பெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்
நான் வாழ்க்கையில் காதலிக்கும் மிகச்சிலரில் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் ஒருவன். பெரியாரை அவன், இவன் என்று விளிப்பதால் சில பெரியார் பக்தர்கள் கோபப்படலாம். மேலும் நான் பிரதியில் அவன் என்று எழுதும்போது நீங்களும் அவன் என்று வாசிக்கும் சாத்தியம் என்னையும் கோபப்படுத்தும். ஏனெனில் என் பொசிசிவ்னெஸ் அப்படி.
கள்ளுக்கடை மறியல் செய்தவர், அதற்காக அய்ந்நூறு தென்னைமரங்களை வெட்டிப்போட்டவர், கதர்சுமந்துவிற்றவர் என்று இப்படியாகத்தான் பெரியார் தமிழ்மாணவர்களுக்கு அறிமுகமாயிருக்கிறார். ஆனால் இத்தகைய சட்டகங்கள் பெரியாரின் தாடிமயிரை அளப்பதற்குகூடப் போதுமான அளவுகோல்கள் அல்ல. தனக்கு விதிக்கப்பட்ட கரைகளை உடைத்துப் பாய்ந்த மகாநதி பெரியார்.
கள்ளுக்கடை மறியல் செய்த பெரியார்தான் மதுவிலக்கிற்கெதிராக, "ஒருவனைக் குடிக்கக்கூடாது என்றுசொல்வதற்கும் உன் மனைவியைக் கலவிசெய்யக்கூடாது என்று சொல்வதற்கும் என்ன வேறுபாடு?" என்று வினவினார். ஒழுக்கம் என்பது பாமரர்களை ஏமாற்றும் சூழ்ச்சி என்றார். 'திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக்கப்படவேண்டும்' என்றார். மணவிலக்குச்சட்டத்தைக் கொண்டுவராவிட்டால் திருமணங்களில் திருமண மறுப்புப்பிரச்சாரமும், பலதாரமணப்பிரச்சாரமும் செய்வேன் என்று அரசை மிரட்டினார். பெண்களின் கருப்பைகளை அடைக்கச்சொன்னார்.
தேசப்படம், காந்திசிலை, பிள்ளையார்சிலை, ராமர்படம் என அனைத்துப் புனிதப்பிம்பங்களையும் தெருவில் போட்டுடைத்தார் அல்லது கொளுத்தினார். 'தமிழ்ப்புலவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை முதல் ஆயுள்தண்டனை வரை கொடுக்கவேண்டும் என்றார். இப்படி அவர் செய்த கலகங்கள் சொல்லிமாளாதவை. சாதி, மதம், கடவுள், தேசம், மொழி, கற்பு, காதல், திருமணம், குழந்தைப்'பேறு' என அனைத்து ஒளிவட்டங்களின்மீதும் அவரது மூத்திரச்சட்டியில் ஒழுகிய சிறுநீர் வெள்ளமாய்ப்பாய்ந்தது.
கலகத்தின் குரலாய் ஒலித்த அதே பெரியார்தான் அறம்பேணும் துறவியாய் வாழ்ந்தார். காந்தியார் படுகொலையின்போது பார்ப்பனர்களைத் தாக்குதலினின்று காத்தார். 'ஒரு பார்ப்பான் பேச்சைக் கேட்டாக் கலியாணம் பண்ணினாய்?' என்கிற வன்மமும் வெறுப்பும் நிறைந்த கேள்வியை வரலாற்றுப்பழியாய்த் தன் தோள்மேல் சுமந்து ராஜாஜியைக் காட்டிக்கொடுக்காமல் செத்துப்போனார். தமிழ்ச்சூழலில் எந்த முஸ்லிமும் பரப்புரை செய்வதற்கு முன்பே 'இன இழிவு நீங்க இஸ்லாமியராகுங்கள்' என்றார். அம்பேத்கரைத் தன் தலைவர் என்றார். குன்றக்குடி அடிகளாரையும் மதித்தார். தமிழ் காட்டுமிராண்டிமொழி என்று சொன்ன அவர்தான் தமிழுக்கான எழுத்துச்சீர்திருத்தங்களையும் முன்மொழிந்தார்.
இதையெல்லாம் நீங்கள் பெரியார் திரைப்படத்தில் தேடினீர்களென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். பாடத்திட்டங்களைத் தாண்டி படம் நகரவில்லை. பெரிராரின் வாழ்வாதாரமான போர்க்குணமிக்க போராட்டமுறைகள் காட்டப்படவில்லை. பெரியாரால் அவமானப்படுத்தப்பட்ட ராமனும் வினாயகனும்தான் இன்று இந்துத்துவச்சக்திகளால் தேசியச்சின்னங்களாய் முன்னிறுத்தப்பட்டு வெறியாடிக்கொண்டிருகும் சூழலில் பெரியாரின் விக்கிரகச் சிதைவுப் போராட்டங்களைக் காட்சிப்படுத்துவதே அடுத்த தலைமுறையை அரசியலில் ஆற்றுப்படுத்துவதற்கும் நமது போர்மரபின் எஞ்சிய நினைவுகளைச் சரிபார்ப்பதற்கும் உதவும். ஆனால் அது இல்லை. கவனமாக பெரியாரின் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
மேலும் சில தரவுகள் அய்யத்துக்கிடமாயிருக்கின்றன. நான் படித்தவரை 'தமிழர் தலைவர்' நூலில் பெரியார் நாகம்மையின் விரதத்தைக் குலைப்பதற்குச் சாம்பாரில்தான் மீன் துண்டங்களைப் போட்டுவைப்பார். ஆனால் படத்திலோ சோற்றில் சிக்கன் துண்டைப் புதைத்துவைக்கிறார். காசியில் அவர் பிச்சையெடுத்து வாழ்ந்தபோது பார்ப்பனச் சாமியார்களுக்கும் மற்றச் சாமியார்களுக்குமிடையில் நிலவிய வேறுபாடுகள் பற்றி தமிழர் தலைவரில் உள்ளது. ஆனால் காசிச் சாமியார்கள் காமக்களியாட்டங்களில் ஈடுபட்டதாகப் படித்ததாக நினைவில்லை.
