கலைஞரின் 'நெஞ்சுக்குநீதி'யும் வீரமணியின் 'உலகத்தலைவரும்'கலைஞர் மு.கருணாநிதி தன் வாழ்க்கை வரலாற்றைத் தானே எழுதிய 'நெஞ்சுக்குநீதி' மற்றும் சாமிசிதம்பரனார் பெரியாரின் வரலாறாக எழுதிய 'தமிழர்தலைவர்' நூலின் இரண்டாம்பாகம் என அறிவிக்கப்பட்டு வெளியாகியிருக்கும், திராவிடர்கழகத்தலைவர் கி.வீரமணி எழுதிய 'உலகத்தலைவர்' என்னும் இருநூற்களையும் அடுத்தடுத்துப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது.

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி 1924 முதல் 1969 வரையிலான நிகழ்வுகளைக் கொண்டதெனில் உலகத்தலைவர் 1948 வரையிலானது.

நெஞ்சுக்கு நீதியில் பல சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பலவற்ரைச் சொல்லமுடியுமெனினும் ஒரேஒரு சம்பவத்தை மாதிரிக்குச் சுட்டலாம். கருணாநிதி எவ்வளவு கைதேர்ந்த அரசியல்வாதி என்பதை அவரது இளமைக்காலத்தில் நடைபெற்ற ஒருநிகழ்ச்சி சுட்டுகிறது.


திருவாரூரில் கலைஞர் தலைமையில் சீர்திருத்தச்சங்கம் என்னும் பெயரில் இளைஞர்கள் சங்கமாய்த் திரண்டிருக்கின்றனர். அதேநேரத்தில் கருணாநிதியின் நண்பர்களில் ஒருவரான தியாகராஜன் என்பவர் அதிலிருந்து விலகிப்போய் 'இளைஞர்சங்கம்' என்னும் பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்குகிறார்.

இந்த இரண்டுசங்கத்திற்குமிடையிலும் கடுமையான போட்டிகளும் வன்முறை மோதல்களும்
அரங்கேறுகின்றன. ஒருமுறை எந்தச் சங்கத்திற்கு செல்வாக்கு அதிகம் என போட்டிவந்து ஊர்மக்கள் மத்தியில் தேர்தல் நடத்தலாமென இருசங்கத்தாரும் முடிவு செய்கின்றனர்.

இருதரப்பினரும் கடுமையான பிரச்சரம், கூட்டம் திரட்டுவதற்கென நாடகங்கள் என நடத்துகின்றனர். ஒருமுறை தியாகராஜன் ஏற்பாடு செய்த நாடகத்தில் நடிப்பதற்கு முக்கியமான நடிகர் ஒருவர் வரவில்லை. வேறுவழியில்லை. தியாகராஜன் கருணாநிதியிடம் நேரில் சென்று அந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டுகோள்விடுக்கிறார். ஏனெனில் கருணாநிதி சிறுவயதிலேயே மாணவர்களிடம் நாடகங்கள் நடத்தியவர்.

அப்போது நாடகத்தில் நடிப்பதற்கு கருணாநிதி ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே விதிக்கிறார், அது, 'நான் நாடகத்தில் நடிகக்வேண்டுமானால் இளைஞர்சங்கத்தைக் கலைத்துவிடவேண்டும்' என்பதுதான் அது. இளைஞர்சங்கம் காணாமல்போய் அனைவரும் சீர்திருத்தச்சங்கத்தில் அய்க்கியமானதையும் கருணாநிதி மட்டுமே ஒரே தலைவராக விளங்கியதையும் சொல்லவும் வேண்டுமா?

இப்படியான பலசம்பவங்களைக் கருணாநிதி தனது வழக்கமான பகட்டுநடையின்றி இயல்பான நடையில் எழுதியிருக்கிறார்.

நெஞ்சுக்குநீதியை வாசித்துமுடித்தபோது இரண்டுவிதமான பார்வைகள் கிடைத்தன.

