பெண் பேச்சும் மௌனமும் - புறணியிலிருந்து நெடுந்தொடர் வரை
பெண் என்பவள் பேச்சாலும் மௌனத்தாலும் கட்டப்பட்டவள். மொழியின் வரையறுக்கப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் இயங்குபவையாகவே பெரும்பாலும் பெண்பேச்சு அமைகிறது. அதுமட்டுமன்றி மொழியின் அதிகார எல்லைகளும் பெண்பேச்சால் மறு உறுதிசெய்யப்படுவதோடு மறு உற்பத்தியும் செய்யப்படுகின்றன.
உலகின் எல்லா வகையான அதிகாரக் கதையாடல்களும் மொழியின் வழியாகவே கட்டமைக்கப்படுகின்றன என்பது நாமறிந்ததே. இந்த அதிகாரக் கட்டமைப்பின் அடிப்படை அலகாகிய மொழி, தாய் என்னும் பெண்ணின் வழியாகவே குழந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. தாய்மொழி என்னும் புனைவும் அரங்கேறுகிறது.
சொல்லமைப்பு, அதன்வழியாகத் தக்கவைக்கப்படும் அதிகாரம் மட்டுமல்லாது சமூகத்தின் வரையறுக்கப்பட்ட ஒழுங்குகள், ( உதா : சாப்பிட வலதுகையைத்தான் பயன்படுத்த வேண்டும், எந்தப் பொருளையும் வலதுகையால்தான் வாங்கவேண்டும் ....), அதிகார நிறுவனங்களின் அறிமுகம் (கடவுள், கோயில்,...) ஆகிய அனைத்தும் தாயின் வழியாகவே அறிமுகமாகின்றன. அறிந்தும் அறியாமலும் சமூகத்தின் அதிகாரக் கட்டமைப்பைக் கட்டமைப்பதில் தனக்கிருக்கும் வகிபாத்திரம் குறித்த பிரக்ஞை இல்லாமலே ஒரு பெண்ணாணவள் சுலபமாக உள்வாங்கப்படுகிறாள். இதில் முரண்நகை என்னவெனில் பெண்ணால் கட்டமைக்கப்பட்டு ஒழுங்கும் மறு உற்பத்தியும் செய்யப்படும் அதிகாரக் கட்டமைப்பு என்பது சாராம்சத்தில் அந்தப் பெண்ணுக்கே எதிரானது.
மேலும் பாலினம் (gender) என்பதும் தாய் வழியாகவே கட்டமைக்கப்படுகிறது. ஒரு ஆண்குழந்தையும் பெண்குழந்தையும் உடுத்துபவை, விளையாட வேண்டுபவை, படிக்க வேண்டியவை, புழங்க வேண்டிய சாமான்கள் என அனைத்தும் ஏற்கனவே சமூக அதிகாரத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு அது தாயால் மீண்டும் மீண்டும் மறு ஒழுங்கமைக்கப்படுகிறது. பாலினத்தின் தெளிவான வரையறைகளையும் வித்தியாசங்களையும் கட்டமைப்பதன்மூலம் நிலவும் சமூக இருப்பை மேலும் உறுதிசெய்கிறாள் பெண். ஒரு பெண்குழந்தையை வளர்க்கும்போது தன்னையொத்த மற்றொரு அடிமையை இந்தச் சமூகத்திற்கு உருவாக்கித்தருபவளாகவும், ஒரு ஆண்குழந்தையை வளர்த்தெடுக்கும்போது தன்னையொத்த அடிமைகளை நிர்வகிக்கிற, ஒடுக்குகிற, மேலாண்மை செய்கிற இன்னொரு ஆண் என்னும் ஆண்டானை உருவாக்கித் தருபவளாகவுமே 'தாய்' இருக்கிறாள். இத்தகைய பாலியல் ரீதியான வேறுபாடுகள் மட்டுமில்லாது சாதிய, வர்க்க, இன வேறுபாடுகளும் தொடக்கநிலையில் துல்லியமாக தாயாலேயே போதிக்கப்படுகிறது. உண்மையில் 'தாய்' வகிக்கும் பாத்திரம் இத்தகையதாகவே, இத்தன்மை வாய்ந்ததாகவே இருந்தபோதும் 'தாய்' புனித உருவாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் அதிகாரம் தனனைக் கட்டமைத்துக்கொள்கிறது.