பெரியாரின் அணுக்கத்தொண்டராகிய குத்தூசிக்குருசாமி படத்தின் எந்த மூலையிலுமில்லை. அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் தந்த உணர்வைப் பெரியார் தரவில்லை. காந்தி, அம்பேத்கர் ஆகியோர் தமிழிலேயே பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. அழகியல் மற்றும் சினிமா மொழி என்றளவில் பார்த்தால் பெரியார் படம் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. பாடல்கள் துருத்தி நிற்கின்றன. பின்னணி இசையின் தோல்வியை நினைக்கும்போது இளையராஜா எப்படியாவது இசையமைத்திருக்கக்கூடாதா என்னும் ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
திமுக தொடங்கியபோது கருணாநிதி திமுகவில் இணையவேயில்லை. அவர் திராவிடர்கழகத்தில்தான் இருந்தார். அதன்பிறகே திமுகவில் இணைகிறார். திமுகவின் அய்ம்பெரும் தலைவர்களில் கருணாநிதி இல்லை. ஆனால் படத்தில் ராபின்சன் பூங்காவில் திமுகவின் துவக்கவிழா மேடையிலேயே கருணாநிதி இடம்பெற்றிருக்கிறார். நாகம்மையைக் கோவிலில் கலாட்டா செய்வதற்குப் பெரியாரே ஆட்களை ஏற்பாடு செய்கிறார் என்பதுதான் தமிழர் தலைவரில் வருவது. ஆனால் அப்படியான குறிப்புகள் எதுவும் படத்தில் இல்லை. 'ஈ.வெ.ராமசாமியாகிய நான்..' எனத்தொடங்கும் பெரியாரின் சுயவிளக்கத்தைச் சாக்ரடீஸ் சிலை முன்பு பெரியார் பேசுவதாக அமைத்திருப்பது கூட சினிமா உத்தி என்றளவில் மன்னிக்கலாம். ஆனால் அவரது வெளிநாட்டுப் பயணக்காட்சிகள் படத்தில் எந்த வகையிலும் பயன்படவில்லை.
திறமையான நடிகையாகிய குஷ்பு சரியாகப் பயன்படுத்தப்படவிலை. பெரியாருக்கு எவ்வளவு வயதானபோதும் நாகம்மையாக வரும் ஜோதிர்மயி மட்டும் கொஞ்சம்கூட மாற்றமில்லாமல் 'இளைமையாக' இருப்பது அபத்தமாக இருகிறது. ராஜாஜியின் தோற்றமும் அப்படியே. மேலும் ராஜாஜி ஏதோ சூழ்நிலைக்கைதி போல சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வரலாற்றுப் படத்திற்கான ஒப்ப்னை நுட்பங்கள் எதுவும் படத்தில் இல்லை. படத்தில் ஆறுதல் அளிக்கக்கூடிய ஒரே அம்சம் சத்யராஜ்தான். அதுவும் அவர் தாடிவைத்தப் பெரியாராக மாறியபிறகு பெரியாரின் உடல்மொழிகளை அப்படியே கொண்டுவந்திருக்கிறார். சத்யராஜின் கடின உழைப்பிற்காக அவரைப் பாராட்டவேண்டும். ஆனால் இளமைக்காலத் தோற்றங்களில் சத்யராஜ் சத்யராஜையே நினைவுபடுத்துகிறார்.
திராவிட இயக்க வரலாற்றைக் கொச்சைப்படுத்தி மணிரத்னம் 'இருவர்' என்னும் திரைப்படத்தை எடுத்தார். இந்து - முஸ்லீம் முரண்களை கதைமய்யமாகக் கொண்ட 'பம்பாய்' படத்தில் இரண்டு மூன்று இடங்களில் துலுக்கன் என்கிற வார்த்தையை நாசரின் கதாபாத்திரத்தின் வழியாக உச்சரிக்க வைத்திருப்பார். இருவரில் அண்ணவையும் பெரியாரையும் ஒரே கதாபாத்திரமாக்கி அதே நாசரை நடிக்க வைத்திருப்பார். 'திராவிட இயக்கம் பற்றிய திரைப்படத்தில் பார்ப்பான் என்னும் வார்த்தையே இல்லாமல் படம் எடுத்திருக்கிறார்' என்று மணிரத்னத்தைப் பார்ப்பனீய மற்றும் இந்துத்துவ எதிர்ப்பு அறிவுஜீவிகள் விமர்சித்தார்கள். அது நியாயமான விமர்சனமே. ஆனால் மணிரத்னம் என்னும் பார்ப்பனரிடமிருந்து நாம் அதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால் திராவிடர்கழகத்தின் தயாரிப்பில் ஞானராஜசேகரன் என்னும் தலித்தும் 'பார்ப்பான்' என்னும் வார்த்தையே இடம்பெறாமல் பெரியார் படத்தை எடுத்து 'சாதனை' புரிந்திருக்கிறார்கள்.
