தாதாசினிமா vS போலிஸ் சினிமா - அதிகாரத்தை விசாரணை செய்தல்



2006 தீபாவளியையொட்டித் தமிழகத்தில் அதிகமான தாதாப் படங்கள் வெளிவந்தன. இவை பெரும்பாலும் 'சிட்டி ஆப் த காட்' என்கிற மேற்கத்தியப் படத்தின் தழுவல் என்று பரவலாக பேசப்பட்டது.

தினத்தந்தி குழுமத்திலிருந்து வெளிவரும் 'கோகுலம் கதிர்' என்கிற மாத இதழ் 'தாதாக்களின் பிடியில் தமிழ்ச்சினிமா' என்று தலைபபிட்டு இந்த தாதாப் படங்களை விமர்சித்திருந்தது. 'புதிய பார்வை' என்னும் நடுவாந்திர இலக்கியப்பத்திரிகையும் 'தமிழ்ச்சினிமாக்களில் தாதாக்கள்' என்ற தலைப்பில் இதையொட்டிய விமர்சனங்களை முன்வைத்தது. என்கவுண்டர்களை நியாயப்படுத்தும் போலீஸ்சினிமாக்கள் குறித்து இத்தகைய கடுமையான விமர்சனங்கள் வருவதில்லை என்பதை நாம் அவதானிக்கலாம்.

அறிவுஜீவிகள் என்று சொல்லப்படுபவர்களிலிருந்து பொதுப்புத்தியால் நிறைக்கப்பட்ட பொதுமனம் வரை திரைவன்முறை குறித்து அலறும் இந்த மனோபாவத்திற்கு அடிப்படையாக நான் கருதுவது
1. போலீஸ்காரர்களிடம் அடிவாங்காத, சாதி/மத/ இனக்கலவரங்களால் பாதிக்கப்படாத அல்லது குறைந்தபட்சம் அதைப் பார்த்தேயிராத நடுத்தர வர்க்கமனம் மட்டுமே இந்த திரை வன்முறையைக் கண்டு அலறுகிறது.
2. இந்தியச்சமூகம் என்பதே வன்முறையானதுதான். ஆனால் அந்த வன்முறை கட்புலனாகாத வன்முறை. அரூவமான வன்முறைக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கும் இந்தியமனம் தூலமான வன்முறையைக் கண்டதும் அதைப் புரிந்துகொள்ளமுடியாமல் (அ) ஏற்றுக்கொள்ள முடியாமல் அலறுகிறது.

தமிழில் முதன்முதலில் என்கவுண்டரை அறிமுகப்படுத்தியது சீவலப்பேரி பாண்டி. அதற்கு முன்னும்கூட ஏராளமான போலீஸ் சினிமாக்களும் தாதா சினிமாக்களும் வந்திருந்தபோதிலும் அவையெல்லாம் தமிழ்ச்சினிமாவின் கமர்சியல் பார்முலாவுக்குள் அடங்குபவையே. நாலு தாதாப் படங்கள் வெற்றிபெற்றால் தொடர்ச்சியாக தாதாப் படங்கள் வருவதும் ஆறு போலிஸ் படங்கள் வெற்றிபெற்றால் அடுத்தடுத்து போலீஸ் படங்கள் வருவதுமானதே தமிழ்ச்சினிமாவின் சூத்திரவிதி.

முதன்முதலாக என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்கிற சொல்லாடலைத் தமிழ்த்திரையில் அறிமுகப்படுத்தி அதை நியாயப்படுத்தியது கௌதம்மேனனின் 'காக்க காக்க'. போலிஸ் ஆவி உடலில் புகுந்த கௌதமின் அடுத்த படமாகிய 'வேட்டையாடு விளையாடு' படமும் இதேவகைப்பட்டதே.

போலிஸ்காரர்களும் அவர்களது குடும்பங்களும் தாதாக்களால் துன்புறுவது, மிரட்டப்படுவது, போலிஸ் என்கவுண்டர் என்ற பெயரில் தன்போக்கில் தீபாவளித் துப்பாக்கி போல சகட்டுமேனிக்குச் சுட்டுப்போடுவதுமாக கௌதமின் படங்கள் அடிப்படைத் தர்க்கங்களையும் தொலைத்தவை. வேட்டையாடு விளையாடு படத்தில் ராகவன் என்னும் போலிஸ் அதிகாரியின் முதல்மனைவியை எம்.எல்.ஏவின் ஆட்கள் கொலைசெய்துவிட கொஞ்சமும் நம்பவியலாது அந்த எம்.எல்.ஏவை சுட்டுக்கொல்லும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம்.

