2009 - முக்கிய புத்தகங்கள் குறித்த குறிப்புகள்

கடந்து சென்ற 2009ஆம் ஆண்டின் முக்கியமான புத்தகங்களாக நான் கருதப்படுபவை குறித்த குறிப்புகள். புத்தகச்சந்தைக்குச் செல்லும் வாசகர்களுக்கான பரிந்துரைகளாகவும் கொள்ளலாம்.

இரண்டு கவிதைத்தொகுப்புகள் தமிழின் மொழித்தளத்தை வேறொரு தளத்திற்கு நகர்த்தியிருக்கின்றன. ஒன்று ஈழத்து முஸ்லீம் ஒருவருடையது, இன்னொன்று பெண் கவிஞர் ஒருவருடையது.


புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன : ஈழத்து முஸ்லீம் கவிஞரான மஜித்தின் இந்த தொகுப்பு, சிங்களப் பேரினவாதம் மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்கள் ஆகியவற்றிற்கு இடையில் சீரழிக்கப்பட்ட முஸ்லீம்களின் வாழ்வை கவித்துவத்தோடு முன்வைக்கிறது. பொதுவாக படிமம் என்னும் உத்தி வழக்கொழிந்து நவீன கவிதை வேறொரு தளத்திற்கு நகர்ந்து விட்டது.  படிமம் என்பதைத் தாண்டியதாக கவிதையில் சித்திரங்களை வரைந்து காட்டும் அற்புதக் கலை மஜீத்திற்குக் கைகூடியிருக்கிறது. சிங்கம், புலி, கோடைக்காலம், குளிர்காலம் என்னும் வெவ்வேறு குறியீடுகளின் வழியாக கவிதை நாடகத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் மஜீத். வெளியீடு : கருப்பு பிரதிகள்.


உலகின் அழகிய முதல்பெண் : லீனாவின் கவிதைகள் பெண்மொழியை அடுத்த நூற்றாண்டு நோக்கி நகர்த்தியிருக்கின்றன இத்தொகுப்பின் கவிதைகள். பெண்ணின் உடலைக் கொண்டாட்டமாகவும் விடுதலையாகவும் மாற்றிக் காட்டுகிற மாயச்சாகசங்கள் செயற்பட்டிருக்கிறது. உண்மையில் உலகின் துணிச்சலான முதல் பெண் தான். வெளியீடு : கனவுப்பட்டறை.

சலவான் : இந்த நாவல் குறித்து தமிழ் இலக்கியப்பரப்பில் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. அருந்ததியர் சமூகத்தில் பிறந்து முதல் தலைமுறையாக அரசு ஊழியர் ஆகியிருக்கும் பாண்டியக்கண்ணனின் இந்த நாவல் அருந்ததியர் வாழ்வு குறித்த நுட்பமான விவரணைகளைக் கொண்டிருக்கிறது. மலமள்ளும் தொழிலாளரின் பாடுகள், இன்னமும் தென்மாவட்டங்களில் சில இடங்களில் உள்ள எடுப்பு கக்கூஸ் என்னும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்துவிட்டு வீடு வீடாய்ப் பாத்திரம் தூக்கிப் போய் துப்புரவுப் பெண்கள் சாப்பாடு வாங்கும் அவலம், அந்த சாப்பாடையும் தொடாமல் போடுகிற சாதி இந்துக்களின் தீண்டாமை மனோபாவம், கணவனும் மனைவியுமாய் சாராயம் குடிப்பது, அதற்கு துணை உணவாய்ப் பன்றி அறுத்து அமைப்பது என முழுக்க அருந்ததியர் சமூக வாழ்வியலை விளக்கும் இந்த நூல் தமிழின் முக்கியமான நாவல். சலவான் என்றால் ஆண்பன்றி என்று அர்த்தம்.
வெளியீடு : பாரதிபுத்தகாலயம்.

குடியின்றி அமையாது உலகு : முத்தையாவெள்ளையனால் தொகுக்கப்பட்ட இந்த புத்தகம் குடிப்பழக்கத்தின் கலாச்சாரப் பின்னணி மற்றும் சமூகப்பிரச்சினை குறித்து ஆய்கிறது. பெரியார், அ.மார்க்ஸ், விக்கிரமாதித்யன்,பிரான்சிஸ்கிருபா, நாஞ்சில்நாடன், ஜமாலன், ரெங்கையாமுருகன் என வெவ்வேறு ஆளுமைகள் வெவ்வேறு தளங்களிலிருந்து குடி என்னும் பழக்கத்தை அணுகியிருக்கின்றனர். விக்கிரமாதித்யன் மற்றும் பிரான்சிஸ்கிருபா கட்டுரைகள் ஆய்வு இறுக்கத்தைத் தணித்து சுவாரசியமான புனைவுத்தன்மையைக் கொண்டவையாய் இருக்கின்றன. வெளியீடு : புலம்.

