பெரியாரை அறிய இன்னுமொருவாய்ப்பு



பெரியார் குறித்து மாற்றுக்கருத்துக்களையும் மாற்று அரசியல் தளங்களையும் அறிய விரும்புவோர், பெரியார்திராவிடர்கழகத்தோழர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள கீழ்க்கண்ட தளத்தைப் பார்வையிடலாம்.

www.dravidar.org

கோவை சந்திப்பு - நெருடலும் நெகிழ்வும்





கோவை வலைப்பதிவாளர் சந்திப்பிற்குச் செல்லவேண்டுமென்று பெரிதாக ஆர்வமில்லை. என்றாலும் கோவையில் விரவிக்கிடக்கும் நண்பர்குழாமைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் உறுத்திக்கொண்டேயிருந்தது. சனி இரவே 9.00 மணியளவில் கோவையில் கால்பதித்தாகிவிட்டது.

அடுத்தநாள் ஞாயிறு. வலைப்பதிவாளர் சந்திப்பிற்குப் போய்த்தான் பார்ப்போமே என்று 12.00 மணியளவில் நுழைந்தேன். நான் போன நேரமோ என்னவோ நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்.ரமணி பின்நவீனத்துவம் பற்றிக் கட்டுரை வாசித்துக்கொண்டிருந்தார்.

ரமணியின் கட்டுரையினூடே தோழர்கள் ராஜ்வனஜ், மோகன் தாஸ், மா.சிவகுமார் மற்றும் நான் ஆகியோர் குறுக்கிட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் எந்தக் கேள்விக்கும் முறையாகப் பதில் சொல்லாத பேராசிரியர், "நான் பிரச்சினைகளைப் பற்றியோ தீர்வுகளைப் பற்றியோ பேசவரவில்லை" என்று நழுவிக்கொண்டார்.

யாரையும் 'தீர்வுகள் சொல்லித்தானாக வேண்டும்' என்று கழுத்திலே கத்தி வைக்கமுடியாதுதான். ஆனால் பிரச்சைனை என்னவென்றால் ரமணியின் கட்டுரைகள் பெரும்பாலும் தவறான கருத்துக்களே நிரம்பியிருந்தன. அவற்றை ரமணி தன்னுடைய சொந்தக் கருத்துக்களாக முன்வைத்திருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் அவற்றைப் பின்நவீனத்தின் பேரால் முன்வைப்பதுதான் ஆபத்தானது.

மேலும் ரமணி முன்வைத்த பலகருத்துக்கள் பின்நவீனம் பேசும் விசயங்களுக்கே முற்றிலும் மாறானவை. அவர் கட்டுரையை முடித்ததும் தோழர் ராஜ்வனஜ் "பின்நவீனத்துவம் என்றால் கழிசடைத்தனம் என்று புரிந்துகொண்டேன்" என்றார். அவரது நக்சல்பாரி அரசியல் ஆதரவும் மார்க்சியத் தீவிரச்சாய்வும் அவரை அப்படிச் சொல்லவைத்திருக்கலாம். ஆனால் ரமணியின் மோசமான கட்டுரையும் அதற்கு ஒரு காரணமெனலாம். ரமணி தன் கட்டுரையில் முன்வைத்த கருத்துக்களில் சிலவற்றைத் தொகுத்துக்கொள்ளலாம்.

* மய்யம் என்ற ஒன்று கிடையாது. மய்யங்கள் தகர்ந்துவிட்டன.

* முதலாளியம், ஏகாதிபத்தியம் ஆகிய ஆதிக்க நடைமுறைகள் நடப்பில் இல்லை.

* பொருளாதார ஆதிக்கம் என ஒன்றுமில்லை. நுகர்வியம் மட்டுமே இருக்கிறது. அதுவும் சுயேச்சையானது.

* பொருளாதார ஆதிக்கம் உட்பட எல்லா ஆதிக்கங்களும் தேர்வுகளுக்கு உட்பட்டதே. அவற்றை எப்போது வேண்டுமானாலும் மக்கள் (நுகர்வோர்கள்) மறுக்கலாம். துப்பாக்கி முனையில் இவற்றின் ஆதிக்கம் நிலைநாட்டப்படவில்லை என்பதால் அது விருப்பத்தேர்வின்பாற்பட்டதே.

* பின்நவீனத்துவம் மத அடிப்படைவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. உதாரணமாக சல்மான் ருஷ்டி, தஸ்லிமாநஸ்ரீன் ஆகியோரின் பிரதிகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் தூண்டிவிட்டிருக்கின்றன. இதற்குப் பின்நவீனத்துவம்தான் காரணம்.

மேற்கண்ட கருத்துக்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதை மேலோட்டமான கவனிப்பிலேயே ஒருவர் உய்த்தறிய முடியும். இவை பின்நவீனத்துவத்தின் பேரால் முன்வைக்கப்பட்டதுதான் வேடிக்கையானது.

மய்யம் என்கிற ஒன்றே இல்லையெனில் விளிம்புநிலை அரசியல், சபல்டர்ன் இலக்கியம், வித்தியாசங்களின் அரசியல்/மிச்சங்களின் அரசியல் இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம்? இவற்றை ஏன் பின்நவீனம் பேசவேண்டும்?