அவரது இரண்டு படஙக்ளுக்கும் பாரதூரமான வித்தியாசங்கள் இல்லை. முதல் படத்தில் கதாநாயகனின் பெயர் அன்புச்செல்வன் என்ற நல்ல தமிழ்ப்பெயரென்றால் இரண்டாவது படத்தில் வில்லன்களின் பெயர்கள் அழகிய தமிழ்ப்பெயர்கள், அந்தப் படத்தில் ஜோதிகா காதலி என்றால் இந்தப் படத்தில் இரண்டாம் காதலி என்பதுபோன்ற சில்லறை விஷயங்களைத் தவிர. ஹாரிஸ்ஜெயராஜின் இசை, தாமரையின் கவித்துவ வெளிகளுக்கு அழைத்துச்செல்லும் வரிகள் என்பதைத் தவிர்த்துவிட்டால் அடிப்படைத் தர்க்கங்களுமற்ற சினிமாக்கள்தான் கௌதமுடையவை.

பட்டியல், ஆச்சார்யா, புதுப்பேட்டை, டான்சேரா என்னும் நான்குப் படங்களை இப்போதைக்கு உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் காணப்படும் சில ஒற்றுமைகள்
1. இந்தப் படங்கள் என்கவுண்டரின் பின்னுள்ள மோசடியையும் வன்முறையையும் தோலுரிக்கின்றன.
2. தாதாக்கள் உருவாவதற்கான நியாயமான சூழல் காரணங்களை விபரிக்கின்றன.
3. நியாயவான்களகவே போலிஸ் அதிகாரிகளைச் சித்தரிக்கும் போலிஸ் படங்களுக்கு மாறாக தாதாக்களுக்கும் போலிஸ் மற்றும் அரசியல்கட்சிகளுக்கிடையேயான தொடர்பை அம்பலப்படுத்துகின்றன.
4 பொதுவாக இதற்குமுன் வந்த தாதாப்படங்களில் எல்லாம் தாதாக்கள் பணக்காரர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்கு உதவும் சமூகக்காவலர்களாகவே இருப்பார்கள். உதாரணம் : நாயகன், ரஜினியின் பல படங்கள். ஆனால் இந்தப் படங்கள் அப்படியான மக்கள்காவலர்களாக தாதாக்களைக் காட்டாமல் அவர்களின் எதார்த்தமான இருப்பையே காட்டுகிறது.

இவற்றினிடைக் காணபப்டும் சில வித்தியாசங்களையும் தொகுத்துக்கொள்ளலாம்.

1. முடிவு. இப்படத்தின் எல்லா முடிவுகளும் ஒரேமாதிரியான்வையல்ல. வெவ்வேறுவகையான சாத்தியங்களை உள்ளடக்கியவை.பட்டியலின் இறுதிமுடிவு கூலிப்படையினர் மற்றும் தாதாக்களின் பாதுகாப்பற்ற இருப்பைக் காட்டுகிறது. மேலும் அதிகாரவர்க்கம் தனக்குத் தேவையானபோது உறபத்தி செய்துகொள்ளவும் தேவையில்லாதபோது தீர்த்துக்கட்டவும்ம்முடியும் என்பதை அப்பட்டமாக முகத்தில் அறைகிறது.டான்சேராவில் தாதா போலீசால் சுட்டுக்கொல்லப்படுகிறான். புதுப்பேடையிலோ அரசியல் அதிகார மய்யத்தை நோக்கி நகர்கிறான்.

