தமிழ்த்தேசியம் யாருக்கானது? - முகங்கள் மூன்றுசமீபத்தில் தமிழ்த்தேசியர் குறித்த இரு ஆக்கங்களைப் படிக்க நேர்ந்தது. ஒன்று புதியபார்வை மார்ச் 2007 இதழில் வெளிவந்த தமிழர்தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் நேர்காணல். மற்றொன்று பிப்ரவரி 2007 'தமிழர் கண்ணோட்டம்' இதழில் வெளிவந்த தமிழ்த்தேசப்பொதுவுடைமைக்கட்சியின் தலைவர் பெ.மணியரனின் 'வர்ணசாதி ஒழிப்பா, இந்துமத ஒழிப்பா' என்னும் கட்டுரை.

இந்தியத்தேசியவாதியாக இருந்த நெடுமாறன் எப்படித் தமிழ்த்தேசியவாதியாக மாறினார் என்பதற்கு புதியபார்வை நேர்காணல் விடையளிக்கிறது.

கல்லூரிக்காலத்தில் திமுகவின் அனுதாபியாக இருந்திருக்கிறார் நெடுமாறன். பிறகு 'திராவிடத்தேசியம் மாயை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தமிழ்த்தேசியமே மெய்' என்னும் ஈ.வி.கே.சம்பத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டு திமுகவிலிருந்து வெளியேறி சம்பத் மறும் கவிஞர்.கண்ணதாசன் இணைந்து நடத்திய 'தமிழ்த்தேசியக் காங்கிரஸ்' கட்சியில் பணியாற்றியுள்ளார்.

ஒருகட்டத்தில் சம்பத் தன் கட்சியை இந்தியத்தேசியக் காங்கிரசில் கரைத்துவிட நெடுமாறனும் காமராஜரின் அபிமானத்துக்குரிய காங்கிரசுக்காரராக மாறிவிடுகிறார். இந்திராவின் வருகைக்குப் பின்பு காங்கிரஸ் சிண்டிகேட், இண்டிகேட் எனப்பிரிய நெடுமாறன் சிண்டிகேட் காங்கிரசில் தொடர்ந்து காமராஜரை ஆதரிக்கிறார். காமராஜர் மறைவுக்குப் பின் சிண்டிகேட்டும் இந்திரா காங்கிரசும் இணைகின்ற்ன.

இந்திராவின் தலைமை ஏற்று அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார் பழ.நெ. திமுகவினரின் தாக்குதலிலிருந்து மதுரையில் இந்திராவைக் காப்பாற்றுகிறார். ஆனால் அடுத்த ஓராண்டிலேயே இந்திரா திமுகவுடன் கூட்டணி வைக்க முடிவெடுக்க காங்கிரசிலிருந்து வெளியேறி 'காமராஜர் தேசிய காங்கிரஸ்' ஏற்படுத்திப் பிறகு அதன் பெயரை' தமிழர் தேசிய இயக்க'மாக மாற்றுகிறார்.

ஆக மொத்தம் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஏற்படாவிட்டால் நெடுமாறன் காங்கிரசிலேயே நீடித்து இன்னும் இந்தியத்தேசியவாதியாகவே தொடர்ந்திருப்பார். திராவிடத்தேசியம் பொய், தமிழ்த்தேசியமே மெய் என்று கட்சி ஆரம்பித்து அதைவிடப் பெருந்தேசியமான இந்தியத்தேசியத்தை வலியுறுத்தும் காங்கிரசில் சம்பத் தன் கட்சியை இணைத்தது ஏன்? நெடுமாறன் போன்றவர்கள் அதுகுறித்துக் கேள்வி எழுப்பாதது ஏன்?

நீங்கள் 'இந்தியத்தேசியத்திலிருந்து ஏன் மீண்டும் தமிழ்த்தேசியத்திற்கு வந்தீர்கள்?' என்கிற கேள்விக்கு நெடுமாறன் பதிலளிக்கிறார், "இப்போது இந்திராவைப் போல எல்லாத் தேசிய இனங்களும் ஏற்றுக்கொள்ளும் தலைவர் இந்திய அரசியலில் இல்லை".