மய்யநாடுகள், விளிம்புநிலைநாடுகள் என்னும் வரையறுப்புகள் எதற்காக? நுகர்வியம் பிம்பங்களின் மூலம் கட்டமைக்கும் மனோநிலையை ழான்போத்ரியா ஏன் மறுகிமறுகிப் பேசியிருக்க வேண்டும்?

தூலமான வன்முறை மட்டுமே வன்முறையல்ல. கட்புலனாகாத வன்முறை மற்றும் அரூபவன்முறையும் ஆதிக்கக் கருத்தியலை நடைமுறைப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. அதுவும் இந்தியா என்னும் சாதிய நிலப்பரப்பில் சாதிய வன்முறையே அரூவ வன்முறையாகத்தானே தனது கருத்தியல் சாதிய அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மேலும் அரசு தேவைப்பட்டால் துப்பாக்கிக்குழலின் மூலம் அதிகாரத்தைத் திணிக்கும் என்பதற்கு தாமிரபரணி, குண்டாய் தொழிற்சாலை முதல் சமீபத்திய நந்திகிராமம், சிங்கூர் வரை சாட்சி.

மத நம்பிக்கைகளுக்கு எதிராய்க் கேள்விகேட்டால் கடுமையான ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுவதென்பது கலிலியோ, கோபர்நிக்கஸ் காலத்தினின்று தொடர்வது. ஏன், இன்னும் சொல்லப்போனால் இரண்யன் காலத்திலினின்றே தொடர்வது. அதற்கும் பின்நவீனத்திற்கும் என்ன தொடர்பு?

ரமணி கட்டுரையை முடித்தவுடனே, "நீங்கள் தவறான தகவலையே சொல்லியிருக்கிறீர்கள்" என்றேன். விரிவான எதிர்வினையை நிகழ்த்துவதற்கு முன்பு தோழர்.செந்தழல்ரவி ஒரு பரிசுப்பொருளை ரமணியின் கையில் நீட்டினார்.

என்னிடம் கொடுத்துதான் ரமணியிடம் கொடுக்கச்சொல்கிறார் என்று நான் நினைத்தேன். ரமணியும் அப்படியே நினைத்து வாங்கிவைத்துக்கொண்டார்.ஆனால் அதன்பிறகுதான் தெரிந்தது, ரமணியின் மூலம் எனக்குத்தான் அந்தப் பரிசை அளித்திருக்கிறார் என்று. கிட்டத்தட்ட ரமணியிடமிருந்து பிடுங்கி அந்த பரிசுப்பொருளை எனக்களித்தார் ரவி.

அது ஒரு பழமையான மரத்தால் செய்யப்பட்ட சிலை. ஒரு வித்தியாசமான மனித முகத்தைத் தாங்கியது. மொத்தத்தில் ரவியோடு நான் பேசிப்பழகிய மணிநேரங்களே குறைவாகத்தானிருக்கும். ஆனால் ரவி என்னிடம் காட்டும் அன்பு அளவிடமுடியாதது. ஒவ்வொரு சந்திப்பின்போதும் அவர் ஏதேனும் எனக்காகப் பரிசுப்பொருள் வாங்கிவந்துவிடுகிறார். இத்தகைய பேரன்பு கொண்ட பிரியத்துக்குரிய நண்பனுக்கு என்ன கைமாறு செய்ய முடியும், இன்னும் அதிகம் பெண்நண்பர்களை ரவி பெறவேண்டுமென்று வாழ்த்துவதைத்தவிர.

அதற்குள் உணவு இடைவேளை நெருங்கிவிட்டது. நண்பர்கள் மதிய உணவுக்காக சிந்தாமணி சிக்கனைச் சமைத்துவைத்திருந்தார்கள். அதற்காக ஜூட் விட்டேன். (சிந்தாமணிசிக்கன் என்பது கோழிக்கறியோடு வறமிளகாய் எனப்படும் சிவப்புமிளகாயைச் சேர்த்து செய்யப்படும் சமையல். அது ஒரு வித்தியாசமான சுவையாக இருக்கிறது. யாரேனும் கோவையில் நண்பர்கள் வீட்டிற்குச்சென்றால் அவசியம் சிந்தாமணி சிக்கன் சாப்பிட்டு மகிழுங்கள்)

இன்னும்சில :

* தோழர்.பாலபாரதி வழக்கத்திற்கு மாறாக அமைதி காத்திருந்தார். ஆனால் பத்திரிகையாளர்கள் வந்தபோது மட்டும் அதிகம் பேசினார்.

* தோழர்கள் லிவிங்ஸ்மைல் வித்யா, மோகன் தாஸ், வாத்தியார் சுப்பய்யா, பாமரன் மற்றும் அவரது நண்பர்கள், டெல்லி நண்பர் சென்ஷி ஆகியோரேடு சிறிதுநேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

* நிகழ்வை ஏற்பாடு செய்த செல்லா உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்ததால் வரவில்லை.

