

தமிழகத்தில் தலித் அரசியலுக்கென்று ஒரு நீண்ட நெடும்பாரம்பரியமுண்டு. 1800களிலேயே சந்திரோதயம் என்னும் இதழ் தலித்துகளால் நடத்தப்பட்டது. மேலும் அரசியல் களத்தில் 'திராவிட' என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்தி அரசியலைக் கட்டமைக்க முயன்றவர்கள் தலித்துகளே, இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பறையர்களே.
அயோத்திதாசர், எம்.சி.ராஜா, சிவராஜ், இரட்டைமலைசீனிவாசன் போன்ற தலித் ஆளுமைகள் தமிழக அரசியல் களங்களில் செயற்பட்டுவந்திருக்கிறார்கள். ஆனாலும் மற்ற இயக்கங்களைப் போல ஒரு தனித்துவமான இயக்காமாக தலித் இயகக்ம் வளரவில்லை என்பதே உண்மை. இதற்குப் பெரியாரும் திராவிட இயக்கமும்தான் காரணம் என்று தற்போதைய தலித் எழுத்தளர்கள் மற்றும் தலித் செயற்பாட்டாளர்கள் சிலர் குற்றம் சாட்டிவருவதும் நாமறிந்த செய்திதான்.
ஆனால் 80களில் தலித்துகள் மீண்டும் அரசியல் அமைப்புகளாகத் திரளத்தொடங்கினர் என்று சொல்லலாம். குறிப்பாக ஒடுக்கப்படட் மகக்ளின் மிகப்பெரும் எதிர்பார்ப்பாய் வளர்ந்துவந்தவர் திருமாவளவன். அதுகாறும் சிற்சில இடங்கள் தவிர பலவிடங்களில் தலித்மகக்ள் ஆதிக்கச்சாதியினரால் தாக்கப்பட்டு வந்த நிலை மாறி தாங்களும் திருப்பித்தாக்கத் தொடங்கினர்.
'திட்டமிடு, திமிறியெழு, திருப்பியடி' என்னும் முழக்கம் தலித் இளைஞர்களிடையே புதிய உற்சாகத்தை ஊட்டியது. கருஞ்சிறுத்தைகள் இயக்கததை முன்மாதிரியாகக் கொண்டு மகாராட்டிராவில் ஆரம்பிக்கப்பட்டது இந்திய தலித் சிறுத்தைகள் இயக்கம். ஆனால் தமிழ்ச்சூழலில் டி.பி.அய் என்றே அழைக்கப்பட்டாலும் அதன் அடையாளம் விடுதலைச்சிறுத்தைகளாய் மாறியது.
மலைச்சாமிக்குப் பிறகு தலைமைக்குவந்த திருமாவளவன் தடயவியல்துறையில் பணியாற்றிவந்த ஒரு அரசு ஊழியராக இருந்தபோதும் பல தலித் இளைஞர்களின் ஆதர்சமாய் விளங்கினார் என்பது மறுக்கமுடியாது. சிறுத்தைகள் தேர்தல் அரசியலைப் புறக்கணித்ததோடு மட்டுமல்லாது தேர்தலின்போது பலவிடங்களில் தேர்தல் மறுப்புவாசகங்களை எழுதி வாக்குப்பெட்டிக்குள் போடவும் செய்தனர்.
ஆனால் தொண்ணூறுகளின் இறுதிப்பகுதியில் சிறுத்தைகள் இயகக்ம் தேர்தல் மறுப்பு என்னும் நிலைப்பாட்டைக் கைவிட்டுத் தேர்தலில் பங்கேற்பது என்று முடிவெடுத்தது. அரசியலதிகாரமற்ற தலித்துகள் தொடர்ந்து அரசினால் குண்டர்சட்டம் போன்ற கடும் ஒடுக்குமுறைச் சட்டங்களால் துன்புறுத்தப்படும்போது தனக்கான அதிகாரத்தைக் கைப்பற்றவே இந்த நிலைப்பாடு என்று விளக்கமளித்தது சிறுத்தைகளின் தலைமை. தனது அரசுபபணியைத் துறந்து தேர்தல் அரசியல் களத்தில் குதித்தார் திருமா.
