பெண் எழுத்தாளர்களிடம் சில கேள்விகள்



பெண் எழுத்தாளர்களுக்கென்று சில பிரத்யேகமான பிரச்சினைகள் இருக்கின்றன.இப்படிச்சொல்வதே அபத்தமானது.பெண்களுக்கென்று பல பிரச்சினைகளிருக்கின்றன.பெண் எழுத்தாளர்க்கென்று கூடுதலாகப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. பொதுவெளிக்கு வரும் எல்லாப் பெண்களுக்குமே பிரச்சினைகள் இருக்கின்றன.

கலை,இலக்கியம் மற்றும் அரசியல்வெளிகளில் செயற்படும் பெண்கள் எதற்கும்தயாராயிருப்பவர்களாகவும் சீக்கிரத்தில் இணங்கக்கூடியவர்களாகவும் வளைத்துப்போட எளிதானவர்களாகவுமே கருதப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர்,கருணாதியைப் பற்றிய பாலியல்புனைகதைகள் சாகசக்கதைகளாகவும் ஜெயலலிதா பற்றிய பாலியல்புனைகதைகள் ஒழுக்கம் குறித்த கதையாடல்களாகவும் நின்றுவிடுவது இதற்கொரு சான்று.

அப்படித்தான் உடல்பற்றி எழுதிய பெண்கவிஞர்களும் பார்க்கப்பட்டனர். அவர்களை அண்ணாசாலையில் வைத்துக்கொளுத்தத் தமிழ்விரும்பிகள் ஆசைப்பட்டனர். அவர்களது கவிதைகள் அவர்களின் வாழ்க்கையோடும் உடலோடும்பொருத்திப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. புதிய அர்த்தங்கள் உண்டுபண்ணப்பட்டன. இந்தப் பிரச்சினையை தார்மீக ஆவேசத்துடனும் நேர்மையுடனும்பெண்கவிஞர்கள் அணுகினர். தங்களது எதிர்ப்பைக் காத்திரமாகப் பதிவு செய்தனர். தங்கள் தோழமைச்சக்திகளை அடையாளம் கண்டு இணக்கம் பூண்டனர்.

சமீபத்தில் சாருநிவேதிதாவின் 'ராசலீலா'நாவலைப் படிக்க நேர்ந்தபோது அவரது நாவலின் ஒருபகுதி முழுவதுமே பெண் எழுத்தாளர்கள்குறித்த கிசுகிசுக்கள் நிரம்பியதாகவே இருந்தது.அதிலும் ஒரு அத்தியாயத்திலொரு பெண் எழுத்தாளர் ஒருவரோடு 'படுத்து' அதை ரகசியமாய்ப் படம்பிடித்து பணம் சம்பாதிப்பதாய் வருகிறது.பிரதியைப் படிப்பவர்களுக்கு அந்தப் பெண் கவிஞர் யாரென்பது சுலபத்தில் விளங்கிவிடும்.

ஒருவேளை அப்படிப் 'படுத்து' எழுந்தாலும் கூட கலகக்காரர்கள் அதுகுறித்து கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது என்பதுதான் விளங்கவில்லை. பெரும்பத்திரிகை ஆசிரியர்களுடன் கூடிக் குடித்து அதன்மூலம் காரியம் சாதித்துக்கொள்வது, சினிமா விமர்சனங்கள் என்றபெயரில் இயக்குனர்களுக்கு மறைமுகத் தூதுவிடுவதை விடவும் 'படுத்து' எழுவது எந்த வகையில்கேவலம் என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும்.

ஆனால் இதுபோன்ற சில வக்கிரக்குப்பைகளை விலக்கிவிட்டால் பெண் எழுத்துகளின் மீதான எதிர்ப்பு கணிசமாகக் குறைந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இன்று பெண் எழுத்தாளர்கள் வெகுஜன இதழ்களாலும் அங்கீகரிக்கப்பட்டவர்களாக மட்டுமல்லாது காலச்சுவடு போன்ற இலக்கிய வியாபார பிரைவேட் லிமிடெட்டுகளின் சந்தைப்பொருளாகவும் மாறியிருக்கின்றனர். கவிஞர் சல்மா சென்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் நின்று தோற்றுப்போனார்.வெற்றிபெற்றிருந்தால் சிறுபான்மைச்சமூகத்தைச்சேர்ந்தவர் என்றவகையில் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்குமென்பது உறுதி.இப்போது கவிஞர் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டார். இயல்பாகவேபெண் எழுத்தாளர்களிடம் சில கேள்விகளை எழுப்பலாமென்று தோன்றுகிறது.

* பெண் எழுத்தாளர்கள் பெண்ணுடல்தொடர்பான பிரச்சினையில் அணிதிரண்டதைப்போல வேறெந்த சமூகப்பிரச்சினைக்காவும் அணிதிரளாதது ஏன்? குறிப்பாக சாதியமும் இந்துத்துவமும் இந்தியச்சூழலில் விடுதலையுணர்வை நெறித்துக்கொல்லும் கொலைக்கருவியாயிருக்கும்போது இதற்கெதிரான அரசியல்வெளிகளில் பெண் எழுத்தாளர்கள் பங்கெடுத்துக் கொள்வதில்லையே,ஏன்?

* புறச்சூழலைக்கூட விடுவோம்.தாங்கள் இயங்கக்கூடிய இலக்கியவெளிகளில் தொழிற்படும் பார்ப்பனீய மற்றும் சாதிய அதிகாரம்குறித்து இதுவரை ஏன் குறிப்பிடத்தக்க அளவில் குரல் எழவில்லை?. மாற்று இலக்கியம் மற்றும் அரசியலை முன்வைக்கும் சிறுபத்திரிகைகளின் சமாதிமீது மேலெழும்பும் காலச்சுவடு,உயிர்மை பத்திரிகளின் பதிப்பு, இதழ், நிகழ்வுகளில்பங்கெடுத்துக்கொள்வது ஏன்?

* பல இடதுசாரி அறிவுஜீவுகள் தமிழ்ச்சூழலில் நக்சல்பாரி இயக்கம்போன்ற மாற்று இயக்கங்களில் பணிபுரிந்து அங்கும் சுதந்திரமாகச்செயல்படமுடியாமல் அல்லது விமர்சனங்களை முன்வைத்து வெளியேறியிருக்கின்றனர். ஆனால் சல்மா,கனிமொழி போன்ற பெண்கவிஞர்கள் திமுக போன்ற மய்யநீரோட்ட அரசியல் இயக்கங்களில் இணைந்துகொள்ளும்போது கூர்மையான அரசியல்விமர்சனங்களை வைப்பதற்கு என்ன வாய்ப்பிருக்கிறது? அல்லது சல்மா,கனிமொழி போன்றவர்களுக்கு அத்தகைய கூர்மையான விமர்சனங்களோ சமூகப்பார்வையோ கிடையாது, ஏதோ இலக்கியவாதிகள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

* கனிமொழியின் 'கருத்து' அமைப்பு என்னவாகும்? தார்மீக அறம் போன்றவற்றைத் தேர்தலரசியல்,மய்யநீரோட்ட இயக்கங்களின் பின்னணியில் வைத்துப் பார்க்க இயலுமா?

* தமிழ்ப்பெண் எழுத்தாளர்களில் எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் உருவாகிறார்கள். ஆனால் தமிழ்ச்சூழலில் ஒரு அருந்ததிராயோ மகாஸ்வேதாதேவியோ உருவாவார்களா?

30 உரையாட வந்தவர்கள்:

  1. Ayyanar Viswanath said...

    பெண்கள் சிறுபத்திரிக்கைகளில் மட்டும்தான் இயங்க வேண்டுமா என்ன?
    இலக்கிய வியாபார பிரைவேட் லிமிடெட்டுகளில் இயங்கினால் என்ன தவறு? தனித்தன்மையை இழக்க நேரிடும் எனக் கருதுகிறீர்களா? நீங்கள் குறிப்பிட்ட பெண் எழுத்தாளர்கள் எங்கும் ஒரே மாதிரியாகத்தான் எழுதுகிறார்கள் என்பது என் கருத்து.அரசியல் சூழலை முன் வைக்கும்போது உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.அது தனிப்பட்ட நபரை முன் வைப்பதில்லை பெரும்பான்மைகளின் சூறையாடலே அரசியல்.

    நான் உட்பட பெரும்பாலான நபர்களுக்கு இலக்கியம், தரமான எழுத்து போன்றவைகளை இது போன்ற பிரைவேட் லிமிடெட்கள் தான் அறிமுகப்படுத்தியது. இதற்க்கு நீங்கள் தரமான பத்திரிக்கை என கொண்டாடும் நேர்மையான பத்திரிக்கையின் பரவலின்மை அல்லது கொண்டு சேர்க்காத குறுகிய வட்டமே காரணம் என பழி சொல்வேன்.என்னைப் பொறுத்தவரை குமுத சூழலில் காலச்சுவடும் உயிர்மையும் எவ்வளவோ மேல் அதற்குள்ளிருக்கும் அரசியல்,சாதிய பின்புலம் போன்றவை தேவையற்றது.முடிந்தால் சரியான புலங்களோடு சரியான படைப்புகள் வர ஏதேனும் செய்ய முடியுமா என பரிந்துரையுங்கள்.

    ஒரு படைப்பை படைப்பாக மட்டும் அணுகுவது தவறா? படைப்பாளியின் பின்புலம்,முன்புலம்,சைடு புலம் எல்லாம் பார்ப்பது ஒற்றை சாளர தன்மையில்லையா?முன் கூட்டிய தீர்மாணங்களோடு ஒரு படைப்பை அணுகுவது தவறில்லையா?

    இவை ஒரு சாமான்யனின் விளங்காத கேள்விகள் ..நேரமிருந்தால் பதிலளிக்க தோன்றினால் இதை வெளியிடுங்கள்

  2. நாமக்கல் சிபி said...

    //* தமிழ்ப்பெண் எழுத்தாளர்களில் எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் உருவாகிறார்கள். ஆனால் தமிழ்ச்சூழலில் ஒரு அருந்ததிராயோ மகாஸ்வேதாதேவியோ உருவாவார்களா? //

    குட் கொஸ்டின்!

