மதுரை நண்பர்களின் கவனத்திற்கு

அன்பின் இனிய மதுரை நண்பர்களுக்கு


10.02.2007 மற்றும் 11.02.2007 ஆகிய இருநாட்கள் புதியகாற்று இதழின் சார்பாக 'தமிழ்ச்சினிமா அகமும் புறமும்' என்னும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம் : ஓயாசிஸ் உணவகம், அழகர்கோவில் அருகில், மதுரை.

10.02.2007 அன்று நடைபெறவிருக்கும் 'தமிழ்சினிமாவும் விளிம்புநிலையினரும்' என்னும் அமர்வில் நான் பேசவுள்ளேன். உங்களுக்கு வாய்ப்பு இருப்பின் மதுரையில் சந்திக்கலாம். என் செல்லாதபேசி 9380497555 மூலமும் தொடர்புகொள்ளலாம். மேலும் இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் நமது வலையுலகில் குறிப்பிடத்தக்க நல்ல பதிவுகளை எழுதியவரும் பால்மீறிகளின் விளிம்புக்குரல்களை ஒலித்தவருமான லிவிங்ஸ்மைல் வித்யாவும் நான் கலந்துகொள்ளும் அமர்விலேயே பேசவுள்ளார். (நல்ல பதிவர் ஏன் இப்போது அதிகம் எழுதுவதில்லை என்று தெரியவில்லை. நேரில்தான் கேட்கவேண்டும்)


தோழமையுடன்
சுகுணாதிவாகர்

விலகிமிதக்கிறேன் goodbye



ஆயிற்று வலையுலகில் எழுத வந்து ஆறுமாதகாலத்திற்கும் மேலாகிவிட்டது.ஏப்ரல் 2006ல் தொடங்கியது ஜனவரி 2007ல் வந்து நிற்கிறது. எழுதத்தோன்றியதை எழுதுவதல்லாது வேறு நோக்கம் ஏதுமில்லை. வலையுலகின் மூலம் பல புதிய நண்பர்களை சம்பாதித்திருக்கிறேன். சில பல எதிரிகளையும்.


சமீபமாக ஒருமாதகாலம் தொடர்ந்து நிறைய எழுதிவிட்டேன். ஜெயமோகனைப்போல எழுதிக்கொண்டிருக்கிறோமோ என்று ஒரு பயம். ஜெயமோகனே எழுதுவதை நிறுத்திவிட்டார். (காகிதங்களும் அழிவிலிருந்து மரங்களும் தப்பித்தன.)'சதா முணுமுணுத்துக்கொண்டிருக்கும் வயதான தகப்பனைப்போல' (செந்திலுக்குப் பிடித்த கவிதைவரி) மாறிவிட்டதாக ஒரு பிரமை.


கொஞ்சகாலம் நிறுத்திப்பார்ப்போம். இதற்கு யார் வலை என்று பெயர் வைத்தார்களோ, வலையில் எழுதுவது ஒரு வியாதி போலவே ஆகிவிட்டது. நேரங்களை இரக்கமற்று விழுங்குகிறது வலை. தீவிரமாய் எதையும் வாசிக்க முடியவில்லை. வெட்கத்தைவிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் வலையில் அடுத்தவர் பதிவையும் கூட வாசிக்க முடிவதோ தோன்றுவதோ இல்லை. நமக்குப் பின்னூட்டம் வந்திருக்கிறதா, பதில் எழுதுவோமா என்றே அலைகிறது மனம்.


புறங்கையை நக்கிச் சுவைக்கும் சுயமோகியாகிப் போவேனோ என்ற அச்சம் வியாபிக்கிறது. அதனால் தற்காலிகமாக ஒரு முடிவு. குறைந்தபட்சம் பிப்ரவரி 14 காதலர் தினம் வரையாவது எழுதாமல் இருக்க வேண்டும் என்ற முடிவு. (நண்பர்கள் தப்பித்தார்கள்). கொஞ்சம் தீவிரமாக வாசிக்க வேண்டியிருக்கிறது, நூல்களையும் நண்பர்கள் வலையில் எழுதுவதையும். சாத்தியப்பட்டால் பின்னூட்டமும் இடலாம்.


என்ன, நான் 1+1=2 என்று எழுதினால் கூட "வெளியே மிதக்கும் அய்யா, தமிழர் மாமா கணக்கைக் கூடக் கட்டவிழ்த்துவிட்டாரா?" என்று பின்னூட்டமிடுகிற பாலா போன்ற நண்பர்களுக்கு போரடிக்கலாம். எனக்கும் பாலா இல்லாமல் போரடிக்கத்தான் செய்யும்.


பார்ப்போம்.

தோழமையுடன்

சுகுணாதிவாகர்.

கருத்துரிமைக்கு கல்தா

பொதுவாக நான் தணிக்கையில் நம்பிக்கையற்றவன். கருத்துரிமையிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை உடையவன் என்று பலமுறை வலியுறுத்தி வந்திருக்கிறேன். அந்த வகையில்தான் பாலா உள்ளிட்ட பலரது பின்னூட்டங்களையும் அனுமதித்து வந்திருக்கிறேன்.


நான் சாதி, இந்துத்துவம், ஆணாதிக்கம், முதலாளியம் ஆகியவற்றிற்கு எதிரானவன். அத்தகைய போக்குகளையே என் எழுத்துக்களில் கண்டிருப்பீர்கள். ஆனால் இதற்கு மாறுபட்ட கருத்துள்ளவர்களோடும் சாத்தியப்பட்டவரை உரையாடியே வந்திருக்கிறேன்.


