மண்- ஈழத்துத் தமிழ்ச்சினிமா - விமர்சனம்
மண்ணில் ஒரு ரத்தத்துளி தெறித்துவிழுவதிலிருந்து படம் தொடங்குகிறது.
கனகராயன்பாளையம் என்பது இலங்கையிலுள்ள ஒரு அழகிய கிராமம். இங்கு பெரும்பாலும் வெள்ளாளர்களும் பிற ஆதிக்கச்சாதியினருமே நில உடைமையாளர்களாக இருக்கிறார்கள்.தலித்துகளும் மலையகத்தமிழர்களும் விவசாயக்கூலிகளாக இருக்கிறார்கள்.
பாடசாலைகளிலும் வெள்ளாள ஆதிக்கமே நிலவுகிறது. 'ஆறுமுகநாவலர் தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றினார்' என்னும் பாடத்தை ஒப்பிக்க முடியாத தலித் மாணவன் கனகரத்னம்(எ) கணேசனை பரமசிவம்பிள்ளை என்னும் வெள்ளாள வாத்தி தண்டிக்கிறார்.
அங்குள்ள ஒரு வெள்ளாள நில உடைமையாளரின் மகன் பொன்னம்பலம்(எ)பொன்ராசு. பள்ளியில் சகமாணவ்ர்களுடன் விடலைப்பருவலூட்டியில் திளைக்கிறான். அப்போது வவுனியாவில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒருமலையகத்தமிழர் குடும்பம் அங்கு குடியேறுகிறது. அந்த குடும்பத்திலிருந்து லட்சுமி என்னும் மாணவி பள்ளியில் சேர்கிறாள்.
அவளைத் தன் அருகில் அமரவைக்க அனுமதிக்கவும் மறுக்கிறாள் கேலீஸ் என்கிற வெள்ளாளச்சிறுமி. விளையாட்டிலும் அவளைச் சேர்த்துக்கொள்வதில்லை. அங்கு வேலைபார்க்கும் குணசீலன் என்னும் தலித் அவர்களுக்கு அறிவுரை கூறி லட்சுமியை அவர்களோடு விளையாடச்செய்கிறார்.
இதற்கிடையில் பொன்ராசுவுக்கும் லட்சுமிக்கும் இடையில் காதல் அரும்புகிறது. குணசீலனும் லட்சுமியை விரும்பினாலும் லட்சுமி விரும்புவதென்னவோ பொன்ராசுவைத்தான். லட்சுமியின் தந்தை ஒரு வெள்ளாள பண்ணையாரால் திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். லட்சுமியின் தாய்மாமன் ராஜா இதயநோய் உள்ளவன். இன்னொரு வெள்ளாள நில உடைமையாளரின் பண்ணையில் வேலைசெய்யும்போது பாதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சையின்றி இறக்கிறான்.
லட்சுமிக்கும் பொன்ராசுவுக்கும் ஒருகட்டத்தில் உறவு ஏற்பட கர்ப்பமாகிறாள். பொன்ராசுவின் தந்தையோ இருவருக்கும் திருமணம் செய்துவைக்க மறுக்கிறார். குணசீலனின் ஆலோசனையின் பேரில் தங்கையா போலிசை நாட வெள்ளாள பண்ணையாரின் பணபலத்திற்கு முன்னால் போலீஸ் வாயடைத்துப்போகிறது.
பொன்ராசுவும் 'கீழ்சாதி நாயைக் கட்டிக்க' விருப்பமில்லாமல் லண்டன் சென்றுவிடுகிறான். லட்சுமியின் வீட்டில் ஒவ்வொருவராக இறந்துவிடுகிறார்கள்.
18 வருடங்களுக்குப் பிறகு கனகராயன் பாளையம் பற்றி ஆவணப்படம் எடுக்க கனகராயன்பாளையம் வருகிறான் பொன்ராசு. அவனது உதவிக்கு இரு இளைஞர்கள் வருகிறார்கள்.
முடிவில்தான் தெரிகிறது, அந்த இளைஞர்களில் ஒருவன் பொன்ராசுவால் ஏமாற்றப்பட்ட லட்சுமியின் மகன். அவன் பொன்ராசுவை மரத்தில் கட்டிப்போட்டு துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறான்.
படம் இப்படியாக முடிகிறது, ' இதுவரை வணங்குவதற்காக மட்டுமே குனிந்த கைகளில் முதன்முதலாக துப்பாக்கி ஏந்தப்பட்டது' .