இதில் இரண்டு அபத்தங்கள்.

1. இந்திரா இந்தியாவின் எல்லாப் பிரதமர்களைப் போலவே தேசிய இனங்களின் மீது கடுமையான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்தவர். பஞ்சாப், காஷ்மீர் ஆகியப் பிரச்சினைகள் சிக்கலாக இந்திரா ஒரு முக்கியக் காரணம். எனவே நெடுமாறனின் கூற்று, அடிப்படையிலேயே தவறானது. இந்திராவின் பாசிச நடவடிக்கைகள் குறித்து நெடுமாறனிடம் எந்தக் கேள்விகளும் இல்லை. அவரிடம் இந்திரா மீதான விமர்சனமெல்லாம் அவர் கட்சியை நடத்திய விதம் குறித்துத்தான்.

2. மேலும் எல்லாத் தேசிய இனங்களும் ஒத்துக்கொள்ளும் ஒரு தலைவர் இருந்தால் அங்குத் தேசிய இனப்பிரச்சினையே இல்லை என்று அர்த்தமா? அருந்ததியர்கள் மதுரைவீரன் படத்தில் மயங்கி ரசித்து எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப்போட்டதால் தலித் பிரச்சினையே இல்லை என்பதா?

எனவே நெடுமாறனின் 'தமிழ்த்தேசிய'த்திற்கு எந்தவித சித்தாந்த அடிப்படையுமில்லை என்பதை அவர் மீண்டும் நிறுவியிருக்கிறார். அவரது நேர்காணலில் ஒரு காங்கிரஸ்காரராக திமுக மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். ஆனால் காங்கிரஸ் சாதி, சிறுபான்மையினர், தேசிய இனப்பிரச்சினை ஆகியவற்றில் நடந்துகொண்டமுறை குறித்து துளியளவும் விமர்சனமில்லை அவரிடம். '1969ல் காமராசர் உயிரோடு இருந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கும்' என்கிறார் சின்னபுள்ளத்தனமாக அல்லது இன்னமும் ஒரு காங்கிரஸ்காரராக.

அடுத்து பெ.மணியரசனின் கட்டுரையை எடுத்துக்கொள்வோம். ஜனவரி தமிழர்கண்ணோட்டம் இதழில் பெரியார் சிலை உடைப்பு, அதைத்தொடர்ந்து பெரியார் தி.க மற்றும் ம.க.இ.க தோழர்களால் நடத்தப்பட்ட பூணூல் அறுப்பு, ராமன் படம் எரிப்பு, கோவில் சிலை உடைப்பு ஆகியவை குறித்து பெ.ம எழுதியிருக்கிறார்.

அக்கட்டுரையில் 'பார்ப்பன் ஆதிக்கத்தை எதிர்க்கவேண்டியதுதான்,. ஆனால் இந்துமதத்திற்கெதிரான போராட்டங்கள் என்பவை பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது' என்னும் கருத்துப்பட அவர் எழுதியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து தலித்முரசு இதழும், மும்பையிலிருந்து பன்னீர்செல்வம் என்ற பெரியாரியத் தோழர் ஒருவரும் 'சாதியையும் பார்ப்பனீயத்தையும் ஒழிக்கவேண்டுமானால் இந்துமதத்தை ஒழித்தே ஆக வேண்டும்' என்னும் அம்பேத்கரிய மற்றும் பெரியாரிய அடிப்படைகளை முன்வைத்து வாதிட்டிருக்கின்றனர்.

அதற்கான மறுப்பே மணியரசனின் கட்டுரை. எட்டு பக்க அளவிலான அக்கட்டுரையின் சாராம்சங்கள்.

1. இந்துமதம் என்பது மற்ற மதங்களைப் போல ஒரு மதம், உலகில் மத ஒழிப்பு என்பது எங்கேயும் நடந்தது கிடையாது. எனவே இந்துமதத்தை ஒழிப்பது சாத்தியம் கிடையாது.

