பார்ப்பனர்களைப் பாதுகாத்த பெரியார்
"நான் பார்ப்பனர்களை எதிர்க்கிறேனே தவிர பார்ப்பனர்களை வெறுப்பதில்லை. நான் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்கிறேனென்றால் நான் மனிதர்களை நேசிக்கிறேன்" - தோழர் பெரியார்.ஈவெ.ரா
வலைப்பதிவுகளில் எழுதுபவர்களைப் பொறுத்தவரை இரண்டு பிரிவுகள் இருக்கின்றனர். பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனியம், இந்துத்துவத்தை ஆதரிக்கிறவர்கள். இன்னொரு பிரிவினர் பார்ப்பன மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள்.
ஆனால் இந்த வலையுலகில் நடக்கும் விவாதங்களுக்கும் தமிழ்நாட்டில் நிலவும் சமூகச் சூழலுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
பெரியார் காலத்தைவிட இப்போது பார்ப்பன ஆதிகக்ம் குறைந்திருக்கிறது. பார்ப்பனர்களின் அதிகார மய்யங்கள் மாறியிருக்கின்றன. 'சூத்திரர்' என்கிற வார்த்தையே தெரியாத ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது. பார்ப்பனர்களுக்கு இணையாக சாதிய அதிகார விருப்பம் கொண்ட இடைநிலைச்சாதிகள் உருவாகியிருக்கிறார்கள். இவர்கள் கிராமங்களில் தலித்துகள் மீது வன்முறையைச் செலுத்துகிறார்கள்.
ஆனால் வலையுலகில் நடக்கும் விவாதங்களோ இன்னமும் 1950, 60களில் நடந்த ஆரிய, திராவிட விவாதங்களாகவே இருந்து வருகின்றன. ஆனால் இந்த விவாதங்களில் நியாயமில்லை என்றும் சொல்லிவிட முடியாது. வலையுலகில் எழுதும் பெரும்பாலான பார்ப்பனர்கள் இன்னமும் சத்தியமூர்த்தி(அய்யரி)ன் வாரிசுகளாகவே இருக்கின்றனர்.
ஒரு உதாரணம் 1972ல் பெரியார் 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும்' கோரிக்கையை வலியுறுத்தும்போது பார்ப்பனர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆனல் இப்போது 2006ல் அதே கலைஞர் தலைமையிலான திமுக அரசு அதே சட்டத்தைக் கொண்டுவரும்போது தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் மத்தியிலும் இந்துத்துவச் சக்திகள் மத்தியிலும் முன்னைய கடுமையான எதிர்ப்புகள் இல்லை. இப்போது 'தனியார்துறையில் இட ஒதுக்கீடு' போன்ற கோரிக்கைகளை வைத்தால்தான் பார்ப்பனர்கள் அலறுவார்கள். அவர்கள் வேறு அதிகார மய்யங்களுக்கு நகர்ந்திருக்கிறார்கள். எனவே 1973ம் காலத்திய அதே பெரியார் அரசியலை நாம் செய்ய இயலாது.
ஆனால் வலையுலகில் இருக்கும் சூழல் என்னவென்றால் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களை விட வலையுலகில் எழுதிய பெரும்பாலான பார்ப்பனர்கள் அனைவரும் அர்ச்சகராகும் சடட்த்தை மூர்க்கமாக எதிர்த்தார்கள். இத்தகைய இறுகிப்போன பார்ப்பனர்களுக்கு கடுமையான பார்ப்பன எதிர்ப்பு அரசியல் தேவைதான். பெரும்பாலும் வலையுலகில் பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக பார்ப்பனரல்லாதோரில் அதிகமும் இடைநிலைச்சாதிகளும் கொஞ்சம் முஸ்லீம்களும் எழுதுகிறார்கள் என்று கருதுகிறேன். தலித்துகள் அதிகம் இன்னமும் இந்த உலகத்திற்குள் வரவில்லை. தலித்துகளும் கணிசமக எழுத ஆரம்பிக்கும்போது வேறுதளங்களுக்கு விவாதங்கள் நகரும் என்று கருதுகிறேன்.
