திராவிட இயக்கம் என்னும் பழிதாங்கும் மாயப்பிசாசு




ஜீலை 2007 தீராநதி இதழில் எம்.டி.முத்துக்குமாரசாமியின் நேர்காணலை வாசிக்க நேர்ந்தது.

அரசியலற்ற இலக்கியம் என்று ஒன்று சாத்தியமா, நம்முடைய அரசியலுக்கு எதிராக இருப்பதாலேயே ஒரு இலக்கியத்தை நிராகரிக்கவேண்டுமா என்னும் கேள்விகள் முன்வைக்கப்படும்போது, 'அரசியலுக்காக ஒரு இலக்கியத்தை நிராகரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை' என்று கூறும் அதேவேளையில் 'ஒரு இலக்கியம் அரசியல்பூர்வமாக வாசிக்கப்படுவது தவிர்க்க இயலாது' என்று சரியாகவே சொல்கிறார் எம்.டி.எம்.

ஆனாலும் நேர்காணல் கண்டவர் விடுவதாயில்லை. ஜேம்ஸ்ஜாய்ஸின் யுலீசசையும் எஸ்ராபவுண்டையும் மேற்கோள்காட்டித் துளைத்தெடுக்கிறார். 'திராவிட இயக்கம் பக்தி இலக்கியங்களைப் படிப்பதைத் தடைசெய்தது' என்றும் 'ஒரு சந்ததியினருக்கு அந்த அறிவு சென்று சேராமல் போனதற்கு திராவிட இயக்கம்தான் காரணமென்றும் அதற்குமுன் தமிழர் வீட்டு சுகதுக்க நிகழ்ச்சிகளில் தேவாரம் ஓதுவது, திருவாசகம் பாடுவது புழக்கத்திலிருந்ததே என்றெல்லாம் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுகிறார்.

இத்தகைய கேள்விகள் தமிழில் கேட்கப்படுவது இது முதன்முறையல்ல. கவிஞர்.தமிழ்நதி தனது நட்சத்திரவாரத்தையட்டி எடுத்த நேர்காணலில் கவிஞர்.குட்டிரேவதி, 'திராவிட இயக்கத்தின் வருகைக்குப் பின்புதான் தமிழர்களின் அழகியல் உணர்வு அழிந்துவிட்டது' என்கிற ரீதியில் தெரிவித்திருந்தார்.

ஆகமொத்தம் சமூகத்தின் அத்தனைச் சீரழிவுகளுக்கும் தேக்கங்களுக்குமான காரணத்தை நாம் சுலபமாக திராவிட இயக்கத்திலிருந்து 'கண்டுபிடித்துக்கொள்ளலாம்' என்பது எவ்வளவு வசதியானது.!

திராவிட இயக்க ஆட்சிக்குப்பின்தான் ஊழல் மலிந்தது, ரவுடி அரசியல் தலைதூக்கியது, தனிநபர் ஒழுக்கம் சீர்குலைந்தது என்பதான குற்றச்சாட்டுகளும் பொதுப்புத்தியில் ஆழப்பதியவைக்கப்பட்டுள்ளன. ஊழல் மலிந்துவிட்டது என்பதான பேச்சின் பின்னுள்ள மனவுணர்வு பார்ப்பனரல்லாத தலித்துகளும் சூத்திரர்களும் அரசியலுக்கு வந்தபின்புதான் என்னும் தூய்மைவாத மனோபாவமே என்பதை ஊகித்தறிவது சுலபம்தான். இவ்வாறாகக் கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தியோ தூய்மைவாத அணுகல்முறையோடு ப.சிதம்பரத்தையும் அத்வானியையும், அப்துல்கலாமையும் ஆதரிக்கிறது.

ஆனால் நடந்தது என்ன? ஊழல் செய்வதில் வருணபேதம் கிடையாது என்பதை ஹர்ஷத்மேத்தா, வேணுகோபாலிலிருந்து 'புரட்சித்தலைவி' ஜெயலலிதா வரை நிரூபித்தார்கள். தூய்மைவாத மத்தியதரவர்க்கத்தினரின் ரோல்மாடலான பி.ஜே.பியும் ஊழல்குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பமுடியவில்லை.

திராவிடக் கட்சித்தலைவர்கள்தான் தனிநபர் ஒழுக்கமற்றவர்கள் என்கிற மனப்பதிவை இருவர் மணிரத்னத்திலிருந்து தில்லிப்பார்ப்பனர் பி.ஏ.கிருஷ்ணன் வரை உருவாக்கத்தவறவில்லை. ஆனால் உண்மை என்பது அதுதானா? பார்ப்பனர்களுக்கும் ஆண்குறி உண்டு என்பதை இருள்நீக்கிசுப்பிரமணியம், டாக்டர்.பிரகாஷ் தொடங்கி சமீபத்தில் அந்துமணி என்கிற ரமேஷ்(எ) தினமலர் ராமசுப்புவரை நிரூபித்தார்கள்.

ஆனாலும் குற்றங்களுக்கான வேர்களைத் திராவிட இயக்கத்தில் தேடுவது என்பது இன்னமும் வசதியானதாகத்தானிருக்கிறது. அந்த மனோபாவத்தின் இன்னொரு பரிமாணமே குட்டிரேவதியின் கூற்றும் எம்.டி.எம்மை நேர்காணல் எடுத்தவரின் கேள்விகளும். 'திராவிட இயக்கம் அழகியல் உணர்வைக் கொன்றழித்துவிட்டது' என்பவர்கள் உண்மையிலேயே திராவிட இயக்க இலக்கியங்களை வாசித்திருக்கிறார்களா, வாசித்திருக்கிறார்கள் என்றால் எந்தளவிற்கு என்றெல்லாம் கேள்விகள் விரிவதைத் தவிர்க்கமுடியவில்லை.

'நாயின் நாக்குப்போன்ற சிவந்த மெல்லடியைத் தூக்கிவை குடிசையில்' என்னும் பாரதிதாசனின் கவிவரிகளில் படிம அழகு விரியவில்லையா?

"நதிதழுவி அருவியின் தோள் உந்தித் - தெற்கு
நன்முத்துக்கடலலையின் உச்சிதோறும்
சதிராடி மூங்கிலிலேப் பண்ணெழுப்பித்
தாழையெல்லாம் மடற்கத்தி சுழற்றவைத்து
அந்தியிலே இளமுல்லை சிலிர்க்க - செந்நெல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க -என்
சிந்தையணு ஒவ்வொன்றும் சிலிர்க்க
செல்வம் ஒன்றுவரும் அதன்பேர் தென்றல்காற்று"

என்னும் சுப்புரத்தினத்தின் வரிகளில் வீசும் தென்றல் நம்மைத் தழுவவில்லையா?

"சுயநலமென்பீர்கள், என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது, ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதைப்போல' என்னும் கலைஞரின் வசனத்தில் தத்துவம் கவித்துவமாய்த் தெறிக்கவில்லையா?

அழகியல் உணர்வற்றுத்தானா, ஏறக்குறைய பெரியாரைத் தவிர திராவிட இயக்கத்தில் இருந்த அத்தனைபேரும் நாடகம், சிறுகதை, வசனம் என எழுதியும் நடித்தும் குவித்தனர்? திராவிட இயக்க இலக்கியம் என்பது அண்ணா கலைஞரைத்தாண்டியும் சி.பி.சிற்றரசு, அண்ணல்தங்கோ, தென்னரசு, தத்துவமேதை டி.கே.சீனிவாசன் என்று பரவிப் பரந்துகிடக்கிறதே? மன்றம், தென்றல், திராவிடநாடு, முரசொலி என நாற்பதிற்கும் மேற்பட்ட பத்திரிகைகளை திராவிட இயக்கம் நடத்தியது எப்படி?

தமிழின் முதல் பெண்நாவலாகிய 'மதிகெட்ட மைனர் (அ) தாசிகளின் மோசவலை' எழுதிய மூவலூர் ராமார்மித்தத்தமையார் திராவிட இயக்கத்தவர்தானே? ஆண்களே அற்ற பெண்களை மட்டுமே கதைபாத்திரங்களாகக் கொண்டு நாவலொன்றை முப்பதுகளிலேயே சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் எழுதினாரே. (ராகவனா, நீலாம்பிகை அம்மையாரா என்று நினைவில்லை). அழகியல் உணர்வற்ற கருணாநிதியால் வள்ளுவர்கோட்டமும், பூம்புகாரும், வள்ளுவர் சிலையும் எப்படிச் சாத்தியம்?

இத்தகைய கலை, இலக்கிய வெளிப்பாடுகள் அழகியல் உணர்வின்றி எப்படி உருவாக முடியும்? ஆனால் திராவிட இயக்கத்தவரின் எழுத்துக்கள் பளபளப்பானவை, எதார்த்தத்தை மிகைப்படுத்தியவை என்பது உண்மைதான். ஆனால் இன்றைய நவீன இலக்கிய எழுத்துமுறை, வாசிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை அளப்பது என்பது நேர்மையாகாது. திராவிட இயக்க எழுத்து என்பது அதற்கு முந்தைய எழுத்தை விட நிச்சயமாக நவீனமானதுதான். மற்ற திராவிட இயக்க எழுத்தாளர்களின் பிரதிகளை விட்டுவிடுவோம். ஆனால் பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் வாசிக்கும்போது பலமுறை நவீன இலக்கியம் வாசிப்பதான உணர்வையே அடைகிறேன். குறிப்பாக நாகம்மை மரணத்தின்போது அவரால் விடப்பட்ட அறிக்கை.

எம்.டி.எம் தனது நேர்காணலில் ஒருவிசயத்தைத் தெளிவாகச் சொல்கிறார். திராவிட இயக்கம்தான் சங்க இலக்கியம் குறித்த வாசிப்பைப் பரவலாக்கியது என்று. சங்க இலக்கியம் மட்டுமில்லை, பெரியாரும் திமுகவும் இல்லாமல் போயிருந்தால் திருக்குறளும் வள்ளுவரும் தமிழ்ப்பொதுமனத்தில் இவ்வளவு ஆழமாக ஊன்றியிருக்கமாட்டார்கள். கருணாநிதி இல்லையென்றால் சிலம்பும் கண்ணகியும் குறித்தான கதையாடல்கள் தமிழ்மனத்தில் ஏது?

ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையை வேறுவிதமாக உரையாடிப் பார்ப்போம். திராவிட இயக்கம் பகுத்தறிவுவாதத்தை முன்வைத்தது. பகுத்தறிவுவாதம் தர்க்கத்தின்பாற்பட்டது. இலக்கியமோ, அழகியல் உணர்வோ, கலைமனமோ தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. திராவிட இயக்கத்தின் தர்க்கபூர்வமான பகுத்தறிவுவாதம் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட மெல்லிய கலைமனத்தைச் சாகடித்துவிட்டது, தேவதைக்கதைகளைக் கொன்றழித்துவிட்டது என்பதாக இந்த குற்றச்சாட்டை வாசிக்க முயல்வோம்.

ஆனால் உண்மையில் திராவிட இயக்கம் தர்க்கபூர்வமான பகுத்தறிவு இயக்கமா? பெரியாரின் பகுத்தறிவு என்பதே வெறுமனே தர்க்கபூர்வமான பகுத்தறிவு மட்டுமல்ல. எல்லாவித வழிபாட்டுமுறைமைகளுக்கும் எதிரான, எல்லாவிதமான உரையாடல்களையும் சாத்தியப்படுத்துகிற, விமர்சனவெளியில் தன்னை முன்கிடத்துகிற இறுக்கமற்ற நெகிழ்வுடைய திறப்பே அவரது பகுத்தறிவு என்னும் கருத்தாக்கம். இல்லாது பெரியார் வெறுமனே தர்க்கங்களுக்குள் சுருங்கிப்போயிருந்தாரெனில் அவரிடத்திலே கவித்துவ அறமிருந்திருக்காது. காரியமுதல்நோக்கமும் வறட்டுத்தனமான சில செத்துப்போன கேள்விகளுமே மிச்சமிருந்திருக்கும்.