வெட்டுப்புலி : பத்திரிகையாளர் தமிழ்மகனால் எழுதப்பட்ட இந்த நாவல் எழுபது ஆண்டுகளாய்த் தமிழகத்தின் திசைப்போக்கைத் தீர்மானிக்கும் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் தமிழ்ச்சினிமா வரலாற்றையும் நாவலுக்குள் கொண்டுவந்திருக்கிறது. கதையின் நாயகனின் தாத்தாதான், வெட்டுப்புலி தீப்பெட்டியில் இடம்பெற்றிருக்கும் சிறுத்தையை வென்ற சின்னாரெட்டி என்றறிந்து மேலும் தரவுகள் தேடி நாயகனும் நண்பர்களும் பயணிக்கிறார்கள். ஒரு ஊரில் சின்னாரெட்டி சிறுத்தையை வென்ற கதை கூறுகிறார்கள். இன்னொரு ஊரிலோ சிறுத்தையால் தாக்கப்பட்டு சின்னாரெட்டி இறந்துபோனதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு வெவ்வேறு தகவல்பரப்பில் முரண்பட்டு தொடரும் கதையின் போக்கு முப்பதுகளில் நீதிக்கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான அரசியல் உராய்வுகள். நாடகநடிகர்களைக் கொண்டு சினிமா என்னும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயல்கிற மனிதர்களின் போக்கு என தொடங்குகிறது. இறுதியாக மு.க.அழகிரி மத்திய அமைச்சராவதோடு நாவல் முடிகிறது. சமகால வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நாவல் வெறுமனே சுவாரசியத்தால் தூண்டப்படுகிற பிரதியாய் மட்டுமல்லாது, வரலாறு குறித்த பிரக்ஞ்யை நம்முன் உசுப்புகிறது. வெளியீடு : உயிர்மை.


கொலைநிலம் - தியாகு, ஷோபாசக்தி முரண் அரசியல் உரையாடல்கள் : புலி அரசியல் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் படைப்பாளி ஷோபாசக்தி, தமிழ்த்தேசியத்தையும் புலிகளையும் ஆதரித்து மார்க்சிய அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைகளை அணுகுபவர் தோழர்.தியாகு. இந்த இரண்டு வெவ்வேறு அரசியல் பிரதிநிதிகள் தத்தம் நிலைப்பாட்டின் அடிப்படையில் ஈழம் குறித்து மேற்கொள்ளும் உரையாடலின் தொகுப்பு. ஈழப்பிரச்சினையில் கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுவிட வேண்டியதுமான தெளிவு இதை வாசிப்பவர்க்குக் கிட்டலாம்.  வெளியீடு : வடலி.

9 உரையாட வந்தவர்கள்:

  1. Ashok D said...

    good... u r tempting me to buy some of those books...especially leena.. , appuram தமிழ்மகன் புத்தகம்
    thanks for sharing

  2. Dr.Rudhran said...

    லீனாவின் கவிதைகள். பெண்மொழியை அடுத்த நூற்றாண்டு நோக்கி நகர்த்தியிருக்கின்றன ...தற்சமயம் லீனாவின் "கவிதைகள்" குறித்து நகழும் சர்ச்சை பற்றியும் எழுதலாமே.
    http://www.vinavu.com/2010/01/06/leena/

  3. Anonymous said...

    ஆனந்த விகடனில் த்ங்கள் கவிதை. வாழ்த்துக்கள்

  4. Raj Chandra said...

    சலவான் & வெட்டுப்புலி: இதைப் பற்றி நேரம் இருப்பின் விரிவாக எழுதுங்களேன். நன்றி.

  5. nagoreismail said...

    "புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன"

    - இந்த புத்தகத்தை வாங்குவதற்கு மேலதிக தகவல் எதுவும் கிடைக்குமா? உதாரணமாக, தொலைபேசி எண்

    “அந்த சாப்பாடையும் தொடாமல் போடுகிற சாதி இந்துக்களின் தீண்டாமை மனோபாவம்,..”

    - எனக்கு ஷஹீதான (வெட்டப்பட்டு இறந்த)பழனிபாபா அவர்கள் பேசியது தான் நினைவிற்கு வருகிறது.

    அதாவது ஒரு முஸ்லீம் வீட்டில் ஒரு ஏழை வந்து உணவு கேட்டால், அவங்க சாப்பிடுறதிலிருந்து தட்டுல வச்சு அதை துத்திப்பு போட்டு மூடி என்னமோ ராஜா கிட்டேந்து வெகுமதியா கெடைச்ச பரிசுப் பொருள் போற மாதிரி போவும் என்றார்.

  6. மிதக்கும்வெளி said...

    நாகூர் இஸ்மாயில் கருப்புப்பிரதிகள் வெளியீட்டாளர் தோழர்.நீலகண்டன் தொலைபேசி எண் : 9444272500

  7. RAGUNATHAN said...

    இருபதாம் நூற்றாண்டு தமிழ்நாட்டின் சினிமா (கலை), அரசியல் வரலாறு ஆகியவற்றை மையமாக வைத்து திரு. தமிழ்மகன் புனைந்துள்ள வெட்டுப்புலி நாவல் தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒரு படைப்பு மட்டுமல்ல மிக முக்கியமான படைப்பும் கூட.

  8. Ganesan said...

    சலவான்,
    மலம் அள்ளும் தொழிளாளர் கதைகள்,
    இவர்களின் வாழ்வியலை பற்றிய புத்தகம் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகமாக தோன்றுகிறது.

  9. Anonymous said...

    லீனாவின் சமீபத்திய கவிதைகள் பற்றிய சர்ச்சைகளுக்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் அவருடைய கவிதைகளில் ஒரு செயற்கைத்தனம் இருப்பதை ஒரு தேர்ந்த கவிதை வாசகரால் மறுக்க முடியாது. கோணங்கியின் பல வார்த்தைகளை கடன் வாங்கி கவிதைகளை கடினமாக்க முயற்சித்திருக்கிறார். தவிரவும், அவரது கவிதைகளை பலர் எடிட் செய்திருக்கிறார்கள். பெண் மொழியை அடுத்த நூற்றாண்டிற்கு நகர்த்தியிருக்கின்றன என்று நீங்கள் சொல்வது உங்களுடைய ரசனையை மட்டும் பிரதிபலிக்கவில்லை, உண்மையிலேயே கவிதைக்காகவும் பெண்ணியத்திற்காகவும் கவிதைகளை எழுதி வருபவர்களை கொச்சைப்ப்டுத்துகிறது.