கோப்பைகளின் உலகம்










நான் கொண்டாட்டத்தோடு வந்தேன்.
நீயோ துயரங்களோடு அமர்ந்திருந்தாய்.
மனித வாசனை ரத்தக்கவிச்சியாய் மாறிப்போனது.
அடையாளங்கள் சிலுவைகளாய்ப் போன பொழுதில்
புன்னகையையும் திருடக்கொடுத்துவிட்டு
மரணத்தின் இருள் கவிந்த உன் விழிகளில்
தரிசிக்கிறேன்
தென் திசையிலிருந்து சேதிசுமந்துவரும் கடலலைகள்
ரத்தக்குளம்பாய் மாறிவருவதையும்
தன் கர்ப்பத்தைக் கிழித்து
வெளித்தள்ளப்பட்ட சிசுவோடு
தெருக்களில் அலையும் பெண்ணையும்.
இப்போது என் கோப்பை உடைந்து நொறுங்குகிறது..
கணீங்

--------

சிகரெட்டைத் தட்டிய சாம்பல்கிண்ணத்தில்
வந்துவிழுந்தது இரண்டுகண்னீர்த்துளி.
இப்படித்தான் கடவுள் வந்துசேர்ந்தார்
தன் பெருத்த பிட்டங்களோடு.
இந்த இடத்தில் கடவுளைச் சந்திக்க
நான் விரும்பவில்லை.
தன் சுவாசத்தைப் போல
அழுகியமுட்டைநாற்றம் வீசும்
அந்த இடத்தை அவரும் விரும்பவில்லை.
மதுவருந்த அவர் மறுத்துவிட்டார்.
குடி கடவுளுக்கு விலக்கப்பட்டிருந்தது.
நான் கோப்பையை எடுத்துக்கொண்டேன்.
களைப்பும் அயர்ச்சியும் ஓங்க
நாற்காலியில் சாய்ந்த கடவுள்
விசும்பி அழத் தொடங்கினார்.
புணராமலே பிள்ளை பெற்றுக்கொண்டிருப்பதனால்
தன் குறி துருப்பிடித்திருப்பதாய்ப்
புலம்பத்தொடங்கினார்.
நான் கடவுளின் இடத்தில்
கோப்பையை வைத்தேன்.

1 உரையாட வந்தவர்கள்:

  1. ப்ரியன் said...

    இரு கவிதைகளும் அருமை