ஈழத்தில் ஏன் இன்னும் போர் ஓயவில்லை?







நம் வலையுலகிற்குத் தொடர்பில்லாத ஒரு ஈழத்து நண்பர் என்னை அவர் வீட்டில் சாப்பிட அழைத்திருந்தார்.

வீட்டில் நுழைந்தவுடன் வீட்டில் இருப்பவர்களை ஒவ்வொருவராக நண்பர் அறிமுகப்படுத்திக்கொண்டுவந்தார். குளியலறையிலிருந்து இரண்டுபேர், படிப்பக அறையிலிருந்து இரண்டுபேர், சமையலையிருந்து மூன்றுபேர் என்று கிட்டத்தட்ட ஒரு பதினைந்துபேர். அனேகமாக டாய்லெட்டில் இரண்டுபேர் வசிப்பார்கள் என்று நினைத்தேன். நல்லவேளை யாருமில்லை.

ராவும் இந்திய அரசும் சந்தேகப்படுவது சரிதான். அவர் வீட்டில் ஒரு மினி தமிழீழமே இருந்தது. இந்தியாவிற்குள் தனி ஈழம்.

பிறகு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம், தவறு, பேசிக்கொண்டிருந்தார்கள். பாதி என்ன பேசுகிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. பேச்சினிடையே நண்பர் என்னைச் சுட்டிக்காட்டி தன் வீட்டாரிடம் 'இவர் சரியான விசர்' என்றார். ஏதோ பாராட்டுகிறார் என்று தெரிகிறது. ஆனால் என்ன என்றுதான் புரியவில்லை. விசர், விஷன் (vision), ஏதோ தொலைநோக்குப் பார்வை உள்ளவர் என்று நம்மை நல்லவிதமாகச் சொல்கிறார் என்று எடுத்துக்கொண்டேன். ஆனால் பிற வார்த்தைகள் எல்லாம் திட்டுகிறார்களா, பாராட்டுகிறார்களா என்று இனங்காணமுடியாமலிருந்தது.

ஒருவழியாகச் 'சாப்பிடலாமா?' என்றார். நான் ஒருவித ஆவலுடன் நமக்குப் பழக்கமில்லாத ஒரு புதிய உணவுவகைகளைச் சாப்பிடப்போகிறோம் என்று ஆவலுடன் இருந்தேன். எல்லோரும் உணவுமேஜையில் அமர்ந்தோம்.


குழம்பு கிடையாது. கறி வருவலை அப்படியே சோற்றில் போட்டுப் பிசைந்து சாப்பிட வேண்டியதுதான். முதல்வாய் எடுத்துவைத்தேன். பயங்கரக் காரம். கண்களில் நீர் எட்டிப்பார்த்தது.

கஷ்டப்பட்டு இரண்டாவது வாயையும் எடுத்துவைத்துவிட்டேன். காரம் தலைக்கேறி புரையேறத் தொடங்கியது. நண்பர் 'யாரோ நினைக்கிறார்கள்' என்றார். எனக்கோ செத்துப்போன என் தாத்தா நினைப்பதுபோல இருந்தது. "ஏண்டா பேராண்டி, இன்னும் பூமியில என்ன பண்ணிக்கிட்டிருக்க? சீக்கிரம் வந்துசேரடா" என்று அழைப்பு விடுப்பதுபோல இருந்தது.

தட்டுத்தடுமாறி மூன்றாவது வாயை எடுத்துவைக்கும்போது செத்துப்போன பாட்டியின் குரலும் சேர்ந்து கேட்டது. பக்கத்திலிருந்தவர்களைப் பார்த்தேன். அவர்கள் கொலைவெறியோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சமைப்பதே கொலைவெறியோடு சமைப்பார்கள் போல. எப்படி இவ்வளவு காரத்தைச் சாப்பிடுகிறார்கள்?. ஈழத்தில் ஏன் இன்னும் போர் ஓயவில்லை என்பதற்கான காரணம் எனக்கு விளங்கியது. நான் மட்டும் கையில் ஸ்பூன் வைத்திருக்க அவர்கள் கத்தி, அரிவாள் ஆகியவற்றோடு சாப்பிடுவதுபோல ஒரு பிரமை.

