'புனித'க்குடும்பத்தின்பின்னுள்ள வன்முறை - மார்க்சிய அம்பேத்கரியப் பெரியாரியப் புரிதல்கள்
பெற்றோர் பராமரிப்புச்சட்டத்தை விமர்சிக்கத் தொடங்கும்போதே கடுமையான எதிர்ப்புகள் வருகின்றன. அன்பும் பாசமுமற்ற கல்நெஞ்சர்களாய் சித்தரிக்கும் மனோபாவம் ஒருபுறமென்றால் இன்னொருபுறம் 'மாதா பிதா தெய்வம்' போன்ற பெருங்கதையாடல்களுக்குப் பழக்கப்பட்டிருக்கும் அடிமைத்தன்னிலை புறச்சூழலிலிருந்து எழும் கேள்வியின் வெப்பத்தைத் தாங்கவியலாது நடுங்குகிறது.
குடும்பம் என்னும் அமைப்பின் தோற்றம், நியாயப்பாடு, அவை நிலைபெறுவதற்கான காரணங்கள் ஆகியவற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் மார்க்சிய மூலவர்களில் ஒருவராகிய ஏங்கெல்ஸ் நுட்மாக விபரித்திருப்பார். பொதுவாகச் சமூக உறவு என்பதே உற்பத்தி உறவுகளின் அடிப்படையிலானது. புற எதார்த்தத்தில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் குடும்ப உறவுகளில் இது மறைமுகமாய்த் தொழிற்படுவதால் இந்த இயங்கியல் அறியப்படாமற்போகிறது.
வேட்டைக்காலத்தினின்று மனித சமூகம் அடுத்து நுழையும் உற்பத்தியில் ஈடுபடும் காலகட்டத்தின்போது ஏற்படும் உபரியே மூலதனமாகவும் அதன் விளைவாகவே வர்க்கங்களும் தோன்றுகின்றன என்பது மார்க்சியத்தின் அடிப்படை. தாய்வழிச் சமூகத்தினின்று இந்தகாலகட்டத்தில்தான் ஆண்தலைமையிலான குடும்பம் என்னும் அமைப்பு உருவாகிறது என்கிறது வரலாற்றுப்பொருள்முதல்வாதத்திலான பார்வை.
சமூகத்தின் உழைப்புப் பண்டமாக மாற்றப்பட்டு அதன்விளைவாய் உருவாகும் உபரியே மூலதனமாய் மாறுவதைப்போலவே குடும்பத்தின் கூட்டு உழைப்பால் ஏற்படும் நுகர்வு கழித்த உபரி என்பது சொத்தாய் மாறுகிறது. சமூகத்தில் மூலதனத்தின் அடிப்படையில் உற்பத்தி உறவுகள் அமையும்போது குடும்பத்தில் சொத்தின் அடிப்படையில் உற்பத்தி உறவுகள் அமைகின்றன. வர்க்கச்சுரண்டலுக்கு அடிப்படையான தனிச்சொத்தைப் பாதுகாக்கும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் குடும்பத்தின் சொத்தைப் பாதுகாக்கும் ஆவலிலிருந்தே தொடங்குகிறது.
இந்தியச்சமூகத்தில் குடும்பத்தின் இன்னொரு அடிப்படையாய் விளங்குவது சாதி. அகமணமுறை சாதியைப் பாதுகாப்பதை பாபாசாகேப் அம்பேத்கர் நுட்மாய் விபரிக்கின்றார். அது ரத்தக்கலப்பை மறுத்து சாதியத்தூய்மையை வலியுறுத்துகிறது. இந்தியக்குடும்பங்கள் இருவகையான உற்பத்திமுறைகளில் கவனம் செலுத்துகின்றன. முதலாவது பொருள் உற்பத்தி. இது தனிச்சொத்தைப் பாதுகாக்கிறது. இரண்டாவது இன உற்பத்தி. இது சாதியைக் காப்பாற்றுகிறது. கலப்பைத் தடுத்து தன் சாதியைக் காப்பாற்றும் நுண்களனாகவே குடும்பம் என்னும் அமைப்பும் திருமணம் என்னும் ஏற்பாடும் இன உற்பத்திமுறையும் இங்கு இருக்கிறது.