பெரியாரையும் அவரையத்த சிலரையும் தவிர்த்துப்பார்த்தால், குறிப்பாக திமுகவின் அரசியல், இலக்கிய மற்றும் கலைப்பொதுவெளியின் ஊடான செயல்பாடுகளைத் தொகுத்துப்பார்த்தோமெனில் அவற்றிற்கும் பகுத்தறிவிற்குமான உறவு குறித்த ஒரு சில புரிதல்கள் சாத்தியப்படும்.

திராவிட இயக்கம் மதத்தை மறுத்தது, கடவுளை மறுத்தது. ஆனால் அந்த வெற்றிடங்களை வள்ளுவர், திருக்குறள், சேரன்செங்குட்டவன், கண்ணகி, ராசராசசோழன்
என்னும் குறியீடுகளால் நிரப்பியது. மத உணர்விற்குப் பதிலியாக தமிழினப்பெருமிதக் கதையாடல்களை இட்டு நிரப்பியது.

வள்ளுவரும், கண்ணகியும் தமிழர் தெய்வங்களாயினர். இயக்கத்திலும் தோழமைபூர்வமான உறவுச்சொல்லாடல்கள் ஒழிந்து குடும்ப உறவுகளின் மாதிரியிலான உறவுச்சொல்லாடல்கள் கட்டப்பட்டன 'தோழர்' என்கிற வார்த்தை பின்னுக்குத்தள்ளப்பட்டது. அண்ணாத்துரை என்கிற பெயரின் வசதியால் அவர் அண்ணா ஆனார். மற்றவர்கள் தம்பிகளானார்கள். கலைஞருக்கோ அனைவரும் உடன்பிறப்புகளானார்கள்.

அரசியல்பூர்வமான உறவுச்சொல்லாடல்களின் இடத்தை குடும்ப அடிப்படையிலான உறவுச் சொல்லாடல்கள் நிரப்பிக்கொண்டன. இதை ஜெயலலிதாவை அம்மா என்று அழைப்பது வரை நீட்டித்துக்கொள்ளலாம். பகுத்தறிவைப் பேசுவதாய் வந்த திராவிட இயக்கத்தில்தான் அண்ணா 'இதயதெய்வம்' ஆனார். எம்.ஜி.ஆர் 'அமரரானார்'.

ஆக மதவழிபாட்டிற்குப் பதிலாகத் தனிநபர் வழிபாட்டையும் பழம்பிம்ப வழிபாடுகளையும் திராவிட இயக்கம் முன்வைத்தது. மதமற்ற ஒரு வழிபாட்டுமுறையை உருவாக்கியதுதான் திராவிட இயக்கப் பகுத்தறிவின் சாதனை. இந்தப் பதிலியாக்கத்தின் விளைவாக பண்பாட்டுப் பெருமிதத்தின் பெயராலே திராவிட இயக்கத்தலைவர்களின் சொல்லாடல்களிலும் செயற்பாடுகளிலும் தமிழ்க்குடும்ப உறவுமுறைகளில் சிறுகீறலுமில்லாத மதிப்பீடுகளாய் ஆண்மய்ய மற்றும் ஆணாதிக்க மதிப்பீடுகள் நிரம்பிவழிந்தன. எனவே தர்க்கபூர்வமான பகுத்தறிவிற்கும் திராவிட இயக்கத்திற்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது. அதைக்காரணம் காட்டி அவற்றின் பகுத்தறிவே அழகியலைக் கொன்றழித்தது (அ) பக்தியுணர்வைத் தடைசெய்தது என்று குற்றம்சாட்டுவது அறியாமையேயாகும்.

அவற்றிற்கான காரணங்களை நாம் சூழலில்தான் தேடவேண்டும். தேவதைக்கதைகள் ஒழிந்துபோனதற்கு திமுக காரணமில்லை. அண்ணாதுரை ஆட்சிக்காலத்திலும் குழந்தைகள் பாட்டிகளிடம் கதைகேட்டுக்கொண்டிருந்தார்களே தவிர, ''ஏழுமலை ஏழுகடல் தாண்டி அசுரனின் உயிர் எப்படி இருக்கும்?" என்றெல்லாம் 'பகுத்தறிவு'க்கேள்விகளை எழுப்பவில்லை.

ஆனால் இன்றைய சூழல்வேறு. நவீனக்கல்விமுறையும் ஊடகங்களின் வளர்ச்சியினூடான விஞ்ஞான வளர்ச்சியும்தான் தேவதைகளின் மரணத்திற்குக் காரணம். கி.ராஜநாராயணன் ஒருமுறை சொன்னார், 'ஒரு குழந்தை வானம் ஏன் நீலமாக இருக்கிறது, கடலில் ஏன் அலைகள் வருகின்றன என்றெல்லாம் சதா கேள்விகேட்டுத்துளைக்கும். கேள்விகேட்பது குழந்தைகளின் இயல்பு. ஆனால் மூன்றுவயதில் நாம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிடுகிறோம். பின் பிரம்போடு வாத்தியார் கேள்விகேட்கத்தொடங்கிவிடுகிறார். குழந்தைகள் கேள்விகளற்றுப்போகிறார்கள்' என்று. நமக்குத்தான் குழந்தைமையைக் கொல்லும் ஹார்மோன் ஊசிகள் பாடத்திட்டங்கள் என்னும் பெயரில் இருக்கின்றனவே!

ஆனாலும் பகுத்தறிவைத்தாண்டி மாயச்சாகசத்திற்காய் ஏங்கும் குழந்தை மனம் அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடுவதில்லை. அவை ஜெட்டிக்ஸாகவும் சன்டிவியின் சுட்டிடிவியாகவும் ஹாரிபார்ட்டராகவும் மடைமாற்றம் கொள்கின்றன. எவ்வித ஆதாய நோக்கமுமற்று தேவதைக்கதைகளைப் பகிர்ந்துகொண்ட பாட்டிகளின் இடத்தை வணிகநோக்கமும் அரசியல்நோக்கமும் கொண்ட அனிமேசன் பிம்பங்கள் நிரப்பிக்கொள்கின்றன.

வீட்டில் போகோ ஓடுகிறது. விருந்தினர் வருகிறார். 'வாங்க, எப்படியிருக்கீங்க?' என்று ஒரு கேள்வியை வீசிவிட்டு போகோவின் மாயக்குகைக்குள் மறைகிறோம். அன்றொருநாள் தேவதைக்கதைகள் சொன்ன கிழவி மூலையில் முடங்கிக்கிடக்கிறாள். சொல்லப்படாத தேவதைக்கதைகள் வழிந்துகிடக்கின்றன வெறும் உமிழ்நீராய்...

சில பின்குறிப்புகள்:

1. எம்.டி.எம்மை நேர்காணல் எடுத்தவர் அரசின் குரலே பாடத்திட்டங்களாய் மாறுகின்றன என்கிறார். ஆனால் நாற்பதாண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பாடத்திட்டங்களிலிருந்து பக்தி இலக்கியங்கள் எடுக்கப்பட்டதில்லை. மேலும் சீறாப்புராணம், யேசுகாவியம், ரட்சண்ய யாத்திரீகம் போன்ற இந்து அல்லாத புறச்சமய இலக்கியங்களும் இடம்பெற்றன. வேண்டுமானால் புலவர்.குழந்தையின் ராவணகாவியம், பாரதிதாசனின் கண்ணகிபுரட்சிக்காப்பியம் ஆகியவை இடம்பெற்றிருக்கலாம்.

2. பெரியாரின் பகுத்தறிவு வெறுமனே தர்க்கபூர்வமானது மட்டுமில்லை என்பதை புதியகோடங்கி இதழில் அ.மார்க்சின் 'பெரியார்?' நூலிற்கான விமர்சனத்திலும் புத்தகம்பேசுது மற்றும் விடுதலை ஞாயிறுமலரில் மீள்பிரசுரமான 'பெரியாரில் மிளிர்ந்த கவித்துவ அறம்' என்னும் கட்டுரையிலும் சற்று விரிவாக விளக்க முயற்சித்திருக்கிறேன்.

3. திராவிட இயக்கத்தினரின் ஆண்மய்யச்சொல்லாடல்களை அண்ணாவின் 'ரோமாபுரிராணிகள்', கருணாநிதியின் பலபிரதிகள், பெரியார் இயக்கத்தவரின் புராண ஆபாசம் குறித்தவிமர்சனப்பேச்சுகள், பாரதிதாசனின் குடும்பவிளக்கு, இருண்டவீடு முதலான நூல்கள் தொடங்கி, வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், ஏன் நமது திராவிட இயக்க ஆதரவுப் பதிவாளர்களான விடாதுகருப்புவின் எழுத்துக்கள் மற்றும் தோழர்.செந்தழல்ரவி 'ஆம்பளையாயிருந்தா நேரா வா, நீ என்ன பொட்டையா?' என்று அவரது ஆழ்மனதில் புதைந்துபோன ஆண்மய்யச்சொல்லாடல்களை உதிர்த்தது எனப் பல்வேறு உதாரணங்களை வரிசைப்படுத்தலாம்.

4. எம்.டி.முத்துக்குமாரசாமியின் நேர்காணல் சமீபத்தில் தீராநதியில் வந்த நேர்காணல்களில் முக்கியமானது. ஆனால் எம்.டி.எம்மின் பிரதிகளில் வெளிப்படட் சைவவெள்ளாளக் கருத்தியல் குறித்துக் காத்திரமான விமர்சனங்கள் தமிழ்ச்சூழலில் முன்வைக்கப்பட்டன. அதுகுறித்து எந்தக் கேள்வியுமில்லை.மேலும், அவர் நகுலனைத் 'திராவிட இயக்கத்தால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட விளிம்புப் பிராமண மனமாய்'ப் பார்ப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இது 'பிராமணர்கள் தலித்துகளைப் போல நடத்தப்படுகிறார்கள்' என்றலறும் அசோகமித்திரனின் குரலோடு பொருந்திப்போவது கவனிக்கத்தக்கது.

மேலும் நகுலனும் தான் திராவிட இயக்கத்தால்தான் தனிமைப்பட்டுப் போனதாக சொல்லிக்கொண்டதாகத் தெரியவில்லை. சு.ரா மற்றும் ஞானக்கூத்தன் போன்றோரின் பிரதிகளில் காணப்படும் திராவிட இயக்கவெறுப்புமனோநிலையை நகுலனின் எழுத்துக்களில் காண இயலாது.

சாரு தனது நகுலன் அஞ்சலிக்கட்டுரையில், 'முதல் சந்திப்பில் 'நீங்க பார்ப்பானா' என்று நகுலன் கேட்டதாகவும் இல்லையென்றவுடன், 'ஏன் அவர் முகத்தில் அவ்வளவு திருப்தி என்றும் எழுதுகிறார். ஒருவேளை இதே கேள்வியை நகுலன் எம்.டி.எம்மிடம் கேட்டிருந்தால் 'ஆமாம்' என்றிருப்பாரோ என்னவோ?