2. இந்துமதத்தில் இரண்டு கூறுகள் உள்ளன. (i). அதன் ஆன்மீகக்கூறு, (ii). வருணாசிரம அடிப்படையிலான சாதி. இதில் இரண்டாவதைத்தான் நாம் எதிர்க்கவேண்டும். ஏனெனில் அதன் ஆன்மீகக்கூறு பெரும்பான்மை மக்களின் மனநிலையில் இரண்டறக் கலந்துள்ளது. அதை அவர்கள் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அதனால்தான் அம்பேத்கரும் பெரியாரும் மதமாற்றத்தை வலியுறுத்தியபோது பெரும்பான்மை சூத்திரர்களும் தலித்துகளும் மதம் மாறத் தயாராக இல்லை.

3. மதமாற்றம் என்பது சாதியொழிப்பிற்கான தீர்வு இல்லை.


4. எதிர்காலத்தில் அமையவிருக்கும் புரட்சிகரத் தமிழ்த்தேசியக் குடியரசு மத ஒழிப்பை வலியுறுத்தாது, மெய்யான மதச்சார்பின்மையையே வலியுறுத்தும்.

இதிலுள்ள முரண்களை அவதானிப்போம்.

1. இந்துமதம் என்பது மற்ற மதங்களைப் போல ஒரு மதம் கிடையாது என்பதை அம்பேத்கரும் பல இடதுசாரி ஆய்வாளர்களும் தெளிவாகவே விளக்கியுள்ளனர். மற்ற மதங்களைப் போல அது செமிட்டிக் தன்மை வாய்ந்ததில்லை. ஒரு இறைத்தூதுவர் (அ) இறைமைந்தன், புனித நூல், வரையறுக்கப்பட்ட சடங்குகள், வழிபாட்டுமுறைகள் ஆகியவை இந்துமதம் நிலைப்பதற்கான காரணங்கள் இல்லை. அவற்றின் அடிப்படையே அம்பேத்கர் தெளிவாக விளக்குவதைப் போன்ற 'செங்குத்தான சாதியமைப்பே'. தனக்கு மேலே ஒருவன் இருப்பதைப் பற்றிய உணர்வையொடுக்கும் தனக்குக் கீழே ஒருவன் அடிமையாய் இருப்பதைக் கதகதப்பாய் உணரும் வசதியான மனோநிலையே இந்துமதத்தைக் காப்பாற்றி வருகிறது.

மேலும் உலகில் எங்கும் மதவொழிப்பு நடக்கவில்லையென்பதால் மதவொழிப்பைக் கைவிட்டு விடுவதா? உலகில் எங்கும் வர்க்க ஒழிப்பும் கூடத்தான் நடக்கவில்லை. அதற்காக மார்க்சியத்தைக் கருத்தியல் அடித்தளமாகக் கொண்டுள்ளதாகச் சொல்லும் த.தே.பொ.க வர்க்க ஒழிப்பைக் கைவிட்டுவிடுமா? 'மெய்யான' வர்க்கச்சார்பின்மை அல்லது வர்க்கச் சமரசத்தைக் கடைப்பிடிக்குமா?

இரண்டாவது இந்துமதத்தின் ஆன்மீகக்கூறுகள் என்று சொல்லப்படுபவை. இப்போதுள்ள இந்துமதத்தின் மெய்யியல் எனப்படுபவை பவுத்த, சமண, சாங்கிய, ஆசிர்வக, மற்றும் உலகாயுத மதங்களிருந்து உட்செரித்துக்கொண்டவையே. இதை விடுத்து மெய்யான இந்துமதத்தின் ஆன்மீகக்கூறுகள் என எவையையாவது சொல்லமுடியுமா?