மொழியின் 'மேலான' சொற்களும் 'தகாத' சொற்களும் அர்த்தம் மயங்கிய நிலையிலேயே ஒரு குழந்தைக்கு அறிமுகமாகிறது. மேலான சொற்களைக் கற்பித்த தாயைத் தாண்டிப் பொதுவெளியில் புழங்கும்போதே 'தகாத', 'கீழான' சொற்களைக் குழந்தை சமூகப்பொதுவெளியிலிருந்து கற்றுக்கொள்கிறது. என்றபோதும் இது ஆண்குழந்தைக்கு உற்சாகமளிக்குமளவிற்கு பெண்குழந்தைக்கு அளிப்பதில்லை. இத்தகைய 'தகாத' சொற்கள் பெண்ணின் மர்மப்பிரதேசங்கள் குறித்ததாகவோ அல்லது மறைக்கப்பட்ட, புலனாகாத பாலியல்வெளியைப் பற்றியதாகவோ உள்ளபோது ஆண்குழந்தை இதை ஒரு ரகசியப் பரவசத்தோடும் குறைந்தளவிலான அதிகாரத்தோடும் உள்வாங்கிக்கொள்கிறது. ஆனால் பெண்குழந்தை 'இது தனக்கு அனுமதிக்கப்பட்டதில்லை' என்னும் உணர்வோடும் ஏற்கனவே தருவிக்கப்பட்ட கருத்தியல் மதிப்பீடுகளின் அடிப்படையிலும் அதை விலக்கிவைக்கிறது. ஒருகுறிப்பிட்ட எல்லைவரை பெண்குழந்தை பெண்ணாக வளர்ந்து மனைவி, தங்கை, தாய் என்னும் பலப்பல பாத்திரங்களை வகிக்கிறபோதும் தகாத வார்த்தைகளை விலக்கிவைப்பதன் மூலம் தனது 'கட்டமைக்கப்படட் புனிதத்தை'க் காத்துக்கொள்கிறது.
இன்னமும் 'கெட்டவார்த்தைகளை' மேல் மற்றும் இடைநிலை சாதி - வர்க்கங்களைச் சேர்ந்த பெண்கள் அதிகம் பயன்படுத்தாதையும் அடிநிலைச் சாதி மற்றும் வர்க்கங்களைச் சேர்ந்த பெண்கள் மிகத்தாராளமாக இத்தகைய 'தகாத வார்த்தைகளை'ப் பயன்படுத்துவதையும் காணலாம். பாலுறவுச்செயற்பாடுகளின்போதுகூட ஆணள்விற்கு பாலியல் சொற்களைப் புழங்குவது பெண்ணுக்கு விலக்கப்பட்டதாகவே அமைகிறது. இவ்வாறாக பெண்பேச்சு மட்டுமல்லாது 'பெண்மௌனமும்' சமூகத்தால் தணிக்கையொழுங்கு செய்யப்படுகிறது.
என்றபோதும் தணிக்கை செய்யப்படும் அனைத்தும் மறைமுக மீறல்களைப் பற்றும் என்பது இயற்கைப் பொதுவிதியன்றோ? பெண் சமூகப் பொதுவெளியிலிருந்து தப்பித்து தனக்கான தனிவெளிகளையும் தன்னையொத்த பெண்களுக்கான சிற்சில தனிவெளிகளையும் உருவாக்கிக்கொள்ளவே செய்கிறாள். அதிலொன்றாக 'புறணி' எனப்படும் பெண்பேச்சு வடிவத்தைக் குறிப்பிடலாம்.
சுமாராக பத்தாண்டுகளுக்கு முன்புவரை கிராம மற்றும் அரைக்கிராமப் பிரதேசங்களில் மாலை மற்றும் முன்னிரவு வேளைகளில் திண்ணைகளிலிலும் தெருக்களிலும் பெண்கள் கூடித் தங்களுக்குள் உரையாடி மகிழ்வதுண்டு. இவ்வுரையாடல் பெரிதும் பிறர் சார்ந்தே - புறம் சார்ந்தே அமைவதென்பது இயல்பு. இவ்வுரையாடல்களில் பெண்களின் தனிவெளிகள் குறித்த பகிர்தல் தனியானதும் அலாதியானதுமாகும்.
