ஈழப்பிரச்சினை : கருணாநிதி மட்டும்தான் துரோகியா?

ஈழத்துப் போர்ச்சூழல்கள் மென்மேலும் மோசமாகிக்கொண்டிருக்கும் சூழலில் குறிப்பாக ஈழத்தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத அரசால் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் சூழலில் வெறுமனே உணர்ச்சிவசப்படுதலோ மய்யநீரோட்ட அரசியல் அடிப்படையிலான கருத்துப்போர்கள் மட்டுமே தீர்வாகாது. மாறாக, இன்றைய எதார்த்தநிலைமைகள் குறித்த அவதானிப்பு நமக்கு அவசியமாகிறது.

'கிளிநொச்சி வீழ்ந்ததற்கே கருணாநிதிதான் காரணம்' என்கிற வகையிலான இணையப்பதிவுகள் நகைப்புக்குரியன. இதனாலேயே கருணாநிதி ராஜினாமா செய்யவேண்டும், அவர் தமிழினத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்கிற கோபப்பதிவுகளின் நியாயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறதென்றாலும் இன்றுள்ள சிக்கல்களுக்குக் கருணாநிதி மட்டுமே காரணமில்லை என்பதை சற்று ஆழ்ந்து யோசித்தால் உணரமுடியும். மேலும் ஈழப்பிரச்சினையில் மட்டும்தான் கருணாநிதி தமிழினத்திற்குத் துரோகமிழைத்தாரா என்ன? காவிரிப்பிரச்சினை தொடங்கித் தமிழகத் தமிழர்களின் பல்வேறு வாழ்வாதாரப்பிரச்சினைகளிலும் கருணாநிதி அவ்விதமே செயல்பட்டு வந்திருக்கிறார். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டத்தை ஓராண்டாகக் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது ஆளுநர் உரையில் மீண்டும் ஒகேனக்கல் திட்டம் குறித்து பூச்சாண்டி காட்டிவருகிறார். இப்போது கருணாநிதி தமிழினத்திற்கு இழைத்துள்ள துரோகங்களின் எண்ணிக்கை ஒன்று கூடியிருக்கிறதே தவிர வேறல்ல.

மேலும் ஈழப்பிரச்சினையில் கருணாநிதி மட்டுமல்ல, அவரளவிற்குச் சமரசங்களையும் துரோகங்களையும் பின்னடைகளையும் நிகழ்த்திக்காட்டியதில் பிரபாகரனும் சளைத்தவரில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. கருணாநிதி மட்டும்தான் சந்தர்ப்பவாத அரசியல்வாதியாகவும் பிரபாகரன் சமரசமற்ற போராளி என்பதுபோலவும் வரைந்துகாட்டப்படும் சித்திரங்கள் கேலிச்சித்திரங்களே. ஒருவேளை நாளை ஈழத்தில் முற்றாகப் புலிகள் சிங்கள அரசால் ஒழிக்கப்படுவார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஈராக்கில் அமெரிக்க வல்லாதிக்கத்தால் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டபோது ஈராக்கில் பெரிய அளவில் ஆயுதத் தாங்கிய போராளிக்குழுக்கள் இல்லை. ஆனாலும் மக்களே தன்னெழுச்சியாக அமெரிக்க மற்றும் அதன் நேசநாடுகளின் ராணுவத்திற்கு எதிரான தன்னெழுச்சியான போராட்டங்களை நிகழ்த்தி வந்தனர், வருகின்றனர். ஆனால், நாளை புலிகள் இல்லாத சூழலில் ஈழத்தில் அவ்வாறான மக்கள் போராட்டங்கள் நிகழுமா? புதைப்பது, விதைப்பது என்கிற வீரவசனப் படங்காட்டுதலைத் தள்ளிவைத்துப் பார்த்தால் அப்படி நடப்பதற்கான எந்த சாத்தியங்களுமில்லை என்பதே எதார்த்தம். மலையகத்தமிழர், முஸ்லீம்கள் ஆகியோரை ஈழப்போராட்டத்தினின்று ஒதுங்குவதற்கு/ஒதுக்குவதற்கான சூழலை உருவாக்கியது யார்? எண்ணற்ற போராளிக்குழுக்கள் அழிந்துபோனதும் பேரினவாத அரசின் கைக்கூலிகளாகவும் மாறிப்போனது யாரால்? இத்தகைய கேள்விகளையும் சேர்த்தே நாம் யோசிக்க வேண்டும்.