மேலும் பெ.ம சொல்வதுபோல இந்துமதத்தின் ஆன்மீகக்கூறுகள் (அவை அவைதீக மரபிலிருந்து உட்செரித்துக்கொள்ளப்பட்டவையாக இருந்தாலும்கூட) என்பவை பெரும்பான்மையான 'இந்து' எனவழைக்கப்படும் மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துபவை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் அதுபற்றி அறிந்திருக்கவே மாட்டார்கள்.

பெ.ம சொல்வதைப்போல மதமாற்றத்தில் ஈடுபடாமல் பெரும்பான்மை மக்கள் தயங்குவதற்குக் காரணம் வழிபாட்டுமுறைகள் மற்றும் சடங்குகள் என எடுத்துக்கொண்டாலும் அவைக்கும் இந்துமதத்தின் ஆன்மீகக்கூறுகளுக்கும் ஒரு தொடர்புமில்லை. பிரதேச ரீதியினான சிறுதெய்வ வழிபாடுகள் மட்டுமே அவர்களின் வாழ்க்கையில் கலந்துபோனவை.

மேலும் பெரும்பான்மை பார்ப்பனரல்லாத மக்கள் பவுத்தம் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறாமலிருக்க வேறு பல காரணங்களும் இருக்கின்றன. இட ஒதுக்கீடு, மாமிச உணவுப்பழக்கம், குடி, புதிய கலாச்சாரத்தைக் கண்டு பயம் எனப் பல்வேறு காரணிகள் அவற்றில் செயல்படுகின்றன.

ஆனால் இந்தியாவில் சாதிக்கும் பார்ப்பனீயத்திற்கும் எதிராக நடந்த நிலமீட்பு, இட ஒதுக்கீடு இன்னும் பல போராட்ட முறைகளோடு ஒப்பிடும்போது மதமாற்றம் என்பது உடனடிப் பலனைத் தருவதாக அமைந்திருக்கிறது. மதமாற்றம் என்னும் அறிவிப்பு வந்தவுடன் தான் ஆதினங்களிலிருந்து அமைச்சர்கள் வரை அலறியடித்துக் கொண்டு சேரிகளை நோக்கி ஓடிவருகின்றனர். மதமாற்றம் என்பது தீர்வா இல்லையா என்பதை விட அது ஒரு வீரியமிக்க போராட்டம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மேலும் இசுலாமிய மதமாற்றம் என்பது சாதியையும் தீண்டாமையும் குறிப்பிட்டளவு ஒழிக்கவே செய்திருக்கிறது.

த.தே.பொ.கவின் மதமாற்றம் மீதான வெறுப்பு மற்றும் அசூயை என்பது புதிதானதல்ல. பார்ப்பனப் பாசிச ஜெயா அரசு மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தபோது புதிய ஜனநாயகம் இதழ் 'மதமாற்றத் தடுப்புச் சட்டத்திற்கெதிரான ஒரு சிறப்பிதழைக் கொண்டுவந்தது'. அதன் முகப்பட்டையிலேயே 'சுயமரியாதையுள்ள சூத்திரர்களே, தலித்துகளே இந்துமதத்தை விட்டு வெளியேறுங்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை அப்போது கடுமையாக விமர்சித்த தமிழர்கண்ணோட்டம் 'இது பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டைக் கெடுக்கும் பார்ப்ப்னத் தலைமையின் சூழ்ச்சி' என்று வர்ணித்தது.

மேற்கண்ட கட்டுரையில் பெ.ம குறிப்பிடும்போது சைவ சமயமும் வைணவ சமயமும் தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்தது என்கிறார். ஆனால் அதற்கு முன் தமிழக்த்தில் பெரும் செல்வாக்குச் செலுத்திய சமணத்தைப் பற்றியும் பவுத்தத்தையும் பற்றி ஒரு மூச்சையும் விடக்காணோம். உண்மையில் பவுத்த மற்றும் சமண ஆசீர்வகக்கூறுகள் தமிழர்களின் வாழ்வில் எச்சங்களாக மிஞ்சிநிற்கின்றன. குறிப்பாக தலித்முரசு பிப்ரவரி மற்றும் மார்ச் 2007 இதழில் வெளிவந்துள்ள பேராசிரியர் நெடுஞ்செழியனின் நேர்காணலில் அவர் ஆசிர்வகத்திற்கும் அய்யனார் வழிபாட்டிற்குமுள்ள தொடர்பு குறித்துப் பேசுவதைக் கவனித்தால் விளங்கும்.


