எழுத்தும் இலக்கியமும் - புலியூர் முருகேசன்.

( வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு கொளுத்தப்பட்டதற்கு எதிர்வினையாக கோபாலகிருஷ்ண நாயுடுவை நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் அழித்தொழித்துப் பழிவாங்கிய கதையைப் புனைவின் சுவையோடு விளக்குகிறது பாட்டாளியின் 'கீழைத்தீ; நாவல். (புதியபயணம் வெளியீட்டகம்.) இந்த நாவலைப் படித்துக்கொண்டிருக்கும்போதே ராமச்சந்திரன் நாயரின் 'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம்' தமிழ் மொழிபெயர்ப்பையையும் படிக்க நேரிட்டது. இவ்விரு நூற்கள் குறித்தும் விரிவாய் எழுத விருப்பம். இலக்கியம் என்றாலே எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று இணையத்தில் ஊடுகட்டும் இலக்கியப் பிரகஸ்பதிகள் கொஞ்சம் இந்தப்பக்கமும் கவனம் திருப்புதல் நலம்.)

இங்கே எதுவும் பொதுவாக இல்லை. இலக்கியமும் தான். பொதுவானதாக இருக்க முடியாது. ஒவ்வொரு படைப்பும் ஒரு சாராரின் நலன் சார்ந்தே பின்னப்பட்டிருக்கும். எனவே, அது பிறிதொரு சாராருக்கு எதிரானதாக இருக்கும். பன்முகத்தன்மை கொண்ட மனிதர்கள் நிரம்பிய, சாதிய இழிபழிகள் கொட்டிக்கிடக்கிற, மதச் சகதி வழிந்தோடுகிற, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கொந்தளிப்பாய்த் தெரிகிற நம் இந்திய, தமிழகச் சூழலில்-இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும், பொதுவான எவ்வித அடையாளம் பின்புலமும் அற்றவர்களாக, நுட்பமானவர்களாகச் சித்தரிப்பது ஆபத்து. இது பொய்யுரைப்பது.

ஏனெனில், எழுதும் எவனும் தன் வர்க்கம் சார்ந்தே இயங்க இயலும். எழுத்தின், மொழியின் நடையிலும், இலக்கியத்தனத்திலும் அந்தந்த வர்க்கச் சாயலே பெருமையுடன் பளிச்சிடும். 1968-டிசம்பர் 25ல் தஞ்சைமாவட்டம் கீழவெண்மணி பண்ணை ஆதிக்கப் பயங்கரவாதியாம் கோபால கிருஷ்ண நாயுடுவால் 44 உயிர்கள் எரித்துக் கொள்ளப்பட்டன. அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டுப் போராடிய அந்த உழைக்கும் மக்களை எரித்துக் கொன்ற பண்ணை ஆதிக்கப் பயங்கரத்தைப் பற்றி அன்றைய தமிழக ‘இலக்கிய நுட்பம் தெரிந்த இலக்கியவாதிகள்’ எவரும் ஒரு மயிரைக்கூட எழுத்தில் பிடுங்கிப்போடவில்லை.

லா.ச.ரா சௌந்தர்ய உபாசகராகவும், தி.ஜானகிராமன் மோகமுள்ளில் தைத்துக் கொண்டும் இருந்தார்கள், மற்றும் அசோகமித்திரன், ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி எல்லோரும் அவரவருடைய பூணூலைத் தடவிக்கொண்டிருந்தார்களே தவிர வேறு எதுவும் அவர்களுக்குள் நிகழவில்லை. மொத்தத்தில் தமிழகத்தின் அன்றைய ‘இலக்கிய’ நுட்பம் தெரிந்தவர்களுக்குப் பண்ணை ஆதிக்கப் பயங்கரவாதத்தினால் எரிக்கப்பட்ட உயிர்களின் வலி தெரியவில்லை. அதனினும் கொடுமை ‘குருதிப்புனல்’ என்ற நாவலை நடந்த கொடுமைக்கு எதிராக ‘இந்திரா பார்த்தசாரதி’ எழுதி அதற்கு ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது.

ஆனால், சோலை சுந்தரப் பெருமாள், என்ற ‘இலக்கிய நுட்பம் தெரியாத’ எழுத்தாளர் எழுதிய ‘செந்தெல்’ என்கிற நாவல் எரிக்கப்பட்ட மக்களின் வேதனையை அந்த மக்களின் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறது. விமர்சிக்கப்பட்ட மக்களின் வேதனையை அந்த மக்களின் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறது. (இவர் எழுதியிருப்பதில் ஒன்று கூட கவிதை இல்லை’ என்று ஜெயமோகனால் ‘இலக்கிய நுட்பத்துடன்’ விமர்சிக்கப்பட்டது) இன்குலாப்பின் பாடலும், கவிதையும் 44 உயிர்கள் எரிக்கப்பட்டதற்கெதிராகப் புலம்பி கோபத்தை காட்டுகிறது.

