கர்ப்பம் vs பாலின்பம் மற்றும் பகுத்தறிவு குறித்த சில கருத்துகள்




ஓஷோ - பெரியார் : சில ஒப்பீடுகள் என்னும் பதிவிற்கான எதிர்வினைகள் கருத்தரித்தல் மற்றும் பாலுறவு இன்பம் குறித்த உரையாடல்களாக திரும்பியுள்ளன. அதுகுறித்த விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இடுகையைப் படிக்கவும்...

http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_23.html

ஓசோவும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகளில் பாலியல் சுதந்திரம் மற்றும் கருவுறுதல் மற்றும் கருவுறுதலை மறுப்பது தொடர்பான பெண்ணுக்கிருக்கும் உரிமை ஆகியவை குறித்து கவனப்படுத்துவதே எனது நோக்கம். இது குறித்து, குறிப்பாகப் பெரியாரின் இந்நிலைப்பாடு குறித்த மேலும் சில எனது புரிதல்கள்.

பெரியார் குறித்துப் பலருக்கும் பல விமர்சனங்கள் இருந்தபோதும் அவரது பெண்னியச்சிந்தனைகள், குறிப்பாக இந்தியச்சூழலில் ஒப்பாரும் மிக்காருமில்லாதவை. எம்முன்மாதிரிகளுமற்றவை. பெண்ணியம் என்றாலே பெண்னுக்கான சொத்துரிமை, விதவைத்திருமணம் என்பதைத் தாண்டி பெண்னின் பாலியல் வெளி குறித்துப் பயணித்தவை அவரது சிந்தனைகள்.

மணவிலக்குச் சட்டத்தைக் கொண்டுவர அரசு தாமதித்தபோது, 'கல்யாணரத்துச்சட்டத்தை விரைவில் அரசாங்கம் கொண்டுவராவிட்டால் திருமணக் கூட்டங்களுக்குச் சென்று கல்யாண மறுப்புப்பிரச்சாரமும் புருசர்களுக்கும் ஸ்திரீகளுக்கும் பலதாரமணப் பிரச்சாரமும் செய்வேன்' என்று அரசை 'மிரட்டியவர்' பெரியார்.

இதே போன்ற இன்னொரு சந்தர்ப்பம்தான், கருத்தடையைப் பல்வேறு மத அமைப்புகளும் கலாச்சார அடிப்படைவாதிகளும் எதிர்த்த சூழலில் பெரியார் கருத்தடையை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டது. இக்கட்டத்தில், குடும்பவிளக்கு, இருண்டவீடு, கண்ணகிப்புரட்சிக்காப்பியம் போன்ற அபத்தப்பிரதிகளை எழுதியவரும், தமிழ்த்தேசிய - ஆண்மய்யப்ப் பார்வைகளைக் கொண்டவருமான பாரதிதாசனும்கூட, 'காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம், இதிலென்ன குற்றம்?' என்று பாடிப் 'புரட்சிக்கவிஞர்' என்னும் பெயரைத் தக்கவைத்துக்கொண்டார்((-.

ஆனால் இத்தோடு மட்டும் பெரியார் நிற்கவில்லை. பெண்கள் குழந்தை பெறுவதை நிறுத்த வேண்டும் என்றார். அது வெறுமனே குடும்பக்கட்டுப்பாட்டுக்காக மட்டுமில்லை, பெண்ணின் சுயேச்சையான உரிமைகளை உறுதிசெய்யவும்தான் என்றார். மேலும் குழந்தைகளைப் பெறாமலிருப்பது பெண்னுக்கு மட்டுமான விடுதலையல்ல, அது ஆணுக்குமான விடுதலையே, ஆண்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் விசயம் என்றார்.

ஒரு ஆண் நிறைய குழந்தை பெறுவதாலேயே, அயோக்கியனாகவும் ஒழுக்கக்கேடனாகவும் மாறிவிடுகிறான் என்றார். (இந்த இடத்தில் கருணாநிதி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை.((- )

சரி பகுத்தறிவு குறித்த விசயத்திற்கு வருவோம்.

எது இயற்கையானது, இயற்கைக்கு மாறானது, இயற்கையோடு இணைந்து வாழ்வது, இயற்கைக்கு எதிராக (அ) இயற்கையை மீறிச்செல்வது என்பதற்கெல்லாம் காலகாலத்துக்குமான பொதுவறையரைகள் ஏதும் கிடையாது. கருவுறுதல் இயற்கையானதெனில் மலட்டுத்தன்மை என்பதும் இயற்கையானதுதான். அதை மருந்துகள் கொடுத்துக் கருவுற வைப்பதும் இயற்கைக்கு விரோதமானதுதான். பொதுவாக அறிவியல் என்பதே இயற்கையை மீறிச் சென்றதால்தான் சாத்தியமாயிற்று. எனவே இதில் எது பகுத்தறிவு, எது பகுத்தறிவில்லை என்று தட்டையான அணுகுமுறைகளைக் ( மீண்டும் செந்தழல் ரவி ((- ) கொண்டு தீர்மானிக்க முடியாது.

"Just because men cannot bear children, calling women to refuse to bear children is neither progressive nor scientific."

என்று எந்த அடிப்படையில் சுந்தரமூர்த்தி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு பகுத்தறிவு குறித்து விவாதம் வந்ததால் சில கருத்துக்கள்.

பெரியாரை வெறுமனே வறட்டுத்தனமான பகுத்தறிவுச் சிமிழுக்குள் அடைப்பதன் விளைவுதான் ஆடு கோழித் தடைச்சட்டத்தை ஆதரிப்பது, சமண முனிவர்களின் நிர்வாணத்தை எதிர்ப்பது என்பதிலிருந்து பார்ப்பனீய மதிப்பீடுகள் குறித்து எவ்விதக் கேள்வியும் எழுப்பாது சிறுதெய்வழிபாடுகள் தொடர்பான நம்பிக்கைகளை மட்டும் கிண்டலடிக்கிற நடிகர் விவேக்கைப் 'பகுத்தறிவுவாதி' என்று கொண்டாடுவது வரை நீள்கிறது.