ஒரு பெண்ணைக் கொலைசெய்தோம்




பொங்கிப்பெருகும் கருணையே
முலைகளாய்த் ததும்பிற்றுப்
பெண்ணிடம்.
முலைகளற்ற வெற்றுக்காம்புகள் திருகி
குறிதுழாவி அலைகிறது
ஆண் என்னும் திமிர்மிருகம்.

- சில்வியாகுண்டலகேசி ( பெண், பெண் மற்றும் பெண் மட்டுமே தொகுப்பிலிருந்து...)

சமம் என்கிற வார்த்தையை வெறுக்கிறேன் நான். ஆணும் பெண்ணும் சமம் என்பது முட்டாள்தனமான உளறலின்றி வேறில்லை. ஆண் எப்போதும் பெண்ணிற்குச் சமமாக முடியாது. நான் ஆணாயிருக்கிறேன். அதனால் அவமானப்படுகிறேன். எப்போதும் எந்தக் கணமும் ஒரு பெண்ணின் கையால் கொலைசெய்யப்பட விரும்புகிறேன், அன்பும் கருணையுமுள்ள பெண்ணின் கைகளால்..

- சுகுணாதிவாகர் (20.11.1978க்குப் பிறகு... (அச்சில் ஏற்றப்படாத பிரதியிலிருந்து...)

மறக்கமுடியாதவர்கள் என்னும் பட்டியலில் பெண்களே எப்போதும் நிரம்பிக்கொள்கிறார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுமளவிற்கு ஆண்கள் முக்கியமானவர்கள் அல்ல. அன்பும் தோழமையும் கொண்ட ஒருசில ஆண்களைத் தவிர வேறு ஆண்கள் நினைவிற்கு வந்துபோவதெல்லாம் அறிவின் திமிர், வன்மம், குரோதம், இரக்கமற்ற துரோகம் இவற்றிற்காகத்தான். - அப்படியாக வாழ்க்கையில் மறக்கமுடியாத பெயர்களிலொன்று கார்த்திகா.

கார்த்திகா ஒவ்வொரு புத்தாண்டையும் கலைத்துப்போடுகிறாள். புத்தாண்டுக்கொண்டாட்டங்களுக்கிடையே கார்த்திகாவின் நினைவு தவிர்க்கவியாமல் உறுத்துகிறது விரலிடுக்கில் சிக்கிக்கொண்ட மணல்துகளைப் போல...

முதல்முதலாக ஒரு நண்பனை வழியனுப்புவதற்காக ரயில்வேஸ்டேசன் சென்றபோதுதான் கார்த்திகாவைச் சந்தித்திருக்கிறான் ஜெகன். நாங்கள் ஓராண்டுகாலம் நடத்திய பத்திரிகையில் என்னோடு இணைந்து ஆசிரியர்குழுவில் பணியாற்றியவன். அவ்வப்போது கவிதைகள் எழுதி, ஓஷோ மீது பிரியம் கொண்டு குழந்தைத்தனமும் மாறாத நேசமும் கொண்டு வாழ்பவன். ஜெகன் சந்தித்தபோது கார்த்திகா தற்கொலை செய்துகொள்வது, வீட்டைவிட்டு ஓடிவிடுவது ஆகிய இருவழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாயிருந்தாள்.

கார்த்திகா ஒரு தலித்பெண். குறிப்பாக பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பெண். அவளது தந்தை அரசு மருத்துவமனை ஊழியர். அரசு ஊழியர் காலனியில் அவளது வீடு அமைந்திருந்தது. பதினொன்றாவதோ, பன்னிரண்டாவதோ படித்துக்கொண்டிருந்தாள் கார்த்திகா. எல்லோருக்கும் வருவதைப் போலவே அவளுக்கும் காதல் வந்தது. ஒருநாள் காதலனுடன் வீட்டைவிட்டு ஓடிப்போனாள்.

காதலனுக்கோ காதலைவிடவும் கார்த்திகா மீதுதான் நாட்டமிருந்தது. ஆனால் கார்த்திகாவிற்கு அது இல்லை. காதல் என்பது பாலியல் உறவிற்கு அப்பாற்பட்டது என்பது அவள் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். மீண்டும் வீடுதிரும்பினாள் தனியாக.

ஆனால் வீடு அவளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவளை ஒரு வேண்டத்தகாதவளாகவே நடத்திவந்தது. காலனியில் வசிக்கும் பையன்களோ கார்த்திகாவை 'எதற்கும் தயாரானவளாகப்' பார்த்தனர். தண்ணீர் எடுக்கக் குழாய்க்குச் செல்லும்போதெல்லாம் அவளைக் கிண்டல் செய்தனர். கிட்டத்தட்ட 'வர்றியா' என்று அழைத்தனர்.

இந்த நிலையில்தான் அவள் எங்களிடம் வந்து சேர்ந்தாள். நாங்கள் அவளை ஒரு பெரியாரியக்கத் தோழர் ஒருவரின் வீட்டில் தங்கவைத்திருந்தோம். ஆனால் அதற்குள் தோழர் அவள் வீட்டிற்குத் தகவல் அனுப்பியிருந்தார். வீட்டார் வந்தபோது அதிர்ச்சியடைந்த கார்த்திகாவின் கண்களில் ஒரு விபரிக்கமுடியாத ஏமாற்றமும் குற்றம் சாட்டுகிற கோபமும் நிறைந்திருந்தது.

வீடு அவள், குடும்பக் கௌரவத்தைக் கெடுத்துவிட்டதாகப் புலம்பியது. பிறகு கார்த்திகாவை மறந்துபோனோம். ஆனால் இரண்டு வாரங்களில் அவள் மீண்டும் எங்களிடமே வந்து சேர்ந்தாள். இப்போது நாங்கள் உதவிநாடியது முன்னாள் மார்க்சியலெனினிய அனுதாபியும் இந்நாள் கலகக்காரமுமான நண்பர் ஒருவரை .

நல்லபோதையிலிருந்தபோதும் அவர் கார்த்திகாவின் தந்தைக்குப் போன் செய்யத் தவறவில்லை. ஒரு தீயணைப்புநிலையத்தின் அருகில் கார்த்திகாவை அவளது தந்தையிடம் 'ஒப்படைத்து' பொறுப்பாற்றினோம்.

டிசம்பர்31 காலை கார்த்திகா தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு நண்பரின் மூலம் தகவல் வந்தது. இரவு கார்த்திகாவை நானும் ஜெகனும் போய்ப்பார்த்தோம். கார்த்திகா இல்லை, எரிந்து கருகிப்போயிருந்த ஒரு பிண்டமே இருந்தது. பாலிதீன் துண்டுகளில் கட்டப்பட்ட மீன்துண்டங்களாய்ப் போல வெள்ளையாய் அலைந்துகொண்டிருந்தன அவளதுகண்கள்.

'தனியாகப் பேசவேண்டும்' என்று விருப்பம் தெரிவித்த கார்த்திகா, என்னைப் பார்த்துக் கேட்டாள், 'நீங்கள் எங்கள் வீட்டிற்குப் போன் செய்து கார்த்திகாவுடன் பேசவேண்டுமென்றீர்களா?'. நான் பேசவில்லை. ஆனால் எங்களது குழுவிலிருந்து எனது பெயர் கொண்ட இன்னொருநண்பன் பேசியிருக்கலாம். அந்த அழைப்பினால் வீடு மீண்டும் குழப்பத்தையும் கலகத்தையும் சந்தித்தது. கார்த்திகாவிற்கு மரணத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறுவழியில்லை. சரியாக ஜனவரி 1 - கார்த்திகா செத்துப்போனாள்.

நாங்கள் கம்யூனிசம் பேசினோம், பெரியாரியம் பேசினோம், பின்நவீனத்துவம் பேசினோம், இலக்கியம் பேசினோம். எல்லாம் பேசி ஒருபெண்ணைக் கொலைசெய்த திருப்தியோடு வெளியேறினோம்.

--------------------------- குடும்பவெளிகளிலிருந்து வெளியேறும் பெண்களுக்கான தனிவெளியை இந்தியப்பொதுவெளி உருவாக்கவில்லை, உருவாக்கப்போவதுமில்லை.. வீட்டைவிட்டு ஓடிப்போவது, தற்கொலைசெய்துகொள்வது என்னும் வாழ்வின் எந்தச் சந்தர்ப்பத்திலாவது எல்லோருக்கும் தோன்றும் உந்துதல்களில் பெரும்பாலும் இரண்டாவது வழி மட்டுமே பெண்களுக்குத் திறந்திருக்கிறது. ஒருவேளை வீட்டைவிட்டு ஓடிப்போனால்கூட அவள் யாராவது ஒரு ஆணுடன்தான் ஓடிப்போகவேண்டும். உலகமெங்கும் நிகழும் சாதி/மத/இனக் கலவரங்களில் பாலியல்பலாத்காரங்கள் நிகழ்வது ஒரு செய்தியே அல்ல. அது வெறுமனே பாலியல் விழைவு மட்டுமல்ல. மாற்று இன/மத/சாதிப் பெண்ணுடல் என்பது ஆணின் அதிகார வெற்றியை நிலைநாட்டிக்கொள்வதற்கான நிலம்தான். தனது வெற்றிக்கொடியை இறுக நாட்டிவிட்டுத் தனது குழுப்பெருமையைக் காப்பாற்றிய திருப்திகொள்கிறது ஆண்மனம். பெண்ணுடலோ யோனிகிழிந்து சிதைந்துகிடக்கிறது. உலகின் சாதிய, மதவாத, இனவாத, தேசியச் சொல்லாடல்களின் பின்னெல்லாம் ஆணாதிக்க மற்றும் ஆண்மய்ய நோக்கங்களே நிறைந்திருப்பதைப் புரிந்துகொள்வது கடினமானதா, என்ன?

------------------ எங்களுக்கு அதேமாதிரியான வேறொரு வாய்ப்பும் அமைந்தது. வேறுபெண். வேறு ஊர். வேறு சூழல். வேறு நண்பர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணை எங்களால் கொலைசெய்யமுடியவில்லை.

இசையால் நிரம்பிய அறை

நௌபல்,
உனை விடவும் காதல் இனிதில்லை.
மதுவில் நனைத்த உன் முத்தங்கள்
தேங்கிப்புழுத்த கவிதைகளைவிடவும்
பிரியமிக்கவை.
பீடிப்புகையும் சாராயநாற்றமும்
உன் இசையுமாய் நிரம்புகிறது அறை.
புகைகளுக்குள் ஊருருவும்
லாவகமானதுன் இசை.
கைவிடப்பட்ட கணங்களிலும்
ஆறுதலுக்காய் முந்தும் வார்த்தைகளின்முன்
என்னைப் பிரித்துப் போட்டுவிடமுடியாதபடி
தடுக்குமென் வெட்கம் ரகசிய அறைகளைத்
தேடித்தவிக்கிறபோதும்
உன் மடியையே சரணடைகிறது.
நீ எப்படி எப்போதும்
நண்பனாயிருக்கிறாய் என்பது
ஆச்சரியமானதுதான்.
(என்னால் முடியாது அது.)
இப்போது குளித்த குழந்தை
ஈரத்தோடு கட்டிக்கொள்வதைப் போலவே
அணைக்குமுன் நேசம்
நீ கம்யூனிஸ்டாயிருந்ததால் இருக்கலாம்.
நௌபல்,
நடுத்தெருவில் செத்துநாறும் நாயைப்போலவேயான
இந்த கவிதையைப் புறக்கணித்துவிட்டு
இப்போது இந்த அறையை இசையால்நிரப்பு.
ஒரே ஒரு சிகரெட்டை முடித்துக்கொள்கிறேன்.
இதோ கம்பளி விலக்கி எழுகிறான் கத்தார்.
'இதி கொங்கணி ரஜம்..."

