டோண்டு சொன்ன நியாயமும் கருணாநிதியின் 'ஒருகுலத்துக்கொருநீதி'யும்...

சிலமாதங்களுக்கு முன்பு வலைப்பக்கங்களில் ஒரு விவாதம் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. தெருக்களில் சாதிப்பெயரை நீக்குவது குறித்தான தமிழக அரசின் நிலைப்பாடு குறித்ததே அச்சர்ச்சை. டோண்டு ராகவன் அவர்கள் தெருக்கள் மற்றும் பொதுவிடங்களில் சாதிப்பெயர்களை நீக்கக்கூடாது என வாதாடினார். அத்தகைய வலதுசாரி நிலைப்பாட்டை ஜனநாயகச் சக்திகளான நாமனைவரும் எதிர்த்தோம். ஆனால் டோண்டுவின் வாதத்தில் ஒரு நியாயமிருந்ததை நாம் மறுக்கமுடியாது. அனைத்து சாலைகள் மற்றும் பொதுவிடங்களில் தலைவர்களின் பின்னுள்ள சாதியொட்டு நீக்கப்பட்டாலும் நந்தனத்தை ஒட்டியுள்ள முத்துராமலிங்கத்தின் சிலையும் சாலையும் முத்துராமலிங்கத்தேவர் சிலை மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சாலை என்றே அதிகாரப்பூர்வமாக அறியப்படுகிறது. வேறு ஏதும் தமிழக அரசியல் ஆளுமைகள் அவர்களது சொந்த சாதிச்சங்கத்தவரைத் தவிர மற்றவர்களால் சாதிப்பெயரால் அழைக்கப்படுவதில்லை. இந்தியாவிலேயே 30களில் சாதிப்பெயர்களை நீக்குவது குறித்து தீர்மானம் போட்டு இன்றளவும் பெருமளவிற்குப் பொதுவெளியில் சாதிப்பெயர்கள் புழங்கப்படாமலிருப்பதற்குக் காரணம் தோழர். பெரியார் ஈ.வெ.ராதான். ஆனால் அத்தைகய ஜனநாயக உணர்வை அவமானப்படுத்துவதாகவே முத்துராமலிங்கம், தேவர் என்னும் சாதிப்பெயர் சுமந்து சிலைகளாகவும் சாலைகளாவும் நிற்கிறார்.

இத்தகைய கீழ்த்தரமான விளையாட்டுகளை ஆரம்பித்ததில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. 1995 - 1996 தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய மோதல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரால் ஒரு போக்குவரத்துக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதே. அப்போது முக்குலத்துச் சாதிவெறியர்கள் ஒரு பள்ளரின் பெயர் சூட்டப்பட்டதற்காக அப்பேருந்துகளில் ஏற மறுத்துக் கலவரம் விளைவித்தனர். நியாயமாகப் பார்க்கின் வன்கொடுமைச் சட்டத்தில் கைதுசெய்யபப்ட வேண்டிய சாதிவெறியர்களின் ஆலோசனைக்கிணங்க, சுந்தரலிங்கத்தின் பெயரை மட்டுமல்லாது தேசியச்சின்னங்களிலிருந்த அனைத்து அரசியல் தலைவர்களின் பெயர்களையும் நீக்கியது இதே கருணாநிதிதான்.

இப்போது மீண்டும் அதே சாதிவெறியர்களின் வேண்டுகோளையேற்று மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயரைச் சூட்டியுள்ளார் கருணாநிதி. இந்த 'ஒரு குலத்துக்கொரு நீதி' நடவடிக்கைகளை யார் கண்டிக்கப்போகிறார்கள்?

