தமிழ், தமிழர், திராவிடம்
தமிழர்கள் யார் என்ற கேள்வி அடிப்படையிலேயே சிக்கலான கேள்வி.
சங்ககாலத்திலேயே தமிழ், தமிழர், தமிழகம் என்ற சொற்களைக் காணலாம் . 'தமிழ்கெழு மூவர் காக்கு மொழிபெயர் தே எத்த பன்மலை யுறந்தே' என்கிறது அகம்(31).ஆனால் தமிழர் மற்றும் திராவிடர் என்கிற சொல்லாடலை அரசியல் சொல்லாடலாக மாற்றியவர்கள் தலித்துகளே, இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பறையர்களே.
1881ல் அயோத்திதாசர் திராவிடமகாஜனசங்கம் என்னும் அமைப்பை ஏற்படுத்துகிறார். 'ஒருபைசா தமிழன்' என்னும் இதழை நடத்தியவரும் இவரே. அயோத்திதாசர் பறையர்களைப் பூர்வபவுத்தர்களாகக் காண்கிறார். இந்துமதத்தில் காணப்படும் பண்டிகைகளுக்கெல்லாம் பவுத்தரீதியான விளக்கங்கள் கொடுக்கிறார். ஆனால் அருந்ததியர்களை அவர் பவுத்தர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. அருந்ததியர், விறலியர், தோட்டிகள், குறவர்கள் ஆகியோர் 'இயல்பிலேயே' தாழ்ந்தவர்கள்' என்னும் அவர், பஞ்சமர் பாடசாலைகளில் அருந்ததியர் குழந்தைகளை பறையச்சிறுவர்களோடு சேர்த்துப் பயிற்றுவிப்பதை 'குப்பைக்கூளங்களை வைரமணிகளோடு சேர்ப்பதுபோல' என்றுகூறி எதிர்க்கிறார்.
அதன்பிறகு மறைமலையடிகள், மனோன்மனீயம் சுந்தரனார் போன்றோர் ஆரியத்திற்கு எதிராக தமிழையும் திராவிடத்தையும் தூக்கிப்பிடித்தனர். ஆனால் இவர்களின் தமிழ்த்தேசியம் என்பது சைவத்தை அடிப்படையாகக் கொண்ட வெள்ளாளத்தேசியமே. அவர்கள் பார்ப்பனரின் அதிகாரத்தை மறுத்தார்களே தவிர வருணாசிரமத்தை மறுக்கவில்லை. 'மாட்டு மாமிசம் உண்ணாதார்தான் தமிழர்' என்று வரையறுக்கிறது சென்னைப் பல்கலைக்கழக தமிழகராதி. 'பறையரொழிந்தோர்தான் தமிழர்' என்கிறார் வெள்ளைக்கால் சுப்பிரமணியம்பிள்ளை. சிறுதெய்வங்களைத் துஷ்டதேவதைகள் என்று இகழ்கிறார் மறைமலையடிகள். அதேபோல அன்று நீதிக்கட்சியில் இருந்த பல தலைவர்களும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பார்ப்பனர்களின் அதிகாரத்தை மறுத்தார்களேயன்றி, பார்ப்பனீயைத்தோ இந்துமதத்தையோ மறுக்கவில்லை.
திராவிடர் என்ற சொல்லாடலை ஒரு பரந்த தளத்திற்குக் கொண்டுசென்றவர் பெரியார் ஈ.வெ.ரா ஒருவரே. அவர் திராவிடர் என்னும் கருத்தாக்கத்தை சாதியொழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு ஆகிய இங்கு காலங்காலமாய் நிலவிவந்த அவைதீகமரபுடனும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் நவீனக் கருத்தாக்கங்களுடனும் இணைத்தார்.
சாதியையும் அதற்குக் காரணமாயிருக்கும் இந்துமதத்தையும் எதிர்த்தன் மூலம் அவர் திராவிடர் என்னும் சொல்லுக்கு 'சாதியற்றவர்' என்னும் அர்த்தத்தைத் தந்தார். மேலும் பொதுவாக தேசியம் என்பதே மற்றமை (others) அல்லது எதிரிகளை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுவது. காந்தியின் இந்தியத்தேசியம் வெள்ளையரை மற்றமை என்றதென்றால் திலகர் போன்றோர்கள் முன்வைத்த இந்து-இந்தியத்தேசியம் முஸ்லீம்களை மற்றமையாக முன்வைத்தது.