"The views of Periyar and Osho are certainly absurd from a scientific viewpoint even as it sounds progressive.....Just imagine an hypothetical situation in which all women in the world, with no exception, get this message at the same time and unanimously embrace this idea."



இதே சுந்தரமூர்த்தி கேட்ட கேள்விதான் ஒரு 'பகுத்தறிவுவாதி' கேட்கும் கேள்வி. ஆனால் பதில் சொல்கிற பெரியார் ஒரு 'பகுத்தறிவுவாதியாய்' நின்று சொல்லவில்லை. பெண்கள் கருப்பையை அகற்ற வேண்டுமென்று சொல்லும்போது 'மனித இனவிருத்தி அற்றுப்போகுமே?' என்று பகுத்தறிவுக் கேள்வி கேட்கப்பட்டபோது பெரியாரின் பதில்.

" மனிதஜீவராசிகள் அற்றுப்போனால், புல்பூண்டு, விலங்கு விருத்தியடையட்டுமே. இதுவரை விருத்தியடைந்த மனிதச் சமூகம் பெண்ணுக்கு என்ன செய்து கிழித்தது? எனக்கு மனிதச்சமூகம் விருத்தியடைவது குறித்துக் கவலையில்லை, பெண்ணின் விடுதலைதான் முக்கியம்'.

இங்குதான் பெரியாரிடம் பகுத்தறிவுவாதிகளின் தர்க்கங்களைத் தாண்டிப்போகிற அறவியல் ஆவேசமும் கவித்துவமும் மிளிர்கிறது. எனவே பெரியாரை வெறுமனே பகுத்தறிவுவாதி என மதிப்பிட்டுவிட முடியாது. (இது குறித்துக் கொஞ்சம் விரிவாக அ.மார்க்சின் 'பெரியார்?' நூலில் பெரியாரின் பகுத்தறிவை மதநீக்கம் என அ.மா அடையாளப்படுத்துவதை மறுத்து புதியகோடாங்கி இதழில் எழுதியிருக்கிறேன். மேலும் ஒரு வலைப்பதிவாளர் சந்திப்பின்பின்னான உற்சாகச்சந்திப்பில் நண்பர்கள் ஓசைசெல்லா, ரோசாவசந்த், ஓகைநடராசன் ஆகியோருடன் 'பெரியாரை ஒரு பகுத்தறிவுவாதி' எனச் சொல்லமுடியுமா?' என்ற போக்கில் தொடங்கிய உரையாடல் பாதியிலேயே நின்றுபோனது.)

அப்படியானால் பெரியாரின் 'பகுத்தறிவை' எப்படிப் புரிந்துகொள்வது? அது வெறுமனே ஆம், இல்லை என்னும் இருமைகளை அடிப்படையாகக் கொண்ட தருக்க முறையல்ல, மாறாக உரையாடலை மறுக்கும் இந்தியப் பார்ப்பனீய உளவியலுக்கு எதிராக எல்லாவித உரையாடல்களையும் சாத்தியப்படுத்துகிற, தீர்மானிக்கும் காரணிகளைப் புறத்திலிருந்து அல்லாமல் சுயேச்சையாக நிர்ணயிக்கிற, இறுக்கங்களற்ற நெகிழ்வுகளையுடைய திறப்பு. இப்படியும் சொல்லலாம், 'உனக்கு நீயே விளக்கு' என்ற பவுத்தத்தின் அறுபடாத கண்ணி.

பெரியாரியக்கத் தோழர்களுக்கு உதவுங்கள்! - ஒரு தோழமைப்பதிவு

தோழர்களே!

அசுரன் ஊடகம் கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 26 முதல் பெரியார் திராவிடர் கழகத்தின் நூல் வெளியீடுகள் மற்றும் ஒலிநாடாக்கள் வெளியீடு, ஒளிக்குறுந்தகடு வெளியீடு ஆகியவற்றிற்கு தொழில்நுட்பப்பணிகளையும், கணினியாக்கப் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.

இதுவரை நாங்கள் பணியாற்றிய பதிப்புகள்

தமிழர்கள் உரிமைக்கு எதிரி யார்? பார்ப்பனர்களா ?

தனியார்துறை இடஒதுக்கீடு ஏன்? ஏதற்கு ?

பெரியாரின் விடுதலைப்பெண்

கடவுள்மறுப்புத்தத்துவம் ஒரு விளக்கம்

பெரியார் ஒரு வாழ்க்கைநெறி

இனிவரும் உலகம்

பெரியாரும் அம்பேத்கரும்

கடவுளர் கதைகள்

இந்துமதப்பண்டிகைகள்

இளைஞர்களே உங்களுக்குத் தெரியமா ?

மனுநீதி குலத்துக்குஒருநீதி

பெரியாரின் தன்வரலாறு

கிராமங்கள் ஒழியவேண்டும் ஏன்?

தமிழர்கள் இந்துக்களா ?

மதம் மாறினால் குற்றமா?

