பெண்கள் அர்ச்சகராக வேண்டாம்


"இந்து மதத்தில் ஏன் பெண்கள் அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம்:பெண்களுக்கு இயற்கையான மாதவிடாய் நிகழ்வு நாட்களில் உடல் உபாதை கூடியிருக்கும் பெண்களில் பலருக்கு தாளமுடியாத வலி என்று சரியாக உட்காரக்கூட முடியாமல் வலியால் துடிப்பது என்பது சாதாரணமான பொதுஅறிவுடைய வெகுதியானவர்கள் அறிந்த உண்மை.கோவில்களில் கருவறையில் இறைவனைப் பூஜிக்கின்ற செயல் என்பது ஆறுகால பூஜை என்கிற இடைவிடாது நின்ற நிலையிலேயே இறைவன் உருவச்சிலைகளுக்கு அபிஷேக, அலங்காரம் என்கிற குனிந்து நிமிர்ந்து செய்யும் செயல்களைச் செய்யவேண்டிய கட்டாயம் உடையது.மேற்படியாக கடுமையான வலியில் இந்தக் காலகட்டத்தில் அவதியுறும் பெண்கள் குழந்தைகள், கணவன், குடும்பத்தார் மீதே எரிந்து விழுந்து, பொறுமையிழந்தவர்களாய் கிட்டத்தட்ட "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" நபர்கள் மாதிரி நடந்து கொள்வார்கள்.மேலும் பண்டைய காலத்தில் இந்துக் கோவிலில் இறைவனுக்குச் சேவை செய்தபடியே வேதம் சொல்லித் தந்த ஆசிரியர்களாகவும் இருந்தவர்கள், அந்தந்த ஊர் வழக்குகளில் நீதியும் சொல்லியிருந்து இருக்கின்றார்கள்.நீதி சொல்லும் நபர் நிதானத்துடன் நியாய அநியாயம் உணர்ந்து சொல்லவேண்டியது கடமை ஆதலால், உடல் உபாதை, வலி காரணமாக மாதத்தில் சில நாள் நிதானம் இழக்கும் பெண்கள் ஆலய அர்ச்சகர்களாக இந்தப் பணிக்கு உகந்தவர்களாக கருதப்படாததில் சமூக அக்கறையே பிரதானம்."


ஹரிஹரனின் இந்த சமீபத்திய பதிவைப் படித்தபோது பிரபுதேவா நடித்த ஒரு படத்தின் நகைச்சுவைக்காட்சிதான் நினைவுக்கு வந்தது.


விவேக்கும் வடிவேலுவும் ஒரே பெண்ணைக் காதலிக்க முயற்சி செய்வார்கள். விவேக் கையில்லாதவரைப் போல நடித்துக்கொண்டிருப்பார். ஒருமுறை விவேக்கு அண்டர்வேர் மாட்டமுடியாது. அவரது காதலி மாட்டிவிட்டு விட்டு கைகளைத் தட்டிக்கொள்வார். விவேக் சொல்வார், "ஒரு லோடு மண்ணடிச்சமாதிரி கையைத் தட்டுறா பாரு"


ஏதோ மணியாட்டுவதும், தீபாராதனையும் உலகமகா உழைப்புப்போலவும் அதற்கு மாதவிடாய்தான் தடையாக இருப்பதுபோலவும் ஹரி பேசும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ஹரி, நீங்கள் மாதவிடாய்க்காலங்களிலும் கொளுத்தும் வெயிலில் பட்டப்பகலில் வயல்வெளியில் 'பால்சுரந்த தனமிரண்டைப் பயிர்வருடத் தலைகுனிந்தே மகவு உறிஞ்சுதுன்னு மண்ணுறிஞ்சக் களையெடுக்கும்' உழைக்கும் பெண்களைக் கண்டதிலலையா? கல் சுமக்கும், ரோட்டோரங்களில் மதியவெயிலில் சாப்பாட்டுக்கடை போடும் சகோதரிகளைப் பார்த்ததிலலையா? அல்லது அவர்களுக்கெல்லாம் மாதவிடாய் வராது என்ற எண்ணமா?

ஒருவேளை நீங்கள் பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் உழைக்கும் பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். பார்ப்பனச் சகோதரிகள் மாதவிடாய்க் காலங்களில் குனிந்து வளைந்து கோலம் போடுவதிலலையா? வீடு பெருக்குவதில்லையா? துணி துவைப்பதில்லையா? பாத்திரம் கழுவுவதில்லையா? ஆம்பளைகள் வக்கணையாய் வழித்துத் தின்ன வடித்துக்கொட்டுவதில்லையா?(என்ன, புணர்ச்சி இயந்திரமாகச் செயல்படுவதிலிருந்து மூன்றுநாட்கள் ஓய்வு கிடைக்கலாம்). அல்லது நீங்கள் சொல்வதைப் போல அவர்கள் 'ஸ்பிளிட் பெர்சனாலிட்டி' வந்து பார்ப்பன ஆண்களைக் கொலைசெய்துவிட்டார்களா?