1924ல் பிறக்கும் கருணாநிதி தனது பதினான்கு வயதில் பட்டுக்கோட்டை அழகிரியின் முழக்கத்தால் ஈர்க்கப்பட்டு 1938ல் முதல் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமே அரசியல்களத்துக்குள் நுழைகிறார். அதிலிருந்து திமுக தொடங்கப்படட் 1948 வரையிலும் அதற்குப் பிறகும் ஏன் இன்றளவிலும் கருணாநிதி பல போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார்.

ஆனால் ஆச்சரியமான விஷயம் பெரியாரியக்கத்திலிருந்தவரை கருணாநிதியும் சரி, அண்ணாதுரை போன்ற திமுகவின் முன்னோடிகளும் சரி மொழிப்போராட்டங்களிலேயே பங்கெடுத்திருக்கின்றனரே தவிர எந்த சாதியொழிப்புப் போராட்டங்களிலுமல்ல. இதன்மூலமே அண்ணாதுரையின் பேச்சு மூலமாக திராவிடர்கழகத்தில் உருவான இளைஞர்கூட்டத்தின் மனச்சாய்வு என்னமாதிரியாக இருந்தது என்பதையும் இந்த கூட்டமே பின்னாளில் திராவிடர்கழகம் உடைவதற்கும் திமுக உதயமாவதற்கும் காரணமாக அமைந்தது என்பதையும் புரிந்துகொள்ளமுடியும்.

ஆய்வாளர் வ.கீதா பெரியாரியக்கத்தின் வீரியமிக்க சாதனைகள் 1930கள் வரையிலான காலமே என்றும் முதல் இந்தித்திணிப்புப் எதிர்ப்புப்போராட்டம் பெரியாரியக்கத்தின் திசைவழிப்போக்கையே மாற்றியது என்றும் குறிப்பிடுவது சரிதானோ என்று யோசிக்கத்தோன்றுகிறது.

கருணாநிதியின் இயற்பெயர் தட்சணாமூர்த்தி என்றும் அதையே கருணாநிதி என்று மாற்றிக்கொண்டார் என்றும் பலரும் சொல்கின்றனர். ஆனால் அப்படியான குறிப்புகளெதுவும் நெஞ்சுக்கு நீதியில் இல்லை. ஆனால் கருணாநிதியின் மைத்துனர், தயாளு அம்மாளின் அண்ணனின் பெயர் தட்சணாமூர்த்தி.

அதேபோல், திராவிடர்கழகம் உருவான வரலாறு பற்றி எழுதும் அத்தியாயத்திலும் திராவிடர்கழகக் கொடியத் தான் தான் கைவிரல் கிழித்து ரத்தத்தால் உருவாக்கியதாக எழுதவில்லை. முதல்பாகம் வந்த ஆண்டு 1975 என்பதும் பெரியார் இறந்த இரண்டாண்டுகள் வரையிலும் கருணாநிதி இப்படியாகக் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னாட்களில்தான் கருணாநிதி திராவிடர்கழகக் கொடியைத் தானே உருவாக்கியதாக எழுதியும் பேசியும் வந்தார். இதைத் திமுகவோடு முரண்பட்ட காலங்களில் திராவிடர்கழகம் மறுத்தே வந்துள்ளது. ஆனால் இப்போது வீரமணி எழுதியுள்ள 'உலகத்தலைவர்' நூலில் கருணாநிதியே தி.க கொடியை உருவாக்கியதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. (இத்தகைய முரண்பாடுகளைத் தோழர் கொளத்தூர்மணி பெரியார்திராவிடர்கழகத்தின் இதழாகிய பெரியார்முழக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார்.)

அதுமட்டுமல்ல, நூலின் பல இடங்களிலும் திமுக சார்பு அப்பட்டமாகத் தெரிகிறது. ஒரு சிறந்த உதாரணம் 1947 ஆகஸ்ட்15.

ஆகஸ்ட் 15 துக்கநாள் என்று பெரியார் அறிக்கைவிட அண்ணாவோ அதை இன்பநாள் என்று அறிக்கைவிடுகிறார். பெரியாருக்கும் அண்ணாவிற்குமான முரண்பாடுகள் வெளிப்படையாய்த் தெரிந்த சம்பவம் இதுவே. ஆனால் அண்ணா இன்பநாள் என அறிக்கைவிடுத்தார் என ஒருவரி கூட நூலில் இல்லை.

