வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்-3


திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் 1924, ஏப்ரல் 21 அன்று சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம் இது.

”................ Sir,


..........



Mr. Ramasami Naicker arrived on that day from Erode to take charge of the campaign. If more determined attempts are made to push past the police picquets. Mr. Pitt has all arrangements in hand for the erection of harricades. His latest report suggests that Satyagrahists are deliberately provoking the rank and file of the police to lose their tempers but have failed dismally. Mr. S. Srinivasa Iyenger arrived from madras on the 17th and had an informat conference with the caste - Hindus which seems to have come to nothing, before proceeding to Trivandrum. The latest news is that Mr. Perumal Naidu has relieved Mr. Ramasami Naicker as O.C., Satyagraha Head - quarters." (page 288)

தமிழகத்திலிருந்து வைக்கத்திற்கு வந்த பெரியார்தான் அடுத்த கட்டமாகப் போராட்டத்தைத் தலைமை ஏற்பதற்கும் பரப்புரை செய்வதற்குமான பொறுப்பை மேற்போட்டுக்கொண்டார் என்பதை பேராசிரியர் டி.கே.ரவீந்திரனும் அவர் பின் இணைப்பில் காட்டும் காட்டனின் கடிதமும்  குறிப்பிடத் தவறவில்லை. ஆனாலும் இதனை எல்லாம் தந்திரமாய் மறைத்து, கொஞ்சமும் வெட்கமுமின்றி, ’’கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை” என்று கூசாமல் புளுகுகிறார் ஜெயமோகன்.

டி.கே.ரவீந்திரனின் புத்தகத்தைக் கூட விட்டுவிடுவோம். வைக்கம் போராட்டத்தில் முன்நின்ற கேரள தளகர்த்தர்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் தனது வாழ்க்கைப்பயணம் குறித்து ‘கடந்த காலம்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த புத்தகம் எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் 1998ஆம் ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பகத்தால் தமிழிலும் வெளியிடப்பட்டது.  1886ல் பிறந்த கேசவமேனன் 1969ல் எழுதிய புத்தகம் ’கடந்தகாலம்’. வைக்கம் போராட்டம், மலேசியாவில் வழக்கறிஞர் பணி, பத்தொன்பது ஆண்டுகள் கழித்து இந்தியா வருகை, மாத்ருபூமி ஆசிரியர், 1951ல் இலங்கையில் இந்தியத்தூதராகப் பணி என பல்வேறு அனுபவங்களைச் சந்தித்த கேசவமேனன் இந்த புத்தகத்தை எழுதும்போது அவருக்கு வயது 83. ஆனாலும் மறக்காமல் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை இப்படி குறிப்பிடுகிறார் கேசவமேனன்.

“இக்காலத்தில் வைக்கம் சத்தியாக்கிரகம் அகில இந்தியப் புகழ்பெற்றது. தமிழ்நாட்டிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வைக்கம் வந்து சத்தியாக்கிரகம் செய்து திருவனந்தபுரம் சிறைக்கு வந்தார்” (பக்கம் 163).

அதோடு மட்டுமில்லை, ‘கடந்தகாலம்’ என்பது கேசவமேனனின் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களின் பதிவு என்றால், கே.பி.கேசவமேனனின் ‘பந்தனத்தில் நின்னு’ நூல் (தமிழில் ‘தளைகளை விட்டு’ என்று பொருள்) முழுக்க முழுக்க வைக்கம் போராட்டத்தைப் பற்றியது. மேலும் இதில் உள்ள சிறப்பு, இந்த புத்தகம் 1924ல் மாத்ருபூமி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதாவது வைக்கம் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதே எழுதி வெளியிடப்பட்ட புத்தகம். இந்த நூலின் முன்னுரைக்கான தேதியில் 27.10.1924 என்று தேதி குறிப்பிடுகிறார் திரு கே.பி.கேசவமேனன்.  ‘போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி அரசுக்கு நெருகக்டி கொடுத்தது. ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை’ என்று ஜெயமோகனால் குறிப்பிடப்படும் பெரியார் குறித்த கேசவமேனனின் எழுத்து இது.

