தமிழ்மணம் விருதுகள் என்னும் அபத்தம்

சமீபகாலமாக நான் வலைப்பக்கங்களில் எழுதுவதில்லை.ஆனால் தமிழ்மணம் நட்சத்திரவாரமாக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கான அனுமதியைக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டிருந்தது. ஏற்கனவே ஒப்புக்கொடுக்கப்பட்டது என்பதாலும் இறுதிநேரத்தில் மாற்று ஏற்பாடுகளைத் தமிழ்மணம் நிர்வாகம் செய்யவியலாது என்பதாலும் இந்த ஒருவாரம் மட்டும் எழுதலாம் என்றிருக்கிறேன். ஒருவாரத்தின்பின் மீண்டும் வலைப்பக்கங்கள் மூடப்படும்.

முதலில் தமிழ்மணம் நட்சத்திரவாரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகள். ஆனால் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம். ஆறு வருடங்கள். அதில் எனக்கு வருத்தமிருக்கிறது என்பதைப் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை.

நட்சத்திர வாரம் என்றில்லை, வலைச்சரம் என்னும் வலைப்பூ இருக்கிறது அங்கும் என்னை இதுவரை எழுத அழைத்ததில்லை. முன்பொரு காலத்தில் சென்னைப்பட்டினம் என்றொரு வலைப்பூ, சென்னைக்கு அப்பால் உள்ள ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் எழுதும் பதிவுகளுக்கான வலைப்பக்கம். அங்கும் அழைக்கப்பட்டதில்லை. தொடர் விளையாட்டுகளில் பெரும்பாலும் அழைக்கப்பட்டவனில்லை. ஆனால் இதில் எல்லாம் எனக்கு வருத்தங்கள் இருந்ததில்லை. குறிப்பாக தமிழ்மணம் நட்சத்திர வாரம் குறித்துத்தான் வருத்தம். ஆனால் அதில் என்னைத் தேர்ந்தெடுக்கும்போது கிட்டத்தட்ட நான் எழுதுவதை நிறுத்த வேண்டிய மனநிலை.

இப்போது அதிகமாய் வலைப்பூக்களில் எழுதுவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாளைக்குப் பத்து பதிவுகள் வரை எழுதியிருக்கிறேன். (அதில் பாதி கவிதைகள்). அப்போது தமிழ்மணம் பூங்கா என்னும் இதழை நடத்திவந்தது இப்போதுள்ள பல புதிய பதிவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். வாரம் ஒருமுறை வெளியாகும் பூங்கா இதழில் அந்த வாரத்தின் சிறந்த பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியாகும். ஒரு கட்டம் வரை எல்லா பூங்கா இதழ்களிலும் எனது பதிவுகள் வந்தவண்ணமிருந்தன. பிறகு நான் தமிழ்மணத்திற்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். ”என்னை மாதிரியான முகங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து போரடிக்கிறது. தயவுசெய்து புதுமுகங்களை அறிமுகப்படுத்துங்கள்”என்று. அதற்குப் பின் பூங்காவில் எனது பதிவுகள் வருவதில்லை. ஒருகட்டத்தில் பூங்கா இதழ் நிறுத்தப்பட்டு விட்டது.

மேலும் சூடான இடுகைகளில் வந்த எனது ஒருசில பதிவுகளைப் பார்த்தால் அது பெரும்பாலும் அக்கப்போர்களாகத்தானிருக்கும். சில காலங்களின்பின் படித்தால் நான் தேவையில்லாத ஏதோ வெட்டிவேலைகள் செய்திருக்கிறேன் என்று தெரியும். என்நினைவின்படி இதுவரை என்னுடைய பதிவுகள் எதுவும் வாசகர்பரிந்துரைகளில் வந்ததில்லை.

இவ்வளவு விரிவாக எழுதுவதற்குக் காரணம் வாசகர்பரிந்துரைகள், பாசிட்டிவ் குத்து, நெகட்டிவ் குத்து, போடுங்கம்மா ஓட்டுப் பிச்சைக்குரல்கள், முதுகு சொரியும் சக பதிவரின் விருதுகள், ஃபாலோயர் பஞ்சாயத்துகள் என இந்த நாய்ச்சண்டைகள் குறித்த புரிதலுக்காகத்தான்.

இந்த நாய்ச்சண்டைகளின் அடிப்படையில் பார்த்தால் நான் ஒரு குறிப்பிடத்தக்க பதிவராகவே இருக்க முடியாது. ஆனால் இந்த வரைவெல்லைகளைத் தாண்டி என் எழுத்துக்களைத் தொடர்ச்சியாகப் படிக்கும் வாசகர்கள் பல்வேறுதளங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மாற்று அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், நவீன இலக்கியத்தின்பால் அக்கறையும் கரிசனமும் கொண்டவர்கள் என. சமயங்களில் ‘நான் உங்கள் பிளாக்கை ரெகுலராகப் படிச்சுட்டு வர்றேன்’ என்னும் வார்த்தைகள் எதிர்பாராத இடங்களிலிருந்து வரும்போது ஆச்சரியமாக இருக்கும் (அதிர்ச்சியாக அல்ல((-). இதற்கெல்லாம் காரணம் என் எழுத்துதானே தவிர ஃபாலோயர்ஸ் அல்ல.

என் எழுத்தை எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடிக்காத எதுவொன்றையும் வாசகி/கனுக்குத் தருவதில்லை. என் மீது தனிப்பட்ட முறையிலும் கருத்தியல் ரீதியாகவும் பகைமை கொண்டவர்களும் கூட என் எழுத்தின் அடர்த்தியையும் ருசியையும் ஒத்துக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன். எழுதும் எல்லா எழுத்தும் யாராவது ஒருவர் வாசிக்கக் கோருவதே. எனவே வலைப்பதிவர்களுக்குத் தங்கள் எழுத்து வாசிப்பவரைச் சென்றடைய வேண்டும் என்னும் ஆவலிருப்பது இயற்கையின்பாற்பட்டதுதான். ஆனால் அதற்கு எழுதிப்பழக வேண்டுமே தவிர பிள்ளை பிடித்துப் பழகக் கூடாது. ஆனானப்பட்ட காந்திக்கே நாட்டில் சொல்லிக்கொள்கிறமாதிரி ஃபாலோயர்ஸ் கிடையாது. உங்களுக்கு எதற்கு இத்தனை ஃபாலோயர்கள்?