இராமாயணக்குறிப்புக்கள்

ஆத்மா – நரகம், மோட்சம்

பெரியாரில் பெரியார்

பெரியாரும் தனித்தமிழ்நாடும்

உயர் எண்ணங்கள்

சித்திரபுத்திரன் விவாதங்கள்


ஆகிய சிறுவெளியீடுகளுக்கு கணினியாக்கம் மற்றும் பதிப்புப்பணிகள் அனைத்தையும் செய்தோம். முதன்முதலாக தமிழர் பண்பாடு என்ற சிறு வெளியீட்டை அசுரன் ஊடகத்தின் பெயராலேயே வெளியிட்டோம். பெரியாரியல்வாதிகளால் மிக மிக அவசியமான பணியென்றும், தங்கள் இலட்சியம் இதுதானென்றும் சொல்லப்பட்டது குடிஅரசு தொகுப்பு வெளியீடு ஆகும். பெரியாரியலாளர்களின் கனவை பெரியார் திராவிடர் கழகம் நிறைவேற்றத் தொடங்கியது. குடிஅரசு மூன்று தொகுதிகள் மற்றும் சோதிடப்புரட்டு எனும் 500 பக்கங்கள் கொண்ட நூல் ஆகியவற்றை மிக மிக மலிவான விலையில் மக்களிடையே பரவ உரிய பணிகளையும் செய்தோம்.


குறுந்தகடுகள்


மதுரையில் நடைபெற்ற பெரியார் தலித்துகளுக்கு விரோதியா? என்ற கருத்தரங்கின் ஒளிக்குறுந்தகடு,

சங்கராச்சாரி யார்?

புதுவை தமிழர் தன்மானமீட்பு மாநாடு

திருப்பூர் தமிழர் எழுச்சி விழா

சேலம் குடிஅரசு வெளியீட்டு விழா உரைகள்

சாய்பாபவின் உண்மைமுகம்

ஓட்டன்சத்திரம் காதலர்தின விழா

இடஒதுக்கீடு ?

திண்டுக்கல் 5 நாள் பயிலரங்கம் (31 குறுந்தகடுகள்) தொகுப்பு

ஏற்காடு பயிலரங்கத் தொகுப்பு

மேட்டூர் நாத்திகர் விழா

தஞ்சை சாதிஒழிப்பு மாநாடு


ஆகியவற்றை தரமான குறுந்தகடுகளைப் பயன்படுத்தி அடக்க விலையில் பெரியார் தி.க மக்களிடம் கொண்டுசென்றது. அதற்குரிய அனைத்து தொழில்நுட்பப் பணிகளையும் செய்தோம். இன்னும் பல நிகழ்வுகள் எடிட்டிங் பணிகள் முடிவடைந்தும் பொருளாதாரமின்மையால் வெளிவராமல் உள்ளன.


இணையம்


http://www.dravidar.org/ என்ற இணையதளத்தை கடந்த 2007 பிப்ரவரி 12 முதல் ஓராண்டாக நடத்திவருகிறோம். http://www.thozharperiyar.%20blogspot.,http://www.periyardravidar%20kazhagam.blogspot.com/ ,http://www.periyarmulakkam.blogspot.com/,http://www.thozharperiyar.wordpress.com/ ஆகிய வலைப்பூக்களையும் பதிவிட்டு வருகிறோம். திராவிடர் இணையத்தில் மின்நூல்களையும் பதிவேற்றியுள்ளோம். பெரியாரியலைப் பரப்பும் இன்னும் சில இணையதளங்களுக்கு மின்நூலாக்கப் பணிகளையும், கணினியாக்கப் பணிகளையும் செய்துவருகிறோம்.


வேண்டுகோள்!


சேலம் விசு, சேலம் வீரமணி, மேட்டூர் மார்டின், ஒட்டன்சத்திரம் பெரியார்நம்பி, தாராபுரம் குமார், செம்பட்டி ஆல்பர்ட், பழனி மருதமூர்த்தி ஆகிய தோழர்கள் வழங்கிய நன்கொடைகள்,


பெரியகுளம் குமரேசன், செம்பட்டி இராசா, வலையபட்டி நாகராசு, சென்னை மதி, மறைந்துவிட்ட வெள்ளோடு ஸ்ரீரங்கன் ஆகிய தோழர்களின் இரவுபகல் பாராத உழைப்பு,


புதுவை கோபதி, அகிலன் ஆகியோர் வழங்கிய உயர்நுட்பமென்பொருட்கள்,

பெரியார் திராவிடர் கழகத் தலைவர்கள் அளிக்கும் ஊக்கம், ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் மேற்கண்ட பணிகளை செய்துவருகிறோம்.


ஒரே நேரத்தில் இயக்கத்தின் கூட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள் போன்றவற்றிற்கும் நன்கொடை அளித்து இயக்கப்பணிகளையும் செய்துவரும் தோழர்களுக்கு, வெளியீடுகள் அதற்கான தொழில்நுட்பப் பணிகளுக்கு உதவுதல் என்னும் கூடுதல்சுமையையும்; சுமத்திவருகிறோம். இதுவரை வெளியே உதவி கோராமல் காலத்தை கடத்திவிட்டோம். இனி தொடர்ந்து பணிகள் நடக்க இயக்கம் கடந்த உங்களை நாடுகிறோம்.


பொருளாதாரமின்மையால் தட்டச்சு செய்தும் அச்சிடப்படாமல் உள்ள உள்ள சிறு சிறு நூற்களை வெளியிட உள்ளோம்.


பெரியாரின் உரையாக, கட்டுரையாக இதுவரை வந்துள்ள சிறு வெளியீடுகள் அனைத்தையும் மின்நூலாக்கி இணையதளங்கள் மூலம் உலகம் முழுக்க இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள உரிய பணியையும் தொடங்கியுள்ளோம்.


வெறும் 500 எம்.பி அளவுள்ள - நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தமிழர்கள் பார்த்துவரும் திராவிடன் இணையத்தை மேம்படுத்த – அதன் அளவை உயர்த்த உள்ளோம்.


பெரியாரியலை காலத்துக்கேற்ற அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களிடமும், உலகளாவி வாழும் தமிழர்களிடமும் கொண்டுசெல்ல வேண்டிய எமது கடமைக்கு தோள்கொடுக்க, துணைநிற்க அனைவரையும் அழைக்கிறோம். எமது தேவை 2,00,000 இரண்டு இலட்ச ரூபாய்கள்.


