எனக்கான தமிழ்மரபு



அன்பே யென்னன்பேயென் றன்பாலமுதரற்றி
அன்பேயன்பாக அறிவழியும் - அன்பன்றித்
தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்.
- திருக்களிற்றுப்படியார்

எப்போதுமே மரபுகள் பற்றிப் பேசுவது சிக்கலானவொன்றுதான். ஒரு தூயகனவாக, லட்சியமாக, கோட்பாடாகத் தொடங்கிப் பின் நிறுவனங்களாகவும் வழிபாடாகவும் சடங்காகவும் மாறி மரபு என்பது சுமையாக அழுத்துகிறது அல்லது அதிகாரமாகத் துருத்துகிறது. எனவே மரபு என்பதை ஆராயப்புகுமுன் அதுகுறித்த விழிப்புமனோநிலை என்பது அவசியமான முன்நிபந்தனையாகிறது.

மனிதத்தன்னிலைகளைக் கட்டமைக்கும் அடையாளங்கள் பன்மைத்தன்மை வாய்ந்தவை. ஆனால் இந்த பன்மைத்தன்மையை கட்டுக்குள் சுருக்கி ஒற்றை அடையாளத்தை வலியுறுத்துபவையாகவே கோட்பாடுகளும் அரசியலும் கட்டப்படுகின்றன. இவையைத் தாண்டி பன்மையின் அவசியமென்பது மண் தாண்டி முளைக்கும் விதை போல் வெளிவந்துதான்விடுகின்றன.

சாதி, மதம், பால், மொழி, தேசியம், வர்க்கம் ஆகிய அடையாளங்கள் இந்தியச்சூழலில் மனித அடையாளங்களாய் விளங்குகின்றன. இவற்றில் சாதி, பால், மொழி ஆகியவை பிறப்பினடியில் வந்தமைவதாய் இருக்கின்றன. வர்க்க மற்றும் மத அடையாளங்கள் மாறுவதாயும் மாற்றிக்கொள்வதாயுமிருக்கின்றன. பால் அடையாளமும் மாற்றிக்கொள்ளக்கூடியதாகவும் மாற்றக்கூடியவர்கள் கணிசமாகவும் இருந்தபோதும் அவையனைத்தும் உடலியல் ரீதியான மாற்றங்களின் பாற்பட்டு விளைகின்றனவே தவிர பாலடையாளங்களை மாற்றிக்கொண்டேயாகவேண்டும் என்னும் நோக்கம் மற்றும் முன் தீர்மானங்களின் அடிப்படையில் அமைவதில்லை.

சாதியும் மொழியும் பிறப்பினடைப்படையில் வந்ததைப்போலவே அவை இயல்பாக அதிகாரத்தை உற்பத்தி செய்பவையாகவும் அமைகின்றன. அதிலும் மொழி என்பது சாதிய, வர்க்க மற்றும் பால் அதிகாரங்களை உற்பத்தி செய்யும் நுண் அதிகாரக்களனாக அமைகிறது.

நமது நினைவுகளும் நிகழ்வுகளும் மொழியின் வழியாகவும் மொழியினடியாய் உருவாகும் படிமங்களின் (குறியீடுகளின்) விளைவாலும் உருவாகின்றன. எனவே மொழி என்பது அதிகாரத்தைக் கட்டமைக்கும் துல்லியமான கருவியாகத் தொழிற்படுகிறது. மொழியை அடிப்படையாகக் கொண்ட பிரதிகளும் அவ்வாறே. அல்லது அத்தகைய பிரதிகள் மட்டுமே 'காலத்தைக் கடந்து நிற்கின்றன'. இது தொகுப்பு மற்றும் தேர்ந்தெடுப்பின் அரசியல். எனவேதான் பெரியார் ஈ.வெ.ராமசாமி 'நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி' என்றார்.