நீண்டநாட்களாகவே தமிழ்மண வாசகர்பரிந்துரையில் வருபவைகளில் தொண்ணூறு விழுக்காடு குப்பைகள்தான். இது பிள்ளைபிடித்து உருவாக்கப்படுகிற பரிந்துரைகள். ஒட்டுமொத்தமாக எல்லா இடுகைகளையும் படிக்க தோதில்லாது முக்கியமான இடுகைகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி, எழுத்துக்கு இழைக்கப்படும் அநீதியும் கூட.

இந்த அநீதிகளின் நீட்சிதான் தமிழ்மண விருதுகள் பரிந்துரை. சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. உண்மையில் அதற்கான பதிவு சிறந்த நகைச்சுவைப் பதிவு என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் பெரியார், அம்பேத்கர், இலக்கியம், சினிமா விமர்சனங்கள் என பலவற்றைக் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிற என்னுடைய அடையாளம் இதுதானா? நான் விருதுக்கான பரிசுத்தொகையை வாங்கவில்லை.

இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஏதோ நினைப்பில் எனது இடுகைகளை அனுப்பிவிட்டேன். ஆனால் நிச்சயமாக நான் யாருக்கும் வாக்களிக்கப் போவதுமில்லை, யாரும் எனக்கு வாக்களிக்கவும் வேண்டாம். தமிழ்மணம் இந்த விருதுகளை நிறுத்திவிட்டு பூங்கா மின்னிதழை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் கருத்து. பூங்காவிற்காக நான் கொளத்தூர்மணி, அ.மார்க்ஸ், சுப.வீரபாண்டியன் போன்ற பலரின் நேர்காணல்களை எடுத்து தந்திருக்கிறேன். இப்போது என்னால் அதைச் செய்ய முடியாவிட்டாலும் பல்வேறு துறைசார்ந்த பதிவர்களைக் கொண்டு பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகளின் நேர்காணல்களை இடம்பெறச் செய்யலாம். தமிழ்மணத்திற்கு அப்பாலும் பங்களிப்புகளைப் பெறலாம் என்றே கருதுகிறேன்.

51 உரையாட வந்தவர்கள்:

  1. கண்ணா.. said...

    தமிழ்மணம் இப்போ கண்டிப்பா யோசிக்கும் ..!!!!!!!

    :)

  2. கோவி.கண்ணன் said...

    //சென்னைக்கு அப்பால் உள்ள ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் எழுதும் பதிவுகளுக்கான வலைப்பக்கம். அங்கும் அழைக்கப்பட்டதில்லை. தொடர் விளையாட்டுகளில் பெரும்பாலும் அழைக்கப்பட்டவனில்லை. ஆனால் இதில் எல்லாம் எனக்கு வருத்தங்கள் இருந்ததில்லை//

    உங்கள் எழுத்துக்களைப் பார்த்து எல்லோருக்கும் பயம் பாஸ். இலக்கியவாதி ஆகிவிட்டாலே எல்லோரும் எட்ட நின்று தான் பார்ப்பார்கள். :)

    //இவ்வளவு விரிவாக எழுதுவதற்குக் காரணம் வாசகர்பரிந்துரைகள், பாசிட்டிவ் குத்து, நெகட்டிவ் குத்து, போடுங்கம்மா ஓட்டுப் பிச்சைக்குரல்கள், முதுகு சொரியும் சக பதிவரின் விருதுகள், ஃபாலோயர் பஞ்சாயத்துகள் என இந்த நாய்ச்சண்டைகள் குறித்த புரிதலுக்காகத்தான்.//

    :)

    இதுவே ஒரு பார்பனப் பதிவர் எழுதி இருந்தால், ஒரு பார்ப்பான் எல்லோரையும் நாய் என்று திட்டிவிட்டான் கண்டியுங்கள் என்று சொல்லி 400 பதிவுகள் வரைப் போட்டு இருப்போம்.

  3. Ashok D said...

    6 வருஷமா... உ.போ.ஒருவன் சர்சையில் தான் உங்களை அறிந்துக்கொண்டேன். பிற பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன். எழுதுவதை நிறுத்தாதீர்கள்.

  4. Ashok D said...

    நேத்துதான் ஓட்டுபோடுங்கன்னு பதிவ போட்டேன். ஏன்னா நான் தமிழ்மணம்விருது இரண்டாம் கட்டத்தில் தேர்ந்தேடுக்கப்பட்டுயிருப்பதை வேறொருவர் ப்ளாகில் படிக்கும்போது ஆச்சரியமும் சந்தோஷம் வந்தது. அதுவே எனை ஓட்டுபோடுங்கன்னு கேட்க வைக்கிறது. முதல் கட்ட தேர்வுக்கு யாரயையும் கேட்கவில்லை.

    ஓட்டு கேட்ட பதிவுகே யாரும் ஓட்டு போடவில்லை என்பது வேறு விஷயம் :)

  5. nagoreismail said...

    "ஒருவாரத்தின்பின் மீண்டும் வலைப்பக்கங்கள் மூடப்படும்."

    - எனக்கு கிடைத்த இந்த வருடத்தின் முதல் வருத்தமான செய்தி

  6. குசும்பன் said...

    //‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. உண்மையில் அதற்கான பதிவு சிறந்த நகைச்சுவைப் பதிவு என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் பெரியார், அம்பேத்கர், இலக்கியம், சினிமா விமர்சனங்கள் என பலவற்றைக் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிற என்னுடைய அடையாளம் இதுதானா? நான் விருதுக்கான பரிசுத்தொகையை வாங்கவில்லை//

    தாங்கள் பரிந்துரை செய்ததால் தானே பரிசு கொடுத்தார்கள். உங்களுக்கு நகைச்சுவை பிரிவில் போட்டியிடுவது கேவலமாக இருந்தால் ஏன் அதில் பரிந்துரை செய்தீர்கள்? உங்கள் அடையாளமான பெரியார் கொள்கைகள் சம்மந்தமான பதிவுகளை மட்டும் பரிந்துரை செய்யவேண்டியதுதானே?