வாழ்த்து




உடைந்து சிதறும் நிலா
உன்வீட்டு முற்றத்தில் விழலாம்,
சிலநேரங்களில் எறிகற்களும்கூட.
சமயங்களில் உன் மனசைப் போலவே
பூக்கள் பூக்கலாம்.
முட்களின் சடாரென்ற விரல்கிழிப்பில்
பொசியும் குருதியை இக்
கவிதை கொண்டும் நீ துடைக்கலாம்.
எப்படியாயினும் மொழித்திமிர் காட்டும்
என் வார்த்தைகளையும்
தாண்டியதாயிருக்கிறது வாழ்க்கை.
எங்கோ வேறிடத்தில்
கண்ணீரோடு நாட்குறிப்பில்
எழுதிக்கொண்டிருக்கும் உனக்குச்
சொல்லவிரும்புவதெல்லாம்
நிர்வாணம் பொது எனினும்
உனக்கான ஆடையை நீ அணிந்துகொள் என்பதே.

*பெண்மோகியும் குடிகாரனுமான கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு தன் சிறகுகளைத் தொலைத்த வித்யாவின் நினைவிற்கு...

உடை




மறுக்கப்பட்டதே விதிக்கப்பட்டதாயும்
விதிக்கப்பட்டதே மறுக்கப்பட்டதாயும்
நகரும் வாழ்க்கையில்
சாலையோரத்தில்
சில கண்ணாடிகளை உடைப்பது
தவிர்க்கமுடியாததாகிறது
உடைந்துசிதறும் கண்ணாடித்துண்டுகளில்
கேட்கிறதா
மறுப்பின் இசையும்
கொண்டாட்டத்தின் வேட்கையும்.

உண்மை மற்றும் போலி நண்பர்களுக்கு...

'போலிகள் ஜாக்கிரதை', 'இன்னும் கொஞ்சநாட்களுக்குப் பின்னூட்டம் இடப்போவதில்லை', 'தமிழ்மணத்திலிருந்து விலகப்போகிறேன்' என்றெல்லாம் பதிவு எழுதக்கூடிய 'அதிர்ஷ்டம்' ஏனோ எனக்கு இன்னமும் வாய்க்கவில்லை.

தமிழ்நதியின் பெயரில் எனக்கு வந்த ஒரு போலிப்பின்னூட்டம் குறித்துச் சில வார்த்தைகள். சிலநாட்களுக்கு முன்பு அவரது 'ஆண்மை' என்னும் கவிதைக்கு நான் ஒரு பின்னூட்டமிருந்தேன். ஆனால் 'மிதக்கும்வெளியின் உணர்ச்சி போலி உணர்ச்சி' என்றும் 'கோட்பாடுகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டு உளறுபவர்' என்ற ரீதியிலும் அவருக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. (பிறகு அதைத் தமிழ்நதி எடுத்துவிட்டார்.)

அந்த 'உண்மை உணர்ச்சியாளர்' கோட்பாடு குறித்த முழுமையான புரிதலை விளக்குவதற்காக டியூசன் எடுக்க என் வலைப்பக்கமே வந்திருக்கலாம். அங்கே எதற்குச் சென்றார் என்று தெரியவில்லை. அப்படிச் சென்றவர் தனது வாசிப்புத் தகுதிக்காகவாவது தனது பெயரைப் போட்டு எழுதியிருக்கலாம்.

என்னுடைய பதிவுகளில்தான் பெரும்பாலும் எப்படிப்பட்ட பின்னூட்டங்களையும் அனுமதிக்கொண்டிருக்கிறேன் தானே! என்ன சமயங்களில் ஒரே கெட்டவார்த்தையில் திரும்பத் திரும்பத் திட்டும்போது போரடிப்பதால் அவற்றை மட்டும் மட்டுறுத்த வேண்டும் என்கிற 'அவசியம்' ஏற்படுகிறது.

அதிலும் எனக்கு வரும் பின்னூட்டங்கள் அலாதியானவை. 'என்ன பிரகாஷ், காலையில் காபி சாப்பிட்டீங்களா?' என்று யாராவது ஒரு நண்ப/பி பின்னூட்டம் போடுவார். அதாவது யாரேனும் பதிவர் நண்பருக்கு நீங்கள் போன் செய்கிறீர்கள் என்றுவைத்துக்கொள்வோம். அவரது போன் அவுட் ஆப் ஆர்டராக இருக்கலாம் (அ) அவுட் ஆப் சர்வீசாக இருக்கலாம் (அ) நீண்ட நேரம் பிஸியாக இருக்கலாம். அவரை மின்னஞ்சல் வழியாகவும் தொடர்புகொள்ள முடியவில்லை. என்ன செய்யலாம்?

உங்களது அந்த நண்பர் என்னுடைய வலைப்பக்கத்தை ஓரளவிற்கு ரெகுலராகப் படிக்கும் துன்பத்திற்கு ஆளாகுபவராக இருந்தால் என்னுடைய ஏதாவது ஒரு பதிவிற்கு 'என்ன அய்யனார், உங்கள் பையனுக்கு எல்.கே.ஜி அட்மிஷன் கிடைச்சாச்சா?' என்று பின்னூட்டம் போட்டுவிடலாம். எப்படியும் அய்யனார் ஓரிருநாட்களில் உங்களைத் தொடர்புகொண்டுவிடுவார்.

இப்படியாகவே பின்னூட்டங்கள் வருகின்றன. இந்த லட்சணத்தில் நான் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதில்லையென்று ஒரு தோழி மிகவும் வருத்தப்பட்டிருந்தார். 'பிரகாஷ் காபி சாப்பிட்டாச்சா?' என்ற கேள்விக்குப் பிரகாஷ்தானே பதில் சொல்லமுடியும்.

சரி, விதயத்திற்கு வருவோம். தமிழ்நதியைப் பொருத்தவரை ஒரு நல்ல படைப்பாளி, நல்ல நண்பரும்கூட. ஆரிய, திராவிட, ஆறிய, சூடான விவாதங்களில் தலையைக் கொடுத்து மாட்டிக்கொள்பவரில்லை. மார்க்சிஸ்ட், பெரியாரிஸ்ட், போஸ்ட்மாடர்னிஸ்ட்,டோண்டுஸ்ட், டூண்டுஸ்ட், உண்மைத்தமிழனிஸ்ட், லக்கிலுக்கிஸ்ட் என்று எந்த இஸ்ட்டும் கிடையாது. ஏதோ அவருக்குத் தோன்றிய விஷயங்களைப் படைப்பாகக் கொண்டுவருபவர்.

மேலும் அவருக்கென்றுள்ள குடும்பப்பொறுப்புகள், புலம்பெயர்ந்து வாழ்வதால் இயல்பாகவே ஏற்படும் வாழ்வியல் நெருக்கடிகள், அடையாளச்சிக்கல்கள் என்று ஆயிரம் பிரச்சினைகள் உண்டு. இதில் யார் போலி, யார் உண்மை என்றெல்லாம் கண்டுபிடிக்க வைத்து ஏன் கஷ்டப்படுத்தவேண்டும்?

வேண்டுமானால் நண்பர்கள் விரும்பினால் என்னுடைய அய்.டி மற்றும் பாஸ்வேர்ட் கூட தருகிறேன். விருப்பம்போல கமெண்டோ அல்லது 'வடைகறி பிரியாணி செய்வது எப்படி/' என்பது போன்ற 'சுவையான' பதிவுகளையும் கூட போட்டுக்கொள்ளலாம். ஏற்கனவே ஒரு பதினைந்துபேருக்கு என்னுடைய பாஸ்வேர்ட் தெரியும். பாலபாரதி கூட என் பக்கத்தில் இரண்டு பதிவு போட்டிருக்கிறார். (சும்மா சொன்னேன் தல, நீங்கபாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு மருந்தைக் குடிச்சுடாதீங்க. அப்புறம் தமிழ்நாடு 'தல'சிறந்த சிந்தனையாளரை இழந்துவிடும்.)

அதனால் போலி அபிமான நண்பர்கள் யோசியுங்கள். யாருக்கும் தீங்கிழைக்காத பிள்ளைப்பூச்சியின் பெயரில் எல்லாமா பின்னூட்டம் போடுவீர்கள்?

பின்னங்கழுத்தருகில் மூச்சுக்காற்று



நேற்றிரவு தொலைபேசியில் அழைத்தாய்
உன்னோடு பேசமுடியவில்லை தயாள்.
என் தசைகளைச் சிலபாம்புகளுக்குத்
தின்னக்கொடுத்திருந்தேன். மன்னி.
முதல் வார்த்தையிலேயே
என்னைக் கொலைசெய்ய விருப்பம்தெரிவித்தாய்.
நல்லது. ஆயுதங்களின் தேவைக்கு அணுகு.
என்னைக் கர்வி என்றும் யாருடைய கேள்விகளுக்கும்
பதில்சொல்வதில்லையென்றும்
குற்றம்சாட்டினாய். இருக்கலாம்.
கோப்பைகளை நிரப்புவதைவிடவும்
உடைக்கவே விரும்புகிறேன் தயாள்.
உனது வரவேற்பறை எப்போதும்
தயாராயிருப்பதாக முகமன் கூறினாய்.
விருந்தினர்களின் புழுக்கம்நிறைந்த
வரவேற்பறைகள் எனக்கு
உகந்ததல்ல தயாள்.
என்னை நினைக்கும்போதெல்லாம் ஒரு
குத்துச்சண்டைக்காரனின் பிம்பமே
விரிவதாய்ச் சொன்னாய்.
கலகக்காரனாகவும் மனநோயாளியாகவும்
சமயங்களில் பிதற்றும் குழந்தையாகவும்
அறியப்பட்டவனின் வாழ்க்கை
உண்மையில் சாதாரணமானது,
சமயங்களில் அற்பமானதும் தயாள்.
என் கவிதைகளில் நெளியும்
தேவதைகளின் முகவரிகேட்டுத்
தொந்தரவு செய்கிறாய்.
நான் புனைவை வைக்கிறேன்.
நீ உண்மையைத் தேடுகிறாய்.
நான் எழுதுவது கவிதைகள் என்று நம்புகிறாய்.
எனக்குக் கவிதைகளில் நம்பிக்கையில்லை தயாள்.
வார்த்தைகளில் என்னைத் தேடியலைவதைவிடவும்
ஒரு புன்னகையிருந்தால் வீசிவிட்டுப்போ.
புலனாய்வுசெய்து என்னைக் கண்டுபிடிப்பதைவிட
என்னைக் கொலைசெய்துவிடு தயாள்
அல்லது என் கவிதைகளைப் புறக்கணி.

