நாடிழந்தவளுடன் உரையாடல்உன்னை அகதி என்றழைக்க நாகூசுகிறது. அது என்னையே நான் வேசிமகன் என்றழைப்பதுபோலத்தான். ஆனாலும் ஒரு வசதிக்காக அகதி என்றழைக்கிறேன். இதன்மூலம் என் தாயைப் பலமுறைப் பலாத்காரித்த குற்றத்திற்கு ஆளாகிறேன். ஒவ்வொரு தேசமும் தனககான அகதிகளை உற்பத்தி செய்கிறது. தேசங்கள் குடிமக்களை உருவாக்குவதுபோலவே அகதிகளையும் உருவாக்குகிறது. அவர்களைத் தன் புறவாசலில் குடியேற்றுகிறது அல்லது நாடுகடத்துகிறது. கடத்தப்பட்ட புறதேசங்களில் அவர்கள் புறவாசல்களில் குடியமர்த்தப்படுகிறார்கள்.ஒருவகையில் நீ அகதியாய் இருப்பது நல்லதுதான். உன் சொந்த தேசத்தில் உனக்கென்று சாதியடையாளம், மத அடையாளம், வர்க்க அடையாளம் இருந்தது. இப்போது உன்னிடம் எஞ்சியிருப்பதெல்லாம் அகதி என்னும் அடையாளம் மட்டுமே. துயரமானதுதான், ஆயினும் மற்றடையாளங்கள் அழிந்திருக்கின்றன அல்லது குறைக்கப்பட்டிருகின்றன. இது நல்லதுதான். நான் இப்படிச் சொல்வது உனக்கு அதிர்ச்சியளிக்கலாம், மேலும் அது என் மன வக்கிரம் என்றும் நீ குற்றம்சாட்டலாம். அது உண்மையாகவுமிருக்கலாம். உனது உறவு எப்போதும் என்னைத் துயரத்துக்குள்ளாக்குகிறது. உன்னைப்போல நான் ரத்தத்தில் கைநனைத்த சிசுக்கள், காகங்கள் கொத்தித்தின்னும் பிணங்கள், அடையாளம் தெரியாது சிதைக்கப்பட்ட பெண்ணுடல்கள், பார்த்துப் பார்த்துச் சேர்த்து சேர்த்து கட்டி சிதிலமடைந்த வீடுகளைக் கண்டதில்லை. நடுத்தரவர்க்கத்தின் மதிப்பீடுகளாலான நாற்காலிகளின் மீதமர்ந்து எதிர்காலம் குறித்த உன்னதக்கனவுகள் குறித்து சிந்திப்பவன். நான் எப்போதும் தேசத்தை மறுத்துவந்தபோதும், தேசம் தனக்கான குடிமக்கள் பட்டியலிலேயே என் பெயரையும் இணைத்திருக்கிறது. நான் எப்போதும் தேசத்துரோகியாக இருக்கவே விரும்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக குடிமக்களில் ஒருவனாயிருக்கிறேன். இது நிச்சயம் அவமானகரமானதுதான். அதனாலேயே உன்னைக் குற்றவுணர்வோடேயே அணுகவேண்டியவனாயிருக்கிறேன். உன் கண்கள் எப்போதும் என் தலைக்குமேல் தொங்கும் வாள். உன் புன்னகை என் உடம்பெங்கும் ஊர்கிறது ஒரு பூரானைப்போல நெளியும்படியும் இரைமுடித்து வயிறுபுடைத்த ஒரு மலைப்பாம்பைப்போல அச்சமூட்டும்படியும். உன் சினேகிதம் என் நகக்கண்ணில் ஊசியேற்றி தள்ளிநின்றி ரசிக்கிறது. ஒவ்வொருமுறையும் நீ என்னை மலக்குழியில் தள்ளுகிறாய். உன்னோடு கைகுலுக்கும் முன் என் கைகளின் தூய்மையைப் பரிசோதிக்கவேண்டியிருக்கிறது. இப்போது என்னிடம் இருப்பதெல்லாம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே, உன்னை நான் எப்படி அணுகுவது , பெருந்தன்மையாளனாகவா, குற்றவுணர்வாளனாகவா, அனுதாபியாகவா அல்லது என்னை நேசிக்கிறேன் என்பதால் உன்னையும் நேசிக்கிறேன் என்பவனாகவா?