* வித்யா போன்ற விளிம்புநிலையினர் மய்யநீரோட்ட ஊடகங்களில் பங்குபெறுவதும் தங்களைப் பதிவுசெய்வதும் அவசியமானது. ஆனால் பொதுவாக எல்லா வலைப்பதிவாளர்களும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தி மய்யநீரோட்ட ஊடகங்களை நோக்கி நகர்வது, அவற்றில் தங்கள் பெயர், புகைப்படம் இடம்பெறவேண்டுமென்று சிறுபிள்ளைத்தனமாக ஆசைப்படுவது வருத்தமளிக்கிறது. இது வலைப்பதிவெழுத்தின் சிறுதன்மை மற்றும் சுயேச்சைத்தன்மையைக் குலைத்துவிடும். சிறுபத்திரிகை இலக்கிய 'ஜாம்பவான்கள்' வெகுஜன ஊடகத்திற்கு நகர்ந்தபிறகு என்ன நடந்ததோ அதுவே நடக்கும். எனவே வலைப்பதிவாளர் சந்திபை ஏற்பாடு செய்யும் நண்பர்கள் இதைச் சிந்தித்தால் நல்லது என்று தோன்றுகிறது. மேலும் ஊடக ஆட்கள் சூழ நடைபெறும் சந்திப்பு என்பது ஒரு அன்னியோன்னியத்தன்மையற்றதாகவும் ஊடகத்திற்கான செயற்கைத்தன்மை கொண்டதாகவும் கூட்டத்தில் உரத்தகுரலெழுப்பிக் கவனமேற்படுத்தும் அதிகாரநிகழ்வாகவும் முடியும் வாய்ப்புமுண்டு.

* சென்னை வெயிலால் வாடுபவர்களுக்குக் கோவையின் தட்பவெட்பம் இதம்.

* வழக்கமான வலைப்பதிவாளர் சந்திப்புகளில் இருக்கும் மொக்கைத்தனம் கோவைச்சந்திப்பில் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

* நான் சந்திப்பில் இருந்ததே அதிகபட்சம் ஒருமணிநேரம்தானிருக்கும். எனவே இது 'முழுமையான பார்வை'யில்லை.

சாவின் வாரம்

இந்தவாரம் சாவுச்செய்திகளைச் சுமந்துவந்தது. சென்னையில் தொடங்கிய மரணத்தின் வாசனை கோவைக்குளிர்காற்றிலும் தொடர்ந்தது.

சென்றாவாரத்தின் துவக்கத்தில் முதலில் வந்தடைந்தது தோழர்.கலியபெருமாளின் மரணச்செய்தி. புலவர் கலியபெருமாள் என அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட கலியபெருமாள் நக்சல்பாரி அரசியலுக்காகவும் அழித்தொழிப்பிற்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். இறுதியில் அவர் தமிழ்த்தேசிய அரசியல் எனத் தடம் மாறினாலும் மார்க்சியத்தின்மீது அடங்காத காதல் கொண்டிருந்தார். புரட்சிகரச்சிந்தனை கொண்ட பல இளைஞர்களுக்கு ஆதர்சமாய் விளங்கினார். அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிர்ப்பந்தத்தைக் காலம் வழங்கிவிட்டது.

வெள்ளி மதியம் சென்னையிலிருந்து திண்டுக்கல் கிளம்பும் வழியில் ஒரு நண்பர் தொலைபேசி மூலம் நகுலன் இறந்த செய்தியைச் சொன்னார். மனம் கனத்தது. சுந்தரராமசாமி போன்ற அரைவேக்காடுகளுக்குக் கிடைத்த மதிப்பு நகுலனுக்குக் கிடைக்கவில்லை. தப்புத்தப்பாய்த் தமிழ் எழுதி அதையே 'புதுஎழுத்து' என்று கொண்டாடப்படக்கூடிய அளவிற்கு மௌனி உயர்ந்ததற்குக் காரணம் அவர் பார்ப்பனராய் இருந்ததாலேயே. ஆனால் பார்ப்பானாய்ப் பிறந்தும் தனக்கான அங்கீகாரம் இல்லாமல் வாழ்ந்தவர் நகுலன். நனவின் தடங்களை அழித்து கடைசிக்காலத்தில் மறதியிலேயே பயணித்து ஒரு சிறுபிள்ளையாய் வாழ்ந்தவர். தமிழ் நகுலனை இழந்துவிட்டது.

நேற்று கோவையில் இருந்தபோது ஒரு நண்பரின் குறுஞ்செய்தி இன்னொரு மரணத்தை அறிவித்தது. பெரியாரியக்கங்கள் உட்பட அனைத்து இயக்கங்களிலும் பெண்கள் அமைப்புகள் கட்சிகளின் தொங்குசதையாகவே இயங்க, தனித்துவமிக்க பெண்கள் அமைப்பைக் கட்டிப் பணியாற்றியவர் தோழர்.ஓவியா. தனது 'தமிழின மகளிர் விடுதலை இயக்கம்' மற்றும் 'புதியகுரல்' இதழின் மூலம் பெண்ணியக் குரல்களை ஒலித்தவர். குறிப்பாகக் கலாச்சாரத்தளத்தில் பெண்விடுதலையைப் பேசியவர் அவர். அவரோடு வாழ்க்கையில் இணைந்து துணைநின்றவர் தோழர்.ஏ.பி. வள்ளிநாயகம். 'இந்துத்துவத்தின் வேரறுக்கும் உயிராயுதம்' என்று பெரியார் பற்றியும் மேலும் 'மானுடத்தின் அழகானவர்கள் தீண்டத்தகாதவர்கள்', 'குடிசையில்தான் மானுடம் வாழ்கிறது' என்பது போன்ற பலநூல்களை எழுதியவர். பெரியாரியம், அம்பேத்கரியம், பெண்ணியம், பவுத்தம் ஆகியவற்றைத் தனது அரசியல்நெறிகளாக ஏற்றுவாழ்ந்தவர். தலித்முரசு இதழில் தொடர்ச்சியாக பெரியார் தலித்துகளுக்குச் செய்த பணிகள், பவுத்தத்திற்கும் அம்பேத்கருக்குமான தொடர்பு, தலித் இயக்க முன்னோடிகள் ஆகியவைகள் குறித்து தொடர்ந்து எழுதிவந்தார். தொடர்ச்சியான புகைபிடிக்கும் பழக்கத்தாலோ என்னவோ அய்ம்பது வயதிற்குள்ளாகவே நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு நேற்று மரணமடைந்துவிட்டார். மாற்று அரசியல் தளம் தன் உறுப்புகளில் ஒன்றைத் துறந்துவிட்டது.