மேலும், இன்றைக்குக் கருணாநிதிக்கு இருக்கும் மிக முக்கியமான சிக்கலான ராஜீவ் கொலையை நிகழ்த்தி அத்தகைய சிக்கலை உருவாக்கியதும் புலிகள்தான். (இதன் அர்த்தம் ராஜீவ் ஒரு புனிதமான மனிதர் என்பதோ அவர் கொலை தவறு என்பதோ அல்ல). மேலும் புதியபோராளி என்னும் மார்க்சிய லெனினிய இதழில் தோழர் சமரன் எழுதியிருப்பதைப் போல புலிகள் தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் ஆதரவை மட்டுமே எதிர்பார்த்து நிற்பதும் வேறு நாடுகளோடு எவ்வித உறவுகளையும் வளர்த்துக்கொள்ளாததும் அறிவீனமான செயல். இப்போது ஒபாமாவை எதிர்பார்த்து புலிகள் இயக்கம் நிற்பதாய்த் தெரிகிறது. இது மேலுமொரு ‘கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிதலைப்‘ போன்றதே. நிச்சயமாக நாளை தமிழீழம் அமைந்தாலும் அது அமெரிக்க ஆதரவு நாடாகத்தான் இருக்கும் என்பதும் கியூபா, நேபாளம் போலவோ அல்லது குறைந்தபட்சம் வெனிசுலா போலவோ குறைந்தபட்ச ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை அற்ற நாடாகக் கூட இருக்காது என்பது வெளிப்படையான உண்மை.

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் விட்டுவிடுவோம். தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளுக்கு வருவோம். சி.பி.அய் முதன்முதலாக ஈழப்பிரச்சினை குறித்துப் பேசத்தலைப்பட்டதே கூட்டணியை உருவாக்க முயல்கிற சாதுர்யத்தின் அடிப்படையிலேயே. அதுவும் இப்போது தா.பா தலைமையிலான சி.பி.அய் மய்யநீரோட்ட வலதுசாரிக்கட்சியான அதிமுகவோடு நெருக்கம் காட்டுவது மிகவும் ஆபத்தான ஒன்று. அதிமுக வெளிப்படையான தேவர் ஆதரவுக்கட்சி. தா. பாவோ ஒரு ‘கம்யூனிஸ்ட்‘ ஆகக் காட்டிக்கொண்டாலும் அகமுடையார் சங்கவிழாவில் கலந்துகொண்டவர். எனவே சி.பி.அய் & அதிமுக கூட்டு என்பதே பார்ப்பன & தேவர் கூட்டுதான். இன்னொருபுறம் சி.பி.எம் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாலேயே திமுகவை விட்டு வெளியேறியது. ஆனால் பகிரங்கமாக அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் விஜயகாந்தை கூட்டணிக்காக வெட்கமின்றிச் சந்தித்தது. இப்படித்தான் முன்பு எம்.ஜி.ஆரை வளர்த்துவிட்டதில் சி.பி.எம் கட்சிக்குப் பெரும்பங்குண்டு. எம்.ஜி.ஆர், விஜயகாந்த் மாதிரியான கருத்தியல் அடிப்படையற்ற சக்திகளை வளர்த்து விடுவதன் மூலம் எந்நேரமும் அவர்கள் வலதுசாரி சக்திகளோடு உறவு வைத்துக்கொள்வதற்கான சூழலை உருவாக்கித்தரும் குற்றமும் ‘இடதுசாரி‘களையே சாரும். ‘கருணாநிதி ஏன் மன்மோகன் அரசிலிருந்து விலகவில்லை?‘ என்று கேள்வி கேட்பவர்கள் சி.பி.அய்யும் மதிமுகவும் ஏன் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை என்று கேட்பதில்லை என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