  3. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    நமக்கென்று சமயம் உண்டு. சமயம் கற்று தந்த பண்பாடு உண்டு. பண்பாட்டை காக்கும் பக்தர்கள் உண்டு.

    உங்களது இதுபோன்ற படைப்புகள் சமயத்துக்கும், சமூக பண்பாட்டுக்கும் எதிரானது.

  4. தமிழ்நதி said...

    எனக்கு இந்த அரசியல், இலக்கிய அரசியலில் எல்லாம் கொஞ்சம் அறிவு போதாது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்சனைகள் ஆண் எழுத்தாளர்களிடம் இல்லையா?

    உங்கள் வார்த்தைகளில் "குறிப்பாக சாதியமும் இந்துத்துவமும் இந்தியச்சூழலில் விடுதலையுணர்வை நெறித்துக்கொல்லும் கொலைக்கருவியாயிருக்கும்போது இதற்கெதிரான அரசியல்வெளிகளில்" ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் ஆண் எழுத்தாளர்களின் பங்களிப்பு போதுமானதாக இருக்கிறதா? பெரும்பான்மையாக இயங்கிக்கொண்டிருக்கிற அல்லது எழுதிக்கொண்டிருக்கிற அவர்களில் 25 சதவீதத்தினராவது கூரிய சமூகப் பார்வையுடையவர்களாக இருக்கிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? அப்படி அவர்களுள் விரல்விட்டு எண்ணத்தக்கவர்களே அடிப்படை நேர்மையுடையவர்களாக இருக்கிறார்கள் என்ற பதில் உங்களிடமிருந்து வருமாயின், 'பெண் எழுத்தாளர்களிடம்'மட்டும் இந்தக் கேள்விகளை ஏன் கேட்டீர்கள்?

    கிண்டலுக்காகக் கேட்கவில்லை. தெரிந்துகொள்ளக் கேட்கிறேன். நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.

  5. Anonymous said...

    உங்க கேள்விகளுக்கு எந்தப் பெண் எழுத்தாளர் வந்து பதில் சொல்லப் போகிறார் என்று தெரியலை. இருந்தாலும் படிச்சுட்டு சும்மா போக மனசு வரலை.. அதான் என் கருத்துக்கள்.

    பெண்கள் மய்ய நீரோட்ட அரசியலில் கலப்பது தப்புன்னு சொல்றதே தப்பு. அப்படியே மய்ய நீரோட்ட அரசியலில் கலந்தால் கூட உங்களோட அரசியல் விழுமியங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்? நக்சல்பாரி மாதிரி இயக்கங்களில் இருந்து கூட கருத்து மாறுபாடு ஏற்பட்டு வெளியே போனவங்க இருக்காங்க, பெண்களுக்கு அதே போல சமூகப்பார்வை இருக்கான்னு கேக்கறீங்க... நீங்க கேள்வி வைக்கிற திசையிலே, உங்க கேள்வியைப் புரிஞ்சுக்ககூடியவங்க, எண்ணிக்கையிலே எத்தனை பேர் இருக்காங்கன்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா? ரவிக்குமார், மய்ய நீரோட்டத்திலே கலந்து , முழு நேர அரசியல் வாதியானப்பவும், கலைஞர் புகழ் பாடினப்பவும் எங்க சார் போயிருந்தீங்க?

    அப்பறம் அது என்ன மகாசுவேதா தேவியும் அருந்ததியம்மாவும்? அவங்க அறிவுஜீவிகளாவே இருந்துட்டுப் போகட்டும்.... அவங்களோட முன்வரிப்பெல்லாம் ஒஸ்தியானதாகவே இருக்கட்டும்... அதே போல ஒஸ்தியான விஷயத்தை அமுல்படுத்த வேண்டிய பாரத்தைத் தூக்கி சல்மா மேலேயும், கனிமொழிமேல்யும் சுமத்துறதுலே ஏதாச்சும் நியாயம் இருக்கா? ஆம்பிளைங்கள்லே, கருணாநிதி இருக்கலாம், எம்ஜிஆர் இருக்கலாம், சோ ராமசாமி இருக்கலாம், வாட்டாள் நாகராஜ் இருக்கலாம், நல்லகண்ணு இருக்கலாம், ராம கோபாலன் இருக்கலாம், நம்ம டிஜிபி முகர்சி இருக்கலாம், பால்தாக்கரே இருக்கலாம்.. உங்களுக்கு எதிரான அரசியல் செய்பவர்களாக இருந்தால், எதிர்த்து கட்டுரை எழுதிட்டு அடுத்த வேலையைப் பாக்கப் போய்டுவீங்க, புடிச்சவங்களா இருந்தா ஆதரிச்சுக் கட்டுரை எழுதுவீங்க, போட்டோவுக்கு முத்தமெல்லாம் குடுப்பீங்க...ஆனால், பெண்கள்ல மட்டும் உங்களுக்கு எல்லாரும் மகாசுவேதாதேவியாகவும், அருந்ததிராய் போலவும் அறிவுஜீவியாவும் இருக்கணுமோ? என்ன மாதிரியான உலகத்தை கட்டமைக்க வேணும்னு நினைக்கறீங்க?

    நாளைக்கே, தமிழக அரசியலிலே, கனிமொழியோ, சல்மாவோ, ஜெயலிதா போல ஒரு சர்வாதிகார ஆளுமையாக மாற்றம் அடைந்தால், அதை வரவேற்கிற முதல் ஆளாக நான் இருப்பேன். ஊழல் பண்றதுக்கு ஒரு ஆண் அரசியல்வாதிக்கு எவ்வளவு உரிமை இருக்கோ, அதே உரிமை பெண் அரசியல்வாதிக்கும் உண்டு.. வேணா சிபிஐ விசாரணை வைங்க...

    அனேகமா நீங்க, பெண்களுக்கு எதிரான அரசியலின் வீரியம் குறைந்திருக்கிறது என்ற அடிப்படையில் இந்தக் கேள்விகளை எழுப்பி இருக்கீங்க என்று நினைக்கிறேன்.

    பெண்களைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் தடுப்பு ரொம்ப விசேசமான மெட்டிரீயலில் செய்யப்பட்டது.. சில சமயங்களிலே உங்க மாதிரி ஆட்களைக் கூட ஏமாற்றும் தன்மை கொண்டது.

    நம்ம வலையுலகத்தில் இருந்தே ஒரு உதாரணம் தரேன். இன்றைக்கு பசங்க, ஒரு பெண்ணை, ஃபிகர் என்றும் குஜிலி என்று வர்ணித்து, ஜொள்ளு விட்ட அனுபவத்தை, ரசித்து ருசித்து எழுத முடியும். அதே சமயம், ஒரு பெண், தான் ஒரு ஆணைப் பார்த்து ரசித்து, அதனால் அடைந்த மனக்கிளர்ச்சியை பப்ளிக்காக எழுத முடியாது என்பது தான் நிதர்சனம். பசங்க,சர்வசாதாரணமாக எழுதக் கூடிய ஒரு அனுபவத்தை, அதே போன்ற அனுபவம் அடைந்த பெண் எழுத முடியாது என்றால், அவர்களைத் தடுப்பது என்ன? அப்படியே தைரியமாக ஒரு பெண் எழுதினால், நீங்க அதைப் பாராட்டி பின்னூட்டம் போடுவீங்களே தவிர்த்து, ' இந்தப் பெண், இது போல முன்னாடி ஏன் எழுதலை என்று யோசிப்பீர்களா என்று இப்போது எனக்கு யோசனையாக இருக்கிறது. ( முன்பு இல்லை)..

    இத்தனைக்கும்,பெண்வலைப்பதிவாளர்களளில் 99 சதவீதம் போர் படிப்பறிவு கொண்டவர்கள்,சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள். இல்லையா?

    அதாவது நான் சொல்லவரது என்ன்னா , அவங்க உள்ள வரதும் மேலே போறதும் தான் முக்கியம். மத்தெதல்லாம் பிறகுதான்.... நாம ஜாலியா கும்மியடிச்சுட்டு, நீங்க மட்டும் ஒழுங்குப் புள்ளையா இருங்க ன்னு சொல்றது மாதிரி அயோக்கியத்தனம்
    வேற எதுவுமில்லை..அதனாலே ஆரம்பத்திலேயே இது மாதிரி கேள்விகளை எல்லாம் கேட்டு, சிந்திக்கத் தெரிஞ்ச பெண்களுக்கு குழப்பத்தையும், குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தாதீர்கள்.

  6. Anonymous said...

    உங்க கேள்விகளுக்கு எந்தப் பெண் எழுத்தாளர் வந்து பதில் சொல்லப் போகிறார் என்று தெரியலை. இருந்தாலும் படிச்சுட்டு சும்மா போக மனசு வரலை.. அதான் என் கருத்துக்கள்.

    பெண்கள் மய்ய நீரோட்ட அரசியலில் கலப்பது தப்புன்னு சொல்றதே தப்பு. அப்படியே மய்ய நீரோட்ட அரசியலில் கலந்தால் கூட உங்களோட அரசியல் விழுமியங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்? நக்சல்பாரி மாதிரி இயக்கங்களில் இருந்து கூட கருத்து மாறுபாடு ஏற்பட்டு வெளியே போனவங்க இருக்காங்க, பெண்களுக்கு அதே போல சமூகப்பார்வை இருக்கான்னு கேக்கறீங்க... நீங்க கேள்வி வைக்கிற திசையிலே, உங்க கேள்வியைப் புரிஞ்சுக்ககூடியவங்க, எண்ணிக்கையிலே எத்தனை பேர் இருக்காங்கன்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா? ரவிக்குமார், மய்ய நீரோட்டத்திலே கலந்து , முழு நேர அரசியல் வாதியானப்பவும், கலைஞர் புகழ் பாடினப்பவும் எங்க சார் போயிருந்தீங்க?