தாயின் கருணை என பொன்னி புனல் பாய்ந்தும்
தீயை அணைக்காத கொடுமை
தாயைக் குழந்தைகளைத் தீயின் கரங்களுக்குத்
தின்னக் கொடுத்து வைத்த கொடுமை

ஓயாக் கடலலை ஓய்வை விரும்பினும்
ஓயாதலைக்கழிக்கும் நினைவாய்
மாயாச் சினமிது மடியாத் துயரிது
வரலாறு காணாத கொடுமை

சமீபத்தில் 2007 டிசம்பர் 25 வெண்மணி நாளில் வெளிவந்திருக்கும் பாட்டாளியின் ‘கீழைத்தீ’ நாவலில் 44 உயிர்கள் எரித்துக் கொல்லப்பட்டதன் பின் எதிர்வினையாக நிகழ்த்தப்பட்ட கோபாலகிருஷ்ண நாயுடுவின் அழித்தொழிப்புவரை மிக விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த உழைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் இத்தகைய வாழ்வு நுட்பம் பதிவுகளைல்லாம் தான் இலக்கியத் தன்மை கொண்டவை. தஞ்சைப் பூணூல் பண்ணையார்களின் குடும்பக் கதைகள் ஒதுக்கப்பட வேண்டியவையே.

ஏனெனில் லா.ச.ரா., தி.ஜா, அசோகமித்திரன், ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களின் எழுத்துக்களில் ‘தஞ்சைப் பூணூல் பண்ணையாரின்’ வர்க்கப்பாசம் பொங்கி வழிகிறது. இன்குலாப், சோலை சுந்தரப் பெருமாள், பாட்டாளி போன்றோரின் எழுத்துக்களில் ‘இணக்கம் காண முடியாத வர்க்கப் பகைமை’ கோபாவேசமாய்க் கொந்தளிக்கிறது.

இலக்கியம் நமக்குள் ஆழமாக அந்தரங்கமாக உரையாடும் ஓர் அழகியல் செயல்பாடு என்பது பொய்ப்பூச்சு. அரசு, மதம், சாதி பொருளியல் காரணங்களால் நொய்மைப்பட்ட மக்களின் வாழ்வைப் பேசுவதும், அவர்தம் கோபத்தை நேர்த்தியாக வழி நடத்தி ஒரு அழகிய சமூக மாற்றத்திற்கு அவர்களைத் தயார் செய்வதும்தான் இலக்கியத்தின், இலக்கியவாதியின் சாpயான செயல்பாடு. இதை ஏற்றுக் கொள்ளும் தன்மையற்றவர்கள் சமூக மாற்றத்திற்குத் தடையாக இருப்பவர்கள்.

நன்றி: keetru.com/neythal/index.php

12 உரையாட வந்தவர்கள்:

  1. லக்கிலுக் said...

    அருமையான பதிவு. நீங்கள் எழுதி கீற்றில் வெளிவந்ததா? இல்லை வேறொருவர் எழுதியதா?


    //இலக்கியம் நமக்குள் ஆழமாக அந்தரங்கமாக உரையாடும் ஓர் அழகியல் செயல்பாடு என்பது பொய்ப்பூச்சு. //

    உண்மை. இலக்கியம் புரட்சிகளுக்கும் வித்திட்டிருக்கிறது.

    நல்ல பதிவுக்கு மீண்டும் மீண்டும் நன்றி!

  2. Raj Chandra said...

    மன்னிக்கவும்...புலியூர் முருகேசனின் கட்டுரையை மீள் பதிவு செய்திருப்பதை மறந்து நீங்கள் எழுதியதாகக் கேள்வி எழுப்பியுள்ளேன்...

  3. அசுரன் said...

    இந்த கட்டுரைக்கு நன்றி

    அசுரன்

  4. i criticize periyar said...

    நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் மிகப்பெரும்பாலோர்
    பார்பனர் அல்லர்.மூப்பனார்களும்,
    வாண்டையார்களும், கோபால கிருஷ்ண நாயுடுகளும் அங்கு அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த போது களத்தில் எதிர்த்தது கம்யுனிஸ்ட்கள்தான்.திகவோ
    திமுகவோ அல்ல. கூலி உயர்வு போராட்டத்தை அப்போதைய திமுக
    அரசு எப்படிக் கையாண்டது;போலிஸ்
    யாருக்கு ஆதரவாக இருந்தது? இவற்றுடன் பெரியார்
    விட்ட அறிக்கையைப் பற்றி விவாதிக்கலாமா. தி.ஜா,ஞானக்கூத்தன்,
    அசோகமித்திரன் எந்தப் பண்ணையாரை ஆதரித்து இந்த கொலை பற்றி எழுதினார்கள்.
    இ.பா ஒரு நாவல் எழுதினார்.இ.பா நிலபிரபுத்துவத்தை ஆதரித்தா எழுதினார்.தி.ஜா, ஞானக்கூத்தன்
    பண்ணையார்கள் அல்லர்.நகர்ப்புற
    நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்
    சுகுணா திவாகர் அறிக்கை
    விடாத/கண்டித்து எழுதாத கொலைகள்/அநியாயங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்.அந்த அடிப்படையில் அவரை விமர்சித்தால்
    தாங்குமா.
    இங்கு விமர்சிக்கப்பட வேண்டியவர்
    பெரியார்.அண்ணாத்துரையின் அரசும்
    கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியது. இதை மறைத்துவிட்டு
    எதையாவது உளறினால் சரியாகி
    விடாது.

  5. மிதக்கும்வெளி said...

    டோண்டு,

    இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் கோபாலகிருஷ்ணநாயுடுவிற்கு ஆண்மை இல்லாதததே கொலைகளுக்குக் காரணம் என்று பிரச்சினையின் தீவிரத்தை நீர்த்துப் போகவைத்துத் திசைதிருப்பியது. வெண்மணிக் கொடுமையைப் பெரியார் கண்டித்தார். ஆனால் அதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்த்ததே பெரியாரிடமிருந்த பிரச்சினை.

  6. மிதக்கும்வெளி said...

    லக்கி,

    கட்டுரையை எழுதியது புலியூர் முருகேசன்.

    சந்திரா,

    இ.பாவின் குருதிப்புனல் நேரடியாகப் பண்ணையார்களுக்கு வக்காலத்து வாங்கவில்லையென்றாலும் பிரச்சினையின் தீவிரத்தைக் கீழிறக்கியது.

  7. செங்குன்றன் said...

    // ஆனால் அதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்த்ததே பெரியாரிடமிருந்த பிரச்சினை//

    ஈவெரா வின் சுய சாதிப்பாசம் தான் பிரச்சினை.

    உத்தாபுரம் பிள்ளைமார் வெறியர்களை நிங்கள் கண்டுகொள்ளாத்ததைப் போலவே ஈவெரா வும் அப்போது இருந்தார்

  8. யாத்திரீகன் said...

    >>> நம் இந்திய, தமிழகச் சூழலில்-இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும், பொதுவான எவ்வித அடையாளம் பின்புலமும் அற்றவர்களாக சித்தரிப்பது.... இது பொய்யுரைப்பது. <<<

    Interesting perspective and its True ... can you also discuss about the at that time politicians & governments response to this issue ?

  9. மிதக்கும்வெளி said...

    தோழர் அதி அசுரன்,

    தமிழகத்தில் அதிகமும் அவதூறுக்கு உள்ளாக்கப்பட்டவரும் திரித்தலுக்கு உள்ளானவரும் யாரென்று கேட்டால் தயங்காமல் 'பெரியார்' எனலாம். இன்னமும் பெரியார் மற்றும் அவர் இயக்கம் குறித்த உண்மைச் செய்திகள் ஆவணப்படுத்தப்படாததே இதற்கு அடிப்படைக் காரணம். நாம் முன்பே பேசியபடி குறைந்தபட்சம் தஞ்சைப் பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கு எதிரான பெரியாரியக்கத்தவரின் செயல்பாடுகள் குறித்தாவது நாம் ஆவணப்படுத்தியே ஆகவேண்டும். மற்றபடி தொழிற்சங்கச் செயல்பாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர், குறிப்பாக பி.ராமமூர்த்தியின் துரோகம் குறித்தும் நான் ஓரளவு வாசித்துள்ளேன்.

  10. Narumukai said...

    "தங்கள் படைப்பை எங்கள் வலைச்சிற்றிதழில் வெளியிடுவதில் வாசகர்களாகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்!"

    மானமிகு நறுமுகய்,
    சுதந்திர எழுத்துக்களை கொண்டாடும் தமிழ்மானம்

    "It is not about Freedom of Expression but it is all about Expression of Freedom!"

  11. vinavu said...

    படித்து விட்டீர்களா?

    நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்!

    http://vinavu.wordpress.com

    -Vinavu

  12. கவிதா கெஜானனன் said...

    சுகுணா திவாகர், இப்போது தான் பார்த்தேன்.. என்னுடைய பார்வைகள் பக்கத்தை தங்களின் ப்ளாக்'ல் இணைத்துள்ளீர்கள்.. மிக்க நன்றி... :)))