பல்வேறுபட்ட கூட்டணிகளில் இடம்பெற்று இன்று மய்யநீரோட்ட அரசியலில் தவிர்க்கமுடியாத அமைப்பாய் விளங்குகிறது டி.பி.அய். இதே சமகாலத்தில் திருமாவோடு போட்டியிட்ட பறையர் தலைவர்களாகிய சாத்தை பாக்கியராஜ், அரங்க.குணசேகரன், ஏர்போர்ட் மூர்த்தி, வை.பாலசுந்தரம், ஜெகன்மூர்த்தி போன்ற தலைவர்களால் திருமா அளவிற்கான கவனத்தையோ அமைப்புத் திரட்சியையோ பெறமுடியவில்லை.
தென்மாவட்டங்களில் தேவர்சாதியினருக்கு எதிராக திருப்பித் தாக்கும் அரசியலை முன்வைத்து இயக்கங்களாய் வளர்ந்த பள்ளர்சமூகத்தலைவர்களாக ஜான்பாண்டியன், பசுபதிபாண்டியன், டாக்டர்.கிருஷ்ணசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றிகளைப் பெற்றவர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி. ஆனாலும் அவரின் அரசியல் வாழ்வும் கடந்த பத்தாண்டுகளில் அஸ்தமித்து வெறுமனே அறிக்கைத்தலைவராக மாறிப்போனார். இறுதியாக காவிரிப்பிரச்சினையில் நடிகர்.ரஜினிகாந்தின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுத் தனது அரசியலைத் தானே மலினப்படுத்திக்கொண்டார்.
இன்று மய்யநீரோட்ட அரசியல்கட்சிகளுடன் அரசியல் பேரம் பேசும் அளவிற்குத் தவிர்க்கமுடியாத சக்தியாக விளங்கும் விடுதலைச்சிறுத்தைகள் கருத்தியல் ரீதியாக இழந்தவை என்ன? 1992 பபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழாவையொட்டித் தமிழ்ச்சூழலில் பரவலாக விவாதிக்கப்பட்ட தலித் அரசியல், தலித் இலக்கியம், தலித் அரங்கியல் ஆகிய கருத்தாக்கங்களே சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கு மாபெரும் உற்சாகத்தை அளித்தன என்று சொல்வது தவறாகாது.
ஆனால் இன்று தனது தனித்துவமிக்க அடையாளத்தை இழந்திருக்கின்றனர் சிறுத்தைகள். ஜெயலலிதா அரசால், ஜெயேந்திரனின் ஆசியோடு கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடைச்சட்டம், ஆடு, கோழி பலிதடைச்சட்டம் ஆகியவை ஒடுக்கப்பட்ட மக்களின் வழிப்பாட்டுமுறைகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை ஒடுக்கும் பார்ப்பனீய அரசியல்தந்திரத்தோடேயே கொண்டுவரப்பட்டது.
ஆனால் இதை எவ்வாறு எதிர்கொண்டனர் சிறுத்தைகள்? பலித் தடைச்சட்டத்திற்கு எதிரான அமைப்புரீதியான பெரிய போராட்டங்கள் எதையும் நிகழ்த்திவிடவில்லை. மதமாற்றத்தடைச் சட்டம் என்பது உண்மையில் தலித்துகள் இந்துக்கள் அல்ல என்பதை வலுவாக முன்வைப்பதற்கும் அந்தக் கருத்தியலைத் தலித்மக்களிடம் வீச்சாகக் கொண்டுசெல்வதற்கும் இந்துமதம் என்னும் மாயக்குகையிலிருந்து வெளியேறுவதற்கும் தலித்மக்களைப் பார்ப்பனீயத்திலிருந்து துண்டிப்பதற்குமான அரியவாய்ப்பு.