எப்படியிருப்பினும் இன்று திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்று பிரிந்து கிடக்கிற ‘ஈழவிடுதலை ஆதரவாளர்களாக‘க் காட்டிக்கொள்கிற மய்யநீரோட்ட அரசியல் சக்திகள் வலியுறுத்தக்கூடிய ஒரே கோரிக்கை, ‘இந்திய அரசே இலங்கையில் போரைத் தடுத்து நிறுத்து‘. உண்மையில் இது ஒரு அபத்தமான கோரிக்கை. இந்தியா என்பது ஒரு தெற்காசியப் பேட்டை ரவுடி. அதன் ஆதிக்க நலன்களுக்கு இப்போதைக்கு ஏற்றது பேரினவாத அரசு ஆதரவு. மற்றும் இந்திய அரசைப் பின்னிருந்து இயக்கம் ஆளும் வர்க்க முதலாளித்துவச் சக்திகளின் பெரு முதலீடுகள் சிங்களப் பேரினவாத அரசிற்கு ஆதரவானவை. மேலும் இலங்கை அரசைப் போலவே இந்தியாவும் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் என சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வரும் சொந்த மக்கள் மீதே அடக்குமுறையையும் வன்முறையையும் ஏவிவரும் ஆதிக்க அரசு. ஒரு ஆதிக்க அரசிடம் எப்படி இன்னொரு ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை வைக்க இயலும்?

ஆனால் புலி ஆதரவாளர்களோ இன்னமும் இந்தியாவையே நம்புகின்றனர். அதற்காக பாகிஸ்தான் எதிர்ப்பு, சீன எதிர்ப்பு ஆகியவற்றைப் பேரமாக முன்வைக்கவும் தயங்குவதில்லை. இது ஒரு பச்சைச் சந்தர்ப்பவாதமே. இன்னொரு நகைமுரணையும் யோசித்துப் பாருங்கள். இங்கு புலிகளை ஆதரிக்கும் தமிழ்த்தேசியச் சக்திகளின் எதிரி இந்தியத் தேசியமும் அதன் ஆளும் வடிவமான இந்திய அரசும். ஆனால் புலி மற்றும் புலி ஆதரவாளர்களின் ‘நம்பிக்கை நட்சத்திரம்‘ அதே இந்திய அரசு. அப்படியானால் தமிழீழத்தேசியத்தை முன்வைக்கும் புலிகள் தங்கள் அரசியல் வெற்றிக்காகத் தங்களை ஆதரித்து வரும் தமிழ்த்தேசியச் சக்திகளின் கருத்தியல் அடிப்படைகளைக் காட்டிக்கொடுக்க முனைகின்றனர் என்பதே எதார்த்தம்.

எனவே கருணாநிதி மட்டுமல்ல, சி.பி.அய், ராமதாஸ், மதிமுக, புலிகள், புலி ஆதரவாளர்கள் என அனைவருமே தங்களால் இயன்றவரை ஈழப்போராட்டத்திற்குத் தங்களால் இயன்ற துரோகத்தைச் செய்துவருகின்றனர். ஈழப்போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் தினமலரோடு கருத்தியல் மற்றும் வர்த்தக உறவுகளைப் பேணும் காலச்சுவடு, உயிர்மை இதழ்களின் பக்கங்களையும் மேடைகளையும் பகிர்ந்து கொள்ளும் ஈழ ஆதரவு தமிழக மற்றும் ஈழ இலக்கியவாதிகள் வரை இந்த துரோகம் தொடர்கிறது. எனவே ஈழப்போராட்டத்தில் ஒரு உறுதியான நிலைப்பாடு எடுக்க வேண்டுமானால் இதுவரையிலான போராட்டம் குறித்த விமர்சனப் பார்வையும் இந்திய அரசின் வர்க்க மற்றும் சாதியக் கருத்தியல் சார்பு/ தன்மை குறித்த கருத்தியல் தெளிவும் அவசியம். இன்று இந்திய அரசை நோக்கி நாம் முன்வைப்பதற்கு இரண்டு கோரிக்கைகளே இருக்கின்றன, ‘‘ இந்திய அரசே இலங்கைப் பேரினவாத அரசிற்கு ஆயுதங்கள் வழங்கித் துரோகமிழைப்பதை நிறுத்து! இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு!‘‘

இந்த கோரிக்கைக்கான மக்கள் இயக்கங்களைத் திரட்டுவதே இந்திய அரசின் மீதான நிர்ப்பந்தமாய் மாறும். இல்லாவிட்டால் ‘ஈழத்தில் எத்தனைப் படுகொலைகள் நிகழ்ந்தாலும் ‘தலைவர்‘ பிரபாகரனை மட்டும் பிடிக்கவே முடியாது‘ என்று ‘நம்பிக்கைக்‘கட்டுரைகள் எழுதி ஆற்றுப்படுத்திக்கொண்டு நம்மை நாமே பிரமாதமாய் ஏமாற்றிக்கொள்ளலாம்.