    உங்களுக்கே இது வேடிக்கையாக இல்லையா?


    அன்புடன்
    குசும்பன்

  7. குட்டிபிசாசு said...

    பூங்காவை மறுபடியும் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும். Hardcopyயாக வரப்போகிறது என்றார்கள் முடிவில் பூங்காவையே இழுத்து முடிவிட்டார்கள். பூங்கா இருக்கும்போது என்னுடைய அணுவியல் சம்பந்தப்பட்ட பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டது. பிறகு அதன் காரணமாகவே தொடர்ந்து வாரம் ஒரு விஞ்ஞானம் தொடர்பான பதிவை எழுத முற்பட்டேன். தற்போது அதுபோன்ற ஊக்கங்கள் இல்லை. எனவே ஆக்கங்களும் இல்லை.

  8. காயத்ரி சித்தார்த் said...

    //ஆனானப்பட்ட காந்திக்கே நாட்டில் சொல்லிக்கொள்கிறமாதிரி ஃபாலோயர்ஸ் கிடையாது. உங்களுக்கு எதற்கு இத்தனை ஃபாலோயர்கள்?
    //

    :) கலக்கல்!

  9. பரிசல்காரன் said...

    //ஆனானப்பட்ட காந்திக்கே நாட்டில் சொல்லிக்கொள்கிறமாதிரி ஃபாலோயர்ஸ் கிடையாது. உங்களுக்கு எதற்கு இத்தனை ஃபாலோயர்கள்?
    //

    அண்ணா

    காந்தி சொல்றதையெல்லாம் ஃபாலோ பண்ணணுமே.. அது முடியாதேன்னுதான் அவரை ஃபாலோ பண்றதில்ல. நம்மளை ஃபாலோ பண்ணினா படிக்க மட்டும்தானே சொல்றோம்.. சரி படிச்சுத் தொலைவோமேன்னுதான் ஃபாலோ பண்றாங்க.... அது குத்தமா?

    இப்படிக்கு
    பரிசல் - 551

    :-))))

    (ஸ்மைலி போட்டுட்டேண்ணா.. நோ டேமேஜ் ப்ளீஸ்..)

  10. யுவகிருஷ்ணா said...

    அட்டகாசமான போஸ்ட்!

    ஆனாலும் தமிழ்மண நட்சத்திர வாரத்தில் அடாவடியான கலகம் இது!! :-)

  11. நிலாரசிகன் said...

    பூங்காவை மீண்டும் கொண்டு வரலாம்.
    நட்சத்திர பதிவராக என்ன அடிப்படையில் தமிழ்மணம் தேர்ந்தெடுக்கிறது என்பது இன்றுவரை புரியாத புதிர்.

  12. சொறிநாய் said...

    இந்த வார தமிழ்மண நட்சத்திரத்தின் அதிகபிரசங்கித்தனம்தான் மேலே நீங்கள் கண்டது. நாய்சண்டையில் நானும் ஒரு நாயாய் என் பங்குக்கு கொஞ்சம் குலைத்து விட்டு போகலாம் என்று எண்ணம். இதன் மூலம் பதிவுலக நண்பர்களுக்கு சொல்வது வீட்டு நாயாக இருங்கள். தெரு நாயாக இருக்க வேண்டாம். உங்கள் படைப்புகளுக்கு நீங்கள்தான் அத்தாரிட்டி. தமிழ்மணத்திற்கு நன்றி.

  13. Athisha said...

    ((-

  14. நர்சிம் said...

    நட்சத்திர வாழ்த்துக்கள்னு சொல்ல வந்தா சூரியன் மாதிரி இல்ல சுடுது.

    வாழ்த்துக்கள்.

  15. கையேடு said...

    நட்சத்திர வாழ்த்துகள்..

  16. சீனு said...

    அட! நான் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டது, உங்கள் பதிவில். மொத்த பதிவுக்கும் என் கருத்து "சேம் ப்ளட்".

    //முதலில் தமிழ்மணம் நட்சத்திரவாரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகள். ஆனால் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம். ஆறு வருடங்கள்.//

    சேம் ப்ளட். ஆனால், இன்னும் நான் அழைக்கப்படவில்லை. அழைத்தாலும் எழுத முடியுமா என்பது வேறு.

    //முன்பொரு காலத்தில் சென்னைப்பட்டினம் என்றொரு வலைப்பூ, சென்னைக்கு அப்பால் உள்ள ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் எழுதும் பதிவுகளுக்கான வலைப்பக்கம். அங்கும் அழைக்கப்பட்டதில்லை.//

    மும்பொரு காலமா?

    இருந்தாலும் அதன் உருப்பினர் என்பதால் சொல்கிறேன். அழைக்க வேண்டாம் என்றில்லை. நாங்கள் பாலாவை தனிப்பட்ட முறையில் தெரிந்து பின் நண்பர்களாகி படிப்படியாக முடிவெடுத்து தான் ஆரம்பித்தோம், அந்த வலைப்பூவை. மற்றபடி, தனிப்பட்ட காரணங்கள் இல்லை.

    //இதுவே ஒரு பார்பனப் பதிவர் எழுதி இருந்தால், ஒரு பார்ப்பான் எல்லோரையும் நாய் என்று திட்டிவிட்டான் கண்டியுங்கள் என்று சொல்லி 400 பதிவுகள் வரைப் போட்டு இருப்போம்.//

    இதுக்கு பேர் தான் ஒற்றுமை... :))

    அதிகமாக பின்னூட்டம் வாங்க, ஒரு மூத்த பதிவர் சொன்ன வழி தான் நினைவுக்கு வருகிறது. மனதிற்குள் சிரித்துக் கொள்கிறேன்.

    //பூங்காவை மறுபடியும் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.//

    நிச்சயம் நன்றாக இருக்கும். என் சில பதிவுகள் பூங்காவின் முதல் மற்றும் அதற்கு பிந்தைய சில இதழ்களில் வந்துள்ளன என்பது எனக்கு பெருமையே.