    அப்பறம் அது என்ன மகாசுவேதா தேவியும் அருந்ததியம்மாவும்? அவங்க அறிவுஜீவிகளாவே இருந்துட்டுப் போகட்டும்.... அவங்களோட முன்வரிப்பெல்லாம் ஒஸ்தியானதாகவே இருக்கட்டும்... அதே போல ஒஸ்தியான விஷயத்தை அமுல்படுத்த வேண்டிய பாரத்தைத் தூக்கி சல்மா மேலேயும், கனிமொழிமேல்யும் சுமத்துறதுலே ஏதாச்சும் நியாயம் இருக்கா? ஆம்பிளைங்கள்லே, கருணாநிதி இருக்கலாம், எம்ஜிஆர் இருக்கலாம், சோ ராமசாமி இருக்கலாம், வாட்டாள் நாகராஜ் இருக்கலாம், நல்லகண்ணு இருக்கலாம், ராம கோபாலன் இருக்கலாம், நம்ம டிஜிபி முகர்சி இருக்கலாம், பால்தாக்கரே இருக்கலாம்.. உங்களுக்கு எதிரான அரசியல் செய்பவர்களாக இருந்தால், எதிர்த்து கட்டுரை எழுதிட்டு அடுத்த வேலையைப் பாக்கப் போய்டுவீங்க, புடிச்சவங்களா இருந்தா ஆதரிச்சுக் கட்டுரை எழுதுவீங்க, போட்டோவுக்கு முத்தமெல்லாம் குடுப்பீங்க...ஆனால், பெண்கள்ல மட்டும் உங்களுக்கு எல்லாரும் மகாசுவேதாதேவியாகவும், அருந்ததிராய் போலவும் அறிவுஜீவியாவும் இருக்கணுமோ? என்ன மாதிரியான உலகத்தை கட்டமைக்க வேணும்னு நினைக்கறீங்க?

    நாளைக்கே, தமிழக அரசியலிலே, கனிமொழியோ, சல்மாவோ, ஜெயலிதா போல ஒரு சர்வாதிகார ஆளுமையாக மாற்றம் அடைந்தால், அதை வரவேற்கிற முதல் ஆளாக நான் இருப்பேன். ஊழல் பண்றதுக்கு ஒரு ஆண் அரசியல்வாதிக்கு எவ்வளவு உரிமை இருக்கோ, அதே உரிமை பெண் அரசியல்வாதிக்கும் உண்டு.. வேணா சிபிஐ விசாரணை வைங்க...

    அனேகமா நீங்க, பெண்களுக்கு எதிரான அரசியலின் வீரியம் குறைந்திருக்கிறது என்ற அடிப்படையில் இந்தக் கேள்விகளை எழுப்பி இருக்கீங்க என்று நினைக்கிறேன்.

    பெண்களைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் தடுப்பு ரொம்ப விசேசமான மெட்டிரீயலில் செய்யப்பட்டது.. சில சமயங்களிலே உங்க மாதிரி ஆட்களைக் கூட ஏமாற்றும் தன்மை கொண்டது.

    நம்ம வலையுலகத்தில் இருந்தே ஒரு உதாரணம் தரேன். இன்றைக்கு பசங்க, ஒரு பெண்ணை, ஃபிகர் என்றும் குஜிலி என்று வர்ணித்து, ஜொள்ளு விட்ட அனுபவத்தை, ரசித்து ருசித்து எழுத முடியும். அதே சமயம், ஒரு பெண், தான் ஒரு ஆணைப் பார்த்து ரசித்து, அதனால் அடைந்த மனக்கிளர்ச்சியை பப்ளிக்காக எழுத முடியாது என்பது தான் நிதர்சனம். பசங்க,சர்வசாதாரணமாக எழுதக் கூடிய ஒரு அனுபவத்தை, அதே போன்ற அனுபவம் அடைந்த பெண் எழுத முடியாது என்றால், அவர்களைத் தடுப்பது என்ன? அப்படியே தைரியமாக ஒரு பெண் எழுதினால், நீங்க அதைப் பாராட்டி பின்னூட்டம் போடுவீங்களே தவிர்த்து, ' இந்தப் பெண், இது போல முன்னாடி ஏன் எழுதலை என்று யோசிப்பீர்களா என்று இப்போது எனக்கு யோசனையாக இருக்கிறது. ( முன்பு இல்லை)..

    இத்தனைக்கும்,பெண்வலைப்பதிவாளர்களளில் 99 சதவீதம் போர் படிப்பறிவு கொண்டவர்கள்,சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள். இல்லையா?

    அதாவது நான் சொல்லவரது என்ன்னா , அவங்க உள்ள வரதும் மேலே போறதும் தான் முக்கியம். மத்தெதல்லாம் பிறகுதான்.... நாம ஜாலியா கும்மியடிச்சுட்டு, நீங்க மட்டும் ஒழுங்குப் புள்ளையா இருங்க ன்னு சொல்றது மாதிரி அயோக்கியத்தனம்
    வேற எதுவுமில்லை..அதனாலே ஆரம்பத்திலேயே இது மாதிரி கேள்விகளை எல்லாம் கேட்டு, சிந்திக்கத் தெரிஞ்ச பெண்களுக்கு குழப்பத்தையும், குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தாதீர்கள்.

  7. Anonymous said...

    சிறுபத்திரிகை அரசியல் என்பது அ,மார்க்ஸின் எழுத்தில் இல்லையா, இல்லை அவர் தொடர்புடைய
    சிறு பத்திரிகைகளில் இல்லையா. பெண்ணியத்தை நிராகரிக்கும் தமுமுக மேடைகளில் 'மதசார்பற்ற', 'இடதுசாரி', 'பின்நவீனத்துவ' 'பெரியாரிய' மேதாவிகள் இடம் பெறுவதும், அவர்கள் தமுமுகவின் பெண்ணிய எதிர்ப்பினை விமர்சனம் செய்யாமல் கூட்டு சேர்வதையும்,
    சமரசம் என்ற கடைந்தெடுத்த பெண்ணிய எதிர்ப்பு இதழில் அ.மார்க்ஸ் எழுதுவதையும் உங்களால் சகித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் பெண் எழுத்தாளர்கள் காலச்சுவடில்,உயிர்மையில் எழுதினால் அதை உங்களால் ஏற்க முடியவில்லை. உங்களுடைய பிரச்சினைகள் கோட்பாடுகள், விழுமியங்கள்,
    நிலைப்பாடுகள் சார்ந்தவையல்ல. அவை தனி நபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள், சிறு பத்திரிகைகள் குறித்த உங்கள் விருப்பு/வெறுப்புகளை சார்ந்தவை. அதை மறைக்க நீங்கள்
    என்னதால் முயற்சித்தாலும் உங்கள் எழுத்தில் அவை வெளிப்பட்டு விடுகின்றன. உமா மகேஸ்வரி
    எழுத்தாளராக சுந்தர ராமசாமி தந்த ஊக்கமும், ஆதரவும் ஒரு காரணம். அதே போல் காலச்சுவடு
    போன்றவை ஆதரவு தந்திராவிட்டால் சல்மா இந்த அளவு கவனத்தினைப் பெற்றிருக்க மாட்டார். அ.மார்க்ஸ் விழுந்து விழுந்து ஆதரிக்கும் தமுமுகவா சல்மாவை எழுத்தாளராக்கியிருக்கும்.
    பத்வா போட்டு ஏன் முக்காடு போடவில்லை, ஏன் எழுதுகிறாய் என்று மிரட்டி முடக்கியிருக்கும்.
    உங்கள் கேள்விகளின் பின்னால் இருக்கும் அரசியல், ஒரு முற்போக்கு சாயம் கொண்டுள்ள
    கேவலமான பிற்போக்கு அரசியல்.

    காலச்சுவடும்,உயிர்மையும் செய்வது சரி என்பதல்ல
    என் வாதம். பெரியார் தி.க, அ.மார்க்ஸ் செய்யும் அரசியல்
    அதே அளவு மோசமானது.
    இதை இன்றைக்கு நீங்கள் மறுக்கலாம். ஒரு காலத்தில் உங்களுக்கே இது புரியும்.

  8. Premalatha said...

    Prakash, you are too old for my daughter. :-)

  9. Anonymous said...

    Salma is Chairperson, Tamilnadu
    Social Welfare Board. Karutthu is not private property of Kanimozhi.
    Kartihk and she founded it.It is
    yet another forum, thats all.

    Most of the radicals who quit
    naxal movement have been co-opted
    by the system.RaviKumar is a MLA.
    Thyagu runs Tamil medium school.
    A.Marx has been co-opted by islamic
    organizations.S.V.Rajadurai is with
    Bharathidasan University. All these men pose no or little threat to the system. The reach and impact of their 'radical' politics is too small to have an impact.Hence the system can tolerate them as another nuisance.

    Neither Salma nor Kanimozhi claimed that they are in
    revolutionary politics.
    So what is wrong if they remain as
    writers active in party politics.
    Feminist poets writing in Tamil
    need not end up as yet another
    Mahaswetta Devi or Arundanti Roy.

    Finally, men like you should atleast know how to ask intelligent questions before trying to judge women poets
    and writers.

  10. மிதக்கும்வெளி said...

    எதிர்பார்த்தைவிடவும் கூடுதலான சர்ச்சையையே இந்தப் பதிவு ஏற்படுத்தியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் தனித்தனியாக உரையாடுவதைவிடவும் மொத்தமாக கருத்தை முன்வைக்கலாமென்று நினைக்கிறேன்.

    'என்னைப் பொறுத்தவரை குமுத சூழலில் காலச்சுவடும் உயிர்மையும் எவ்வளவோ மேல் அதற்குள்ளிருக்கும் அரசியல்,சாதிய பின்புலம் போன்றவை தேவையற்றது'
    என்கிற அய்யனாரின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அப்படியானால் சாதிய அரசியல் அடிப்படையிலான விமர்சனங்களே தேவையில்லை என்றாகிவிடும்.

