நீ அகதி, நானோ தேசமறுப்பாளன்


முதலில் நாம் கைகுலுக்கிக்கொள்வோம்.
அது நம்மிருவரின்
பண்பாட்டிற்குப்பொதுவானது
என்று சொல்லப்பட்டது.
உன் வலியை என்னால்
உணரமுடிகிறது.
ஆனால் என்னால் உணரமுடிகிறது
என்பதை உன்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
சிறை என்பது கம்பிகளுக்கும் அப்பால்
விரிந்துகிடக்கிறது என்று வாதிடத்தொடங்குவாய்.
உண்மைதான்.
உன் தலைக்குமேல் எப்போதும்
சுற்றிக்கொண்டிருக்கிறது
ஒரு கருப்புநிற காகம்.
உன் காலடிச்சுவடிகளில் சேகரிக்கமுடிகிறது
சப்பாத்துகளின் இடுக்குகளிலிருந்து
தெறித்துவிழுந்த மணல்துகள்களை.
குலுக்கிய கைகளினிடைப்
பாவிப்பரவிய உன் நடுக்கம்
சொல்கிறதுஎன் மொழி மீதான
உன் இகழ்ச்சியும்
என் சொகுசு வாழ்க்கை மீதான
உன் பரிகாசமும்.
நான் ஆறுதல்களையோ நம்பிக்கைகளையோ
கொண்டுவரவில்லை.
என் அன்பைச் சொல்ல விரும்புகிறேன்
அவ்வளவுதான்.
அடிப்படையிலேயே நாமிருவரும்
வேறானவர்கள்.
உனது எதிர்பார்ப்பு
உன் தேசத்திற்கான விடுதலை.
எனக்கோ தேசத்திடமிருந்து விடுதலை.

5 உரையாட வந்தவர்கள்:

  1. குழலி / Kuzhali said...

    //அடிப்படையிலேயே நாமிருவரும்
    வேறானவர்கள்.
    உனது எதிர்பார்ப்பு
    உன் தேசத்திற்கான விடுதலை.
    எனக்கோ தேசத்திடமிருந்து விடுதலை.
    //
    உன் விடுதலையாவது
    என்றாவதொருநாள் கிடைக்கும்
    என்ற நம்பிக்கை

    என் விடுதலை மீது
    எனக்கே இல்லை
    நம்பிக்கை

  2. Anonymous said...

    நீ என்னை மறுதலிக்கலாம் அன்றேல் கொண்டாடலாம். புரிந்துகொள்ளலாம். அல்லது புரிந்துகொண்டதாகப் பொய்யுரைக்கலாம். இன்று ஒரு பொருள் தொலைந்துபோனது. அது இருக்கும்வரை மெளனமாக ஒரு மூலையில்தான் கிடந்தது. வெற்றிடத்தில் இன்மையின் பேரிரைச்சலை உணர்கிறேன். அதற்காக நீயும் நாடிழந்து அலைந்து அனுபவி என்று நான் சாபமிடப்போவதில்லை.
    கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இரண்டு மின்கம்பங்களுக்கு இடையிலான தூரமல்ல நண்பனே! யதார்த்தத்தைக் கற்பனை செய்யலாம். ஆனால் கற்பனை யதார்த்தத்தின் இடத்தை நிறைக்கவியலாது. நாடு என்பது அளவீடுகள் குறித்ததல்ல. எல்லைகள் அல்ல. அது ஒரு உணர்வு. இருப்பின் நிச்சயம். நாட்டிலிருந்து விடுதலை என்பது என்னளவில் நகைப்பிற்குரியதுதான். பசியை நீ எவ்வளவும் வர்ணிக்கலாம். பசி பொறுப்பேன் என்றும் சொல்லலாம். ஆனால், வயிறு முறுக்கி, தலை சுற்றி, கண்கள் செருகி... உடல் ஓய்ந்து போவதென்று வார்த்தைகளால் சொல்வதற்குமப்பாலானது பசி. பசி உனக்கு வாராது. நன்றாக இரு!

  3. Anonymous said...

    நல்லதொரு சிந்தனை, பொதுவாக கிடைக்காதது...!!!!

    தனித்து நிற்கும் இந்த கவிதை + கொஸ்டின் மார்க்.

    செந்தழல் ரவி

  4. Anonymous said...

    வணக்கம் மிதக்கும் வெளி

    நன்றாய் இருந்தது கவிதை

  5. Anonymous said...

    Diwakar is under the influence of A.Marx.Marx is against nationalism but supports Muslim Umma.He rejects one meta-narrative but accepts a worser meta-narrative and
    islamic fundamentalism.Unfortunately disciples like Diwakar do not realise this or the hypocrisy of Marx.Nationalism per se need not be
    bad.But Marx rejects that and ends up in supporting islamic fundamentalism and islam as a meta narrative.
    கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இரண்டு மின்கம்பங்களுக்கு இடையிலான தூரமல்ல நண்பனே! யதார்த்தத்தைக் கற்பனை செய்யலாம். ஆனால் கற்பனை யதார்த்தத்தின் இடத்தை நிறைக்கவியலாது
    Only when somebody comes out
    of post-modernist delusions
    (s)he will understand this.
    Diwakar has a long way to go.
    He is yet to come out of the
    post-modernist hang over :).