இதில் 1,00,000 ரூபாயை நிரந்தர இருப்பாக வைத்து தொடர்ந்து சிறு நூல்களை வெளியிடுவது என்றும், 50,000 ரூபாயை குறுந்தகடு வெளியீட்டிற்கும், 50,000 ரூபாயை மின்னூலாக்கம் மற்றும் இணையதள மேம்பாட்டிற்கும் பயன்படுத்த எண்ணியுள்ளோம்.


அறக்கட்டளைகளோ, அவ்வப்போது வரும் ஆளுங்கட்சிகளின்; அரவணைப்போ, கல்வி வியாபார வருமானங்களோ, கட்டப்பஞ்சாயத்து வருமானங்களோ எதுவுமில்லாத பெரியாரியலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற துடிப்பைமட்டும் கொண்டு;ள்ள தோழர்களின் வேண்டுகோள்! பணிகளுக்குரிய ஆலோசனைகளைக் கூறுங்கள். அனைத்தையும் நிறைவேற்ற நிதியையும் வழங்குங்கள்!

அசுரன் ஊடகம், திண்டுக்கல்




நிதி வழங்க வேண்டிய முகவரி : தோழர் ஆல்பர்ட் , நவீன் தொலைபேசி நிலையம் , பேருந்து நிலையம் எதிரில், செம்பட்டி – 624710

வங்கிக்கணக்குப் பெயர் : MERCURY SOFTWARE

வங்கி எண் : 601305014423, ICICI Bank, Madurai Branch

மின்னஞ்சல் : asuranoodakam@gmail.com, atthamarai@gmail.com

ஓஷோ - பெரியார் : சில ஒப்பீடுகள்

ஓஷோ எனக்கு அறிமுகமாகும்போது ஓஷோவாக அறிமுகமாகவில்லை. ரஜனீசாகத்தான் அறிமுகமானார், அதுவும் செக்ஸ் சாமியார் ரஜனீசாக. என் பதின்பருவங்களில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகனாகத் திகழ்ந்த காரணத்தினால் சாமியார்கள் என்றாலே ஒருவித ஒவ்வாமை இருந்தது. அவ்வெறுப்புக்குள் உட்பட்டே ஓசோவும் என் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

கல்லூரி முடிந்து ஒரு பத்திரிகை நடத்தலாம் என்ற எண்ணம் தோன்றியபோது என்னோடு இணைந்து 'புதியபயணம்' என்னும் மாத இதழை நடத்திய ஜெகன் தான் முதன்முதலில் ஓஷோவை முறைப்படி அறிமுகப்படுத்தினான். முதன்முதலில் படித்த ஓசோ நூல், 'இப்போதே பரவசம், ஏன் காத்திருக்கிறீர்கள்?'. பெரியாரைத் தொடர்ச்சியாக வாசிக்கும் யாரையும் ஓசோ ஈர்ப்பதில் ஆச்சரியமில்லை.

ஓஷோவும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகள் குறித்து ஒருநூல் எழுதும் எண்ணமிருப்பதால் ஓஷோவைச் சமீபகாலங்களில் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தபோது கவனத்திற்குட்பட்ட சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ளலாமென்று தோன்றுகிறது.

பெரியாரும் ஓசோவும் சிறுபிராயத்திலிருந்தே கலகக்காரராக விளங்கியவர்கள். ஓஷோ சிறுவனாக இருந்தபோது ஒரு விருந்தினர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த ஒரு வயதானவரின் காலில் விழுந்து ஆசி வாங்குமாறு ஓசோவின் வீட்டில் பணித்திருக்கிறார்கள். ஆனால் ஓசோவோ ஏன் அவர் காலில் விழ வேண்டும் என்று கேட்டிருக்கிறார். 'அவர் வயதானவர், அதனால் காலில் விழவேண்டும்' என்றிருக்கிறார்கள்.

'வயதானவர் என்றால் ஏன் காலில் விழவேண்டும், ஏன் தலையைத் தொடக்கூடாது? நம் வீட்டிற்கு எதிரில் கட்டப்பட்டிருக்கும் யானைக்கு இவரை விட வயது அதிகமிருக்குமே, ஏன் நாம் யானையின் காலில் விழுவதில்லை?' என்று கேட்டிருக்கிறார் பாலக ஓசோ. பெரியாரின் சிறுவயதுக் கலகச்செயற்பாடுகள் பலரும் அறிந்ததுதான்.

அதேபோல் ஓசோவிடமிடம் பெரியாரிடமும் தொழிற்படும் தர்க்கங்கள் அலாதியானவை. பிறந்த நேரம் கணிப்பது குறித்துப் பெரியார் கேட்பார், 'பிறந்த நேரம் என்றால் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த நேரமா, தலை முதலில் வந்த நேரமா, முழு உடலும் வெளிவந்த நேரமா, அப்போது டாக்டர் பார்க்கும் நேரமா, மருத்துவமனைக்கு வெளியிலுள்ள கடிகாரத்தின் நேரமா, உலகத்திலுள்ள அனைத்துக் கடிகாரங்களும் ஒரேநேரத்தைக் காட்டுமா?' என்று.

ஓசோவும் இப்படியான தர்க்கங்களை அடுக்கிக்காட்டுவதில் வல்லவர். சொர்க்கம் என்பது பிளாஸ்டிக்காலானதாகத்தானிருக்கும் என்னும் ஓசோ, ஏனெனில் அங்கு துன்பமே இல்லை, ஒரே இன்பம்தானெனில் ஒரேநாளில் சொர்க்கம் போரடித்துப் போகுமென்பார். அங்கு முதல்நாள் மட்டும்தான் செய்தித்தாள் அச்சடிக்கப்பட்டிருக்கும். கொலை, கொள்ளை, பாலியல்பலாத்காரம் இல்லாத நியூஸ்பேப்பர் எதற்கு?