  17. Prathap Kumar S. said...

    அதிமேதாவிதனம் என்பது இதுதானோ? கூழும் வேணும். மீசையும் வேணும்...
    சூ காக்கா

  18. பீர் | Peer said...

    இதற்கு முன்பே தமிழ்மணம், வலைச்சரம் அல்லது தொடர் பதிவுக்கு அழைத்திருந்தால் எழுதியிருப்பீரா?
    'அ.மார்க்ஸை அழைத்தீர்களா' என்று ஒரு பதிவு போட்டுவிடுவீர் என்ற ஒரு பயந்தான் உங்களை அழைக்காததற்கு காரணமாக இருக்கலாம். :)

    நட்சத்திர வாழ்த்துக்கள்.

    (தயவுசெய்து பதிவெழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்)

  19. அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    எழுபது விழுக்காடு நியாயமான பதிவு!

    எஞ்சிய முப்பது விழுக்காட்டில் உடன்பாடு இல்லாவிட்டாலும்...!

    தங்களுடைய பரிந்துரையின் பேரில் தங்கள் பதிவு நகைச்சுவையில் சிறந்த பதிவாகத் தேர்வு பெற்றிருந்தால் அதுக்காக தமிழ்மணத்தை ஏன் குறை கூறவேண்டும்?

    பெரும்பாண்மையான பாலோயர்கள் இருந்தால்தான் தரமான எழுத்தாளர் என்னும் பிம்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக பெரும்பாண்மை பாலோயர்களை வைத்திருப்பவர்கள் தரமான பதிவுகளை தருவதில்லை என்றும் சொல்லிவிட முடியாது.

    தமிழ்மண ”விண்மீனாக மிளிர” வாழ்த்துகள்!

  20. கிரி said...

    சுகுணா திவாகர் நீங்க சொல்ல வந்த கருத்து சரி.. ஆனால் அதை கூறிய விதம் தான் சரி இல்லை.

    நட்சத்திர பதிவர் ஆனதிற்கு வாழ்த்துக்கள்

  21. சுப.நற்குணன்,மலேசியா. said...

    சூடான பதிவு. உங்கள் எழுத்தில் உண்மை இருக்கிறது. இப்படியான மனக்குறை பலருக்கும் இருக்கிறதுதான். எனக்கும் சேர்த்துதான்.

  22. தண்டோரா said...

    தோழர்,

    தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் மிகக் குறைவு. தயவுசெய்து... எழுதுவதை நிறுத்த வேண்டாம். மீண்டும் நகைச்சுவைப் பதிவர் விருது வாங்க வாழ்த்துக்கள்.

  23. Ayyanar Viswanath said...

    சுகுணா,

    அங்கீகாரத்தின் மீதான விருப்பம் சுய விளம்பர / தம்பட்டக் கோஷங்களின் மீதான எரிச்சல் என்கிற தொனியாக இக்கட்டுரையைப் புரிந்து கொண்டேன். விமர்சனங்களை யாரும் இப்போது விரும்புவதில்லை.அதிலும் உன் தடாலடி மொழியினைப் பற்றி சொல்லவே வேண்டாம். :) இச்சூழலின் அபரிதமான தொழில் நுட்ப வளர்ச்சி மெல்ல அனைவரையும் வலதுசாரித் தன்மையை நோக்கி நகர்த்துகின்றன என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து எழுதப் போவதற்கு வாழ்த்து.

  24. Anonymous said...

    There is no wisdom like Frankness.

    Hats off to your Frankness Mr.Sukuna Diwaakar!

  25. மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

    //தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம்.//
    வைரம் உருவாக நீண்ட காலம் ஆகும் என நினைத்தார்களோ என்னவோ?

    //எழுதும் எல்லா எழுத்தும் யாராவது ஒருவர் வாசிக்கக் கோருவதே. எனவே வலைப்பதிவர்களுக்குத் தங்கள் எழுத்து வாசிப்பவரைச் சென்றடைய வேண்டும் என்னும் ஆவலிருப்பது இயற்கையின்பாற்பட்டதுதா//

    உண்மைதானே..

    //நீண்டநாட்களாகவே தமிழ்மண வாசகர்பரிந்துரையில் வருபவைகளில் தொண்ணூறு விழுக்காடு குப்பைகள்தான்.

    சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’.//


    மிச்ச‌ம் இருக்கிற‌ 10 ச‌த‌வீத‌த்துல‌ வ‌ருதுங்கிறீங்க‌ளா.


    //நான் விருதுக்கான பரிசுத்தொகையை வாங்கவில்லை.//
    வேண்டாம் என்றால் ஏன் அனுப்புநீர்க‌ள் என்று ஏற்க‌ன்வே ஒருவ‌ர் கேட்டிருக்கிறார்.

    //யாரும் எனக்கு வாக்களிக்கவும் வேண்டாம்//
    அப்புறம் எதுக்கு ஓட்டுப்ப‌ட்டை.


    தமிழ்மணம் பரிந்துரையில் உங்கள் பதிவு இருந்ததால்தான் இங்கு நான் வந்தேன்.

    மற்றபடி உங்கள் ப்ளாக்கை மூடுவதை பற்றி நான் அழப்போவதில்லை. ஆனால் உங்களின் எழுத்தை விருப்பும் தோழர்கள் வருத்தப்படலாம் என்பதை நான் சொல்லதேவையில்லாத ஒன்று.

    இதை நட்சதிர பதிவராக இருந்தபோது எழுதிய தகரியத்தை பாராட்டாமல் இருக்க முடியாது நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்றாலும்.

  26. ஜோதிஜி said...

    வாழ்த்துகள்.

  27. குப்பன்.யாஹூ said...

    I agree with you 200%. These competitions, rankings will spoil the creativity.

  28. gulf-tamilan said...

    ஆரம்பமே அதிரடியா! வாழ்த்துக்கள் !!!

  29. அப்பாதுரை said...