இந்துத்துவவாதிகள் வரலாற்றைத் திரிக்கிறார்கள், மறைக்கிறார்கள் என குற்றம் சாட்டுவதற்கு முன் திராவிட மற்றும் திராவிடர் இயக்கங்களின் தலைவர்கள் தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்ளவேண்டுமென்றே தோன்றுகின்றன.

9 உரையாட வந்தவர்கள்:

 1. கார்த்திக் பிரபு said...

  hi pls add my googlepages in your blog frends list or favorites

  its a page for tamil ebooks , free downloads.

  thanks for addding

  url - http://gkpstar.googlepages.com/

 2. Anonymous said...

  இந்துத்துவவாதிகள் வரலாற்றைத் திரிக்கிறார்கள், மறைக்கிறார்கள் என குற்றம் சாட்டுவதற்கு முன் திராவிட மற்றும் திராவிடர் இயக்கங்களின் தலைவர்கள் தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்ளவேண்டுமென்றே தோன்றுகின்றன
  :)

 3. ஜாலிஜம்பர் said...

  //கருணாநிதியின் இயற்பெயர் தட்சணாமூர்த்தி என்றும் அதையே கருணாநிதி என்று மாற்றிக்கொண்டார் என்றும் பலரும் சொல்கின்றனர். ஆனால் அப்படியான குறிப்புகளெதுவும் நெஞ்சுக்கு நீதியில் இல்லை. //

  இப்படி ஒரு தகவலை வலையில் ஒருவர் பரப்பியிருந்தார்.குழப்பத்தை தீர்த்து வைத்ததற்கு நன்றி.

 4. பிரபு ராஜதுரை said...

  "பெரியாரியக்கத்திலிருந்தவரை கருணாநிதியும் சரி, அண்ணாதுரை போன்ற திமுகவின் முன்னோடிகளும் சரி மொழிப்போராட்டங்களிலேயே பங்கெடுத்திருக்கின்றனரே தவிர எந்த சாதியொழிப்புப் போராட்டங்களிலுமல்ல"

  ஆராயத்தகுந்த ஒரு குறிப்பு!

  கருணாநிதியின் இயற்பெயர் அருட்செல்வன் என்று படித்ததாக நினைவு

 5. மிதக்கும்வெளி said...

  பிரபுராஜதுரை,

  எனக்குத் தெரிந்தவரை கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். தட்சிணாமூர்த்தி, கருணாநிதி அனைத்துமே வடமொழிப்பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 6. இரா.முருகப்பன் said...

  பெரியார் என்ற பெயரில் ஒரு படம் எடுத்து, இளம் தலைமுறைக்கு பெரியார் இவ்வளவுதானா என்ற ஒரு தவறான பார்வையையும், புரிதலையும் தந்த வீரமணியின் வரலாற்று சிந்தனை, நிகர்நிலை பல்கலைகழகம் தந்த நன்றிக்கடனோ? என்னவோ.
  இவரெல்லாம் வரலாறு எழுதவில்லை என யார் கேட்டது. வாயை மூடிக்கொண்டு ஒழுங்காக வியாபாரத்தைக் கவனிக்கலாம்.

 7. மிதக்கும்வெளி said...

  இன்னொரு திருத்தம்,

  சமீபத்தில் கலைஞரின் பவளவிழாமலரைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு கட்டுரை எழுதியுள்ள திருவாரூர் தென்னன் என்பவர் கலைஞரின் பள்ளித்தோழர். தனது பெயர்தான் தட்சணாமூர்த்தி என்றும் கலைஞர்தான் அதை மாற்றித் தென்னன் என்று வைத்தார் என்றும் ஆனால் பலர் கலைஞரின் இயற்பெயர் தட்சனாமுர்த்தி என்று குழப்புவதாகவும் எழுதியுள்ளார். மேலும் ராம. அரங்கண்ணல் எழுதிய ஒரு கட்டுரையில் பள்ளியில் தான் நடத்திய 'மாணவநேசன்' கையெழுத்துப்பிரதியில் 'அருட்செல்வன்' என்ற பெயரில் கருணாநிதி எழுதியுள்ளதாகவும் ஒருகுறிப்பு உள்ளது.