இதை நான் எழுதுவதன் நோக்கம் பார்ப்பன எதிர்ப்பாளர்களும் சரி, பார்ப்பன எதிர்பு முன்வைக்கப்படுவதாலேயே பெரியார் என்னும் போராளியை மாமா என்றும் வெங்காயத் தலைவன் இன்னும் எவ்வளவு தூரம் கொச்சையாக வசைபாட வேண்டுமோ அவ்வளவுதூரம் வசைபாடும் பார்ப்பன நண்பர்களுக்கும் சேர்த்து, பெரியார் பார்ப்பன எதிர்ப்பில் கடைப்பிடித்த அறவியல் மதிப்பீடுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
1948 காந்தி கோட்சே என்ற பார்ப்பனரால் சுட்டுக்கொல்லப்பட்ட நேரம். முதலில் முஸ்லீம்தான் காந்தியைக் கொன்றுவிட்டான் என்று வதந்தி பரவ முஸ்லீம்கள் மீது தாகுதல் தொடுக்கப்படுகிறது. ஆனால் அந்தக் கொலையைச் செய்தவன் இந்து, அதுவும் பார்ப்பனன் என்று தெரியவர இந்திய வானொலி வரலாற்றிலேயே முதல்முறையாக 'காந்தியை ஒரு இந்து சுட்டுக்கொன்றான்' என்று கொலையாளியை அவனின் மத அடையாளத்தோடு அறிவிக்கப்பட்டது.
அப்போது பாபாசாகேப் அம்பேத்கரின் மண்ணான மும்பையில் தலித்துகள் அக்கிரகாரத்தில் பார்ப்பனர்கள் மீது தாக்குதல் நிகழ்த்துகின்றனர். ஆனால் பார்ப்பன எதிர்ப்பை உக்கிரமாக முன்வைத்த தமிழகத்தில் பெரியார் 'யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுக்கிறார். அதற்குப் பின்பு நடந்த காந்தியார் அஞ்சலிக்கூட்டத்தில் "காந்தியைச் சுட்டுக்கொல்ல ஒரு துப்பாக்கி எந்தளவு காரணமோ அந்தளவுதான் அந்த பார்ப்பனரும் காரணம்" என்று பேசுகிறார்.
பார்ப்பனரல்லாத பெரும் மக்கள் திரளைத் தன்னகத்தே கொண்ட பெரியார் நினைத்திருந்தால் பார்ப்பனர்களுகு எதிராக வன்முறையை ஏவிவிட்டிருக்க முடியும். ஆனால் ஒருபோதும் அவர் பார்ப்பனர்கள் உள்ளிட்ட எந்த உயிரையும் வெறுத்தவரில்லை. பார்ப்பன எதிர்ப்பு உட்பட அவரது எல்லா செயற்பாடுகளும் அளவிறந்த அன்பின்பாற்பட்டது.
பலசமயங்களில் அவர் பார்ப்பனர்களோடு உரையாடல் நிகழ்த்தவும் முன்வந்தார். ('பார்ப்பனத் தோழர்களே' என விளித்து அவர் பேசிய உரை ஒரு முக்கியமான உரை. அந்த பிரதி இப்போது என் கைவசம் இல்லை. கிடைத்தால் பிரசுரிக்கிறேன்.)
அதே 1948 பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். தனது ஆஸ்தான நண்பனும் அரசியல் எதிரியுமான ராஜாஜியைச் சந்திக்கிறார். பிறகு மணியமமையை மணந்துகொள்கிறார்.
மணியம்மையின் திருமணத்தையொட்டி அண்ணா உட்பட பலர் கட்சியிலிருந்து விலகுகின்றனர். திமுக பிறக்கிறது. அப்போது அவர்கள் பெரியார் மீது இரண்டு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.
1. பெரியார் பொருந்தாத் திருமணம் செய்துவிட்டார்.
2. மணியம்மை பெரியார் திருமணம் என்பது வெறுமனே ஆண் பெண் உறவு சம்பந்தப்பட்டது அல்ல. அடுத்து கட்சி, டிரஸ்ட், சொத்து ஆகியவற்றிற்கு வாரிசை நியமிக்கும் ஏற்பாடும் கூட. அத்தகைய இயக்கத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய ஏற்பாட்டைப் பார்ப்பனர் ராஜாஜியின் ஆலோசனையில் பேரில் எடுத்துவிட்டார்.
