(04.11.06)மாலை சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் 'மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்'தின் சார்பில் அப்சலுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தை ஒருங்கிணைத்தவர் மார்க்சியம், இருத்தலியம், அம்பேத்கரியம் ஆகியவை குறித்து தமிழில் தொடர்ந்து எழுதி வருபவரும் 'பெரியார்-ஆகஸ்ட்15', 'பெரியார் சுயமரியாதை சமதர்மம்' ஆகிய முக்கிய ஆவண நூல்களை எழுதியவருமான தோழர் எஸ்.வீ.ராசதுரை.
இக்கூட்டத்தில் எஸ்.வீ.ஆரோடு பல நூல்களை எழுதியவரும் பெண்ணியம், காந்தியம் ஆகியவற்றில் புதிய உரையாடல்களைத் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவருமான தோழர்.வ.கீதா, மரணதண்டணை ஒழிப்பை தொடர்ந்து வலியுறுத்திவரும் முன்னாள் நீதிபதி சுரேஷ், தமிழக முதல்வர் கலைஞரின் மகள் கவிஞர்.கனிமொழி, நக்சல்பாரி இயக்கத்தில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மரணதண்டனைக் கைதியும் இப்போதைய தமிழ்-தமிழர் இயக்கத்தின் தலைவருமான தோழர்.தியாகு, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப்நய்யார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மரணதண்டணையை ஒழிக்கக்கோரியும் அப்சாலுக்கு பொதுமன்னிப்பு வழங்க்கக்கோரியும் இவர்கள் ஆற்றிய உரைகளின் சில துளிகள்:
கூட்டத்தை ஒருங்கிணைத்த தோழர் எஸ்.வி.ஆர் , மரணதண்டனைக்கு எதிரான போராட்டத்தின் நீண்ட வரலாற்றைக் கூறி, அப்சாலுக்கு கருணை காட்ட வேண்டுமென்று பகத்சிங்கின் பேரன் குடியரசுத்தலைவருக்குக் கடிதம் எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், "ராஜேந்திரசிங்கின்(சமீபத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்) மீதான மரணதண்டனை தீர்ப்பினையும் எதிர்ப்பீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். குஜராத் இனப்படுகொலைகள் மற்றும் மும்பைக் கலவரம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு பால்தாக்கரேக்கும் மோடிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டால் அதையும் எதிர்ப்போம்" என்றார் உறுதியாக.
எழுத்தாளர் வ.கீதா இது வெறுமனே மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமில்லை, முஸ்லீம்கள் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியே என்றார்.
நீதியரசர் சுரேஷ், உலக அளவில் மரணதண்டனை குறித்த சட்டங்கள் குறித்தும் அதற்கு எதிரான இயக்கங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
கவிஞர்.கனிமொழி " பெரும்பாலும் பெண், சொத்து ஆகியவைகளை மய்யமாகக் கொண்டே கொலைகள் நடக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை திட்டமிடாமல் உணர்ச்சி வேகத்தில் நடப்பவை. ஆனால் அரசோ திட்டுமிட்டு மரணதண்டனை என்னும் பெயரில் ஒரு கொலையை அரங்கேற்றுவதை எப்படி அனுமதிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். 'தனஞ்செயனின் கடைசி நிமிடங்கள்' என்னும் நூலிலிருந்து சில வரிகளை வாசித்துக் காட்டினார். "கற்பிக்கப்பட்ட போலித்தேசியத்தின் பெயரால் முஸ்லீம்கள் பழிவாங்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்த கனிமொழி, "நம்முடைய பண்டைய இலக்கியங்களை எடுத்துக்கொண்டோமென்றால், சிலப்பதிகாரம் குறித்தும் கண்ணகி குறித்தும் நமக்குப் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் கண்ணகி தவறாக தண்டனை அளிக்கப்பட்ட கோவலனுக்காகவே மதுரையை எரிக்கிறாள். இப்போது நாமும் அப்சாலுக்குத் தூக்கு வழங்கப்படும்போது மவுனம் சாதித்தோமென்றால் நம்மையும் யார் எரித்தாலும் தவறில்லை" என்றார் ஆவேசமாக.
பிரபல பத்திரிகையாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குல்தீப்நய்யார், "பாராளுமன்றம் தாக்கப்பட்டபோது நானும் அந்த கட்டிடத்தின் உள்ளேதான் இருந்தேன். அப்போதே பல எம்.பி.க்கள் ஆவேசப்பட்டார்கள். ஆனால் அப்போதும் நான் தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் எல்லையில் 10லட்சம் மக்கள் கொல்லப்பட்டதைக் கண்கூடாகப்பார்த்தவன் நான். மரனத்தின் வலி எனக்குத் தெரியும். ஆனால் பத்திரிகைகள் மக்கள் மத்தியில் நஞ்சையே விதைத்து வருகின்றன. நீதிமன்றத்தில் விசாரணை நடப்பதற்கு முன்பே பத்திரிகைகளில் விசாரணை நடத்தி தீர்ப்பும் வழங்கிவிடுகிறார்கள்" என்றார்.
பெரியார் திராவிடர்கழகத்தலைவர் கொளத்தூர்மணி, "நீதிபதிகளோ நீதித்துறையோ பாரபட்சமற்றவையல்ல. ஜெயேந்திரன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பிணை வழங்கப்பட்டது. ஆனால் மதானிக்கோ குற்றபப்த்திரிகை தாக்கல் செய்யப்பட்டபின்பும் பிணை வழங்கப்படவிலலை" என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசியவர் "அமெரிக்காவில் செப்டம்பர்11 தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட ஜகாதியாமுகையா என்பவருக்கே ஆயுள்தண்டனைதான் வழங்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதக் கதையாடலக்ளை அவிழ்த்துவிட்ட அமெரிக்காவிலேயே அந்த நிலை. ஆனால் இந்தியாவில் மட்டும் அப்சாலுக்கு மரணதண்டனை வழங்கப்படுவது என்ன நியாயம்? " என்று கேள்வியெழுப்பினார்.
கூட்டத்தில் அப்சாலுக்கு பொதுமன்னிப்பு வழக்கக்கோரிய மனுவில் கையெழுத்துகளும் வாங்கப்பட்டன.