வாழ்த்து
உடைந்து சிதறும் நிலா
உன்வீட்டு முற்றத்தில் விழலாம்,
சிலநேரங்களில் எறிகற்களும்கூட.
சமயங்களில் உன் மனசைப் போலவே
பூக்கள் பூக்கலாம்.
முட்களின் சடாரென்ற விரல்கிழிப்பில்
பொசியும் குருதியை இக்
கவிதை கொண்டும் நீ துடைக்கலாம்.
எப்படியாயினும் மொழித்திமிர் காட்டும்
என் வார்த்தைகளையும்
தாண்டியதாயிருக்கிறது வாழ்க்கை.
எங்கோ வேறிடத்தில்
கண்ணீரோடு நாட்குறிப்பில்
எழுதிக்கொண்டிருக்கும் உனக்குச்
சொல்லவிரும்புவதெல்லாம்
நிர்வாணம் பொது எனினும்
உனக்கான ஆடையை நீ அணிந்துகொள் என்பதே.
*பெண்மோகியும் குடிகாரனுமான கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு தன் சிறகுகளைத் தொலைத்த வித்யாவின் நினைவிற்கு...
//எப்படியாயினும் மொழித்திமிர் காட்டும்
என் வார்த்தைகளையும்
தாண்டியதாயிருக்கிறது வாழ்க்கை.//
உண்மையானா ... வரிகள் !
நம் வார்தைகளையும் தாண்டி இருப்பதுதான் வாழ்க்கை .
மிகப்பிடித்த வரிகள் கொண்ட கவிதை திவாகர்.