ஆனால் பெரியார் பார்ப்பனர்களையே மற்றமையாக நிறுத்தினார். பார்ப்பனரல்லாதார் அனைவரும் திராவிடர்கள் என்றார். அதற்கு அவரைப் பொறுத்தவரை நிலப்பகுதி கூட தடையில்லை. 'பம்பாயிலும் வங்காளத்திலும் வசிக்கும் தாழ்த்தப்படட் தோழர்கள் கூட திராவிடர்கள்தான்' என்றார். பார்ப்பனரக்ளை மற்றமையாக அவர் நிறுத்தினாரே தவிர அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றவோ அல்லது வன்முறையை அவர்கள் மீது ஏவிவிடவோ அவர் முனையவில்லை. இந்தவகையில் பெரியாரின் திராவிடர் என்ற சொல்லாடல் ஜனநாயகத்தன்மை வாய்ந்தது.
ஆனால் பெரியாரிடமிருந்து அண்ணா பிரிந்தபோது திராவிட நிலப்பரப்பில் வாழும் அனைவரும் (பார்ப்பனர்கள் உட்பட) திராவிடர்கள் என்றார். அதனால்தான் அண்னாவின் இயக்கத்தில் 'திராவிடர்' என்பதிலுள்ள 'ர்' விகுதிகிடையாது.
திராவிடமுன்னேற்றக்கழகம்தான்.
அதுவரை பெரியாரின் இயக்கத்தில் பார்ப்பனர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டது கிடையாது. ஆனால் அண்ணா தனது இயக்கத்தில் அவர்களையும் இணைத்துக்கொண்டார். பிறகு திராவிடக்கட்சிக்கு ஒரு பார்ப்பனப் பெண்மணியே தலைவராக வந்தார். (பார்ப்பனர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளாத இன்னொரு கட்சி பா.ம.க)
ஆனால் பெரியார் முன்வைத்த 'திராவிடர்' என்னும் கருத்தாக்கமும் அண்னா முன்வைத்த 'திராவிடம்' என்னும் கருத்தாக்கமும் முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைத்துப் பார்ப்பனரல்லாதோரையும் இணைத்துக்கொள்ளும் ஜனநாயகமான, நெகிழ்வான கருத்தாக்கமாகவே இருந்தது. தேசியம் பாசிசமாக மாறுவதற்கான தடுப்பு அரணையும் அது உள்ளடக்கியிருந்தது.
ஆனால் பின்னால் வந்த தமிழ்த்தேசியர்கள் 'திராவிட அரசியல் தமிழ்த்தேசியத்தின் தனித்துவத்தைச் சிதைப்பதாக'க் குற்றம்சாட்டினர், சாட்டுகின்றனர். அதில் ஒரு பிரிவினர் தமிழகத்தில் வாழும் பிறமொழி பேசும் சாதிகளை எதிரியாகப் பாவிக்கின்றனர்.
இதற்கு அடிப்படை வகுத்தது 90களில் வெளிவந்த பெங்களூர் குணாவின் 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்னும் நூல். இவர் பெரியாரைக் கன்னடராகவே பார்க்கிறார். தமிழ்த்தேசியப் போராட்டம் வந்தேறிகளான மார்வாடிகளுக்கு எதிராகத் திரும்பாமலிருக்கவே பெரியார் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம் நடத்தினார் என்றும் அதற்காக மார்வாடிகளிடம் காசு வாங்கினார் என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும் மனுதர்மம், நாயக்கர் காலத்திலேயே எழுதப்பட்டது என்னும் குணா பார்ப்பனீயம், ஆரியம் என்று இருவகையாகப் பிரிக்கிறார். பார்ப்பனீயம் நல்லது என்றும் வடக்கிலிருந்து வந்த ஆரியம்தான் தீது என்றும் பகர்கிறார். மேலும் புத்த, சமண மதங்கள்தான் ஆரியம் என்கிறார். தமிழ்பேசும் பார்ப்பனர்கள் தமிழர்தான் என்றும் ஆனால் தமிழர்களின் மலத்தைக் காலமெல்லாம் சுமந்தாலும் அருந்ததியரக்ள் தெலுங்கு வந்தேறிகள் என்றும் அவர்கள் தமிழ்நாட்டை விட்டுத் துரத்தியடிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் எழுதினார்.
