கர்ப்பம் vs பாலின்பம் மற்றும் பகுத்தறிவு குறித்த சில கருத்துகள்
ஓஷோ - பெரியார் : சில ஒப்பீடுகள் என்னும் பதிவிற்கான எதிர்வினைகள் கருத்தரித்தல் மற்றும் பாலுறவு இன்பம் குறித்த உரையாடல்களாக திரும்பியுள்ளன. அதுகுறித்த விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இடுகையைப் படிக்கவும்...
http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_23.html
ஓசோவும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகளில் பாலியல் சுதந்திரம் மற்றும் கருவுறுதல் மற்றும் கருவுறுதலை மறுப்பது தொடர்பான பெண்ணுக்கிருக்கும் உரிமை ஆகியவை குறித்து கவனப்படுத்துவதே எனது நோக்கம். இது குறித்து, குறிப்பாகப் பெரியாரின் இந்நிலைப்பாடு குறித்த மேலும் சில எனது புரிதல்கள்.
பெரியார் குறித்துப் பலருக்கும் பல விமர்சனங்கள் இருந்தபோதும் அவரது பெண்னியச்சிந்தனைகள், குறிப்பாக இந்தியச்சூழலில் ஒப்பாரும் மிக்காருமில்லாதவை. எம்முன்மாதிரிகளுமற்றவை. பெண்ணியம் என்றாலே பெண்னுக்கான சொத்துரிமை, விதவைத்திருமணம் என்பதைத் தாண்டி பெண்னின் பாலியல் வெளி குறித்துப் பயணித்தவை அவரது சிந்தனைகள்.
மணவிலக்குச் சட்டத்தைக் கொண்டுவர அரசு தாமதித்தபோது, 'கல்யாணரத்துச்சட்டத்தை விரைவில் அரசாங்கம் கொண்டுவராவிட்டால் திருமணக் கூட்டங்களுக்குச் சென்று கல்யாண மறுப்புப்பிரச்சாரமும் புருசர்களுக்கும் ஸ்திரீகளுக்கும் பலதாரமணப் பிரச்சாரமும் செய்வேன்' என்று அரசை 'மிரட்டியவர்' பெரியார்.
இதே போன்ற இன்னொரு சந்தர்ப்பம்தான், கருத்தடையைப் பல்வேறு மத அமைப்புகளும் கலாச்சார அடிப்படைவாதிகளும் எதிர்த்த சூழலில் பெரியார் கருத்தடையை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டது. இக்கட்டத்தில், குடும்பவிளக்கு, இருண்டவீடு, கண்ணகிப்புரட்சிக்காப்பியம் போன்ற அபத்தப்பிரதிகளை எழுதியவரும், தமிழ்த்தேசிய - ஆண்மய்யப்ப் பார்வைகளைக் கொண்டவருமான பாரதிதாசனும்கூட, 'காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம், இதிலென்ன குற்றம்?' என்று பாடிப் 'புரட்சிக்கவிஞர்' என்னும் பெயரைத் தக்கவைத்துக்கொண்டார்((-.
ஆனால் இத்தோடு மட்டும் பெரியார் நிற்கவில்லை. பெண்கள் குழந்தை பெறுவதை நிறுத்த வேண்டும் என்றார். அது வெறுமனே குடும்பக்கட்டுப்பாட்டுக்காக மட்டுமில்லை, பெண்ணின் சுயேச்சையான உரிமைகளை உறுதிசெய்யவும்தான் என்றார். மேலும் குழந்தைகளைப் பெறாமலிருப்பது பெண்னுக்கு மட்டுமான விடுதலையல்ல, அது ஆணுக்குமான விடுதலையே, ஆண்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் விசயம் என்றார்.
ஒரு ஆண் நிறைய குழந்தை பெறுவதாலேயே, அயோக்கியனாகவும் ஒழுக்கக்கேடனாகவும் மாறிவிடுகிறான் என்றார். (இந்த இடத்தில் கருணாநிதி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை.((- )
சரி பகுத்தறிவு குறித்த விசயத்திற்கு வருவோம்.