ஒருவரியில் சொல்வதென்றால் பெரியார் திரைப்படம் என் காதலியை யாரோ வன்புணர்ச்சி செய்ததைப்போல இருந்தது.
<ச்ட்ரொங்>கொசுறுச்ட்ரொங்> : என்னுடைய இந்த விமர்சனத்தைப் படித்து யாரும் பெரியார் படத்தைத் தவிர்க்கவோ தவறவோ விடவேண்டாம்.
என்னோடு படம்பார்த்த இரண்டு பெண்களில் ஒருவர் தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். பெரியார் அளவிற்கு இல்லையென்றாலும் பெரியாருக்கு அடுத்தபடியாக நான் நேசிக்கும் தோழிகளில் ஒருத்தி. கைபிடித்து அழைத்துச் சென்று அறிவின் மர்மப்பிரதேசங்களை அறிமுகப்படுத்தியவள். தன் மொழிநாவால் வாழ்வின் இடுக்குகளை அலசுபவள். ஆனால் அவருக்குப் பெரியார் பற்றி ஒன்றும் தெரியாது அல்லது ஏதோ தெரியும் என்று சொல்லலாம். பெரியார் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவர் சொன்னார், 'இனி பெரியாரை முழுசாப் படிக்கணும்'. இது பெரியார் படத்திற்குக் கிடைத்த வெற்றிதான்.
மாறுபட்ட சிந்தனை.. யார் பெரியார் எனும் தேடலை இந்தப் படம் கொளுத்திப் போட்டிருக்கிறது என்பது மட்டும் நிஜம்.
மிக அழகான விமர்சனம். பெரியாரியவாதியான் உங்களிடமிருந்து இந்த விமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். இப்போது ஃபயர்ஃபாக்ஸிலும் உங்கள் வலைப்பூவை வாசிக்க முடிகிறதூ வாழ்த்துகள்
சாத்தான்குளத்தான்
சுகுணா, இன்னும் படத்தை பார்க்கவில்லை. ஆனால் உங்கள் விமர்சநத்துடன் ஒத்துப் போவேன் என்று நினைக்கிறேன். ஞானராஜசேகரன் என்ற மிக மோசமான திரை இயக்குனரை ஏன் பலர் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை. மோகமுள் மகா மட்டமான முறையில், மூல நாவலுக்கு நன்றியில்லாமல் எடுக்கப் பட்ட திரைப்படம். பாரதி திரைப்படம் அதைவிட கோராமை. பெரியார் படம் போன்றே எகப்பட்ட தகவல் பிழைகள் ஒவ்வாத காட்சிகள் . எனக்கு ஞானம் இத்தனை ஆரவாரத்துடன் பெரியார் படம் எடுப்பதும், அதற்கு இத்தனை விளம்பரம் வருவதும், பலர் பாராட்டி தொலைப்பதும் கவலை குரியதாக இருந்தது என்பதற்கு, பெரியார் குறித்த ஒரு நேர்மையான, இயல்பான திரைப்படம் இனி எதிர்காலத்தில் வர இயலாமல் தடுத்துவிடும் என்பதை தவிர வேறு காரணமில்லை. காந்தி மாதிரி பெரியாருக்கு ஒரு `அட்டன்பரோ' வந்து ஒரு நாளும் படம் எடுக்க போவதில்லை என்ற யதார்ர்த்தம் தெரியுமென்றாலும் ஞானராஜ சேகரனை வைத்து சமாதானம் அடைய முடியவில்லை.
'இனி பெரியாரை முழுசாப் படிக்கணும்'.
//பெரியார் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவர் சொன்னார், 'இனி பெரியாரை முழுசாப் படிக்கணும்'. இது பெரியார் படத்திற்குக் கிடைத்த வெற்றிதான். //
இதற்கு மேல் அதிகமாக வேறேதையும்வையும் எதிர்பார்க்க முடியாது தோழரே. பெரியாரின் ஆளுமையை, வீச்சை ஒரு படத்திற்குள் அடக்குவது கடினம். அது பெரியாரை அணுகுபவனின் தேடலைப் பொறுத்தது. இன்னும் பலர் பெரியாரை பதிவு செய்யலாம். செய்ய வேண்டும். அப்போதுதான் அவரின் பன்முகப் பரிமாணம் வெளிப்படும். இந்தப்படத்தை ஒரு அந்த பயணத்தில் முதல் அடி என்று எடுத்து கொள்ளலாம்.
பெரியார் என்றாலே வெறுக்கத்தக்கவர் என்ற மனோபாவத்தோடு வளர்க்கப்படுவர்களையும், அவரருகே வராது விலகியே இருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்ற தியாக மனப்பான்மையுடைவர்களை சலனப்படுத்தினாலே அது வெற்றிதான்.
உங்கள் ஆதங்கங்கள் பெரியாரின் மீதான உங்களின் வாசிப்பை உணர்த்துகிறது.
நன்றி
விமர்சனம் அருமை....கடைசி பஞ்ச்...சூப்பர்ப்....!!!
மீண்டும் என் எதிர்ப்பார்ப்பினை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். நன்றி! '
காலா என் காலருகே வாடா, உதைக்கிறேன்' என்று விசுக் விசுக் என்று காலை உதைத்து சுப்பிரமணிய பாரதியார் செத்ததாக காட்டிய இயக்குஞரிடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஆயினும், தமிழக மக்களுக்கு பாரதியையும், பெரியாரையும் அறிமுகப்படுத்தும் படம் எடுப்பதன் மூலம் அவரை மன்னிக்கலாம். அவ்வளவுதான்.