    /ஒரு படைப்பை படைப்பாக மட்டும் அணுகுவது தவறா? படைப்பாளியின் பின்புலம்,முன்புலம்,சைடு புலம் எல்லாம் பார்ப்பது ஒற்றை சாளர தன்மையில்லையா?முன் கூட்டிய தீர்மாணங்களோடு ஒரு படைப்பை அணுகுவது தவறில்லையா?/

    முன்கூட்டிய தீர்மானங்களோடு ஒரு படைப்ப்பை அணுகத்தேவையில்லைதான். ஆனால் படைப்பு எங்கிருந்து வருகிறது என்கிற எச்சரிக்கையுமில்லையென்றால் எல்லாவற்றையும் கண்மூடிச் சிலாகித்து டி.கேசியைப் போல ரசிகமணி ஆகலாம். அய்யனார் காலச்சுவடின் வாசகர் என்பதாலோ என்னவோ அதிகம் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். காலச்சுவடைப் படிப்பவன் எல்லாம் வாசகன் என்றால் நான்கூட காலச்சுவடின் வாசகன் தான். ஏன் துக்ளக் வாசகனும்கூட. சுந்தரராமசாமியும் காலச்சுவடும் தமிழ்ச்சூழலில் ஏற்படுத்தியிருக்கும் சீரழிவுகளையும் சாதியத் திமிர் மனப்பான்மையையையும் அறிய அய்யனார் பழைய நிறப்பிரிகை இதழ்கள், 'ஒரு புளியமரத்தின் கதை' குறித்த ராஜன்குறையின் விமர்சனம், சு.ரா மறைவிற்குப் பிறகு அவரது காலச்சுவடு மற்றும் உயிர்மை கம்பெனிகளைச் சேர்ந்த பக்தர்கள் குழு அடித்த கொட்டம் குறித்த சாருவின் கட்டுரை, மற்றும் புதியகலாச்சாரம் வெளியிட்ட நூல், கண்ணனின் முஸ்லீம்விரோத இந்து - பார்ப்பனத் திமிர் மனோபாவத்தைக் கட்டவிழ்த்த 'இலக்கியத்தில் இந்துத்துவம் - காலச்சுவடின் ஆள்காட்டி அரசியல்' ஆகிய நூல்கள், மற்றும் 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்னும் மோசமான தலித்விரோத நாவலுக்காக சு.ரா தலித்துகளிடம் சந்தித்த கோபம் ஆகியவற்றைக் கற்கவேண்டும். எனக்கே காலச்சுவடு மற்றும் சுந்தரராமசாமியின் அரசியல் குறித்து தனிப்பதிவு போட எண்ணம்.
    தமிழ்நதியும் பிரகாஷும் எழுப்பியிருக்கும் கேள்விகளானது 'ஆண் எழுத்தாளர்களெல்லாம் யோக்கியமானவர்களா' என்கிற ரீதியிலேயே அமைந்திருக்கிறது. இது ஏதோ என்னை ஆண் எழுத்தாளர்களின் பிரதிநிதி என்பதைப் போலக் கட்டமைக்கிறது. இதை நான் வன்மையாக மறுக்கிறேன்.
    தலித் எழுத்துக்களை தலித்துக்களும் பெண் எழுத்துக்களைப் பெண்களும்தான் எழுதமுடியும், எழுத வேண்டும். ஆனால் எந்த இலக்கியம் மற்றும் அரசியலையும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். அதைக் கயிறு போட்டுத் தடுப்பது என்பது அதிகாரத்திற்கும் அடையாள அரசியலைத் தங்கள் சுயநல வெறி மற்றும் ஊழலுக்கும் பயன்படுத்திக்கொள்வதற்கே வழிவகுக்கும். அதற்குப் பிரகாஷின் கீழ்க்கண்ட வரிகளே சாட்சி.

    /நாளைக்கே, தமிழக அரசியலிலே, கனிமொழியோ, சல்மாவோ, ஜெயலிதா போல ஒரு சர்வாதிகார ஆளுமையாக மாற்றம் அடைந்தால், அதை வரவேற்கிற முதல் ஆளாக நான் இருப்பேன். ஊழல் பண்றதுக்கு ஒரு ஆண் அரசியல்வாதிக்கு எவ்வளவு உரிமை இருக்கோ, அதே உரிமை பெண் அரசியல்வாதிக்கும் உண்டு.. வேணா சிபிஐ விசாரணை வைங்க...
    /

    இது எவ்வளவு ஆபத்தானதாக மட்டுமல்ல படு காமெடியாகவும் இருப்பதை உணரலாம்.

    மற்ற இரண்டு கேள்விகளும் வழக்கம்போல குட்டையிலே மீன்பிடிப்பதற்காக வீசப்படும் வலைகள்தான். அ.மார்க்சிற்கும் இந்தப் பதிவிற்கும் என்ன இழவு சம்பந்தமென்று விளங்கவில்லை. அவர் தமுமுக மேடைகளில் பங்கேற்பதற்காக தமுமுகவின் எல்லா நிலைப்பாடுகளையும் ஆதரிக்கிறார் என்று அர்த்தமா? அ.மா ஓரினச்சேர்க்கை, குடியின் அரசியல், காதலர்தினம் ஆகியவை குறித்து எழுதுவதையும் கூட்டம் போடுவதையும் தமுமுக உறுதியாக ஆதரிக்கப்போவதில்லை. இந்துத்துவ எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் அரசியல் ஆதரவு என்னும் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் அடிப்படையிலேயே முஸ்லீம் அமைப்புகளோடு இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது. 'சல்மாவை சு.ராதான் வளர்த்தார்' என்கிறார்கள். இருக்கட்டும். அதற்காக இலக்கியமேனேஜர் காசுகண்ணன் 'முஸ்லீம்கள் எல்லாம் குண்டுவைப்பவர்கள்' என்று எழுதும்போது எதிர்ப்பு காட்டமாட்டாரா என்ன? 'பிள்ளை கெடுத்தாள்விளை' சர்ச்சையின்போது சுகிர்தராணியின் கருத்து என்ன? காலகாலத்திற்கும் தங்கள் சாதி மற்றும் இனத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு வாய்மூடிப் பார்ப்பனப் பீடங்கள் வளத்தார்கள் என்பதற்காக விசுவாசம் காட்டியே ஆகவேண்டுமென்கிறீர்களா?

    கருத்து கனிமொழியின் தனிச்சொத்தில்லையென்றால் யார் வேண்டுமானாலும் கருத்து அமைப்பை நடத்தலாம் என்று அர்த்தமா? அவர் கருத்து அமைப்பை ஆரம்பித்ததே குஷ்பு - கற்பு சர்ச்சையை ஒட்டித்தான். அந்த சர்ச்சையை ஊதிப்பெரிதாக்கியதே (அப்போதைய) திமுகவின் ஊடகமான தமிழ்முரசும் சன்டிவியும்தான். அப்போது கனிமொழி திமுகவில் நேரடியாக இல்லை. மேலும் மாறன்குடும்பத்திற்கும் கனிமொழிக்குமான தனிப்பட்ட மோதல் மற்றும் பகை இருந்தது. இப்போது கனிமொழி திமுகவின் எம்.பி. நாளை கலைஞர் டிவி இதேமாதிரியான சர்ச்சையை எழுப்பினால் கனிமொழியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.

  11. மிதக்கும்வெளி said...

    இந்த பிரேமலதா யார், அவரது கமெண்டிற்கும் என்னுடைய பதிவிற்கும் என்ன தொடர்பென்று தெரியவில்லை.

  12. Anonymous said...

    சுகுணா,

    //'ஆண் எழுத்தாளர்களெல்லாம் யோக்கியமானவர்களா' என்கிற ரீதியிலேயே அமைந்திருக்கிறது. இது ஏதோ என்னை ஆண் எழுத்தாளர்களின் பிரதிநிதி என்பதைப் போலக் கட்டமைக்கிறது//

    'பெண் எழுத்தாளர்களிடம் சில கேள்விகள்' என்று தலைப்பு போட்டு பதிவு எழுதியவர் நீங்கள் :-) அப்படித் தலைப்பிட்டு பதிவு எழுதினால், அது ஆண் எழுத்தாளர்களின் பிரதிநிதியிடம் இருந்துதான் வருகிறது என்று - சுகுணா திவாகர் யார் எவர் என்று தெரியாதவர்கள் -புரிந்து கொள்வதில் என்ன பிழை இருக்கிறது?

    என்னுடைய முக்கியமான கேள்வியே, பெண்களிடம் இப்படிப் பட்ட கோரிக்கைகளை வைக்க, ஆலோசனை வழங்க உங்களுக்கு யார் அதிகாரம் தந்தார்கள் என்பதுதான்..வசதியாக அதைத் தவிர்த்து விட்டீர்கள். :-)

    // இது எவ்வளவு ஆபத்தானதாக மட்டுமல்ல படு காமெடியாகவும் இருப்பதை உணரலாம்.//

    இதிலே என்ன ஆபத்து இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. பெண்கள் கற்பொழுக்கத்துடன் இருக்கவேண்டும் என்று சொல்கிற Puritanistic பார்வைக்கும், அரசியலுக்கு வருகிற பெண்கள் *ஜெயலலிதா* போல இருப்பது ஆபத்து என்று சொல்வதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை, குறைந்த பட்சம் என்னளவில். ஜெயலலிதாவின் அரசீயலை முற்று முழுதாக எதிர்ப்பவன் என்பதையும் தகவலாகச் சொல்லி வைக்கிறேன்.

    நிசமாகவே புரியாமல் தான் இதையெல்லாம் கேட்கிறேன்.. விவாதத்தை வளர்க்கிறேன் என்று நினைக்கவேண்டாம்.. பெண்ணியம் குறித்த உங்கள் கருத்துக்கள், தீர்மானங்கள், முடிவுகள் என்னவேன்று தெரிந்தால் ஒருவேளை கொஞ்சம் உபயோகமாக இருக்கக் கூடும்.

  13. செல்வநாயகி said...

    நியாயமான கேள்விகள் திவாகர். இதில் சல்மாவைவிடவும், கனிமொழியிடம் நீங்கள் முன்வைக்கும் அனைத்துக் கேள்விகளும் எனக்கும் உண்டு. இதில் இருவருக்கும் வித்தியாசம் காட்டுவதற்கு எனக்கான
    காரணங்களும் உண்டு.