எது இயற்கையானது, இயற்கைக்கு மாறானது, இயற்கையோடு இணைந்து வாழ்வது, இயற்கைக்கு எதிராக (அ) இயற்கையை மீறிச்செல்வது என்பதற்கெல்லாம் காலகாலத்துக்குமான பொதுவறையரைகள் ஏதும் கிடையாது. கருவுறுதல் இயற்கையானதெனில் மலட்டுத்தன்மை என்பதும் இயற்கையானதுதான். அதை மருந்துகள் கொடுத்துக் கருவுற வைப்பதும் இயற்கைக்கு விரோதமானதுதான். பொதுவாக அறிவியல் என்பதே இயற்கையை மீறிச் சென்றதால்தான் சாத்தியமாயிற்று. எனவே இதில் எது பகுத்தறிவு, எது பகுத்தறிவில்லை என்று தட்டையான அணுகுமுறைகளைக் ( மீண்டும் செந்தழல் ரவி ((- ) கொண்டு தீர்மானிக்க முடியாது.
"Just because men cannot bear children, calling women to refuse to bear children is neither progressive nor scientific."
என்று எந்த அடிப்படையில் சுந்தரமூர்த்தி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு பகுத்தறிவு குறித்து விவாதம் வந்ததால் சில கருத்துக்கள்.
பெரியாரை வெறுமனே வறட்டுத்தனமான பகுத்தறிவுச் சிமிழுக்குள் அடைப்பதன் விளைவுதான் ஆடு கோழித் தடைச்சட்டத்தை ஆதரிப்பது, சமண முனிவர்களின் நிர்வாணத்தை எதிர்ப்பது என்பதிலிருந்து பார்ப்பனீய மதிப்பீடுகள் குறித்து எவ்விதக் கேள்வியும் எழுப்பாது சிறுதெய்வழிபாடுகள் தொடர்பான நம்பிக்கைகளை மட்டும் கிண்டலடிக்கிற நடிகர் விவேக்கைப் 'பகுத்தறிவுவாதி' என்று கொண்டாடுவது வரை நீள்கிறது.
"The views of Periyar and Osho are certainly absurd from a scientific viewpoint even as it sounds progressive.....Just imagine an hypothetical situation in which all women in the world, with no exception, get this message at the same time and unanimously embrace this idea."
இதே சுந்தரமூர்த்தி கேட்ட கேள்விதான் ஒரு 'பகுத்தறிவுவாதி' கேட்கும் கேள்வி. ஆனால் பதில் சொல்கிற பெரியார் ஒரு 'பகுத்தறிவுவாதியாய்' நின்று சொல்லவில்லை. பெண்கள் கருப்பையை அகற்ற வேண்டுமென்று சொல்லும்போது 'மனித இனவிருத்தி அற்றுப்போகுமே?' என்று பகுத்தறிவுக் கேள்வி கேட்கப்பட்டபோது பெரியாரின் பதில்.
" மனிதஜீவராசிகள் அற்றுப்போனால், புல்பூண்டு, விலங்கு விருத்தியடையட்டுமே. இதுவரை விருத்தியடைந்த மனிதச் சமூகம் பெண்ணுக்கு என்ன செய்து கிழித்தது? எனக்கு மனிதச்சமூகம் விருத்தியடைவது குறித்துக் கவலையில்லை, பெண்ணின் விடுதலைதான் முக்கியம்'.
இங்குதான் பெரியாரிடம் பகுத்தறிவுவாதிகளின் தர்க்கங்களைத் தாண்டிப்போகிற அறவியல் ஆவேசமும் கவித்துவமும் மிளிர்கிறது. எனவே பெரியாரை வெறுமனே பகுத்தறிவுவாதி என மதிப்பிட்டுவிட முடியாது. (இது குறித்துக் கொஞ்சம் விரிவாக அ.மார்க்சின் 'பெரியார்?' நூலில் பெரியாரின் பகுத்தறிவை மதநீக்கம் என அ.மா அடையாளப்படுத்துவதை மறுத்து புதியகோடாங்கி இதழில் எழுதியிருக்கிறேன். மேலும் ஒரு வலைப்பதிவாளர் சந்திப்பின்பின்னான உற்சாகச்சந்திப்பில் நண்பர்கள் ஓசைசெல்லா, ரோசாவசந்த், ஓகைநடராசன் ஆகியோருடன் 'பெரியாரை ஒரு பகுத்தறிவுவாதி' எனச் சொல்லமுடியுமா?' என்ற போக்கில் தொடங்கிய உரையாடல் பாதியிலேயே நின்றுபோனது.)