மொழி மற்றும் பண்டைய இலக்கியப்பிரதிகள், பண்டிதப்புலவர்கள் மீதான பெரியாரின் கோபம் என்பது நியாயமானதே. ஆனால் இவ்விடத்து தமிழில் நிலவிவந்த மாற்றுமரபுகள் குறித்து ஆழமான அறிவும் அதை முன்னிறுத்துவதில் முனைப்பும் கொண்ட மயிலை.சீனிவேங்கடசாமிநாட்டார், சாத்தான்குளம்ராகவன் ஆகியோரை பெரியாரும் அவர்தம் இயக்கமும் பயன்படுத்தாமல் விட்டது குறித்த பொ.வேல்சாமியின் விமர்சனங்களையும் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

மொழி என்பது அதிகாரத்தைக் கட்டமைக்கிற பிரதிகளை உற்பத்தி செய்வதைப்போலவே அதிகாரத்தைக் கட்டவிழ்க்கிற/ தகர்க்கிற பிரதிகளையும் உற்பத்தி செய்கிறது. அதிகாரம் மொழியைப் பயன்படுத்துவதைப் போலவே அதிகாரத்தை எதிர்ப்பதற்கும் அதற்கான மாற்றுக் கதையாடல்களை உருவாக்குவதற்கும் நாமும் மொழியையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

மேலும் அதிகாரம் தோன்றும்போதே அதிகாரத்திற்கான எதிர்ப்பு என்பதும் தோன்றிவிடுகிறது. பார்ப்பனீயம், சாதியம், வர்ணதருமம் தோன்றியபோதே அதற்கு எதிரான மரபும் தோன்றிவிட்டது. சனாதனம் மட்டுமே இந்திய மரபல்ல. சாங்கியம், நியாயம், வைசேசிகம், யோகம், மீமாம்சம், லோகாயுதம், ஆசீர்வகம் எனப் பல்வேறு எதிர்மரபுகள் இந்தியச்சூழலில் கிளைத்துப் பரவியிருந்தன. அதிலும் குறிப்பாக ஆசீர்வகமரபு என்பது தமிழ்மனங்களை மிகவும் தாக்கத்திற்குள்ளாகிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றின் பரிணாம வளர்ச்சியில் கிளைத்த பவுத்தமும் சமணமும் இந்தியாவெங்கும் செல்வாக்கு செலுத்தியபோதும் தமிழ்ச்சூழலில் அதற்குக் கிடைத்த ஆதரவே அலாதியானது. தமிழின் அய்ம்பெரும் காப்பியங்கள் அனைத்தும் பவுத்தம் மற்றும் சமணத்தைச் சேர்ந்தவை. அதுபோல அறநூல்கள் என தமிழில் எஞ்சியிருப்பவை அனைத்தும் இவ்விரு அவைதீக மார்க்கங்களைச் சேர்ந்தவையே. பக்தி இலக்கியமும் சனாதனப் பார்ப்பனீயமும் இங்கு எந்தவொரு அறத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (ஆனால் காலாகாலத்திற்குமான எல்லோருக்குமான பாரபட்சமற்ற பொது அறம், பொது ஒழுக்கம் என்ற ஒன்றுகிடையாது என்பதையும் கவனத்திற்நிறுத்துக. இதன்பொருள் அவைதீக மரபுகளின் அறங்கள் குறைகளே அற்றவை என்பதல்ல. மாறாக அவ்வக்காலத்தின் சூழல் மற்றும் தேவையின் விளைவாய் விளைந்தவை என்பதே)

இத்தகைய பவுத்த மற்றும் சமண மரபுகளை இந்துப்பார்ப்பனீயம் விழுங்கிச் செரித்துவிட்டதெனினும் எதிர்மரபு மற்றும் அவைதீக மரபு என்பது முற்றிலுமாக ஓய்ந்துபோகவில்லை. அத்தகைய எதிர்மரபின் விளைவாகவே 'பறைச்சி ஆவதேதடா, பனத்தி ஆவதேதடா, இறைச்சி எலும்பிலும் இலக்கம் இட்டிருக்குமோ?' எனக்கேள்வி கேட்ட சித்தர் மரபு இருந்தது.