சீதாபாலம்


அணிலைத் தடவித் தடவி
மரத்துப்போன
ராமனின் விரல்கள்
சமைத்த பாலம்
வானரங்களின் துணையோடு மீட்டுவந்து
விட்டுப்போனானொரு பாம்புகள் நெளியும் வனாந்திரத்தில்.
நேற்று முதல்நாள் பார்த்தேன்
பாலத்தில் பிளாஸ்டிக் குப்பைகளைப்
பொறுக்கிக்கொண்டிருந்தாள் சீதா.
"குரங்கை வைத்துப் பாலம் சமைத்தவனைவிட
புஷ்பகவிமானத்தில் கடத்திப்போனவனையே நம்பியிருக்கலாமே"
என அழுதாள் பெருங்குரலெடுத்து.
மீட்பிற்கும் கடத்தலுக்குமான
வித்தியாசங்கள் மங்கும் புள்ளியில்
அசோகவனத்தில் கண்ணீரில் நனைந்த
பெருமுலைகளை வர்ணித்த கம்பனையும்
'சாண்டையக்குடிக்கி' என்று திட்டத்தவறவில்லை அவள்.
அவள் யோனியில் பெருக்கெடுத்த
உதிரத்தில்
உடைந்துவிடும்போலிருந்தது பாலம்.
சில நாவற்பழங்களைத் தந்து
ஆறுதல்படுத்திச் சொன்னேன்.
"சீதா இந்தா
உன் கணவனின் பெயரெழுதிய பிரதிகள்.
துடைக்க
வைத்துக்கொள்".


அலைகளையும் நீலத்தையும்
எடுத்துவிட்டால்
கடல் என்பது
வெறும் தண்ணீர்ப்பரப்புதான்.
குழாயைத் திறந்தால்
கொட்டுகிறது கடல்.
சீறும் அலைகளின் ஓசையைக்
குழாயில் கேட்கவில்லையா சௌகத்?

கீற்றுக்கு உதவுங்கள்






தமிழின் பல மாற்று சிறுபத்திரிகைகளையும் ஒருசேர வாசிக்கும் தளமாக விளங்குவது 'கீற்று' இணையத்தளம். மார்க்சியம், பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம், மனித உரிமைகள் என பல்வேறு அரசியல் பார்வைகளை அடிப்படையாகக் கொண்ச இத்தளத்தை நடத்திவருபவர் இளைஞரான தோழர்.ரமேஷ். இந்தத் தளத்தின் மூலம் எந்த ஆதாயமும் பெறாத அதேநேரத்தில் கடுமுழைப்பையும் செலுத்திவருபவர். இப்போது கீற்று இணையத்தளத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களையும் சமகால இலக்கிய மற்றும் அரசியல் நூற்களையும் ஏற்றவுள்ளார் ரமேஷ். ஆனால் இதற்கென ஒரு நபரை நியமித்து அவருக்கான சம்பளம் மற்றும் தொலைபேசி போன்ற பல்வேறு செலவுகள் அவரை எதிர்நோக்கியுள்ளன. மேலும் கீற்று இணையத்தளம் குறித்த அறிமுகத்தையும் அனைத்துத் தமிழர்களுக்கும் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளையும் வேண்டுகிறார் தோழர்.ரமேஷ். மாதம் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் அரசியலில் ஆர்வமுள்ள நண்பர்கள் தங்களால் இயன்ற அளவில் மாதம் ஒரு தொகையைப் பகிர்ந்துகொள்ளலாம்.



மேலும் தொடர்புக்கு ரமேசின் தொலைபேசி: 9940097994, அவரது மின்னஞ்சல் : editor@keetru.com

ரமேஷின் வங்கிக் கணக்கெண் : 603801511669

iciici bank, chennai branch.

எழுத்தின் அரசியலும் அரசியல் எழுத்தும்...




மார்க்யெஸிற்கு
காஸ்ட்ரோ நண்பர்.
எங்களூர் இலக்கியவாதிகளுக்கோ
நல்லிகுப்புசாமி
(செட்டி)
- சில்வியாகுண்டலகேசி ( தேவதைகளின் மாதவிடாய்க்காலம் தொகுப்பிலிருந்து..)



பிறப்பினடிப்படையில் ஒரு கலைஞனை/படைப்பாளியை மதிப்பிடலாமா என்பது ஒரு மய்யமான கேள்வி.கலைஞன் மட்டுமல்ல, அரசியலாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியவர்கள் குறித்தும் முன்வைக்கப்படும் இக்கேள்வி அடித்தட்டுமக்களிடமிருந்து எழும் பலகேள்விகளை மவுனப்படுத்தும் தந்திரம் கொண்டது. இதன்மூலம் சுலபமாக எதிர்த்தரப்பைச் சாதியவாதியாக நிறுத்திவிட முயலும் வசதியும்கொண்டது.

'ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது' என்றார் பேராசான் கார்ல்மார்க்ஸ். இந்தியச்சமூகம் வர்க்கம் மற்றும் சாதியச்சமூகமாக விளங்குவதால் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கம் மட்டுமல்ல சாதியின் முத்திரையுமிருக்கிறது. இந்தியச்சமூகத்தில் வாழ நேர்ந்த எந்தவொரு உயிரியும் சாதியக்கூறுகளிலிருந்து தப்பமுடியாது. படைப்பாளியும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை அழுத்தமாய்ச் சொல்ல விரும்புகிறேன்.

அதேபோல உலகின் எச்சமூகத்தில் பிறந்த ஆணும் முற்றுமுழுதாக ஆணாதிக்கக்கூறுகளை அகற்றியவனல்ல. வேண்டுமானால் சாதி, ஆணாதிக்கம் ஆகியவற்றை மீறுவதற்கான, கடந்துவருவதற்கான எத்தனங்களை மேற்கொள்ளலாம். அத்தகைய எத்தனங்கள் செயற்படும் தளங்களே அரசியலும் கலை மற்றும் இலக்கியமும். அதிலும் ஒரு கலைஞன் என்பவன் தான் வாழும் சமூகத்தில் நிலவும் ஆதிக்கக்கருத்தியலைக் கேள்விக்குட்படுத்துபவனாக மட்டுமில்லாது அதிகாரம் குறித்து சதா விழிப்பும் அதிகாரக்கூறுகளை அகற்றும் மனோநிலை கொண்டவனாகவும் விளங்கவும் வேண்டும்.

சமூகத்தில் 'சிறந்ததாக'க் கட்ட,மைக்கப்படுவது அனைத்தும் தேர்ந்தெடுப்பின் அரசியல் வழிச் செயல்படுபவையே. இந்தத் தேர்ந்தெடுப்பு மற்றும் தொகுப்பு என்பது நிலவும் ஆதிக்கக் கருத்தியலினடிப்படையிலானதே. நிலவும் அதிகார மய்யங்களுக்கெதிரான எதிர்ப்பு மற்றும் மாற்றுச் செயல்பாடுகள் என்பவை அதற்குமுன் பீடத்தில் ஏற்றப்பட்ட புனிதங்களையும் மூளையிலேற்றப்பட்ட கருத்தியல்களையும் விசாரணை செய்வதும் மய்யங்களால் கண்டுகொள்ளப்படாத செயல்பாடுகளை முன்வைப்பதுமாகும்.

நவீன இலக்கிய உலகின் பிதாமகர்களாக விளங்கிய புதுமைப்பித்தன், மௌனி ஆகியோர் 80 மற்றும் 90களில் நிகழ்ந்த அமைப்பியல்வாதம், பின் அமைப்பியல்வாதம் மற்றும் பின்நவீனம் போன்ற புதிய கோட்பாட்டு அறிமுகத்தின் வெளிச்சத்தில் மறுவாசிப்புச் செய்யப்பட்டனர். அவர்களது பிரதிகள் முன்மாதிரிகளாகவும் உன்னதப்பிரதிகளாகவும் கொண்டாடப்பட்டிருந்த நிலையில் அவர்களது பிரதியின் வழி செயற்படும் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

உன்னத இலக்கியம், படைப்புத்தூய்மை, படைப்பாளியின் புனிதம் ஆகிய அனைத்தும் தகர்க்கப்பட்டன. ஒரு பிரதி படைக்கப்பட்டதும் ஆசிரியன் இறந்துவிட்டான். அப்போது வாசகனே உயிர்த்தெழுகிறான். படைப்பிற்கான அர்த்தங்களை வாசகனே உண்டுபண்ணுகிறான். எனவே படைப்பாளி என்பவன் புனிதமானவன் அல்ல, ஒரு படைப்பில் அர்த்தம் உண்டாவது வாசகனின் பங்கேற்பையும் உள்ளடக்கியே என்னும் புரிதல்கள் முன்நகர்ந்தன.

கடவுள் இறந்துவிட்டார் என்னும் நீட்சேயின் வாக்கியம் எப்படி மத அதிகாரங்களின் மத்தியில் கேள்வியை எழுப்பியதோ அதுபோல ஆசிரியன் இறந்துவிட்டான் என்னும் ரோலன்பார்த்தின் கூற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் அதிர்வுகளை உண்டுபண்ணியது. ஆசிரியனே இறந்துவிட்டான் என்னும் போதில் படைப்பாளிக்கான ஒளிவட்டம், கவித்திமிர், கலைப்பெருமிதம் எங்கிருந்து வரும்?

இத்தகைய வாசிப்புமுறைகள் உலகமெங்கும் நிகழ்ந்தன. அதற்குமுன் உன்னத இலக்கியங்களாக முன்நிறுத்தப்பட்டவை அனைத்தும் மறுவாசிப்பு செய்யப்பட்டன. கட்டவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டு பிரதியில் தொழிற்பட்ட அதிகாரம் மற்றும் வன்முறை வெளிக்கொணரப்பட்டன. ஆல்பெல்காம்யூவின் புகழ்பெற்ற இலக்கியப்பிரதியான 'அந்நியனை' எட்வர்த்செய்த் மறுவாசிப்பு செய்து அதனுள் நுட்பமாக செயற்பட்ட அரேபிய வெறுப்புமனோநிலையைக் கொணர்ந்தார்.

அப்படித்தான் இங்கும் புதுமைப்பித்தன், மௌனி ஆகியோர் மறுவாசிப்பு செய்யப்பட்டனர். அவர்களது பிரதிகள் கட்டவிழ்ப்பு செய்யப்பட்டன. புதுமைப்பித்தன் street dog என்பதை பறைநாய் என்று மொழியாக்கம் செய்தது, அவரது பிரதிகளில் கிறித்துவப்பாதிரிகள் மற்றும் தலித்துகள் ஆகியோரின் சித்தரிப்பு குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மௌனியின் ஒடுங்கிய தனிமைக்குள் தந்திரமாய்ச் செயற்படும் சனாதனக் கருத்தியல் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டது 'உன்னத' எழுத்தாளர்களை கலவரப்படுத்தியது

சுந்தரராமசாமியின் 'புளியமரத்தின்கதை' சிறுகதையில் செயற்பட்ட முஸ்லீம் எதிர்ப்பு மனோநிலை மற்றும் பார்ப்பனீய மனோநிலை குறித்து ராஜன்குறை விரிவான ஒரு கட்டுரையை (விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க்கதையாடல்களும் - நிறப்பிரிகை வெளியீடு) எழுதினார்.

தொடர்ச்சியாக சு.ராவின் பிரதிகளில் வெளிப்பட்ட அரசியல் குறித்து அ.மா, ராஜன்குறை, வளர்மதி, சாருநிவேதிதா போன்ற பலரும் எழுதியிருக்கின்றனர். அவரது தோட்டியின் மகன் மொழிபெயர்ப்பு நாவல் குறித்துத் தலித் எழுத்தாளர் மதிவண்ணன் தலித்திய நோக்கில் மறுவாசிப்பு நிகழ்த்தியிருக்கிறார்.

சுந்தரராமசாமி, மௌனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் போன்ற உயர்சாதி எழுத்தாளர்கள் இலக்கியமே படைக்கக்கூடாது என்றில்லை. ஆனால் அவர்களின் பிரதிகளில் மற்றமைகளாகிய பார்ப்பனரல்லாத சாதிகள், தலித்துகள், பெண்கள் ஆகியவர்கள் குறித்த சித்தரிப்புகள் எங்கனம் அமைகின்றன என்பதுதான் அடிப்படைக் கேள்வி.