9 உரையாட வந்தவர்கள்:

 1. செந்தழல் ரவி said...

  :) :( !!!

 2. அய்யனார் said...

  /உன் கண்கள் எப்போதும் என் தலைக்குமேல் தொங்கும் வாள். /

  :)

  /உன்னை நான் எப்படி அணுகுவது , பெருந்தன்மையாளனாகவா, குற்றவுணர்வாளனாகவா, அனுதாபியாகவா அல்லது என்னை நேசிக்கிறேன் என்பதால் உன்னையும் நேசிக்கிறேன் என்பவனாகவா? /

  :((

 3. அழகிய ராவணன் said...

  தீவிரமா யோசிக்க வைக்குது. இப்டியே நீங்க எழுதிட்டு இருந்தா நானே தீவிரவாதியா ஆயிருவேன் போலிருக்கே.

 4. Anonymous said...

  \\உன் சினேகிதம் என் நகக்கண்ணில் ஊசியேற்றி தள்ளிநின்றி ரசிக்கிறது\\

  இந்த வாக்கியத்தை ஏன் எழுதினீர்கள் என்று புரியவில்லை. சிநேகிதம் என்பது நகக்கண்ணில் ஊசியேற்றுவதா… அது அகக்கண்ணில் ஒளியேற்றுவது அல்லவா…? அகதியாய் இருப்பது துக்கமே. ஆனால், அது அனுதாபத்தை வேண்டுவதில்லை. அகதியாய் ஆக்கப்பட்டதன் அடிப்படையை,நதிமூலத்தைப் புரிந்துகொள்ளவே கேட்கிறது. அவரவர் விதிக்கு அடுத்தவர் குற்றவுணர்வு கொள்ளவேண்டியதில்லை. இன்று ஒரு முதிய பெண்ணைப் பார்த்தேன். வீதியோரத்தில் உட்கார்ந்து போவோர் வருவோரை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் கண்களின் துயரத்தை மறக்க முடியவில்லை. நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் மட்டுமல்ல, சொந்த நாட்டுக்குள்ளேயே அகதியாக்கப்பட்டிருக்கும் இத்தகையோரும் இரங்கத்தக்கவரே. ஆதரவற்ற குழந்தைகளை,முதியவர்களைப் பார்க்கும்போதெல்லாம் வசதியான அகதிகளாகிய நாங்கள் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. உழைக்கும் சக்தி தீர்ந்து விட்டவர்கள் தெருவில் விடப்படும் துயரத்தினையிட்டு இரங்குங்கள். அந்தக் கண்களை சில நாட்களுக்கு மறக்கவே முடியாது.

 5. பொன்ஸ்~~Poorna said...

  :(

 6. லிவிங் ஸ்மைல் said...

  /////ஒவ்வொரு தேசமும் தனககான அகதிகளை உற்பத்தி செய்கிறது. தேசங்கள் குடிமக்களை உருவாக்குவதுபோலவே அகதிகளையும் உருவாக்குகிறது. ////

  /////உன் சொந்த தேசத்தில் உனக்கென்று சாதியடையாளம், மத அடையாளம், வர்க்க அடையாளம் இருந்தது. இப்போது உன்னிடம் எஞ்சியிருப்பதெல்லாம் அகதி என்னும் அடையாளம் மட்டுமே. துயரமானதுதான், ஆயினும் மற்றடையாளங்கள் அழிந்திருக்கின்றன அல்லது குறைக்கப்பட்டிருகின்றன. ///

  No words

 7. மிதக்கும் வெளி said...

  ஏன் எல்லோரும் சிரிக்கிறீர்கள் என்று தெரியவில்லை?

 8. Anonymous said...

  "பலாத்காரித்த"

  எப்படிங்க இப்படியெல்லாம் எழுத முடியுது?! தமிழை நல்லா பலாத்காரிக்கிறீங்க!

 9. Anonymous said...

  sogama irukku..unga nanparai pathiya/?