இத்தகைய பாசிச அரசியலை எழுதிய குணா பறையர் என்னும் ஒடுக்கப்படும் சாதியில் பிறந்தவர் என்றால் இதே அரசியலுக்காக மள்ளர்மலர் என்னும் இதழை நடத்திவரும் குருசாமிசித்தர் என்பவர் இன்னொரு ஒடுக்கப்படும் சாதியான பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது வரலாற்றின் முரண்நகைதான். குணாவின் அரசியலை நேரடியாக ஆதரிக்கவில்லையெனினும் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு மறைமுகமாக இந்த அரசியலை ஆதரிக்கிறது.
தமிழ்த்தேசியர்களில் ஒருபிரிவினர் இந்த அரசியல்போக்கை ஆதரிக்காதவர்கள்தான். ஆனால் தமிழகத்தின் பல உரிமைப்பிரச்சினைகளுக்கு 'திராவிடம்' என்னும் கருத்தாக்கம்தான் காரணம் என்று அவர்களும் குற்றம்சாட்டுகின்றனர். இப்போது திராவிடக்கட்சியினர் யாரும் கன்னடரையோ மலையாளியையோ தெலுங்கரையோ திராவிடர்களாகப் பார்ப்பதில்லை. பெரியார் மொழிவழிமாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதே திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டு தனித்தமிழ்நாடுக் கோரிக்கையை முன்நிறுத்தினார்.
அண்னாவோ 60களிலேயே திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார். எனவே காவிரியில் தண்ணீர் வராததற்குத் திராவிட அரசியல்தான் காரணம் என்று சொல்வதை விடவும் அபத்தம் வேறில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தின்போது திமுக மலையாளி எதிர்ப்பையும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின்போது கனன்ட எதிர்ப்பையும் முன்வைத்தது.
எனவே அண்னாவால் முன்வைக்கப்படட் 'தென்மாநிலத்தில் வசிப்பவர்கள் எல்லாம் திராவிடரகளே' என்னும் நிலைப்பாட்டை திமுக எப்போதோ மறுபரீசீலனை செய்துவிட்டது. எனவே இனியும் தமிழகத்தின் உரிமைப்பிரச்சினையின் போது திராவிடர்கள் காவிரிநீர் வாங்கித் தருவார்களா என்று கேட்பது அறியாமையின் பாற்பட்டதே.
இப்போது திராவிடர் என்னும் கருத்தாகக்த்திற்கு அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால் அண்னா முன்வைத்த திராவிடத்தேசியம்தான் தமிழ்த்தேசியம் பாசிசமாகும் அபாயத்தைத் தடுத்தது என்பதை மறந்துவிடக்கூடாது. இன்னும் பெரியார் முன்வைத்த 'திராவிடர்' என்னும் கருத்தாக்கத்திற்கும் இன்றைக்குத் தேவை இருக்கிறதா என்ற கேள்வி எழலாம்.
ஆரியர் படையெடுப்பு குறித்துப் பல்வேறு வரலாற்றாய்வாளர்களும் பல முரண்பாடான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். ஆனால் அடிப்படையில் ஆரியர் வருகை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் இந்த ஆராய்ச்சியையெல்லாம் தாண்டி பெரியார் முன்வைத்த 'திராவிடர்' என்னும் சொல்லாடல் சாதிக்கு எதிரான ஒரு குறியீடு. அதற்கு வேறு வார்த்தையைப் பயன்படுத்தலாமே தவிர அவற்றிற்கான கருத்தியல் மற்றும் அரசியல் தேவை இன்றளவும் தொடரத்தான் செய்கிறது.
தலை,
அருமையான கட்டுரை.
வாழ்த்துக்கள்.
மிக நல்ல கட்டுரை சுகுணா,
இந்த இடத்தில் பெரியாரின் திராவிடருக்கான விளக்கமும், இந்திய சட்டத்தில் படி ஹிந்துக்களுக்கான விளக்கமும் பொருத்திப்பார்க்கூடியது.