ஆனால் பெ.ம போன்ற தமிழ்த்தேசியர்கள் தமிழ் மரபாக இங்கு முன்வைப்பது பார்ப்பனீயத்தைத் தூக்கிப்பிடித்த சைவம் மற்றும் பார்ப்பனீயத்தைதான். சமணம் மற்றும் பவுத்தம் போன்ற அவைதீக மரபுகளையல்ல. அதனால்தான் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க இந்துமதத்தை ஒழிக்கத்தேவையில்லை என்பதற்கு உதாரணம் சுட்டும்போது பார்ப்பனர்களை எதிர்க்கும் சைவ மடங்களையும் ஆதீனங்களையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் சமற்கிருத எதிர்ப்பு, தமிழ் வழிபாடு ஆகியவற்றில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்கும் இந்த சைவை ஆதினகர்த்தாக்கள் சாதி என்று வந்துவிட்டால் பார்ப்பனீயத்தைத் தாங்கிப்பிடிப்பதும் மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆதரவாகப் போர்க்கோலம் பூண்டதும் நமக்கு நினைவிருக்கும். எனவே பெ.ம கனவுகாணும் 'புரட்சிகரத் தழ்மித்தேசியக் குடியரசு' என்பது சாதியையும் பார்ப்பனீயத்தையும் சைவத்தையும் வைணவத்தையும் காக்கும் அரசாக இருக்குமே தவிர ஒரு மெய்யான மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அரசாக இருக்காது.

அடுத்து நந்தன் இதழின் ஆசிரியர் நா.அருணாச்சலம் குறித்துப் பார்ப்போம். பொதுவாகப் பெரியாரியம், தமிழ்த்தேசியம் குறித்துப் பேசுவோரிடம் அருணாச்சலம் குறித்து ஒரு மாயையான மயக்கமிருக்கிறது. 'திராவிடத் தமிழர்கள்' நந்தன் இதழ் குறித்து ஒருமுறை வெகுவாய்ப் புகழ்ந்திருந்தனர். நான் 'ஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 2 ' என்னும் பதிவில் அருணாச்சலத்தைக் 'கள்ளர் சாதி வெறியர்' என்று விமர்சித்திருந்தேன்.
http://sugunadiwakar.blogspot.com/2007_03_01_archive.html

அதை மறுத்து நண்பர் தங்கமணி கீழ்க்கண்டவாறு பின்னூட்டம் இட்டிருந்தார்.


/அருணாசலம் கள்ளர்சாதி வெறியர் என்று எழுந்தமானத்துக்கு குறிப்பிட்டிருக்கிறீர்கள் (அவர் கள்ளர் ஜாதியில்லை என்று நினைக்கிறேன்). ஆரம்பகால 90களில் அவர் முழுமையாக செயல்பட்டபோது உலகத் தமிழர் பேரவை என்ற குடையில் கீழ், தாய் மொழி வழிக்கல்வியையும், ஈழப்பிரச்சனையையும் முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் (அவைகள் எந்த நோக்கங்களைக் கொண்டிருந்த போதும்) அனைத்தையும் ஒன்று திரட்டுவதில் அவர் கணிசமான வெற்றியைப்பெற்றிருந்தார். அப்படியான ஒரு ஒற்றுமையை சாதிக்க தமிழ்சூழலில் (தமிழர்களிடம்) எவ்வளவு உழைக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தமிழ்வழிக்கல்வியை ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக்க உலகத் தமிழர் பேரவை எடுத்த முயற்சிகள் (100 தமிழறிஞர்களின் சாகும் வரை உண்ணாவிரத போர்) தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருக்கும் போது, எப்படி கருணாநிதியால் கலைக்கப்பட்டன; ஏமாற்றப்பட்டன என்பதை அப்போது அவ்விதயங்களைக் கவனித்து, பங்கேற்று வந்தவர்கள் அறிவர்.