சு.ராவின் கடைசிக் கதையாகிய 'பிள்ளைகெடுத்தாள்விளை' கதையையே எடுத்துக்கொள்வோம். தங்கக்கண் என்னும் பத்திரிகையாளர் ஒருவர் பிள்ளைகெடுத்தாள்விளை' என்னும் ஊர்ப்பெயருக்கான காரணத்தை விபரிப்பதாக அந்தக் கதை விரிகிறது.

ரவிக்கை போடுவதற்கும் அனுமதியற்ற ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் பல 'உயர்சாதியினரின் கருணையால்' படித்து முன்னேறி பள்ளியின் தலைமையாசிரியையாகிறாள். அவள் உயர்சாதியைச் சேர்ந்த ஒரு சிறுவனைத் தன் பாலியல் தினவைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்கிறாள். அதன்பின் அவள் ஊரைவிட்டு அடித்துத் துரத்தப்படுகிறாள். அப்போது துரத்துபவர்களில் ஒருவர் 'சீலையை உரிஞ்சுட்டு அனுப்பிடலாமா?' என்கிறார். இன்னொருவரோ 'வேண்டாம் ரவிக்கையைக் கிழிச்சிட்டு விட்டுடு' என்கிறார். ஆக மீண்டும் ரவிக்கையற்றளாகிறாள் அந்தப் பெண்.

இந்தச் சிறுகதை 'படித்து உயரத்திற்கு வரும் தலித்துகள் வக்கிரத்துடனே நடந்துகொள்வர்' என்னும் கருத்தைப் பதிப்பதாகத் தலித் எழுத்தாளர்கள் உணர்ந்தனர். அழகியபெரியவன், ஆதவன்தீட்சண்யா, யாழன் ஆதி போன்ற தலித் எழுத்தாளர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். தலித்முரசு இதழ் 'சுந்தரராமசாமியை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றியது.

சாருநிவேதிதா சு.ரா தன் இனவெறியை வெளிப்படுத்திவிட்டார் என்று எழுதினார்.(தீராநதி, மே 2005). அ.மார்க்ஸ் அந்தக் கதையில் காணப்பட்ட பார்ப்பனீய மனோநிலையையும் பிரதிகளில் மலிந்துகாணப்பட்ட தொழில்நுட்பப்பிழைகளையும் சுட்டிக்காட்டினார். (தீராநதி ஜீன் 2005). இத்தகைய மறுவாசிப்புகளோ கட்டவிழ்ப்புகளோ தவிர்க்கமுடியாதவை. இதில் படைப்பாளியை அவமதிக்க ஒன்றுமில்லை. பிரதி என்பது பொதுவெளிக்கு புழக்கத்திற்கு வந்ததன்பிறகு அதுகுறித்தான வெவ்வேறான பார்வைகள் முன்வைக்கப்படுவது என்பது இயல்புதான்.

நிறப்பிரிகைக் குழுவினர், மற்றும் அதைச் சாராத சில எழுத்தாளர்கள், தலித்முரசு போன்ற தலித் இதழ்கள், புதியகலாச்சாரம் இதழ்களில் அவ்வப்போது சு.ரா பிரதிகள் குறித்து வெளிவந்த கட்டுரைகள் ஆகிய எவற்றிற்கும் சு.ரா பொறுப்பான பதில் சொல்லியதுகிடையாது. அதை எதிர்கொள்ளும் மனப்பக்கவமோ அதற்கான பதில்சொல்லும் நேர்மையோ அவரிடம் எப்போதும் காணப்பட்டது கிடையாது.

பிரதிகளுக்கு வெளியே சுந்தரராமசாமி:

சுந்தரராமசாமியின் பிரதிகளில் மட்டும்தான் இத்தகைய பார்ப்பனீய மனோபாவம் செயற்பட்டது என்று சொல்லமுடியாது. சு.ராவே பார்ப்பனீயத்தின் மொத்த உருவமாகத்தானிருந்தார். ஒரு கலைஞன் புதியசிந்தனைகள், கோட்பாடுகள் மற்றும் எழுத்துமுறைகளின் வெளிச்சத்தில் கண்கூசக்கூடாது. ஆனால் சு.ரா புதிய கோட்பாடுகளையும் சிந்தனைமுறைகளையும் எழுத்துமுறைமைகளையும் எவ்வாறு எதிர்கொண்டார்?

1992 பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழாவையட்டி இங்கு தலித் இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைமை உண்டானது. தலித்துகள் தங்களது அனுபம், வாதை, வலி, துயரம், கொண்டாட்டம் ஆகியவற்றைத் தங்கள் எழுத்துக்களில் பதியத்தொடங்கினர். அதுவரை அழகியல் குறித்து நிலவிவந்த பார்வைகள் மறுபரீசீலனை செய்யப்பட்டன. தலித் பிரதிகளின் கதையாடல்கள் மட்டுமல்ல, அவற்றின் மொழியும்கூட முற்றிலும் வேறானதாக இருந்தது.

இலக்கியப் பிதாமகர்களில் ஒருவரான சு.ரா தலித் இலக்கியத்தைச் 'சவடால் இலக்கியம்' என நிராகரித்தார். அது முன்வைத்த எதிர் அழகியலை ஒத்துக்கொள்ளத் தயாராயில்லை. ஏனெனில் அவரது மனசின் ஆழத்தில் தேங்கிப்போனவையெல்லாம் பார்ப்பன அழகியலே. மேலும் சு.ரா மற்றும் அவரது ஜெயமோகன் போன்ற சீடர்களும் முன்வைக்கும் உள்ளளி, தரிசனம் ஆகியவைகளை இரக்கமின்றிப் புதிய கோட்பாடுகள் கேள்விக்குள்ளாக்கின.

அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவம் ஆகியவை முன்வைத்த கட்டவிழ்ப்பு, மறுவாசிப்பு, பிரதி ஆகியவையும் அவருக்கு உவப்பாயில்லை. அனைத்துமே பிரதிகள்தாம். பிரதிகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்டவையே. சு.ராவின் ஒரு கவிதையும் கட்டமைக்கப்படட் பிரதிதான், வைரமுத்துவின் ஒரு திரைப்பாடலும் கட்டமைக்கப்பட்ட பிரதிதான். இதில் சு.ராவின் பிரதி சூப்பர், வைரமுத்துவின் பாடல் மோசம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாப்பிரதிகளுக்கும் பல்வேறு வாசிப்புகள் உண்டு. பல்வேறு பார்வைகளில் கட்டவிழ்ப்பு செய்ய இயலும் என்கிற 'அபாயம்' அவருக்கு உறைத்தபோது அவரிடம் இயலாமையுடன்கூடிய ஆத்திரமே வெளிப்பட்டது.

தீராநதியில் வெளிவந்த கேள்விபதில் ஒன்றில் புதிய கோட்பாடுகளை அறிமுகப்படுத்துபவர்களை 'மேலைக்கோட்பாட்டை வாந்தியடிக்கும் நாய்கள்' என்று திட்டினார். (பிரேமிளிலிருந்து 'கோட்பாட்டு எதிரிகள்' வரை திட்டுவதற்கு சு.ராவிற்கு பிரியமான வார்த்தை 'நாய்'.).

கவிதையில் வழங்கிவந்த இருண்மை, படிமம், குறியீடுகளைக் களைந்து தலித்கவிதைகள் நேரடியான அரசியல்மொழியில் பேசின. நாவல்கள் மற்றும் சிறுகதைகளிலும் சு.ரா நம்பிவந்த எதார்த்தவகை எழுத்துமுறையை நிராகரித்து அ-நேர்கோட்டு எழுத்துமுறை, மாய எதார்த்தவாத எழுத்து ஆகிய எழுத்துமுறைகளை எழுத்தாளர்கள் கையாளத்தொடங்கினர்.

படைப்பாளியின் புனிதத்தில் மற்றவர்களுக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த உயர்சாதி எழுத்தாளர்கள் செயற்கையாக உருவாக்கிவைத்திருந்த மனத்தடைகளை விலக்கி ஏராளமான பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட எழுத்தாளர்கள் எழுதத்தொடங்கினர். ஆனால் ஒருபோதும் சு.ராவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சு.ராவால் சிறந்த தலித் நாவல் எனக்கொண்டாடப்பட்டது இமையத்தின் 'கோவேறுகழுதைகள்' என்பதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். அது புரதைவண்ணார் சாதியினரைப் பிற தலித் சாதியினர் எவ்வாறு ஒடுக்குகின்றனர் என்பதான கதையாடல். ஆகமொத்தம் ' எங்குதான் சாதியில்லை, தீண்டாமையில்லை, ஒடுக்குமுறையில்லை' எனத் தனது பார்ப்பனீய மனோநிலையைச் சமன்செய்துகொள்ளவும், தனது சாதியின் அதிகாரவிருப்பத்தை நியாயப்படுத்தவும் தலித்துகளின் உள்முரண்பாடுகளை பெரிதுபடுத்திக்காட்டுவதன் மூலம் சாதிய எதிர்ப்புக்குரல்களுக்கு ஒரு தடையரண் போடவுமே சு.ரா முயன்றார்,

அவரது பத்திகள் மற்றும் தனிப்பட்ட கட்டுரைகளில் வெளிப்பட்ட அமெரிக்க மோகம் குறித்து புதியகலாச்சாரம் வெளியிட்ட 'சுந்தரராமசாமி: கனவின் ஓடை, நனவின் குட்டை' நூலில் காண்க.

காலச்சுவடு ஒரு இலக்கியத்தினமலர்:

ஆதிக்கக் கருத்தியலும் ஆளும் வர்க்கமும் எப்போதுமே புதிய சிந்தனைகளையும் தங்கள் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் மாற்று இலக்கிய மற்றும் அரசியல் தளங்களையும் செயல்பாடுகளையும் சில தந்திரமான வழிகளில் எதிர்கொள்கிறது.

முதலில் அவற்றை இலக்கியம் அல்லது அரசியலே அல்ல என்பது

பின் அவற்றில் அழகியல் இல்லை, மெய்யியல் இல்லை என்று நிராகரிப்பது,

பிறகு இதையெல்லாம் நாங்கள் எப்போதோ செய்துவிட்டோம் என்று 'ஊத்திமூடுவது'.

இறுதியாக செல்வாக்கு பெற்ற இலக்கிய மற்றும் அரசியல் கோட்பாடுகளை அரவணைத்து வீழ்த்துவது. இப்படியான எல்லாத் தந்திரங்களும் இந்தியாவின் ஆதிக்கக் கருத்தியலான பார்ப்பனீயத்திற்குத் தண்ணீர்பட்ட பாடு.

பெரியார் மொழியில் சொல்வதென்றால் 'சங்கராச்சாரி பஞ்சமனைப் பார்த்தால் குளிப்பார்: சில பார்ப்பனர்கள் தொட்டால் தீட்டு என்பார்கள். சிலசமயம் ராஜாஜி காந்தியின் மகனுக்குப் பென்கொடுப்பார்: பலித்தவரைப் பார்ப்பனீயம்'. இன்னும் புரிகிற மாதிரி சொன்னால், கம்யூனிசம் மனிதகுல, தேசவிரோதத் தத்துவம் என்று பிடிவாதம் பிடிக்கலாம். பிடி தளரும் நிலைவந்தால் வேதத்திலேயே கம்யூனிசக்கூறுகளைக் 'கண்டுபிடிக்கலாம்'.

