'புனித'க்குடும்பத்தின்பின்னுள்ள வன்முறை - மார்க்சிய அம்பேத்கரியப் பெரியாரியப் புரிதல்கள்














பெற்றோர் பராமரிப்புச்சட்டத்தை விமர்சிக்கத் தொடங்கும்போதே கடுமையான எதிர்ப்புகள் வருகின்றன. அன்பும் பாசமுமற்ற கல்நெஞ்சர்களாய் சித்தரிக்கும் மனோபாவம் ஒருபுறமென்றால் இன்னொருபுறம் 'மாதா பிதா தெய்வம்' போன்ற பெருங்கதையாடல்களுக்குப் பழக்கப்பட்டிருக்கும் அடிமைத்தன்னிலை புறச்சூழலிலிருந்து எழும் கேள்வியின் வெப்பத்தைத் தாங்கவியலாது நடுங்குகிறது.

குடும்பம் என்னும் அமைப்பின் தோற்றம், நியாயப்பாடு, அவை நிலைபெறுவதற்கான காரணங்கள் ஆகியவற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் மார்க்சிய மூலவர்களில் ஒருவராகிய ஏங்கெல்ஸ் நுட்மாக விபரித்திருப்பார். பொதுவாகச் சமூக உறவு என்பதே உற்பத்தி உறவுகளின் அடிப்படையிலானது. புற எதார்த்தத்தில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் குடும்ப உறவுகளில் இது மறைமுகமாய்த் தொழிற்படுவதால் இந்த இயங்கியல் அறியப்படாமற்போகிறது.

வேட்டைக்காலத்தினின்று மனித சமூகம் அடுத்து நுழையும் உற்பத்தியில் ஈடுபடும் காலகட்டத்தின்போது ஏற்படும் உபரியே மூலதனமாகவும் அதன் விளைவாகவே வர்க்கங்களும் தோன்றுகின்றன என்பது மார்க்சியத்தின் அடிப்படை. தாய்வழிச் சமூகத்தினின்று இந்தகாலகட்டத்தில்தான் ஆண்தலைமையிலான குடும்பம் என்னும் அமைப்பு உருவாகிறது என்கிறது வரலாற்றுப்பொருள்முதல்வாதத்திலான பார்வை.

சமூகத்தின் உழைப்புப் பண்டமாக மாற்றப்பட்டு அதன்விளைவாய் உருவாகும் உபரியே மூலதனமாய் மாறுவதைப்போலவே குடும்பத்தின் கூட்டு உழைப்பால் ஏற்படும் நுகர்வு கழித்த உபரி என்பது சொத்தாய் மாறுகிறது. சமூகத்தில் மூலதனத்தின் அடிப்படையில் உற்பத்தி உறவுகள் அமையும்போது குடும்பத்தில் சொத்தின் அடிப்படையில் உற்பத்தி உறவுகள் அமைகின்றன. வர்க்கச்சுரண்டலுக்கு அடிப்படையான தனிச்சொத்தைப் பாதுகாக்கும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் குடும்பத்தின் சொத்தைப் பாதுகாக்கும் ஆவலிலிருந்தே தொடங்குகிறது.

இந்தியச்சமூகத்தில் குடும்பத்தின் இன்னொரு அடிப்படையாய் விளங்குவது சாதி. அகமணமுறை சாதியைப் பாதுகாப்பதை பாபாசாகேப் அம்பேத்கர் நுட்மாய் விபரிக்கின்றார். அது ரத்தக்கலப்பை மறுத்து சாதியத்தூய்மையை வலியுறுத்துகிறது. இந்தியக்குடும்பங்கள் இருவகையான உற்பத்திமுறைகளில் கவனம் செலுத்துகின்றன. முதலாவது பொருள் உற்பத்தி. இது தனிச்சொத்தைப் பாதுகாக்கிறது. இரண்டாவது இன உற்பத்தி. இது சாதியைக் காப்பாற்றுகிறது. கலப்பைத் தடுத்து தன் சாதியைக் காப்பாற்றும் நுண்களனாகவே குடும்பம் என்னும் அமைப்பும் திருமணம் என்னும் ஏற்பாடும் இன உற்பத்திமுறையும் இங்கு இருக்கிறது.