அப்படியானால் பெரியாரின் 'பகுத்தறிவை' எப்படிப் புரிந்துகொள்வது? அது வெறுமனே ஆம், இல்லை என்னும் இருமைகளை அடிப்படையாகக் கொண்ட தருக்க முறையல்ல, மாறாக உரையாடலை மறுக்கும் இந்தியப் பார்ப்பனீய உளவியலுக்கு எதிராக எல்லாவித உரையாடல்களையும் சாத்தியப்படுத்துகிற, தீர்மானிக்கும் காரணிகளைப் புறத்திலிருந்து அல்லாமல் சுயேச்சையாக நிர்ணயிக்கிற, இறுக்கங்களற்ற நெகிழ்வுகளையுடைய திறப்பு. இப்படியும் சொல்லலாம், 'உனக்கு நீயே விளக்கு' என்ற பவுத்தத்தின் அறுபடாத கண்ணி.
'உனக்கு நீயே விளக்கு'
ஐயா, எனக்கு நானே விளக்காக இருந்துவிட்டுப் போகிறேன்.
பெரியார் என்ற பெரிய விளக்கோ, சுகுணா திவாகர் என்ற
அதன் நிழலோ தேவையில்லை. பகுத்தறிவு என்பதன் துவக்கமும்,
முடிவும் பெரியார் அல்ல. ஆண்கள் போல் பெண்கள் ஆடை அணிய
வேண்டும் என்பது பகுத்தறிவல்ல. அவரவர் சூழலுக்கும், வசதிக்கும்,
தெரிவிற்கும் தக்க அணிய வேண்டும் என்பதில் அர்த்தமுண்டு. அது
போல்தான், ஒரு பெண் குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்புவதும்,
விரும்பாததும். பெற்றுக் கொள் என்று கட்டாயப்படுத்துவது எவ்வளவு
சரியல்லவோ, அது போனறே பெற்றுக் கொள்ளாதே என்பதும்.
பெரியார் ஏதோ சிலவற்றை 1930களில் தெரிந்தோ, புரிநதோ புரியாமலோ
சொன்னார். அத்துடன் சரி பின்னர் அதற்காக என்ன செய்தார். கட்சியில்
பெண்களுக்கு இட ஒதுக்கீடா தந்தார்.
தி.க வினால் ஒரு பெண்கள் இயக்கத்தை உருவாக்க முடியவில்லை,
பெரியார் அதில் அக்கறைக் காட்டவே இல்லை.அவருக்கு பெண்ணிய இயக்கம் தேவையில்லை,
சிந்திக்காத தொண்டர்கள்தான் தேவை.
பெரியாரியத்தின் பலவீனங்களை
உங்கள் வார்த்தைகளால் மறைத்துவிட முடியாது. இன்றைய பெண்ணியம்
செல்லும் திசைகளை பெரியாரிய சொல்லாடல் கொண்டு விளக்கவோ புரிந்து
கொள்ளவோ முடியாது. ராஜதுரைகளும், கீதாக்களும், அ.மார்க்ஸ்களும் என்னதான் உரை
எழுதினாலும், பெரியாரியம் வலுவற்ற ஒன்றுதான். அதை உரைகள்
கொண்டு தூக்கி நிறுத்த முயலலாம். காலப் போக்கில் அவை பொத்தென்று
வலுவிழந்து விழும்.இதை சொன்னால் சுகுணாக்களும், ரோசாவசந்துக்களும் கடுப்படையலாம்.
பெரியாரை வெறுமனே வறட்டுத்தனமான பகுத்தறிவுச் சிமிழுக்குள் அடைப்பதன் விளைவுதான் ஆடு கோழித் தடைச்சட்டத்தை ஆதரிப்பது.
-------------------------------
பெரியாரே கோயில்களில் மிருக பலியை எதிர்த்தார், அதன் தடையை
ஆதரித்தார்.
உயிர்ப்பலியும் பெரியாரும்
ஞாநி
ஆடு கோழி உயிர் பலித்தடையை எதிர்ப்பதில் எந்த முட்டாள்தனமும் கிடையாது என்று உறுதியாக நம்பி வரும் வகை வகையான 'முற்போக்காளர்களும் ' பார்ப்பனீய்த்தை எதிர்ப்பதில் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் சில 'பகுத்தறிவாளர் 'களும்; 'மகிழ்ச்சி 'யடைய இதோ ஒரு செய்தி:
உடனே நான் என் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டேன் என்று கருதி விட வேண்டாம்.
(என்னை ஜெயலலிதாவ்ின் ஆதரவாளன் என்றும் பார்ப்பான் என்றும் உங்களில் சிலர் அவதூறுகள் செய்தாலும் என் கருத்தில் மாற்றம் இல்லை. நான் யார் என்பது என் முப்பதாண்டு காலப் பொது வாழ்க்கையிலும் தனி வாழ்க்கையிலும் நிரூபிக்கப்பட்ட விஷயம்.
