வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்-3


திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் 1924, ஏப்ரல் 21 அன்று சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம் இது.

”................ Sir,


..........



Mr. Ramasami Naicker arrived on that day from Erode to take charge of the campaign. If more determined attempts are made to push past the police picquets. Mr. Pitt has all arrangements in hand for the erection of harricades. His latest report suggests that Satyagrahists are deliberately provoking the rank and file of the police to lose their tempers but have failed dismally. Mr. S. Srinivasa Iyenger arrived from madras on the 17th and had an informat conference with the caste - Hindus which seems to have come to nothing, before proceeding to Trivandrum. The latest news is that Mr. Perumal Naidu has relieved Mr. Ramasami Naicker as O.C., Satyagraha Head - quarters." (page 288)

தமிழகத்திலிருந்து வைக்கத்திற்கு வந்த பெரியார்தான் அடுத்த கட்டமாகப் போராட்டத்தைத் தலைமை ஏற்பதற்கும் பரப்புரை செய்வதற்குமான பொறுப்பை மேற்போட்டுக்கொண்டார் என்பதை பேராசிரியர் டி.கே.ரவீந்திரனும் அவர் பின் இணைப்பில் காட்டும் காட்டனின் கடிதமும்  குறிப்பிடத் தவறவில்லை. ஆனாலும் இதனை எல்லாம் தந்திரமாய் மறைத்து, கொஞ்சமும் வெட்கமுமின்றி, ’’கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை” என்று கூசாமல் புளுகுகிறார் ஜெயமோகன்.

டி.கே.ரவீந்திரனின் புத்தகத்தைக் கூட விட்டுவிடுவோம். வைக்கம் போராட்டத்தில் முன்நின்ற கேரள தளகர்த்தர்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் தனது வாழ்க்கைப்பயணம் குறித்து ‘கடந்த காலம்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த புத்தகம் எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் 1998ஆம் ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பகத்தால் தமிழிலும் வெளியிடப்பட்டது.  1886ல் பிறந்த கேசவமேனன் 1969ல் எழுதிய புத்தகம் ’கடந்தகாலம்’. வைக்கம் போராட்டம், மலேசியாவில் வழக்கறிஞர் பணி, பத்தொன்பது ஆண்டுகள் கழித்து இந்தியா வருகை, மாத்ருபூமி ஆசிரியர், 1951ல் இலங்கையில் இந்தியத்தூதராகப் பணி என பல்வேறு அனுபவங்களைச் சந்தித்த கேசவமேனன் இந்த புத்தகத்தை எழுதும்போது அவருக்கு வயது 83. ஆனாலும் மறக்காமல் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை இப்படி குறிப்பிடுகிறார் கேசவமேனன்.

“இக்காலத்தில் வைக்கம் சத்தியாக்கிரகம் அகில இந்தியப் புகழ்பெற்றது. தமிழ்நாட்டிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வைக்கம் வந்து சத்தியாக்கிரகம் செய்து திருவனந்தபுரம் சிறைக்கு வந்தார்” (பக்கம் 163).

அதோடு மட்டுமில்லை, ‘கடந்தகாலம்’ என்பது கேசவமேனனின் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களின் பதிவு என்றால், கே.பி.கேசவமேனனின் ‘பந்தனத்தில் நின்னு’ நூல் (தமிழில் ‘தளைகளை விட்டு’ என்று பொருள்) முழுக்க முழுக்க வைக்கம் போராட்டத்தைப் பற்றியது. மேலும் இதில் உள்ள சிறப்பு, இந்த புத்தகம் 1924ல் மாத்ருபூமி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதாவது வைக்கம் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதே எழுதி வெளியிடப்பட்ட புத்தகம். இந்த நூலின் முன்னுரைக்கான தேதியில் 27.10.1924 என்று தேதி குறிப்பிடுகிறார் திரு கே.பி.கேசவமேனன்.  ‘போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி அரசுக்கு நெருகக்டி கொடுத்தது. ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை’ என்று ஜெயமோகனால் குறிப்பிடப்படும் பெரியார் குறித்த கேசவமேனனின் எழுத்து இது.