தங்களுக்கிடையிலான பாலியல் பகிர்வுகள், மற்றும் அண்டை வீட்டு ஆண் - பெண்கள் குறித்த கிசுகிசுக்கள் போன்றவையாகவே அமையும். மேலும் இந்திய தமிழ்த்தொன்மங்கள் பெரிதும் பெண்களை மய்யப்படுத்தியதாகவே அமைவதால் இந்துப் பார்ப்பனீய நம்பிக்கைகளும், புராணக் கதைகளும், தாய்த்தெய்வ வழிபாடு சார்ந்த நம்பிக்கைகளும், அறிவியல் சாராத புழக்கடை நம்பிக்கைகள், கதைகள் என இவையே மிகுதியும் இடம்பெறுவதுண்டு.
மேலும் இப்பிரதியைப் படிப்பவர்கள் இருபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவராயிருப்பின் 'தூரமானது,' விலக்கானது', செவ்வாய்க்கிழமைக் கொழுக்கட்டை', காப்பர்டி' போன்ற பெண்புழங்கு சொற்களை அர்த்தம் மயங்கிநிலையில் முதன்முதலாக உள்வாங்கிக்கொண்டது இத்தகைய புறணி உரையாடல்களின் வழியாகத்தான் என்பதை நினைவுகூர்வது கடினமல்ல. பெண்கள் தங்களுக்கேயான அவஸ்தைகளையும் பரவசங்களையும் பகிர்ந்து கொள்கிற அந்தரங்க உரையாடல்வெளியாகவும் ஆண்களுக்கு அப்பாற்பட்ட, ஆண்களுக்குச் சுலபத்தில் பரிச்சயமாகாத வெளியாகவும் இப்புறணிகள் அமைந்தன.
ஆனாலும் இதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முந்தைய கதைதான். இப்போது நீங்கள் தெருக்களில் நுழைந்தால் புறணிகளைக் காணவோ கேட்கவோ இயலாது. தெருக்கள் நிசப்தத்தைப் போர்த்தியுள்ளன. நிலப்பிரபுத்துவ வடிவந்தானெனினும் - திண்ணைகள் இல்லை. இப்போது மாலைநேரங்களில் தெருக்களில் கேட்க நேர்வதெல்லாம் சத்தமான, ஒரேமாதிரியான அல்லது வெவ்வேறு அலைவரிசைகளிலிருந்து விளம்பர இடைவேளைகளின் ஒலிகள் மற்றும் மெகாசீரியல்கள் எனப்படும் நெடுந்தொடர்களின் சவால்கள் அல்லது விசும்பல்கள்.
இப்போது புறணி என்கிற வடிவம் நெடுந்தொடர்களுக்கு மாறியிருப்பதை அவதானிக்க் சமூக ஆய்வாளர்கள் முயன்றால் பெண்களின் பொதுப்புத்தி கட்டமைக்கப்படும் விதம் குறித்தும் அதில் இத்தொடர்கள் ஆற்றும் பங்கு குறித்தும் சமூக உளவியல் குறித்தும் சில முடிவுகளுக்கு வரலாம்.
முதலாவதாக இத்தொடர்களில் கதாநாயகன் என்கிற பிம்பம் கீழிறக்கப்பட்டு கதாநாயகி, கதாநாயகிக்கு இணையாண முக்கியத்துவம் வாய்ந்த பிற பெண்பாத்திரங்களுக்குத் துணை நிற்பதாகவே அமைகின்றன. திரைக்கு அப்பாலும்கூட ஆண்நடிகர்களை விடவும் பெண்நடிகர்களே அதிகம் வருமானம் ஈட்டுகின்றனர் என்பது கசியும் செய்திகள். (பெரியதிரையில் இதை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. அல்லது அதிக சம்பளம் வாங்குவதற்குப் பெண் தன்னை ஒரு பாலியல் பண்டமாக (திரையிலும் வெளியிலும்) மாற்றிக்கொள்ளவேண்டும்).