.
எனவே இந்தியச்சூழலில் குடும்பம் என்பது பொருளியல் அடிப்படைகளோடு கலாச்சார அடிப்படைகளோடும் சேர்ந்து விவாதிக்க வேண்டிய பொருளாகிறது. ஆனால் மார்க்சியப் பேராசானகளுக்குப்பிறகு குடும்பம் குறித்த நுண்கேள்விகளும் விசாரணைகளும் அதற்குப்பின் வந்த மார்க்சிய நடைமுறையாளர்களால் எழுப்பப்படவில்லை. இன்னொருவகையில் குடும்பம் என்பது பெண்களின் மீது வன்முறையையும் அதிகாரத்தையும் செலுத்தும் ஒடுக்குமுறைக்கருவியாகவும் இயங்குகிறது. ஏனெனில் ஏங்கெல்ஸ் சொல்வதைப் போல 'குடும்பம் என்பதே அரசின் நுண்வடிவம்தான்'.

குடும்பம் என்பது தந்தை வழி ஆணாதிக்கச்சமூக மதிப்பீட்டின் விளைபொருள் என்பதால் அது ஆண்தலைமையைக் கோரும், பெண்தன்னிலைகளையொழிக்கும் வன்முறை அமைப்பாகவே தோற்றம் கொள்கிறது. எனவே வன்முறை என்பது அரசின் நிழலுருதோற்றமாகவும் அதிகார உற்பத்திக் களனாகவும் திகழ்வதைப் பிற்காலத்தில் தோன்றிய பெண்ணியலாளர்கள் தெளிவாக உணரத்தலைப்பட்டனர்.

அவர்கள் மார்க்சியத் தொடர்ச்சியில் அறுபட்ட குடும்பம் குறித்த உரையாடல்களைத் தேடத்தலைப்பட்டனர். அதோடு பொருளாதார அடிப்படையோடு கலாச்சார, பால்சார்ந்த அடையாளங்களோடு குடும்பம் என்னும் நிறுவனத்தின் அடிப்படை இருப்பை அணுகினர். குடும்பம் என்னும் நிறுவனத்தின் இருப்பு வன்முறையில் தங்கியிருப்பதை அடையாளம் கண்டனர்.

சமூகத்தின் இன உற்பத்திக்கு பெண்ணின் இருப்பு அடிப்படையாக அமைந்தது. பொருளுற்பத்தி என்பது ஆணைச்சார்ந்ததாக புராதனப்பொதுமைச்சமூகத்தின் பின்னான சமூக இருப்பு அமைந்தது. உற்பத்தி உறவுகள் வர்க்கங்களை உருவாக்கியதைப் போலவே இன உற்பத்தி தந்தைவழி ஆணாதிக்கச் சமூகத்தை உற்பத்தி செய்தது. உற்பத்திக்குக் காரணமான உழைக்கும் பாட்டாளிகள் அடிமையாய் இருப்பதைப்போலவே இன உற்பத்தியின் மூலகமான பெண்னும் அடிமையாய்த் தேங்கிப்போனாள்.

இத்தகைய புரிதல்களின் தொடர்ச்சியை நாம் பெரியாரிடம் கண்டுகொள்ளலாம். அவர் திருமணம் என்பது கிரிமினல் குற்றம் என்றும் சட்டபூர்வமான விபச்சாரம் என்றும் கதையாடினார். இன உற்பத்தியின் அடியாழத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். பெண்களைக் கருப்பையை அகற்றும்படி பரிந்துரைத்தார். மார்க்சிய மூலவர்களுக்குப் பின் தேங்கிப்போன குடும்பம் குறித்த உரையாடல்களை தமிழ்ச்சூழலில் முன்னெடுத்தவர் என்று பெரியாரைச் சொல்லலாம். மேலும் பெண் கல்வி, சொத்துரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போன்ற மேலோட்டமான சீர்திருத்தங்களைத் தாண்டி பெண்மீதான ஒடுக்குமுறையின் மூலகமாய் விளங்கும் குடும்பம், திருமணம் ஆகியவற்றின் மீது கேள்விகள் எழுப்பியவரும் அவரே.