 8. அருண்மொழி said...

  மிதக்கும் வெளியாரே,

  உலகத்தலைவர் புத்தகத்தை நானும் படித்தேன். அதில் கொடி கருணாநிதியால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடபடவில்லை.

  "அம்முறையில் பார்க்கும்பொழுது இன்று நாம் உயர்த்தியிருக்கும் கொடி, இன்று நமது மாநாட்டுக்குத் தலைமை வகிக்கப் போகும் எனது நண்பர் தோழர் பி.ஷண்முக வேலாயுதம் அவர்களால் சித்திரிக்கப்பட்டதும், பல தோழர்களால் ஆமோதிக்கப்பட்டதுமாகும். (அப்போது ஈரோடு குருகுலத்திலே சண்முக வேலாயுதம், தவமணிராஜன், மு.கருணாநிதி, கருணானந்தம் முதலியோர் வாசம் புரிந்தனர். கொடிக்கு சிவப்பு நிறம் தேவைப்பட்டபோது முதல்வர் கலைஞர் தம் விரலைக் குண்டூசியால் குத்தி ரத்தத்தை பூசினார்)." பக்கம் 198. அந்த பக்கத்தில் பி.ஷண்முக வேலாயுதம் படமும் உள்ளது.

  சிகப்பு நிறத்திற்காக ரத்தம் பூசியவர் எப்படி கொடிக்கு உரிமை கொண்டாட முடியும். இந்த விவகாரத்தில் தி.க. பெரியார் பிறந்த நாள் மலரில் விரிவாக விளக்கி இருந்தார்கள். எந்த ஆண்டு என்று நினைவில் இல்லை.

 9. ஜமாலன் said...

  நண்பர் சுகுணாவிற்கு,

  தாமதமான பின்னோட்டம். தமிழ்மணம் வழியாகவே இதனை அடைந்தேன். திராவிட இயக்கங்கள் பற்றிய ஆழ்ந்த ஆய்வுகள் அவசியம் குறிப்பாக தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

  //இந்துத்துவவாதிகள் வரலாற்றைத் திரிக்கிறார்கள், மறைக்கிறார்கள் என குற்றம் சாட்டுவதற்கு முன் திராவிட மற்றும் திராவிடர் இயக்கங்களின் தலைவர்கள் தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டுமென்றே தோன்றுகின்றன//

  வரலாற்றை திரித்தல் என்பதைவிட ஒரு அரசியல்சார்பு கதையாடலை கட்டமைக்க முயல்கிறார்கள். வரலாறு என்பதும் ஒரு புனைவுதான். அதிலும் எளிமையாக ஏமாற்றக்கூடிய உண்மை என்கிற முகமூடியை அவை அணிந்துள்ளன. திராவிட இயக்கம் அதற்கு விதிவிலக்கல்ல. கருணாநிதியின் வரலாற்றை புனைவாக முன்வைத்த மணிவண்ணனின் அமைதிப்படை அமாவாசை இப்பிம்பத்தை சரியாக புரிந்துகொள்ள உதவும். கோவிலில் தேங்காய் பொறுக்கியவன் ஒரு நாட்டின் முதல்வராவதற்கான அதிசயத்தக்க உழைப்பும் அரசியலும் அப்படத்தின் உள்ளியங்கும் கதையாடல்.

  தி.மு.க.-வை கண்ணீர்த்துளி இயக்கம் என்கிற பெரியாரின் உருவகம் மிகச்சிறந்த ஒரு அரசியல் சொல்லாடல். அதனை ஆய்ந்தாலே திராவிட உணர்வு எப்படி பண்பாட்டு மூலதனமாக திமுக -விற்கு மாறி உள்ளது என்பதை புரிந்து கொள்ளமுடியும். இக்கண்ணீர்துளிதான் அதன் உச்சத்தில் அதிமுக ஒப்பாரியாக மாற்றமடைந்து தமிழினத்தை பிற மொழியினரிடம் தலைகுனிய வைத்துள்ளது. பின்னோட்டம் விரிவாக செல்வதால்.. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இதனை விவாதிக்கலாம். உங்கள் பதிவு அவசியமானது. நன்றி.