அப்படித்தான் தலித் இலக்கியத்தைச் 'சவடால் இலக்கியம்' என்று நிராகரித்த சு.ரா பிறகு அவர் மொழிபெயர்த்த 'தோட்டியின் மகன்' நாவல் மூலம் தலித் இலக்கியத்திற்குச் சொந்தம் கொண்டாடினார். (ஒரு வெள்ளாளன் எழுதிப் பார்ப்பான் மொழிபெயர்த்தது தலித் இலக்கியம் என்றால் 'நெஞ்சுபொறுக்குதில்லையே').

காலச்சுவடு ஒரு தலித் அறிவுஜீவி மற்றும் எழுத்தாளரைத் தனது ஆசிரியர்குழுவில் அமர்த்தியது. என்.டி.ராஜ்குமார் போன்ற தலித் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டது. (ஆனால் நான் வாசித்தவரை இன்றளவிலும் காலச்சுவடில் ஒரு தலித் அரசியல் கவிதையும் இடம்பெற்றதாய் நினைவில்லை.) ஆனால் சமயம் கிடைக்கும்போதெல்லாம் காலச்சுவடின் பார்ப்பனப் பயங்கரவாத மூளைத் தன் விஷக்கொடுக்கை நீட்டத் தவறுவதில்லை. அதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியுமென்றாலும் ஒரு சில உதாரணங்கள்.

ஆஸ்திரேலியப் பாதிரியார் ஸ்டெயின்கிரகாம் சங்பரிவார் இந்துத்துவக் குண்டர்களால் கொலை செய்யப்பட்ட நேரம். அவர் பழங்குடிகளை மதமாற்றம் செய்ததால்தான் இந்துக்கள் கோபம்கொண்டு கொலைசெய்தனர் என்று வாதிட்டது பரிவார். அப்போதைய இந்தியப் பிரதமர் பா.ஜ.க வாஜ்பாய் 'மதமாற்றம் குறித்த தேசியவிவாதம் தேவை' என்கிறார். அதேநேரத்தில்தான் காலச்சுவடு ஒக்காங்கோவின் 'சிதைவுகள்' நூலை மொழிபெயர்த்து வெளியிட்டது. சிதைவுகள் நாவலின் கரு 'ஆப்பிரிக்கக் கிராமங்களில் வாழ்ந்த பழங்குடியின மக்களின் பண்பாடுகள், நம்பிக்கைகள், சமயங்கள் ஆகியவற்றை எப்படி காலனியக் கிறித்துவம் சிதைத்தது என்பதே.

மதச்சார்பின்மை குறித்துக் காலச்சுவடு ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது. அதில் வெளியான இரண்டு கட்டுரைகள் இந்துத்துவத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தின. ஒன்று ரவிக்குமார் தர்மாகுமார், சஞ்சய்சுப்பிரமணியம் ஆகியப் பார்ப்பன வரலாற்றாசிரியர்களின் கருத்துக்களை முன்வைத்து மதச்சார்பின்மை குறித்து எழுதிய கட்டுரை. இதில் பார்ப்பனர்களும் பவுத்தர்களாக மாறினர் என்று 'வலிந்து' நிரூபித்தார் ரவிக்குமார். இக்கட்டுரை மற்றும் மேற்குறிப்பிட்ட பார்ப்பன வரலாற்றாசிரியர்களின் வரலாற்றுப்புரட்டுகளை அம்பலப்படுத்தியும் மத்தியகால இந்தியாவில் நிலவிய மதநல்லிணக்கமுயற்சிகள் குறித்தும் எழுத்தாளர்.திரு.வளர்மதி 'நினைக்கத்தெரிந்தமனமே' என்னும் தலைப்பில் கவிதாசரண் இதழில் தொடர்கட்டுரை எழுதினார். ஆனால் வழக்கம்போல கா.சுவிடமிருந்தோ ரவிக்குமாரிடமிருந்தோ பதில் இல்லை. பொய்களை விதைப்பதுதானே முக்கியம்? 'வசனமாடா முக்கியம், படத்தைப் பாருடா' என்றது காலச்சுவடு.

மற்றொரு கட்டுரை 'சிந்தனையாளர்' கண்ணன் இஸ்லாமிய மதவாதம் குறித்து எழுதியக் கட்டுரை. இந்துமதவாதமும் இஸ்லாமிய மதவாதமும் ஒன்றே என வாதிட்ட கண்ணன், இஸ்லாமிய மதவாதத்தை இடதுசஸ்ரீ மற்றும் மதச்சாற்பற்ற அறிவுஜீவிகள் கண்டிக்காதது குறித்துத் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

மேலும் புலம்பெயர்ந்த தமிழர்களால் தொகுக்கப்பட்ட 'சனதருமபோதினி' இதழில் வெளியான கோவைகுண்டுவெடிப்பு மற்றும் முஸ்லீம்களின் மனோநிலை குறித்து ஷாஜகான் என்பவர் எழுதிய கட்டுரையைக் குறிப்பிட்டு 'குண்டுவைக்கும் முஸ்லீம்களுக்கு இவர்கள் ஆதரவானவர்கள்:' என்று எழுதினார். (இந்த கண்ணன் இந்துத்துவ அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிசத்தின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது). பிறகு காலச்சுவடின் இத்தகைய அய்ந்தாம்படை வேலையைக் கண்டித்து நிறப்பிரிகை 'இலக்கியத்தில் இந்துத்துவம்: காலச்சுவடின் ஆள்காட்டி அரசியல்' என்னும் வெளியீட்டைக் கொணர்ந்தது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் குண்டுவெடிப்பையட்டி 'நிறப்பிரிகை என்னும் பத்திரிகை தமிழ்த்தேசிய ஆதரவாளர்களுக்கு ரகசியச்சுற்றிற்கு விடப்படும் பத்திரிகை' என்று தினமலர் எழுதியது. ( இதில் முரண்நகை என்னவென்றால் அப்போதுதான் 'தேசியம் ஒரு கற்பிதம்' என்னும் பெனடிக்ட் ஆண்டர்சனின் கருத்தை முன்வைத்து நிறப்பிரிகை உரையாடலைத் தொடங்கித் தமிழ்த்தேசியர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்திருந்தது.). இதுபோலப் பலரையும் போட்டுக்கொடுப்பதும் காட்டிக்கொடுப்பதும் தினமலரின் குலத்தொழில் மற்றும் குலதர்மம். காலச்சுவடும் இதையே செய்துவருவதால்தான் காலச்சுவடை இலக்கியத்தினமலர் என்கிறோம்.

காஞ்சி ஜெயேந்திரன் கைதையட்டிக் காலச்சுவடு எடுத்த நிலைப்பாட்டை ஆராய்ந்தாலும் அதன் பார்ப்பனீயத்தன்மையைக் கண்டுகொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமானதல்ல. சங்கரன் கைதையட்டி தலையங்கம் தீட்டிய காலச்சுவடு பாரம்பரியம் காப்பாற்றப்படவேண்டும் என்று கவலைகொண்டது. இதை மறுத்துக் கடிதம் எழுதிய எழுத்தாளர் பிரபஞ்சனை 'கிணற்றுக்குள் தன் முகம் பார்த்த சிங்கம்' என்று வர்ணித்தது. (அதற்குமுன்தான் காலச்சுவடின் சென்னைக் கிளையைத் திறந்துவைத்து அதனோடு நெருக்கமாக இருந்தவர் பிரபஞ்சன் என்பது கவனத்திற்குரியது.)

தலித் எழுத்தாளர் ரவிக்குமார் தனது 'தொல்பதிநரகர்' என்னும் கட்டுரையில் ஜெயேந்திரனின் கைது பிற்படுத்தப்பட்டவர்கள் கொண்டாடப்படவேண்டிய விஷயம்தானே தவிர 'தலித்துகள் கூத்தாட அதில் ஒன்றுமில்லை' என்று எழுதி தனது பார்ப்பனப்பக்தியை நிரூபித்தார்.. (இக்கட்டுரையை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையைப் புதியகலாச்சாரம் 'அம்பலப்பட்டது ஜெயேந்திரன் மட்டுமல்ல, தலித்-பார்ப்பனத் தரகு அரசியலும்தான்' என்னும் வெளியீடாகக் கொண்டுவந்தது. அது அப்போதையப் புத்தகக் கண்காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.)

இதற்கெல்லாம் உச்சம் காலச்சுவடு பெரியாரின் 125வது பிறந்தநாளையட்டி வெளியிட்ட பெரியார் 125 சிறப்பிதழ். நீலகண்டன் என்கிற ஆய்வுமாணவர் எழுதிய 'சுயமரியாதை இயக்கமும் பூனா ஒப்பந்தமும்' என்னும் கட்டுரையைத் தவிர மற்ற கட்டுரைகள் அனைத்தும் பெரியாரின் மீதும் அவரின் இயக்கத்தின் மீதும் சேறு வீசியது.

பி.ஏ.கிருஷ்ணன் என்ற டெல்லிப்பார்ப்பனரின் கட்டுரை ஒரு கருப்புச்சட்டைக்காரர் ஒரு சிறுமியிடம் சில்மிஷம் செய்து அடிவாங்குவதாய்த் தொடங்கியது. அதுமட்டுமல்ல, காலச்சுவடு ஆசிரியர் குழுவில் ஒருவரும் தலித் அறிவுஜீவியுமான ரவிக்குமாரின் 'திருமணம் என்கிற கிரிமினல் குற்றம்' என்னும் கட்டுரைதான் வக்கிரத்தின் உச்சமாய் அமைந்தது.

'திருமணம் என்பதைக் கிரிமினல் குற்ரமாக்க வேண்டும்' என்று பெரியார் 60களில் பேசியதைக் குறிப்பிட்டு அவர் 48ல் செய்த திருமணத்தைக் 'கட்டவிழ்த்தார்' ரவிக்குமார். பெரியார் சிறுவயதில் தாசிவீடுகளுக்குப் போனதையும் பெரியார் பின்னாளில் கற்பு உள்ளிட்ட கருத்தாக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கியதையும் ஜெர்மனியில் நிற்வாணச்சங்கத்தில் சேர்ந்து நிர்வாணமாய்ப் புகைப்படம் எடுத்தது, நிர்வாணச் சினிமாக்கள் பார்த்தது ஆகியவற்றிற்கெல்லாம் காலங்களைத் தாண்டி ஒரு முடிச்சு போட்டு பெரியார் ஒரு பொம்பளைப் பொறுக்கி என்று எழுதினார். (காலச்சுவடின் இந்த பார்ப்பனக் கயமையைக் கண்டித்த இடதுசாரி எழுத்தாளர்களில் சிலர் காலச்சுவடில் எழுதுவதைப் புறக்கணிக்க வேண்டுமென தமிழ் எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றினர். மேலும் தோழர்.கணகுறிஞ்சி இப்பிரச்சினையையட்டி 'இந்துத்துவச் சூழலில் பெரியாரின் தேவை' என்னும் கட்டுரைத் தொகுப்பொன்றையும் வெளிக்கொணர்ந்தார்.)

இந்தியச்சூழலில் தோன்றிய சாதி எதிர்ப்பாளர்கள் வள்ளலார் முதல் பாபாசாகேப் அம்பேத்கர் வரை பார்ப்பனீயம் தின்று செரித்தது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை இந்து வரையறைக்குள் கொண்டுவந்து தனது கொடூரமான இந்துத்துவ அரசியல் திட்டத்தை நிறைவேற்றவும் தயங்கவில்லை.