படத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய விஷயங்கள்.
கதாநாயகியாக வரும் ஷானாவின் நடிப்பு. கண்களில் விளையாடியிருக்கிறார். கதாநாயகனின் விடலைப்பருவக்குறும்புகள். பாடசாலையில் நிலவும் தீண்டாமை வேறுபாடுகளைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுவது.
இன்னொன்று கேமராவில் கொள்ளை கொண்ட ஈழத்து நிலப்பிரதேசத்தின் அழகு. அடப்பாவிகளா இந்த அழகுப்பூமியிலா இவ்வளவு கொலைகள் நடக்கின்றன, பிணங்கள் விழுகின்றன என்று கதறத்தோன்றுகிறது. உண்மையில் ஈழத்தின் பசுமை பாய்ந்த வயல்வெளிகளை முத்தமிடத்தோன்றுகிறது (நிச்சயம் மொழிப்பற்றாலோ, தமிழீழப் பாசத்தாலோ அல்ல). ஈழத்துத் தமிழ்தான் உண்மையிலேயே பாரதி சொன்னதுபோல 'இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே'தான்
.
அதேபோல பாராட்டப்பட வேண்டிய முக்கியமான விஷயம், 18 வருடங்களுக்குப் பிறகு தாயகம் திரும்பும் பொன்ராசு காதலியைக் கைவிட்டதற்காக மனம் வருந்தவில்லை, ஆனால் போரினாலும் கலவரங்களாலும் சிதைக்கப்பட்ட வீடுகளையும் பாடசாலைகளையும் இழந்த உறவுகளையும் நினைத்தே கண்ணீர்விடுகிறான். தாயகப்பெருமிதம், இழந்த மண் குறித்த ஏக்கம் இவற்றின்பின் ஒளிந்திருப்பது நிலப்பிரத்துவ மதிப்பீடுகளும், குறுகிய சாதிய வெறியும்தான் என்பதைக் கோடிட்டுக் காட்டியதற்காக 'மண்' படத்தைப் பாராட்டலாம்.
அதேபோல பொன்ராசுவின் நண்பன் ஒருவன் இயக்கத்திற்குச் சென்றுவிடுகிறான். 18 வருடங்களுக்குப் பிறகு லண்டனிலிருந்து திரும்பி கும்மாளமாய்க் குடித்து பார்ட்டி கொண்டாடும் பொன்ராசுவைப் துப்பாக்கி ஏந்திய இயக்கப் பாதுகாவலர்கள் சகிதம் பார்க்க வரும் அந்த நண்பனிடமும் (போராளி?) பொன்ராசுவின் சாதிய உணர்வுகுறித்தோ, ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படட் அநீதி குறித்தோ எந்த கேள்விகளும், விமர்சனங்களும் இல்லை. இத்தகைய மெல்லிய நுணுக்கங்களைப் படம் தொட்டுக்காட்டியிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்தில் நிலவும் சாதியப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய முதல் தமிழ்ப்படம் என்பதால் 'மண்' படத்தை நிறையவே பாராட்டலாம்.
அதேபோல படத்தில் பல பிரச்சினைகளும் இருக்கின்றன.
குறிப்பாக மலையகத்தமிழர்களாக வரும் வாகைசந்திரசேகரும் 'காதல்'சுகுமாரும் ஈழத்துத்தமிழ் பேசாமல் தமிழகத்தமிழே பேசுகிறார்கள். உண்மையில் மலையகத் தமிழர்களின் உச்சரிப்பு எப்படியிருக்கும்? ஈழத்து நண்பர்கள்தான் பதில் சொல்லவேண்டும்.
அழகியல் உணர்வென்று பார்த்தால் சாதாரண தமிழ்ச்சினிமாவின் தரத்தைத் தாண்டவில்லை 'மண்'. இதிலேயும் விரகப்பாடல், குத்துப்பாடல், பிரச்சாரப்ப்பாடல் சம்பந்தமில்லாமல் ஒலித்து இம்சைப்படுத்துகிறது. இசை சுமார் ரகம்தான்.
இளமைக்காலங்களில் உடல்மொழியில் விளையாடிய சந்திரசேகருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, படம் முழுக்க நடிக்கவே தெரியாதவர் போல இருக்கிறார். 'காதல்' சுகுமாரும் அப்படியே.