2. சமூகப்பின்னணி. பெரும்பாலும் தாதாக்களும் கூலிப்படையினரும் விளிம்புநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.பட்டியலில் குறிப்பிட்ட சாதியப்பின்னணி சுட்டப்படவில்லையாயினும் இரண்டு இளைஞர்களும் அனாதையாகக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். சேராவிலும் பீப்பிரியாணிக்கடை வைக்க அனுமதிக்கப்படும் அளவிற்கு ஒரு சாதி, புதுப்பேட்டையில் மீனவர், ஆச்சாரியாவில் மட்டும்தான் தாதாவாகும் இளைஞன் பார்ப்பனர். ஆனாலும் பார்ப்பனர்களாலேயே ஒதுக்கப்படும் உஞ்சவிருத்திப்பார்ப்பனர். பசிக்காக ஒரு முஸ்லீம் பெரியவரிடம் பன் வாங்கிச் சாப்பிட்டதற்காகவே அவனும் அவனது குடும்பமும் பார்ப்பனர்களால் ஒதுக்கப்படுகிறது. கடைசியில் நிர்க்கதியாக அந்த இளைஞன் நிற்கும்போது அந்த முஸ்லீம் பெரியவரே அந்த இளைஞனை அழைத்துச்செல்கிறார்.
முஸ்லீம்களைத் தேசவிரோதிகளாகவும் குண்டுவைப்பவர்களாகவும் மட்டுமே சித்தரிக்கும் தமிழ்ச்சினிமாக்களுக்கு மத்தியில் முஸ்லீம் தன்னிலையை இணக்கமாக அணுகியதைப் பாராட்டத்தான் வேண்டும். மேலும் கதாநாயகன் பார்ப்பனராக இருந்தபோதும் எந்தவிடத்திலும் பார்ப்பனீயத்தை நியாயப்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.

3.நகைச்சுவை . இந்த நான்குப்படங்களிலும் ஆச்சாரியாவில் மட்டுமே நகைச்சுவைக்காட்சிகள் வருகின்றன. ஒருவேளை விறுவிறுப்பான படத்தின் வேகத்திற்கு நகைச்சுவை என்பது தடையாக இருக்கலாம் என்று மற்றப் படங்களின் இயக்குனர்கள் நினைத்திருக்கலாம். அதேநேரத்தில் கவுதமின் போலிஸ் படங்களிலும் நகைச்சுவை இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஆச்சாரியாவில் வரும் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பும் பார்ப்பனரான ஆச்சாரியாவையும் அதிகார வர்க்கத்தின் ஏவல்நாய்களான போலிஸ்துறையினரையும் படம் முழுவதும் பகிடி பண்ணித்தீர்க்கிறார்.

இந்தப்படத்தில் பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. குறிப்பாக 'புதுப்பேட்டை' படத்தின் மிகப்பெரிய பலவீனம் பாலகுமாரனனின் வசனம். மற்றொன்று அரசியல்வாதிகளைப் பற்றிய ஆழமான மேலோட்டமான சித்தரிப்புகள். அரசியல் தலைவர்களின் ஊழல்களையும் அதிகார முறைகேடுகளையும் அவை சுட்டிக்காட்டுகின்றன என்றபோதிலும் அவை மேலெழுந்தவாரியான தெலுங்குப்படங்களையொத்த சித்தரிப்புகளாகவே இருக்கின்றன. ஆயுத எழுத்து போன்ற படங்களிலும் இத்தகைய சித்தரிப்புகளே இருந்தன. இதைவிட ஆர்.கே.செல்வமணியின் சில படங்களும், மணிவண்ணனின் 'அமைதிப்படை' போன்ற ஒரு சில படங்களும் நுட்பமாகச் சித்தரித்திருப்பதை இங்குக் கவனத்திற்கொள்ளலாம்.

இந்த தாதாப் படங்கள் விளிம்பு நிலையிலிருந்து வந்த கதைமாந்தரையே களனாகக் கொண்டிருப்பதால் சில எதிர் அரசியல் கூறுகளும் தென்படுகின்றன. குறிப்பாக புதுப்பேட்டையில் 'எங்க ஏரியா உள்ள வராதே..' பாடலைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அதேபோல இன்னொரு பாடலான 'வர்றியா..'.

'வர்றியா' என்னும் ஒற்றை விளிச்சொல் இளைஞர்கள் விபச்சாரத்திற்குப் பெண்களை அழைப்பதாகத் தொடங்கி, விபச்சாரப் பெண்கள் இளைஞர்களை அழைப்பதாக தொடர்ந்துப் பின் பொதுவான அழைப்பாக விரிந்து கடைசியில் அது போலிஸ்காரனை நோக்கி முடிகிறது.

