

"பாலுங்கிறது பேரு, தேவர்ங்கிறது எங்க வாங்கின பட்டம்?"
- கேள்வியை முன்வைத்து சில கேள்விகள்
"பூணூலை அறுப்பது தனிநபரின் உரிமையையும் மத உரிமையும் பறிக்கிறது" என்று அலறுகிறது பாரதிய ஜனதாக் கும்பல். ஆனால் அறுப்பதும் எரிப்பதும் எதிர்வன்முறைதான். பூணூல் அணிவதுதான் முதல் வன்முறை
- புதியஜனநாயம் ஜனவரி 2007 (பக் - 6)
'வேதம் புதிது' திராவிடர் கழகத்தினராலும் இடதுசாரிகளாலும் கொண்டாடப்பட்ட படம்.
பார்ப்பன எதிர்ப்பை வெளிப்படையாக முன்வைத்தது, அதனாலேயே பார்ப்பனர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தது, பிறகு எம்.ஜி.ஆரின் முன்முயற்சியால் (அக்கிரகாரத்தில் கழுதையைத் தடை செய்த அதே எம்.ஜி.ஆர் ஆட்சிதான்) வெளிவந்தது என்று பல பெருமைகளை உள்ளடக்கிய படம். குறிப்பாக அந்த 'பாலுங்கிறது பேரு, தேவர்ங்கிறது எங்க வாங்குன பட்டம்?"- கேள்வி. சரி, இந்தக் கேள்வியை வேறு சில வாசிப்புகளுக்கு உட்படுத்துவோம்.
படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் பாலுத்தேவர் (சத்யராஜ்) ஒரு நாத்திகர். அவர் பெரியாரியரா, அல்லது மார்க்சியரா என்பது சுட்டப்படவில்லை. ஆனால் அவர் படத்தில் ஓரிடத்தில் பேசும் வசனம் " அன்பே சிவமென்றால் அவன் கையில் சூலாயுதம் எதுக்கு?".
இந்த வாசகம் தமிழகத்தில் தி.கவினரால் சுவரெழுத்து செய்து பரப்பப்பட்ட வாக்கியம். அவர் பெரியாரிய அனுதாபி. ஆனாலும் சாதிப் பட்டத்தைத் தாங்கிச் சுமக்கிறார். இருக்கலாம், எனக்குத் தெரிந்து ஒரு பெரியவர், பெரியார் காலத்திலிருந்து இயக்கத்தில் இருப்பவர், பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்தவர் இன்னும் வன்னிய சாதி உணர்விலேயே வாழ்கிறார். இப்படியாக வன்னியப் பெரியாரிஸ்ட், தேவர் பெரியாரிஸ்ட், வெள்ளாளப் பெரியாரிஸ்ட் ஆகிய பெரியாரிஸ்ட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் கூட. ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் யாரும் சாதியைத் தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதில்லை.
தாய், தந்தையை இழந்த பார்ப்பன அனாதைச் சிறுவன் பாலுத்தேவரின் வீட்டில் சரணடைகிறான். அங்குள்ள பஞ்சாரத்தில் அடைக்கப்பட்டிருக்கும் கோழிகளையும், பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளையும் பார்த்து முகம் சுழிக்கிறான். உடனே ஆடுகளும் கோழிகளும் அங்கிருந்து மறைகின்றன. இதற்குப் பெயர்தான் தமிழ்நாட்டில் 'பார்ப்பன எதிர்ப்புப்படம்'.
இதைத்தான் உயர்குடியாக்கம் என்கிறோம், உட்செரித்தல் என்றும் சொல்கிறோம். பார்ப்பனப் பண்பாடு பிற பண்பாட்டுக் கூறுகளை உட்செரித்து அழிப்பது.
சரி, படத்தின் மய்யமான கேள்விக்கு வருவோம். "பாலுங்கிறது பேரு, தேவர்ங்கிறது எங்க வாங்கின பட்டம்?" - இந்தக்கேள்வியை பாலுவிடம் கேட்பது யார்?
தன் சாதிய அடையாளமான சம்பிரதாயமான பூணூலைக் கூடக் கழற்றாத பாப்பாரக் குஞ்சுதான் கேட்கிறது, "தேவர்ங்கிறது எங்க வாங்கின பட்டம்?"தேவர் என்பது எங்கேயும் வாங்கின பட்டம் இல்லைதான், ஆனால் அதேநேரத்தில் பூணூலும் யேல் பல்களைக் கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் இல்லையே?
தன்னுடைய சாதிய அடையாளத்தைத் துறக்காத எவனும்/வளும் சாதி சமத்துவம் பற்றி பேசத் தகுதியில்லாதவர்கள். இப்போதும் கூட இதேமாதிரியாக சில பார்ப்பனக்குஞ்சுகள் பூணூலைப் போட்டுக்கொண்டே கேட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள், "காலம் மாறிப் போச்சு ,ரிசர்வேஷனெல்லாம் எதுக்கு?, சாதி பற்றி ஏன் சார் பேசறீங்க?, நீங்கதான் சார் சாதி பற்றியெல்லாம் நினைக்கிறீங்க, இப்பெல்லாம் யாருசார் சாதி பார்க்கிறது" "பார்ப்பனர்களிடம் சாதிவெறி இல்லை, பி.சிக்கள்தான் எஸ்.சிக்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்"....இப்படியாக.
சரி, பாரதிராஜாவிடம் வருவோம். இந்தக் 'பட்டம்' கேள்வி உளப்பூர்வமாகவே கேட்கப்பட்ட கேள்வி என்றால் உங்களிடம் ஒரு கேள்வி.
அந்தக் கேள்வியை பார்ப்பனச் சிறுவன் கேட்டபிறகு பாலுத்தேவரிடம் அந்த சிறுவன் சொல்வான், "நான் கரையேறிட்டேன், நீங்க எப்ப ஏறப்போறேள்". உடனே யாரும் அடிக்காமலே காற்றில் பாலுத்தேவரின் கன்னத்தில் அறை விழும்.
பசும்பொன் என்று ஒரு படம் எடுத்தீர்கள். அதன் கதை வசனம் உங்கள் சாதிக்காரரான சீமான். நடித்தவரும் கள்ளர் சாதிக்காரரான சிவாஜிகணேசன். அப்படத்தில் 'தேவரய்யா' என்று ஒரு பாடல் வருகிறது. அதை எழுதியவரும் கள்ளரான கவிப்பேரரசு வைரமுத்து.
இதற்காக யாரை எங்கே எதைக்கொண்டு அடிப்பது?