    பெண் எழுத்தாளர்கள் உருவாகி முன்வந்து சமூகத்தளத்தில் இயங்குவதில் என்னளவில் செய்த குறைந்தபட்ச அவதானிப்புகலிருந்து நான் தெரிந்துகொண்டது. நடப்பு சமூகத்தோடு அதன் போக்கிலேயே நடந்துகொண்டு அது முன்வைக்கும் விடயங்களையே தானும் வைத்துக்கொண்டு, நம்பிக்கொண்டு நடப்பவர்களுக்கு எந்தப்
    பிரச்சினையுமில்லை. அதாவது நீங்கள் சொல்லும் இந்துத்துவ அல்லது வேறெந்த மதப்புரட்டுக்களையும் எதிர்க்காமல் தத்தமது மதக் கதைகளைச் சிலாகித்து எழுதிக்கொண்டும், அதைப் போற்றுபவர்களோடு
    கைகோர்த்துக்கொண்டும் இருக்கும்வரை அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். இதில் அவர்களின் சுயமுன்னேற்றம் மட்டுமே அடங்கியிருக்கிறது. அதேசமயம் தன் கட்டுக்களைத் தானே உணர்ந்து அவிழ்த்தெறியக்கூட முடியாமல் அதில் உழல்வதையே சுகமாகக் கருதும் அறியாமையும் இருக்கிறது. அதை அறியாமை என்றுகூட ஒத்துக்கொள்ளமுடியாத அவர்களுக்கான நியாயங்களையும் கொண்டிருப்பார்கள்.

    ஆனால் மேற்சொன்ன வழிகளில் இன்றி வேறுமாதிரிச் சிந்திப்பவர்கள், மதங்களை எதிர்த்துக் கேள்விகேட்பவர்கள், சாதீயத்துக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகள் அதிகம்.
    குடும்பத்திலிருந்தேகூட சிலருக்கு அது தொடங்கலாம். அதில் அவர்களுக்கு இருக்கும் உளவியல் சித்திரவதைகளைப் பெண் உரிமையை மிக விருப்பத்துடன் முன்னெடுக்கும் உங்களாலும்கூடப்
    புரிந்துகொள்ளமுடியுமா எனத் தெரியவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்குமான பிரச்சினைகளை
    இன்னொரு பெண்ணாலேயே உள்வாங்கமுடிவதில் சிக்கல்கள் உள்ளன என்பதைச் சிலகாலம் நீதித்துறையில், குறிப்பாக விவாகரத்துக் கேட்டுவரும் பெண்களின் பிரச்சினைகளைப் பார்த்ததிலிருந்து அறிந்துகொண்டிருக்கிறேன்.

    இப்படியிருக்க எழுதவரும் பெண்கள் இருக்கும் நடைமுறைகளை எதிர்த்து சிந்தித்து அதை வெளிப்படுத்தவும்
    துணிகிறபோது முதலில் குடும்பத்திலேயே எதிர்ப்புவந்தால் அங்கேயே ஆரம்பித்துவிடுகிறது அவர்களின் இருத்தலுக்கான போராட்டம். ஆண்களுக்கும்கூட இப்படியான எதிர்ப்புகள் வரலாம், அதைச் சமாளித்தே
    வெளிவருகிறார்கள் சிலர் என்பதை ஒத்துக்கொண்டே பேசுகிறேன். ஆனால் தான் சார்ந்த குடும்பத்தையே
    எதிர்ப்பதில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள சூழல் வேறுபாடுகள் நம் சமூகத்தில் எப்படியானது என்பதை நீங்களே அறிவீர்கள்.

    ஒருவழியாக இந்த உள்போராட்டங்களையெல்லாம் சமாளித்து வெளிவந்துவிடுகிறார்கள், அல்லது குடும்பத்திலும் ஆதரவுக்கரம் கிடைத்தே வெளிவருகிறார்கள் என்றாலும் வீதிக்கு வந்தவுடன் பெண்களுக்கான
    அங்கீகாரம் எப்படியிருக்கிறது? சாதீயத்தை, மத ஆதிக்கங்களை எதிர்ப்பது இருக்கட்டும், அவர்களின்
    முதல்தேவையான அவர்களுக்கான விடயங்களைப் பேசுவதிலேயே எத்தனை எதிர்ப்புகள்? அவர்கள்
    வாழ்வுகுறித்தான விவாதங்களை வைக்கிறபோதே , அங்கீகரிப்பது அடுத்தகட்டம், முதல் கட்டத்திலேயே
    நீங்கள் சொல்லும் அவர்களின் உடல், ஒழுக்கம்வரை நிறுத்து ஏலம்போடும் எதிர்வினைகள் வருகின்றன.
    இதில் கேவலமும், வெட்கக்கேடும் என்னவென்றால் இந்த ஏலம்போடும் மன்னர்கள் எங்கிருந்தோ ஒரு
    சந்திலிருந்து தலைகாட்டும் ஆதிவாசிகாலகட்டத்து அதே ஆண்கள் இல்லை. சமூகக் காவலர்கள் என்றும், இலக்கிய மேதாவிகள் என்றும், புரட்சிவித்தகர்கள் என்றும் தங்களுக்கான அடையாள அட்டைகளோடு குறிப்பிட்ட பெண்களோடு ஒரே வெளியில் பயணிக்கும் மனிதர்கள். இவைதவிர்த்து அந்தப் பெண்கள் தம் மத, சாதி நிலைப்பாடுகளை விரிவாககூட முன்வைக்கவேண்டியதில்லை, அதை முன்வைக்கிற (சாதி, மதங்களை
    எதிர்க்கிற என்று வாசிக்கவும்) பிறருக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டாலேகூடப் போதும், அவற்றிற்குக் காவல்புரிபவர்கள் மறைந்திருந்தும், நேரடியாகவும் வீசும் கணைகளும் வந்துகுவியும். இவையெல்லாம் மீறித் தம் இருப்பை நிலைநிறுத்துவதே பெரும்பாடாகிறது முதலில் பெண்களுக்கு. அச்சமயத்தில் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு ஆதரவான வாய்ப்பு தேவைப்படுகிறபோது அதற்கான வாய்ப்புகளை வழங்குகிற
    ஊடகத்தைப் பற்றிக்கொள்வது அவர்களுக்குத் தவிர்க்கமுடியாததாகிறது என்றே நினைக்கிறேன்.

    எனவே ஒரு குறிப்பிட்ட பத்திரிகையில் இயங்குவதாலேயே, அல்லது கட்சியில் இயங்குவதாலேயே பெண் எழுத்தாளர்களை அவர்கள் தம் பார்வைகளை முற்றிலுமாக அடகுவைத்துவிட்டார்கள் எனக்கருத என்னால் முடியவில்லை. பல போராட்டங்களைச் சந்தித்தே இலக்கியப்பரப்பில் தான் ஒரு எழுத்தாளர் என்று நிறுத்திக்கொள்ள வேண்டிவந்த சல்மா இப்போதும் முன்னெடுக்கும் விடயங்களின் தன்மையைக் கருத்தில்கொண்டு அதை விமர்சிக்கலாம் அல்லது ஊக்கப்படுத்தலாம். அவர் ஏன் அங்கு சார்ந்திருக்கிறார் என்று நீங்கலும் நானும் கேட்டுவிடுவது சுலபம். அதில் என்னென்ன காரணங்கள் இருக்கிறது என அவர் சொன்னாலே அறியமுடியும்.

    ஆனால் கனிமொழியின் சூழல் வேறு. பலமான பிண்ணனியும் அதனால் வேண்டிய அளவு எல்லாவகையான ஊடகவெளிச்சமும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அவரோடு ஒரே பரப்பில் இயங்கும் வேறெந்த பெண்படைப்பாளியையும்விட அவருக்கான அங்கீகாரம் கிடைப்பதில் அவருக்குப் போராட்டங்கள் இல்லாமலோ அல்லது குறைவாகவோ இருந்திருக்கலாம் நிச்சயம். சிந்திப்பதை அப்படியே சொல்லிவிட்டுக் குறைந்தபட்சம் பத்திரமாக இருக்கவாவது அவருக்கு வாய்ப்புகள் அதிகம். இந்த வாய்ப்பில் அவர் செய்யமுடிபவையும் அதிகமே. இச்சூழலில் ஒரு கட்சிசார்ந்து இயங்கி அதில் தன் தனித்தன்மையைத் தொலைத்துப் பலிகடாவானால் நீங்கள் சொல்லும் விமர்ச்னங்களைத் தாராளமாக அவர்மீது வைக்கலாம். இப்போதே சமீபத்திய பேட்டிகளில் அவர்மீதிருந்த மதிப்பு சரியத்தொடங்கிவிட்டது எனக்கு.

    உங்களின் கேள்விகளுக்குத் தமிழ்நதி சொல்லும் "ஆண்கள் மட்டும் அப்படியிருக்கிறார்களா?" என்கிற எதிர்வினா பதிலும், பிரகாஷ் சொல்லும் "உள்ள வந்தாப்போதும் ஊழலே செஞ்சாலும் செஞ்சுட்டுப் போகட்டும்" எனும் பதிலும் இரண்டுமே எனக்கு உடன்பாடில்லை. நியாயமான கேள்விகளைத்தான் கேட்டிருக்கிறீர்கள். சிந்திக்க, எழுத, வருகிற பெண்கள் எல்லாவிதச் சமூகப்பிரச்சினைகளுக்கெதிராகவும் இயங்கவேண்டும். அதைத் தம்மாலான வழிகளில் முன்னெடுக்கவேண்டும் படைப்பு ரீதியாகவோ, செயல்ரீதியாகவோ தங்களுக்கான நேர்மையுடன். அதேசமயம் அப்படி வராத பெண் எழுத்தாளர்களை விமர்சிக்கிற, விமர்சிக்க உரிமை உண்டு எனக்கருதுகிற உங்களைப் போன்றவர்கள் அப்படி இயங்கத் தொடங்குகிற பெண்களுக்குக் கண்களுக்கும் புலப்படாத வடிவங்களில் எல்லாம் முளைக்கும் தாக்குதல்களையும் தீவிரமாக, மிகத்தீவிரமாக விமர்சிக்கவேண்டும். நீங்கள் விமர்சிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு. ஆனால் எத்தனை பெரியார் காதலர்கள் உண்மையிலேயே அதைச் செய்கிறார்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்தால் இன்னும் பல அரசியல்களை நீங்களும் நானும் விடியவிடய எழுதி விவாதிக்கலாம். இப்போதைக்குப் போதும்:))

    நல்ல பதிவுக்கு நன்றி.