பெரியார் திருமணம் பற்றி கூறியதாக எழுதிய கருத்துகளை இனி படிக்கவேண்டும்...சுயமரியாதை திருமணம் பற்றிய எனது இந்தப் பதிவின் இறுதியில் நான் வைக்கும் கருத்துகளோடு ஒத்துப் போகுமா என்று அறிய ஆவல்
பருத்திவீரன் பற்றிய தங்களது விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது. அதை பிரதியெடுத்து அதன் இயக்குஞரிடம் கொடுத்திருக்கிறேன்...
சரியான விமர்சனம்.
அங்கும் இங்கும் பெரியாரைப் பற்றித் துணுக்குகளால் மட்டுமே அறிந்திருந்த எனக்கு இந்தப்படம் இன்னொரு துணுக்கு மாலையாகத் தெரிந்தது. ஞானராஜசேகரனின் எல்லை சற்று குறுகியதே. நீங்கள் சொன்னவாறே 'பாரதி'யிலும் இம்மாதிரிக் குறைகள் தென்பட்டிருந்தன. (பாரதியையாவது கொஞ்சம் படித்திருக்கிறேன், பெரியாரை இனிமேல் தான் படிக்க வேண்டும்) பல காட்சிகள் நாடகத்தனமாக இருந்தது. உண்மையிலேயே அந்த 'நான் சிரித்தால் தீபாவளி' பாணிப் பாடலும், கதாகாலேட்சபப் பாடலும் ஒட்டவே இல்லை. இன்னும் திறமையான படைப்பாளி கையில் இந்தப்படம் கிடைத்திருக்கலாம் என்ற பெருமூச்சு இருந்தாலும், சுத்தமாக பெரியாரை அறியாத என் மனைவி/குழந்தைகள் ஆர்வமாகப் பார்த்ததும், சில நிகழ்ச்சிகளை வீட்டுக்கு வரும் வழியில் விவாதித்ததும் நிச்சயம் நல்ல பயன்கள் தானே. 'மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை' என்ற என் மனைவியைம், 'நாம் என்ன ஜாதியப்பா?' என்று அரங்கிலேயே உரக்கக் கேட்ட மகளையும் வைத்துப் பார்த்தாலும், ஒரு தொடக்கம் என்ற வகையில் படத்தை வரவேற்கிறேன்.
தகவலுக்காக...
காந்தி படத்தின் பூர்வாங்க வேலையினை ஆட்டன்பரோ ஆரம்பித்த ஆண்டு 1949. முப்பது வருட உழைப்போடு மூன்று வருட உழைப்பினை ஒப்பிடுவது நியாயம் இல்லை!
//ஒருவரியில் சொல்வதென்றால் பெரியார் திரைப்படம் என் காதலியை யாரோ வன்புணர்ச்சி செய்ததைப்போல இருந்தது.//
இவை குறித்த அனுபவங்கள் எதுவுமில்லாது போகின்றபோக்கில் கூறிச்செல்வது உங்களுக்கு இலகுவாயிருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களை அருகிலிருந்து பார்த்தவர்களுக்கும்தான் அதன் கொடுமை புரியும். ஏற்கனவே நீயும் அகதி, நாடு இருந்து நானும் அகதி என்று ஒரு கவிதையை எழுதி ஏதோ இரண்டும் ஒரேவிதமான உணர்வாய்க்காட்டியிருந்தீர்கள். குறைந்தபட்ச நேர்மையாய் உங்களுக்குப் புரியாத அனுபவிக்காத விதயங்களை எழுதாமல் இருப்பது. பெரியாரியமும், பின்னவீனத்துவமும் இந்த விதயங்கள் குறித்து அக்கறையாக இருக்கத்தான் கூறுகின்றன. புரிந்துகொள்ளுவீர்களென நம்புகின்றோம்.
பெரியார் படம் கிட்டத்தட்ட 4:30 மணி நேரம் வந்துள்ளதாக தகவல். அதை முழுவதுமாக வெளியிடமுடியாத காரணத்தினால் பல இடங்களில் வெட்டு விழுந்துள்ளது. படத்தின் முக்கிய நோக்கம் அவரின் வீச்சு சென்றடையாத இடங்களுக்கு அவரை கொண்டு சேர்ப்பது. பெரியார் என்றாலே பார்ப்பன எதிரி, ஹிந்து மத எதிரி என்று உருவகப்படுத்தி வைத்திருப்பதை உடைக்கும் ஒர் கருவி இப்படம். தீவிர பெரியார் குண்டர்களுக்கு இப்படம் அவ்வளவாக பிடிக்காது (என்னையும் சேர்த்துத்தான்). ஒவ்வொரு பெரியாரிஸ்டுக்கும் பிடித்த அனுபவத்தினை படம் எடுப்பது என்றால் - அதை தொலைக்காட்சி தொடராக எடுத்தால்தான் முடியும்.
சீக்கிரம் வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். பாலா வந்தபின் வருகிறேன்.
அருமையான விமர்சனம். பாடப் புத்தகப் பெரியாரைக்கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதில் வருத்தமாகத்தான் உள்ளது.
உங்கள் வேகம் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் சுகுணா.
உங்களை அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்ளாமல் எழுதினால் நீங்கள் சுமாராகவாவது எழுத வாய்ப்புள்ளது.