    பெருந்தன்மை எங்கே கிடைக்கும்? தெரிந்தால் சுகுணாவுக்குச் சொல்லுங்கள்.

  30. துபாய் ராஜா said...

    //இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஏதோ நினைப்பில் எனது இடுகைகளை அனுப்பிவிட்டேன். ஆனால் நிச்சயமாக நான் யாருக்கும் வாக்களிக்கப் போவதுமில்லை, யாரும் எனக்கு வாக்களிக்கவும் வேண்டாம்.//

    எழுத்திற்கும் ,செயலுக்கும் முரண்பாடு அதிகம் இருப்பது போல தெரிகிறது.

  31. -/சுடலை மாடன்/- said...

    //சமீபகாலமாக நான் வலைப்பக்கங்களில் எழுதுவதில்லை.ஆனால் தமிழ்மணம் நட்சத்திரவாரமாக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கான அனுமதியைக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டிருந்தது.//


    //ஆனால் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம். ஆறு வருடங்கள். அதில் எனக்கு வருத்தமிருக்கிறது என்பதைப் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை.//

    தமிழ்மணத்திலுள்ளவர்கள் எந்தச் சதியும் செய்யவில்லை என்று மட்டும் நான் அறிவேன்.

    உங்கள் பதிவுகளை முன்பு அதிகம் படித்திராத நண்பர் ஒருவர் நீங்கள் எழுதிய ஒரு இடுகையை அனுப்பி நட்சத்திரத்துக்குப் பரிந்துரைத்த பொழுது, நீங்கள் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நட்சத்திரமாக இருந்திருக்கக் கூடும் என்று நினனத்தேன். இருந்தாலும் தொடர்ந்து அதிகம் எழுதும் ஒரு சிலரை இரண்டு முறைகள் நட்சத்திரமாக தமிழ்மணம் அழைத்திருந்தபடியால் உங்களை மறுபடியும் நட்சத்திரமாகக் கேட்கலாம் என்றுதான் நினைத்தேன். சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு (இரண்டு மாதமல்ல, சரியாக நவம்பர் 27, 2009ல்) தமிழ்மணத்திலிருந்து அழைப்பை அனுப்பினோம். (வழக்கமாக கையில் கொஞ்சம் அதிக நேரம் இருந்தால் தமிழ்மணத்தின் பழைய தரவுகளைத் தேடி நீங்கள் முன்னால் நட்சத்திரமாக இருந்தீர்களா என்று பார்க்க முடியும்.)

    தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைத்த பொழுது நீங்கள் அளித்த முகவரிதான் தமிழ்மணத்தில் சேமிக்கப் பட்டிருக்கும். அதைத்தான் பதிவர்களுடனான அஞ்சல்களுக்குப் பயன்படுத்துகிறோம். எனவே தரவுதளத்திலிருந்த உங்கள் முகவரிக்கு (sugunadiwakar@yahoomail.com) நான் அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து இரண்டு நாட்களாகப் பதில் வரவில்லை. எனவே நவம்பர் 29 ஆம் நாள், மேலுள்ள முகவரியோடு, உங்கள் வலைத்தளத்திலிருந்த gmail முகவரிக்கும் மீண்டும் அழைப்பை அனுப்பி வைத்தேன். அதன்பின் தான் என்னுடைய முதல் மின்னஞ்சல் எனக்குத் திரும்பி வந்தது. அப்பொழுது உங்கள் முகவரியிலுள்ள தவறைத் திருத்தி, (yahoo.com) முகவரிக்கு அனுப்பி வைத்தேன். எனத் தோன்றியது. உங்கள் வலைத்தளத்திலிருந்த gmail முகவரிக்கும் அப்பொழுது அனுப்பி வைத்தேன். அதுவும் திரும்பி வந்ததனால், தமிழ்மணம் தரவில் உங்களுடைய இன்னொரு பதிவுடன் வேறு முகவரி கொடுக்கப் பட்டிருக்கிறதா என்று தேடினேன். அப்பொழுதுதான் நீங்கள் இதற்கு முன்னால் நட்சத்திரமாக இருந்திருக்கவில்லையென்றும் தெரிந்தது. அப்பொழுது இங்கு Thanksgiving விடுமுறை என்பதால் எனக்கு நேரம் செலவழிக்க முடிந்தது. வேறு தருணங்களில் இதுபோன்ற சூழலில் வேறு பதிவரை அழைத்திருக்கிறேன்.

    எனவே நீங்கள் நட்சத்திரமாக இதுவரை அழைக்கப் படாமல் இருந்ததற்கு தவறான மின்னஞ்சல் முகவரியும் காரணம். உங்கள் பதிவை அதிகம் படித்திராதவர்களும் கூட தமிழ்மணம் நட்சத்திரப் பொறுப்பாளர்களாகக் கடந்த ஆண்டுகளில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிப் பார்த்து விட்டு விட்டிருப்பார்கள். No Response, Bounced Mails போன்றவற்றையெல்லாம் நாங்கள் ஒதுக்கிவிட்டு அடுத்த பதிவர்களுக்குப் போயிருக்கிறோம். எனென்றால் நாங்களும் இவற்றை எங்களது ஓய்வு நேரத்தில்தான் செய்கிறோம். நான் உங்களுடைய இடுகைகளைப் பெரும்பாலும் படித்து விடுவதாலேயே கொஞ்சம் அதிக முயற்சி எடுத்தேன். தனிப்பட்ட முறையில் நாம் ஒருமுறை நெடுநேரம் சந்தித்துப் பேசியிருப்பதால் என்னுடைய மின்னஞ்சலில் கூட உங்கள் முகவரியைத் தேடினேன்.

