வரவணையானும் புத்தரின் மதுக்கோப்பையும்

தீபாவளி இரவு. நானும் வரவணையானும் ஒரு பாரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தோம். எங்களோடு மது அருந்திக்கொண்டிருந்த இன்னொரு நபர், தமிழ்மணத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற இயக்கங்கள், ரசிகர்மன்றங்கள், தற்கொலைப்படைகள், முன்னணிகள், பின்னணிகள், சங்கங்கள் ஆகியவற்றில் ஒரு குழுவின் தலைவர். இப்போதைக்கு நாட்டாமை என்று வைத்துக்கொள்வோம்.


நாட்டாமை 'தமிழ்மணத்தில் பேசப்படும் விசயங்களின் அடிப்படையில் 'பிளாக்கியம்' என்னும் ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கமுடியுமா' என்று தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார். வரவணையானோ " பிளாக்கியம் உருவானால் அடுத்த நாளே 'போலி பிளாக்கியம்' என்று ஒன்று உருவாகிவிடுமே" என்று பதட்டமடைந்தார். ஆனால் நான் பதட்டமடைந்ததோ வரவணையானைப் பார்த்துத்தான். அவர் எதிரில் இருப்பவர் மட்டையாகாமல் விடமாட்டார். அவர் வீட்டில் குடித்துவிட்டுப்போனால் பிரச்சினை இல்லை.

அதுபோல எந்த வீட்டிலும் பிரச்சினை இருக்காது என்று நினைக்கும் அளவிற்கு அவர் ஒரு 'ஜனநாயகவாதி'. நானோ கட்டிங் மட்டுமே அடிப்பவன். 'நைன்டி'தான் என்னுடைய அளவு. அந்த விசயத்தில் நான் ஒரு தீவிர மார்க்சியவாதி. 'அளவு மாற்றம் பண்புமாற்றத்தை உருவாக்கும்'.
இப்படியாக எங்கள் உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த பாரில் புதிதாக குடிக்க வந்த ஒரு நபர் நாட்டாமையைப் பார்த்து "நீங்கள் கேரளாக்காரரா?" என்று வினவினார். நாட்டாமைக்கோ ஒரே ஆச்சரியம். "என்னைவிட நீங்கள் சிவப்பாக இருக்கிறீர்கள். ஆனால் என்னைக் கேரளாக்காரர் என்கிறாரே" என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.

அப்போது அந்த புதிய நபர் 'தன்னுடைய பெயர் பழனிச்சாமி' என்றும் 'தான் தமிழ்நாடு செக்போஸ்டிற்கும் கேரளா செக்போஸ்டிற்கும் இடையில் உள்ள கோவிந்தாபுரத்தில்' பிறந்ததாக குறிப்பிட்டார். கோவிந்தாபுரம் என்பது நாங்கள் குடித்துக்கொண்டிருந்த பாரிலிருந்து மூன்றாவது தெரு. நான் நாட்டாமையிடம் சொன்னேன் " காரல்மார்க்ஸிற்கு அடுத்து இவர் ஒரு சர்வதேசியவாதி. கோவிந்தாபுரம் கேரளாவிலிருந்தால் நீங்கள் கேரளாக்காரராக இருப்பதில் தவறே இல்லை'' என்று.

அப்போது பழனிச்சாமி, தான் புத்தமதத்தைச் சேர்ந்தவன் என்றும் சொன்னார். எனக்கு இரண்டு சந்தேகங்கள் எழுந்தன.

1. 'பழனிச்சாமி' எப்படி பவுத்தராக இருக்கமுடியும்? 'புத்தம் சரணம் கச்சாமி'தானே, 'புத்தம் சரணம் பழனிச்சாமி' இல்லையே?

2. பவுத்தர்கள் குடிக்கலாமா? (இந்த கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வதில் என்னைவிட வரவணையானுக்கு ஆர்வம் அதிகம். அவருக்கு புத்தமதத்திற்கு மாறவேண்டும் என்ற ஆர்வம் அதிகம். ஆனால் அங்கே போனால் குடிக்கமுடியாதே என்ற சஞ்சலமும் உண்டு.)

பழனிச்சாமி சொன்னார். பழனிச்சாமி என்னும் சொல் பழங்கச்சாமி என்னும் பாலிமொழியிலிருந்து வந்ததாகவும் தமிழ்மொழியே பாலிமொழியிலிருந்து தான் வந்ததாகவும் குறிப்பிட்ட அவர் பாலிமொழியில் அந்த பெயருக்குப் பொருள் பழமையான துறவி என்றும் விளக்கினார். மேலும் பழனியில் இருப்பது முருகன் சிலை இல்லையென்றும் பவுத்தத்துறவிகளில் ஒருவரான அநாகரிகதர்மபாலாவின் சிலையென்றும் கூறினார்.