  14. Anonymous said...

    From
    A feminist poet who prefers not to
    reveal her name here.

    Hi,
    We,Women writers also have our own agendas.We recognise the differences in our views and
    accept that such differences are
    inevitable.We do not work as a
    collective or as a group with an
    identity.Feminism unites us.
    We have our own identity, individuality and self-respect.
    Try to understand that first.

    We join hands with Kalachuvadu when there is a common
    item in our agendas or when Kalachuvadu supports our position.
    Some of us supported grant of bail
    for Madhani as we thought that he
    deserved it.Such issue based support is extended by many intellectuals and writers,
    cutting across party lines
    and ideological divides.We are
    also like that.

    Just as you cannot expect A.Marx
    to condemn every action/statement
    of TMMK you cannot expect women
    writers to condemn every word published in Kalachuvadu.

    Kalachuvadu and Uyirmai have never supported Modi or BJP or RSS or Hindutva politics.Women writers are not running fan clubs for
    any one, nor are we running
    hate campaigns against anyone.
    We are not camp followers of
    Kannan or Hameed.If men writers can work with groups with whom they disagree on many issues and agree on common issues why we women writers cannot do that.

  15. Anonymous said...

    http://tmpolitics.blogspot.com/2006/05/blog-post_13.html
    http://tmpolitics.blogspot.com/2006/05/blog-post_114692176902643701.html
    http://tmpolitics.blogspot.com/2006/05/blog-post_114676633563853265.html

  16. மிதக்கும்வெளி said...

    /'பெண் எழுத்தாளர்களிடம் சில கேள்விகள்' என்று தலைப்பு போட்டு பதிவு எழுதியவர் நீங்கள் :-) அப்படித் தலைப்பிட்டு பதிவு எழுதினால், அது ஆண் எழுத்தாளர்களின் பிரதிநிதியிடம் இருந்துதான் வருகிறது என்று - சுகுணா திவாகர் யார் எவர் என்று தெரியாதவர்கள் -புரிந்து கொள்வதில் என்ன பிழை இருக்கிறது/

    அதுசரி ((-

    /என்னுடைய முக்கியமான கேள்வியே, பெண்களிடம் இப்படிப் பட்ட கோரிக்கைகளை வைக்க, ஆலோசனை வழங்க உங்களுக்கு யார் அதிகாரம் தந்தார்கள் என்பதுதான்..வசதியாக அதைத் தவிர்த்து விட்டீர்கள். :-)

    /

    விமர்சிப்பதற்கான உரிமையை யார் வழங்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

  17. மிதக்கும்வெளி said...

    பெயர் தெரியாத தோழிக்கு,

    /Kalachuvadu and Uyirmai have never supported Modi or BJP or RSS or Hindutva politics./

    சுந்தரராமசாமி காலச்சுவடு ஆசிரியராக இருந்தபோதே (பாபர்மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பே) 'அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படுவதன் அவசியம்' குறித்து கட்டுரை வந்தது. (அனேகமாக எழுதியவர் ஜி.எஸ். ஆர். கிருஷ்ணன் என்று நினைக்கிறேன்.) மேலும் காஞ்சி ஜெயேந்திரன் கைது செய்யப்பட்டபோது அவரை ஆதரிக்கும் தொனியில் காலச்சுவடு தலையங்கம் எழுதியது. அதை விமர்சித்த பிரபஞ்சனை 'நீங்கள் கிணற்றுக்குள் தன் உருவம் பார்க்க முயன்ற சிங்கம்போல' என்று எச்சரித்தது. மேலும் சுகனும் ஷோபாசக்தியும் தொகுத்த சனதருமபோதினியில் கோவை குண்டுவெடிப்பு பற்றி எழுதிய ஷாஜகான் என்னும் எழுத்தாளரை 'முஸ்லீம் தீவிரவாதி' என்று எழுதி ஆள்காட்டியது. நேரடியாகவே கண்ணன் 'முஸ்லீம்கள் குண்டுவைக்கும் பயங்கரவாதிகள்' என்று கட்டுரை (?) எழுதினார். இதெல்லாம் இந்துத்துவ அரசியல் இல்லாமல் வேறென்ன?

    மேலும் சு.ராவின் கடைசிகாலத்தில் சிறுகதை என்று நினைத்து அவர் எழுதிய 'பிள்ளைகெடுத்தாள்விளை'யைத் தலித்துகள் கடுமையாக விமர்சித்தபோது வாய்திறக்காமல் கள்ளமவுனம் சாதித்தார் 'பார்வையிலேயே அழகன்'. ஆனால் அவருக்குக் கொள்ளி போட்டுவிட்டு காலச்சுவடின் இலக்கிய விசுவாசிகள் ரவிக்குமார், அ.ராமசாமி, பஞ்சாங்கம் போன்றோர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'பிள்ளைகெடுத்தாள்விளை - எதிர்வினைகள்' என்று தன் அப்பனின் முகத்தில் வழிந்த எச்சிலையும் விற்றுக் காசுபார்த்தது காலச்சுவடு. இதெல்லாம் பற்றி தங்களின் மேலான அபிப்பிராயத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.

  18. கீர்த்தனா said...

    “முன் கூட்டிய தீர்மானங்களோடு ஒரு படைப்பை அணுகத்தேவையில்லைதான்.
    படைப்பு எங்கிருந்து வருகின்றது என்கின்ற எச்சரிக்கை இல்லையுமென்றால்”
    படைப்பு எங்கிருந்து வந்தால் என்ன?
    உண்மையான கனமான விடயங்களை கொண்டிருந்தால் படைப்பை பற்றி மட்டும்
    சிலாகிப்பதில் என்ன தவறு இருக்கிறது..????!!!

    “தலித் எழுத்துக்களை தலித்துக்களும் பெண் எழுத்துக்களை பெண்களும் தான் எழுத முடியும் எழுத வேண்டும்.”.
    கிழக்கு நாடுகளில் ஆண் சீர்திருத்தவாதிகளே ஆரம்பகாலங்களில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். சீனாவில் காங் யு-வெய் (Kanq Yu - We 1859 - 1927) என்பவர் பெண்களின் பாதக்கட்டுகளை எதிர்த்ததோடு, ஆண்களுக்கு கீழ்ப்படிந்து பெண்கள் நடக்க வேண்டும் என்ற நடைமுறையையும் எதிர்த்தார்.இவ்வாறு எதிர்த்தவர்கள் எழுதியவர்கள் பற்றி என்ன சொல்ல போகிறீர்கள்?
    எதைக்கொண்டு பெண் எழுத்துக்கள் என்றும் ஆண்எழுத்துக்கள் என்றும் பிரிக்கிறீர்கள்?
    தாக்கங்களை அடிப்படையாக கொண்டு?
    ஆக .. ஒரு ஆணால் அத்தாக்கங்களை உணர முடியாது என்று சொல்ல வருகிறீர்களா அல்லது தலித்துக்களின் தாக்கங்களை மற்றையவர்களால் உணர முடியாது என்கிறீர்களா??

    “நாளைக்கே தமிழக அரசியலில் கனிமொழியோ சல்மாவோ ………..”
    நீங்கள் சுட்டி காட்டியிருக்கும் பிரகாசின் பந்தி..உங்களுக்கு கேலியாக இருக்கிறதா?
    எந்த விதத்தில் என நான் கேட்கிறேன்?

    எம்.ஜி.ஆர்.போன்றோரின் காதல் பற்றிய சமாச்சாரங்கள் சாகசங்களாக .. கருதப்பட்ட
    போது ஜெயலலிதாவின் பின் புலம் மட்டும் ஏன் படு கேவலமாக அலசப்பட்டது..
    அதே போல ஒரு விடயத்தை தான் பிரகாஷ் சொல்ல விளைகிறார்.

    சர்வாதிகாரம் என்பது பிழையானது என்பது ஒரு புறம் இருக்க
    அதை ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் ஓன்றெனப்பார்க்க வேண்டும் எனும் கருத்து
    எவ்வாறு .. கேலிக்கூத்தாக மாறும்?

    முக்கியமான விடயம்.
    பொதுவாக எழுத்தாளர்களுக்கு தத் தம் தேவைகுறித்து .. உணர்வு குறித்து
    அவரவர்க்கேற்ப தாம் சொல்ல விரும்புபவற்றை தமக்கு ஏற்ற பாணியில் சொல்லி கொண்டு போகிறார்கள்.

    எது காலத்தின் கட்டாயமாக உடனடி தேவையாக இருக்கிறது என ஒவ்வொரு தனியன்களுக்கும் படுகிறதோ அதை .. ஒவ்வொருவரும் எழுதுகிறார்கள்
    அது ஏன் எழுதவில்லை ஏன் இதை மட்டும் எழுதுகிறீர்கள் என கேள்வி எழுப்புவதற்க்கு யாருக்கும் உரிமை இல்லை.