அதேபோல ஈழத்தமிழர் பிரச்சனைகளில் இராஜீவ் கொலைக்குப்பின்னான கடுமையான காலகட்டங்களில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் பேரில் நியாயமான போராட்டங்களை கோரி போராடுவது இந்தியச்சூழலில் எவ்வளவு கடுமையானது என்பதும் உணரமுடியாதது அல்ல. அச்சமயத்தில் அவர் தீவிர பங்காற்றிவந்தார். அரசு அடக்குமுறைகளின் தீவிரத்தன்மையை நீங்கள் அறியாதவரா அல்லது அப்படி தோற்றமளிக்கிறீர்களா என்று தெரியவில்லை. நெடுமாறன் இதய அறுவைச்சிகிச்சைக்கு பின் பொடாவில் கைது செய்யப்பட்டு வேண்டுமென்றே கடலுக்குக்கும் சென்னைக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொல்லப்படவேண்டுமென்பதற்காகவே அலைக்கழிக்கப்பட்டார். நீங்கள் குறிப்பிடும் நந்தன் பத்திரிக்கை சுஜாதாவின் வசவுகளையும் சாபங்களையும் வாங்கிக்கொண்டதுடன், தமிழ் இயக்கங்களை ஒன்றிணைப்பதில், பெருவாரியாரியான தமிழ்ப்பற்றாளர்களைச் சென்று சேர்வதில் கணிசமான வெற்றி பெற்றிருந்தது. அதன் முதலாம் ஆண்டுவிழா (இன்று துக்ளக்கிற்கு பெருமைப் படுகிறார்களே) காமராஜர் அரங்கம் நிரம்பிவழிய நடந்தது. இன்றுவெகுஜன பத்திரிக்கைகள் (ஆவி, குமுதம்) போன்றவைகள் நடிகைகள், பரிசுகள், இலவசங்கள் போன்றவற்றை வைத்து சேர்க்கப்பட்ட கூட்டம் போல அல்லாமல் பத்திரிக்கையின் வாசகர்களால் அவ்வரங்கு நிறைந்தது.
மருத்துவக் காரணங்கள், பெரும் பொருளிழப்பு போன்றவைகளால் முடக்கப்படும்போது பொடாவின் அழுத்தத்தை உங்களைப்போன்றவர்களால் வேண்டுமானால் எளிதாக தாங்கிக்கொள்ள முடியுமாயிருக்கலாம். அதை அவர் நந்தனை நிறுத்தி தவிர்த்துக்கொண்டார்.

கவனமாகவும், முழுமையான புரிதலுக்கும் பரிசீலனைக்கும் ஆட்படுத்தி (ஆட்பட்டு) எழுதுதல் நீண்டகால நோக்கிலும், நம்பிக்கையை உண்டாக்குவதிலும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
நன்றி.

5:17 PM


/

இதில் இரண்டு தகவல் பிழைகள். முதலில் அருணாச்சலம் கள்ளர் சாதியச் சார்ந்தவர்தான் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். மேலும் உலகத்தமிழர் பேரவை என்பது பொடாவிற்குப்பின் நெடுமாறன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. அருணாச்சலம் நடத்திவந்தது தமிழ்ச்சான்றோர் பேரவை மற்றும் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் என்னும் அமைப்புகள்.

நந்தன் இதழை நாம் இருவகையாகப் பிரித்துக்கொள்ளலாம். தோழர் சுபவீரபாண்டியன் நந்தன் இதழில் இருந்தபோது, சுப.வீக்குப் பின். சுப.வீ இருந்தவரை நந்தன் இதழ் பெரியாரியம், சாதியெதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு ஆகியவற்றைத் தாங்கிவந்தது. ஆனால் அதன்பின் நிலைமைகள் தலைகீழாக மாறின.