காலங்கள் உருண்டோடின. ராஜாஜி இறந்துவிட்டார். ராஜாஜிக்கு அடுத்தாண்டு பெரியாரும் மறைந்துவிட்டார். பெரியார் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி 'புதியபார்வை' இதழில் 'அய்யாவின் அடிச்சுவட்டில் 'என்னும் தொடரை எழுதுகிறார். அதில்தான் ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதத்தை வெளியிடுகிறார்.
அதில் 'மணியம்மையைத் திருமணம் செய்வதில் தனக்கு விருப்பமில்லை' என்றே ராஜாஜி தெரிவிக்கிறார். ஆனால் கடிதத்தின் தலைப்பில் அந்தரங்கம் என்று போட்டிருந்ததால் பெரியார் கடைசிவரை அந்த கடிதத்தை வெளியிடவில்லை. 'ஒரு பார்ப்பனர், அதுவும் பார்ப்பனர்களின் பாதுகாவலனாக விளங்கிய ராஜாஜி என்னும் பார்ப்பன ராஜகுருவிடம் கட்சியின் எதிர்காலத்தை அடகு வைத்தார்' என்னும் வரலாற்றுப் பழியைச் சுமந்து மறைந்தார்.
வேசி வீட்டிற்குச் சென்றது முதல் நிர்வாணமாய் நின்றது வரை ரகசியங்கள் எதுவுமற்று தமிழ்வெளியில் தன்னை முன்கிடத்திக்கொண்டவர் பெரியார். ஆனால் வெளிப்படையாய் இருத்தல் என்பது தான் ரகசியங்களற்று இருத்தலே தவிர பிறரின் அந்தரங்களை அம்பலப்படுத்துவதல்ல என்கிற அற மதிப்பீடுதான் பெரியாரின் அறமதிப்பீடு.
பெரியர் மதங்களை மறுத்தார். ஒழுக்கம், தியாகம், கற்பு, மதுவிலக்கு என்னும் பேரறங்களை மறுத்தார். ஆனால் இத்தகைய சுயேச்சை அறங்களை உற்பத்தி செய்தார். அத்தகைய அறங்கள்தான் இன்றைய மாற்று மதிப்பீடுகளாக விளங்கும் என்று கருதுகிறேன்.
பார்ப்பன நண்பர்களும் பார்ப்பனரல்லாத தோழர்களும் தங்களது அரசியல் செயற்பாடுகளில் இத்தகை சுயேச்சை அறங்களைக் கடைப்பிடிப்பதே வன்மமும் வெறுப்புமற்ற மாற்று வாழ்க்கைநெறியை உருவாக்க ஏது செய்யும் என்று நம்புகிறேன்.
வேண்டுகோள் 1 : உடனே பெரியார் ,"பாம்பையும் பார்ப்பனையும் கண்டால் பார்ப்பனை அடி" என்று சொல்லவில்லையா என்று கேட்கவேண்டாம். அது பெரியாரின் வார்த்தைகள் அல்ல. பெரியார் எந்த ஆண்டில் எங்கு அப்படிப்பேசினார் அல்லது எழுதினார் என்று காட்டுங்களேன்.
வேண்டுகோள் 2 : இந்த பதிவுக்குச் சம்பந்தமில்லாத, திசைதிருப்பும் பெரியார் மணியம்மை திருமணம் பற்றிய கேள்விகள் வேண்டாம்
அனைவருக்கும் புத்தாண்டுவாழ்த்துக்கள்.
//...வேறுதளங்களுக்கு விவாதங்கள்
நகரும் என்று கருதுகிறேன்.//
அப்படி நினைத்துத்தான் இந்தப் பதிவை எழுதினேன். நகருவதாகக் காணோம்.
தருமி, படித்தேன். நல்ல பதிவுதான். ஆனால் பின்னூட்டங்களில் இடைநிலைச்சாதிகளைவிட பார்ப்பனர்களே அதிகம் கோப்பட்டிருப்பதைக் கவனித்தீர்களா?
மதுரையில் பார்த்தது. தருமி எப்படி இருக்கிறீர்கள்?