அந்தநேரத்தில்தான் நண்பனின் சகோதரி 'சொதி ஊற்றிக்கங்க' என்று ஒரு திரவத்தை ஊற்றினார். பயந்துகொண்டு ஊற்றிய எனக்கு அதுதான் இதமாக இருந்தது. காரமேயில்லாமல் அருமையாக, காரத்தால் காயம்பட்ட என் கண்ணீர் ஆற்றும் மருந்தாக சொதி இருந்தது.

ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்தோம். 'கதிரையைக் கொண்டுவாருங்கள்' என்றார் நண்பர். எனக்கோ ஏதோ காரமாகச் சாப்பிடக் கொண்டுவருகிறார்கள்போல என்றுநினைத்துப் பயந்துபோனேன். பிறகுதான் கதிரை என்றால் நாற்காலி என்று தெரிந்து நிம்மதியானேன்.

"நீங்கள் ஆறுதலாகச் சாப்பிட்டிருக்கலாமே" என்றார் நண்பர். (ஆறுதலாக என்றால் 'நிதானமாக' என்று அர்த்தமாம்)

நான் 'இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டால் என் வீட்டிற்குத்தான் யாராவது ஆறுதல் சொல்ல வரவேண்டியிருக்கும் அல்லது பிளாக்கில் யாராவது இரங்கல்பதிவு போடவேண்டியிருக்கும்' என்று நினைத்துக்கொண்டேன்.

மீண்டும் அவர் விசர், கிசர் என்று புரியாமல் பாராட்டுவதற்குள் கிளம்பிவிடலாம் என்று நினைத்துக் கிளம்பினேன். "சரி, நான் போய்வருகிறேன்" என்றேன்.

"ஏன், இருந்து இரவு சாப்பிட்டுப் போகலாமே" என்றார்.

நான் கிலியடித்துத் தப்பித்து ஓடிவந்தேன்.

வீணாய்ப்போன வியர்டும் கொள்ளிக்கட்டையும்




வியர்டு என்பதற்கு விசித்திரமானது, வினோதமானது என்றெல்லாம் அர்த்தம் எடுத்துக்கொண்டால் வாழ்க்கையே வியர்டுதான். அது கிறுக்குத்தனமானது, எந்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் நடப்பது. புதிரானது.

எனக்கு எப்போதும் ஆழமாய் இருக்கும் கிறுக்கு அரசியல் கிறுக்கு. இதனால் நடைமுறையில் இழந்தவை ஏராளம். முக்கியமாய்க் காதல். நான் ஏற்கனவே லெனின் புத்தகத்தை எடுத்துக்கொண்டுபோய்க் காதலித்த 'லட்சணத்தை'ச் சொல்லியிருக்கிறேன்.

http://sugunadiwakar.blogspot.com/2007_01_01_archive.html

இயல்பிலேயே அது ஊறிப்போய்விட்டது. கல்லூரி படிக்கும்போது வகுப்பில் பெரியாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருப்பேன். வகுப்புத்தோழிகள் பலர் தலையிலடித்துக்கொண்டே எழுந்துசென்றார்கள். பிறகு கல்லூரியெல்லாம் முடிந்து பல வருடங்களுகுப் பின் அந்தப் பெண்களில் இருவர் என்னைச் சீரியஸாய்க் காதலித்தாய் ஒரு நண்பன் சொன்னான்.

அவர்கள் பயந்துபோனதிலும் அர்த்தமிருக்கிறது. என்னைப் போலவே இருக்கும் பல ஜந்துக்களோடு பழகும்போது அந்த வியாதி அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஒரு பத்துநிமிடத்திற்கு மேல் எந்தப் பெண்ணிடமும் வேறுவிடயங்களைப் பேசிகொண்டிருக்கமுடியாது. அறிவுக்கொடுக்கு தலைகாட்ட ஆரம்பித்துவிடும். இவனுகளைக் காதலிக்க ஆரம்பித்தால் முதலிரவில் கூட முக்கால்மணிநேரம் 'முதலாளிவத்துவத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியம்' பற்றி
சிறப்புரை நிகழ்த்திவிடுவான்கள் என்று பெண்கள் பயப்பட்டிருக்கக்கூடும்.

இது பல சமயங்களில் வேலை பார்க்கும் இடங்களிலும் எதிரொலித்திருக்கிறது. நாம் பணிபுரியும் இடங்கள் எல்லாமே முஸ்லீம் விரோதமும் சாதிய மனோநிலையுமே நிரம்பியிருக்கிறது. எனவே அங்கேயும் பிரச்சினைதான்.