பின் குறிப்பு :

விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டப்பட்டதற்கு சி.பி.எம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால் அத்தகைய சாதித்தலைவருக்கு அஞ்சலி செலுத்தியது மற்றும் கட்சி அமைப்புகளிலும் தேர்தலின்போது வேட்பாளர் தேர்விலும் வட்டார அளவிலான பெரும்பான்மை சாதிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து சி.பி.எம் வெளிப்படையாக விளக்கமளிக்க முன்வரவேண்டும். மேலும் முத்துராமலிங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தனது கட்சி அமைப்புகளின் மூலம் பொதுவெளியில் நிகழ்த்த முன்வருமா என்பதும் கேட்கபப்டவேண்டிய கேள்வியே.

9 உரையாட வந்தவர்கள்:

  1. சாலிசம்பர் said...

    இன உணர்வையும்,மொழி உனர்வையும் வளர்த்ததில் முக்கியப்பங்கு வகித்தவர் கலைஞர்.அவரை இந்தத் திட்டு திட்டுகிறீர்களே எட்டப்பன் எம்ஜிஆரைப் பற்றி ஏதாவது சொல்கிறீர்களா?

    தேவர் ஜாதி அரசியலை வளர்த்ததில் முக்கியப்பங்கு எம்ஜிஆருக்கே உண்டு.தமிழ் இன உணர்வின் மூலம் திமுக ஆட்சியைப் பிடித்தது.தேவர் இன ஓட்டுகளை வைத்து எம்ஜிஆர் அரசியல் நடத்தினார்.அது தான் இன்றும் அதிமுகவில் தொடர்கிறது.

    தேவர் ஜாதியும் ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதி தான்.இப்போது காலம் அவர்களுக்கு சாதகமாக உள்ளது.இது தேவர் சீசன்.அதிகாரத்திற்கான போராட்டத்தில் அத்துமீறல்கள் நடக்கின்றன.அதற்கும் கலைஞரை குற்றம் சொல்வது முறையா?

    அறிவின் ஒட்டுமொத்த குத்தகை தாரர்களாக பிராமணர்கள் தங்களை நினைத்துக் கொண்டதைப்போல் வீரத்தின் ஒட்டுமொத்த குத்தகை தாரர்களாக தேவர்கள் தங்களை கருதிக் கொள்கின்றனர்.இந்த என்ணங்களை எல்லாம் காலம் தான் மாற்றவேண்டும்.அதுவரை அந்த மகிழ்ச்சியை அனுபவித்து விட்டுத் தான் போகட்டுமே.

  2. வவ்வால் said...

    நல்ல கருத்து, மற்றும் கேள்வி, ஆனால் ஜாதி ஓட்டு வங்கி அரசியல் இருக்கும் வரையில் நீங்கள் ஆசைப்பட்டது நடக்க வாய்ப்பில்லை!

  3. மாசிலா said...

    சாதி வெறியன் மு.ரா.வின் வரலாற்றை முழுதும் தமிழகத்தில் அழிக்கவேண்டும்.

    விமான நிலையத்திற்கு இவன் பெயரை சூட்டியதற்கு எனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

  4. dondu(#11168674346665545885) said...

    நான் அப்பதிவில் இது பற்றி கிளப்பிய கேள்விகள் பல. அதனால் ஏற்பட்ட நிர்வாகச் சிக்கல்களையும் குறிப்பிட்டிருந்தேன். கூடவே டாக்டர் நாயர் ரோடையும் குறிப்பிட்டிருக்க வேண்டும், விட்டு விட்டீர்கள். எனது முக்கியமான கேள்வியே யாருடைய சாதி பெயரையோ அவரது அல்லது அவரது குடும்பத்தினரது சம்மதம் இன்றி எடுக்கும் அடாவடியை எதிர்த்துத்தான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  5. PRABHU RAJADURAI said...

    பெயர் வைக்கும் அதிகாரம் தமிழக முதல்வரிடம் இல்லை. அதற்காக வேண்டுகோள் வைக்கதான் அவரால் முடியும்...இது நடக்காது என்று தெரிந்து, சும்மா கொளுத்திப் போட்டு இருக்கிறார்.