.
எனவே இந்தியச்சூழலில் குடும்பம் என்பது பொருளியல் அடிப்படைகளோடு கலாச்சார அடிப்படைகளோடும் சேர்ந்து விவாதிக்க வேண்டிய பொருளாகிறது. ஆனால் மார்க்சியப் பேராசானகளுக்குப்பிறகு குடும்பம் குறித்த நுண்கேள்விகளும் விசாரணைகளும் அதற்குப்பின் வந்த மார்க்சிய நடைமுறையாளர்களால் எழுப்பப்படவில்லை. இன்னொருவகையில் குடும்பம் என்பது பெண்களின் மீது வன்முறையையும் அதிகாரத்தையும் செலுத்தும் ஒடுக்குமுறைக்கருவியாகவும் இயங்குகிறது. ஏனெனில் ஏங்கெல்ஸ் சொல்வதைப் போல 'குடும்பம் என்பதே அரசின் நுண்வடிவம்தான்'.
குடும்பம் என்பது தந்தை வழி ஆணாதிக்கச்சமூக மதிப்பீட்டின் விளைபொருள் என்பதால் அது ஆண்தலைமையைக் கோரும், பெண்தன்னிலைகளையொழிக்கும் வன்முறை அமைப்பாகவே தோற்றம் கொள்கிறது. எனவே வன்முறை என்பது அரசின் நிழலுருதோற்றமாகவும் அதிகார உற்பத்திக் களனாகவும் திகழ்வதைப் பிற்காலத்தில் தோன்றிய பெண்ணியலாளர்கள் தெளிவாக உணரத்தலைப்பட்டனர்.
அவர்கள் மார்க்சியத் தொடர்ச்சியில் அறுபட்ட குடும்பம் குறித்த உரையாடல்களைத் தேடத்தலைப்பட்டனர். அதோடு பொருளாதார அடிப்படையோடு கலாச்சார, பால்சார்ந்த அடையாளங்களோடு குடும்பம் என்னும் நிறுவனத்தின் அடிப்படை இருப்பை அணுகினர். குடும்பம் என்னும் நிறுவனத்தின் இருப்பு வன்முறையில் தங்கியிருப்பதை அடையாளம் கண்டனர்.
சமூகத்தின் இன உற்பத்திக்கு பெண்ணின் இருப்பு அடிப்படையாக அமைந்தது. பொருளுற்பத்தி என்பது ஆணைச்சார்ந்ததாக புராதனப்பொதுமைச்சமூகத்தின் பின்னான சமூக இருப்பு அமைந்தது. உற்பத்தி உறவுகள் வர்க்கங்களை உருவாக்கியதைப் போலவே இன உற்பத்தி தந்தைவழி ஆணாதிக்கச் சமூகத்தை உற்பத்தி செய்தது. உற்பத்திக்குக் காரணமான உழைக்கும் பாட்டாளிகள் அடிமையாய் இருப்பதைப்போலவே இன உற்பத்தியின் மூலகமான பெண்னும் அடிமையாய்த் தேங்கிப்போனாள்.
இத்தகைய புரிதல்களின் தொடர்ச்சியை நாம் பெரியாரிடம் கண்டுகொள்ளலாம். அவர் திருமணம் என்பது கிரிமினல் குற்றம் என்றும் சட்டபூர்வமான விபச்சாரம் என்றும் கதையாடினார். இன உற்பத்தியின் அடியாழத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். பெண்களைக் கருப்பையை அகற்றும்படி பரிந்துரைத்தார். மார்க்சிய மூலவர்களுக்குப் பின் தேங்கிப்போன குடும்பம் குறித்த உரையாடல்களை தமிழ்ச்சூழலில் முன்னெடுத்தவர் என்று பெரியாரைச் சொல்லலாம். மேலும் பெண் கல்வி, சொத்துரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போன்ற மேலோட்டமான சீர்திருத்தங்களைத் தாண்டி பெண்மீதான ஒடுக்குமுறையின் மூலகமாய் விளங்கும் குடும்பம், திருமணம் ஆகியவற்றின் மீது கேள்விகள் எழுப்பியவரும் அவரே.