தொலைக்காட்சிக்காக ஞாநி பெரியார் பற்றி ஆவணப்படம் தயாரிக்கப்போவதாக சில வருடங்களுக்கு முன் 'தீம்தரிகிட'வில் எழுதியிருந்தார். அதுகுறித்து மேலதிகத் தகவல் தெரியுமா? சென்னையில் அப்படத்தின் டிவிடி கிடைக்கிறதா?
/இவை குறித்த அனுபவங்கள் எதுவுமில்லாது போகின்றபோக்கில் கூறிச்செல்வது உங்களுக்கு இலகுவாயிருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களை அருகிலிருந்து பார்த்தவர்களுக்கும்தான் அதன் கொடுமை புரியும். ஏற்கனவே நீயும் அகதி, நாடு இருந்து நானும் அகதி என்று ஒரு கவிதையை எழுதி ஏதோ இரண்டும் ஒரேவிதமான உணர்வாய்க்காட்டியிருந்தீர்கள். குறைந்தபட்ச நேர்மையாய் உங்களுக்குப் புரியாத அனுபவிக்காத விதயங்களை எழுதாமல் இருப்பது. பெரியாரியமும், பின்னவீனத்துவமும் இந்த விதயங்கள் குறித்து அக்கறையாக இருக்கத்தான் கூறுகின்றன. புரிந்துகொள்ளுவீர்களென நம்புகின்றோம்.
/
பதிவில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை விடுத்து வார்த்தைகளைப் பிடித்து நீங்கள் தொங்குவது பரிதாபமாக இருக்கிறது. அகதியின் வலியும் தேசமறுப்பாளனின் வலியும் ஒன்றென நான் சொல்லவில்லை. என்னுடைய 'நாடிழந்தவளுடன் ஒரு உரையாடல்' படியுங்கள். மேலும் வலி என்பது வாய்க்கவே பெறாத பூசுரனும் அல்ல நான். அதற்கான விகிதங்கள் வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால் அந்த விகிதங்களைக் கணக்கிலெடுத்து அதற்கான மரியாதையை நான் கொடுக்கிறேன்.
/ பெரியார் என்றாலே பார்ப்பன எதிரி, ஹிந்து மத எதிரி என்று உருவகப்படுத்தி வைத்திருப்பதை உடைக்கும் ஒர் கருவி இப்படம். /
பெரியார் பார்ப்பனர்களின் எதிரியல்ல, ஆனால் எதிர்ப்பாளர். அவர் இந்துமதத்திற்கு எதிரிதான். இதிலென்ன உங்களுக்கு சந்தேகம்?
/உங்களை அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்ளாமல் எழுதினால் நீங்கள் சுமாராகவாவது எழுத வாய்ப்புள்ளது/
thanks
சுந்தரமூர்த்தி, அது 'அய்யா' என்ற பெயரில் தூர்தர்சனில் ஒளிபரப்பானது. பெரியார் திராவிடர்கழகம் போன்ற அமைப்பினர் அப்படத்தினைப் பலவிடங்களில் திரையிட்டனர்.
/காந்தி படத்தின் பூர்வாங்க வேலையினை ஆட்டன்பரோ ஆரம்பித்த ஆண்டு 1949. முப்பது வருட உழைப்போடு மூன்று வருட உழைப்பினை ஒப்பிடுவது நியாயம் இல்லை/
நீங்கள் சொல்வது நியாயம்தான். ஆனால் மூன்றுவருட உழைப்பிற்கான அறிகுறிகளும் படத்தில் இல்லை என்பதுதான் வேதனை.
/சீக்கிரம் வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். பாலா வந்தபின் வருகிறேன்/
பாலாதான் வருவதேயில்லையே, 'அவன் வரமாட்டான், அவன் வரமாட்டான்' என்று திருவிளையாடல் நாகேஷ் போல புலம்பவேண்டியதுதான்.
அன்புத் தோழருக்கு,
ஒரு திரைப்படத்தை பார்த்து வந்ததும் இப்படி அபிப்ராயம் சொல்வதை நான் மறுக்கவில்லை ஆனால் நான்கு பத்தி எழுதுவதற்குள் நீங்கள் பத்து இடத்தில் சறுக்கி உள்ளீர்கள் ( சறுக்கல்களை தனியாக குறிப்பிடுகிறேன்) பல நூறு பக்கங்கள் ஆவணங்களைப் படித்து அதனை காட்சியாக்கி தரவேண்டும். அது மட்டுமல்லாமல் உங்களைப் போல் பெரியார் பக்தர்களை திருப்தி வேறு படுத்த வேண்டும். என்ன செய்வார் இயக்குனர்?
சரி!இந்த விஷயத்தை அப்படியே விடலாம். பெரியார் படம் பார்த்ததும் உங்கள் தோழி பெரியார் பற்றி படிக்க வேண்டும் என்று ஆர்வப் பட்டதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். அதிலும் அவர் அறிவுக் களஞ்சியத்தை அள்ளிக் காட்டியதாகவும் சொல்லியிருக்கிறீர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தமிழ் இலக்கியத்தில் முக்கியப் படைப்பாளி வேறு. ஒரேயொரு கேள்வி. பெரியாரை படிக்காமல் அவர் எப்படி தமிழிலக்கியத்தின் முக்கியப் படைப்பாளி? அவர் அப்படி என்ன அறிவுக் களஞ்சியங்களை உங்களுக்கு காட்டினார் (பெரியாரைத் தவிர்த்து)? பெரியார் பற்றி இப்படி விளக்கம் சொல்லும் நீங்கள் அந்த தோழிக்கு இதுவரை வெரியாரை அறிமுகப் படுத்தாதது ஏன்?
நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். பெரியார் பற்றி உங்கள் மிக நெருங்கிய நண்பருக்கு நீங்கள் சொல்லாத விபரமும் பெரியார் குறித்து படிக்க வேண்டிய ஆர்வமும் எப்படி வந்தது?
பெரியார் படம் நல்லப் படமுங்க. இந்த கருத்தை கொஞ்ச நாளைக்கு மறைச்சி வைங்க. நிறைய பேர் படம் பார்த்துட்டு வரட்டும் அப்புறம் போட்டுக்கலாம்.
மிக்க நன்றி.
மதியழகன் சுப்பையா
மும்பை
தஞ்சை தமிழ் பலகலைக் கழக, நாடகத்துறை பேரா. மு. ராமசாமி அவர்கள் , கலகக்காரர் தோழர் பெரியார் என்ற தமது நாடகம் ஒன்றினை டிவிடியாக வெளியிட்டுள்ளார். கிட்டதட்ட 40தடவைக்கும் மேல் அரங்கேறிய நாடகம், அதையும் ஒரு பார்வை பாருங்களேன்.
//தஞ்சை தமிழ் பலகலைக் கழக, நாடகத்துறை பேரா. மு. ராமசாமி அவர்கள் , கலகக்காரர் தோழர் பெரியார் என்ற தமது நாடகம் ஒன்றினை டிவிடியாக வெளியிட்டுள்ளார்//
வித்யா.. அந்த டிவிடி சென்னையிலே எங்க கிடைக்கும்?
நீங்கள் எதையும் வித்தியாசமாக சிந்திக்க கூடியவர், உங்கள் பெரியார் பட விமர்சனமும் வித்தியாசமாக இருக்கிறது - ஆனால் ஞான ராஜசேகரனை நீங்கள் ஒரு விஷயத்திற்கு நிச்சயம் பாராட்டுவீர்கள், இதுவே இந்தியாவிலேயே சூப்பரான ஒரு தமிழ் இயக்குனர் பெரியார் படத்தை "இது உண்மைக் கதை அல்ல (எங்கப்பன் குதிருக்குள் இல்லை") என்று டைட்டில் கார்ட் போட்டு இயக்கி இருந்தார் என்று வையுங்கள் படத்தில் இசை, ஒளிப்பதிவு எல்லாம் அருமையாக இருக்கும் ஆனால் படம் என்னவோ ரெட்டை வால் குருவி போல் இரண்டு பெண்டாட்டி காரன் கதை போல் இருக்கும், ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் பெரியாரை ஓரளவிற்கு பெரியாராகவே காட்டியதற்கு நிச்சயம் ஞான் ராஜசேகரனை பாராட்டுவீர்கள் தானே? - நாகூர் இஸ்மாயில்
சுகுணா ஐயா.. இந்த படம் வெளிவரும் முன்பே எனக்கு தெரியும் படம் நல்லா இருக்காது என்று.. துக்ளக்கில் எழுதியிருந்தார்களே? பகுத்தறிவு கோட்டை கட்ட நினைத்து எதையோ கோட்டை விட்டுவிட்டார்கள்..
பிரகாஷ்,
அனேகமாக மு.ராமசாமியின் டிவிடி கீழைக்காற்று பதிப்பகத்தில் (அ) தமிழ்முழக்கம் பதிப்பகத்தில் கிடைக்கலாம்.
உண்மைத்தமிழன்,
துக்ளக்கைப் படித்துவிட்டு பெரியாரை அளக்க நினைப்பதைவிடவும் கேணத்தனமான விடயம் வேறொன்றுமில்லை. இதுபோல மொக்கத்தனமாக எதையாவது தொடர்ந்து உளறினால் உங்கள் பின்னூட்டங்களை வெளியிடுவது குறித்து நான் நிறைய யோசிக்கவேண்டியிருக்கும்.
கமண்ட் போட்டு ஒருவாரத்துக்கும் மேல ஆச்சே..... ஒருவேளை தணிக்கை பண்ணிட்டாரோ ன்னு நினைச்சு விட்டுட்டேன்.
தகவலுக்கு நன்றி.. கீழைகாற்று பதிப்பக விலாசத்தை உங்ககிட்ட போன் செஞ்சு கேட்டுக்கிறேன்..
திவாகர்,
வலையுலகில் நான் விரும்பிப் படிக்கும் எழுத்துக்களில் உங்களுடையதும் ஒன்று. சில இடங்களில் உங்களுடன் முற்றிலும் வேறுபட்ட பார்வைகள் தோன்றுவது உண்டு என்றாலும் உங்களின் கலகக்குரல் சாடும் பொருள்களில் பெரும்பாலும் உடன்பாடும், நான் இதுவரை அறிந்திராத நிகழ்வுகளை, செய்திகளை அவ்வப்போது அறிமுகப்படுத்துவதால் உங்களை வாசிப்பதில் தொடர்ந்த ஆர்வமும் உண்டு. பெரியார் படம் பற்றிய இந்த விமர்சனம் நான் உங்களுடன் மாறுபடும் கோணங்களில் ஒன்றானது எனக்கு. எனினும் உங்களைப் போன்றவர்கள் இந்தப் படத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என அறியமுடிந்தது. நன்றி.