“ஸ்ரீமான் ஈரோடு ராமசாமி நாயக்கரும், சிவசைலம் முத்துசாமி என்ற பெயர் கொண்ட மற்றும் இரண்டு சத்தியாக்கிரக கைதிகளும் எங்களுடன் ஒன்றாக இருக்கவில்லை. நாயக்கருக்கு கடுங்காவல் தண்டனை விதித்திருந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் சேர்மனுமாக இருந்தவரும், ஒரு பெரும் பணக்காரரும், உத்தம தேசாபிமானியுமான நாயக்கரின் காலில் தளைகளும் (சங்கிலிகளும்), கைதிகளது தொப்பியும், முழங்கால் வரையிலான வேட்டியும், கழுத்தில் மரத்தாலியும் (மரக்கட்டையும்) மாட்டி, கொள்ளைக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுடன் ஒன்றாக வேலைக்குச் செல்வதைக் கண்டு, கேரளத்தின் தீண்டாமை ஜாதிக்காரர்களது சுதந்திரத்துக்காக தமிழ் நாட்டின் ஒரு பெரிய மேற்குல இந்துவை இப்படிப்பட்ட தியாகத்துக்கு உந்திய சிரேஷ்டமான இயக்கத்தின் மகிமை எங்களுக்குப் புத்துயிர் தராதிருக்கவில்லை. நாயக்கரையும் மற்ற இருவரையும் 'பிரத்தியேகக் கைதிகளாக்கி' வைக்காதது குறித்து திருவிதாங்கூர் கவர்மெண்டுக்கு நாங்கள் அனுப்பிய கடிதத்துக்கு (நாங்கள்) விடுதலையாவது வரை பதில் எதுவும் கிடைக்கவில்லை. கவர் ஒட்டுவது தான் நாயக்கரது வேலை. சாதாரணக் கைதிகள் செய்வதை விட இரண்டு மடங்கு வேலையை நாயக்கர் தினமும் செய்து வந்தார். (பந்தனத்தில் நின்னு - மலையாளம்) பக்.76



இந்த வரிகளை நுட்பமாகப் படித்தால் நமக்கு இன்னொரு உண்மை விளங்கும். கேசவமேனன் வைக்கம் போராட்டம் தொடங்கிய முதல்நாளே கைது ஆகிறார். அவருக்குப் பின் கைது ஆகிய போராளிகளும் கூட ’பிரத்யேகக் கைதிகளாகத்தான்’ சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பெரியாரும் அவரது தோழர்களும் மட்டும் தனிமைச்சிறையில் கால்களில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் மேனன்.

அயல்மாநிலம் தாண்டி தீண்டாமை ஒழிப்பிற்காய்ப் போராட வந்த பெரியார் குறித்து கேசவமேனன் கொண்டிருந்த அறத்தின்பாற்பட்ட மரியாதையையும் ஜெயமோகனின் சிறுமைக்குணத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் நீதியின் அருமை நமக்கு விளங்கும்

                                                                                    (தொடரும்...)

வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்- 2

வைக்கம் போராட்டம் குறித்த குடி அரசு செய்திகள், பெரியாரின் கூற்றுகள் மட்டுமில்லாது சாமிசிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூல், திராவிடர் கழகத்தலைவர் தோழர்.கி.வீரமணி மற்றும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர்.ஆனைமுத்து ஆகியோர் வைக்கம் குறிதது எழுதியுள்ள செய்திகளையும் தகவல்களையும் முன்வைத்தால் கூட ‘அது தி.கவின் அதிகாரப்பூர்வ வரலாறு’ என்று ஜெயமோகன் மறுக்கக்கூடும். ‘வைக்கம் போராட்டத்தில் காந்தியின் எதிர்மறையான செயல்பாடுகள்’ குறித்தும் காந்தியை விமர்சித்தும் தொடர்ச்சியாக ஜார்ஜ் ஜோசப் குடியரசு இதழில் எழுதி வந்தார். ஜார்ஜ் ஜோசப் குறித்த தகவல்களை திரு வி.கவின் வாழ்க்கைக்குறிப்புகள் 1,2, கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள், மபொசியின் ’விடுதலைப்போரில் தமிழகம்’, ஸ்டாலின் குணசேகரனின் ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ ஆகிய நூல்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். இவர்கள் யாரும் ’அதிகாரப்பூர்வ தி.க வரலாற்றாசிரியர்கள்’ அல்ல. மட்டுமில்லாது இவர்களில் பலரும் காங்கிரஸ் சார்பு உடையவர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரியாரோடு முரண்பட்டவர்கள். இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த வரலாற்று ஆய்வு நிகழ்த்த வேண்டும் என்றால் காந்தியின் தொகுப்புநூல்கள், பேச்சுகள், எழுத்துகள், சுயசரிதை, அவரது பிரகடனங்கள், வாக்குமூலங்கள், சிறைக்குறிப்புகள், அவரது சமகாலத்தோழர்களின் பதிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ஆராய வேண்டும். அதை ‘அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வரலாறு’ என்று புறந்தள்ள முடியாது. அம்பேத்கர் குறித்த ஆய்வுக்கும் அஃதே. இவைகள் வரலாற்று ஆய்வின் அடிப்படைகள், ஆய்வாளரின் கடமைகளில் ஒன்று. ஆனால் அதைப் பற்றியெல்லாம் ஜெயமோகனுக்கு என்ன கவலை இருக்கப் போகிறது?

’அதிகாரப்பூர்வ தி.க வரலாறு’ அல்லாத, வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு குறித்த ஆதாரங்களைப் பார்ப்போம். இவை அனைத்தும் தமிழர்களால் எழுதப்பட்ட ஆவணங்கள் அல்ல. ஒரு ஆங்கிலேய அதிகாரி தவிர்த்த மற்ற அனைத்தும் மலையாளிகளால் எழுதப்பட்ட பதிவுகள். அவை கீழ்க்கண்டவை...

Eight Furlongs Of Freedom - T.K.Ravindran

Bandhanathilninnu - K.P.Kesava Menan

Kshetra Pravesanam - T.K.Madhavan

Proceedings Of Travancore Legislative Counsil - 1924, 1925.

Office Note Regarding The Vykom Satyagraha - 1924.

Life Of T.K.Madhavan - P.K.Madhavana.

இந்த ஆவணங்கள் அனைத்திலும் பெரியாரின் பங்களிப்பு விரிவாகப் பேசப்பட்டுள்ளது. வைக்கம் போராட்டம் குறித்த விரிவான ஆய்வு செய்த திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் டாக்டர் டி.கே.ரவீந்திரன் 1980ல் எழுதிய ’Eight Furlongs Of Freedom’ நூலில் வைக்கம் குறித்தும் பெரியார் குறித்தும் எழுதியவைகள் குறித்துப் பார்ப்போம்.

1924, ஏப்ரல் 9ம் நாள் ஏ.கே.பிள்ளை,கே.வேலாயுதமேனன், கே.கே.கேளப்பன், கே.ஜி.நாயர், ஜெபஸ்டின் போன்ற சத்தியாக்கிரகத்  தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதனால் போராட்டம் ஒரு பாரிய பின்னடைவைச் சந்திக்கிறது. போராட்டத்தை மீண்டும் தொடர கேரளாவுக்கு அப்பால் உள்ள சக்திகள் போராட்டத்திற்கு வரவேண்டிய சூழல் உருவாகிறது. இதுகுறித்து திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தைத் தன் நூலில் சுட்டிக்காட்டுகிறார் ரவீந்திரன்.

‘’In fact the movement would have collapsed long ago but for the support it has received from the outside, though the question of opening this road is a pure domestic problem" ( page 63)

கேரளாவுக்கு வெளியிலிருந்து தலைவர்கள் வருவதைக் குறிப்பிடும் ரவீந்திரன், தனது நூலில் அது தொடர்பாக எழுதிய அடிக்குறிப்பு,

‘’ஈ.வெ.ராமசாமிநாயக்கர், அய்யாமுத்துக்கவுண்டர் மற்றும் எம்பெருமாள் நாயுடு போன்ற தமிழகத்தலைவர்கள் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றுக் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் பேச்சு திருவிதாங்கூர் மக்களை ஈர்ப்பதாக இருந்தது.” (பக்கம் 67)