ஆனால் நடந்தது என்ன? இந்தச் சட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்பதற்காகக் கூடிய சிறுத்தைகளின் மய்யக்குழு மதமாற்றத்திற்குப் பதிலாக பெயர்மாற்றத்தை முன்வைத்தது. உண்மையில் இந்துமதத்திலிருந்து தங்களைத் துண்டித்துக்கொள்ள சிறுத்தைகள் தயாராக இல்லை என்பது அவர்கள் கருத்தியல் ரீதியாக தயார்ச்செய்யப்படவில்லை என்பதையும் அம்பேத்கர் பிம்பமாகவன்றி தத்துவமாக உள்வாங்கப்படவில்லை என்பதையுமே காட்டியது.
திருமா ஆரம்பித்துவைத்த பெயர்மாற்ற அரசியல் என்பதும்கூட திமுகவிடம்,இருந்து கடன்வாங்கியதுதான். நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் ராமைய்யா அன்பழகனாகவும் மாறியது திமுகவின் கடந்தகாலக் கதை. அதே அரசியலைப் பின் தொடர்ந்த திருமா, இதுவே சாதியடையாளத்திற்கும் இந்து அடையாளத்திற்கும் எதிரான மாற்று என்றார். அப்படியானால் திமுக ஏன் சாதியெதிர்ப்பு இயககமாக மாறவில்லை என்னும் கேள்வியை அவர் எதிர்கொள்ளத் தயங்கினார்.
மேலும் தமிழ் மரபு, தமிழ்ப்பண்பாடு என்று ஆதிக்கமரபுகளையே அவரும் கட்டமைத்தார். 'உங்களது பெயரை ஏன் மாற்றிக்கொள்ளவில்லை?' என்னும் கேள்விக்கு 'கரிகால்சோழனின் இன்னொரு பெயர்தான் திருமாவளவன். அதை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை' என்று அவர் பதிலிறுத்ததன்மூலம் பார்ப்பனீயத்தையும் ஆணாதிக்கமதிப்பீடுகளையும் கட்டிக்காத்த சோழர் காலத்தைப் பொற்காலமாய்க் கதையாடிய திமுகவின் மரபில் இயல்பாகப் பொருந்திப்போனார். மட்டுமல்லாது அருணாச்சலம் போன்ற ஆதிக்கச்சாதி வெறியர்களுக்கும் கூட செம்மலை என்று பெயர்சூட்டி 'ஞானஸ்ன்நானம்' செய்தார்.
கற்பு - குஷ்பு விவகாரத்தில் சிறுத்தைகள் வெளிப்படையாகவே தங்களை ஆணாதிக்கப்பாசிஸ்ட்களாக வெளிப்படுத்திக்கொண்டனர். எண்ணற்ற தலித் இளைஞர்களின் ரத்தத்தின் மீதும் சுயமரியாதை உணர்வின்மீதும் கட்டப்பட்ட சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் பறையர்களுக்கெதிராக கலவரங்களைத் தொடுத்த வன்னிரகளின் தலைவர் ராமதாசோடு 'தமிழைப் பாதுக்காக' கைகோர்த்தார்.
'இனி சாதிக்காக ரத்தம் சிந்தப்போவதில்லை' என்று புன்னகையோடு பொன்மொழி உதிர்த்தனர். ஒடுக்கப்பட மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அணிதிரள வேன்டிய அமைப்பு சினிமாக்காரர்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தது. விடுதலைககாய்ச் செலவழிக்கப்படவேண்டிய தலித் மகக்ளின் உழைப்பு விளம்பரங்களுக்காகவும் சுயநலங்களுக்காகவும் விரயமாக்கப்படட்து.
சிறுத்தைகள் முன்வைத்த தமிழ்த்தேசிய அரசியலும்கூட 'தமிழ்பேசும் சாதி'களுக்கானது. இதை சமயம் கிடைக்கும்போதெல்லாம் சிறுத்தைகள் பல்வேறு காலகட்டங்களில் நடத்திவந்த ஏடுகளான கலகக்குரல், தாய்மண், இப்போது தமிழ்மண், உலகத்தமிழர்சக்தி ஆகிய ஏடுகள் வெளிப்படுத்தின. இத்தகைய வரையறுப்புகளின் மூலம் அருந்ததியர்கள், நரிக்குறவர்கள், பழங்குடிகள் ஆகிய விளிம்புநிலைச்சாதியினர் தேசியக்கட்டமைப்பிலிருந்து விலக்கிவைக்கப்பட்டனர்.