அதேபோல படத்தில் சில கேள்விகளும் எழுகின்றன.
என்னதான் சாதியப்பிரச்சினைகள் ஈழத்தில் இருந்தாலும் இனப்பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் படத்தில் ஒரு காட்சியைத் தவிர எந்தக் காட்சியிலும் இயக்கங்களே வரவில்லை. எந்த கலவரமோ இனப்பிரச்சினையோ காட்டப்படவில்லை. தமிழ்த்தேசியவாதிகள் இனப்பிரச்சினையைக் காட்டி சாதியப்பிரச்சினை குறித்து விவாதிக்காமலே இருப்பதைப் போலத்தானே இதுவும்? மேலும் இயக்கங்களுக்குள் இருக்கும் சாதிய உணர்வுகள் குறித்தும் காத்திரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேபோல வெளியில் மட்டுமில்லாது இயக்கங்களுக்குல் நிலவும் சாதிய உணர்வுகளையும் சொல்வதற்கும் வாய்ப்பாக இருந்திருக்குமே?
என்னதான் ஆதிக்கச்சாதி இளைஞனாக இருந்தாலும் தன் காதலியை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிடுவான் என்பது செயற்கையாகத் திணிக்கப்பட்டது போல இருக்கிறது. ஒருவேளை அந்தப் பெண்ணை 'அனுபவிப்பதுதான்' அவனது நோக்கம் என்றால் அதைத் தெளிவாகக் காட்சிப்படுத்தியிருக்கலாமே? உண்மையாகவே இருவரும் மனமொத்துக் காதலிப்பதுபோலத்தானே காட்சிகள் அமைந்திருக்கின்றன?
எப்படியோ மாவீரர் கதையாடல்களும் சாகசப் பெருமிதங்களும் நிறைந்த ஈழத்துப் பூமியில் நிலவும் சாதியக் கொடூரங்களையும் வெள்ளாள ஆதிக்க வெறியையும் அரைகுறையாகவேனும் சொல்லத்துணிந்ததற்காக 'மண்' திரைப்படத்திற்கு ஒரு ரெட்சல்யூட்.
கதை, வசனம், பாடல்கள், இயக்கம் : புதியவன்.
திரைக்கதை : ராஜ் கஜேந்திரா
ஒளிப்பதிவு : எஸ்.எல்.பாலாஜி
இசை : ஜெர்மன் பாலாஜி
படத்தின் கதையைச் சொல்லி அதன்பிறகு விமர்சனம் செய்திருப்பது எங்களைப்போன்ற 'மண்'பார்க்காதவர்களுக்கு நல்ல காட்சிப்படுத்தலாக இருந்தது.
மலையகத் தமிழர்களின் பேச்சுமொழி ஏனைய பிரதேசப் பேச்சுத்தமிழிலிருந்து வேறுபட்டு அதாவது தமிழகத்தமிழர்களையொத்ததாக அமைந்திருப்பதில் வியப்பில்லை. முன்னாளில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இலங்கைக்கு அழைத்துவரப்பட்டவர்களும் அவர்களின் சந்ததியினரும்தான் மலையகத் தமிழர்கள்.
சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டுமென்பதற்காகவே இயக்கத்தை ஒரு தடவைக்கு மேல் காட்டாதிருந்திருக்கலாம்.
'ஈழத்தில் சாதி'என்பதைப் பேசப்புகுந்தால் தலைதலையாக அடித்துக்கொள்ளவேண்டியிருக்கும்.
சுகுணா...!நான் ஏன் எங்கள் மண்ணை நினைத்துப் புலம்புகிறேன் என்பதற்கு அது அத்தனை அழகாக இருப்பதும் ஒரு காரணந்தான். ஆனால், ஒரு சிறு வருத்தமுண்டு. அதாவது 'மலைநாடு'என்று சொல்லப்படும் இலங்கையின் மத்தியபகுதி பூலோக சொர்க்கம் (சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்)என்று சொல்லத்தக்க இயற்கை எழில் கொண்டது. அது எங்களுக்குச் சொந்தமாகுமா என்பதைக் காலம் கூறும். ஆனால்... எமது மண் என்று நாம் கருதும் பிரதேசமே ஆராய்ந்து பார்க்கும் அறிவைக்கடந்து சிலிர்ப்பூட்டக்கூடியது.