பின் குறிப்பாக இரண்டு விடயங்கள்:
"தமிழர் தலைவர்" நூலில் இருப்பதற்கு மாறாகச் சில காட்சிகள் பெரியார் வாழ்வில் வருவதுபோல் காட்டியிருப்பதாகக் குறிப்பிட்டுத் தகவல் புரட்டு வந்திருப்பதாகக் கருதுகிறீர்கள். ஆனால் நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் நூலிலும் சொல்லப்பட்டேயிருக்கிறது.
எலும்புத்துண்டு சோற்றில் போடப்பட்டதாகவே எழுதப்பட்டிருக்கிறது.
"நாகம்மையார் வெள்ளிக்கிழமைதோறும் நோன்பிருந்துவந்தார். இது மாமியார் இட்ட பணி. பிள்ளை இல்லை என்பதற்காகவே இந்நோன்பு. என்றைக்கு விரதநாளோ அன்றைக்குத்தான் தவறாமல் இராமசாமியார்க்குப் புலால் உணவு சமைக்க வேண்டும். நாகம்மாள்தான் பறிமாற வேண்டும். இது இராமசாமியாரின் பிடிவாதம். நாகம்மையார் கணவர் விரும்பும் உணவைச் சமைப்பார், பரிமாறுவார், உடனே நீராடச் சென்றுவிடுவார். இச்சமயத்தில் இராமசாமி சமையலறைக்குள் நுழைவார். அம்மையார் சாப்பிடுவதற்காகத் தனியாக மூடிவைத்திருக்கும் விரதச் சோற்றைத் திறப்பார். அதற்குள் எலும்புத்துண்டைப் புதைத்துவிட்டுப் போய்விடுவார். அம்மையார் சாப்பிடப்புகும்போது சோற்றுக்குள்ளிருந்து எலும்புத்துண்டு தலைநீட்டும். இது இராமசாமியின் குறும்பென்பதை அவர் உணர்ந்துகொள்வார். இவ்வளவுதான் நோன்பும் முடிந்துவிடும்.ளைக்குறும்புத்தனம் ஈ.வெ.ராவின் பெற்றோருக்குத் தெரிந்தது. அவர்களும் கண்டித்தனர்........." (பக்கம் 54)
காசியில் துறவுக்கோலம்கொண்டு வாழவந்தவர்கள் வெளியில் அப்படி வேடமிட்டுக்கொண்டு யாருமறியாதவகையில் மாமிசம் உண்பது, மது அருந்துவது, காமக்களியாட்டங்கள் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்ததைப் பார்த்த பிறகு ஏற்படும் விரக்திதான் பெரியாரை அந்த ஊரிலிருந்து கிளம்பவைத்தது என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
"காசியில் வாழ்க்கை செம்மையாகவும் தூய்மையாகவும் இருக்குமென ஈ.வெ.ரா நம்பியிருந்தார். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, ஒழுக்க ஈனமும், விபசாரமும் மலிந்துகிடப்பதைக் கண்டார். ................................வெளிப்படையாய் விபசாரஞ்செய்வதும் பார்க்கச் சகிக்காததாய் இருந்தது. அதனால் அவருக்கு அவ்வூரில் ஒருவித வெறுப்புத் தோன்றிவிட்டது. உடனே அதைவிட்டுப் புறப்படவேண்டுமென்று தீர்மானித்துவிட்டார்" (பக்கம் 67)
செல்வநாயகி,
தமிழர் தலைவர் நூல் தொடர்பான தரவுகளை என் நினைவிலிருந்தே எடுத்தாண்டேன். எனவே தகவல்பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். மன்னிக்கவேண்டுகிறேன். விமர்சனத்தின் மற்ற அம்சங்கள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?
செல்வநாயகி,
தமிழர் தலைவர் நூல் தொடர்பான தரவுகளை என் நினைவிலிருந்தே எடுத்தாண்டேன். எனவே தகவல்பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். மன்னிக்கவேண்டுகிறேன். விமர்சனத்தின் மற்ற அம்சங்கள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?
கொஞ்சம் விரிவாகவே எழுத எண்ணங்கள் ஓடிக்கொண்டுள்ளன திவாகர். என் பதிவில் இட முயல்வேன், இந்த விமர்சனத்திற்கு ஒரு எதிர்வினையாக அல்ல, படம் எனக்கு ஏற்படுத்திய பாதிப்புகளாக.
பல சிரமங்கள், பெரியாரைப் பிடிக்காதவர்களின் எகத்தாளங்கள், ஏளனங்கள், படத்திற்கு நிதிஉதவி செய்த அரசிலிருந்து, இராமனைப் பழித்ததாகப் பாட்டுக்கெதிராகப் படமெடுத்து ஆடிய பக்திமான்கள் வரைப் பலரைச் சமாளித்துத் திரைக்கு வந்திருக்கும் "பெரியாரை" (பெரியார் படத்தை) உங்களைப் போன்ற பெரியார் காதலர்களே
//ஒருவரியில் சொல்வதென்றால் பெரியார் திரைப்படம் என் காதலியை யாரோ வன்புணர்ச்சி செய்ததைப்போல இருந்தது.//
என்ற காரமான வரியிட்டுக் காய்ச்சியெடுக்கவேண்டியதில்லை, இவ்வளவு காய்ச்சுமளவு இயக்குனர் ஏய்க்கவில்லை என்பது என் கருத்து. அதைமட்டும் இப்போது சொல்லிக்கொள்கிறேன். நன்றி.