“ஸ்ரீமான் ஈரோடு ராமசாமி நாயக்கரும், சிவசைலம் முத்துசாமி என்ற பெயர் கொண்ட மற்றும் இரண்டு சத்தியாக்கிரக கைதிகளும் எங்களுடன் ஒன்றாக இருக்கவில்லை. நாயக்கருக்கு கடுங்காவல் தண்டனை விதித்திருந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் சேர்மனுமாக இருந்தவரும், ஒரு பெரும் பணக்காரரும், உத்தம தேசாபிமானியுமான நாயக்கரின் காலில் தளைகளும் (சங்கிலிகளும்), கைதிகளது தொப்பியும், முழங்கால் வரையிலான வேட்டியும், கழுத்தில் மரத்தாலியும் (மரக்கட்டையும்) மாட்டி, கொள்ளைக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுடன் ஒன்றாக வேலைக்குச் செல்வதைக் கண்டு, கேரளத்தின் தீண்டாமை ஜாதிக்காரர்களது சுதந்திரத்துக்காக தமிழ் நாட்டின் ஒரு பெரிய மேற்குல இந்துவை இப்படிப்பட்ட தியாகத்துக்கு உந்திய சிரேஷ்டமான இயக்கத்தின் மகிமை எங்களுக்குப் புத்துயிர் தராதிருக்கவில்லை. நாயக்கரையும் மற்ற இருவரையும் 'பிரத்தியேகக் கைதிகளாக்கி' வைக்காதது குறித்து திருவிதாங்கூர் கவர்மெண்டுக்கு நாங்கள் அனுப்பிய கடிதத்துக்கு (நாங்கள்) விடுதலையாவது வரை பதில் எதுவும் கிடைக்கவில்லை. கவர் ஒட்டுவது தான் நாயக்கரது வேலை. சாதாரணக் கைதிகள் செய்வதை விட இரண்டு மடங்கு வேலையை நாயக்கர் தினமும் செய்து வந்தார். (பந்தனத்தில் நின்னு - மலையாளம்) பக்.76



இந்த வரிகளை நுட்பமாகப் படித்தால் நமக்கு இன்னொரு உண்மை விளங்கும். கேசவமேனன் வைக்கம் போராட்டம் தொடங்கிய முதல்நாளே கைது ஆகிறார். அவருக்குப் பின் கைது ஆகிய போராளிகளும் கூட ’பிரத்யேகக் கைதிகளாகத்தான்’ சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பெரியாரும் அவரது தோழர்களும் மட்டும் தனிமைச்சிறையில் கால்களில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் மேனன்.

அயல்மாநிலம் தாண்டி தீண்டாமை ஒழிப்பிற்காய்ப் போராட வந்த பெரியார் குறித்து கேசவமேனன் கொண்டிருந்த அறத்தின்பாற்பட்ட மரியாதையையும் ஜெயமோகனின் சிறுமைக்குணத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் நீதியின் அருமை நமக்கு விளங்கும்

                                                                                    (தொடரும்...)

1 உரையாட வந்தவர்கள்:

  1. யோகேஷ்வரன் said...

    தோழர் சுகுணா திவாகர் உங்கள் எழுத்தை தொடர்ந்து படித்து வருகிறவன். ஆனாலும் சொந்தமாக கணினி இல்லாத காரணத்தால், உடனுக்குடன் படித்து பின்னூட்டம் இடமுடிவதில்லை. பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்து நீங்கள் யெழுதியுள்ள தொடர், ஜெயமோகனுக்கான எதிர்வினை மட்டும் அல்ல, பெரியாரை சரியான வழியில் புரிந்துகொள்ள உதவும் கட்டுரையும் கூட... தொடர்ந்து எழுதுங்கள் சுகுணா..... வாழ்த்துக்கள்.