மதவாதிகள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் பெரியாரும் ஓசோவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதுவும் ஓசோ தான் பிறந்த ஜைனமதத்தின் போலித்தனமான செயற்பாடுகள் குறித்தும் ஜைனமுனிவர்களின் உடலொடுக்கும் தன்மை குறித்தும் பகிடிசெய்தார். பெரிரார் கடவுளை மறுத்தாரெனில் ஓசோவோ 'கடவுள் இறந்துவிட்டார், ஜென்னே வாழ்கிறது' என்றார்.

அதேபோல் ஓசோவின் வாசிப்பு நினைத்துப்பார்க்க முடியாதளவு அபாரமானது. தத்துவஞானிகள், தீர்க்கதரிசிகள் , அரசியலாளர்கள் என அனைவர் குறித்தும் போகிறபோக்கில் விவரித்துச் செல்வார். பெரியாரை ஓசோ அறிந்திருந்தால் நிச்சயமாகக் கொண்டாடியிருப்பார் என்பதில் அய்யமில்லை.

கற்பு, கலாச்சாரம், குடும்பநிறுவனம், குழந்தைப்பேறு ஆகிய அம்சங்களிலும் ஓசோ மர்றும் பெரியாரின் சிந்தனைகள் பல சமயங்களில் இணையாகப் பயணிக்கின்றன.

இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும் அதேவேளையில் கருவுறுதலை நிராகரிக்கின்றனர். முற்பிறவி, கர்மா, விதி ஆகிய கருத்தாக்கங்கள் பெண்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாரிய விளைவுகள் குறித்து உரையாடுகின்றனர். திருமண முறையை மறுத்து ஆண் - பெண்ணுக்கிடையில் தோழமை உறவை வலியுறுத்துகிறார் ஓசோ. பெரியாரும் 'திருமணம் என்பது கிரிமினல் குற்றம்' என்கிறார்.

ஆனால் ஓசோ மேற்கத்தியப் பெண்ணிய இயக்கங்களை ஏற்றுக்கொள்ளாததோடு காத்திரமான விமர்சனங்களையும் முன்வைத்தார். பெண்ணிய இயக்கங்கள் பெண்களை ஆண்களாக மாற்றுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றன என்றார். ஆணை விடப் பெண்ணே உயர்ந்தவள் என்ற ஓசோ ஆனால் பெண்னிய இயக்கங்கள் பெண்களை ஆண்களைப் போல மாற்ற முயற்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது, ஆண்தான் பெண்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது என்றார்.

இத்தகைய விமர்சனங்களின் பின்னணியில் பெரியாரின் சிந்தனைகள் குறித்தும் கூட நாம் கேள்விகளை எழுப்பலாம். ஏனெனில் பெரியார் பெண்களை ஆண்களைப் போல உடையணியச்சொன்னவர், இருவருக்கும் பொதுப்பெயர்களை இடச்சொன்னவர். கிராப் வெட்டிக்கொள்ளச் சொன்னவர். இதுவெல்லாம் காலமாற்றத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு பெண்ணியத்தை ஆதரிக்கும் ஆணும் சேலை கட்டவோ வலையள் அணியவோ தயாராயில்லை.

குறிப்புகள் :

1. ஆனால் ஓசோ மேற்கத்தியப் பெண்ணிய இயக்கங்களின் மீது முன்வைக்கும் விமர்சனங்களை அப்படியே நாம் இந்தியச்சூழலில் பொருத்திப் பார்க்கமுடியாது. இங்கு பெண்ணிய இயக்கங்களில் பார்ப்பனப் பெண்களே அதிகமும் தலைமையைக் கைப்பற்றியதால், பார்ப்பனீய - ஆணிய மதிப்பீடுகளுக்கேற்றவாறான பெண்களை 'உருவாக்கி'த் தருவதில் தங்களையறியாமலே வினையாற்றினர். தமிழ்ச்சூழலிலோ ஓவியா, சுயமரியாதை இயக்கக் காலகட்டத்தியப் பெண்கள் இவர்களையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் பெண்ணிய இயக்கமெல்லாம் ஒன்றுமில்லை. வரதட்சணை, கற்பழிப்பு எதிர்ப்பு ஆகியவற்றைத் தாண்டாத இடதுசாரிப் பெண்ணிய அமைப்புகளும், தயிர்சாதத் தயாரிப்புகளான மங்கையர்மலர், அவள்விகடன் வாசகர்வட்டங்கள்தானிருக்கின்றன.

2. கடைசிப் பத்தியில் உள்ள பெரியாரின் மீதான கேள்விகளைத் தயவுசெய்து தட்டையாக அணுகவேண்டாம். ஏனெனில் பெரியார் அடையாளங்களைக் கடப்பதற்காகவே - 'ஆண்மை', 'பெண்மை' ஒழிவதற்காவே அத்தகைய முன்வைப்புகளை முன்வைத்தார். குறிப்பாக உடை விசயத்தில் பெண்களுக்கு மிகவும் சவுகரியமானதும் ஆபத்தில்லாததும் சுடிதார், பேண்ட் - சட்டை மாதிரியான உடைகளே. சுனாமியின் போது நிறையப் பெண்கள் ஓடமுடியாமல் சேலை தடுக்கியும் நீண்ட கூந்தல் மரக்கிளைகள் மாட்டியும் இறந்துபோனார்கள் என்னும் எதார்த்தநிலைமைகளையும் கணக்கிலெடுக்கவேண்டும். என்றபோதும் வேறுமாதிரியும் உரையாடிப் பார்க்கலாமே.

பவுத்த ராமாயணம் - அம்பேத்கரின் 'ராமனின் புதிர்' கட்டுரையை முன்வைத்து...