அதேபோல குடிவிசயத்தை எடுத்துக்கொண்டால், புத்தரின் சீடர்களில் ஒருவரான அங்குலிமாலாவின் ஆறாம் தலைமுறையைச் சேர்ந்த சங்கநந்தன் என்னும் துறவி அசோகரையும் புத்தரையும் தந்தை மகனாகப் பாவித்து 'தம்மபுத்திரக்காப்பியம்' என்னும் காவியத்தை எழுதியிருப்பதாகவும் அதில் பல இடங்களில் புத்தரும் அசோகரும் மது அருந்தியபடியே உரையாடுவதாகவும் குறிப்பிட்டார். அப்போது புத்தர் சொல்வதாக வரும் ஒரு கவிதையைப் பாலிமொழியில் சொன்னார். (பழனிச்சாமிக்குப் பாலிமொழியும் தெரியும் என்பது கூடுதல் தகவல்)

அப்போது எனக்கு காப்ரியேல்கார்க்சியாமார்க்வெஸின் 'A woman travelling in oceanwings' என்னும் நாவலில் வரும் மார்த்தா என்னும் தேவதையின் வசனங்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு புள்ளிகளும் குறுக்கே வெட்டிக் கொள்ளும் இடத்தில் ஒரு தமிழ்க்கவிதை எனக்குள் பிறந்தது. நிசயமாக உலகின் மிகச்சிறந்த கவிதைகளுள் ஒன்று அது. இப்போது என் எதிரில் பழனிச்சாமி இல்லை. நாட்டாமையும் விடைபெற்றுப்போயிருந்தார்.

வரவணயான் மட்டும் மண்புழு, மண்வெட்டி, மண்பாண்டம் போன்ற மண் மற்றும் மண்சார்ந்த விசயங்கள் குறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். நானோ கவிதையில் கரைந்திருந்தேன். அந்த கவிதை உருவாகியபோது என் நரம்புகளெங்கும் பட்டாம்பூச்சிகள் பறந்தன. ஒரு பூக்காட்டில் குழந்தையைப் போல வாடைக்காற்று தழுவிக்கொண்டிருக்க நான் நிர்வாணமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன். இப்போது என் மதுக்கோப்பையில் புத்தர் தெரிந்தார். சில்வியாமரிக்கோமா என்னும் லத்தின் அமெரிக்கப் பெண்கவிஞர் சொன்னார் " நிச்சயமாக ஒரு நல்ல கவிஞரால் அய்ந்து நல்ல கவிதைகளுக்கு மேல் எழுத முடியாது. ஆனாலும்கூட ஒரே ஒரு நல்ல கவிதையை எழுதினாலும் கூட அவர் நிச்சயம் ஒரு நல்லகவிஞர்தான்" என்று. தமிழை உலகத்தரத்திற்குக் கொண்டுசெல்லப்போகும் அந்த கவிதை இதுதான்.

சொட்டு ஒன்று
சொட்டுச்சொட்டாய்ச்
சொட்டிக்கொண்டிருந்தது.
ஒரே ஒரு சொட்டு
சொட்டுச்சொட்டாய்
எப்படிச் சொட்டும்?

4 உரையாட வந்தவர்கள்:

  1. வரவனையான் said...

    அடித்த கட்டிங்குக்கு இதல்லாம் ஓவருப்பா.....

    அதே வேளை தோழர்.சுகுணா குறிப்பிடும் மார்க்சின் மேற்கோளை நிச்சியம் புறம் தள்ள முடியாது. ஆம் "அளவை மாறுபட்டால் குணத்தில் மாறுபடும் "தான். அதனால் தானோ என்னவோ எனக்கு நிகழ்ந்தவையும், தனக்கு நிகழ்ந்தாக தோழர் நினைத்துள்ளார். இந்தப்பிரதியை புறம் தள்ளும் அதே வே நேரத்தில் மார்க்சின் பிரசித்தி பெற்ற மற்றோரு மேற்கோளையும் புறந்தள்ளும் கடமையும் இருக்கிறது எனக்கு , அது " மாற்றம் ஒன்றுதான் மாறாதது" , தவறு ஒரு கட்டிங் போட்டால் பழனிச்சாமியும் பாலி மொழியில் கவிதை சொல்லுவான்.

    நல்ல கவிதை சுகுணா , வழக்கம்போல்.

    :))))))))))

  2. குழலி / Kuzhali said...

    பத்தி பத்தியா பிரிச்சி எழுதங்கப்பா... பாதிக்கு மேல படிக்க கண் உறுத்தலா இருக்குப்பா

  3. Muthu said...

    அனுபவித்து ரசித்த கவிதை...

    வாழ்த்துக்கள்...

    அந்த சுராவை விமர்சித்து(மறுதலித்து) "இலை உதிர்வது போல என் மரணம்" பற்றிய கவிதையை மீண்டும் தர முடியுமா?(அர்த்தம் மாறாமல்தான்)

  4. ரவி said...

    முதல்முதலாக படிக்கிறேன்...ஆழம் வீச்சு நக்கல் நையாண்டி எக்கல் எகத்தாளம் என வலையுலக சத்தியராஜாக வலம்வருக என்று வாழ்த்துகிறேன்...இந்த பதிவை அன்புடன் மீள்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்...