அதோடு நில்லாது ஊழல், ஒழுக்கக்கேடு, அதிகாரச்சீரழிவு, பேராசை ஆகியவற்றின் இருப்பும் குடும்பத்தின் மீதான பற்றுறுதியிலேயே தங்கிருப்பதை அவர் சரியாக அடையாளம் கண்டார். 'ஒருவன் யோக்கியனாக இருக்க முடியாததற்குக் காரணம் குடும்பமே' என்றார். மேலும் மனிதன் என்பவன் சமூகப்பிராணி. ஆனால் அவனது செயல்பாடும் கவனமும் உழைப்பும் குடும்பவெளிகளுக்குள்ளேயே முடக்கப்படும் அவலத்தை ஒழுங்கவிழ்த்தார். பொதுவெளியில் செயற்படும் அனைவரையுமே குடும்பம் என்னும் மாயப்பிசாசு கண்ணுக்குத் தெரியாத தன் நுண்ணியக்கண்ணிகளின் வழியே கட்டிப்போடுகிறது.

90களில் இத்தகைய விவாதங்களை நிறப்பிரிகை இதழ் முன்னெடுத்தது. தீவிரப்பெண்னியத்தின் தொடர்ச்சியாய் 'குடும்ப உடைப்பு' என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்து உரையாடலை விரித்தது. ஆனால் சனாதனக்கருத்தியலாளர்கள் இந்தக் கருத்தாக்கத்தை பதட்டத்துடனும் வன்முறையுடனுமே எதிர்கொண்டனர். இந்தியக்கலாச்சரமனத்தின் அதிகாரவிருப்பும் அடிமைமனோபாவமும் அனைத்து இந்தியச்சமூக உயிரியின் அடிமனத்தில் தங்கித்தான் போயிருக்கிறது. ஆனால் அதன் மறுவிளைவாய் குறைந்தபட்சம் குடும்ப ஜனநாயகம் என்னும் கருத்தாக்கம் மேலெழுந்து அதுகுறித்து விவாதிக்கத் தலைப்பட்டனர். ஆனால் கடந்த ஆறேழு ஆண்டுகளில் அத்தகைய உரையாடல்கள் ஏதும் நிகழாமல் தமிழ் அறிவுவெளியும் அரசியற் பரப்பும் தேங்கிப்போயுள்ளது.

இது உலகமயத்தின் காலம். ஆனால் பேராசான் காரல்மார்க்ஸ் சரியாகச்சொன்னதைப்போலவே 'முதலாளித்துவம் தோன்றும்போதே உலகமயமாகத்தான் தோன்றியது'. பொருளாதாரவெளிகளில் அன்னியமுதலீட்டை ஆதரிக்கும், வரவேற்கும் அரசும் ஆளும்வர்க்கமும் தனது அடிப்படைச் சமூக அமைப்பு சிதைபடாமல் காத்துத் தக்கவைத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறது. ஏனெனில் அதன் இருப்பே அதில்தான் தங்கியுள்ளது. வெளியில் நிலவும் எல்லாச் சமூக வன்முறைகளும் குடும்பத்தைப் பாதிக்கவும் பிரதிபலிக்கவும் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் சாதிய, முதலாளித்துவ, ஆணாதிக்க வன்முறை குடும்பத்திலேயே பயிற்றுக்கவும் பழக்கப்படுத்தப்படவும் படுகின்றன. மாற்றத்தை எதிர்நோக்கிப் போராடும் யாரும் குடும்ப அமைப்பை விசாரணைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும். ஏனெனில் குடும்பம் பாதுகாப்பைத் தருவதுபோன்ற மாயையில் சமரசத்தையும் அடிபணிதலையுமே ஈன்றளிக்கிறது. அதுவும் நெகிழ்வற்ற மூடுண்ட இந்தியக்குடும்ப அமைப்பைக் கேள்வி கேட்காமல் பார்ப்பனீய முதலாளித்துவ ஆணாதிக்கக் கருத்தியல்களை எதிர்கொள்ளவியலாது.

11 உரையாட வந்தவர்கள்:

  1. மிதக்கும்வெளி said...