சமீபத்தில் அம்பேத்கரின் 'Riddle of the Rama' கட்டுரையையும் பவுத்த ஜாதகக் கதைகளில் காணப்படும் பவுத்த ராமாயணத்தையும் நீன்டநாட்களுக்குப் பின் ஒரேநேரத்தில் வாசிக்கநேரிட்டது. ராமனின் புதிர் கட்டுரையில் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தை முன்வைத்து ராமன் என்னும் புனிதப்பிம்பத்தின் மீது சில குறிப்பிடத்தக்க விமர்சனங்களை முன்வைக்கிறார்.

அதேநேரத்தில் பவுத்தம் தனக்கான ஒரு ராமாயணத்தை ஏன் உருவாக்கவேண்டும் என்ற கேள்வி எழுவது இயற்கைதான். ராமன் என்னும் பிம்பம் நெடுங்காலமாகவே இந்திய உளவியலில் பாரிய தாக்கத்தை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் ஏற்படுத்திவந்திருக்கிறது. காலனிய ஆட்சிக்காலகட்டத்தின்போது தனக்கான சில மதிப்பீடுகளினடிப்படையில் காந்தி ஒரு ராமனைக் கற்பித்து ராமராஜ்ஜிய சுயராஜ்ஜியக் கதையாடல்களை விரித்தார்.

பாபாசாகேப் அம்பேத்கர் ராமனின் புதிரை அவிழ்த்தாரெனில் பெரியாரோ ராமனின் உருவப்படத்தை எரித்தார். 90களுக்குப்பிறகான இந்துத்துவப் புத்தெழுச்சி ராமனை முன்வைத்தே தனக்கான பாசிச அரசியலை உத்வேகத்தோடு கட்டமைத்தது. அதன் நீட்சியாகத் தற்போது கருணாநிதியின் தலைக்கு விலைபேசவைத்ததும் ராமன் தான். கருணாநிதியின் பழைய திராவிட உணர்வுகளை அவ்வப்போது மீட்டெடுக்க உதவுவதும் அதே ராமன் தான்.

கம்பராமாயணத்தைக் கொளுத்துவதற்காக இயக்கம் கட்டிய திராவிட இயக்கம்தான் ராவண காவியம் என்னும் எதிர்க்கதையாடல்ப்பிரதியொன்றை உருவாக்கியது. இப்படியாகவே ராமன் இந்தியப்பொது உளவியலில் செலுத்தும் செல்வாக்கைக் கணக்கில் கொண்டு பவுத்தமும் தனக்கான ஒரு ராமாயணத்தை உருவாக்கிக்கொண்டது எனப்புரிந்துகொள்ளலாம்.

புத்தஜாதகக்கதைகளில் பவுத்த ராமாயணம் ஒரு கதையாகவிருக்கிறது என்பதும் அக்கதையின்படி ராமனும் சீதையும் சகோதர - சகோதரிகள் என்பதையும் பலரும் அறிந்திருக்கலாம். ஆனாலும் அதன் கதையை முழுமையாகத் தெரியாத நண்பரகளுக்காக ஒரு கதைச்சுருக்கம் :

பெனாரசைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டுவந்தவர் தசரதச்சக்கரவர்த்தி. அவருக்கு ஒரு அன்பான மனைவியும் அழகான இரு ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையுமுண்டு. ஆன்குழந்தைகளின் பெயர்கள் ராமபண்டிதன், லக்குவன் , பெண்குழந்தையின் பெயர் சீதா. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தசரதனின் மனைவி இறந்துவிட ஆளாத்துயரில் ஆழ்ந்தார் தசரதச்சக்கரவர்த்தி. அரசப்பிரதானிகளோ இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தியதன்பேரில் இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்தார்.

அப்பெண்ணுக்கு ஒரு அழகிய ஆண்குழந்தைபிறக்க பரதன் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். அப்போது அப்பெண்ணிடம் தசரதன் ஏதேனும் உதவி வினவ வேண்டுகிறார். அப்பெண்ணோ சிறிதுகாலம் கழித்து அவ்வுதவியை வேண்டிப்பெற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்.

பரதன் சிறிது வளர்ந்த காலகட்டத்தில் அப்பெண் தசரதனிடம் வந்து தன் மகனிடம் அரசாட்சியை ஒப்படைக்குமாறு வேண்டுகிறார். தசரதனோ மறுக்கிறார். மீண்டும் அப்பெண் வற்புறுத்த, அப்பெண்ணால் தன் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என அய்யங்கொண்ட தசரதன் ராம்னையும் லக்குவனையும் அழைத்துச் சிலகாலம் காட்டில் தங்கியிருக்குமாறுப் பணிக்கிறார்.

அரசவை நிமித்திகர்களை அழைத்து தான் இன்னும் எவ்வளவுகாலம் உயிர்வாழ்வேன் என்று வினவுகிறார். நிமித்தகர்களோ இன்னும் தசரதன் 12 ஆண்டுகாலம் உயிர்வாழ்வார் என்றுகூற , 12 ஆண்டுகாலம் ராமனையும் லக்குவணையும் காட்டில் வசிக்குமாறு ஆணையிடுகிறார். சீதையோ தானும் சகோதரர்களுடன் காட்டிற்குச் செல்வதாகக் கூறிச்செல்கிறாள்.

காட்டில் ஒரு குடிலமைத்து வசிக்கும் சகோதரர்களில் லக்குவனும் சீதையும் ராமனிடம், 'நீங்கள் இப்போது எங்களுக்குத் தந்தையின் இடத்திலிருப்பதால், நாங்கள் போய் உணவு சேகரித்து வருகிறோம். நீங்கள் குடிலைப் பராமரித்து வாருங்கள்'; என்கின்றனர். ராமனும் சம்மதிக்கிறார். இடையில் ஒன்பதாண்டு காலத்திலேயே தசரதச்சக்கரவர்த்தி இறந்துவிடுகிறார்.