    சமீப காலமாக உங்களது பல இடுகைகளில் முரண்பாடுகளிருந்தாலும், உங்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டுமென்று அடிக்கடி தோன்றினாலும் :-) அதுபோன்ற நேரத்தை என்னால் முடிந்த அளவு நேரத்தைத் தமிழ்மணத்தில் செலவழிக்கிறேன். உங்களைப் போன்றவர்கள் வலைப்பதிவுகளில் எழுதுவது விகடன்-குமுதம் போன்ற மழுங்கடித்து வைத்திருக்கும் தமிழ் வாசகர்களின் மத்தியில் வாசக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தனிப்பட்ட அளவில் நான் கருதுகிறேன். அமெரிக்காவில் இருந்தாலே நாங்களெல்லாம் முதலாளிகளாகி விடவில்லை :-) எங்களுக்கும் வேலை பார்த்தால்தான் சோறு கிடைக்கும் . Thanksgiving மற்றும் கிறித்துமஸ் நேரங்களில் மட்டுமே அலுவலக வேலையிலும் கொஞ்சம் மட்டம் போட முடியும் :-) காட்டாக, கடந்த ஒரு மாதமாக தமிழ்சசி தன்னுடைய குடும்ப வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு தமிழ் மணம் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும், விருதுகளுக்கும் ஓய்வு நேரத்தையெல்லாம் செலவழித்துக் கொண்டிருக்கிறார்.

    நன்றி – சொ.சங்கரபாண்டி

  32. -/சுடலை மாடன்/- said...

    முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி...

    அறிவுஜீவிகளுக்கோ தங்களுக்குத்தான் கொள்கையடிப்படையில் மேதாவித்தனமாய் பேச முடியும் என்றெண்ணி தன்னார்வத் தொண்டு செய்வோரைக் குறை சொல்வது எளிது. ஆதிக்க சக்திகளுக்கெதிரான அமைப்புகளையும் அவற்றை நடத்துபவர்களையும் ஏதோவழியில் கொள்கைக் குறைகள் சொல்லி போட்டு அடிப்பது மிக எளிது. இதைத்தான் தமிழகச்சூழலில் அறிவுஜீவிகள் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஒரு சிறு மாற்றத்தைக் கூட சமுதாயத்தில் ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. வணிக மற்றும் ஆதிக்கச் சக்திகளுக்கெதிரான தன்னார்வ நிறுவனங்கள் பலவற்றை உருவாக்குவதே அரசுகளையும், அமைப்புகளையும் முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் அச்சக்திகளுக்கெதிரான முதல் செயல்பாடாக இருக்க முடியும். ஆனால் தமிழ் அறிவுஜீவிகளுக்கு தங்களுடைய மேதாவித்தன விளம்பரங்கள்தான் முக்கியம்.

    விருதுகளைப் பற்றிய பொதுவான விமர்சனத்தை நானும் வரவேற்கிறேன். வலைப்பதிவுகளிலேயே கூட கடந்த ஆண்டு விரிவான விமர்சனம் நடந்தது. ஆனால் அதைச் சொல்லும் பக்குவமோ அனுபவமோ உங்களிடமில்லை. தமிழ் வலைப்பதிவுகளில் பேசப்படும் விசயங்கள் இன்னும் உயரவேண்டும் என்ற அடிப்படையில் செய்ய வேண்டிய செயல்பாடுகள் பல உண்டு. அதில் ஒரு முயற்சியே இவ்விருதுகள். பதிவுகளிலுள்ள அக்கப்போர்களின் மேல் உங்கள் கோபமிருந்தாலும், அவற்றை நாய்ச்சண்டைகள் என்றழைப்பது அதிகம். இதை நீட்டிப் பார்த்தால் உங்களுக்குப் பிடிக்காதவர்களை நீங்கள் திட்டுவதைக் கூட நாய்ச்சண்டை இரகம்தான் என்று வேறுசிலர் கூறலாம். இந்தவொரு விசயத்தில் ஜெயமோகன் கருத்துக்கும் உங்கள் கருத்துக்கும் வேறுபாடில்லை.

    நன்றி – சொ.சங்கரபாண்டி

  33. Kasi Arumugam said...

    சங்கரபாண்டி,

    உங்கள் மறுமொழிக்கு இடையிடையே ‘அறிவுஜீவி’ என்கிற வாசகம் வருகிறதே, அது இங்க யாருன்னு சொல்லவேயில்லையே:-) நீங்க என்னதான் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் நாங்க உங்களை ’அமெரிக்க முதலாளிக’ன்னுதான் சொல்லுவோம். அப்பத்தான் இங்க கெத்தா இருக்கும்.:P

    இந்தக் கட்டுடைக்கறவுக தொல்லை
    தாங்கலைப்பா...

    அடடே, வந்த வேலையை மறந்துட்டனே, நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் சுகுணா:)

  34. SurveySan said...

    எல்லாஞ்சரிதான்,ஆனா, இதையெல்லாம் விருந்தாளியா இருக்கும்போது சொல்வது சரிலேது.

    நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

  35. கண்ணகி said...

    நட்சத்திர வாழ்த்துக்கள். உங்கள் தைரியத்தப்பாராட்ட்யே ஆகணும்.

  36. Prathap Kumar S. said...

    //தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் மிகக் குறைவு. தயவுசெய்து... எழுதுவதை நிறுத்த வேண்டாம். மீண்டும் நகைச்சுவைப் பதிவர் விருது வாங்க வாழ்த்துக்கள்.//

    ஹஹஹ.. கன்னா பின்னா ரிப்பீட்டே..

    பலவருடங்களாக எழுதுவதினால் மட்டும் ஒருவர் சிறந்தபதிவர் என்று சொல்லிவிடமுடியாது. நீங்கள் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஏற்பட்ட காலதாமதத்திலிருந்தே இதை அறியலாம். பதிவு ஆரம்பித்து ஆறுமாதத்தில் நட்சத்ரதிரமானவர்கள் கூட இருக்கிறார்கள்.

    அதனால் அதனால் தம்பட்டம் அடிக்காமல் எழுதும்போது சகபதிவர்களை மதிக்குபடி எழுதுங்கள். அதிமேதாவித்தனம் ஆபத்தானது. காணாமல் போய்விடுவீர்கள்.

  37. சென்ஷி said...

    Belated Wishes to you Suguna ;)

  38. சென்ஷி said...

    ////தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் மிகக் குறைவு. தயவுசெய்து... எழுதுவதை நிறுத்த வேண்டாம். மீண்டும் நகைச்சுவைப் பதிவர் விருது வாங்க வாழ்த்துக்கள்.////

    I strongly recommended it also ;)

  39. சென்ஷி said...

