சொற்கள் நிரம்பிய தனிமையும் தனிமை நிரம்பிய சொற்களும்



ஈழத்தின் போர்ச்சூழல் வாழுமிடத்திடத்தினின்று துரத்தியடிக்க, ஒரு பனிபடர்ந்த பிரதேசத்தில் அடைக்கலமாகிப் பின் அங்கிருந்தும் புலம்பெயர்ந்து மொழி வழியாய்ப் பல்லாயிரம் ஆண்டுகளாய்த்த் தொடர்புடையதாய்ச் சொல்லப்படும் 'தாய்'த்தமிழகத்தின் தலைநகரத்தில் வாழநேர்ந்ததன் மனப்பதிவுகளாய் வெளியாகியுள்ளது கவிஞர் தமிழ்நதியின் முதல் கவிதைத்தொகுதியான 'சூரியன் தனித்தலையும் பகல்'. ஈழம், கனடா, தமிழகம் என வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழ்தலும் வாழ்தலின் நிமித்தமுமான புதிய, பழைய உறவுகள், புறக்கணிப்பு, முகம் முன் நீளும் கேள்விகள், அலைக்கழிப்பு, அங்கீகாரம், வெறுமை, தனிமை, கவிதை, ஆயாசம், இளைப்பாறுதல், கண்ணீர், புன்னகை, பிரிவு என அனைத்தும் பிழிந்த சாற்றின் உப்புச்சுவையும் இனிப்புருசியுமென ஒரு எழுத்துப்பலகாரமாய் மாறியிருக்கிறது இத்தொகுப்பு.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை ஒரு வசதிக்காய்ப் போர் பற்றிப் பாடுபவை, இருப்பற்று அலையும் துயர் குறித்துப் பேசுபவை, மீறலின் வேட்கை குறித்து மயக்கத்துடன் கதைப்பவை எனப் பிரித்துக்கொள்ளலாம். ஆனாலும் இத்தகைய சட்டகங்களையும் தாண்டி சட்டகத்தின் வெளிபிதுங்கும் சதைக்கோளங்களும் இல்லாமலில்லை.

மணிக்கட்டோடு துண்டிக்கப்பட்ட கையை நாய் இழுத்துச்செல்லுமோ என்றஞ்சி, தானே புதைக்கும் அவலம், சக்கரநாற்காலிகளில் வாழ்வினிருப்பு குறுக்கப்படுவதன் துயரம், உடல்கள், உடல்கள், மேலும் உடல்கள், உடல்களா பிணங்களா எனப்பெயர் சூட்ட இயலாது மயங்கிக்கலங்கும் சூன்யக்கணம் என விரியும் போர்க்காட்சிகள் வாசிப்போரின் முகத்திலறைய வல்லவை. பாரதி சொன்னதைப்போல, 'ஈரத்திலேயே பிறந்து ஈரத்திலேயே வாழ்ந்து, ஈரத்திலேயே இருக்கப்பழகிவிட்ட ஈரத்தமிழர்களுக்கு' ஈழத்தமிழர்களின் அவலங்களைச் சொல்லத்தவறவில்லை கவிதைகள்.

அரைநூற்றாண்டாய் எவ்வித அரசியல் போராட்டங்களுமற்று வெற்று மிதப்பில் அலையும் தமிழ்மனங்களின் மனச்சாட்சியின், அப்படியென ஏதேனுமிருப்பின் , அதன் நெஞ்சாங்குலை மீது ஏறிமிதிக்க,

" எந்ததேவதைகளைக் கொன்றழித்தோம்
எல்லாத்திசைகளிலும் இருளின் ஆழத்தில்
'அம்மா' என விசும்பும் குரல்கேட்க'

என்னும் வரிகளே போதுமானவை.

"சூன்யம் நிழலெனப்படந்து வருமித்தெருக்கள்
இருந்தாற்போல விழிக்கலாம்
மிதிவெடியாய்,
நிலக்கண்ணியாய்' என்னும் வரிகளில் படிமம் விரிகிறது.