பரதனின் தாய் பரதனுக்கு முடிசூட்ட முயற்சிகள் மேற்கொள்ள, அரசவையினரோ அதைத் தடுக்கின்றனர். ராமனுக்கே அரசாளும் உரிமை உள்ளது என்கின்றனர். பரதன் தன் அண்ணனைச் சென்று அழைத்து வருவதாகக் கூறிச்செல்கிறான். காட்டிற்குச் சென்று ராமனிடம் தந்தை இறந்த செய்தியைக் கலங்கியவாறே தெரிவிக்கிறான் பரதன்.

ஆனால் ராமர் கலங்கவில்லை. அப்போது உணவு சேகரித்துவிட்டு லக்குவனும் சீதையும் அவ்விடத்திற்கு வருகிறார்கள். அவர்கள் தங்கள் தந்தை இறந்த செய்தியைக் கேள்விப்பட்டால் கடும் அதிர்ச்சி அடைவார்கள் என்பதால் ராமன் அவர்களிடம் பொய்க்கோபம் கொண்டவரைப் போல நடிக்கிறார். "நீங்கள் உணவு சேகரித்துத் திரும்ப வெகுநேரமாகிவிட்டது. எனவே இதற்குத் தண்டணையாக நீரில் சென்று நில்லுங்கள்' என்கிறார்.

இருவரும் நீரில் சென்று நின்றபிறகே தந்தை இறந்த செய்தியை அவர்களிடம் தெரிவிக்கிறார் ராமர். இருவரும் மயங்கிவிழுகின்றனர். இரண்டாவது முறை எழும்போது மீண்டும் சேதி கேட்டு மயங்கிவிழுகின்றனர். மூன்றாவதாக மயங்கி எழுந்தபின்பே அவர்களால் இயல்பான நிலைக்கு வரமுடிந்தது. இதைக்கண்ட பரதனுக்கோ ஆச்சரியம். ராமன் மட்டும் எப்படி இயல்பாக இருந்தாரென்று. ராமனிடமே கேட்க ராமன் கூறுகிறார்.

'உயிர்கள் அனைத்தும் மரணத்தை நோக்கியே செல்கின்றன. எல்லா இலைகளும் பழுத்து உதிரவே செய்கின்றன. மரணங்களில் உற்றார் மரணம், உறவினர் மரணம் என வேறுபடுத்திப் பார்ப்பதால்தான் நமக்குத் துக்கம் ஏற்படுகிறது' என்றவாறு நீண்டநேரம் அதுகுறித்துக் விளக்கமளிக்கிறார்.

பிறகு பெனாரசுக்கு வருமாறு ராமனை பரதன் வேண்ட, ராமனோ தான் தந்தைக்கு வாக்களித்ததைப் போல இன்னும் மூன்று ஆண்டுகள் காட்டிலிருந்துவிட்டு வருகிறேனென்றும் சீதையையும் லக்குவனையும் அழைத்துச்செல்லுமாறும் பணிக்கிறார். தனது அடையாளமாக தனது காலணிகளையும் பரதனிடம் கொடுப்பிக்கிறார்.

ராமன் வரும்வரை அரசனின் ஆசனத்தில் அப்பாதுகைகளை வைத்துப் பாதுகாக்கின்றனர். ஏதேனும் ஒரு வழக்கு விசாரணைக்கு வருமாறு அரசவை தவறான முடிவெடுக்க நேரிட்டால் அப்பாதுகைகள் தனக்குள் அடித்துக்கொண்டு அத்தீர்ப்பை மறுக்கும், சரியான தீர்ப்பெனில் அமைதிகாக்கும். இப்படியாக மூன்று ஆண்டுகள் கழிந்து பெனாரசிற்குத் திரும்பும் ராமன் அரசாட்சியை ஏற்றுக்கொள்கிறார். சகோதரியான சீதா பட்டத்த்கு ராணியாகிறார்.


அம்பேத்கரின் வால்மீகி ராமாயணத்தின் மீதான விமர்சனங்களுக்குத் திரும்புவோம். ராமன் என்பவன் புனிதப்பிம்பம் இல்லையென்றும் ராமனின் கதை பொதுவழக்கில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதற்கான அறவியல் அடிப்படைகள் ஏதும் கிடையாது என்று வாதிக்கும் அம்பேத்கர் தனது விமர்சனங்களைக் குவிக்கும் புள்ளிகள் :

1. முதலாவதாக வாலியின் பிரச்சினையில் ராமன் நடந்துகொண்டவிதம். ராவணனை வெல்வதற்காகவும் சீதையை மீட்பதற்காகவும் படைபலம் தேவைப்படுகிறது. இதற்காகவே சுக்ரீவன் இழந்த ராஜ்ஜியத்தைப் பெற ராமன் உதவுகிறான். இதற்காக யுத்த தருமங்களுக்கு அப்பாலான உத்தியின் மூலம் வாலியைக் கொல்கிறான். இங்கு ராமன் லட்சிய புருசனாகவோ அறவியல் அடிப்படையிலான முன்மாதிரியாகவோ கொள்வதற்கான எந்த அறவியல் நியாயங்களுமில்லை. தனது ஆதாயத்திற்காகப் பதிலுதவியின் பொருட்டு அறவியல் மதிப்பீடுகளை மீறுபவனாகவே ராமன் விளங்குகிறான்.

2. சீதையை ராமன் கையாண்டவிதம். ராவணனைப் போரில் வெற்றிகொண்டபின் ஆறுமாதங்களுக்கும் மேலாகப் பிரிந்திருந்த தன் அன்புமனைவியைக் காண ராமன் உடனே செல்லவில்லை. மாறாக நிதானமாக விபீடணின் பட்டமேற்பு விழாவில் பங்குகொண்டு பிறகு அனுமனை அனுப்பியே சீதையை அழைத்து வரச்சொல்கிறான். அப்போதும் தனது கன்னித்தன்மையை நிரூபிக்க சீதை தீக்குளித்துத் தன்னை மெய்ப்பித்தபிறகே சீதையை ஏற்றுக்கொள்கிறஆண்.