  19. Anonymous said...

    ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன் கட்டுரை வெளியானது உண்மைதான்.சு,ரா டிசம்பர் 6,1992ல் நடந்ததை கண்டித்து எழுதியிருக்கிறார்,பேசியிருக்கிறார். அந்தக் கட்டுரையை ஏன் வெளியிட்டோம் என்பதையும் விளக்கியிருக்கிறார்.ஜெயெந்திரர் கைதை வரவேற்று சு.ரா எழுதியதை நீங்கள் படிக்கவில்லையா. அதில் தமிழ் எழுத்தாளர்கள் இது போன்ற பொது பிரச்சினைகளில் அக்கறை
    செலுத்த வேண்டும் என்றும் எழுதியிருப்பார்.தீராநதி அவர் எழுதியதை முழுமையாகப் போடாததை
    விமர்சித்து காலச்சுவடில் எழுதினார்.குஜராத் படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலச்சுவடு நிதி திரட்டியதே, பல கட்டுரைகளை வெளியிட்டதே. இதை எந்த வகையில் சேர்ப்பது.காலச்சுவடு முஸ்லீம்களின் அனைத்து நிலைப்பாடுகளையும் ஆதரிக்க வேண்டுமா என்ன. அதை இந்த்துவ பத்திரிகை என்று முத்திரை குத்துவது சரியல்ல. அதில் ராஜதுரையும், கீதாவும் எழுதியிருக்கிறார்கள்.காலச்சுவட்டில் இந்த்துவ ஆதரவு எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக
    பார்க்கும் போது அதை அப்படி ஒதுக்கி விட முடியாதுதானே. சு.ராவின் அந்த்க் கதையை தலித் விரோதக் கதை என்று ஒரு சிலர் சொல்ல, சிலர் மறுத்தனர். அனைத்து தலித் எழுத்தாளர்களும் அதை எதிர்க்கவில்லையே.
    அ.மார்க்ஸ் உயிர்மையில் எழுதினரே, ஏன். காலச்சுவட்டில் எழுதுபவர்கள், உயிர்மையில்
    எழுதுபவர்கள் எல்லோரும் அவற்றின் ஆசிரியரின் கருத்துக்களுடன் ஒத்துப் போகவேண்டும்
    என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. நீங்கள் பல தகவல்களை அரைகுரையாக, இரண்டாம் கையாக
    பெற்று சில முடிபுகளுக்கு வந்திருக்கிறீர்கள். சல்மா திமுகவில் சேரும் முன்னரே பஞ்சாயத்து தலைவராக இருந்தார். திமுகவில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் நின்ற அவர் முஸ்லீம் பெண்
    என்ற முறையில் சந்தித்த பிரச்சினைகளை, பொய் பிரச்சாரங்களை நீங்கள் அறிவீர்களா. அவருக்கு
    ஒட்டுப் போடக்கூடாது என்றும், அவர் இஸ்லாத்தின் விரோதி என்றும் செய்யப்பட்ட பிரச்சாரங்களுடன் அவர் தனி நபர் ஒழுக்கமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இது போன்றவற்றை
    எத்தனை ஆண் எழுத்தாளர்கள் சந்திக்கிறார்கள். அனைத்து எழுத்தாளர்களுக்கும் பல முகங்கள், பரிமாணங்கள் உண்டு. தமிழ் சிற்றிதழ் சூழலில் குழு அரசியல், தனி நபர் விருப்பு,வெறுப்பின்றி இயங்குபவர்கள் குறைவு. இதில் பெண் எழுத்தாளர்களை குழு சார்ந்த கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது சரிதானா. ஆண் எழுத்தாளர்கள் செய்யாத குழு அரசியலா இல்லை தனி நபர் போற்றல்/தூற்றல்களா.

    இன்னொறையும் புரிந்து கொள்ளுங்கள். சிறு பத்திரிகைகளை வாசித்து அந்த அரசியலில் புகுந்து ஆதரிக்க/எதிர்க்க பலர் விரும்பவில்லை. ஏனெனில் இங்கு பல சண்டைகளின் அடியில் இருப்பது தனி நபர் ஈகோ மோதல்களும், இன்ன பிற தனி நபர் பிரச்சினைகளும். இதற்கு பொதுப்பிரச்சினை
    சாயம் பூசப்படுகிறது.எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்து, படித்து, அனைத்து தரப்பினையும் கேட்டு கருத்து உருவாக்கிக் கொள்வதில்லை. அது முடியாத ஒன்றும் கூட
    என்பதால் ஒதுங்கி நிற்கிறார்கள்.அன்றாட வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கும் போது யார் இந்த வெட்டி வம்புகளில் ஈடுபட முடியும். அதற்கு என்ன தேவை.
    இந்த மெளனத்தினை நீங்கள் ஆதரவு என்று எடுத்துக் கொண்டால் யார் என்ன செய்ய முடியும்.

  20. Anonymous said...

    பொம்பளைங்க பத்தி எழுதினா பொம்பளைங்களும், ஆம்பளைங்களும், பொம்பளைங்க பேரில எழுதற ஆம்பளைங்களும் இந்த வாங்கு வாங்கறாங்களே, இதெல்லாம் தேவைதானாய்யா :).
    பின்னூட்டம் போடுறேன்னு முதுகில டின் கட்டறாங்களே, இதெல்லாம் வேணுமாய்யா ராசா, ஏதோ கவுதன்னு எட்டு வரி, பத்து வரி எழுதிட்டு இருந்தா இந்த வம்பெல்லாம் இல்லையே :)

  21. Anonymous said...

    A feminist poet who prefers not to
    reveal her name here

    ஒரு அனானி சில பதிவுகளில் அனானியாக ஒரு பெண் எழுதுவது போல் எழுதி குட்டையை
    குழப்ப முயல்கிறார். அதே அனானிதான் உங்கள் பதிவிலும் ஒரு பெண் கவிதாயினி என்ற
    முகமூடியைப் போட்டுக் கொண்டு உங்களை குழப்புகிறார்.இவர் ஒருவரா அல்லது ஒரு
    கும்பல் இதைச் செய்கிறதா என்று தெரியவில்லை. நடையைப் பார்த்தால் ஒருவர் எழுதியிருப்பது போல் தெரியவில்லை.
    பின்னூட்டம் பெண் கவிஞர் ஒருவர் என்ற தோரனையை
    தந்தாலும் அதற்கு என்ன சான்று.இத்தகைய அனானிகளை தோழி என்று விளித்து
    ஏமாற வேண்டாம். விபரங்களை தெரிந்து கொண்டு சிலர் அனானியாக இப்படி பின்னூட்டம்
    மூலம் விளையாடி உங்களைப் போன்றவர்களை நம்ப வைக்கிறார்கள். இவர்கள் நோக்கம்
    குழப்புவது, விவாதத்தினை வேறு பாதைக்கு மாற்றுவது. கவனமாக இந்த அனானிகள் முற்போக்கு முகமூடி உட்பட அனைத்து முகமூடிகளையும் நேரத்திற்கொப்ப போட்டுக் கொள்வார்கள்.மிகவும் நம்பகமாக எழுதுவார்கள்.செய்ய வேண்டிய பிரச்சாரத்தை மறைமுகமாக செய்துவிடு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். பின்னர் சில வாரங்கள் உங்கள் பதிவிற்கு வரமாட்டார்கள்.அப்போது வேறு எங்காவது வேறு முகமூடியில் வேறு நடையில் எழுதிக்கொண்டிருப்பார்கள்.
    , பதிவர்களை உசுப்பிவிட்ட பின் ஒடிவிடுவார்கள் வலையுலகம் சிலருக்கு இப்படியெல்லாம் விளையாடும் களமாக உள்ளது.

  22. Anonymous said...

    அனானியாக வரும் நிலைக்கு அறிஞரை தள்ளிவிட்ட தமிழ் தீவிரவாதிகளை அறிஞர் ரவி சீனிவாசு தலைமை ரசிகர் மன்றம் கடுமையாக கண்டிக்கிறது.

  23. Anonymous said...

    பதிவு: பெண்கள் இலக்கியச் சந்திப்பு, விருத்தாசலம், மே 6, 2007

    பயணத்தினூடாக ஒரு பெண் இருப்பு

    சுகிர்தராணி

    இரண்டு மணிநேரம் பயணித்துக் காஞ்சிபுரத்தை அடைந்தபோது, நண்பகல் பன்னிரண்டு மணி. அங்கிருந்து உத்திரமேரூர் செல்ல வேண்டும். இரு தனியார் பேருந்துகள் புறப்படுவதாய்ப் போக்குக் காட்டிக்கொண்டு பயணிகளைப் புளி மூட்டைகளாய் ஏற்றிக்கொண்டிருந்தன. எது முதலில் புறப்படும் என்பது யாருக்கும் தெரியாததால், இரண்டிலும் மாறி மாறி ஏறி நின்றதில் தொப்பலாய் நனைந்துவிட்டேன். ஒரு மணிநேர அலைக்கழிப்புக்குப் பின் பேருந்து புறப்பட்டது. பை ஒன்றை மாட்டிக்கொண்டு ஏறிவிடுகிறார்கள் என்ற சகபயணிகளின் வசவுகளோடு ஒற்றைக் காலில் பயணித்துப் பிற்பகல் இரண்டு மணிக்கு உத்திரமேரூரில் இறங்கினேன்.

    வெயிலின் உக்கிரம் தாங்க முடிய வில்லை. பயணப் பை வேறு கனத்தது. சாப்பிட்டவுடன் நடப்பது சிரமமாக இருந்ததால், பாமாவின் தோளைப் பற்றிக்கொண்டு, இப்படிக் கஷ்டப்பட்டுப்போய் இலக்கியம் வளர்க்கவில்லை என்று யார் நம்மை அடித்தார்கள் என்றேன். அதுதானே என்றார் சிரித்துக்கொண்டே.

    விருத்தாசலத்தில் இறங்கி விடுதியை அடைந்தபோது, இரவு எட்டு மணி. அங்குக் கரிகாலனும் தமிழ்ச்செல்வியும் வரவேற்றனர். தேவேந்திரபூபதி, பிரேம்-ரமேஷ், எழிலரசி ஆகியோரும் வந்திருந்தனர். பத்து மணி இருக்கும். சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் வாங்கலாம் என்று பெண்கள் நடமாட்டமற்ற விடுதிச் சாலையில் நடந்து சென்றேன். திரும்பி வருவதற்குள் நாலைந்து பேர் என்னைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டு சென்றார்கள். அறைகள் வசதியாக இருந்தன. நள்ளிரவு பன்னிரண்டு மணிவரை நீண்டது எங்கள் பேச்சு. தேவேந்திரபூபதி இரவு முழுவதும் கார் அனுப்பி இரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொருவரையும் அழைத்துவர ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.