பெரியாரே தலித் அரசியலின் மாபெரும் எதிரியாய் முன்னிறுத்தப்பட்டார். பார்ப்பனர்களோடு எவ்வித தயக்கங்களுமின்றி உறவுகள் மேற்கொள்ளப்பட்டன. மதுரை அண்ணாபேருந்து நிலையத்திற்கருகே சிறுத்தைகளால் தமிழ்த்தாய்க் கோயில் கட்டப்பட்டது. அக்கோயிலில் திருமாவிற்கு பரிவட்டம் கட்டப்படும் படங்கள் தாய்மண்ணில் பகட்டாக வெளியிடப்பட்டது. சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் திருமாவிற்குப் பூரணகும்ப மரியாதை செய்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்பனீய மதிப்பீடுகள் எவ்விதக் கூச்சமுமின்றி அமைப்புக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டது. திமுக நடத்திவந்த கவர்ச்சி அரசியல், தனிநபர் வழிபாடு, தலைமைதுதி, 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்' என ஏட்டளவிலும் 'மய்யப்படுத்தப்பட்ட தலைமை' என்பதுமாக நடைமுறையிலுமாக திமுக, அதிமுக போன்ற கட்சிகளைப் 'போலச்செய்தனர்' சிறுத்தைகள்.
இதன் உச்சகட்டமாக தோழர் திருமா 'அண்ணன் திருமாவாக' மாறினார். ஈழப்பிரச்சினை குறித்து எவ்வித விமர்சனங்களுமற்று தலித்துகள் விடுதலைப்புலிகளின் ரசிகர்களாக்கப்பட்டனர். 'தென்னகத்துப் பிரபாகரன் திருமாவளவன் வாழ்க' என்னும் கோஷங்கள் விண்ணதிரத்தொடங்கின. கடைசியாக அதனுச்சம் திருமா அரசியல் களத்தில் மட்டுமில்லாது திரையுலகிலும் 'கதாநாயகன்' ஆனார்.
சிலகாலம் முன்புவரை கட்டவுட்டுகளில் மழைக்கோட்டும், துப்பாக்கியும், கூலிங்கிளாசுமெனத் தோற்றமளித்த விஜயகாந்தின் தோற்றம் கதர்ச்சட்டை, கதர்வேட்டி என மாறிப்போனதெனில் திருமாவளவனோ விஜயகாந்தின் கெட்டப்புகளை மாட்டிக்கொண்டு ரெயின்கோட், கூலிங்கிளாஸ், துப்பாக்கி சகிதம் தலித மக்களுக்குக் காட்சியளிக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் மற்றெந்த தலித் அமைப்புகளையும் விட கூடுதலான கவனத்தையும், கணிசமான பலத்தையும் பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்தத் தலித் மக்களை இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்களவில் பறையர்சமூகத்தை வாக்குவங்கியாகத் திரட்டியிருக்கிறது. ஆனால் இதன் மறுபுறத்திலோ அது மோசமான கருத்தியல் வீழ்ச்சியையே சந்தித்திருக்கிறது என்பதற்கு சமீபத்திய இரு உதாரணங்களைச் சொல்லலாம்.
பெரியாரை ஒருபுறம் தலித்விரோதியாகச் சித்தரித்துக்கொண்டு (இப்போது திமுக கூட்டணிக்குப்பிறகு இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது) மறுபுறம் தலித்துகளின் மீது கடும் வன்முறையையை ஏவிவிட்டவரும் இந்துத்துவக் கருத்தியலில் ஊறிப்போனவருமான பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளிற்கு தமிழக அரசு விடுமுறை அளிக்கவேண்டுமென சிறுத்தைகள் அமைப்பு சமீபத்தில் நெல்லையில் நடத்திய 'மண்ணுரிமை மாநாட்டில்' முதல்வர் கருணாநிதியிடம் தீர்மானம் நிறைவேற்றிக் கோரிக்கை வைத்துள்ளது.