அன்பையும் சமத்துவத்தையும் வலியுறுத்திய நாராயணகுரு, வள்ளலார் என அம்மரபின் வெம்மை அணையாமல் காக்கப்பட்டே வந்திருக்கிறது. இம்மரபின் காத்திரமாக கடைசிக்கண்ணியாய் விளங்கியவர்தான் தோழர்.பெரியார். அதேபோல் பவுத்த அறநெறிகளையும் நவீனக் கருத்தாக்கங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றையும் இணைத்து அடிமைத்தன்னிலைகளைத் தகர்ப்பதற்கான கனவுகண்டவர் பாபாசாகேப் அம்பேத்கர்.

இத்தகைய செழுமையான எதிர்மரபின் ஊடேயே நாம் பயணிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் இந்த மரபின் தோல்விகளையும் சரிவுகளையும் சமரசங்களையும் விட்டுக்கொடுப்புகளையும் நடைமுறைக்குழப்பங்களையும் கணக்கிலெடுத்தே ஆகவேண்டும். எல்லா மரபுகளுமே ஒருகட்டத்தில் சடங்குகளாகவும் நிறுவனங்களாகவும் மாறி நீர்த்துப்போவதென்பது இயல்பே. இது மரபை எதிர்ப்பவர்களுக்கும் மறுப்பவர்களுக்கும் கூட பொருந்தும். கூடியவரை அதிகாரநீக்கம் செய்தே இம்மரபை நாம் கைக்கொள்ள வேண்டும்.

உலகின் பசியையும் கண்ணீரையும் துக்கத்தையும் நினைத்து ஆற்றாது கண்ணீர்விட்டு அதற்கான தீர்வுகள் குறித்து முனைப்புடன் செயல்பட்டது மார்க்சியம். உலகமயமாக்கலும் உள்ளூர் முதலாளித்துவக் கொடூரங்களும் நிறைந்துள்ள இன்றைய மூச்சுத்திணறும் சூழலில் மார்க்சியம் என்பது தவிர்க்கவொன்றாய் அமைகிறது. புரட்சிக்குப் பிந்திய சமூகங்களிலும் சோசலிச அரசுகளின் நடைமுறைகளில் ஏற்பட்ட தவறுகளையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு மார்க்சியத்தைக் கழித்துக் கட்டுவது என்பது முட்டாள்தனமாகவும் மனித நலன்கள் குறித்த அக்கறையற்றதாகவுமே அமையும்.

நமது எதிர்கலாச்சார, அவைதீக மரபுகளை மார்க்சியத்துடன் இணைப்பதன்மூலமே நாம் நமக்கான விடுதலையைப் பெறமுடியும். அதிகாரமறுப்பு, எல்லையற்ற பேரன்பு, வாழ்வு மீதான காதல், சகோதரத்துவம், எல்லோருக்குமான கொண்டாட்டத்தை உறுதிசெய்தல் ஆகிய விடுதலையின் மீது மோகங்கொள்வோம்.

.

9 உரையாட வந்தவர்கள்:

  1. மிதக்கும்வெளி said...

    இந்தமாதிரிப் பதிவுக்கெல்லாம் யாருமே பின்னூட்டமே போடமாட்டேங்கிறாப்பா!

  2. Anonymous said...

    நமக்கு போட விருப்பம்தானுங்க. ஆனா போட்டா பின்னாடி யாருமே போடமாட்டாங்களோன்னு போடறதில்லீங்க

  3. Thangamani said...

    பதிவின் மூலத்தோடும், எதிர்மரபின் தேவையோடும் ஒத்துப்போகும் போது மார்க்சியம் குறித்த உங்கள் நம்பிக்கை எனக்கு கேள்விகளை எழுப்புகிறது.