குறிப்பாக எனது 'பார்ப்பனர்களைப் பாதுகாத்த பெரியார்' பதிவில் இந்த அணுகுமுறையையே கையாண்டிருக்கிறேன். ஆனால் ஒரு உரையாடலும் நடக்கிறபாடாய்த் தெரியவில்லை. மாறாக முன் தீர்மானங்களும் சாதியப்பிடிவாதங்களுமே மீண்டும் மீண்டும் பல்லிளிக்கிறது.


பாலாவைப்பொறுத்தவரை அவர் எந்த பதிவையும் அறிவார்ந்த விவாதங்களோடு எதிர்கொள்வதில்லை. ஒருமுறை ஒரு நண்பர் கேட்டார், "விடாது கருப்பையெல்லாம் நீக்குகிறார்களே, பாலாவை நீக்கமாட்டார்களா? என்று. நான் சொன்னேன். "பிளாக்கே இல்லாதவரை எப்படி நீக்குவது?".


பாலாவின் நோக்கம் உண்மையிலேயே எழுதுவதாயிருந்தால் அவர் தனி வலைப்பதிவை ஆரம்பித்து எழுதலாம். ஆனால் அவர் கழிப்பறைகளில் எழுதிதள்ளுவதைப்போலவே என் பிளாக்கைப் பயன்படுத்துகிறார். பாலாவின் இத்தகைய மனநோயைப் புரிந்துகொள்கிறேன்.மேலும் உலகத்தில் ஆகக்கொடிய மனநோய் சாதிதான் என்பதையும் அந்த மனநோய் பாலாவிடம் அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனாலும் பாலா எழுதுவதற்காக நான் கழிப்பறைகள் கட்டிக்கொண்டிருக்கமுடியாதே?.


மேலும் என் மரணத்தின் ருசி என்ற பதிவில் ஒரு நண்பர் 'எரோடிக் பிளாக்' என்று பின்னூட்டம் போடுகிறார். அந்த சுட்டியைத் தொடர்ந்து சென்றால் நிர்வாணப்படங்கள் காட்சியளிக்கின்றன. எரோட்டிக் பிளாக் பார்ப்பதெல்லாம் நல்லவிஷயம்தான். ஆனால் அதை விளம்பரம் செய்வதற்கு என் பிளாக்தானா கிடைத்தது? பாலா போன்றவர்கள் தனியாக பிளாக் ஆரம்பித்து இத்தகைய நற்பணிகளைத் தொடரலாமே.


ஆகவே நண்பர்களே வேறுவழியேயில்லாமல் இனி வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்யலாம் என்றெருக்கிறேன். இதில் எனக்கு சம்மதமில்லை என்றபோதும் இதைச் செய்ய நேர்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. கொள்கைகளைச் சிலகாலம் நடைமுறைக்காக தளர்த்திக்கொள்ளலாம் என்பதை சமூக இயங்கியல் எப்போதும் நிரூபித்தே வந்திருகிறது.

இது தற்காலிகமான முடிவுதான் என்றாலும் இந்த முடிவு எடுத்ததற்காக வருந்துகிறேன்.

மன்னிக்க வேண்டுகிறேன்.

எனது 'ஈ.வெ.ராவின் வெங்காயமும் கட்டவிழ்ப்பும்' என்னும் பதிவில் நண்பர் பொட்டிக்கடை இட்ட பின்னூட்டத்திற்கு பதில் தெரிவிக்கும் முகமாய் நான் இட்டிருந்த இன்னொரு பின்னூட்டத்தில்,

"தமிழில் நவீன சிந்தனைகளை அறிமுகப்படுத்தியவர்களில் நாகார்ஜுனன், ராஜன்குறை என்ற இரண்டு பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருமில்லை"
என்று குறிப்பிட்டிருந்தேன்.

எனக்கு தனியாக அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் தோழர்.நாகார்ஜுனன் "நான் நீண்ட வருடங்களுக்கு முன்பே நான் பிறந்த பார்ப்பனச் சாதியை உதறிவிட்டே. சாதியத்தை எதிர்த்த சமூக சீர்திருத்தப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக விளிம்புநிலை மக்களின் மீது கவனம் செலுத்தி வருகிறேன். எனவே என்னைப் பார்ப்பனர் என்று குறிப்பிட வேண்டாம்' என்று தெரிவித்திருக்கிறார்.


உண்மையில் தோழர்.நாகார்ஜுனனை இழிவுபடுத்துவது என் நோக்கமில்லை. நாகார்ஜுனன் தமிழின் முக்கியமான புத்திஜீவி, நவீனச் சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் என்ற அடிப்படையில்தான் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தேன்.

முதன்முதலில் தமிழில் பல புதிய விஷயங்கள் குறித்த உரையாடலைத் தொடங்கிவைத்தவர் என்ற முறையிலும் 'கலாச்சாரம், அ-கலாச்சாரம், எதிர்கலாச்சாரம்' என்னும் முக்கியமான நூலைத் தமிழுக்குத் தந்தவர் என்ற முறையிலும் நான் நாகார்ஜுனனை மிகவும் மதிக்கிறேன்.


எனவே என் வார்த்தைகளால் நாகார்ஜுனன் மனம் புண்பட்டிருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.