இரண்டாவது கொடூரசம்பவம் அருந்ததியர்கள் மீதான சிறுத்தைகள் அமைப்பினர் நேரடியாகப் பங்குபற்றிய தாக்குதல். அயோத்திதாசரைத் த்லித் திரு உருவாகக் கட்டமைக்கும்போது பறையர் சமூகத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள் அவரின் அருந்ததியர் விரோதக் கருத்தியல் குறித்து எவ்வித விமர்சனங்களையும் முன்வைப்பதில்லை. மேலும் இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரையில் தலித் தோழமை இயக்கம் நடத்திய 'தந்தை பெரியார் தலித்துகளுக்கு எதிரியா? என்னும் கருத்தரங்கில் அருந்ததியர் இயக்கமாகிய ஆதிதமிழர் பேரவைத் தலைவர் அதியமான், சிறுத்தைகள் அமைப்பை விமர்சித்தார் என்பதற்காக அவரைச் சாதிப்பெயர் சொல்லித் தாக்கமுனைந்தனர்.
இப்போது அதேபோல விருதுநகர் மாவட்டம் குண்டாயிருப்புப் பகுதியில் சிறுத்தைகள் அமைப்பின் நிர்வாகிகளே அருந்ததியர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு...
http://www.keetru.com/dalithmurasu/aug07/ponnusamy.php
தம்ழிச்சூழலில் சிறுத்தைகள் மட்டுமல்ல, இன்னும் பல அமைப்புகளும் தேசிய அரசியலில் பகுஜன்சமாஜ்வாடி உள்ளிட்ட அமைப்புகளும் இப்படியாகக் கருத்தியல் ரீதியாகச் சீரழிந்துபோனது குறித்து யோசிக்கும்போது அம்பேத்கரின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயற்பாடு குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் வாழ்வு மற்றும் செயற்பாடுகளை ஒரு வசதிக்காக மூன்றாகப் பிரித்துக்கொள்ளலாம்.
1. தொடர்ந்து இந்துமதக் கடவுள்கள், இந்துமதப்பிரதிகள் ஆகியவற்றைக் கட்டவிழ்த்து அதன் அடிப்படை வருணாசிரமப் பார்ப்பனீயமே என்பதை வெளிக்கொணர்வது.
2. இந்து மதத்திலிருந்து வெளியேறும் முகத்தானாகவும் பார்ப்பனீயத்திற்கெதிரான மாற்று அறவியல் மதிப்பீடுகளைக் கைக்கொள்ளும் முகத்தானாகவும் மதமாற்றத்தை மேற்கொள்வது.
3. தலித்துகள் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவது.
ஆனால் அம்பேத்கரின் மூன்றாவது கூறையே இன்றைய தலித் அமைப்புகள் விடாப்பிடியாகப் பற்றுகின்றன என்பதே உண்மை. நக்சல்பாரிகள் சொல்வதைப்போல தலித்துகள் தேர்தல் அரசியலில் ஈடுபடாமலிருப்பது அம்பேகரியத்தின்படிச் சாத்தியமில்லை.
ஏனெனில் 'தீண்டாமை என்பது வெறுமனே சமூகப்பிரச்சினை மட்டுமில்லை, மாறாக அது ஒரு அரசியல் பிரச்சினையே' என்பதை அம்பேத்கர் வலியுறுத்திவந்தார். பாராளுமன்ற அரசியலை மனப்பூர்வமாக ஆதரித்தார். அவரது பல நிலைப்பாடுகள் தலித்துகள் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றும் அபிலாஷையின் அடிப்படையிலேயே அமைந்தது.
குறிப்பாக மாநிலங்கள் குறைந்தளவிலான அதிகாரத்திலிருப்பதையும் அதிகாரங்கள் நிறைந்த மய்ய அரசையும் அவர் வலியுறுத்தினார். ஏனெனில் வலிமைவாய்ந்த மாநில அரசு தங்கள் மாநிலங்களில் சிறுபான்மையினரான தலித்துகளின் மீது கரிசனம் செலுத்தாது என்றும் அதைக் கண்காணிக்க வலிமையான மய்ய அரசு தேவை என்றும் வலியுறுத்தினார்.