    இங்கு நம் சொந்தக்காரர்கள் என்பவர்கள் சொந்த சாதிக்காரர்கள்தான். தந்தையும் தாயும் கூட உங்கள் சாதிக்காரர்கள்தான். முன்னைய விவாதத்தின்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றைப் பரிசீலிப்போம். 'ஒரு பெண்ணிடம் காதலைத் தெரிவிக்கும்போது அவள் செருப்பால் அடிக்கிறாள். அதைதாங்கிக்கொள்ளும் நீ உன் தந்தை அடிப்பதைத் தாங்கிக்கொள்ளக்கூடாதா?". இதே கேள்வியை சூழலின் குறிப்பான காலத்தில் பொருத்தி இப்படிக் கேள்வியைத் தலைகீழாக்கி கேட்டுப் பார்ப்போம். 'உன்னைச் செருப்பால் அடித்த பெண் ஒருகட்டத்தில் உன்னைக்காதலிக்கிறாள். ஆனால் சாதி மீறிய அந்தக் காதலுக்கு உன் தந்தை சம்மதம் தெரிவிக்கவில்லை. மீறும்போது அவர் செருப்பால் அடிக்கிறார்.' இப்போது இருவகையான தாக்குதலையும் ஒப்பிட்டுப்பார்த்தால் அந்தப்பெண்ணின் செருப்படி அப்பாவின் செருப்படியை விட மகத்தானதுதான். அப்பாவின் அடி என்பது உன்னைச் சாதிக்குள்ளேயே இருத்திவைக்க, சாதியை விட்டு வெளியேற எத்தனிக்கும் உன்னைப் பின்னிழுக்கும் அடிதான்

  2. Pot"tea" kadai said...

    பதிவை இன்னும் படிக்கவில்லை...ஆனால் இந்த பின்னூட்டம் சரியான செருப்படி தான்...
    யாருக்குன்னு கேட்டா நா சொல்ல மாட்டேன்...ஏன்னா நா ஒரு கடங்காரன்.

  3. G.Ragavan said...

    இதுதான் பெரியாரின் கருத்துகளா? கிட்டத்தட்ட என்னுடைய சிந்தனை ஓட்டமும் இந்தத் திசையிலேயே இருக்கிறது. சரியா தவறா என்று தெரியவில்லை. ஆனால் இதற்கு முன் பெரியாரின் எழுத்துகளைப் படித்திராத எனக்கு அவரின் எழுத்துகளைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை இந்தக் கட்டுரை தூண்டுகிறது என்றால் மிகையில்லை.

  4. ramachandranusha(உஷா) said...

    ஐயா,
    பல இடங்களில் கருத்துக்கள் முன்னுக்குபின் முரணாய் தோன்றுகிறது. நான் எந்த இசத்தையும் படித்தவள்
    அல்ல. குடும்பம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கு பரஸ்பர தேவைக்கு மட்டுமே! அது சரிப்படவில்லை
    என்றால் கழற்றி எறி என்றார் பெரியார் ஐம்பதுகளில். ஆணுக்கும் சேர்த்தே சொன்னார்.
    பெரியாரிடம் கூட்டத்தில் ஒருவன், "இவ்வளவு பேசுகிறாயே உன் மனைவியை அழைக்கட்டா என்றுக் கேட்டான். அதுக்கு பெரியார், "தாராளமா கூப்பிடு. வந்தால் கூட்டிக்கிட்டு போ. செருப்படி தந்தால் வாங்கிக் கொள்" என்று சொன்னதாய் படித்துள்ளேன். தாலி கட்டியதால் மட்டுமே வாழ்நாள் முழுக்க
    கணவனுக்கு அடிமையாய் இருக்க வேண்டும் என்ற நியதியை அவர் உடைத்தாய் இந்த நிகழ்ச்சி
    புலப்படுகிறது.. குடும்பமே வேண்டாம் என்று இருந்தவர், வயது கடந்த நிலையில் ஏன் மணியம்மையை கட்டினார்?
    ஆதரவு இல்லாத மனைவிக்கு, கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும். அதேப் போல சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெற்று வளர்த்து கல்வியையும் தந்து நல்ல வேலையில் இருக்கும் பிள்ளைகள்
    தங்களை கவனிக்கவில்லை என்றால் சட்டப்படி ஜீவனாம்சம் கேட்டால் என்ன தவறு? தெருவில் பிச்சைக்காரர்கள் போல அலையும் எத்தனை வயதானவர்களைப் பார்க்கிறோம். இதெல்லாம் வேண்டாம், விருப்பபடி, ஹிப்பிகளைப் போல வாழ்பவர்களுக்கு வேண்டுமானால்
    நீங்கள் சொல்வது சரிப்படும்.