இவ்வரிகள் ஏதும் நிகழலாம் என்னும் சாத்தியத்தையும் சாத்தியமின்மையையும் ஒருசேரச் சமன்படுத்தும் வரிகளாய் மட்டுமல்லாது இருப்பு அழிபடுவதை எக்கணமும் எதிர்நோக்குவதே வழமையாய்ப் போன வாழ்வுகுறித்தும் பேசுவதாய் விரிகின்றன. மேலும் இன்னொரு கவிதையின் இன்னொரு வரி 'ஏவுகணைகள் கூவிக்கொண்டிருக்கலாம்' என்கின்றது. கண்ணிவெடி, ஏவுகணைகள் போன்ற போர்க்கருவிகளோடு இணைத்துப்பேசப்பயன்படும் 'விழிக்கலாம்', 'கூவிக்கொண்டிருக்கலாம்' என்னும் சொற்களின் பயன்பாடு குறித்து யோசிக்கையில் துயரங்களின் இருப்பில் அழிவுகளினூடாகவே ஒரு எதிர்நிலையில் அழகியல் பிறக்கிறதோ எனத் தோன்றுகிறது.

இருப்பற்று அலையும் துயர்களில் சாட்சியமாகும் போர்க்காட்சிகள், மனிதத்தலைகளை உரலிலிட்டு பற்களால் இடிக்கும் கலிங்கத்துப்பரணியின் மரபை வரித்துக்கொண்ட தமிழ்மரபை யோசிக்கச் செய்பவை. வெற்றி, தோல்வி என்னும் இருமைகளின் அடிப்படைகள் என்பவை அடிப்படையில் ஏதேனுமொரு மரணம் மட்டும்தான் என்னும் உண்மையைப் பரீசீலிக்கத் தூண்டுபவை.

"பாதி எரிந்துபோன மிகச்சிறிய சட்டையை
நடுங்கும்விரல்களால் பற்றுகிறேன்
ஐயோ என் சிறுமொட்டே' என பதறித்துடிக்கும் மனம் வெறுமனே சிறுமொட்டிற்கானதுமட்டாயில்லை. தன் காலுரசும் பட்டுப்பூனைக்குட்டிகள். வால்சுருட்டிப் படுத்திருக்கும் பொன்னி என்னும் நாய்க்குட்டி ஆகியவை குறித்தும் கவலைப்படவும் அவற்றின் இருப்பு என்னாயிற்று என அலைவுறவும் தயங்கவில்லை.

இன்னும் விரிந்த ஒரு பயணத்தில் இந்தவுலகம் வெறுமனே வெறும் மனிதர்களுக்கானதுதானா, போர்களைக் கைக்கொண்ட மனிதர்களின் போர்களால் அழிபடுபவை வெறும் மனித உடல்கள் மட்டும்தானா என்று யோசிப்பு நீள்கிறது. ஒரு குண்டுவெடிப்பில் சிதறிக் குடல்கிழிந்து சாகும் நாய்க்காகவும் கவலையுறும் மனம் இருக்கும்வரை மட்டும்தான் கவிதை எழுதுதல் சாத்தியமாகிறது.

"எனக்கு உன்னைத் தெரியாது
நீ நித்திலா, யாழினி, வாசுகி"

இத்தகைய குரல்கள் இரு எதிரெதிர்த்தளங்களினின்றும் வெளிவருவதற்கான சாத்தியங்களைக் கொண்டவை. அதிகார வெறியும் மூலதனப்பசியும் கொண்டலையும் ஆதிக்கக்கருத்தியலுக்கும் பெயர்களும் அடையாளங்களும் தேவையில்லை. எண்கள், பினங்களின் எண்னிக்கைகள், அல்லது அடிமைகளாய் வாழச் சம்மதித்தோர் குறித்த கணக்கீடுகள் மட்டுமே போதுமானவை என்னும்போது பெயரும் அடையாளமும் எவ்வகையிலும் அவசியமற்றதாய் மாறிப் பயனொழிகிறது.

அதேநேரத்தில் அதிகாரத்திற்கெதிராய்க் கிளம்பும் எதிர்க்குரல்களும் பெயர்களையும் அடையாளங்களையும் புறந்தள்ளி ஒன்றிணைப்பைக் கோருகின்றன. ஆனால் இவை வெறுமனே விசித்திர முரண் என எண்ணாது முன்னதின் குரல் அடையாளத்தகர்ப்பை நிகழ்த்துவதையும் பின்னதன் குரல் அடையாளங்களைத் தாண்டி வித்தியாசங்களூடே ஒன்றிணைப்பைக் கோருவதற்கு அன்பையும் பாதிப்பையுமே முன்நிபந்தனையாய் நிறுத்துவதன் இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள ஏலும். இத்தகைய புரிதல்கள் சாத்தியப்படுகிறபோது இந்தப் பட்டியலில் நித்திலா, யாழினி, வாசுகி மட்டுமில்லாது, பாலஸ்தீன, மியான்மர், உகாண்டா, சோமாலியா, குஜராத், சட்டீஸ்கர் என விரியும் ஒடுக்கப்பட்ட மனிதத்தன்னிலைகளையும் சேர்த்து விரிவடையலாம்.

எல்லா யுத்தங்களிலும் அதிகாரக்கொடி நாட்டப்படுகிற நிலங்களாய்ப் பெண்ணுடல்கள் மாற்றப்படுவதையும் மாற்று இனப்பெண்களின் உடலைச் சிதைப்பதை தனது ஆணடையாளத்திற்கும் இனப்பெருமிதத்திற்கும் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடப்படுவதையும் 'ஆண்மை', 'விசாரணைச்சாவடி' என்னுமிவ்விரு கவிதைகள் பதிவுசெய்கின்றன.

போர்துரத்தச் சரணடையும் நிலப்பரப்புகளில் காட்டப்படும் பாரபட்சத்தையும் மொழியால் ஒன்று என்னும் பெருங்கதையாடல்களினடியிலும் ஒதுக்கலின் துகள் படிந்துகிடப்பதையும் உணர்த்துவதற்கு,

"காய்கறிவிற்பவன் கண்களைச் சுருக்கி
நான்காவதுதடவையாகக் கேட்கிறான்
கேரளாவா " என்னும் வரிகளே போதுமானவை.

இந்ததொகுப்பின் ஆகச்சிறந்த கவிதைகளிலொன்றான 'பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது' இப்படி முடிகிறது..

"எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்
இலங்கையில்தான் போர்நடப்பதாக"

போர்நடக்கும் பூமியையும் தாண்டித் தனது கொலைக்கரங்களை விரித்துவைத்திருக்கும் போரின் பெருங்கருணையை என்னென்பது!

அதேபோல் இன்னொரு சிறந்த கவிதையான 'அற்றைத்திங்கள்' தனது வரலாற்றுக் கண்ணியை எதிர்மரபிலிருந்து தேர்ந்துகொள்கிறதெனலாம். போரும் புலம்பெயர்தலும் நேற்றுமுதல்நாளோ அதற்கு முதல்நாளோ தோன்றியதில்லை. அரசு என்னும் ஆளும்வர்க்கக்கருவி உருவானபோதே இவையிரண்டும் தொடங்கிவிட்டன. புலம்பெயர்தலின் துன்பம் பூமியில் வாழும் எல்லாம் மானுட இனக்குழுக்களுக்கும் சொந்தமானவையே. அவை எப்போதாவது வரலாற்றின் எந்தக் காலகட்டங்களிலாவது இதை அனுபவித்திருக்கிறது, என்றபோதும் அதை எழுத்தில் முதன்முதலில் பதிவுசெய்த பெருமை தமிழுக்கே உரியது. அன்றைய ஏகாதிபத்திய அரசுகளான மூவேந்தர் படைகள் பாரியைக் கொன்று, பறம்புமலையை கைப்பற்றி, பாரிமகளிரைத் தனிமைப்படுத்தியபோது, அவ்விரு மனங்களின் அழுகுரலே 'அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்' எனப் போர்வெறியைப் பதிவுசெய்தன. பறம்புமலையில் உடைந்துசிதறிய பாரிமகளிரின் கண்ணீர்த்துளிகள் நூற்றாண்டுகளைக் கடந்துவந்து தமிழ்நதியின் கவிதைகளையும் ஈரப்படுத்துகின்றன இப்படியாக,

"அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
இப்படியா கசிந்தழுதீர் தோழியரே"

புகலிடவாழ்வு குறித்த தமிழ்நதியின் கவிதைகள் குறித்துப் பேசும்போது ஒரு முக்கியமான அம்சத்தையும் கவனிக்கவேண்டும். 'கலாச்சாரம் போச்சு, மதம் போச்சு, பண்பாடு போச்சு, கோவில்போச்சு' என்னும் போச்சுப்புலம்பல்களாயில்லாது புகலிடவாழ்வில் ஏற்படும் அடையாளச்சிக்கல்களையும் தனிமைத்துயரங்களையும் மட்டுமே பேசுவது ஒரு ஆறுதல். 'எப்படியும் நாடுதிரும்புவோம்' என்பது வெறுமனே விருப்புசார்ந்த விஷயம் என்பதிலிருந்து சபதங்களாய், ஆவேசங்களாய்ச் சவால்களாய் மாறுவதன் அபத்தத்தை 'ஊருக்குத்திரும்புதல்' என்னும் கவிதை பகிடிசெய்கிறது.

"நதியின்மேற்பரப்பில்
தாகித்தமான்களைப்
புலிகள் பசியாறிய
குருதிகலந்து கூடவே ஓடிவரும்" என்னும் அதிர்வுவரிகளைத் தாங்கிய 'நதியின் ஆழத்தில்' என்னும் கவிதை,

" எத்தனைபேர் உமிழ்ந்த எச்சில் / எத்தனைபேர் எறிந்த கற்கள்/ சிறுநீர் மலம் விந்து'.... எனத் தொடர்வதன்மூலம் பட்டினத்தாரின் 'எத்தனைபேர் தொட்டமுலை, எத்தனைபேர் நட்ட குழி எத்தனைபேர் பற்றியிழுத்த இதழ்' என்னும் மொழிகளைத் தலைகீழாய்ப் பிரதியிடுகிறது.

பட்டினத்தாரின் குரல் ஆண்மய்யக்குரலாவும் உடலொடுக்கம் சார்ந்ததாவுமிருக்க, கவிஞரின் குரலோ உடலைகொண்டாடுவதாய் ஆண்மய்யச்சமூகம் உருவாக்கிவைத்த அத்துக்களை மீறும் எத்தனங்களையும் விருப்பையும் கொண்டதாயுள்ளது. ஒருநாளும் இரண்டு அறைகளும், வண்ணங்களாலான நீர்க்குமிழி, துரோகத்தின் கொலைவாள் எனப் பலகவிதைக்ளைச் சுட்டலாமெனினும் 'காதல் காலிடுக்கில் வழிகிறது அன்பே' என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பினது மட்டுமில்லாது தமிழில் பதிவுசெய்யப்பட்ட வரிகளில் சிறந்த வரிகளிலொன்றாகத் திகழும் வரியைச் சுட்டினாலே போதும். 'கலவி முடிந்தபெண்னின் கண்களென கிறங்கிக்கிடக்கிறது மழைதோய்ந்த இக்காலை' என விரவிப்பரவுகிறது வேட்கையின் மொழி.

வித்தைக்காரன் என்னும் கவிதை, புரிதலின் பின்னுள்ள பிரச்சினை, கோபத்தின் ஊற்றுக்கால், தான் மற்றும் மற்றமைக்கான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுதல், பித்தநிலையின் ஒருமை மற்றும் மற்றமையோடு ஒன்றுபடல் எனப் பல்வேறு பாதைகளில் பயணித்து நம்மை மயக்குகிறது.

தமிழின் மிகமுக்கியமான தொகுப்பு, முதல்தொகுப்பிலேயே கவித்துவத்தின் உச்சபட்ச சாத்தியங்களைப் பரிசோதித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுசொல்லும் அதேவேளையில் பிதாமகனின் வருகை, கலகக்காரன், தண்டோராக்காரன், எழுது இதற்கொருபிரதி போன்ற கவிதைகள் வாசிப்பின் சுகானுபவத்தைத் தடைசெய்து ஏமாற்றமளிக்கின்றன என்பதையும் பதிவுசெய்யவேண்டியிருக்கிறது, உணர்வுகள் கவிதையாய்ப் பரிணாமம் அடையாது வெறுமனே வரிகளாய் நின்றுவிடும்போது அதை எதிர்கொள்வதில் வாசகனுக்கு எந்தப் பயனுமில்லை. சில கேள்விகளை முன்வைத்து பலவிசாரணைகளை நிகழ்த்துவது படைப்பின் சாத்தியம்தானெனினும் பல்வேறு தளங்களில் கேள்விகளை முன்வைத்துப் பரீசீலிக்காதபோது கவிதை வெறுமனே பொலிட்டிகல் ஸ்டேண்ட்மெண்டாகவே முடிந்துவிடும் என்பதற்கு உதாரணம் 'யசோதரா'.

தமிழ்நதியின் இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது மண்டோவும் ஷோபாசக்தியும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. வாதை, பிரிவு, அலைக்கழிப்பு, அடையாளச்சிக்கல், இருப்பின் சாத்தியம் குறித்த நிச்சயமின்மை என எல்லாம் தொடர்ந்தபோதும் தனது அவலங்களுக்குக் காரணமான அல்லது காரணமெனத் தான் நம்புகிற அதிகாரங்களையும் நிறுவனங்களையும் 'கலாய்க்கிற' மனோபாவம் கொண்டாட்டப்பெருவெள்ளமாய்ப் பெருக்கடுப்பது மண்டோவுக்கும் ஷோபாவுக்கும் சாத்தியமானது. ஆனால் 'இன்றொருநாள் எனினும்' என்னுமொரு கவிதையும் ஆங்காங்கே சில சிதறல்களும் தவிர அத்தகைய வாசிப்பனுவத்தை நிகழ்த்துவதற்குத் தமிழ்நதி அனுமதிக்கவில்லை.

எல்லோருக்குமிருப்பதைப் போல எனக்கு இந்தக் கவிதைத்தொகுப்பில் மிகமிகவும் பிடித்த கவிதை 'இன்றொருநாள் எனினும்'.

வாழ்வு, அரசியல், போராட்டம், மரணம், கலவி, காதல் என அனைத்தும் கணக்குகளாகவும் சூத்திரங்களாகவும் மாற்றப்படும் கணங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் ஒரு கறாரான கணக்காளனாயிருந்து இத்தொகுப்பை அளந்துபார்த்தால் இத்தொகுப்பில் அதிகம் புழங்கப்பட்டிருக்கும் சொற்களிரண்டு. 'சொற்கள்' மற்றும் 'தனிமை'யே அவை.

'நேற்றிரவையும் குண்டுதின்றது' எனத்துவங்கும் தொகுப்பு, 'என்னதான் இருக்கிறது தான் கவிதையென நம்பும் ஒன்றைத்தவிர' என்றவாறு முடிகிறது.

சொற்களைத் தனிமையாலும் தனிமையைச் சொற்களாலும் இட்டு நிரப்பமுயலும் எத்தனங்களினூடே வென்றும் தோற்றும் விளையாட்டை நிகழ்த்தியவாறே பட்டப்பகலில் தனித்தலைகிறது சூரியன்.


சூரியன் தனித்தலையும் பகல் - கவிஞர் தமிழ்நதி
வெளியீடு : பனிக்குடம் பதிப்பகம்
பக்கங்கள் : 64
விலை : ரூ 40/-

2 உரையாட வந்தவர்கள்:

  1. ரவி said...

    ஆன்லைனில் பெறும் வசதியுண்டா ? வாசிக்கத்துடிக்கிறேன்...

  2. மிதக்கும்வெளி said...

    ரவி, இல்லையென்று நினைக்கிறேன். எதற்கும் தமிழ்நதியைத் தொடர்புகொள்ளவும்.