பொன்வண்டு பிரியாணி
ஆறாவது விரல்
"பொன்வண்டுபிரியாணி சாப்பிடுகிறாயா??"
இசை இப்படிக்கேட்டபோது அதிர்ந்துதான் போனேன்.
பொன்வண்டைப் பிரியாணி செய்வதா? பொன்வண்டு என்பது சதையாலான வானவில் இல்லையா? அதைக் கறிசமைக்க மனம் வருமா? அதுவும் இசை போன்ற அழகிய பெண்ணால் .
உண்மையில் இசை நிரம்ப அழகானவள். யாரையும் புன்னகைக்க வைக்கும் முகம். அதுவும் அவளின் ஆறாவது விரல் மிகவும் அழகானது. பொதுவாக யாருக்கும் ஆறாவது விரல் கருச்சிதைவான சதைப்பிணடத்தைப் போல் தொங்கிக்கொண்டிருக்கும். ஆனால் இசைக்கோ அது செடியின் பக்காவாட்டில் பூத்த பூ போல அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.அதுசரி அழகான பெண் கொலை செய்யக்கூடாதா என்ன?
" இது என் பிறந்தநாள் ட்ரீட்" என்றாள் இசை.
ஆமாம். இன்று அவளது பிறந்தநாள். ஆடு சமைத்துப் பிரியாணி செய்யலாம், மாடு கறி சமைக்கலாம்.பொன்வண்டை மட்டும் சமைக்கக்கூடாதா?
சிலரது உலகம் ரொட்டித்துண்டுகளானது, சிலரது உலகம் மதுக்குடுவைகளானது, சிலருக்குக் கலவியால். அவரவர் உலகத்தை அவரவர்தானே சிருஷ்டித்துக்கொள்கிறோம். அவரவர் உலகத்தை நியாயப்படுத்துவதற்கான காரணங்களயும். அடுத்தவர் உலகத்தின் மீதான குற்றப்பட்டியல்களையும். உண்மையில் உலகம் எதாலானது? உலகம் எதாலுமானதில்லை, எதாதாலோ ஆனது.குழம்பிப்போனேன்.
இசை மீண்டும் அந்த கேள்வியை எழுப்பினாள்.
" இல்லை. நான் பக்கத்து அறையில் மது அருந்தப்போகிறேன். நீ உணவருந்திவிட்டு வா"
இப்போது என் உலகம் மதுவால் நிரப்பப்பட்டிருக்கிறது. மதுவின் மெல்லிய மிதவை மீண்டும் அந்த கேள்விகளை எழுப்பியது. தலை வலிப்பது போலிருந்தது.
உணவருந்திவிட்டு வந்த இசை என் உதடுகளில் முத்தமிட்டாள். எனக்கெனவோ அருவெறுப்பாகவிருந்தது. ஏதோ பொண்வண்டின் ரத்தக் கவுச்சி அடிப்பதைப் போல.
"ஒரு நிமிடம். நான் இன்னும் கொஞ்சம் மது அருந்திக்கொள்கிறேன்".
இசை என்னை இறுக்க அணைத்துக்கொண்டாள். நான் விலகிவிட முயன்றேன். ஆனால் அவள் ஒரு பசித்த சிறுத்தையைப் போல இருந்தாள். நான் நடந்த விளையாட்டிற்கு வெறும் சாட்சியாக மட்டும் இருந்தேன். அவள் அடிவயிற்றிலிருந்து கனன்ற தீ மெல்ல மெல்லத் தன் சுவாலையைப் பரப்பியது. உக்கிரமாய்ப் பெய்த பெருமழையின் முடிவில் சொட்டுச்சொட்டாய் நீர் வழிந்து தீ அணைந்தது.இப்போது இரை முடித்த சிறுத்தை தன் நாக்கைச் சுழற்றிக்கொண்டது.
நான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.இசை என்னை மீண்டும் இறுக்க அணைத்தாள். அந்த அணைப்பில் அழுத்தம் இருந்தது. அழைப்பின் மிச்சங்களும்.
"இல்லை, வேண்டாம்" என்றேன்.
" ஏன்?" இசை
" எனக்குக் களைப்பாக இருக்கிறது"
அவள் உரக்கச் சிரித்தாள்.
அவளது சிரிப்பு என் ஆண்மையின் மீது வீசப்பட்ட கல் போலத் தோன்றியது
."இல்லை முடியும். ஆனால் தூக்கம் வருகிறது"
" போடா தூங்குமூஞ்சி, தூங்குவதற்காப் பிறந்தாய்?"
அதுசரி உலகம் தூக்கங்களாலுமானது என்பது அவளுக்கென்ன தெரியும்? நான் படுக்கையில் அவசரமாக சரிந்தபோது உலுக்கினாள்."சிகரெட் பாக்கெட்டை எங்கே வைத்திருக்கிறாய்?"
"உன் ஹேண்ட்பேகில்தான் வைத்திருக்கிறேன்"
சொல்லிவிட்டுத் தூங்கிப்போனேன்.
அதிகாலை நான்கு மணியிருக்கும். சிறுநீர் உந்துதல் என்னை எழுப்பியது.சிறுநீர் கழித்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன்.சிகரெட் குடிக்கவேண்டும் போலிருந்தது.
அவளது ஹேண்ட்பேகைத் திறந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்தேன். பாக்கெட்டிற்குள் ஏதோ ஊர்வதைப் போல இருந்தது. என்ன இது? பாக்கெட்டைத் திறந்தால் ஒரு அழகிய பொண்வண்டு என்னைப் பார்த்து மிரண்டு குறுகுறுவென்று ஓடியது.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
இசையை நோக்கிக் குனிந்தேன்
அதிர்ச்சியாக இருந்தது.
இப்போது இசையின் கைகளில் அய்ந்துவிரல்கள் மட்டுமே இருந்தன.