உலகச்சினிமாவும் உள்ளூர்ச்சினிமாவும்
பைசைக்கிள் தீவ்ஸ் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலக சினிமாக்களில் முக்கியமான ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த சினிமாவும் கூட.
ஆனால் எனக்கு ராம்கோபாலன் என்று ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு உலக சினிமா என்றாலே எரிச்சல் வரும். "அதென்ன உலக சினிமா? அப்ப தமிழ்நாட்டில் எடுப்பதென்ன செவ்வாய்க்கிரக சினிமாவா?" என்பார்.
ஒருமுறை அவருடன் பைசைக்கிள்தீவ்ஸைப் பார்க்க நேர்ந்தது. எங்களுக்கு அது பத்தாவதோ அதற்கு மேலோ. ஆனால் நண்பருக்கு அதுதான் முதல்முறை. நண்பரும் எந்தக் கமெண்டும் அடிக்காமல் படத்தைக் கவனமாகப் பார்த்துக்கொண்டு வந்தார். எங்களுக்கோ ஒரே ஆச்சரியம்.
படம் முடிந்ததும் நண்பரிடம் படம் எப்படியிருக்கிறது என்று கேட்டோம்.
நண்பர் சொன்னார், "என்ன பெரிய பொல்லாத சினிமா? ஒருத்தன் சைக்கிளைத் தொலைச்சிட்டு தேடிக்கிட்டிருக்கான். நான்கூடத்தான் நாலைந்து சைக்கிளைத் தொலைச்சிருக்கேன்".
அதேபோல இன்னொரு சம்பவம். 'பாசமலர்' படத்தின் பிரிவியூ காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு வெள்ளைக்காரர்களும் பிரிவியூ காட்சிக்கு வந்திருந்தார்கள். ஆனால் படத்தில் சப்டைட்டில் போடவில்லை. 'கைவீசம்மா கைவீசு, மலர்ந்தும் மலராத, வாராயோ தோழி வாராயோ, ஆனந்தா என் கண்ணை...இத்யாதி இத்யாதிகளெல்லாம் தமிழிலேயே ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் வெள்ளைக்காரர்களோ படத்தை ஒன்றிப்போய்ப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவ்வப்போது விசும்பல் சத்தம் வேறு. படம் முடிந்ததும் பெருங்குரலெடுத்து அழத்தொடங்கிவிட்டார்கள்.
வெளியே வந்து இயக்குனரைக் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டார்கள். சிவாஜிகணேசனின் கையைப் பிடித்து குலுக்கோ குலுக்கென்று குலுக்கிவிட்டார்கள். சுற்றியிருந்தவர்களுக்கோ ஒன்றும் விளங்கவில்லை.
சப்டைட்டிலே போடவில்லையே, இந்த வெள்ளைக்காரர்களுக்கு என்ன இழவுதான் புரிந்தது, இப்படி உணர்ச்சிவசப்படுகிறார்கள்? பிறகு ஒருவாறாகத் தயங்கித் தயங்கி அவர்களிடமே கேட்டுவிட்டார்கள். "படம் உங்களுக்குப் புரிந்ததா?"
அவர்களுக்கோ கோபம் வந்துவிட்டது. 'எங்களை என்ன மடையர்கள் என்றா நினைத்தீர்கள்?" என்று காச்மூச்சென்று கத்திவிட்டு கடைசியில் பாசமலர் படத்தைப் பற்றிச் சொனார்களாம்.
"A beautiful love story"
சரி, விளையாட்டு போதும். ஒரு சீரியசான தகவல். தமிழில் அதிகம் விற்கும் சினிமா பத்திரிகை எது தெரியுமா? எம்.ஜி.ஆர். ரசிகன்.
//"அதென்ன உலக சினிமா? அப்ப தமிழ்நாட்டில் எடுப்பதென்ன செவ்வாய்க்கிரக சினிமாவா?"
//
அப்படி போடுங்க தலைவா.. :-)