தொடர்களின் தலைப்புகளும் பெண்மய்யப்பயர்களே. அரசி, செல்வி போன்ற பெண் பெயர்களாகவோ, மஞ்சள் மகிமை, கோலங்கள் போன்ற பெண்புழக்கப்பெயர்களாகவோ அமைவதைக் கிரகிக்கலாம். (ஆனால் தமிழ்ச்சினிமாவிலோ எம்.ஜி.ஆர் தொடங்கி விஜய் வரையிலான முன்ன்ணி நாயகர்களின் பெயர்களில் கொஞ்சம் கொஞ்சமாக பெண் பெயர்கள் தவிர்க்கப்பட்டு முற்ற முழுக்க ஆண்/ஆண்மய்யப் பெயர்களாகவே அமைவதைக் காணலாம். இப்போது தெய்வத்தாய், தாய் மீது ஆணை போன்ற பெயர்கள் மதுர, குசேலன் என்ற பெயர்களால் பதிலீடு செய்யப்படுகின்றன. ஆனால் இதில் ஆச்சரியமான விசயம் வெளிப்படையாகவே ஆண்மய்யக் கருத்துக்களைப் பிரச்சரம் செய்யும் ரஜினிக்கு நீண்டகாலத்திற்குப் பிறகு - அதுவும் ஒரு படுதோல்விக்குப் பிறகு 'சந்திரமுகி' அமைந்தது.)
கதைக்கருவும் பெண்ணின் சவாலாகவோ, விசும்பலாகவோ, சூழ்ச்சியாகவோ, அதீத வெற்றியாகவோ இப்படியாகவே - அதுவும் வரையறுக்கப்பட்ட ஆண்மய்ய மதிப்பீட்டெல்லைக்குள்தான் என்றாலும் - அமைவதைக் காணலாம். இன்னமும் குறிப்பாய் நாம் கவனங்குவிக்க வேண்டியது பாலியல் பிறழ்வுகள் குறித்தே அதிகமும் நெடுந்தொடர்கள் அமைவதும் அது பெண்களின் கவனத்தை ஈர்ப்பதும்.
கலாச்சாரத் தூய்மை, கற்புப்பெருமிதம் போன்ற போலிப் பண்பாட்டு விழுமியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அணுக வேண்டிய அம்சம் இது. மேலும் தொலைக்காட்சித் தொடர்களைத் தொடர்ச்சியாகப் பார்ப்பதற்கான, ஆராய்வதற்கான மனநிலை கொண்ட வேறுயாரேனும் இன்னும் விரிவாக எழுதினால் இன்னமும் விடுபட்ட பல புள்ளிகள் குறித்து நாம் உரையாட ஏதுவாயிருக்கும்.
இக்கட்டுரையோடு தோழர்.ஓவியா 'கருவறைக்குள் மாதவிலக்கானாலும் வழிபாட்டிற்கு அனுமதிக்கிற ஆதிபராசக்தி வழிபாடு நோக்கிப் பெண்கள் குவிவது' குறித்து சொன்ன கருத்துக்களையும் சேர்த்து வாசிக்கலாம். (அனேகமாக காலச்சுவடு நேர்காணல் என்று கருதுகிறேன்.)
\\இப்போது புறணி என்கிற வடிவம் நெடுந்தொடர்களுக்கு மாறியிருப்பதை அவதானிக்க் சமூக ஆய்வாளர்கள் முயன்றால் பெண்களின் பொதுப்புத்தி கட்டமைக்கப்படும் விதம் குறித்தும் அதில் இத்தொடர்கள் ஆற்றும் பங்கு குறித்தும் சமூக உளவியல் குறித்தும் சில முடிவுகளுக்கு வரலாம்\\
ஆராய வேண்டுய விஷயம்.
\\நிலப்பிரபுத்துவ வடிவந்தானெனினும் - திண்ணைகள் இல்லை\\
திண்ணை பற்றி தற்போது பல பதிவுகள் இப்போது எழுதப்படுகின்றன. இது மற்றொரு கோணம்