சொற்களின் தாய்

அவளுக்கும் எனக்குமிடையில்
இடைவெளி இருக்கிறதென்பது உண்மைதான்.
அவ்விடைவெளியெங்கும் ததும்பி வழிகிறது
அன்பின் வெம்மையும்
தாய்மையின் கதகதப்பும்.
வேறுசில வார்த்தைகளினூடே
பிரதி பயணிக்கிறது.
காலடியோசைகள் இப்போது நின்றுவிட்டன.
நாடோடிப்பாடல்கள் தேய்ந்துமறையும்
தீவினின்று
சிறுபறவைகளை அழைத்துவந்தவள் அவள்.
இசைக்குறிப்புகளின் அடிக்குறிப்புகளிலேயே
மிருகங்களைப் பழக்கும் வித்தையறிந்தவள்.
பாம்பின் தடங்களைப் பின் தொடர்ந்தால்
அவளின் கண்ணீர்த்தடங்களை நீங்கள்
வாசித்தறியக்கூடும்.
முன்னையப்பழமையில்
பூமியோடு பெயர்த்தெடுத்து
நாடுகடத்தப்பட்டவளின்
புகலிடத்தேசத்திலினின்று வந்ததாய்ச் சொன்னாள்.
பரந்துவிரிந்தாலும்
பூமி
காலுக்கடியில்தான் கிடக்கிறது
என்பதைத்தாண்டியும்
என்ன சொல்ல ஏலும்?

எனக்கான தமிழ்மரபு



அன்பே யென்னன்பேயென் றன்பாலமுதரற்றி
அன்பேயன்பாக அறிவழியும் - அன்பன்றித்
தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்.
- திருக்களிற்றுப்படியார்

எப்போதுமே மரபுகள் பற்றிப் பேசுவது சிக்கலானவொன்றுதான். ஒரு தூயகனவாக, லட்சியமாக, கோட்பாடாகத் தொடங்கிப் பின் நிறுவனங்களாகவும் வழிபாடாகவும் சடங்காகவும் மாறி மரபு என்பது சுமையாக அழுத்துகிறது அல்லது அதிகாரமாகத் துருத்துகிறது. எனவே மரபு என்பதை ஆராயப்புகுமுன் அதுகுறித்த விழிப்புமனோநிலை என்பது அவசியமான முன்நிபந்தனையாகிறது.

மனிதத்தன்னிலைகளைக் கட்டமைக்கும் அடையாளங்கள் பன்மைத்தன்மை வாய்ந்தவை. ஆனால் இந்த பன்மைத்தன்மையை கட்டுக்குள் சுருக்கி ஒற்றை அடையாளத்தை வலியுறுத்துபவையாகவே கோட்பாடுகளும் அரசியலும் கட்டப்படுகின்றன. இவையைத் தாண்டி பன்மையின் அவசியமென்பது மண் தாண்டி முளைக்கும் விதை போல் வெளிவந்துதான்விடுகின்றன.

சாதி, மதம், பால், மொழி, தேசியம், வர்க்கம் ஆகிய அடையாளங்கள் இந்தியச்சூழலில் மனித அடையாளங்களாய் விளங்குகின்றன. இவற்றில் சாதி, பால், மொழி ஆகியவை பிறப்பினடியில் வந்தமைவதாய் இருக்கின்றன. வர்க்க மற்றும் மத அடையாளங்கள் மாறுவதாயும் மாற்றிக்கொள்வதாயுமிருக்கின்றன. பால் அடையாளமும் மாற்றிக்கொள்ளக்கூடியதாகவும் மாற்றக்கூடியவர்கள் கணிசமாகவும் இருந்தபோதும் அவையனைத்தும் உடலியல் ரீதியான மாற்றங்களின் பாற்பட்டு விளைகின்றனவே தவிர பாலடையாளங்களை மாற்றிக்கொண்டேயாகவேண்டும் என்னும் நோக்கம் மற்றும் முன் தீர்மானங்களின் அடிப்படையில் அமைவதில்லை.

சாதியும் மொழியும் பிறப்பினடைப்படையில் வந்ததைப்போலவே அவை இயல்பாக அதிகாரத்தை உற்பத்தி செய்பவையாகவும் அமைகின்றன. அதிலும் மொழி என்பது சாதிய, வர்க்க மற்றும் பால் அதிகாரங்களை உற்பத்தி செய்யும் நுண் அதிகாரக்களனாக அமைகிறது.

நமது நினைவுகளும் நிகழ்வுகளும் மொழியின் வழியாகவும் மொழியினடியாய் உருவாகும் படிமங்களின் (குறியீடுகளின்) விளைவாலும் உருவாகின்றன. எனவே மொழி என்பது அதிகாரத்தைக் கட்டமைக்கும் துல்லியமான கருவியாகத் தொழிற்படுகிறது. மொழியை அடிப்படையாகக் கொண்ட பிரதிகளும் அவ்வாறே. அல்லது அத்தகைய பிரதிகள் மட்டுமே 'காலத்தைக் கடந்து நிற்கின்றன'. இது தொகுப்பு மற்றும் தேர்ந்தெடுப்பின் அரசியல். எனவேதான் பெரியார் ஈ.வெ.ராமசாமி 'நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி' என்றார்.

மொழி மற்றும் பண்டைய இலக்கியப்பிரதிகள், பண்டிதப்புலவர்கள் மீதான பெரியாரின் கோபம் என்பது நியாயமானதே. ஆனால் இவ்விடத்து தமிழில் நிலவிவந்த மாற்றுமரபுகள் குறித்து ஆழமான அறிவும் அதை முன்னிறுத்துவதில் முனைப்பும் கொண்ட மயிலை.சீனிவேங்கடசாமிநாட்டார், சாத்தான்குளம்ராகவன் ஆகியோரை பெரியாரும் அவர்தம் இயக்கமும் பயன்படுத்தாமல் விட்டது குறித்த பொ.வேல்சாமியின் விமர்சனங்களையும் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

மொழி என்பது அதிகாரத்தைக் கட்டமைக்கிற பிரதிகளை உற்பத்தி செய்வதைப்போலவே அதிகாரத்தைக் கட்டவிழ்க்கிற/ தகர்க்கிற பிரதிகளையும் உற்பத்தி செய்கிறது. அதிகாரம் மொழியைப் பயன்படுத்துவதைப் போலவே அதிகாரத்தை எதிர்ப்பதற்கும் அதற்கான மாற்றுக் கதையாடல்களை உருவாக்குவதற்கும் நாமும் மொழியையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

மேலும் அதிகாரம் தோன்றும்போதே அதிகாரத்திற்கான எதிர்ப்பு என்பதும் தோன்றிவிடுகிறது. பார்ப்பனீயம், சாதியம், வர்ணதருமம் தோன்றியபோதே அதற்கு எதிரான மரபும் தோன்றிவிட்டது. சனாதனம் மட்டுமே இந்திய மரபல்ல. சாங்கியம், நியாயம், வைசேசிகம், யோகம், மீமாம்சம், லோகாயுதம், ஆசீர்வகம் எனப் பல்வேறு எதிர்மரபுகள் இந்தியச்சூழலில் கிளைத்துப் பரவியிருந்தன. அதிலும் குறிப்பாக ஆசீர்வகமரபு என்பது தமிழ்மனங்களை மிகவும் தாக்கத்திற்குள்ளாகிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றின் பரிணாம வளர்ச்சியில் கிளைத்த பவுத்தமும் சமணமும் இந்தியாவெங்கும் செல்வாக்கு செலுத்தியபோதும் தமிழ்ச்சூழலில் அதற்குக் கிடைத்த ஆதரவே அலாதியானது. தமிழின் அய்ம்பெரும் காப்பியங்கள் அனைத்தும் பவுத்தம் மற்றும் சமணத்தைச் சேர்ந்தவை. அதுபோல அறநூல்கள் என தமிழில் எஞ்சியிருப்பவை அனைத்தும் இவ்விரு அவைதீக மார்க்கங்களைச் சேர்ந்தவையே. பக்தி இலக்கியமும் சனாதனப் பார்ப்பனீயமும் இங்கு எந்தவொரு அறத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (ஆனால் காலாகாலத்திற்குமான எல்லோருக்குமான பாரபட்சமற்ற பொது அறம், பொது ஒழுக்கம் என்ற ஒன்றுகிடையாது என்பதையும் கவனத்திற்நிறுத்துக. இதன்பொருள் அவைதீக மரபுகளின் அறங்கள் குறைகளே அற்றவை என்பதல்ல. மாறாக அவ்வக்காலத்தின் சூழல் மற்றும் தேவையின் விளைவாய் விளைந்தவை என்பதே)

இத்தகைய பவுத்த மற்றும் சமண மரபுகளை இந்துப்பார்ப்பனீயம் விழுங்கிச் செரித்துவிட்டதெனினும் எதிர்மரபு மற்றும் அவைதீக மரபு என்பது முற்றிலுமாக ஓய்ந்துபோகவில்லை. அத்தகைய எதிர்மரபின் விளைவாகவே 'பறைச்சி ஆவதேதடா, பனத்தி ஆவதேதடா, இறைச்சி எலும்பிலும் இலக்கம் இட்டிருக்குமோ?' எனக்கேள்வி கேட்ட சித்தர் மரபு இருந்தது.