    //சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. //

    Again, I congrats to you SIR.

  40. குமரன் said...

    சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியை குறையுங்கள் சுகுணா! உங்கள் பதிவிலேயே எத்தனை முரண்பாடுகள்?! முரண்களில் வாழ்வது தான் பின்நவீனத்துவமா? எனக்கு பின்நவீனத்துவமெல்லாம் தெரியாது சுகுணா!

  41. Anonymous said...

    ஆறு வருஷம் நிம்மதி இப்ப கெட்டு போச்சே

    நீயெல்லாம் எழுதலைன்னு யார் அழுவுறா

    கருமாந்திரம்

    ராகு

  42. Sanjai Gandhi said...

    //நாய்ச்சண்டைகள் குறித்த புரிதலுக்காகத்தான்.//

    நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் பாஸ்..

    (சுகுணா ப்ளாகை சாரு ஹேக் பண்ணிட்டாரா? )

  43. -/பெயரிலி. said...

    ஒரு சரிப்படுத்தும் குறிப்புக்காக, 'பூங்கா' முன்னைய ஆசிரியர் & ஆசிரியர்குழு அங்கத்தவர் என்ற நிலையிலே:

    சுகுணா திவாகர் கேட்டபடி அவருடைய இடுகைகளைப் பூங்காவிலே சேர்த்துக்கொள்வதைப் பூங்கா அதன் பின்னரைக்காலத்திலே தவிர்த்தது என்பது உண்மை. ஆனால், அவர் கேட்டபடியாலேதான் புதிய பதிவர்களின் இடுகைகளைச் சேர்த்துக்கொண்டது என்பது முற்றிலும் தவறான தகவல் மட்டுமல்ல, பூங்காவின் நோக்கத்தினையும் மறுத்தலாகும். சுகுணா திவாகர் தனதிடுகைகளைப் பற்றிச் சொல்லிப் புதியவர் இடுகைகளைச் சேர்க்கச்சொன்னபோது இதனைப் பதிலான ஆசிரிய எதிர்வினையிலே தெரிவித்திருந்தோம். ம் தரமான இடுகைகளையும் புதிய பதிவர்களையும் ஊக்குவிப்பதும் முன்னெடுப்பதுமே அச்சுப்பதிப்புப்பத்திரிகைகளும் அதிலே வேலை செய்கின்றவர்களும் தம்மிச்சைப்படி செயலாற்றும்நிலையிலே எமது நோக்கங்களாகவிருந்தன.
    முதலாவது பூங்கா ஆசிரியர் தலையங்கம்:
    http://poongaa.com/content/view/73/1/

    வலைக்குப் புதிய பதிவு (பதிவர்) என்ற தேர்விலும் தேர்ந்தெடுத்துத் தந்தோம். எழுத்தாளர் பாமரனைப் புதிய பதிய பதிவராகத் தந்தது இங்கே
    http://poongaa.com/content/view/1636/1/

    விருதுகள் என்பவை எப்போதுமே அபத்தமே.... புத்தகவெளியீடுகள், கண்மூடித்தனமான அ.ணுக்கத்தொண்டமைவெளிப்பாடுகள் போல. எட்டியிருந்து பார்ப்பது மகிழ்ச்சியினையும் எம்மைப் பற்றிய "நாம் எவ்வளவோ மேல்" மகிழ்ச்சியினையும் தருகின்றன.

    சுகுணா திவாகர், பூங்காவுக்கான நேர்காணல்களை எடுத்துத் தந்ததற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாகத்தான் பூங்காவில் அன்றைக்கிருந்தோம்; இன்றைக்குமிருக்கின்றோம். அதிலேதும் மாற்றமில்லை. ஆனால், பூங்காவினைத் தொடர்ந்து நடத்த ஏழு எட்டுப்பேர் ஓராண்டு தம் வாரங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கும்போது, தேர்ந்தெடுக்க உதவிகளைக் கேட்டிருந்தோம். கேளிர் வகையான digg வகைத்தேர்வினைக்கூடச் செய்யப் பலரினை அழைத்திருந்தோம். எத்தனை பேர் உதவினார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் அவரவர் அடுப்படி, நாற்றங்கால், ஆற்றந்தோப்பு, சந்தைசாவடிப்பெரும்புரட்சிகளிலே முக்கிக்கொண்டிருந்திருக்கலாம். அல்லது, பூங்கா ஆசிரியர்குழுவுக்கு ஆனாவும் தெரியாது சூனாவும் தெரியாது பூனாவும் தெரியாதென்று அடிச்சு நொருக்குவதிலேயே முழுமூச்சாயிருந்திருக்கலாம். குறைந்த பட்சம் பூங்காவிலேயிருந்த அறிவுஜூனியங்கள் போட்ட அஞ்சு பிஞ்ச போஸ்டுகளைப் புத்தகமாக்கிப் போட்டுப் பிரபல்யமாக்கிக் கலகம் என்று பாவனை செய்யவில்லை. அழுத்தும் அமெரிக்க முதலாளித்துவவாழ்க்கைக்கும் ஏதேனும் செய்யவேண்டுமென்று பிடித்த நோக்குக்குமிடையே உழன்றுகொண்டுதான் செய்துகொண்டிருந்தோம்; இன்றைக்கும் செய்துகொண்டிருக்கிறோம்

    நாளைக்கே பூங்கா அச்சிலே வந்தால், சுகுணா திவாகர் சொல்லிச் செய்த கலகம் என்று வௌவால் எதுவாச்சும் பின்னூட்டாமலா போகப்போகிறது?


    Please continue your highly controlled internet pyrotechnic blasts & fireworks. For sure you know that you never get hurt, but in some quarters it would be the jaw dropping verbal rebel effects!

  44. Unknown said...

    ///எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை///
    உம்முடைய எழுத்துக்களை விட உம் பின் வந்தவர்களின் எழுத்துகள் சிறப்பாகவும், நேர்மையாகவும் இருந்திருக்கலாம் இல்லையா? நீங்கள் பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரின் ‘நவீன பார்ப்பான்' ஆகியிருக்கிறீர்கள். அப்படியான எழுத்துக்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்றில்லை.