அதேபோல திருமணம். நமக்குக் காதல்தான் கொடுப்பினை இல்லை என்று ஆகிவிட்டது. நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் என்னவோ ஒரே பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு கடைசிவரை அதேபெண்ணோடு குடும்பம் நடத்துவது என்பது பயித்திகாரத்தனமாகத்தான் தோன்றுகிறது.

இன்னொன்று குறுக்கே நிற்பது சாதிமறுப்புத்திருமணம் என்னும் நிலைப்பாடு. அதனாலேயே என்னை உண்மையாகவே காதலித்த, எனக்கும் பிடித்துப்போன இரண்டு பெண்கள் நான் பிறந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலையே உதறித்தள்ள நேர்ந்தது. இதை செந்திலிடம் சொன்னபோது 'காதலையும் திருமணத்தையும் அஜெண்டாகவே வைத்திருக்கிறீர்கள்' என்றார்.

இன்னும் சிலபேர் 'உங்களுக்குத்தான் சாதியில் நம்பிக்கையில்லையே, நீங்களே சாதியற்றவர்தானே. பிறகு இதில் சாதி என்ன தடை?' என்றும் கேட்கிறார்கள். இதற்கெல்லாம் தெளிவாகப் பதில்சொல்ல முடியாவிட்டாலும் ஏனோ அந்த கிறுக்குத்தனமான பிடிவாதமிருக்கிறது.

மற்ற சில்லறைத்தனமான விஷயங்கள் எவ்வளவோ சொல்ல்லாம். இந்த நக்கல் என்பது கூடவே பிறந்தது என்றே நினைக்கிறேன். கல்லூரிக்காலத்தின் போது டூர் போகலாம் என்று நண்பர்களிடம் பேச்சுவந்தது. என்னையும் ஒரு பெண் மனிதனாய் மதித்து "எங்கே போகலாம்?" என்று கேட்டார். நான் "யாழ்ப்பாணத்திற்குப் போகலாம்" என்றேன். அந்தப் பெண் படுபேஜாராகிவிட்டார். (அந்தப் பெண் அழகாக இருப்பார் என்பது முக்கியக் குறிப்பு). நேற்றுக்கூட உட்லேண்ட்ஸ் ஓட்டலில் ஒருநண்பருடன் சாப்பிடப்போனபோது 'ஆம்லேட் இருக்கா?' என்று கேட்டுவைத்தேன். பலபேர் இதைச் சீரியசாக எடுப்பதில்லையென்றாலும் சிலபேர் சீரியசாக எடுத்துக்கொண்டு உறவுகள் முறிந்ததுண்டு.

பெரும்பாலும் நான் வாழ்க்கையில் எதையும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் எதையாவது சீரியசாக எடுத்துக்கொண்டால் 'உருகுதே, மருகுதே, எரியுதே, கருகுதே' என்று மூன்றுநாட்களுக்கு புலம்பிப் புழுங்கித் தவித்துவிடுவேன்.

மறதி என்பதும் என்னோடு பிறந்த இன்னொன்று. பலசமயங்களில் சைக்கிளில் எங்காவது போய் அங்கேயே வைத்துவிட்டு வீட்டிற்கு நடந்தே வந்திருக்கிறேன். பலபொருட்களைத் தொலைத்திருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு ஆச்சரியம் நடக்கும். போனமுறை செந்திலைப் பார்ப்பதற்காக தூத்துக்குடி போயிருந்தேன்.

பஸ்ஸ்டாண்டில் இறங்கினால் செல்போனில் சுத்தமாக சார்ஜ் இறங்கியிருந்தது. எனக்குச் செந்திலின் நம்பரும் ஞாபகம் இல்லை. அவரை எப்படித் தொடர்புகொள்வதென்றும் தெரியவில்லை. கையில் லக்கானின் புத்தகம் ஒன்று வைத்திருந்தேன். ஆசுவாசப்படுத்துவதற்காக ஒரு கடையில் டீ சாப்பிட்டுவிட்டு பிறகு தெரிந்தவர்களிடமெல்லாம் போன் போட்டுக் கேட்டால் ஒருவருக்கும் செந்திலின் நம்பர் தெரியவில்லை.