அன்பையும் சமத்துவத்தையும் வலியுறுத்திய நாராயணகுரு, வள்ளலார் என அம்மரபின் வெம்மை அணையாமல் காக்கப்பட்டே வந்திருக்கிறது. இம்மரபின் காத்திரமாக கடைசிக்கண்ணியாய் விளங்கியவர்தான் தோழர்.பெரியார். அதேபோல் பவுத்த அறநெறிகளையும் நவீனக் கருத்தாக்கங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றையும் இணைத்து அடிமைத்தன்னிலைகளைத் தகர்ப்பதற்கான கனவுகண்டவர் பாபாசாகேப் அம்பேத்கர்.

இத்தகைய செழுமையான எதிர்மரபின் ஊடேயே நாம் பயணிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் இந்த மரபின் தோல்விகளையும் சரிவுகளையும் சமரசங்களையும் விட்டுக்கொடுப்புகளையும் நடைமுறைக்குழப்பங்களையும் கணக்கிலெடுத்தே ஆகவேண்டும். எல்லா மரபுகளுமே ஒருகட்டத்தில் சடங்குகளாகவும் நிறுவனங்களாகவும் மாறி நீர்த்துப்போவதென்பது இயல்பே. இது மரபை எதிர்ப்பவர்களுக்கும் மறுப்பவர்களுக்கும் கூட பொருந்தும். கூடியவரை அதிகாரநீக்கம் செய்தே இம்மரபை நாம் கைக்கொள்ள வேண்டும்.

உலகின் பசியையும் கண்ணீரையும் துக்கத்தையும் நினைத்து ஆற்றாது கண்ணீர்விட்டு அதற்கான தீர்வுகள் குறித்து முனைப்புடன் செயல்பட்டது மார்க்சியம். உலகமயமாக்கலும் உள்ளூர் முதலாளித்துவக் கொடூரங்களும் நிறைந்துள்ள இன்றைய மூச்சுத்திணறும் சூழலில் மார்க்சியம் என்பது தவிர்க்கவொன்றாய் அமைகிறது. புரட்சிக்குப் பிந்திய சமூகங்களிலும் சோசலிச அரசுகளின் நடைமுறைகளில் ஏற்பட்ட தவறுகளையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு மார்க்சியத்தைக் கழித்துக் கட்டுவது என்பது முட்டாள்தனமாகவும் மனித நலன்கள் குறித்த அக்கறையற்றதாகவுமே அமையும்.

நமது எதிர்கலாச்சார, அவைதீக மரபுகளை மார்க்சியத்துடன் இணைப்பதன்மூலமே நாம் நமக்கான விடுதலையைப் பெறமுடியும். அதிகாரமறுப்பு, எல்லையற்ற பேரன்பு, வாழ்வு மீதான காதல், சகோதரத்துவம், எல்லோருக்குமான கொண்டாட்டத்தை உறுதிசெய்தல் ஆகிய விடுதலையின் மீது மோகங்கொள்வோம்.

.

அரூபவனம்



உடலெங்கும் பரவுகிறது இசை.
புகையாய் மாறுகிறது உடல்
நனவு விடைபெற்றுப் பிரிகிறது
இப்போது நானிருப்பது எங்கே?
வானம் பூமி என்னும்
கோடுகளுக்கு அப்பால்...
ஒரே ஒரு முத்தமாவது
கேட்டுப்பெற்றுக்கொள்
நான் மறைந்துபோவதற்குள்.

பெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்




நான் வாழ்க்கையில் காதலிக்கும் மிகச்சிலரில் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் ஒருவன். பெரியாரை அவன், இவன் என்று விளிப்பதால் சில பெரியார் பக்தர்கள் கோபப்படலாம். மேலும் நான் பிரதியில் அவன் என்று எழுதும்போது நீங்களும் அவன் என்று வாசிக்கும் சாத்தியம் என்னையும் கோபப்படுத்தும். ஏனெனில் என் பொசிசிவ்னெஸ் அப்படி.

கள்ளுக்கடை மறியல் செய்தவர், அதற்காக அய்ந்நூறு தென்னைமரங்களை வெட்டிப்போட்டவர், கதர்சுமந்துவிற்றவர் என்று இப்படியாகத்தான் பெரியார் தமிழ்மாணவர்களுக்கு அறிமுகமாயிருக்கிறார். ஆனால் இத்தகைய சட்டகங்கள் பெரியாரின் தாடிமயிரை அளப்பதற்குகூடப் போதுமான அளவுகோல்கள் அல்ல. தனக்கு விதிக்கப்பட்ட கரைகளை உடைத்துப் பாய்ந்த மகாநதி பெரியார்.

கள்ளுக்கடை மறியல் செய்த பெரியார்தான் மதுவிலக்கிற்கெதிராக, "ஒருவனைக் குடிக்கக்கூடாது என்றுசொல்வதற்கும் உன் மனைவியைக் கலவிசெய்யக்கூடாது என்று சொல்வதற்கும் என்ன வேறுபாடு?" என்று வினவினார். ஒழுக்கம் என்பது பாமரர்களை ஏமாற்றும் சூழ்ச்சி என்றார். 'திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக்கப்படவேண்டும்' என்றார். மணவிலக்குச்சட்டத்தைக் கொண்டுவராவிட்டால் திருமணங்களில் திருமண மறுப்புப்பிரச்சாரமும், பலதாரமணப்பிரச்சாரமும் செய்வேன் என்று அரசை மிரட்டினார். பெண்களின் கருப்பைகளை அடைக்கச்சொன்னார்.