வணக்கம்.
//ஒருவரியில் சொல்வதென்றால் பெரியார் திரைப்படம் என் காதலியை யாரோ வன்புணர்ச்சி செய்ததைப்போல இருந்தது.//
ஆனாலும் இது ரொம்ப அதிகம்ங்க. அவ்வளவு மோசமாவா இருக்கு? நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.
ஏதோ தமிழ் நாடு முழுதும் பின் நவீனத்துவ ஆட்களோ, அறிவு ஜீவிகளும், நிரம்பியிருப்பது போல இப்படத்தை விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.
அப்படிப் பட்டவர்களுக்காக இப்படத்தை எடுத்திருந்தால் எந்த அளவிற்கு பெரியார் பற்றிய ஒரு புரிதலை இப்படம் ஏற்படுத்தும் என்பது ஒரு கேள்விக்குறியே.
புத்தகங்கள் மீது அதிக நாட்டம் இல்லாத, என் 4 நண்பர்களுடன் நான் இப்படத்தைப் பார்த்தேன். படம் பார்த்து வெளியே வந்த அடுத்த 15 நிமிடங்களிற்கு யாரும் ஒன்றும் பேச வில்லை.
மௌனம் கலைத்து அவர்களில் ஒருவன் பேசிய முதல் வார்த்தை "வாழ்ந்தா இப்படி வாழணும்டா".
குமுதம், ஆ.வி தாண்டிப் படித்தறியாதவர்கள் என்னிடமிருந்த "பெரியார் ஆகஸ்ட் - 15" புத்தகத்தை நான், நீ என்று போட்டி போட்டு வாங்கிச் சென்றார்கள்.
(அதை அவர்கள் படிக்கிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம்)
பெரியார் படம் உங்களை திருப்திச் செய்ய வில்லையா? அடப் போங்க சார்......... தேவையே இல்லை.
//மௌனம் கலைத்து அவர்களில் ஒருவன் பேசிய முதல் வார்த்தை "வாழ்ந்தா இப்படி வாழணும்டா".//
ஒரு அரைவேக்காட்டு முண்டம் சொல்லியதாம்,"வாழ்ந்தா இப்படி வாழணும்னு", அதை இங்க வந்து பெருமையா இன்னொரு முண்டம் சொல்லிவிட்டு போகிறது.இன்னொரு அல்ப்பம் சொல்கிறது, திரைப்படம் இவரது காதலியை வன்புணர்ச்சி செய்தது போலிருக்கிறது என்று.
தடிக்காரர் செய்யாத வன்புணர்ச்சியா.
இது ஒரு சினிமா.இதுக்கு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலையேன்னு அங்கலாய்க்கும் ஒரு சொறி கும்பல்.போங்கய்யா போங்க ,வேலயைப் பார்த்துக்கொண்டு முன்னேற வழியை யோசிங்க.இந்த மூஞ்சி மாறி வாழணும்னா எல்லாரும் மொட்டை அடித்துக்கொண்டு, வெள்ளை தாடி ஒட்டிக்கொண்டு,கீழ்த்தரமா பேசிக்கொண்டும் திரியணும்.தேவையா இது?என்ன கொடுமை.
அன்புள்ள மிதக்கும்வெளி அவர்களுக்கு,
'நிஜ உண்மைத்தமிழன்(!!!)' எழுதுவது.
என்ன பண்றது? நேரம், காலம் அப்படியிருக்கு.. உங்களுடைய
இந்தப் பதிவில்,
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சுகுணா ஐயா.. இந்த படம் வெளிவரும் முன்பே எனக்கு தெரியும் படம் நல்லா இருக்காது என்று.. துக்ளக்கில் எழுதியிருந்தார்களே? பகுத்தறிவு கோட்டை கட்ட நினைத்து எதையோ கோட்டை விட்டுவிட்டார்கள்..//
இப்படி ஒரு பின்னூட்டம் போட்டது நானல்ல. என் பெயரில் உலா வரும் போலிதான்.
இந்தப் பின்னூட்டத்திற்கு நீங்கள் அளித்திருக்கும் பதில்
//மிதக்கும் வெளி said...
உண்மைத்தமிழன்,
துக்ளக்கைப் படித்துவிட்டு பெரியாரை அளக்க நினைப்பதைவிடவும் கேணத்தனமான விடயம் வேறொன்றுமில்லை. இதுபோல மொக்கத்தனமாக எதையாவது தொடர்ந்து உளறினால் உங்கள் பின்னூட்டங்களை வெளியிடுவது குறித்து நான் நிறைய யோசிக்கவேண்டியிருக்கும்.//
இது உண்மைத்தமிழனினுக்கு இலவசமாகக் கிடைத்திருக்கும் இன்னொரு பாராட்டுரை(!) என்பதால்,
உண்மை நிலவரத்தை உடனே வெளியிட்டு கொஞ்ச நஞ்சம் இருக்கின்ற எனது மானத்தையும் காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்..
நன்றி..
மேலே வந்திருக்கும் உண்மைத்தமிழன் எனும் பின்னூட்டம் போலி உண்மைத்தமிழனுடையது. நான் தான் ஒரிஜினல் ISO 2007:08 உண்மைத்தமிழன்...
தேரா மன்னா செப்புவதுடையேன்..
So will not go.
minute e mini trading system bmw dealership yorkshire four door honda civic club car governor adjustment frosted mini wheats calories
Happy Additional Year[url=http://juvebalo.tripod.com/map.html] harry! :)