பீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்

சிம்புவின் ‘பீப்’ பாடலில் உள்ள ஆபாசத்தைவிட முக்கியமானது தொடர்ச்சியாக சமீபகாலங்களில் பெண்களை வஞ்சகர்களாகச் சித்தரிக்கும் மனநிலைதான். பெண் வெறுப்பு என்பதற்குப் பட்டினத்தார் காலத்தில் இருந்து நமக்கு ஒரு நீண்ட மரபு இருக்கிறது. சிம்புவின் பெரும்பாலான படங்கள் பெண் வெறுப்பை முன்வைப்பவை. ‘மன்மதன்’ அதில் உச்சம். ‘பெண்கள் ஆண்களை எளிதில் கழட்டிவிடுபவர்கள்’ என்கிற கருத்து சமீபகாலமாக நகைச்சுவைக் காட்சிகள், பாடல்கள் வழியாகப் பரப்பப்படுகிறது. சந்தானத்தின் பெரும்பாலான வசனங்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். இவற்றுக்குத் திரையரங்களில் ஆரவாரத்துடன்கூடிய கைதட்டல்களும் கிடைக்கின்றன. ‘ரோமியோ ஜூலியட்’டில் ஜெயம் ரவி பேசக்கூடிய இத்தகைய வசனங்களுக்கும் ‘மாரி’ தனுஷின் வசனங்களுக்கும் இத்தகைய கைதட்டல்கள் குவிகின்றன. பெரும்பாலும் பி அண்ட் சி சென்டர்களில் இத்தகைய வசனங்களுக்குப் பெருத்த ஆதரவு இருப்பதை மறுக்கமுடியாது.
சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவில் காதல் சோகத்தைப் பிழியப் பிழியக் கொடுத்தவர். ஆனால் அத்தனையும் ஆணின் சுயபச்சாதாபம் ஒலிக்கும் பாடல்கள். மின்சார ரயிலில் உடன் பயணிக்கும் கல்லூரித் தோழனைப் பிடித்திருந்தாலும்கூட, காதலுக்குச் சம்மதம் தெரிவிக்காத நாயகி. ‘ஒருதலை ராகம்’ காலகட்டத்தில் பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்ட வெளி என்பது மிகக்குறைவு. அப்போதுதான் பெண்கள் பெருவாரியாக வீட்டைத் தாண்டி வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்த காலகட்டம். திருமணத் தேர்வோ பாலியல் தேர்வோ பெண்கள் கையில் இல்லாத காலகட்டம். அப்போது காதல் தோல்வி என்பது ‘குழந்தை பாடும் தாலாட்டாக’வும் ‘மேற்கில் தோன்றும் உதயமாக’வும் ‘இரவு நேரப் பூபாளமாக’வும் மட்டுமே இருந்தது. ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்று காதல் தோல்வி அடைந்த ஆண் சுய பச்சாதபத்தில் புலம்பித் தவித்தான்.
ஆனால் சிம்புவின் காலம் முற்றிலும் வேறுபட்டது. பெண்களுக்கான வெளி விரிவடைந்திருக்கிறது. முற்றிலுமாக இல்லை என்றாலும் பாலியல் தேர்வு, திருமணத் தேர்வு ஆகியவற்றைத் தீர்மானிக்கக்கூடிய கணிசமான வெளி பெண்களுக்கு உருவாகியிருக்கிறது. சுயேச்சையான பெண்கள் உருவாகும் காலகட்டம் ஆண்களை அச்சுறுத்துகிறதோ என்று நினைக்கிறேன். தங்கள் ஆளுகைக்குக் கீழ் இருந்த பெண்கள் கொஞ்சம் மீறிப்போனாலும் அவர்களை ஏமாற்றுக்காரர்களாகச் சித்தரிக்க ஆண்மனம் துடிக்கிறது.
டி.ஆர் காலத்து காதல் தோல்விப் பாடல்கள் அனைத்தும் சோகப்பாடல்கள். ஆனால் இப்போதைய காதல் தோல்விப் பாடல்கள் சோகப் பாடல்கள் அல்ல. டாஸ்மாக்கில் குடித்து குத்தாட்டம் போடுகிற துள்ளலிசைப் பாடல்கள். ‘பூக்களைத்தான் பறிக்காதீங்க; காதலைத்தான் பிரிக்காதீங்க’ என்று காதலர்களின் பெற்றோர்களைக் குற்றம் சாட்டுபவையல்ல. முழுக்க முழுக்க பெண்களை வசைபாடுபவை இந்தப் பாடல்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள். காதலர்களைப் பிரிக்கிற வில்லத்தனமான பெற்றோர்களைக்கூட சமீபகால படங்களில் அதிகம் பார்க்கமுடியவில்லை. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’ என்று இளைஞர்களைக் கவரும் பெரும்பாலான படங்களில் காதலின் வெற்றியையோ தோல்வியையோ தீர்மானிப்பவளாகப் பெண்ணே காட்டப்படுகிறாள். எனவே ‘அப்பாவி ஆண்களின் காதல் தோல்விக்குக் காரணம் மோசக்காரப் பெண்கள்’ என்கிற கதையாடல் உருவாக்கப்படுகிறது. இப்படியான கதையாடல் சமீபகாலமாகத்தான் உருவானது என்பது கவனிக்கத்தக்கது.