தேசப்படம், காந்திசிலை, பிள்ளையார்சிலை, ராமர்படம் என அனைத்துப் புனிதப்பிம்பங்களையும் தெருவில் போட்டுடைத்தார் அல்லது கொளுத்தினார். 'தமிழ்ப்புலவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை முதல் ஆயுள்தண்டனை வரை கொடுக்கவேண்டும் என்றார். இப்படி அவர் செய்த கலகங்கள் சொல்லிமாளாதவை. சாதி, மதம், கடவுள், தேசம், மொழி, கற்பு, காதல், திருமணம், குழந்தைப்'பேறு' என அனைத்து ஒளிவட்டங்களின்மீதும் அவரது மூத்திரச்சட்டியில் ஒழுகிய சிறுநீர் வெள்ளமாய்ப்பாய்ந்தது.

கலகத்தின் குரலாய் ஒலித்த அதே பெரியார்தான் அறம்பேணும் துறவியாய் வாழ்ந்தார். காந்தியார் படுகொலையின்போது பார்ப்பனர்களைத் தாக்குதலினின்று காத்தார். 'ஒரு பார்ப்பான் பேச்சைக் கேட்டாக் கலியாணம் பண்ணினாய்?' என்கிற வன்மமும் வெறுப்பும் நிறைந்த கேள்வியை வரலாற்றுப்பழியாய்த் தன் தோள்மேல் சுமந்து ராஜாஜியைக் காட்டிக்கொடுக்காமல் செத்துப்போனார். தமிழ்ச்சூழலில் எந்த முஸ்லிமும் பரப்புரை செய்வதற்கு முன்பே 'இன இழிவு நீங்க இஸ்லாமியராகுங்கள்' என்றார். அம்பேத்கரைத் தன் தலைவர் என்றார். குன்றக்குடி அடிகளாரையும் மதித்தார். தமிழ் காட்டுமிராண்டிமொழி என்று சொன்ன அவர்தான் தமிழுக்கான எழுத்துச்சீர்திருத்தங்களையும் முன்மொழிந்தார்.

இதையெல்லாம் நீங்கள் பெரியார் திரைப்படத்தில் தேடினீர்களென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். பாடத்திட்டங்களைத் தாண்டி படம் நகரவில்லை. பெரிராரின் வாழ்வாதாரமான போர்க்குணமிக்க போராட்டமுறைகள் காட்டப்படவில்லை. பெரியாரால் அவமானப்படுத்தப்பட்ட ராமனும் வினாயகனும்தான் இன்று இந்துத்துவச்சக்திகளால் தேசியச்சின்னங்களாய் முன்னிறுத்தப்பட்டு வெறியாடிக்கொண்டிருகும் சூழலில் பெரியாரின் விக்கிரகச் சிதைவுப் போராட்டங்களைக் காட்சிப்படுத்துவதே அடுத்த தலைமுறையை அரசியலில் ஆற்றுப்படுத்துவதற்கும் நமது போர்மரபின் எஞ்சிய நினைவுகளைச் சரிபார்ப்பதற்கும் உதவும். ஆனால் அது இல்லை. கவனமாக பெரியாரின் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

மேலும் சில தரவுகள் அய்யத்துக்கிடமாயிருக்கின்றன. நான் படித்தவரை 'தமிழர் தலைவர்' நூலில் பெரியார் நாகம்மையின் விரதத்தைக் குலைப்பதற்குச் சாம்பாரில்தான் மீன் துண்டங்களைப் போட்டுவைப்பார். ஆனால் படத்திலோ சோற்றில் சிக்கன் துண்டைப் புதைத்துவைக்கிறார். காசியில் அவர் பிச்சையெடுத்து வாழ்ந்தபோது பார்ப்பனச் சாமியார்களுக்கும் மற்றச் சாமியார்களுக்குமிடையில் நிலவிய வேறுபாடுகள் பற்றி தமிழர் தலைவரில் உள்ளது. ஆனால் காசிச் சாமியார்கள் காமக்களியாட்டங்களில் ஈடுபட்டதாகப் படித்ததாக நினைவில்லை.

பெரியாரின் அணுக்கத்தொண்டராகிய குத்தூசிக்குருசாமி படத்தின் எந்த மூலையிலுமில்லை. அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் தந்த உணர்வைப் பெரியார் தரவில்லை. காந்தி, அம்பேத்கர் ஆகியோர் தமிழிலேயே பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. அழகியல் மற்றும் சினிமா மொழி என்றளவில் பார்த்தால் பெரியார் படம் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. பாடல்கள் துருத்தி நிற்கின்றன. பின்னணி இசையின் தோல்வியை நினைக்கும்போது இளையராஜா எப்படியாவது இசையமைத்திருக்கக்கூடாதா என்னும் ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