“1924 ஏப்ரல் 14ஆம் நாள் காலையில் இரண்டு குழுவினருடன் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வந்து சேர்ந்தார். வடக்கு, கிழக்கு தெருக்களில் ஈழவர்களை நுழைய அழைத்து வந்தார்” (பக் 88)

”சத்தியாக்கிரகிகளுக்கு ஆதரவும் பணமும் இயக்கத்தை நடத்தும் தலைமையும் சென்னையிலிருந்து கிடைத்தது. ஈ.வெ.ராமசாமி நாயக்கர்  இந்த இயக்கத்துக்குப் புத்துயிர் ஊட்டினார்.  கேரளாவுக்கு வருவதற்கு முன் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிக்கை வெளியிட்டார். உணர்வுபூர்வமான அறிக்கை அது.” (பக் 89)

’தமிழ்நாட்டு அரசியலில் எந்த இடமும் இல்லாத’, ‘தொண்டர்பின்புலம் இல்லாத’ பெரியார் எப்படி தமிழகமக்களுக்கு அறிக்கை விட முடியும், இரண்டு குழுவினருடன் வைக்கத்திற்கு வர முடியும் என்கிற கேள்விகளை ஜெயமோகன் வாசகர்களுக்கும் பொதுவான வாசகர்களுக்கும் முன்வைத்து இனி ரவீந்திரனின் புத்தகத்திற்கு மீண்டும் திரும்புவோம்.

‘’But the support the vaikom  satyagrahis received from madras, both in money and leadership, was very great and impressive." ( page 89).

வைக்கத்தில் கேரளத்தலைவர்களால் தொடங்கப்பட்ட போராட்டம், ஒரு பின்னடைவைச் சந்திக்கிறபோது அதை வழிநடத்தும் பொறுப்பு, அதாவது போராட்டத்திற்குத் தலைமையேற்க வேண்டிய கடப்பாடை தமிழகத்திலிருந்து வந்த பெரியார் ஏற்றுக்கொண்டார் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் ரவீந்தரன். ஆனால் ஜெயமோகனோ, ‘பெரியார் கூட்டத்தில் கோரஸ் பாடினார்’ என்கிறார். ரவீந்திரன் தமிழரோ திராவிட இயக்க ஆதரவாளரோ அல்ல, மலையாளி. அவருக்குப் பெரியார் குறித்து மிகைப்பிம்பங்களைக் கட்டியமைக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. இதையாவது ஜெயமோகன் ஒத்துக்கொள்வாரா? அல்லது தட்டிக்கழிக்க புதிய காரணங்களைக் கண்டுபிடிப்பாரா? ஒருவேளை ரவீந்திரன் குறித்துக் கூட ஜெயமோகன் ஏதாவது புதுக்கதை அவிழ்க்கக்கூடும். ஆனால் அன்றைய நிலையில் வைக்கம் போராட்டத்தால் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்து திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் 1924, ஏப்ரல் 21 அன்று சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தைப் பின் இணைப்பாகக் கொடுத்துள்ளார். இது ஒரு அரசு ஆவணம். யார் வேண்டுமானாலும் இதைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

காட்டன் பெரியார் குறித்து எழுதிய கடிதத்தைப் பார்ப்போம்.

                                                                                          ( தொடரும்....)




சில குறிப்புகள் :

* வைக்கம் போராட்டம் குறித்த ஜெயமோகனின் அவதூறுகளுக்கான மறுப்பை மூன்றுபாகங்களாக எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அது இன்னும் ஓரிரு பாகங்கள் பிடிக்கும் போலிருக்கிறது.

* இந்த கட்டுரைக்கான தரவுகளைத் தந்து உதவியர் திரு.ப.திருமாவேலன். அவருக்கு என் நன்றிகள்.

* பதிவில் வரும் ஆங்கில மேற்கோள்களைத் தட்டச்சியது நான் என்பதால் அதில் வரும் எழுத்துப்பிழைகள் மற்றும் இலக்கணப்பிழைகளுக்கு நானே பொறுப்பு.