அய்ந்துமணிநேரம் பயணம் செய்து வந்துவிட்டு செந்திலைப் பார்க்காமலும் ஊர் திரும்பமுடியாது. ஒருவழியாகக் கஷ்டப்பட்டு நம்பரைக் கண்டுபிடித்து செந்திலையும் வரச்சொல்லிவிட்டேன். ஆனால் அப்போதுதான் கவனித்தேன் கையிலிருந்த லக்கான் புத்தகத்தைக் காணவில்லை. பதறியடித்து நானும் செந்திலும் தேடிவந்தால் ஒருமணிநேரத்திற்கு முன்னால் எந்த டீக்கடையில் வைத்தேனோ அதே டீக்கடையில் பத்திரமாக இருந்தது புத்தகம். புத்தகங்களைத் திருடக்கூட யாருமில்லை என்று நானும் செந்திலும் சோகமானோம். ஆனால் இதுவரை நான் செல்போன்கள் எதையும் தொலைத்ததில்லை என்பது ஆச்சரியமானதுதான்.

சரி இந்த வியர்டு விளையாட்டு எல்லாம் எனக்கு உண்மையில் போரடிக்கிறது. ஏதோ செந்தழல் ரவி கூப்பிட்டார் என்றுதான் வந்தேன். இதிலும் ஒரு சூப்பர் காமெடி என்னவென்றால் என்னை வியர்டு ஆட்டத்திற்கு அவரது பதிவில் அழைத்த ரவி வழக்கம்போல என்னுடைய பதிவில் அனானியாக வந்து 'உங்களை வியர்டு ஆட்டத்திற்கு அழைத்திருக்கிறேன், வரவும்' என்று பின்னூட்டமும் போட்டுவிட்டார்.

நானாவது எப்போதாவதுதான் சிக்குகிறேன். ஆனால் செந்தில்தான் பாவம். யார் எந்த ஆட்டத்க்தை ஆரம்பித்தாலும் செந்திலையும் அழைத்துவிடுகிறார்கள். இதற்கான காரணம் எனக்கும் புரியவில்லை. செந்திலைக் கேட்டபோது அவருக்கும் புரியவில்லை. 'உங்கள் ஜட்டியின் கலர் என்ன?' போன்ற உபயோகமான கேள்விகளையும் 'கடைசியாக யாருக்கு முத்தம் கொடுத்தீர்கள்?' என்பது போன்ற வயிற்றெரிச்சல் எழுப்பும் கேள்விகளையும் (முத்தம்ன்னா என்ன..?) கேட்டு பாடாய்ப்படுத்திவிடுகிறார்கள்.

எனவே நானே ஒருமுடிவுக்கு வந்துவிட்டேன். அடுத்து இதுமாதிரி யாராவது கேள்விகள் கேட்கும் அபாயத்திலிருந்து தப்புவதற்காக நானே ஒருவிளையாட்டை ஆரம்பித்துவிட்டேன். விளையாட்டின் பெயர் 'கொள்ளிக்கட்டை'. நிபந்தனைகள் மூன்று.

1. கேள்விகள் பலதுறையைச் சேர்ந்தவையாக இருக்கலாம். ஆனால் 'அறிவுபூர்வமாக' இருக்கவேண்டும்.

2. பதிவின் தலைப்பில் 'கொள்ளி' என்கிற வார்த்தை அவசியம் இடம்பெறவேண்டும் உதாரணம் : கொள்ளிக்கட்டைத்தலையா, கொள்ளிவாய்ப்பிசாசு, கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து...

3. மேற்கண்ட நிபந்தனைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மீறலாம்.

வழக்கம்போல கொள்ளிக்கட்டையை செந்திலிடமே கொடுக்கிறேன். இனிக் கேள்விகள்....


வரலாறு : 'ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே...' என்று எந்தப் பெண்னிடமாவது சொல்லி அடிவாங்கியதுண்டா?

உடல்நலம் : நீங்கள் தினமும் போடும் சோப்பு எது? (இதெல்லாம் குளிக்கிறவங்ககிட்ட கேளுங்க என்று நீங்கள் சொன்னால் அடுத்த சாய்ஸ்)

'மருந்து' சாப்பிடும் பழக்கம் எப்போதிருந்து தொடங்கியது?

திறனாய்வு : பின்னூட்டம்பாலா போன்ற கே.கேக்களின் (கேணக்கிறுக்கர்கள்) பின்னூட்டங்களை மதிப்பீடு செய்க.

புலனாய்வு : மொக்கைவேந்தன் பாலபாரதி 36 வயதை 32 வயது என்று பொய்க்கணக்கு காட்டி விடுத்த பிறந்தநாள் அறிக்கையில் 'டைப் அடித்து அடித்து என் கைரேகைகள் தேய்ந்துவிட்டன..' என்றுசொன்னதில் உண்மை உண்டா?