திமுக தொடங்கியபோது கருணாநிதி திமுகவில் இணையவேயில்லை. அவர் திராவிடர்கழகத்தில்தான் இருந்தார். அதன்பிறகே திமுகவில் இணைகிறார். திமுகவின் அய்ம்பெரும் தலைவர்களில் கருணாநிதி இல்லை. ஆனால் படத்தில் ராபின்சன் பூங்காவில் திமுகவின் துவக்கவிழா மேடையிலேயே கருணாநிதி இடம்பெற்றிருக்கிறார். நாகம்மையைக் கோவிலில் கலாட்டா செய்வதற்குப் பெரியாரே ஆட்களை ஏற்பாடு செய்கிறார் என்பதுதான் தமிழர் தலைவரில் வருவது. ஆனால் அப்படியான குறிப்புகள் எதுவும் படத்தில் இல்லை. 'ஈ.வெ.ராமசாமியாகிய நான்..' எனத்தொடங்கும் பெரியாரின் சுயவிளக்கத்தைச் சாக்ரடீஸ் சிலை முன்பு பெரியார் பேசுவதாக அமைத்திருப்பது கூட சினிமா உத்தி என்றளவில் மன்னிக்கலாம். ஆனால் அவரது வெளிநாட்டுப் பயணக்காட்சிகள் படத்தில் எந்த வகையிலும் பயன்படவில்லை.

திறமையான நடிகையாகிய குஷ்பு சரியாகப் பயன்படுத்தப்படவிலை. பெரியாருக்கு எவ்வளவு வயதானபோதும் நாகம்மையாக வரும் ஜோதிர்மயி மட்டும் கொஞ்சம்கூட மாற்றமில்லாமல் 'இளைமையாக' இருப்பது அபத்தமாக இருகிறது. ராஜாஜியின் தோற்றமும் அப்படியே. மேலும் ராஜாஜி ஏதோ சூழ்நிலைக்கைதி போல சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வரலாற்றுப் படத்திற்கான ஒப்ப்னை நுட்பங்கள் எதுவும் படத்தில் இல்லை. படத்தில் ஆறுதல் அளிக்கக்கூடிய ஒரே அம்சம் சத்யராஜ்தான். அதுவும் அவர் தாடிவைத்தப் பெரியாராக மாறியபிறகு பெரியாரின் உடல்மொழிகளை அப்படியே கொண்டுவந்திருக்கிறார். சத்யராஜின் கடின உழைப்பிற்காக அவரைப் பாராட்டவேண்டும். ஆனால் இளமைக்காலத் தோற்றங்களில் சத்யராஜ் சத்யராஜையே நினைவுபடுத்துகிறார்.

திராவிட இயக்க வரலாற்றைக் கொச்சைப்படுத்தி மணிரத்னம் 'இருவர்' என்னும் திரைப்படத்தை எடுத்தார். இந்து - முஸ்லீம் முரண்களை கதைமய்யமாகக் கொண்ட 'பம்பாய்' படத்தில் இரண்டு மூன்று இடங்களில் துலுக்கன் என்கிற வார்த்தையை நாசரின் கதாபாத்திரத்தின் வழியாக உச்சரிக்க வைத்திருப்பார். இருவரில் அண்ணவையும் பெரியாரையும் ஒரே கதாபாத்திரமாக்கி அதே நாசரை நடிக்க வைத்திருப்பார். 'திராவிட இயக்கம் பற்றிய திரைப்படத்தில் பார்ப்பான் என்னும் வார்த்தையே இல்லாமல் படம் எடுத்திருக்கிறார்' என்று மணிரத்னத்தைப் பார்ப்பனீய மற்றும் இந்துத்துவ எதிர்ப்பு அறிவுஜீவிகள் விமர்சித்தார்கள். அது நியாயமான விமர்சனமே. ஆனால் மணிரத்னம் என்னும் பார்ப்பனரிடமிருந்து நாம் அதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால் திராவிடர்கழகத்தின் தயாரிப்பில் ஞானராஜசேகரன் என்னும் தலித்தும் 'பார்ப்பான்' என்னும் வார்த்தையே இடம்பெறாமல் பெரியார் படத்தை எடுத்து 'சாதனை' புரிந்திருக்கிறார்கள்.

ஒருவரியில் சொல்வதென்றால் பெரியார் திரைப்படம் என் காதலியை யாரோ வன்புணர்ச்சி செய்ததைப்போல இருந்தது.

<ச்ட்ரொங்>கொசுறு : என்னுடைய இந்த விமர்சனத்தைப் படித்து யாரும் பெரியார் படத்தைத் தவிர்க்கவோ தவறவோ விடவேண்டாம்.

என்னோடு படம்பார்த்த இரண்டு பெண்களில் ஒருவர் தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். பெரியார் அளவிற்கு இல்லையென்றாலும் பெரியாருக்கு அடுத்தபடியாக நான் நேசிக்கும் தோழிகளில் ஒருத்தி. கைபிடித்து அழைத்துச் சென்று அறிவின் மர்மப்பிரதேசங்களை அறிமுகப்படுத்தியவள். தன் மொழிநாவால் வாழ்வின் இடுக்குகளை அலசுபவள். ஆனால் அவருக்குப் பெரியார் பற்றி ஒன்றும் தெரியாது அல்லது ஏதோ தெரியும் என்று சொல்லலாம். பெரியார் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவர் சொன்னார், 'இனி பெரியாரை முழுசாப் படிக்கணும்'. இது பெரியார் படத்திற்குக் கிடைத்த வெற்றிதான்.