    என்ன, நட்சத்திர வாரத்தில் தமிழ் மணத்தைச் சாடுகிற உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். இதே நேர்மையை எல்லாப் பதிவுகளிலும் காட்டினால் நன்று

  45. Unknown said...

    ///இந்த அநீதிகளின் நீட்சிதான் தமிழ்மண விருதுகள் பரிந்துரை. சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. உண்மையில் அதற்கான பதிவு சிறந்த நகைச்சுவைப் பதிவு என்பதில் எனக்கு சந்தேகமில்லை.///

    இதில் தமிழ் மணத்தில் என்ன தப்புக் கண்டீர்???? நீவிர்தானே எல்லாவற்றையும் பரிந்துரைத்தது. நீவிர் பரிந்துரைத்த எல்லாமே மற்றவர்களுக்குப் பிடித்தேயாகவேண்டுமோ? என்ன வகை நியாயம் இது சுகுணா??

  46. மிதக்கும்வெளி said...

    தோழர்கள் சுடலைமாடன் மற்றும் பெயரிலி ஆகியோருக்கு.

    முதலில் இது தமிழ்மணத்திற்கு எதிரான பதிவு இல்லை. என்னை நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுக்காததை ஒரு சதியாகவும் கருதவில்லை. ஆனால் அது குறித்த ஆதங்கமும் பொறாமையும் எனக்கு இருந்தன என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்பினேன்.

    அடுத்தது தமிழ்மணம் விருதுகள் குறித்த கருத்தும் தமிழ்மணத்திற்கு எதிரானது அல்ல. மாறாக வாசகர்கள் பரிந்துரை செய்கிற, வாக்களித்து தேர்ந்தெடுக்கிற, சோ கால்ட் ஜனநாயக்த்தின் பின்னணியில் எழுத்து மீதான அக்கறை இல்லாது குழுமனோபாவமும் மொன்னைப்படுத்தப் பட்ட வாசக மனோபாவமும் இருக்கின்றன என்றுதான் நினைக்கிறேன். தமிழ்மணம் விருதுகளை இந்த தேர்தல் இல்லாமல், தமிழ்மணமே வழங்கலாம். நடுவர்களாக துறைசார்ந்த வல்லுநர்களை அமர்த்திக்கொள்ளலாம்.

    அடுத்து ‘நகைச்சுவைப் பதிவர் விருது’ குறித்து. நான்தான் பரிந்துரை செய்தேன் என்பது உண்மைதான். ஆனால் பல்வேறு பிரிவுகளில் அதுவும் ஒன்று. ஆனால் மற்ற பிரிவுகளில் வாசகர்களால் புறக்கணிக்கப்பட்டு நகைச்சுவைப் பதிவராக அடையாளப் படுத்தப்பட்டது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நாஞ்சில் பிரதாப்,கிருத்திகன்குமாரசாமி போன்றோரின் ஆலோசனைகளை ஏற்று அவர்களது பதிவுகளைத் தொடர்ச்சியாகப் படித்து அதுபோல சிறப்பாக எழுதி சிறந்த பதிவர் ஆக முயற்சி செய்கிறேன்.

  47. K.R.அதியமான் said...

    ///அய்யனார் said...

    சுகுணா,

    அங்கீகாரத்தின் மீதான விருப்பம் சுய விளம்பர / தம்பட்டக் கோஷங்களின் மீதான எரிச்சல் என்கிற தொனியாக இக்கட்டுரையைப் புரிந்து கொண்டேன். விமர்சனங்களை யாரும் இப்போது விரும்புவதில்லை.அதிலும் உன் தடாலடி மொழியினைப் பற்றி சொல்லவே வேண்டாம். இச்சூழலின் அபரிதமான தொழில் நுட்ப வளர்ச்சி மெல்ல அனைவரையும் வலதுசாரித் தன்மையை நோக்கி நகர்த்துகின்றன என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து எழுதப் போவதற்கு வாழ்த்து.

    ///

    இதில் ‘வலதுசாரி தன்மை’ என்ற பிரயோகத்தை மறுக்கிறேன். வலதுசாரி தனம் என்றால் என்னவென்று சரியான விளக்கம் இல்லை. எனது பழைய பதிவு இது :

    http://nellikkani.blogspot.com/2009/09/blog-post.html
    இடதுசாரிகளும், வலதுசாரிகளும்

  48. -/பெயரிலி. said...

    சுகுணா திவாகர்
    என் பின்னூட்டம் இது தமிழ்மணத்துக்கு எதிரான பதிவா இல்லையா என்பதினாலே வந்ததல்ல. தவறாகச் சிலர் புரிந்துகொள்ளக்கூடிய நிலையைப் பூங்காவோடு சம்பந்தப்பட்டவன் என்ற அளவிலே என் பக்கமிருந்து தெளிவுபடுத்த வந்ததுமட்டுமே.

    கூடவே, இதனையெல்லாம் கலகம் என்று களேபரப்படுத்தும் பின்னூட்டக்கலவரக்காலரையராக்கள் தந்த எரிச்சலென்றும் கொள்ளலாம்.

  49. யுவகிருஷ்ணா said...

    -/பெயரிலி.க்கு இன்னமும் ட்ரீட்மெண்ட் முழுமையடையவில்லை என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. 2010லாவது அவர் நார்மல் மனநிலைக்கு வர வாழ்த்துகள் :-)

  50. சுகுணாதிவாகர் said...
    This comment has been removed by a blog administrator.
  51. தமிழ்நதி said...

    "சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. "

    பார்த்தீங்களா? எப்படியோ அவர்களுக்குத் தெரிந்துபோய்விட்டது.:)

    உங்களைச் சும்மாவாச்சும் கலாய்க்காவிட்டால் பொழுதுபோகமாட்டேன் என்கிறது.

    இவ்வளவு ஆதங்கப்பட்டபிறகு நட்சத்திரப் பதிவராகியிருப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பரே. (முன்னாள் இல்லை... இந்நாள்தான்)