கண்டதேவிப் பிரச்சினையின்போது 'தலித்துகள் கோவில் தேர்ப்பிரச்சினையில் தங்கள் உரிமையை வலியுறுத்துவதை விட்டுவிட்டு கோயிலைப் புறக்கணிக்க வேண்டும்' என்னும் கருத்துப்பட அருணாச்சலம் பெரியாரின் ஒரு சில மேற்கோள்களை அடிப்படையாக வைத்து 'அடிமைக்குத் தேவை விபூதியல்ல, விடுதலை' என்னும் கட்டுரையை எழுதினார். இதை மறுத்து பெரியார்திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர்.விடுதலைராசேந்திரன் பெரியார், கோவில் நுழைவுப்போராட்டம் மற்றும் அனைத்துச் சாதியினர் அர்ச்சகராகும் போராட்டங்களில் கூறியிருந்த கருத்துக்களை முன்வைத்து அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

மேலும் பசும்பொன்முத்துராமலிங்கம் (தேவர்) என்னும் சாதிவெறியனின் பிறந்தநாளுக்கு ஒரு பக்கத்தில் அவரது புகைப்படத்துடன் சிறப்புக்கட்டுரை வெளியிட்டது நந்தன். ஆனால் நந்தன் இதழ் நிற்கும்வரை அம்பேத்கரின் ஒரு சின்னப் புகைப்படம் கூட நந்தன் இதழில் வந்தது கிடையாது.

மேலும் நந்தன் இதழ் 'பகுத்தறிவு மலர்' 'புரட்சியாளர் மலர்' என்னும் இரண்டு சிறப்பிதழை வெளியிட்டிருந்தது. அதில் காரல்மார்க்ஸ் முதல் கருணாநிதியின் 'குப்பைத்தொட்டி' வரை இடம்பெற்றிருந்தன. ஆனால் அம்பேத்கர் குறித்து ஒரு சிறுகுறிப்பும் வெளிவரவில்லை. இதைச் சுட்டிக்காட்டி நந்தன் இதழிலேயே ஒரு வாசகர் கடிதம் வெளியானது. அதற்குப் பதில் எழுதிய நந்தன் 'நாங்கள் பகுத்தறிவு மலர் வெளியிட்டிருக்கிறோம் என்பதை நினைவுபடுத்துகிறோம்' என்று குறிப்பு வரைந்தது. இதன்பொருள், 'அம்பேத்கர் பகுத்தறிவாளர் இல்லை' என்பதுதான். (ஆனால் நந்தனின் வரையறையின்படி கருணாநிதி பகுத்தறிவாளர்).


நந்தன் இதழ் கடைசிவரை தலித்விரோதத்தை முன்வைக்கும் அல்லது தலித்துக்களைப் புறக்கணிக்கும் தமிழ்த்தேசிய இதழாகவே முன்வந்தது. கவிஞர்.இன்குலாப், பேராசிரியர்.சுபவீரபாண்டியன் போன்ற ஒரு சிலரைத்தவிர சாதியெதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு ஆகியவற்றில் உறுதியாய் நிற்கும் தமிழ்த்தேசியர்களைக் கண்ணுக்கெட்டியதூரம் காணோம்.

சாதி மற்றும் ஆணாதிக்க நீக்கம் செய்யப்படாத நெடுமாறன், மணியரசன், அருணாச்சலம் வகையறாக்களின் தமிழ்த்தேசியம் பார்ப்பன ஆதிக்கத்தைப் பதிலீடு செய்த சாதிவெறியர்கள் மற்றும் ஆணாதிக்கப்பாசிஸ்ட்களின் தேசியமாகத்தானிருக்கும்.

10 உரையாட வந்தவர்கள்:

 1. அற்புதன் said...