" எவனல்லாம் இசுலாமியன் இல்லையோ, எவனெல்லாம் கிருத்துவனில்லையோ, எவனெல்லாம் பார்சியில்லையோ, எவனெல்லாம் பவுத்தன் இல்லையோ அவனெல்லாம் ஹிந்து" எங்கிறது இந்திய சட்டம் . ஆனால் பெரியார் சொல்லுவதோ " எவனெல்லாம் ஒடுக்கப்படுகிறானோ, எவனெல்லாம் பிற்படுத்தபட்டானோ எவனெல்லாம் மத ரீதியாய் ஒடுக்கபடிகிறானோ அவனெல்லாம் திராவிடன்" என்றார் .
பெரியார் கொடுத்த ஸ்பேஸ் அப்படி.
கட்டுரைக்கு வாழ்த்துக்கள் தோழா...
நல்ல ஆழமான பார்வை. சாதிக்கட்டமைப்பை மீறுவதற்கு 'திராவிடம்' என்ற கருத்து முக்கியமானது. இதைப்போன்ற கருத்துருவாக்கமும் சொல்லாடலும் வட இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் இல்லை என்றே நினைக்கிறேன். மேற்கில் அம்பேத்கர் சாதியற்ற நிலையைக் குறிப்பிட எம்மாதிரியான சொற்களையும் கருத்தையும் கையாண்டார் என்பது தெரியுமா?
//இதைப்போன்ற கருத்துருவாக்கமும் சொல்லாடலும் வட இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் இல்லை என்றே நினைக்கிறேன்//
பத்ரி அய்யா,
நல்லாவே ஜல்லி அடிக்கறீங்க.ஆனாலும், கொஞ்சம் சரியாத் தான் சொல்லியிருக்கீங்க.வட இந்தியாவிலும்/கிழக்கு இந்தியவிலும் இதைப்போன்ற கருத்துருவாக்காமும்,சொல்லாடலும் இல்லைன்னு தான் சொல்லணும்.ஏன்னாக்க பெரியாரின் தாக்கத்தை அங்கே இருந்த/இருக்கற ஒரு தலைவர் கூட உள்வாங்கவில்லை.ஏன், பக்கத்தில் இருக்கும் இலங்கையில் கூட யாரும் உள்வாங்கவில்லை.ஆந்த்ராவில் கூட இல்லைன்னு தான் சொல்லணூம்.சொத்தைப் பசங்க,போகட்டும் விடுங்க.ஆனா, பாலஸ்தீனத்திலும்/வியட்நாமிலும் பெரியாரின் தாக்கம் நிறையவே இருந்ததுன்னு தான் சொல்லணும்.யாசிர் அராஃபத்துக்கும்/ஹோ சி மின் அய்யாவுக்கும் வெள்ளை தாடி நிறையவே இருந்தது.அவங்களையும் திராவிட கும்பலில் சேத்துடலாம்.திராவிடம் அகண்டு,விரிந்து பரவட்டும்.பெரியாரின் கனவை நனவாக்குவோம்.
பாலா
/மேற்கில் அம்பேத்கர் சாதியற்ற நிலையைக் குறிப்பிட எம்மாதிரியான சொற்களையும் கருத்தையும் கையாண்டார் என்பது தெரியுமா/
அம்பேத்கர் அத்தகைய வார்த்தைகள் எதுவும் கையாண்டதாகத் தெரியவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிட 'செட்யூல்ட் இன மகக்ள்' என்ற சொல்லாடலையே கையாண்டார். அவரது கடைசிக்காலத்தில்தான் தலித் என்னும் சொல்லாடல் மகாராட்டிரத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
//பார்ப்பனர்களின் அதிகாரத்தை மறுத்தார்களேயன்றி, பார்ப்பனீயைத்தோ இந்துமதத்தையோ மறுக்கவில்லை.
//
பார்ப்பனர்களின் அதிகாரம், இந்துமதம் இந்த இரண்டையும் சொல்லவில்லையென்றால் பார்ப்பனீயம் என்று எதை சொல்லுகிறீர்கள்.
திராவிடர் என்னும் சொல் ஒரு குறிப்பிட்ட பகுதியையோ (ஆந்திரா, கேரளா, கருநாடகா) அல்லது இனத்தையோ குறிப்பதாகவே இன்றும் பெரும்பான்மையான மக்கள் கருதிக் கொண்டிருக்கிறார்களே,
விசயகாந்தும் தான் ஒரு திராவிடர் என்று கூறிக்கொள்கிறார், சரத்குமாரும் திராவிடர் என்று கூறிக்கொள்கிறார்களே, ஏன்?