    பெண்கள் இலக்கியச் சந்திப்பு நிகழவிருந்த தமிழ்நூல் காப்பகத்திற்கு மறு நாள் காலை ஒன்பதரைக்குப் போய்விட்டோ ம். வாயிலில் அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டும் உள்ளே வரவும் என்ற அறிவிப்புப் பலகை ஆச்சரிய மூட்டியது. வேறு இலக்கியக் கூட்டத்தில் காணாதது அது. நாங்கள் யாருமே அழைப்பிதழ் கொண்டுபோகாததால் தயக்கத்தோடு உள்ளே நுழைந்தோம்.

    அரங்கினுள் இருக்கைகள் நிறைய ஆரம்பித்தன. பெண்கள் இலக்கியச் சந்திப்பின் முதன்மை ஒத்துழைப்பாளரான தேவேந்திரபூபதி அனைவரையும் வரவேற்க, நிகழ்வு ஒருங்கிணைப்பாளரான தமிழச்செல்வியின் அறிமுகப் பேச்சோடு நிகழ்ச்சி தொடங்கியது. பெண் இருப்பும் இயக்கமும் குறித்த முதல் அமர்வை அ. மங்கை ஒருங்கிணைப்புச் செய்தார். இந்த அமர்வில் வீ. அரசு, பிரேம், அ. மார்க்ஸ், வெளி ரங்கராஜன் ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். சித்தி ஜுனைதா பேகத்தையும் அவரது படைப்புகளையும் பற்றிய வெண்ணிலாவின் கட்டுரை என்னை ஈர்த்தது.

    குட்டி ரேவதியின் 'நான் நாம் அவர்கள்' கட்டுரை விவாதத்தைக் கிளப்பியது. காலனிய ஆதிக்கத்தின்போது அச்சு ஊடகத்தில் பங்களித்த பெண்களின் எண்ணிக்கை, சுதந்திரத்திற்குப் பிறகு குறைந்துபோனதற்கு என்ன காரணம் என்னும் கேள்வியை எழுப்புவதன் மூலம் பெண்களின் இருப்பு சார்ந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்று பிரேம் குறிப்பிட்டார்.

    மதிய உணவுக்குப் பிறகு தேவேந்திரபூபதி ஒருங்கிணைக்க, கவிதை வாசிப்பு தொடங்கியது. இந்த அமர்வு கொஞ்சம் உற்சாகம் குன்றியதாக இருந்தது. இளம்பிறை, தமிழச்சி, கீதாஞ்சலி, கவிதா, மதுமிதா, செல்வகுமாரி, கண்ணகி, தேன்மொழி, எழிலரசி, தமிழ்நதி ஆகியோர் கவிதை வாசித்தனர். கயர்லாஞ்சியில் கொல்லப்பட்ட தலித் பெண்ணைப் பற்றியும் அகதியான இலங்கைப் பெண்ணைப் பற்றியும் நான் இரு கவிதைகளை வாசித்தேன். கவிஞர் பழமலய் என்னிடம் வந்து, முன்னது பிரமாதம், பின்னது செயற்கை என்றார். 'அப்படியா சொல்கிறீர்கள்?' என்றேன். 'நீங்கள் இலங்கைக்குச் சென்றிருக்கிறீர்களா, குண்டுவெடிப்பைப் பார்த்திருக்கிறீர்களா?' என்று தொடர்ந்தார். 'நான் கயர் லாஞ்சிக்கும் சென்றதில்லை, எனது பிறப்புறுப்பிலும் யாரும் கம்பைச் செருகியதில்லை' என்றேன். அனுபவங்களே கவிதையாக முடியாது என்றும் கவிதையில் அனுபவம் இருக்க வேண்டிய தேவையில்லை என்றும் நான் நினைக்கிறேன்.

    அடுத்ததாகப் பிறமொழி அமர்வு. மளையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சிறுகதையை ஷைலஜாவும் கவிதைகளை ஜெயஸ்ரீயும் வாசித்தனர். இலங்கையிலிருந்து வந்திருந்த சுஹிராவும் கட்டுரை வாசித்தார்.

    அடுத்து, நூல் வெளியீடு. தமிழ்ச்செல்வியின் 'ஆறுகாட்டுத்துறை' புதினத்தை ரமேஷ் வெளியிட, பல்லடம் மாணிக்கம், பழமலய், சேதுபதி நாட்டார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 'சாமுண்டி' சிறுகதையை பாமா வெளியிட வே. சபாநாயகம், இமையம், இரத்தின புகழேந்தி ஆகியோர் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் பழமலயின் வாழ்த்துரை, கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழ்ச்செல்வி ஏற்புரை ஆற்றினார்.

    அடுத்ததாக ப்ரீதம் சக்ரவர்த்தியின் 'கண்ணாடி' நவீன நாடகம் தொடங்கியது. தேவதாசி முறை, தலைமுறை மாற்றத்தால் எத்தகைய கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதைத் தனது பெண்மொழி மற்றும் உடல்மொழி மூலமாக வெளிப்படுத்திப் பார்வையாளர்களைத் கண்ணாடியாகவே உறைய வைத்துவிட்டார் ப்ரீதம். ஒப்பனையற்றதிலிருந்து படிப்படியாக மாறி இறுதியில் பேரழகியாகப் பரிணமித்து நிற்கும் அந்த ஒற்றை நொடிக்காகக் காத்திருந்தேன். அரங்குக்கு வெளியே இருந்தவர்களின் பேச்சொலியால் அந்த அற்புத நொடி எனக்கு வாய்க்கவில்லை. ப்ரீதத்துக்கும். இறுதியில் கரிகாலன் நன்றியுரை கூற, பெண்கள் இலக்கியச் சந்திப்பு நிறைவுற்றது.

    நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழின் முக்கியப் படைப்பாளிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது என்றாலும் ஒருசில படைப்பாளிகள் அவரவர் பங்களிப்பு முடிந்ததும் காலி இருக்கைகளைப் பதிலியாக்கி, மேடையைவிட்டுப் புறப்பட்டுச் சென்றது நெருடலாகவே இருந்தது.

    அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள் காலை அதே பல்லவனில் செங்கல்பட்டை நோக்கி எங்கள் பயணம். நான், ப்ரீதம், பாமா, க்ருஷாங்கினி ஆகியோர் நெரிசலால் ஆங்காங்கே நின்றுகொண்டோ ம். நின்றிருந்த பாமாவிடம் அமர்ந்திருந்த ஓர் இளைஞர் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். என்னவென்று சைகையில் கேட்டேன். இடிக்காமல் தள்ளி நிற்கச் சொல்கிறார் என்று சத்தமாகச் சொன்னார் பாமா. பாலினச் சமத்துவம் போலிருக்கிறது என்றேன்.

    பிறகு பெட்டியினூடாக வந்த ஓர் அரவானியிடம் ஒரு பத்து நிமிடம் நானும் பாமாவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம். எல்லோருடைய கவனமும் எங்கள்மீதே இருந்தது. அரவாணி சென்றதும் எல்லோரும் என்னைக் கீழிருந்து மேலாகவும் இடமிருந்து வலமாகவும் பார்த்ததைக் கண்டுகொண்டேன். ஓர் அரவானியிடம் மிக இயல்பாகச் சிரித்துப் பேசுபவள் ஒரு பெண்ணாக இருக்க முடியாது என்று அவர்கள் முடிவுசெய்திருக்கலாம். அதுவரை என்னை நெருக்கியபடி நின்றுகொண்டிருந்த பெண் சற்றுத் தள்ளி நின்றுகொண்டார். உண்மையில் இந்தப் பயணம் பெண் இருப்பையும் வெளியையும் பற்றி எனக்கு நிறையப் புரியவைத்தது.

    http://www.kalachuvadu.com/issue-90/pathivu04.asp

  24. Anonymous said...

    உங்கள் கேள்விகளை தொகுத்துக் கொண்டு, பெண் எழுத்தாளர்களிடம் உரையாடி ஒரு கட்டுரை வடிவில் அவர்கள் எதிர்வினைகளையும், உங்கள் கருத்துக்களையும் கட்டுரை அல்லது செவ்வி வடிவில் எழுதியிருக்கலாம்.வலைப்பதிவில் பின்னர் அதை இட்டிருக்கலாம். இப்போது இங்கு ஒரு உரையாடல் நடக்கவில்லை. உங்கள் கருத்துக்களில் காணப்படும் கோர்வையின்மையும், தனி நபர் குறித்த கருத்துக்களும் உரையாடலை திசை மாற்றிவிட்டன.இருப்பினும் மேற்சொன்னாற்ப் போல் ஒரு கட்டுரை எழுத முயலவும். அதன் முன் பெண் எழுத்தாளர்கள் எழுதியுள்ளவை, தீரா நதி, பனிக்குடம் போன்றவற்றில் வந்த பத்திகள், செவ்விகளை படித்துக் கொள்ளவும். ஈழ எழுத்தாளர்கள்
    கருத்துக்களும் உங்கள் கட்டுரையில் இடம் பெற வேண்டும்.முயற்சி திருவினையாக்கும்

  25. Anonymous said...

    அனானியாக வரும் நிலைக்கு அறிஞரை தள்ளிவிட்ட தமிழ் தீவிரவாதிகளை அறிஞர் ரவி சீனிவாசு தலைமை ரசிகர் மன்றம் கடுமையாக கண்டிக்கிறது

    அறிஞர் ரவி சீனிவாசு அந்த நிலைக்கு வந்துவிட்டாரா, யாரங்கே இதற்கு காரணமான தமிழ் வலைப்பதிவு தீவிரவாதிகளை பொடாவில் உள்ளே போடு.
    இது ஆர்.எஸ்.எஸ் மேலிடத்து உத்தரவு.

  26. Anonymous said...

    Posting comments as annony is my fundamental right.This what suprem
    courts of usa,europa and India has
    told.

  27. Jazeela said...

    குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் பதிவரா நீங்க? பெண்ணாக ஒரு அவதாரம் எடுங்க உங்க கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  28. Anonymous said...

    Psqv9w Hello! Great blog you have! My greetings!

  29. Anonymous said...

    SjNUqt Your blog is great. Articles is interesting!

  30. Anonymous said...

    //Posting comments as annony is my fundamental right.//

    Ofcourse, Aringare!
    but not in other's name!