அவர் காந்தியுடன் தொடர்ச்சியாக இந்தியத்தேசியம் குறித்து முரண்பட்டு வந்தபோதும் அவர் எந்த பிராந்திய தேசியங்களை ஆதரிக்கத் தயாராக இல்லாததற்கும் இதுவே காரணம். ஆனால் அம்பேத்கரின் இத்தகைய நிலைப்பாடுகள் என்ன விதமான பலன்களை விளைவித்தன என்பதற்கான நடைமுறைகளுக்கு நாம் வேறெங்கும் போகத்தேவையில்லை, அம்பேத்கரையே மகத்தான உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
அம்பேத்கர் பாராளுமன்ற அரசியலின்மீது அபரிதமான நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அவரால் எப்போதும் வெற்றிகரமான பாராளுமன்ற அரசியல்வாதியாக இருக்கமுடிந்ததில்லை. அவரது குடியரசுக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் பெருமளவு வெற்றியைத் தேர்தல்களங்களில் ஈட்டியதில்லை.
இந்திய அரசியல் சட்டத்திற்கு எழுத்துவடிவம் தந்த அம்பேத்கரே பின்னாளில், 'என்னை ஒரு ஸ்டெனோ போல பயன்படுத்திக்கொண்டனர்' என்றும் 'அவர்களுக்கு (பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்கச் சாதிகளுக்கு) ராமாயணம் தேவைப்பட்டபோது தாழ்த்தப்பட்ட வால்மீகியிடம் போனார்கள், அவர்களுக்கு மகாபாரதம் தேவைப்பட்டபோது தாழ்த்தப்பட்ட வியாசரிடம் போனார்கள், அவர்களுக்கென்று ஒரு அரசியல் சட்டம் தேவைப்பட்டபோது தாழ்த்தப்பட்டவனாகிய என்னிடம் வந்தார்கள்' என்றே புலம்பினார்.
அம்பேத்கர் தீண்டாமை ஒழிப்புச்சட்டத்தை அறிமுகம் செய்தபோது கூடியிருந்த நிருபர்கள், மகாதமா வாழ்க', 'படேல் வாழ்க' என்று ஆரவாரம் செய்தனரே தவிர அம்பேத்கரின் பெயரை யாரும் குறிப்பிடவில்லை. அவரால் மிகுந்த ஈடுபாட்டுடன் கொண்டுவரப்பட்ட இந்துசட்டத்தொகுப்பு மசோதாவை பிரதமர் நேரு ஆதரித்தபோதும் மற்ற ஆதிக்கச்சக்திகள் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்காதபோது மனம் வருந்திப் பதவியிலிருந்து விலகினார் அம்பேத்கர்.
தனது வாழ்வின் இறுதிக்காலங்களில் இட ஒதுக்கீட்டின் மூலம் பதவிக்கு வந்த தலித் அரசு அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியிலிருந்தார் அவர். அதன் அழுத்தம் அவரை மீண்டும் பவுத்தத்தை இறுகப்பற்றச் செய்தது.
எனவே தலித் ஒருவர் அரசியலதிகாரத்திற்கு வருவதே அம்பேத்கரியத்திற்குக் கிடைத்த வெற்றி என்பது அம்பேத்கரியத்திற்குச் செய்யும் நீதியாகாது. அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அதிகாரத்தை இல்லாமல் செய்வதற்கே. அறமும் கருத்தியலுமற்ற அதிகாரக் கைப்பற்றல் என்ன பலனைத் தரும் என்பதற்கான உதாரணம்தான் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்தியல் ரீதியான வீழ்ச்சி.
இந்தியச் சாதியமைப்பு, இன்றைய உலகமயமாக்கல் சூழல், ஊழல் கறைபடிந்த நாடாளுமன்ற அமைப்பு கருத்தியலைக் காலிசெய்துவிடும் அபாயம், கருத்தியல்மயப்படுத்தாமல் அமைப்புகளைத் திரட்டுவதில் உள்ள பின்னடைவு ஆகியவை குறித்த கேள்விகளே இன்று ஒடுக்கப்பட்ட மகக்ளின்பால் கரிசனங்கொள்வோரின் முன்நிற்கும் கேள்விகள்.