அறிவியல் : மெத்தனால், எத்தனால் - பத்துவரிகளுக்குள் தடுமாறாமல் சிறுகுறிப்பு வரைக.

இலக்கியம் : நிலா, வண்ணத்துப்பூச்சி, பூ, இதயம், நீ, நான், முத்தம், அன்பே போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் 'சமையல்கட்டு' என்ற தலைப்பில் ஒரு காதல்கவிதை எழுதுக.

பொது அறிவு : தமிழீழத்தின் தலைநகரம் எது? (இந்தக் கேள்வியைப் 'பயன்படுத்தி' 'எங்கள் இதயம்' என்று உணர்ச்சிவசப்பட்டுப் பதில் சொல்லி யாரையாவது உணர்ச்சிவயப்படச்செய்து ரூட்போடவேண்டாம்)

சென்னைப் புத்தக்கண்காட்சி சில சுவாரசியங்கள்














* கண்காட்சியின் வாயிலிலேயே கருணாநிதி கோட்சூட்டோடு ஜம்மென்று காட்சியளிக்கிறார். (லக்கிலுக் அந்த கட் அவுட் அருகிலேயே நீண்டநேரம் கண்கலங்கி நின்றிருந்தார்)

*. கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் மார்க்சிஸ்ட்களுக்கும் புத்தகம் கிடைக்கிறது. ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கும் புத்தகம் கிடைக்கிறது. ஒருமுறை அ.மார்க்சிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார், "இந்த என்.ஜி.ஓக்காரர்களுக்கு பின்நவீனம் என்றால் என்னவென்று தெரியாது.தெரிந்தால் அதையும் ஒரு புரோஜெக்ட் போட்டு சம்பாதித்திருப்பார்கள்" என்று. தொண்டுநிறுவனங்களுக்கு புரோஜெக்ட், கிழக்கு பதிப்பகத்திற்கோ புத்தகங்கள். சேகுவாரா, பிடல்காஸ்ட்ரோ, சதாம் உசேன் என அனைவரையும் 'விற்று'க்கொண்டிருந்தார்கள்.

* கீழைக்காற்று பதிப்பகத்தில் இம்முறை பெரியார் சிலை, மார்க்ஸ், எங்கெல்ஸ் சாவிக்கொத்துகளை ஏனோ விற்கவில்லை. கீழைக்காற்றை விட்டு வெளியே வந்தால் அதிர்ச்சியாக இருந்தது. எதிரிலிருந்த பதிப்பகத்தின் பெயர் 'செட்டியார் பதிப்பகம்'. ஸ்டால் வாசலில் இருந்த தோழர்.துரை. சண்முகம் சொன்னார் "ஊர்ப்பக்கம் செட்டியார்&கோ பலசரக்குக்கடை ஆரம்பிப்பதைப்போல பதிப்பகம் ஆரம்பித்திருக்கிறார்கள்" என்று.
* வழக்கமாய்ப் புத்தகக் கண்காட்சியில் காணப்படும் குடிகாரக் கலைஞர்கள் லட்சுமி மணிவண்ணன், விக்கிரமாதித்யன் ஆகியோரைக் காணவில்லை.
* எப்போதும் 'தீம்தரிகிட' ஞானிதான் தன் ஸ்டாலில் தேர்தல் நடத்துவார். ஆனால் இந்தமுறை மக்கள் தொலைக்காட்சி சார்பில் 'பெண்களுக்கு இட ஒடுக்கீடு வேண்டுமா, வேண்டாமா' என்று ஓட்டுப்பெட்டி வைத்திருந்தார்கள். ஞானி தன் பேவரைட் பெரியகண்ணாடி இல்லாமல் அலைந்துகொண்டிருந்தார்.

* காலச்சுவடு வழக்கம்போல புத்தககண்காட்சியோடு எழுத்தாளர் கண்காட்சியும் நடத்துகிறது. நான் வந்த அன்றின் மறுநாள் ஏதோ புத்தக வெளியீட்டுவிழா. மாலதிமைத்ரி வெளியிடுவதாக அறிவிப்பு. (ஸ்டாலுக்குள் போகவில்லை)


*'உயிர்மை' ஸ்டாலுக்குள்ளும் நுழையவில்லை. ஆனால் ஸ்டால் முழுக்க ஏதோ சுஜாதாவே நிறைந்திருந்ததைப்போல ஒரு பிரமை.