சாதியையும் தாண்டி நீங்கள் ஆண் என்பதை உணர்த்திவிட்டீர்கள்.

முதலில் 'உடலைக்கொண்டாடிய பெரியார்' என்ற எனது பதிவில்தான் பின்னூட்டத்தில் இந்த அரிய 'அறிவியல் கருத்துக்களை வெளியிட்டீர்கள்'. நான் பெண்கள் அர்ச்சகர்களாவதைப் பற்றிக்கூட பேசவில்லை, பெண்கள் அந்த மா.வி.காலங்களில் கோயிலுக்குச் செல்லாதது ஏன் என்றே கேட்டிருந்தேன். ஒருவேளை சாமி சிலை முன்னால் கையெடுத்துக் கும்பிடுவதும் மாபெரும் உழைப்பு என்று கருதுகிறீர்களா?

அதென்ன நிதானம் தவறிப் பெண்கள் நீதி சொல்வார்கள்? நிதானத்தோடு ஆண்கள் சொன்ன நீதிகள் எல்லாம் பெண்களுக்கு அநீதிகளாகத்தானே இருந்தன.

எங்கள் ஊர்ப்பக்கம் மாதவிடாய்க்காலங்களில் பெண்கள் ஊறுகாய்ப்பாட்டிலைக்கூட தொடமாட்டார்கள். ஊறுகாய் கெட்டுவிடும் என்பது நம்பிக்கை. இது தீட்டு, அசிங்கம் என்னும் தூய்மைவாத உளவியல் பெண்களிடம் ஆழக் கட்டப்பட்டிருக்கிறது.

நிச்சயமாக ஆண்களால் மாதவிடாய், பிரசவம் என்னும் உடல் உபாதைகளை உணரமுடியாது. அதை மிகுந்த பொறுப்போடும் புரிந்துணர்வோடும், மானுட நேசத்தோடும்தான் அணுகவேண்டும். 'நீ பலவீனமானவள், எனவே கீழிறக்கப்பட வேண்டியவள்' என்னும் அதிகார மனோபாவத்தோடு அல்ல.

இவ்வளவு சொல்லியும் நீங்களோ உங்கள் அரங்கநாதரோ, சிதம்பரம் நடராஜரோ முடியாது, கிடியாது என்றால் ரொம்பவே சங்கடப்பட்டால், வேண்டாம் பெண்கள் அர்ச்சகராகவே வேண்டாம்.

மதியவேளையிலும்
பொறுப்பற்றுத் தூங்கும்
அரங்கனும் ஆடியபாதத்தை
இறக்கமுடியாது விழிக்கும்
நடராஜனும் வெளியேறட்டும்.
புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
எம் பெண்கள்
நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்


கேள்வி 1 : பகுத்தறிவின் துணைகொண்டு உண்மையை விடுதலை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் ஹரிஹரன் குறைந்தபட்ச அறிவையும் பலசந்தர்ப்பங்களில் தன்னிலிருந்து விடுதலை செய்துவிடுகிறார்.

சார்வாகத்தை இந்துமதம் உட்செரித்துக்கொண்டது பரிணாமமாம். அப்படியானால் வேத நெறிகளுக்குப் பின் தோன்றிய ஆசிர்வகம், சாங்கியம், லோகாயுதம், பவுத்தம், சமணத்தை என்ன சொல்வீர்கள்? அது பரிணாம வளர்ச்சி என்றால் தஞ்சாவூரில் 'கோலம் போடும் பெருமைமிகு' இந்து மரபை உதறித்தள்ளிவிட்டு இஸ்லாம் கொடிகட்டிப் பறந்தால் அதுமட்டும் பரிணாமம் ஆகாதோ?

கேள்வி 2 : கால்கள்தான் இறைவனின் படைப்பில் உயர்ந்ததாம், பெருமாளின் பாதம்தான் சேவிக்கபப்டுகிறதாம். எனவே சூத்திரர்கள் காலில் பிறந்தது இழிவாகாதாம். நல்லது. அப்படியானால் அத்தகைய சேவிக்கத்தக்க உயர்ந்த பாதங்களில் அணிந்திருக்கும் செருப்பு தைக்க பார்ப்பனர்கள் தயாரா? (மேலும் பகவான ராமபிரானின் செருப்பு ஆண்ட புண்னிய பூமியாயிற்றே இது?)கால் கழுவபப்டும் கழிப்பறையைக் கழுவ பார்ப்பனர்கள் தயாரா?இதேபோல சூத்திரர்களை தஸ்யூக்கள், வேசிமகக்ள், அடிமைகள் என்று வேதங்கள் ஏன் குறிப்பிடுகின்றன என்ற அறிவார்ந்த உண்மைகளையும் ஹரி விரைவில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.