  5. bala said...

    வெளியே மிதக்கும் அய்யா,

    பொன்வண்டு பிரியாணி இசை அம்மா,நிரந்தர அர்ரேஞ்மென்டா,இல்லை தற்காலிக ஏற்பாடா?இந்த விஷயத்தை,மார்க்சிய,அம்பேத்காரிய,பெரியாரிய புரிதல்கள்ரீதியா,விளக்கிடுங்க அய்யா.இசை அம்மா பெஞ்சாதி இல்லைன்னா,வேற என்ன சாதின்னு அறிவிச்சுடுங்கய்யா.

    பா

  6. மிதக்கும்வெளி said...

    / இதற்கு முன் பெரியாரின் எழுத்துகளைப் படித்திராத எனக்கு அவரின் எழுத்துகளைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை இந்தக் கட்டுரை தூண்டுகிறது என்றால் மிகையில்லை.
    /


    உங்களை வாசிக்கத்தூண்டியது என்றவகையில் எனக்கு மகிழ்ச்சியே. பெரியாரைப் பற்றிப் பிறர் எழுதியதைப் படிக்காமல் மூலப்பிரதிகளைத் தேடிவாசியுங்கள்.

  7. மிதக்கும்வெளி said...

    தோழர் உஷா

    நீங்கள் குறிப்பிடும் பலகருத்துக்கள் உண்மைதான். ஆனால் பெரியார் திருமணமறுப்பை முன்வைத்தது அறுபதுகளில். ஆனால் அவர் மணியம்மையை மணக்க நேரிட்டது 1948ல். தொடர்பில்லையென்றாலும் ஒன்றைச் சொல்கிறேன். இந்தக் காலவேறுபாடு நன்கு தெரிந்திருந்தும் ரவிக்குமார் என்னும் எழுத்தாளர் காலச்சுவடு என்னும் பக்கா பார்ப்பனிய இதழில் பெரியாரே தான் சொன்னதை மீறித் திருமணம் செய்துகொண்டார் என்று எழுதினார். மேலும் அவர் சிறுவயதில் மைனராய்த் திரிந்ததையும் அவர் ஜெர்மனியில் நிர்வாணச்சங்கங்களில் சேர்ந்து நிர்வாணச்சினிமா பார்த்ததையும் இணைத்து பெரியார் ஒரு பொம்பளைப்பொறுக்கி என்ற ரீதியில் எழுதினார். இனி உங்கள் கேள்விக்குத் திரும்புவோம்.

    பெரியார் தனது சொத்துக்களையும் இயக்கத்தலைமையும் நம்பகமாமன ஒருவரிடம் ஒப்படைக்க விரும்பினார். (இந்த மனோபாவம் சரியா என்பது விவாதத்திற்குரியது) அவருக்கு நம்பகமானவராக மணியம்மை தெரிந்ததால் பொறுப்பை அவர்வசம் மாற்ற எண்னிணார். ஆனால் அப்போது பெண்களுக்குச் சொத்துரிமை இல்லையென்பதால் அவரைத் தத்தெடுத்திருந்தாலும் பயனில்லை. எனவே திருமணம் செய்தே ஆகவேண்டிய நிலை.

    ஆனாலும் தன் மனைவிக்கான பாலியல் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளவே செய்தார். மேலும் அது ஒரு பதிவுத்திருமணம்தான் என்றும் மணியம்மை எப்போதுவேண்டுமானாலும் அதை ரத்துசெய்துகொள்ள முடியும் என்றும் பலசமயங்களில் வலியுறுத்தினார். பெரியாரின் சொல்லாடல்களை நீங்கள் கவனமாகப் பின் தொடர்ந்தால் அவரது குடும்ப மற்றும் திருமணமறுப்பு ஆகிய கருத்தியல்களை அடையாளம் கண்டுகொள்ளலாம்.

  8. Anonymous said...

    ஒண்னுமே புரியலை

  9. Anonymous said...

    ntspNa kpjf;Fk; Iah>

    fl;Liu mUik>
    - nghWf;fp

  10. Anonymous said...

    ஆனால் அப்போது பெண்களுக்குச் சொத்துரிமை இல்லையென்பதால் அவரைத் தத்தெடுத்திருந்தாலும் பயனில்லை. எனவே திருமணம் செய்தே ஆகவேண்டிய நிலை.