அதன்பிறகும் கூட நகரத்தார்கள் சீதையின் கற்பின் மீது அய்யங்கொள்ள ஒரு கர்ப்பிணிப்பெண்ணைக் கூசாது காட்டிற்கு அனுப்புகிறான். ( ஆகமொத்தம் ராமனை மணந்தபின் சீதை அதிகநாட்கள் வாழ்ந்தது காட்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.). அங்கு லவகுசா என்னும் இரு குழந்தைகளைப் பெற்றபிறகு வால்மீகி அவர்களை வளர்க்கிறார். பிறகு தனது அரசவையில் லவகுசாச் சகோதரர்களைக் கண்ட ராமன் சீதையை அழைத்து வருமாறு வால்மீகியை வேண்டுகிறான். அப்போது அரசவைக்கு வந்த சீதை மீண்டும் தன்னை 'நிரூபிக்க' பூமி விழுங்கி மீள்கிறாள். இங்கு முழுக்க ராமன் எவ்வித அறவியல் அடிப்படைகளற்ற ஒரு ஆணாகாவே நடந்துகொண்டதை விரித்துரைக்கத் தேவையில்லை. மேலும் இங்கு சீதையின் கற்பு நிரூபிக்கப்படுவதை விடவும் ஒரு கற்புள்ள பெண்ணுக்குத்தான் தான் கணவன் என்று நிரூபிப்பதே ராமனின் அவசியம்.

3. ராமன் சீதையோடு வாழ்ந்த காலங்களிலும் சரி, அவளைப்பிரிந்து அரசாண்டகாலங்களிலும் சரி, தினமும் தனக்கான ஓய்வு இல்லத்தில் மதுவும் மாமிசமும் உண்டு மகிழ்ந்தான். அப்போது அழகிகளின் நடனக்கேளிக்கைகளும் நடைபெறும். எனவே கேளிக்கைகளில் திளைத்து மகிழும் ஒரு அரசன் என்பதைத் தாண்டி ராமனுக்கான பாத்திரமில்லை.

மேற்கண்ட அம்பேத்கரின் வால்மீகிராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட விமர்சனங்களைக் கவனித்தால் பவுத்த ராமாயணத்தில் இத்தகையக் கூறுகள் இல்லாததை விளங்கிக்கொள்ள இயலும்.

மேலும் பவுத்த ராயணத்தின்படி ராமன் ஒரு அவதாரப்புருசனோ, காவிய நாயகனோ நாடுபிடிக்கும் ஆசைகொண்ட அல்லது கேளிக்கைகளின் மீது நாட்டங்கொண்ட சராசரி மன்னனோ அல்ல. தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஆரண்யவாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொண்டவன்.

மேலும் தசரதன் பன்னிரண்டு ஆண்டுகள் உயிர்வாழ்வார் என்று நிமித்திகர்கள் கூற தசரதனோ ஒன்பதாண்டுகளிலேயே இறந்துவிடுகிறார். இங்கு நிமித்திகத்தின் மீதான பவுத்தத்தின் மெல்லிய குரலினூடான கேள்வியை நாம் கேட்கவியலும். நிமித்தகம் உள்ளிட்ட வெளியிலிருந்து செலுத்தப்பட்ட காரணிகளல்ல நமது வாழ்க்கையைத் தீர்மானிப்பவை என்பதே இதன் சேதி.

இன்னும் முக்கியக் கூறு, வாலியைக் கொல்லும் கோழைத்துரோகம் மட்டுமில்லை, பவுத்த ராமாயணத்தில் ராவணன் என்னும் பாத்திரப்படைப்பே இல்லை. பவுத்த ராமாயணம் போரையும் உயிர்க்கொலையையும் நிராகரிக்கிறது. ராவணனும் இல்லாமல், போரும் இல்லாமல், பிறகு எதற்குத்தான் இந்த 'பவுத்த ராமாயணம்'?. இப்பவுத்த ராமாயணத்தின் உயிர்ப்பகுதியே மரணங்கள் குறித்து ராமன் பரதனிடம் பேசுவதாக வரும் பகுதிகள்தான்.

மரணம், வாழ்வின் அர்த்தம், துக்கம், துக்க்கத்தின் காரணம், மரணத்திற்குப் பின்னான வாழ்வு, அல்லது மரணத்தோடு வாழ்வு முடிந்துவிடுகிறதா என்னும் பெருங்கேள்வி இவை பவுத்தத்தின் அறவியல் தேடலின் அடிப்படை. இன்னும் சொல்லபோனால், சித்தார்த்தன் புத்தனாக மாறியதன் தொடக்கப்புள்ளி. இக்கேள்விகளை முன்வைத்து விரியுமொரு பிரதியே பவுத்த ராமாயணம்.

குறிப்பு : பவுத்தம் ஆன்மாவை மறுக்கிறது. ஆனால் மறுபிறப்பை ஏற்றுக்கொள்கிறது. ஆன்மாவே இல்லாதபோது மறுபிறப்பு என்பது எப்படிச் சாத்தியம் என்னும் கேள்வியை முன்வைத்து பவுத்தத்தின் மறுபிறப்புக்கொள்கை குறித்து விரிவாக ஆராய்கிறார் அம்பேத்கர். அவர் மட்டுமல்ல, தர்மானந்த கோசாம்பி தொடங்கி நம் தமிழகத்தைச் சேர்ந்த மயிலை சீனி வேங்கடசாமிநாட்டார் வரை மறுபிறப்புக்கொள்கை குறித்து முன்வைத்த விளக்கங்கள் குரித்து வாய்ப்பு கிடைக்கும்போது உரையாடுவோம்.