நீ யாரடா பெரியாரைப் பற்றிப் பேச என்று ஒருவர் கடிதம் எழுதினார். பெரியார் பார்ப்பனர்களின் சடங்குகளை மட்டுமே எதிர்த்தாராம். பெரியாரின் வாழ்க்கையும் வரலாறும் தெரியாதவர்களுக்கெல்லாம் இப்படி கடிதம் மட்டும் எழுதத் தெரிகிறது. தமிழ் நாட்டில் இருப்பது போல புதுவை யூனியன் பகுதியிலும் உயிர்பலித் தடைச் சட்டம் வேண்டும் என்று கோரி 1964ல் தன் 85ம் வயதில் பெரியார் காரைக்கால் காளி கோவிலெதிரே திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். சட்டம் கொண்டு வருவதாக புதுவை அரசு உறுதியளித்த பிறகே போராட்டம் நிறுத்தப்பட்டது.)
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20311062&format=html
-----------------------------------
ஆக பெரியார் ஒரு பகுத்தறிவாதி இல்லை என்பதாக இதை எடுத்துக்
கொள்ளலாம்தானே
அழகு!
கருத்தரிப்பு தவிர்த்த கலவிக்கு நான் .பத்வா போட்டதாக வாய்ஸ் ஆ.ப் விங்க்ஸ் புரிந்து கொண்டது போலல்லாமல் நான் எழுதியதை நான் எழுதிய பொருளில் புரிந்துகொண்டு பொறுமையாக உங்கள் இயல்பான தர்க்கமுறையில் இதை எழுதியிருப்பதற்கு முதலில் நன்றி.
பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளுக்கு ஒப்பானது இந்தியச்சூழலில் இல்லை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்த கருப்பையை அகற்றிக்கொள்ளச் சொல்லும் தீர்வு, அதை பெரியார் உளப்பூர்வமாகவே முன்வைத்திருந்தாலும், அறிவியலுக்குப் புறம்பான ஒரு அபத்தமான தீர்வு என்பதே என் முடிபு.
//
"Just because men cannot bear children, calling women to refuse to bear children is neither progressive nor scientific."
என்று எந்த அடிப்படையில் சுந்தரமூர்த்தி சொல்கிறார் என்று தெரியவில்லை.//
ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது மனிதர்கள், அதாவது ஆண்கள் சுயநலம் கருதி செய்துகொண்ட ஏற்பாடல்ல. ஆணினம் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்கிற காரணத்துக்காக பெண்ணினமும் குழந்தைகள் பெற்றுக்கொள்ள மறுக்கவேண்டும் என்பது எந்த விதத்தில் முற்போக்கானது என்று எனக்கும் புரியவில்லை. பெண்கள் குழந்தை பெறுவது தான் பெண்ணடிமையின் உச்சநிலை; பெண்ணினம் குழந்தை பெறுவதை நிறுத்திக்கொள்வதே முழுமையான விடுதலை என்ற புரிதலே இத்தகையத் தீர்வை முன்வைக்கக் காரணமாக இருந்திருக்கிறது. அதற்கு ஏதாவது அறிவியல், தர்க்க அடிப்படை உள்ளதா? இனப்பெருக்கத்தில் ஆண், பெண் இருவரது பங்கும், அவரவர் உடற்கூறியல்/உடலியலுக்கு ஏற்ப இருக்கிறது, மற்ற விலங்குகளுக்கு இருப்பது போலவே. இது மிகவும் நன்றாக புரிந்துகொள்ளப்பட்ட அறிவியல் அடிப்படை. காலத்துக்கு காலம் மாறக்கூடியதல்ல. இதை மாற்றக்கூடியது பரிணாம மாற்றமாகத் தான் இருக்குமேயன்றி மனித இனத்தின் அரசியலோ அல்லது மாறக்கூடிய அறிவியல் அணுகுமுறையாலோ அல்ல. பிற விலங்கினங்களிலும் பெண் விலங்குகள் கருவுற்று, குட்டிகள் போடுவதால் பெண்விலங்குகள் அடிமைப்பட்டிருக்கின்றன என்று அர்த்தமா? அப்படியானால் அத்தகைய உடற்கூறியலுடன் பெண்விலங்குகள் (மனித இனம் உட்பட) பரிணமிக்க வேண்டியதன் அவசியமென்ன? அதற்கான அறிவியல் விளக்கமென்ன?