    மார்க்சியம் நம்புதற்குரியதான ஒரு கனவாக இருந்தது; இருக்கிறது. அது விளைவித்த பயன்கள் பல. ஆனாலும், அதுவும் ஒரு அதிகாரமாக, மரபாக மாறுவதும் கண்கூடு. பவுத்தம் எதிர்மரபாக இருந்தது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை நிறுவனப்படுத்தப்பட்ட பவுத்தம் அதிகார மையமாகவும் மாறமுடியும் என்பது.

    //அதிகாரமறுப்பு, எல்லையற்ற பேரன்பு, வாழ்வு மீதான காதல், சகோதரத்துவம், எல்லோருக்குமான கொண்டாட்டத்தை உறுதிசெய்தல் ஆகிய விடுதலையின் மீது மோகங்கொள்வோம்.
    //

    எனவே எதிர்மரபு, கட்டுடைத்தல், அ-நிருவனப்படுத்துதல் என்பதுதான் முக்கியமானது.

  4. Voice on Wings said...

    //இந்தமாதிரிப் பதிவுக்கெல்லாம் யாருமே பின்னூட்டமே போடமாட்டேங்கிறாப்பா! //

    இந்த மாதிரி பதிவுகளுக்கெல்லாம் எதுக்குங்க பின்னூட்டம்? மனசுல ஒரு சில நொடிகளாவது ஒரு கலக்கம் ஏற்படுதே, அது தான் இந்தப் பதிவுக்கான பின்னூட்டம்.

  5. குட்டிபிசாசு said...

    ரொம்ப வருத்தப்படாதீங்க!! நல்ல விஷயத்தை நான் எப்பவும் கைவிடமாட்டேன்!!

    இதேபோன்றதொரு கருத்தை நான் எங்கேயோ படித்த ஞாபகம் (அனேகமாக அண்ணல் அம்பேத்காரின் கட்டுரை)!!

    சிறந்த சிந்தனை!!அறிவுப்பூர்வமான ஆக்கம் !!

    வாழ்த்துக்கள் தோழரே!!

  6. குட்டிபிசாசு said...

    "எனக்கான தமிழ்மரபு" - இப்படி பேரு வச்சா!! யாருக்கும் படிக்க விருப்பம் இருக்கது!!

    "ஷ்ரேயாவும் தமிழ்மரபும்" போடுங்க!! கண்டிப்பா ஷ்ரேயா தேடிபார்த்துட்டு கடுப்பாகி எதாவது திட்டி பின்னூட்டம் போடுவாங்க!!

  7. Anonymous said...

    //எனக்கான தமிழ் மரபு//

    வெளியே மிதக்கும் அய்யா,
    எனக்குத் தெரிந்த வரை,உங்களுடைய தமிழ் மரபு,சாராயம் குடித்துக்கொண்டு,பின் வழியா நவீனமா மார்க்ஸிய,பெரியாரிய,அம்பேத்காரிய குசு விடுவது தான்;உழைக்காமல் ஓசி அடித்தே,குசு விட்டு பிழைக்கும் கும்பல்னா அது உங்களைப்போன்றவர்கள் உள்ள ம க இ க கும்பல் தான்.இந்த அழகுல,இதப் பத்தி நீங்க பீத்திக் கொள்வது இன்னும் கேவலம்.

  8. மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

    சுகுணா:

    //இந்தமாதிரிப் பதிவுக்கெல்லாம் யாருமே பின்னூட்டமே போடமாட்டேங்கிறாப்பா!//

    வாய்ஸ் ஆன் விங்க்ஸ் சொன்னதைத்தான் நானும் சொல்வேன். யோசிக்க வைக்கும் இடுகை இது.