'மண்'கட்டாயமாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியிருக்கிறது உங்கள் பதிவு.நன்றி.
மண்- ஈழத்துத் தமிழ்ச்சினிமா - விமர்சனம்
இப்படம் எப்படி வெளிநாட்டு ஈழத் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பதைப் பொறுத்து சாதியின் ஆதிக்கத்தை எடைபோடலாம்...
கணிப்பு: இப்படம் புறக்கணிக்கப்படும்.
இந்தப் படம் புறக்கணிக்கப்படுவதெல்லாம் இருக்கட்டும் (வேறென்ன நேரும்?). ஆனால் வலைப்பதிவுகளில் பெரும்பாலும் ஈழத்தமிழர்கள் எழுதுகிறார்கள். ஆனால் இந்தப் படத்திற்கோ குறைந்தபட்சம் இந்தப் பதிவுக்கோ கூட ஒரு எதிர்வினையும்(தமிழ்நதியைத் தவிர) காணோமே.
கனகராயன்பாளையம்?
கனகராயன்குளம்??
இங்கிலாந்திலிருந்து இலங்கை-மேற்கிலே போய் இலங்கைபோய்ப் படமெடுத்தவரின் செவ்வியை ஒரு வலையிதழ் வெளியிட்டிருந்தது. ;-)
மண் படம் ஈழத்து படம் என்கின்ற வகையில் அதன் காட்சி அமைப்பும் சலிப்பூட்டாதவாறு படத்தை நகர்த்தி சென்ற பாங்கும் மிகவும் நன்றாக செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக ஈழத்து (மலையகம் உட்பட) உரையாடலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடுவது போல் பொன்ராசு ஏமாற்றி செல்வது வேண்டுமென்றே செருகப்பட்டது போல தோன்றுகிறது. அதனையும் யதார்த்தமாக காட்டியிருக்கலாம்.
அத்தோடு சில தவறுகள் வேண்டுமென்றே செருகப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக பாதிக்கப்பட்டவரின் மகன் பொன்ராசுவை சுடுவதான காட்சி முரண்பாடானது. அதுவும் விடுதலைப்புலிகளின் முழு ஆட்சி நிர்வாகம் உள்ள பகுதியில் எவ்வித சட்டநடவடிக்கைகளும் இன்றி இவ்வாறான பிரச்சனைக்கு முடிவு காட்டப்பட்டதானது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அதேபோல பாடசாலையில் பக்கத்தில் இருக்க அனுமதிக்காததும் அதற்கு ஆசிரியர் ஒத்துப்போவதும் பின்னர் விளையாட்டில் சேர்க்க பின்னடிப்பதும் வேண்டுமென்றே மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் என்பதே என்கருத்து.
மண் அதன் கதை அமைப்பில் செத்தபாம்புக்கு உயிர்கொடுக்கும் ஒரு நடவடிக்கையே.
மண் படத்தை 'ஈழத்துத் தமிழ்ச்சினிமா' என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
வன்னியிலேயே எடுக்கப்பட்ட 'ஆணிவேர்' கூட என்வரையில் ஈழத்துத் தமிழ்ச்சினிமா இல்லை.
இவை ஈழத்தைப் பற்றிய சினிமாக்களே என்பது என் கருத்து.
புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களால் இப்படம் எப்படிப் பார்க்கப்படுமென்பதை எதிர்வுகூறி, அதன்மூலம் பிரச்சினையின் தார்ப்பரியத்தை உணர உங்களால் முடிகிறதுபோலவே,
எந்தச் சிக்கலோ பிடுங்கலோ இன்றி இந்தியாவில் இப்படம் திரையிடப்படுவதும் சில விசயங்களைக் குறிக்கிறது.
இப்படம் குறித்த இரு பக்க இலங்கைத்தமிழர் கண்ணோட்டங்கள்
http://www.yarl.com/forum3/lofiversion/index.php/t7401-0.html
http://thuuuuu.blog.de/2006/10/13/title~1246255
http://thamizhblog.blogspot.com/2007/01/52.html
இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர்: சி.ஜெ.ராஜ்குமார்.
நடன இயக்குனர் தான்: எஸ்.எல்.பாலாஜி
இசை: ஜெர்மன் விஜய்.
மன்னிக்கவும் இந்த தவறுகளை முடிந்தால் திருத்தி விடவும். நன்றி