சந்தனாவுக்குச் சில சொற்கள்



கரையில் அலைகள் ஒதுங்கி
நெடுநாட்களாகிவிட்டது,
இப்போது ஒதுங்குவதெல்லாம்
பிணங்கள் மட்டுமே.
உரையாடலின் காலம் முடிந்துவிட்டது.
துப்பாக்கிகள் பேசத்துவங்கிவிட்டன.
இப்போது துப்பாக்கிகள் மட்டுமே
பேசிக்கொண்டிருக்கின்றன.
நீ ஆதர்சத்தோடு
துப்பாக்கிகளைத் தடவும்போது
நான் திடுக்கிட்டுப்போனேன்.
ஒரு குழந்தையைக் கொஞ்சுவதைப் போலவோ
காதலனைத் தழுவுவதைப் போலவோ
பிரியமான புத்தகத்தை
முகர்ந்து பிரிப்பதைப் போலவோ
இல்லை அது.
நீ பிணங்களைத் தடவிக்கொண்டிருக்கிறாய்.
இன்னும் சிலபொழுதுகளில்
நீ பிணங்களைப் புசிக்கத் தொடங்கலாம்
அல்லது புணரத்துவங்கலாம்.
சந்தனா, நீ
துப்பாக்கிகளோடு பேசிப்பேசி
துப்பாக்கிகளாகவே மாறிப்போனாய்
மன்னிக்கவும் துவக்குகளாக.

10 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    துப்பாக்கிகளின் காலம் தொடங்கிற்று
    என்று சொல்லத் தொடங்கியபோது
    துப்பாக்கிகளின் காலம் இறந்து போயிருக்கிறது.
    கடலைத் தாண்டி அலைகள்
    மெதுவாகக் கொண்டு வரும் சேதிகள்.
    எனக்கு ஒரு கவிதை எழுதவேண்டும்
    என்றான பின்னால், எதைப் பற்றி
    எழுதினால் என்ன?
    கவர்ச்சிக்காய் வேண்டுமானால்,
    துப்பாக்கியை - இல்லை இல்லை -
    துவக்கைப் பற்றி எழுதிப் போகிறேன்.

    வடிந்த இரத்தம் - சே சே -
    குருதி என்று போட்டுக்கொல்
    அல்லது கொள் -
    காய்ந்த கவிதைக்கு
    ஒரு கவர்ச்சிச்செங்கூரை
    மேய்ந்ததாய்ப் போகும்.

    துப்பாக்கி செத்துப்போன காலம் இது.
    துவக்கென்ன, தூள்பரத்தும்
    பெருந்துளைத் தொலைக்கலிபரும்
    செத்துப்போன இக்காலத்தே
    இனி மனிதரை மனிதர்
    பல்லாற் கடித்து, கையாற்
    கிழிக்கும் கற்காலம் வந்தது
    காண்.

    போ. எழுதியதை அழி.
    எடுத்துக்கொள் ஒரு கல்லை.
    குகைக்குள் அறை
    கல்லாயுதம் பற்றி
    எழுது கவிதை
    கருவிக் கருவி.

  2. மிதக்கும்வெளி said...

    This comment has been removed by the author.

  3. மிதக்கும்வெளி said...

    அனானி நண்பி/பா

    உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிற்தோ இல்லையோ மொழியாளுமை பிடித்திருக்கிறது. முகம் காட்டலாமே?

  4. Anonymous said...

    முகமிழந்தது உலகம்

    அழிந்த முகத்தில்
    எனதென்ன? உனதென்ன?
    சிதைந்த சதைக்கு
    தனி ஆள் வேரில்லை
    தான் ஆல் விழுதில்லை.
    அழிந்த முகங்களின் பின்னே
    அழுக அழுவது என் கோல்

    துவக்குகளும் துவர்ந்தழிந்த
    காலம் களமெமது.
    கல்லெடுத்துப் போர் புரிவர் எம் சிறுவர்
    கள்ளெடுத்துச் சமர் இடுவர் எம் மறவர்
    எல்லோர் முகமும் என் முகம்
    என்னோர் முகமும் உட்கொள்ளும்
    உன் முகம். எங்கெங்கணும் காண் மதம்.

    சதை நிரம்ப நிணம் வழிய
    முகமழிந்தது அகிலம்

    கல்லாலானது எம் காலம்
    கலம் பருக வழியும்
    கணமும் நிணமணம்

    வருக வருக
    இதுவெம் வாழ்களம்.

    கூர்க்கருங்கல் எடுத்துச்
    செதுக்கும் வா சொல்லொன்று
    "கொல்."

  5. தமிழ்நதி said...

    சந்தனா,
    குழந்தையொன்றின் உள்ளங்கால் மென்மையை
    காதலனின் சூடான முத்தத்தை
    பிடித்த நடையிலமைந்த புத்தகத்தின் வாசனையை..
    பவழமல்லியின் செந்நிறக் காம்புகளை
    மற்றும் உறவுகளின் சாயங்கால ஒன்றுகூடலை
    இதயமற்ற ஒரு துவக்கினால் இட்டு நிரப்புதற்குத் தள்ளப்பட்டாயெனில் சந்தனா...!
    நீ எவ்வளவு அழுதிருப்பாய்.
    சிரிப்பையல்ல கண்ணீரையும் குருதியையும் தேர்ந்தெடுக்கத்தான்
    மனவுறுதி வேண்டும்.
    நான் உன் கைகளைப் பிடித்துப் பேசமுடிந்தால் சொல்லக்கூடியதெல்லாம் ஒன்றுதான் 'மன்னித்துக்கொள்'.

  6. -/பெயரிலி. said...

    கொஞ்சம் எதிராகவே நான் சொன்னதை எடுத்துக்கொண்டீர்கள்போலத் தெரிகிறது. தமிழ்நாட்டுக்கரையைத் தெற்கே தாண்டினால், துப்பாக்கிகளின் காலம் என்றோ தொடங்கிவிட்டதென்ற அர்த்தத்திலேதான் எழுதினேன். தனியாளின் துப்பாக்கி, தனியாளைக் கொல்லமட்டுமே உதவும். இப்போது, யாரெதற்குக் கொல்கிறார் என்றில்லாக் கற்காலமாக ஆகிவிட்டது. அவ்வளவுதான்

  7. சுந்தரவடிவேல் said...

    மூடி
    மூடிக்காம்பை உள்ளிழுத்து
    இருண்மையை
    முட்டக் குடித்திருந்தேன்.
    என்ன சத்தம்
    பெயரிலி,
    இங்கா இருக்கிறாய்?:)

  8. மிதக்கும்வெளி said...

    என்ன இது கடற்கரைக்கவியரங்கம் போல ஆகிவிட்டதே!

  9. Anonymous said...

    பெயரிலியை ரெண்டுவரி எழுதவைத்த இந்தப்பதிவுக்கு நன்றி.


    துப்பாக்கி வேண்டாம்;
    துவக்கும் வேண்டாம்;
    துமுக்கி என்று சொல்வோம்.

    சந்தனாவுக்குத் தெரியாது துமுக்கி தயாரிக்க
    கிடைத்தவழி நோக்கின் தெரியும்
    ஏன் எடுத்தாளென்று.

    துமுக்கி
    கட்டாயம் அவசியமானது,
    இப்படி கவிதை(?) எழுதுவதைவிடவும்.

  10. Anonymous said...

    மிதக்கும் வெளி அய்யா,

    துப்பாக்கி எல்லாம் வெச்சிருக்கீங்களா அய்யா. தயவுசெய்து என்னை சுட்டுடாதீங்க அய்யா.