    உங்களுடைய இடுகைகள் ஒன்றையும் தவறவிடுவதில்லை. ஆனாலும் பின்னூட்டம் இடுவதில்லைதான். படித்த கையோடு யோசனைகள் எழ அந்த இடத்திலிருந்து எஸ் ஆயிடுறேன். :)

    மற்றும்படிக்கு, நீங்கல்லாமும் பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறீங்களா என்ன? ;)

    -மதி

  9. -/சுடலை மாடன்/- said...

    அருமையான பதிவு, துல்லியமான சிந்தனை.

    ஆனாலும் தன்னளவில் எதிர் மரபை ஏற்றுக் கொண்டாலும் நடைமுறையில் பல சமயங்களில் சகித்துக் (சமரசம் என்று கூட அழைக்கலாம்) கொள்ளவேண்டியிருக்கிறது. சக மனிதர்களிடம் அதிகார மரபுகளும், எதிர் மரபுகளும் தனித்தனியே பிரிந்து நிற்காமல் அவை பற்றிய பிரக்ஞையில்லாமலேயே விரவிக் கிடக்கின்றன. புத்தர், பெரியார், அம்பேத்கார், மார்க்ஸிய சிந்தனைகளில் உரசிப் பார்க்கும் பொழுதுதான் அவற்றைப் பிரித்தெடுக்க முடிகிறது. அதற்கான முனைப்பும், முயற்சியும் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. அதற்காக சக மனிதர்களை எதிர் மரபை நோக்கிப் பயணிக்கச் செய்யும் முயற்சிகளில் முழு வெற்றி கிட்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அவ்வாறான முயற்சிகள் ஆதங்கம், கட்டுடைத்தல், வார்த்தைக் கலகம், கோபம், வற்புறுத்தல், போராட்டம் என ஜனநாயக வழிகளில் இருக்க வேண்டும். இதைத்தான் பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருந்தார். அதிகார மரபு வன்முறையைச் செலுத்தும் போது மட்டுமே பதிலுக்கு வன்முறையை பயன்படுத்த வேண்டும்.

    //இத்தகைய செழுமையான எதிர்மரபின் ஊடேயே நாம் பயணிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் இந்த மரபின் தோல்விகளையும் சரிவுகளையும் சமரசங்களையும் விட்டுக்கொடுப்புகளையும் நடைமுறைக்குழப்பங்களையும் கணக்கிலெடுத்தே ஆகவேண்டும். எல்லா மரபுகளுமே ஒருகட்டத்தில் சடங்குகளாகவும் நிறுவனங்களாகவும் மாறி நீர்த்துப்போவதென்பது இயல்பே. இது மரபை எதிர்ப்பவர்களுக்கும் மறுப்பவர்களுக்கும் கூட பொருந்தும். கூடியவரை அதிகாரநீக்கம் செய்தே இம்மரபை நாம் கைக்கொள்ள வேண்டும்.//

    இதைத்தான் தங்கமணியும் மார்க்ஸியம் மற்றும் பௌத்தம் நிறுவனமயமாக்கலைப் பற்றிக் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். இந்த நிறுவனமாதல் மார்க்ஸியத்துக்கும் பௌத்தத்துக்கும் மட்டுமல்லாமல் பெரியாரியத்துக்கும் கூடப் பொருந்தும். பகுத்தறிவை மறுக்கும் எந்த இயக்கமும் (பகுத்தறிவு இயக்கம் உள்பட) நிறுவனமயமாகிறது. நிறுவனமயமாதலின் அடுத்த கட்டம் அதிகார வன்முறை. எனவேதான் உலகெங்கும் விடுதலையில் ஆரம்பிக்கும் தேசியவாதங்கள் (இந்திய அல்லது தமிழ் தேசியங்கள் உட்பட) நிறுவனமயமாக்கப் பட்டபின் மற்ற தேசியங்களை ஒடுக்கும் வன்முறைப் பாதையிலே பயணிக்கின்றன.

    எனவே எதிர் மரபு என்பதையே என்னால் அ-நிருவனப்படுத்துதல் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது.

    நன்றி - சொ. சங்கரபாண்டி