ஒருவேளை ஒரு பெண் ஆணைக் காதலித்து விட்டு கழட்டிவிட்டால்கூட அதில் என்ன தப்பு இருக்கிறது? பாலியல் தேர்வு, திருமணத் தேர்வு, காதல் தேர்வு ஆகியவை பெண்களுக்கு இருக்கக்கூடாதா என்ன? டி.ராஜேந்தர் காதல் தோல்வியில் மருகிக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ரெட்டைவால் குருவி, சிந்து பைரவி, சதிலீலாவதி என்று வரிசையாகப் படங்கள் வெளியாகின. மடக்கிப்போடுவதும் கழட்டிவிடுவதும் ஆண்களுக்கே உரித்தான உரிமையா என்ன? 
ஆனால் அதேநேரத்தில் தமிழ் சினிமா என்பது முற்றிலும் இப்படியான பழமைவாதப் பார்வையோடு மட்டும் இல்லை. எம்.ஜி.ஆர் காலம் தொட்டு கே.எஸ்.ரவிக்குமார், ரஜினி காலம்வரை ‘பொம்பளைன்னா இப்படி இருக்கணும், அப்படி நடக்கணும்’ என்கிற நான்சென்ஸ் குரல்களை இப்போதைய தமிழ் சினிமாக்களில் அதிகம் பார்க்கமுடியவில்லை. ‘பொம்பளை சிரிச்சாப் போச்சு’ என்று அபத்தமாகப் பேசிய தமிழ் சினிமாவில் பெண்கள் குடிப்பதே இயல்பாகக் காட்டப்படுகிறது. சிலகிலோமீட்டர்கள் தமிழ் சினிமா நகர்ந்திருந்தாலும்கூட சிம்பு போன்றவர்களால் இன்னும் ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ மனநிலையிலிருந்து வெளிவரமுடியவில்லை. இது ஏதோ சிம்புவின் பிரச்னை மட்டுமில்லை. தமிழ்ச்சமூகத்தின் மனநிலைக்கே இப்படியான பிரச்னைகள் இருக்கின்றன.
80கள் தொடங்கி 90களின் இறுதிவரை பெரும்பாலான தமிழ் சினிமா டூயட் பாடல்களின் சாரம் ஒன்றுதான். ஆண் பெண்ணைப் பாலுறவுக்கு அழைப்பான். பெண்ணோ ‘எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்’ என்பாள். இந்த ஒரே உரையாடலை வேறு வேறு வரிகளைப் போட்டு நம் பாடலாசிரியர்கள் எழுதியிருப்பார்கள். இப்படி டூயட் பாடல்களில் திருமணத்துக்கு முன்பான பாலுறவுக்கான ஆணின் கோரிக்கையை ரசித்த தமிழ்ச்சமூகம்தான், குஷ்பு ‘திருமணத்துக்கு முன்பான பாலுறவு’ குறித்துப் பேசியபோது கொதித்தெழுந்தது. விளக்குமாறுடன் குஷ்புவின் வீட்டுக்கு முன்பு குவிந்தது. தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. எல்லாம் கொஞ்சகாலம்தான். அடுத்த சில ஆண்டுகளிலேயே செல்வராகவன் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் திருமணத்துக்கு முன்பான பாலுறவைக் காட்சிப்படுத்தினார். போராடியவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இப்போதைய படங்களில் நாயகிகள் குடிப்பதோ, ஏ ஜோக் சொல்வதோ, திருமணத்துக்கு முன்பு பாலுறவு கொள்வதோகூட தமிழர்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னொருபுறம் ‘பெண்கள் காதலனை ஏமாற்றும் நயவஞ்சகர்கள்’ என்கிற பாடல்களையும் ரசிக்கிறது. இதுதான் தமிழ்ச்சமூகத்தின் இரட்டை மனநிலை.
‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் உள்ள இரட்டை அர்த்த வசனங்கள் பலரால் கண்டிக்கப்படுகின்றன. நமது தெருக்கூத்தில் பபூன் பேசும் வசனங்களிலோ, கரகாட்டக் கலைஞர்களின் நடன அசைவுகளிலோ, வெண்ணிற ஆடை மூர்த்தி பேசும் வசனங்களிலோ, தீப்பொறி ஆறுமுகத்தின் மேடைப்பேச்சுகளிலோ இல்லாத ஆபாசமா அதில் இருக்கிறது? உண்மையில் ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தின் பிரச்னையே வேறு.
படத்தின் நாயகன் ‘வெர்ஜின் ஆண்’. ‘நான் வெர்ஜின் ஆண். எனக்கு வெர்ஜின் பெண் வேண்டும்’ என்கிறான். ஆனால் அவனுக்கு ‘வெர்ஜின் பெண்’ணே கிடைக்கவில்லை. பிறகு அந்த ‘வெர்ஜின் பையன்’ பெண்களுக்கு சாபம் விடுகிறான். சரி, அவன் ஏன் வெர்ஜின்? அவனுக்கும் பாலுறவு கொள்ள சில சந்தர்ப்பங்கள் அமைகின்றன. ஆனால் ஒருமுறைகூட அவனால் அதை வெற்றிகரமாக ‘நிறைவேற்றமுடியவில்லை’. வேறு வழியில்லாமல் அவன் வெர்ஜினாக இருக்கிறான். அவனுக்குப் பாலுறவு தேவை. அது அவனுக்குக் கிடைக்கவில்லை. வேறுவழியில்லாமல் வெர்ஜினாக இருப்பவன், வெற்றிகரமாகப் பாலுறவு கொண்ட பெண்களைத் தூற்றி, சாபம்விடுகிறான். இந்த ‘வேறுவழியில்லாத வெர்ஜினிட்டி’தான் தமிழ்ச்சமூகத்தின் மனநிலையே. உண்மையில் இதுதான் ஆபாசம்.
சிம்பு போன்றவர்களுக்கோ ‘பெண்கள் ஆண்களை ஏமாற்றுகிறார்கள்’ என்ற மாபெரும் பிரச்னை தவிர உலகத்தில் வேறு எந்தப் பிரச்னையும் கிடையாது. ஒப்பீட்டளவில் பெண்களுக்குத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிற வெளி கிடைத்திருக்கிறது என்று நான் மேலே கூறியது உண்மைதான். ஆனால் முழு உண்மையல்ல. நகரங்களில் பெண்களுக்கு தேர்வுக்கான வெளி உருவாகியிருக்கும் காலகட்டத்திலேயே சென்னைக்கு அப்பால் சாதி மீறிப் பெண்கள் காதலிப்பதால் கௌரவக்கொலைகள் நடக்கின்றன. ‘பெண்கள் சாதிக்குள்ளேயேதான் காதலிக்கவேண்டும்’ என்று சாதியத் தூய்மைவாதம் பேசும் புதுப்புது சாதித்தலைவர்கள் அவதாரம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு அந்தச் சாதியைச் சேர்ந்த கணிசமான இளைஞர்களின் ஆதரவு கிடைக்கிறது. இந்த உளுத்துப்போன பழமைவாத சாதியச் சிந்தனையை ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என்று தொழில்நுட்பம் உருவாக்கிக்கொடுத்திருக்கும் நவீன ஊடகங்கள் வழியாக இளைஞர்கள் பரப்புகிறார்கள். இது எவ்வளவு மோசமான சூழல்? ஆனால் தமிழ் சினிமாவோ காதலைப் பிரிக்கும் வில்லத்தனமான பெற்றோர்களைக் காட்சிப்படுத்துவதைக்கூட கைவிட்டுவிட்டு ‘பெண்கள் வஞ்சகர்கள்’ என்று பாடித்திரிகிறது.
பீப் சாங்கை எதிர்க்கும் பெரும்பாலான போராளிகளும் இத்தகைய இரட்டைமனநிலை கொண்டவர்கள்தான். அவர்களுக்கு அந்தப் பாடலில் கெட்டவார்த்தை இடம்பெற்றிருப்பது ஒன்றுதான் பிரச்னை. அந்த பீப் மட்டும் இல்லாவிட்டால், பெண்களை வஞ்சர்களாகச் சித்தரிக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களில் இதுவும் ஒரு வெற்றிகரமான பாடல். ‘ஆபாசத்தை’ எதிர்ப்பது எளிதான ஒன்று. அதற்கு போலியான கலாசாரத் தூய்மைவாத மனநிலை இருந்தால் மட்டும் போதும். உண்மையில் இருப்பதிலேயே ஆபாசமானது தமிழ்ச்சமூகத்தின் போலியான இரட்டை மனநிலைதான்.

0 உரையாட வந்தவர்கள்: