இதுதாண்டா சீமான்! - பல்லிளிக்கும் தமிழ்த்தேசியம்




















குத்தறிவு, இனவுரிமை, ஈழ ஆதரவு என்று கலந்துகட்டி மேடைகளில் பட்டையைக் கிளப்புபவர் இயக்குனர் சீமான். தமிழ்நாட்டில் சேகுவாரா டி ஷர்ட் விற்பனை அதிகரிப்பதற்கான காரணகர்த்தா. பெரியாரும் பிரபாகரனும்தான் சீமானின் இரு கண்கள். பிரபாகரன் எப்படியோ போகட்டும், ஆனால் பெரியார் பெயரைச் சொல்லி இதுவரை அசிங்கப்படுத்தி வந்த சீமானின் முகமூடி இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் கிழிந்து வருகிறது. தம்பி படத்தில் கதாநாயகனின் வீட்டில் பசும்பொன் முத்துராமலிங்கம் என்னும் சாதிவெறியனின் புகைப்படத்தை பெரியாரோடு மாட்டி பெரியாரை அசிங்கப்படுத்தியது, காங்கிரசை ஆதரித்து கடந்த பாராளுமன்றத்தேர்தலில் பரப்புரை செய்தபோது, ‘‘ஈனசாதிப் பயலா இருந்தா காங்கிரசுக்கு ஓட்டுப்போடு’’ என்று பரப்புரை செய்து தனது ஆதிக்கச்சாதித் திமிரை நிரூபித்தவர்தான் இயக்குனர் சீமான். சமீபத்தில் ‘புதியதலைமுறை’ இதழில் கல்லூரி மாணவிகள் சீமானுடன் கலந்துரையாடும் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

அந்த உரையாடலில் ‘‘தமிழியம் பற்றிப் பேசும் நீங்கள் ஏன் தலித்தியம் பேசுவதில்லை?’’ என்று ஒரு கேள்வி. ‘‘எங்களை ஏன் மீண்டும் சேரிக்குள் தள்ளுகிறீர்கள்?’’ என்று போலி ஆவேசம் காட்டியிருந்தார் சீமான். நேற்று (30.10.09) பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளை முன்னிட்டு மய்யநீரோட்ட இடதுசாரிகள் உள்பட ஓட்டுக்கட்சிகள் அவர் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்து தங்கள் ஆதிக்கசாதி விசுவாசத்தை வெளிப்படுத்தின. அதில் இந்த வருடம் மரியாதையின் புதுவரவு ‘தமிழ்த்தேசியத் தம்பி’, ‘பெரியாரின் பேரன்’ சீமான். நேற்று இரவு மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் பலரும் முத்துராமலிங்க சிலைக்கு மரியாதை செய்த காட்சி ஒளிபரப்பப்பட்டது. மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க சிலையில் மேலிருந்து மாலை போட்டபடி சிரிக்கிறார் பெரியாரின் பேரன். அவருக்குப் பின்னால் எல்லோரும் பட்டை போட்டுக்கொண்டு நின்றிருக்க, கறுப்புச்சட்டையும் நெற்றியில் திருநீறுக்கீற்றுமாக அட்டகாசமாக சிரிக்கிறார் ‘பகுத்தறிவு இயக்குனர்’.

தமிழ்த்தேசியம் என்பது ஆதிக்கசாதிகளின் தேசியமே என்று மீண்டும் நிரூபித்த இயக்குனர் சீமானுக்கு நன்றிகள். இப்படித்தான் சிவாஜிலிங்கம் எம்.பி கோவையில் முஸ்லீம்களின் மீது வன்முறை புரிந்த இந்துமக்கள் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி, தமிழீழம் கிடைக்க வேண்டி பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டார். சீமான் முதல் சிவாஜிலிங்கம் வரை தமிழ்த்தேசியவாதிகள் தங்கள் அரசியல் நலனுக்காக அடிப்படைவாதச் சக்திகளோடு கைகோர்த்துக்கொள்ளத் தயங்காதவர்கள். சீமானையும் சிவாஜிலிங்கத்தையும் நெடுமாறனையும் தங்கள் ஆதர்சமாக முன்னிறுத்தும் தமிழ்த்தேசியவாதிகள், ‘அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவதாய்’ப் பாவனை செய்யும் கண்ணீர்த்துளிக் கவிஞர்கள் பதில் சொல்வார்களா?



எனது முத்துராமலிங்க எதிர்ப்பு கட்டுரைகளுக்கு....

http://sugunadiwakar.blogspot.com/2007/11/blog-post_15.html

http://sugunadiwakar.blogspot.com/2007/11/blog-post_09.html

14 உரையாட வந்தவர்கள்:

  1. இளங்கோ said...

    தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அவர்கள் 1942-ல் தமிழ் ராஜ்ஜிய கட்சி தொடங்கினார்.பின்னாளில் அது நாம் தமிழர் இயக்கமாக மாறியது.அந்த பெயரை இப்போது பயன்படுத்த இவர் சம்பந்தபட்டவர்களிடம் அனுமதி வாங்கினாரா என்பது தெரியவில்லை.

  2. ROSAVASANTH said...

    திருமா மாலை போட்டாரா, தெரியுமா?

  3. மிதக்கும்வெளி said...

    இந்த ஆண்டு திருமா மாலை போட்டதாக செய்திகள் இல்லை ரோசா. ஆனால் 2007ல் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளை விடுமுறைநாளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்து வி.சி தன் மாநாட்டில் தீர்மானம் போட்டார்கள்.

  4. Anonymous said...

    முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை போட்டார் அவர் தலித் விரோதி என்று முடிவு கட்டுவது சிம்பிள் :).
    இருப்பது இருபது பேர் அதில் முப்பது குழுக்கள் என்றுதானே பெரியாரியம்,அம்பேத்கரியம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்.எல்லா முரண்களையும் பகை முரண்களாக்கும் ஆற்றலை கைவரப் பெற்றவர்களாயிற்றே நீங்கள்.சிறிது யோசித்தாலும் ஒன்று விளங்கும் - வேறுபாடுகளை நட்பான முறையில் வெளிப்படுத்துவது வேறுபாடுகள் இருப்பினும் உரையாட, இணைந்து செயல்பட உதவும்.அதை விடுத்து சீமான் இப்படி, நெடுமாறன் இப்படி என்று ஒவ்வொருவர் மீது புகார்
    பத்திரிகை நீங்கள் வாசித்தால் உங்கள் மீது இன்னொருத்தர் புகார் பத்திரிகை வாசிப்பார். அதிலிருந்து முடிவற்ற முட்டாள்த்தனமான விவாதம் உருவாகும்.

    ’ பிரபாகரன் எப்படியோ போகட்டும், ஆனால் பெரியார் பெயரைச் சொல்லி இதுவரை அசிங்கப்படுத்தி வந்த சீமானின் முகமூடி இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் கிழிந்து வருகிறது.’

    அசிங்கம்-தூய்மை என்பதையெல்லாம் கட்டுடைத்தவர்கள் அசிங்கம் என்ற சொல்லை பயன்படுத்துவது ஏனோ :)

    ‘சீமான் முதல் சிவாஜிலிங்கம் வரை தமிழ்த்தேசியவாதிகள் தங்கள் அரசியல் நலனுக்காக அடிப்படைவாதச் சக்திகளோடு கைகோர்த்துக்கொள்ளத் தயங்காதவர்கள்’

    நீங்கள் எந்த அடிப்படைவாத சக்தியையும் ஆதரிக்கவில்லை அல்லது அவர்களுடன் கைகோர்ர்கவில்லை என்றிருந்தால் இந்த விமர்சனம் நியாயமானது.

  5. Anonymous said...

    தம்பியில் சாதிவெறியன் முத்துராமலிங்கனைக் காட்டியது தவறு, தெரியாமல் நடந்தது, தோழர்கள் சுட்டிக்காட்டினார்கள் என ஒத்துக் கொண்டு வருத்தப்பட்டிருந்தார்
    கீற்றுப் பேட்டியில். அரசியற் சகதியில் குழிப்பதற்கு முதல் படி இதுவோ? எப்படியெனினும் கண்டனத்திற்குரியது. சமரசங்களுடன் அரசியலிற் கரைந்து போக இன்னொரு திருமா உருவாகிறார்.

    மத்தப்படி, தமிழ்த்தேசியம் பேசும் யாரும் எங்கே தவறு செய்கிறார்களென கண்ணில் விளக்கெண்ணை விட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் போன்றோர் உரலில் நன்றாக இடிக்க அவல் கிடைத்து விட்டது.அவ்வ்வ்வ்வ் நடத்துங்க! இனப்படுகொலைக்கு ஒத்தூதி சுகன் தேசிய கீதம் பாடுவது, அ.மா, சோபா கூட்டத்தின் திருகுதாளங்கள் என வரும் போது மட்டும் அதுவும் தலைப்பில் உள்ளிழுக்கும் உத்தியுடன் கூடிய பதிவு வராது. அவர்களுக்கு யாராவது பின்னூட்டிக் கேட்டால், அல்லாது வேற்று பதிவில் பின்னூட்டங்கள் சின்ன லேசான மயிலிறகு அடி, மெலிதான கண்டனங்கள்! பட், உங்க நேர்மை எனக்கு ரெம்பப் புடிச்சிருக்குங்க!

    அட, எப்போது சீமானும், சிவாஜிலிங்கமும் தமிழ்த்தேசியத்தின் தூண்கள் ஆனார்கள்? அவரவர் தங்கள் தேவைகளுக்கேற்ப கருத்தியல்களை வைத்து சதிராடினால், கருத்தியல்கள் ஒன்றும் செய்ய முடியாது. பொதுவுடமையை வைத்து ஸ்டாலினும், பொல்பொட்டும், மாவோவின் பின்னோரும் கூட வெறியாடினார்கள்! அதனாலெல்லாம் பொதுவுடமைத் தத்துவம் தவறென்றாகி விடுமா?

    //ஆனால் பெரியார் பெயரைச் சொல்லி இதுவரை அசிங்கப்படுத்தி வந்த சீமானின் //

    ஆக, இவ்ளோ நாளும் ரொம்பக் காண்டாகி கெடந்திருக்கீக. பெரியாரின் பெயரை உங்கள் போன்றோர் தான் பயன்படுத்தலாமென நெனச்சுட்டு இருக்கீக போல!

    நடத்துங்க உங்க ஆட்டத்த! ஆல் தி பெஸ்ட்!

  6. மிதக்கும்வெளி said...

    அனானி நண்பரே!

    /அசிங்கம்-தூய்மை என்பதையெல்லாம் கட்டுடைத்தவர்கள் அசிங்கம் என்ற சொல்லை பயன்படுத்துவது ஏனோ :)/

    இந்த மாதிரியான புத்திசாலித்தனமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் அளவிற்கு எனக்கு அறிவு வளரவில்லையே, என்ன செய்ய?

    /நீங்கள் எந்த அடிப்படைவாத சக்தியையும் ஆதரிக்கவில்லை அல்லது அவர்களுடன் கைகோர்ர்கவில்லை என்றிருந்தால் இந்த விமர்சனம் நியாயமானது./

    அப்படியிருந்தால் சுட்டிக்காட்டுங்களேன்.

  7. போராட்டம் said...

    மிகச் சரியான சமயத்தில் அடையாளம் காட்டியுள்ளீர்கள்.

  8. Anonymous said...

    தம்பி சுகுணா,
    ஒரு விசயம் சொல்கிறேன் கேள். இவர்கள் யாரும் பெரிய சிந்தனைவாதிகளோ சீர்திருத்தவாதிகளோ கிடையாது. மைக் மோகன் போல மைக் பிடித்த வீரர்கள். அவ்வளவே. இதற்காகவெல்லாம் ஏதோ பெரிய எதிர்வினை செய்கிறோம் என்றெல்லாம் நினைத்து பார்த்தீரா சீமானின் வல்லமையை என்றெல்லாம் நக்கலடிப்பது தேவையற்றது. அவர் தேவர் சிலைக்கு மாலை போட்டார்... சரி.. அப்படியே இம்மானுவேல் சேகரனுக்கும் அஞ்சலி செலுத்தினார் என்றால் மகிழலாம்! இல்லையென்றால் தமிழக அரசியல் சாக்கடையில் இன்னும் ஒரு பன்றிக்குட்டி குதித்திருக்கிறது ... அவ்வளவே! ஆச்சரியத்திற்கு ஒன்றும் இடமில்லை! கூல்!

    சற்றுமுன் தொலைபேசியவன்!

  9. அ.பிரபாகரன் said...

    கீற்று : நீங்க சாதியைப் பத்திப் பேசறதால இங்க ஒரு கேள்வி கேட்க விரும்புறோம். முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது.?

    சீமான் : கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கைரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.

    http://www.keetru.com/literature/interview/seemaan.php


    ஒரு reference'க்காக 'கீற்று'வில் வெளிவந்த சீமான் பேட்டியில் இருந்து ...

  10. Anonymous said...

    சீமான் தேவர் சிலைக்கு மாலை போடவில்லையென்றால் அதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம். மாலை போட்டிருப்பது பற்றி எழுதி நேரத்தை வீணடித்திருக்கிறீர்களே.. இந்த ஆளின் ஆரம்ப காலப் படங்களிலிருந்தே தேவர் படம் இடம்பெற்று வருகிறது. தேவர் பிறந்த தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் நடக்கும் கூத்தை எதிர்த்து பொதுவெளியில் ஒரு சின்ன விவாதம்கூட எழுவதில்லை. அந்த ஆள் நடத்திய அட்டூழியம் கூறித்து யாரும் பேசுவதில்லை. உங்களைப் போன்ற ஒன்றிரண்டு பேர் தனியாகப் புலம்புவதோடு சரி.

  11. Anonymous said...

    அட்றா அட்றா அட்றா....நாக்க முக்க நாக்க முக்க ....நாக்க முக்க...

    அடுத்து சீமானுக்கு மாலை போட்ட தலித்திய வாதி சுகுணா திவாகர்னு யார் பதிவு போடப்போறாங்க....

    ம் பட்டயக்கெளப்புங்க.


    உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையாப்பா?

  12. Anonymous said...

    தமிழ்தேசியம் என்பது சாதிக்கு அப்பாற்ப்பட்டது, காமராசருக்கும்,கப்பலோட்டிய தமிழ்ர் சிதம்பரம் (பிள்ளைக்கும்),முத்துராம லிங்க தேவருக்கும்,இமானுவேல் சேகருக்கும்,அம்பேத்கருக்கும்,பெரியாருக்கும்,அயோத்திதாசருக்கும் என அனைவருக்கும் பாகுபாடின்றி தமிழின உணர்வுடன் மரியாதை செய்வது என்று சொல்லிவிட்டால் ஆயிற்று :).
    ’இனப்படுகொலைக்கு ஒத்தூதி சுகன் தேசிய கீதம் பாடுவது, அ.மா, சோபா கூட்டத்தின் திருகுதாளங்கள் என வரும் போது மட்டும் அதுவும் தலைப்பில் உள்ளிழுக்கும் உத்தியுடன் கூடிய பதிவு வராது. அவர்களுக்கு யாராவது பின்னூட்டிக் கேட்டால், அல்லாது வேற்று பதிவில் பின்னூட்டங்கள் சின்ன லேசான மயிலிறகு அடி, மெலிதான கண்டனங்கள்’
    :)

  13. யோகேஷ் said...

    சீமான் எப்போதுமே சாதிபற்றாளர் தான். அவர் வசனம் எழுதிய பசும்பொன் திரைப்படத்திலிருந்து, முதல் படமான பாஞ்சாலங்குறிச்சி ஈறாக, தம்பி படத்தில் சம்பந்தமே இல்லாமல் முத்துராமலிங்கத்தின் படத்தை காண்பித்தது வரை அதற்கு சான்று பகறும்.
    முத்துராமலிங்கத்தின் விழாவில் கலந்து கொள்வதில் நமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, ஆனால் பெரியாரின் பெயரை சொல்வதுதான் இடிக்கிறது.
    "முத்துராமலிங்கம் உயிரோடிருந்தால் தற்போது இந்துத்துவதின் முன்னோடியாக இருந்திருப்பார்" என்பார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
    இவரையும் பெரியாரையும் இனைப்பது என்பது முட்டாள்கள் கூட செய்யத்துணிவதில்லை. ஆனால் நம் செந்தமிழன் சீமானோ மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்.... என்னத்த சொல்ல...

  14. Anonymous said...

    ஏம்பா நீங்களெல்லாம் உண்மையிலேயே சீரியசாகத் தான் பேசிக்கிட்டு இருக்கீங்களா ?

    ரோஸ் கலர் சட்டைப்போட்ட கரகாட்டக்காரன் மாதிரி,சீமான் கருப்புச்சட்டைப் போட்ட ஒரு சினிமாக்காரன் அவ்வளவுதான்.

    பின்குறி்ப்பு- //திருமா மாலை போட்டாரா, தெரியுமா?// ரோசாவசந்து அண்ணே கேட்டிருக்கிறாரு...

    அமாண்ணே திருமா ராஜபக்‌ஷேவை கட்டித்தான் புடிச்சாரு, முத்தம் குடுக்கவில்லைத் தான்.

    சீமான் ஒரு கோமாளி - திருமா ஒரு கோமாளி இதுக்கு மேலே ஒன்னும் இல்லே.

    - இது வேற ஒரு அனானி -