)கொண்டிருக்கிறது. பாரதிராஜா என்னும் கலைஞன் பல கிளிஷேக்களை எடுத்து ஓய்ந்துவிட்டார். இவர்கள் இருவருக்கும் அடுத்து இருப்பது மணிரத்னம்தான்.

அவர் மௌனராகம், இதயக்கோயில், பகல்நிலவு என்று எடுத்துக்கொண்டிருந்த வரை ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் அரசியல் சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பித்து வாந்திதான் எடுத்தார். காஷ்மீர்ப்பிரச்சினை, வடகிழக்கு மாநிலங்களின் தேசிய இனப்பிரச்சினைகள் என ஒரு இழவும் தெரியாது ஏதாவதொன்றை எடுத்துத் தள்ளி விமர்சகர்களிடம் நார்நாராய்க் கிழிபட்டார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மணிரத்னம் ஏதாவது சொந்தமாய் யோசித்துப் படமெடுத்திருக்கிறாரா என்றால் அதுவும் கிடையாது. அவர் சுட்ட இடங்கள்.

நாயகன் - காட்பாதர்
திருடா திருடா - கிளிப்ஹேங்கர்
ரோஜா - ஒருமாதிரியாக ராமாயணத்தை உல்டா செய்தது.
தளபதி - மகாபாரத உல்டா
பம்பாய் - ஓட்டல் ருவாண்டாவை மோசமாக உல்டா அடித்தது.
ஆயத எழுத்து - அகிரோ குரோஷாவைக் கேவலப்படுத்தியது.

நாயகனில் 'காட்பாதர்' படத்தில் மார்லின்பிராண்டோ தலையைச் சொறிவதைக்கூட காப்பியடித்து கமல் சொறிவார். அனேகமாக மணியின் படங்களிலேயே தேறுவது 'அஞ்சலி' மட்டும்தான். (ஒருவேளை அது திருடப்பட்ட படத்தை நான் பார்க்காமல் கூட இருந்திருக்கலாம்)

இப்போது மணிரத்னம் 'குரு' என்று ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனுடைய கதையைச் சமீபத்தில் (2006ல்தான்) ஒரு பத்திரிகையில் படிக்க நேர்ந்தது. அந்த கதை வேறு ஒன்றுமில்லை. ஆர்சன் வெல்ஸ் என்னும் இயக்குனரால் எடுக்கப்பட்ட 'சிட்டிசன் கேன்' என்னும் படத்தின் அதே கதைதான்.முடிந்தால் அந்த படத்தின் டி.வி.டியைப் பாருங்கள். மணிரத்னம் அதைச் சுடமாட்டார் என்று (தைரியம் இருந்தால்) பந்தயம் கட்டுங்கள். குரு வெளியாகும்வரை பொறுத்திருங்கள்.ஒருவேளை அப்படி இல்லாமல் இருந்தால் பந்தயம் கட்டுபவர்களுக்கு மணிரத்னத்தால் காப்பியடிக்கப்பட்ட மேற்கத்தியப்படங்களின் டி.வி.டிக்கள் இலவசமாக வழங்கப்படும்.

இந்தியாவில் காப்பியடிப்பவன் தான் கலைஞன் என்றால் கலைஞனை என்ன சொல்வார்கள்?