ஆனால் பார்ப்பனீயத்தாலும் இந்துத்துவத்தாலும் ஜீரணிக்கமுடியாத ஒரே அரசியல் ஆளுமை தந்தை பெரியார்தான். 'பார்ப்பான் என்னும் அழகிய தமிழ்ச்சொல்லை வசைச்சொல்லாக மாற்றியது பெரியாரின் மகத்தான சாதனை' என்பார் பேராசிரியர்.தொ.பரமசிவன். 'பெரியார் மட்டுமில்லையென்றால் பார்ப்பான் தமிழனைத் தன் பூணூல் கயிற்றாலேயே தூக்குப்போட்டுத் தெங்கவிட்டிருப்பான்' என்னும் ஒரு கவிஞரின் கூற்று மிகையானதல்ல.

சாகும்வரை பார்ப்பனர்களுக்கு சிம்மசொப்பனமாகவும் கெட்ட சொப்பனமாகவும் வாழ்ந்த அந்த ஈரோட்டக்கிழவனின் மேல் 'பொம்பளைப்பொறுக்கி' என்று சேறை வாரி இறைத்து தனது பார்ப்பன வக்கிரத்தையும் அரிப்பையும் தீர்த்துக்கொண்டது காலச்சுவடு என்னும் இலக்கியத் தினமலர்.

ஈழத்தமிழர்கள், தலித்துகள், முஸ்லீம்கள், தமிழ்த்தேசியர்கள், மய்யநீரோட்ட மார்க்சியர்கள், நக்சல்பாரிப் போராளிகள் என அனைவருக்கும் எதிரானது பார்ப்பனத் தினமலர். அதனுடைய ஒரே அடிப்படை திமிர்கொழுத்த பார்ப்பன நலனன்றி வேறில்லை. ஆனால் இந்தப் பார்ப்பனத்தினமலர் மற்றும் சிறீராம் சிட்ஸ் போன்ற பார்ப்பன நிறுவனங்களோடு காலச்சுவடு மற்றும் உயிர்மை கொண்டிருக்கும் தொடர்பு குறித்து கிஞ்சிற்றும் கேள்வியற்றுத்தான் சுயமரியாதையற்று சில ஈழத்தமிழர்கள், தலித்துகள், முஸ்லீம்கள் காலச்சுவடு, உயிர்மை இதழ்களில் எழுதிக்குவிக்கிறார்கள். புத்தகங்களை வெளிக்கொணர்கிறார்கள். தோழர்.பெரியார் சொல்வார், 'அர்ச்சகன் பொறுக்கித்தின்ன கோவில், அதிகாரம் பொறுக்கித்தின்ன அரசாங்கம், அரசியல்வாதி பொறுக்கித்தின்ன அரசியல்' என்று. அத்தோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். 'இலக்கியவாதிகள் பொறுக்கித்தின்ன இலக்கியம்'.

உலகத்தின் எல்லா ஆதிக்கத்திற்கெதிராகவும் எதிர்ப்புக்குரல் எழுப்பித் தங்கள் தார்மீக அறத்தை நிறுவும் காலச்சுவடு, உயிர்மை இலக்கியக்கம்பெனிகளுக்குத் தினமலர் தமிழ்ப்பொதுப்புத்தியில் திணிக்கும் பார்ப்பனக் கருதியல் குறித்துக் கேள்வியெழுப்பவதற்கு மட்டும் கேள்விகள் ஏதுமில்லை.

ஓராண்டிற்கு முன்பு என்று நினைக்கிறேன். சன்டிவியின் ஏகபோக ஆதிக்கம் குறித்துக் கட்டுரை எழுதித்தள்ளினார் கண்ணன். (அதேபோல உயிர்மையில் சாருநிவேதிதா). இதையும் தினமலரோடு இருபத்திரிகைகளுக்குமுள்ள உறவு மற்றும் கனிமொழியுடனான நெருக்கம் ஆகியவற்றை இணைத்துப் பார்த்தால் சில அரசியல் முடிச்சுகள் அவிழும். ஞாநி ஆனந்தவிகடனில் 'அதிமுகவில் சசிகலாவைப் போல திமுகவில் கனிமொழி' என்று எழுதியபோது கொதித்துப்போய்க் கட்டுரை வரைந்த கண்ணனின் மௌனம் கனிமொழி எம்.பி ஆனபிறகு சிறகடித்துப்பறக்கவில்லை. கொஞ்சமும் கூச்சமில்லாமல் மனுஷ்யபுத்திரனோ 'திமுகவில் நடக்கும் வாரிசு அரசியலால் கனிமொழி போன்ற படித்த பண்பானவர்கள் அரசியலுக்கு வருவது சாதகமானது' என்று எழுதுகிறார். மூன்றுபிணங்களின் மேல் ஏறிவரும் படித்த பண்பானவரின் அரசியல் பின்னணியில் வீசுவது கருவறை வாசனை இல்லை ஹமீது, பிணங்களின் வாசனை.



ஜெயமோகன் முதல் ஹியூபர்ட் சதீஷ் வரை:

எனது 'சுந்தரராமசாமி : உதிர்ந்த இலையும் குவிந்த குப்பையும்' பதிவில் சு.ராவின் படைப்புகள் குறித்து நான் எதுவும் விமர்சிக்கவில்லை. மாறாக அவரைப் புனிதத்திரு உரு(வீநீஷீஸீ) வாக்கும் முயற்சிகளையே விமர்சித்திருந்தேன். ஏனெனில் சு.ரா இறந்தபிறகு காலச்சுவடு மற்றும் உயிர்மையில் வந்திருந்த சு.ரா குறித்த கட்டுரைகளைத் தொகுத்துப்பாருங்கள்.

ஜெயமோகனின் கட்டுரையைத் தவிர மற்றனைத்தும் சு.ராவின் தனிப்பட்ட வாழ்க்கை நடவடிக்கைகள், மற்றும் அவருடனான உறவு ஆகியவை குறித்துப் பேசுபவையே ஜெயமோகனின் கட்டுரையும் சு.ராவின் படைப்பாளுமை குறித்துப் பேசும் பாவனையில் தானே உருவாக்கிக்கொண்ட இடைவெளியில் தனது பீடத்தை கட்டமைத்து நுழைத்துக்கொண்ட எத்தனமே.

நாகார்ஜீனன், தமிழவன் முதல் தமிழின் முக்கியமான அறிவுஜீவிகளின் உழைப்பெல்லாம் இந்த படைப்பாளிப் புனிதத்தை உடைப்பதிலும் பிரதிகளில் செயற்படும் அரசியல் மற்றும் உளவியலைக் கேள்விக்குள்ளாகுவதற்காக செலவழிக்கப்பட்டது. ஆனால் அத்தகைய காத்திரமான கோட்பாட்டுச் செயற்பாடுகள் கடந்த பத்தாண்டுகளில் பலவீனமாகியிருக்கின்றன.

இப்போது தமிழ் இலக்கியச்சூழலில் முதுகுசொறிதலும் புனிதத்திரு உருக்களை நிறுவ முயல்வதற்குச் செங்கல் எடுத்துக்கொடுக்கும் கரசேவையும்தான் நடைபெறுகிறது. ஒரு இலக்கியவாதி, தான் பேசும் உலக இலக்கியம் மற்றும் உலக சினிமாவிற்கு மாறாக ஏதேனும் குப்பைச் சினிமாவுக்குக் கூட வசனம் எழுதலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. பிற எழுத்தாளர்கள் நல்லிகுப்புசாமி, (30களில் சாதிப்பெயரைத் துரத்தி அடித்து சாதியைத் தன் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்வதே அவமானகரமானது என்னும் நிலைக்குக் கொண்டுவந்த பெரியார் என்னும் கலகக்காரன் வாழ்ந்த பூமியில் கலகக்கார எழுத்தாளர்கள், தன் சாதிப்பெயரைக் கூட உதறுவதற்குத் தயாராயில்லாத ஒரு ஜவுளிக்கடை முதலாளியின் தலைமயில் நூல்வெளியீட்டு விழா நடத்த நேர்ந்தது ஒரு ராசலீலையே.) கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் போன்ற தமிழ்நாட்டு காண்ட், பூக்கோக்களோடுடனான சினேகிதத்தை வளர்த்துக்கொள்வதிலும் வருடத்திற்கொருமுறை காலச்சுவடு ஸ்டாலில் எழுத்தாளர் கண்காட்சியில் எழுந்தருளி சிறுபத்திரிகை வாசகர்கள் என்னும் சுயமரியாதையற்ற மந்தைகளுக்கு ஆட்டோகிராப் போட்டு அருள்பாலிப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

அர்ப்பணிப்பும் தேடலுமுடைய சிறுபத்திரிகை மரபின் சிறுதன்மையைக் குலைத்து அதன்மேல் பிரம்மாண்டங்களையும் மாயக்கவர்ச்சியையும் எழுப்பி எல்லாவற்றையும் லாபநட்டக் கணக்காக மாற்றியதில் சுந்தரராமசாமிக்கும் காலச்சுவடிற்கும் பெரும்பங்கு இருக்கிறது..

எனது சுந்தரராமசாமி குறித்த முந்தையப் பதிவைப் படித்துக் கோபமுற்ற நெருக்கமான நண்பர்களில் ஒருவர் 'சுந்தரராமசாமி எத்தனை எழுத்தாளர்களை அரவணைத்திருக்கிறார், ஊக்கப்படுத்தியிருக்கிறார், வீட்டில் சாப்பாடு போட்டிருக்கிறார். அத்தகைய நல்ல மனிதரின் நற்குணங்களை எழுத்தாளர்கள் எழுதுவதில் என்ன தவறு? இந்த நல்ல குணம்தானே படைப்பாளிக்குத் தேவை' என்று வினவினார்.

'எம்.ஜி.ஆர் இடதுகைக்குத் தெரியாமல் வலதுகையால் தானம் செய்யும் வள்ளல், கொடுத்துச் சிவந்த கரங்கள் அவருடையவை' என்று கூறும் அவரது விசுவாசிகள் கூடத்தான் தமிழ்நாடு முழுக்க விரவியிருக்கிறார்கள். ஏன் ஒருவன் கொடுக்கும் நிலைமையில் இருக்கிறான், இன்னொருவன் வாங்கும் நிலைமையில் இருக்கிறான் என்னும் உணர்வற்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீடுதான் அது.

வர்க்கச்சுரண்டல் என்றால் என்ன என்பதே தெரியாத சுந்தரராமசாமியின் ஜவுளிக்கடை ஊழியர்கள் வேண்டுமானால், 'முதலாளி வருசாவருசம் போனஸ்ல்லாம் தருவாரு, எங்கமுதலாளி, தங்கமுதலாளி' என்று கொண்டாடலாம்.. எழுத்தாளர்கள் சுந்தரராமசாமியின் ஜவுளிக்கடை ஊழியர்களா, என்ன?

வா


மார்க்ஸ், அ.மார்க்ஸ்
கட்டவிழ்ப்பு, கோணங்கி
தெறிதா, பின்நவீனத்துவம்
தேசிய இனம், பெரியார்
என் வாசிப்புகளின் முடிச்சவிழ்ந்து
உன் கழுத்தில் சுருக்கிற்று.
அதிகாரமறுப்புப் பேசும்
என்னெதிரிலமர்ந்திருக்கும் உன்கண்களில்
நிழலாடுகிறது
என் சிரசில் முளைத்தகொம்புகள்.
விபத்தாய்க் கற்பிழந்த பெண்
வாழ்க்கையில் சோரம்போனதாய்
வசனம் பேசும் ஏதேனும்
அபத்தமான சினிமா போவோம் வா.