அதோடு நில்லாது ஊழல், ஒழுக்கக்கேடு, அதிகாரச்சீரழிவு, பேராசை ஆகியவற்றின் இருப்பும் குடும்பத்தின் மீதான பற்றுறுதியிலேயே தங்கிருப்பதை அவர் சரியாக அடையாளம் கண்டார். 'ஒருவன் யோக்கியனாக இருக்க முடியாததற்குக் காரணம் குடும்பமே' என்றார். மேலும் மனிதன் என்பவன் சமூகப்பிராணி. ஆனால் அவனது செயல்பாடும் கவனமும் உழைப்பும் குடும்பவெளிகளுக்குள்ளேயே முடக்கப்படும் அவலத்தை ஒழுங்கவிழ்த்தார். பொதுவெளியில் செயற்படும் அனைவரையுமே குடும்பம் என்னும் மாயப்பிசாசு கண்ணுக்குத் தெரியாத தன் நுண்ணியக்கண்ணிகளின் வழியே கட்டிப்போடுகிறது.
90களில் இத்தகைய விவாதங்களை நிறப்பிரிகை இதழ் முன்னெடுத்தது. தீவிரப்பெண்னியத்தின் தொடர்ச்சியாய் 'குடும்ப உடைப்பு' என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்து உரையாடலை விரித்தது. ஆனால் சனாதனக்கருத்தியலாளர்கள் இந்தக் கருத்தாக்கத்தை பதட்டத்துடனும் வன்முறையுடனுமே எதிர்கொண்டனர். இந்தியக்கலாச்சரமனத்தின் அதிகாரவிருப்பும் அடிமைமனோபாவமும் அனைத்து இந்தியச்சமூக உயிரியின் அடிமனத்தில் தங்கித்தான் போயிருக்கிறது. ஆனால் அதன் மறுவிளைவாய் குறைந்தபட்சம் குடும்ப ஜனநாயகம் என்னும் கருத்தாக்கம் மேலெழுந்து அதுகுறித்து விவாதிக்கத் தலைப்பட்டனர். ஆனால் கடந்த ஆறேழு ஆண்டுகளில் அத்தகைய உரையாடல்கள் ஏதும் நிகழாமல் தமிழ் அறிவுவெளியும் அரசியற் பரப்பும் தேங்கிப்போயுள்ளது.
இது உலகமயத்தின் காலம். ஆனால் பேராசான் காரல்மார்க்ஸ் சரியாகச்சொன்னதைப்போலவே 'முதலாளித்துவம் தோன்றும்போதே உலகமயமாகத்தான் தோன்றியது'. பொருளாதாரவெளிகளில் அன்னியமுதலீட்டை ஆதரிக்கும், வரவேற்கும் அரசும் ஆளும்வர்க்கமும் தனது அடிப்படைச் சமூக அமைப்பு சிதைபடாமல் காத்துத் தக்கவைத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறது. ஏனெனில் அதன் இருப்பே அதில்தான் தங்கியுள்ளது. வெளியில் நிலவும் எல்லாச் சமூக வன்முறைகளும் குடும்பத்தைப் பாதிக்கவும் பிரதிபலிக்கவும் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் சாதிய, முதலாளித்துவ, ஆணாதிக்க வன்முறை குடும்பத்திலேயே பயிற்றுக்கவும் பழக்கப்படுத்தப்படவும் படுகின்றன. மாற்றத்தை எதிர்நோக்கிப் போராடும் யாரும் குடும்ப அமைப்பை விசாரணைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும். ஏனெனில் குடும்பம் பாதுகாப்பைத் தருவதுபோன்ற மாயையில் சமரசத்தையும் அடிபணிதலையுமே ஈன்றளிக்கிறது. அதுவும் நெகிழ்வற்ற மூடுண்ட இந்தியக்குடும்ப அமைப்பைக் கேள்வி கேட்காமல் பார்ப்பனீய முதலாளித்துவ ஆணாதிக்கக் கருத்தியல்களை எதிர்கொள்ளவியலாது.