* எப்போதும் நான் தவறாமல் செல்லும் ஸ்டால் 'விஜயபாரதம் ஸ்டால். அங்கேபோய் வழக்கமாய் அவர்கள் முஸ்லீம்கள், போப், கம்யூனிஸ்ட்கள், தி.க ஆகியோரைத் திட்டும் புத்தகங்கள் வாங்கினேன். தப்பித்தவறி அன்று கருப்புச்சட்டை போட்டுப் போயிருந்ததால் சுயம்சேவக்குகள் ஏற இறங்கப் பார்த்தனர். மணிமேகலைப் பிரசுர ஸ்டாலில் மார்க்கெட் இழந்த நடிகர் ராஜேஷ் இருந்தார் என்றால் விஜயபாரதம் ஸ்டாலில் இல.கணேசன் இருந்தார். இந்தமுறை இலவச இணைப்பாக பாரதமாதா படம் தந்தார்கள். (சூப்பர் பிகர்). நமக்குத்தான் அதைப்பார்த்தாலே பற்றிக்கொள்ளுமே, வழக்கம்போல கடாசிவிட்டு வந்தேன்.


* அய்ந்நூறுகளுக்கும் அதிகமான ஸ்டால் இருந்ததால் கிடட்த்தட்ட மூன்று மணிநேரம் நடக்க வேண்டியிருந்தது. மதியம் 12 மணிக்குச் சாப்பிட்டிருந்த இரண்டு சாமபார்வடையும் ஒரு பூரியும் கரைந்துபோய்ப் பசிக்க ஆரம்பித்திருந்தது. நேராக கேண்டினுக்குள் நுழைய என்னுடன் வந்த நண்பர் மெதுவடையும் சமோசாவும் வாங்கித்தந்தார். வடையோடு ஒரு யுத்தம் நடத்த வேண்டியிருந்தது.சமோசாவோ வாங்கித்தந்த நண்பரின் மனசு போல மென்மையாக இருந்தது. ( சமோசாவிற்குள் வெறும் மாவுதானே இருந்தது. அப்புறம் அப்படித்தானே இருக்கும்?)


* புத்தககண்காட்சியைப் பார்த்துவிட்டு அப்படியே பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குச் செல்லத்திட்டம் போட்டிருந்ததால் பிரான்சிலிருந்து வந்திருந்த ஷோபாசக்தி மற்றும் நண்பர்களோடு எஸ்கேப் ஆனோம்.வெளியே தென்கச்சி சுவாமிநாதனும் அன்று பல தகவல்களைக் கூறி முடித்திருந்தார்.
கண்காட்சி முடிவதற்குள் சென்னை திரும்பிவரவேண்டும். புத்தகம் வாங்குவதற்கல்ல, அதைக் கீழைக்காற்று போன்ற கடைகளிலேயே வாங்கிக்கொள்ளலாம். ஆனால் நான் போயிருந்தது தொடங்கிய மறுநாள் என்பதால் கூட்டமும் அவ்வளவாக இல்லை, பிகர்களும் அவ்வளவாக இல்லை.


(மற்றபடி புத்தகக கண்காட்சியின் வரலாறு, சிறப்பு எல்லாம் எழுதி உங்களையும் (என்னையும்தான்) போரடிக்க விரும்பவில்லை. என்னென்ன புத்தகங்களை வாங்கினேன் என்று சொல்ல ஆசைதான். ஆனால் இரண்டாயிரத்திற்கும் மேல் புத்தகங்களைத் தன் கைக்காசைப் போட்டு கூட வந்த என் பிரியத்திற்கும் மரியாதைக்குமுரிய நண்பர் வாங்கிக்கொடுத்து என்னை நெகிழ வைத்துவிட்டதால் ஓசிப் பணத்தில் பிலிம் ஓட்ட விரும்பவில்லை).

பெண்களிடம் தோற்ற கதை
















டுத்தவர் காதல் அனுபவங்களைப் படிப்பது நாகரிகமில்லை என்ற உறுத்தல் உங்களிடம் இருந்தால் இந்த பதிவை மூடிவிட்டு நீங்கள் வேறு பதிவிற்குச் சென்றுவிடலாம்.