இதேபோல டான்சேரா படத்தின் ஆரம்பக்காட்சியில் வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞனிடம் அவனது நண்பர்கள் 'பசிக்கிறது' என்கிறார்கள். உடனே 'வாங்க, கோமாதா சாப்பிடலாம்' என்று அழைத்துச்செல்கிறான். கடைசியில் அவன் பீச்சில் பீப்பிரியாணிக்கடைதான் வைக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவச்சொல்லாடல்களே நிறைந்த தமிழ்த்திரை வெளியில் கோமாதாவைச் சாப்பிடுவது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத கலகம்.

ஆனால் இதை அடிப்படையாக வைத்து தாதாச் சினிமாக்களை மாற்றுச்சினிமாக்களாகவோ, தாதாக்களை அதிகாரத்திற்கான எதிர்நிலை முன்னுதாரணங்களாகவோ நாம் கட்டமைத்துவிடமுடியாது. ஏனெனில் தாதாக்கள் இந்த சமூகத்தால் உருவாக்கப்படுகிறார்கள் என்பதோடு அதிகாரவர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படுகிறார்கள் என்பதும் உண்மை.

அவர்கள் அதிகாரவர்க்கத்தைக் காக்கும் சேவகர்களாக பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் தேவை முடிந்துவிட்டதென்றோ அல்லது காட்டிக்கொடுப்பார்கள் என்றோ தோன்றும்போதோ அதே அதிகாரவர்கக்ம் அவர்களைத் தீர்த்துக்கட்டுகிறது. ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால் கடந்த ஜெயலலிதா அரசால் திமுக தலைவர் கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது அதைக்கண்டித்துப் பேரணி நடந்தது. அப்போது திமுகவினரைப் பேரணியிலேயே வெட்டியது அயோத்தியாகுப்பம் வீரமணி கும்பல்தான் என்பதும் அதற்குப்பின்னணியில் ஆளும் அதிமுக அரசு இருந்தது என்பதும் ஊரறிந்த ரகசியம். ஆனால் அதே வீரமணியத்தான் அதிமுக அரசு என்கவுண்டர் மூலம் தீர்த்துக்கட்டியது.

மேலும் தாதாக்களும் கூலிக்கொலையினரும் விளிம்புநிலைச் சமூகங்களிலிருந்தே வந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் பலசமயங்களில் அந்தச்சமூகங்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர்.பல போராட்டங்களை ஒடுக்கவும் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். நடுத்தரவர்க்கத்தினர் மட்டுமின்றி விளிம்புநிலை மகக்ளும்கூட தாதாகக்ளின் மீது ஆத்திரமே கொள்கின்றனர். கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் கோட்டையான சென்னையில் பாதி இடங்களை அதிமுக கைபப்ற்ற முடிந்ததன் ரகசியங்களிலொன்று அது எண்கவுண்டர் மூலம் பல ரவுடிகளை 'ஒழித்துக்கட்டி அமைதியை நிலைநாட்டியது'மாகும்.

எனவே குறைந்தபட்சம் ஹிட்ச்ஹாக்கின் பிளாக்மெயிலைப்போல போலிசின் அதிகாரத்தையும் தந்திரத்தையும் அம்பலப்படுத்தும் படங்களாவது தமிழ்ச்சூழலில் வரவேண்டும். எண்கவுண்டர், போலிசு, ராணுவம் போன்ற அதிகார நிறுவங்களுக்கு எதிரான பரப்புமுறையை மக்களிடம் கொண்டுபோக வேண்டும். அப்போதுதான் நம்மால் அதிகாரத்திற்கெதிரான சிறு உடைப்புகளையாவது நிகழ்த்தமுடியும்.

( 10.02.2007 அன்று புதியகாற்று இதழால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தமிழ்ச்சினிமா அகமும் புறமும்' என்னும் கருத்தரங்கில் பேசிய பேச்சின் சுருக்கம்)

5 உரையாட வந்தவர்கள்:

  1. மிதக்கும்வெளி said...