// பார்ப்பனர்களுக்கு இணையாக சாதிய அதிகார விருப்பம் கொண்ட இடைநிலைச்சாதிகள் உருவாகியிருக்கிறார்கள். இவர்கள் கிராமங்களில் தலித்துகள் மீது வன்முறையைச் செலுத்துகிறார்கள். //
இது மிகவும் உண்மை. இதை மிகவும் கடுமையுடன் எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் நன்றாக படித்து நல்ல நிலமையில் உள்ளவர்கள் இது பற்றிய உணர்வே இல்லாமல் இருக்கின்றனர். எனக்கென்னவோ நமது கல்விமுறை, நமது சமுதாய அவலங்களை சரியான முறையில் மாணவர்களிடம் போதிக்கவில்லை என தோண்றுகிறது. ஒருவன் படிப்பதினால் சற்றே மேலோட்டமான மனிதாபிமானம் மட்டுமே பெறுகிறான். தன்னுடைய அன்றாட நிகழ்வுகளில் எவ்வாறெல்லாம் சாதிய படிமானங்களை வளர்கிறோம் என்பது பற்றிய புரிதல் இல்லாமலே இருக்கிறார்கள்.
// ஆனால் வலையுலகில் நடக்கும் விவாதங்களோ இன்னமும் 1950, 60களில் நடந்த ஆரிய, திராவிட விவாதங்களாகவே இருந்து வருகின்றன. ஆனால் இந்த விவாதங்களில் நியாயமில்லை என்றும் சொல்லிவிட முடியாது //
இவை நல்லதொரு தீர்ப்பை நோக்கி செல்லவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு.
நன்றி
வசந்த்
முரண்டு பிடிப்பவர்களிடம் முரட்டு வைத்தியம் செய்யவேண்டும்.பெரியார் அப்படி செய்யாமல் விட்டுவிட்டார்.பெரியார் ராஜாஜியுடன் இறுதிவரை நட்பாக இருந்தது பிராமணர்களுக்கு இளக்காரமாகப் போய்விட்டது.பிராமணர்களுக்கு ஓர் அடியாவது விழுந்திருந்தால் மற்ற இடைநிலை சாதிகளுக்கு சிறு அச்சமாவது வந்திருக்கும்.பிராமணீய கோட்பாட்டை வெறும் கருத்தால் எதிர்கொள்ள முடியாது.சமுதாயப் புரட்சிக்கு கொஞ்சமாவது வீர உணர்ச்சி வேண்டும்.வெறும் பகுத்தறிவு,சுய அறிவு வேலைக்காகாது.
அடக்குமுறையால் நிலை நிறுத்தப்பட்ட
பிராமணீய எண்ணம் வெறும் பேச்சால் மாறும் என நினைப்பது கனவே.
நீங்கள் சொன்னதை நானும் கவனித்தேன். காரணம் மட்டும் மிகச்சரியாகத் தெரியவில்லை.
பார்ப்பனர்கள் ஒரு ஆரோக்கியமான உரையாடலுக்குத் தயாராக இல்லை என்று நினைக்கிறேன். இந்த பதிவுக்கே அவர்களிடமிருந்து ஒரு பதிலும் இல்லையே.
//ஒழுக்கம், தியாகம், கற்பு, மதுவிலக்கு என்னும் பேரறங்களை மறுத்தார்.//
வெளியே மிதக்கும் அய்யா,
இவை மட்டும் அல்லாமல், ஆரோக்யமான,நாணயமான,நிதானமான,நேர்மையான முறையில் நடப்பது/உரையாடுவது போன்ற பிற்போக்கான அறங்களையும் கட்டவிழ்த்தார்.அதற்கான மாற்று வாசிப்புக்களையும் குஞ்சுகளுக்கு சொல்லிக்கொடுத்தார்.'மாமா சொல் மிக்க மந்திரமில்லை' என்று மிதக்கும் உங்களிடம், ஆரோக்யமான உரையாடல் அகப்படும், என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை.என்ன செய்வது?
வேணும்னா ஆரோக்யமற்ற முறையில் வழக்கம் போல எழுதுங்க..கருப்பய்யா,ராவணன்,அசுரன் போன்ற தெய்வப் பிறவிகளெல்லாம் வந்து உரையாடும்.
பாலா