னக்கு முதல் காதல் அரும்பியபோது வயது பத்து. தீபா என் அய்ந்தாம் வகுப்புத் தோழி. காரணம் தெரியாமலே நான் பத்துவயதில் நாத்திகனானதைப் போலவே பத்துவயதில் தீபா என்னை ஈர்த்தாள். அப்போது எனக்கிருந்த எண்ணமெல்லாம், 'பெரியவனானபிறகு அப்பா அம்மாவைக் கூட்டி வந்து பெண்கேட்கவேண்டும்' என்பதே. அது காதல்தானா என்பது எனக்குப் புரியவில்லை. (இந்தவயதுவரை எது காதல் என்பதும் எனக்கு விளங்கவில்லை.)


அதற்குப் பின் பல பெண்கள் என்னைக் கடந்துபோனார்கள். ஒவ்வொரு காலத்திலும் ஏதாவதொரு பெண் சிலிர்ப்பூட்டினாள். ஆனால் நான் காதலித்ததாக நம்பிய எந்த பெண்ணும் என்னைக் காதலிக்கவில்லை. என்னைக் காதலித்த எந்த பெண்ணையும் நான் காதலித்ததில்லை. எதிரெதிர் துருவங்களின் ஈர்ப்பினால் உண்டாகும் அந்த மின்சாரத்தைக் காலம் எனக்கு வழங்கவேயில்லை.

எத்தனையோ பெண்கள் சிலிர்ப்பூட்டியபோதும் இரண்டே இரண்டு பெண்கள் மட்டும் மனதில் தங்கிப்போனார்கள்.


த்தாம் வகுப்பு டியூஷன். பானுமதி எப்போதும் சைக்கிளில் வந்தாள். பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள டியூஷனுக்கு நானும் அக்தரும்(அக்தர் உசேன்) நடந்துதான் போவோம். பானுமதி அழகாயிருந்தாள், அந்தக்கால ராதிகாவைப் போல. எப்படியாவது அவளது வீட்டைக் கண்டுபிடித்துவிடுவதென்று தீர்மானித்தோம். நாங்கள் அவளை எப்படிப் பின் தொடர்வது?.


ஒருநாள் டியுஷன் முடிவதற்கு சற்றுமுன்பு காம்பஸால் அவளது சைக்கிளைப் பஞ்சராக்கினோம். பிறகென்ன பானுமதி தள்ளிக்கொண்டு போக நாங்கள் பின் தொடர்ந்தோம். கடைசியில்தான் தெரிந்தது. அவள் எங்கள் தெருவின் கடைசியிலிருக்கும் சலவைத்தொழிலாளர் குடியிருப்பில்தான் குடியிருந்தாள் என்பது.


ஆனால் மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை. பானுமதி, சாரிடம் புகார் செய்தாள். "சார், என்னுடைய சைக்கிளில் 35 பஞ்சர் இருக்கிறது' என்று. அடப்பாவிகளா, நாங்கள் ஒரே ஒரு பஞ்சர்தானே போட்டோம். மீதி பஞ்சர் போட்டது யார்? ஒரு ஊர்வலமே நடந்திருக்கும்போல. அதைவிட இன்னொரு கொடுமை யாரோ ஒரு 'நல்லவன்' வாத்தியாரின் சைக்கிளையும் சேர்த்துப் பஞ்சராக்கியிருந்தான்.


ல்லூரிக்காலம். ஜெய்சிறீ. அழகாயிருந்தாள். மலர்ந்த பூக்களில் அவள் ஒரு வளர்ந்த பூவாயிருந்தாள். அவளது புன்னகை, நடையசைவு, பின்னல் எல்லாம் இம்சைப்படுத்தின.


கல்லூரி தொடங்கும்போது அவளுக்காகக் காத்திருப்பதும், கல்லூரி முடிந்தபிறகு வழியனுப்புவதும் வாடிக்கையானது. ஆனால் ஒரு சொல்லும் பேசமுடியவில்லை. 3000 பேர் கூடியிருக்கும் மேடைகளில் முழங்கமுடிகிறது. 'ஈஸ்வர அல்லா தேரா நாம் என்ற காந்தி ஏன் சாகும்போதுமட்டும் ராம் ராம் என்றார், யேசுவையோ அல்லாவையோ ஏன் துணைக்கழைக்கவில்லை' என்று கேட்டு கைதட்டல் பெறமுடிகிறது. ஆனால் ஒரு பெண்ணிடம் பேசமுடியவிலலையே!.