    இந்தக் கருத்தரங்கில் தோழர் லிவிங்ஸ்மைல் வித்யா தமிழ்ச்சினிமாவில் பால்மீறிகள் சித்தரிக்கப்படும் விதம் குறித்து முன்வைத்த கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை.

  2. மாசிலா said...

    தாதாக்கள் ஏன் அதிகாரவர்கத்தினருடன் ஒத்து போகிறார்கள்?
    இருவரும் தத்தமது சமுதாயத்தில் அனைவரையும் அமுக்கிவிட்டு மேல் வந்தவர்கள். ஒரே குணமுள்ள இரு சமூகத்தினர் கை குளுக்கி கொள்வதில் எந்த விந்தையும் கிடையாதல்லவா?

    உங்களுடைய கருத்தரங்கத்து கூற்றினால் சினிமா துறையில் எந்த விதத்தில் மாற்றம் ஏற்படும் என நீங்கள் நினைக்கிறீர்?

  3. மிதக்கும்வெளி said...

    /உங்களுடைய கருத்தரங்கத்து கூற்றினால் சினிமா துறையில் எந்த விதத்தில் மாற்றம் ஏற்படும் என நீங்கள் நினைக்கிறீர்?
    /

    உங்கள் கேள்வியின் சாரம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை. எல்லாம் அதிகாரத்திற்கெதிரான சிறுமுயற்சிதான். சாதியை எதிர்த்தும் அரசியல் அநீதியை எதிர்த்தும் எழுதுவதால் மட்டும் எல்லாம் மாறிவிடுமென்று நீங்கள் கருதுகிறீர்களா?

  4. மாசிலா said...

    சமூக பிரச்சினை பற்றிய இந்த கருத்தரங்கத்தின் அலசல்கள் இதோடு நின்றுவிடாமல் அது போய் சேரவேண்டிய இடத்திற்கு சேர்ந்தால்தான் மேலும் நன்மை என சொல்ல வந்தேன். என்னுடைய கேள்வியில் உள்குத்து ஏதும் இல்லை.

  5. குழலி / Kuzhali said...

    http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_27.html

    என் பதிவில் சொன்ன சில வரிகள் இங்கேயும் பொருந்துவதால் இடுகின்றேன்.

    இன்று முட்டை ரவி சுடப்பட்ட என்கவுண்டர்களை ரவுடிகள் என்று நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம், ஒரு அரசாங்கம் ஒரு ரவுடியை அழிக்க முறையற்ற வழியில் துப்பாக்கி எடுப்பதை சந்தோசமாக ஒழிந்தான் என்று சொல்லலாம், அதற்கு ஆயிரம் நியாயங்கள் கற்பிக்கலாம், சரிதான் எனலாம்.

    ரவுடிகளை சரியான முறையில் கைது செய்யமுடியததை, சரியான முறையில் வழக்கு நடத்தமுடியாததை, சரியான முறையில் தண்டனை வாங்கித்தரமுடியாததை, சரியான சிறை தண்டனை சூழல் அமைக்க முடியாததை எல்லாம் கண்டிக்க முடியாது அதனால் அரசு துப்பாக்கி தூக்குவதையும் கண்டிக்க முடியாது எனலாம், ஆனால் நியாயமான போராட்டங்களையும் கூட அடக்க போலீஸ் ஸ்டேசன் என்றால் என்ன என்றே தெரியதவர்களுக்கும் கூட நள்ளிரவு கைதுகளை அரசாங்கத்தால் உணர வைக்க முடிந்தது, பத்திரிக்கையாளனை பொடாவில் போட முடிந்தது, போராட்டத்தை அடக்க சாதிக்கலவரத்தை தூண்டமுடிந்தது.

    நமக்கு பிடிக்காதவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக அரசாங்க அத்துமீறல்களை நாம் கைதட்டி வரவேற்றால், அரசாங்கத்திற்கு பிடிக்காத அரசாங்கத்தால் சமாளிக்க முடியாத நபர்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை நோக்கி(அது நீங்களாக கூட இருக்கலாம்) அதே முறையற்ற அரசாங்க அத்து மீறல்கள் திரும்பும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.

    புதுப்பேட்டை படம் பற்றிய என் விமர்சனம்
    http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_14.html