பெரியார் ஒரு இடத்தில் "உண்மையான பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்துபோக வேண்டும்" என்கிறார். பிரிதொரு இடத்தில் "பெண்கள் பிள்ளைகள் பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் கிடையாது என்பதோடு, ஆண்களுக்கு இலாபமும் உண்டு" என்கிறார். இந்த இரண்டாவது கூற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. பெற்ற பிள்ளையை வளர்ப்பது என்ற பொறுப்புகூட இல்லாத பட்சத்தில் அது ஆணுக்கு வசதிதான். பெண்ணை முழுமையான போகப்பொருளாக்கிக் கொள்ளலாம்.
"எனக்கு மனிதச்சமூகம் விருத்தியடைவது குறித்துக் கவலையில்லை, பெண்ணின் விடுதலைதான் முக்கியம்'." என்றால், பெண்ணினம் கருப்பையை அகற்றிக்கொண்டு விடுதலையடைந்தாகி விட்டது என்றே வைத்துக்கொள்வோம். அப்புறம் என்ன? அந்த விடுதலையை எத்தனை நாட்களுக்கு கொண்டாடிக்கொண்டிருக்க முடியும்?
//இங்குதான் பெரியாரிடம் பகுத்தறிவுவாதிகளின் தர்க்கங்களைத் தாண்டிப்போகிற அறவியல் ஆவேசமும் கவித்துவமும் மிளிர்கிறது.//
என்று சரியாக மதிப்பிட்டிருக்கிறீர்கள். ஆவேசமும் (அது அறவியல் சார்ந்து எழுந்தாலும்), கவித்துவமும் பகுத்தறிவு, அறிவியலுக்குள் அடங்காதவை. ஆவேசமும், கவித்துவமும் இப்படி நடைமுறையில் என்றும் சாத்தியமில்லாத தீர்வைத் தான் முன்வைக்க முடியும் ("தனியொருவனுக்கு உணவில்லையேல்... " என்ற பாரதியின் கவித்துவமிக்க ஆவேசத்தை சொல்லிச் சொல்லி பலர் புல்லரித்துப்போவதைப்போல). இத்தகையத் தீர்வை பெரியாரியத்தை தீவிரமாக கடைப்பிடிக்கிற ஒருவர் கூட ஏற்றுச் செயல்படுத்துவதற்கான நிகழ்தகவு மிக, மிகக் குறைவு. இது கறிக்குதவாத வெறும் ஏட்டுச் சுரைக்காய் தான் என்பது என் தீர்மானமான கருத்து--இதனால் தாராளவாதிகளின் பார்வையில் நான் ஓர் ஆணாதிக்கவாதியாகத் தோன்றும் அபாயமிருப்பினும் இதைச் சொல்வதில் தயக்கமில்லை.
தி.க வினர் திருமணம் செய்து கொண்டு குழந்தை(கள்) பெறுவதை
பெண்கள் முழு விடுதலை பெறும் வரைத் தள்ளிப் போட்டு விட்டார்களா? ஏதோ பெரியார் ஒரு பேச்சுக்கு அப்படிச் சொல்லிவிட்டார்.
யாருடைய திருமணத்தையும் அவர்
தடுக்கவில்லை, தான் சொன்னதை
முன்னெடுத்து சென்று போராடவும்
இல்லை.எம்.ஜி.ஆர், ரஜனிகாந்த,
விஜயகாந்த படங்களில் வரும்
புரட்சிகர வசனம் போல்தான் பெரியார் சொன்னதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். கவித்துவ உளறல்
என்று வேண்டுமானால் வைத்துக்
கொள்ளலாம்.
வணக்கம்
நலமா?
நான் தமிழ்நாட்டில் இருக்கின்றேன், நான் தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி என்ற தமிழ்வழிப் பள்ளி நடத்திவருகின்றேன்.
நான் தந்தைப்பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டு சாதிமறுப்புத் திருமணம் செய்துள்ளேன்.
நான் சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கான தகவல் மையம் நடத்தி வருகின்றேன்.
இந்த மையத்திற்காக வலைப்பூ (பிளாக் ஸ்பாட்) தொடங்கியுள்ளேன். தங்கள் இணையப்பக்கத்தில் இணைப்பு வைக்க விரும்புகின்றேன். வாய்ப்பிருந்தால் ஏற்பாடு செய்யவும்.
நன்றி
வணக்கம்,
நட்புடன்...
சோலைமாரியப்பன்
http://thamizharthirumanam.blogspot.com
http://thaaithamizh.blogspot.com
solaithamizh@gmail.com