    டாக்டர் கிருஷ்ணமூர்த்தி புத்திசாலித்தனமாக தனது கருத்தினை வைத்துள்ளார்....எனவே இது நடக்காது, என்றே நினைக்கிறேன்.

  6. மிதக்கும்வெளி said...

    ஜாலிஜம்பர்,

    அதீதமான திமுக ஆதரவு, உங்கள் கண்ணை மறைக்கிறதென்று நினைக்கிறேன். தேவர் சாதிய அரசியலில் எம்.ஜி.ஆரின் பங்கை முந்தைய கட்டுரையில் தொட்டுக்காட்டியிருக்கிறேன். இப்போது அந்த அரசியலை வளர்த்து தனக்கான வாக்குவங்கியை உருவாக்கமுனைகிறார் கருணாநிதி.

    /தேவர் ஜாதியும் ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதி தான்.இப்போது காலம் அவர்களுக்கு சாதகமாக உள்ளது.இது தேவர் சீசன்.அதிகாரத்திற்கான போராட்டத்தில் அத்துமீறல்கள் நடக்கின்றன.அதற்கும் கலைஞரை குற்றம் சொல்வது முறையா?/

    என்ன ஒரு அபத்தம்? ஒருகாலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்ததாலேயே மற்றவர்களை ஒடுக்குவதற்கான அதிகாரத்தை யார் கொடுத்தது? இந்த அரசியலை தனது தேர்தல் ஆதாயத்துக்காக வளர்க்கும் கலைஞரைக் குற்றம் சொல்லாமல் என்ன செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

    /அறிவின் ஒட்டுமொத்த குத்தகை தாரர்களாக பிராமணர்கள் தங்களை நினைத்துக் கொண்டதைப்போல் வீரத்தின் ஒட்டுமொத்த குத்தகை தாரர்களாக தேவர்கள் தங்களை கருதிக் கொள்கின்றனர்.இந்த என்ணங்களை எல்லாம் காலம் தான் மாற்றவேண்டும்.அதுவரை அந்த மகிழ்ச்சியை அனுபவித்து விட்டுத் தான் போகட்டுமே./

    வீரம் என்பது மற்றவர்களை ஒடுக்கும் வன்முறைதானா நண்பரே?

  7. மிதக்கும்வெளி said...

    டோண்டு,

    நான் உங்கள் பதிவை ஆதரிக்கவோ உங்கள் நிலைப்பாடு சரிதானென்று சொல்ல வரவோ முன்வரவில்லை. மற்ற சாதித்தலைவர்களின் பெயரை எடுக்க முடிந்தவர்களால் முத்துராமலிங்கத்தின் சாதிப்பெயரை ஏன் எடுக்கமுடியவில்லை என்ற கேள்வியை மட்டுமே எழுப்ப விழைகிறேன். இது தங்களின் சனாதன நிலைப்பாட்டை எதிர்க்கும் எங்களின் சங்கடம், சுயவிசாரணை மற்றும் மனச்சான்றுக்கான கேள்வி. நாயர், முதலியார், பார்ப்பனர், தேவர் என எல்லாப் பெயர்களையும்தான் எடுக்கவேண்டும்.

  8. thiagu1973 said...

    நல்ல வேளை தெளிவா சொன்னீங்க

    உங்களையும் டோண்டு லிஸ்டுல சேர்க்கலாம்னு நினைச்சேன் :)

  9. Anonymous said...

    இதுல என்ன கொடுமைன்னா, மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்துன நிலத்தில 90 சதவீதம் தலித்துகளுடையது. மீதம் பிற ஜாதியினருடையது. முக்குலத்தோர் என்றழைக்கப்படும் ஜாதியினருக்கும் அந்த பகுதிக்கும் சம்பந்தமே கிடையாது. எவனோ நிலத்தைக் குடுப்பானாம்.. அதுக்கு முத்துராமலிங்கம் பேரை வைக்கனுமாம்.. இது திருமா வேற ஜால்ரா.