அப்போது நான் தீவிர மார்க்சிய ஆதரவாளன். பூமியைப் புரட்டிப் போடும் நெம்புகோல் கவிதைகளுக்காய் மெனக்கெட்டவன். 'வாருங்கள் இளைஞர்களே' என்றுதான் கவிதைகள் ஆரம்பிக்கும். அவ்வப்போது ஜார்ஜ்தாம்சனின் 'புரட்சிகர இயங்கியலின் வரலாறு மார்க்ஸ் முதல் மாவோ வரை' போன்ற புத்தகங்களைக் கையில் வைத்துப் புரட்சிகரப் படம் வேறு ஓட்டவேண்டியிருந்தது.

ஆனால் காதலுக்கும் புரட்சிகரப் பிலிம்களுக்கும் அதிகதூரம் என்பது எனக்கு உறைத்தபோது காலம் மோசமாய் என்னைக் கடந்து போயிருந்தது.


ல்லூரியின் இறுதி நாட்கள். அவளிடம் எபடியாவது பேசிவிட வேண்டும். "நான் அய்.லவ்.யுவெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்க அழகாயிருக்கீங்க. இவ்வளவுநாள் உங்களை சைட் அடிச்சேன், அதுக்கு தேங்க்ஸ், அவ்வளவுதான் சொல்வேன்" என்று நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். (வீம்பு!)


ஆனால் ஒவ்வொருநாளும் அந்த நாளை ஒத்திபோட்டுக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு ஒத்திவைத்தலுக்கும் ஒவ்வொரு காரணங்கள். "கூடவர்ற பொண்ணு ரவுடி மாதிரி. எனக்குப் பயமாயிருக்கு" இப்படியாக.

கடைசியில் ஒருநாள். அவளும் அவளது (ஆபத்தில்லாத) தோழியும் மட்டும் தனியாகப் போய்க்கொண்டிருந்தார்கள். பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன்.


தைரியம் வர வேண்டுமல்லவா. லெனினின் 'சர்வதேசியமும் தேசிய இனப்பிரச்சினைகளும்' புத்தகத்தை எடுத்துக்கொண்டேன்.


அவள் முன்னால் போய்க்கொண்டிருக்கிறாள். நான் பின்னால். தூரம் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது. எங்கள் காந்திகிராமக் கல்லூரியை பொறுத்தவரை பேருந்திலிருந்து கல்லூரி செல்ல இருபது நிமிடம் நடக்க வேண்டும். நாங்கள் 16 வருடங்களுக்குப் பிறகு போராட்டமெல்லாம் நடத்தி யூனியன் வாங்கினோம். இனும் பல கோரிக்கைகளையும் முன்வைத்து வெற்றி பெற்றோம். ஆனால் கல்லூரி நிர்வாகமே முன்வந்து ஒரு கோரிக்கையை நிறைவேற்ற முன்வந்தபோது நாங்கள் மறுத்துவிட்டோம். அது பேருந்துநிறுத்தத்திலிருந்து கல்லூரிக்கு பேருந்து கொண்டுவருகிறோம் என்பது. இருபது நிமிடம் கடலை போடுவதைக் கெடுக்கும் பஸ் யாருக்குத் தேவை?.


ரயில்வே கிராஸிங்கில் திரும்பும்போது ஜெய்சிறீ திரும்பி என்னைப் பார்த்தாள். எனக்குப் பதட்டமானது. வியர்க்கத்தொடங்கியது. உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது. புத்தகத்தைப் பிரித்து 32ம் பக்கத்தைப் படிக்கத்தொடங்கினேன்.


"தேசியம் என்பது முதலாளித்துவக் கருத்தாக்கம்தான் என்றாலும் தேசிய இனங்களின் பிரிந்துபோவதற்கான சுயநிர்ணய உரிமையைப் பாட்டாளிவர்க்கம் அங்கீகரிக்க வேண்டும்"


அப்போது என்னைப் பின் தொடர்ந்து அவசரமாக சைக்கிளில் வந்த என்நண்பர்கள் 'என்ன தோழர் பேசிட்டியா?" என்றார்கள். (பொதுவாகக் கல்லுரியில் மாமா, மச்சி என்று கூப்பிடுவதே வழக்கம். ஆனால் 'தோழர்' என்றழைக்கும் கெட்ட பழக்கம் என்னிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவியிருந்தது)


எங்கே சொல்வது? ஜெய்சிறீ போயிருந்தாள். இப்போது என் கைகளில் லெனின் கனத்துக்கிடந்தார்.