    பெரியாரின் பரம்பரை சொத்து குறித்துதான் இந்த சிக்கல் எல்லாம் எழுந்திருக்கும்.அதுவும் தீர்க்க முடியாத சிக்கல் அல்ல.சுயசம்பாத்தியம்
    என்கிற போது பெரியார் அதை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம்.
    தத்து எடுத்துக் கொண்ட மகன்/மகள் யார் பெயருக்கு வேண்டுமானாலும் எழுதி
    வைக்கலாம்.இன்றும் அன்றும் அதுதான் சட்ட பூர்வமான நிலைப்பாடு. எனவே போலிக் காரணங்களை முன் வைக்க வேண்டாம். பெரியார் தன் சொத்துக்களை தன் நாய்களுக்கு எழுதிவைத்து அவற்றிற்கு காப்பாளராக மணியம்மையை நியமித்தாலும்
    அது செல்லும். பெரியாருக்கு அண்ணாத்துரை உட்பட தன் சீடர்கள் மீது நம்பிக்கையில்லை. அதுதான் உண்மை.

  11. அற்புதன் said...

    சுகுணா,
    நீங்கள் எழுதிய பலவற்றுடன் எனக்கு உடன் பாடு உண்டு.ஆனால் பொதுவாகவே மார்சியம் ஆக இருக்கட்டும் பெரியாரியம் ஆகவோ அல்லது பின் நவீனத்துவம் ஆகவோ இருக்கட்டும் இவை எல்லாமே இருகின்ற அமைப்புக்களை அவற்றின் குறைபாடுகளைச் சொல்லி கட்டுடைப்பனவையாக இருக்கின்றன.ஆனால் எனக்கு இருக்கும் கேள்வி கட்டுடைக்கப்படும் இடத்தில் பிரதியீடாக எதைப் பரிந்துரை செய்கின்றன? இதற்கு தீர்வு என்ன? குறிப்பாக இங்கே குடும்பம் என்ற அலகிற்கு பிரதியீடாக எதைப் பரிந்துரை செய்கின்றன? செய்கின்றீர்கள்? உதாரணத்திற்கு பெரியார் கருப்பையை அகற்றச் சொன்ன விடயம், அதை கட்டுடைப்பதற்கான ஒரு கதையாடலாக எடுத்துக் கொண்டாலும், கருப்பை இன்றி மனித சமூகம் இன விருத்தி அடைவது எப்படி? ஆண்களுக்குக் கருப்பையைப் பூட்ட முடியுமா?

    மார்கிசியமும் சரி தற்போதைய பின் நவீனதுவமும் சரி முதலாளித்துவத்தை அக்கு வேறு ஆணிவேறாக அலசி அதன் அடிப்படை குறைபாடுகளை விமர்சிக்கின்றன ஆனால் இதற்குப் பிரதியீடாக முன் மொழியும் ஜன நாயகச் சமுதாயம் எவ்வாறு கட்டியமைக்கப்பட வேண்டும் என்பதில் பல சிக்கல்களையும் தெளிவின்மைகளையும் எதிர் நோக்கு கின்றன.இவை பற்றி எந்தக் கதையாடல்களும் எங்கிருந்தும் வருவதாக எனக்குத் தெரியவில்லை.எல்லோரும் கட்டுடைப்பதையே ஒரு பணியாகச் செய்து கொண்டிருப்பதால் எதுவித பயனும் இல்லை.கட்டுடைப்பது எளிதானது ,ஆனால் கட்டியமைப்பது கடினமானது.பிரதியீடானா மாற்றுத் தீர்வுகள் இன்றி இந்தக் கதையாடல்களை மட்டுமே கொண்டு எந்த விதமான சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது.

    பெரியார் மணியம்மை திருமணமும் அவ்வறானதே, பெரியார் இருக்கின்ற குடும்ப அலகை விமர்சித்தார் ஆனால் யதார்தத்தில் அதற்கு பிரதியீடாகா அவரால் கூட ஒரு தீர்வைக் காண இயலாது போனது.