  சுகுணா,
  உங்கள் பார்வையில் ஆணாதிக்கம் சாதி வெறி அற்ற தமிழ்த் தேசிய இயக்கமாக யாரைக் காணுகிறீர்கள்?
  தமிழ் ஈழத் தேசிய விடுதலைப் போரைப் பொறுத்தவரை எமக்குத் தெரியும், கேட்கும் குரல்கள் பழ நெடுமாறனதும், வைகோவினதும்,திருமாவளவனதும்,சுபவியினதும் குரல்கள் மட்டுமே. நீங்கள் சொல்லும் இந்துமத சைவ மதச் சார்பற்ற தமிழ்த் தேசியத்தை யாராவது அங்கு முன் நெடுக்கிறார்களா?

 2. Anonymous said...

  பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஒரு சாதி வெறியர் என்று இங்கே வலைப்பதிவுகளில் உங்களைப் போன்ற நிறைய பேர் சொல்கிறீர்கள். நான் அவரைப் பற்றி கேள்விப்பட்ட விசயங்கள் அவ்வாறில்லை.
  இதைப்பற்றி விரிவாக சொல்ல முடியுமா?

 3. Anonymous said...

  என்னமோ காரே-பூரேன்னு இருக்கு. நெடுமாரனுக்கு வேலையெதுவும் கிடையாது, நீங்க ஏன் இந்தமாதிரி கிருக்குகளை பத்தி எழுதுகிறீர்கள்?

 4. மிதக்கும்வெளி said...

  அற்புதன்

  நான் பதிவிலே குறிப்பிட்டிருப்பது போல சுப.வீ, இன்குலாப் போன்றோரைக் குறிப்பிடலாம். ஆனால் இவர்களிடம் குறிப்பிடத்தக்களவு மக்கள் திரள் இல்லை. மார்க்சிய லெனினிய அமைப்பாகிய தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியும் ஒரு முற்றுமுழுதான வகைமாதிரி தமிழ்த்தேசிய அமைப்பாக மாறிவிட்டது. கவிஞர்.அறிவுமதியிடம் பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகிய ஒருசில சாதகக்கூறுகள் தென்பட்டாலும் குஷ்பு விவகாரம், தங்கர்பச்சான் பிரச்சினையின் தன்னை அவர் 'ஆணாக'வே நிரூபித்துக்கொண்டார். சாதி மற்றும் ஆணாதிக்க நீக்கம் செய்யப்படாத தமிழ்த்தேசிய இயக்கங்கள் தோன்றாதவரை தமிழ்த்தேசியம் என்பது இடைநிலைச்சாதிகள் மற்றும் ஆண்களின் கருத்தியலாகவே இருக்கும்.

 5. மிதக்கும்வெளி said...

  உமையணன்,

  நான் படித்தவரை முத்துராமலிங்கம் சாதிவெறியர் மட்டுமில்லை, இந்துமகாசபையில் பணியாற்றிய ஒரு இந்துமத வெறியரும் கூட. நீங்கள் கேள்விப்பட்ட விடயங்கள் குறித்துக் கூறுங்கள். பரஸ்பரம் பரிமாறி உரையாடுவோம்.

 6. மிதக்கும்வெளி said...

  உமையணன்,

  நான் படித்தவரை முத்துராமலிங்கம் சாதிவெறியர் மட்டுமில்லை, இந்துமகாசபையில் பணியாற்றிய ஒரு இந்துமத வெறியரும் கூட. நீங்கள் கேள்விப்பட்ட விடயங்கள் குறித்துக் கூறுங்கள். பரஸ்பரம் பரிமாறி உரையாடுவோம்.

 7. Anonymous said...

  தேசியத்தை மறுக்கும் அ.மார்கஸ் ஆணாதிக்க இஸ்லாமிய அமைப்புகளுக்கும், சமரசம் போன்ற ஏடுகளுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருக்கிறார்.அனைவரையும் இஸ்லாத்திற்கு மதமாற்றும் முயற்சியில் இருக்கிறார். தமிழ் தேசியவாதிகள் அவரை விடப் பரவாயில்லை.அவர்கள் மதவாத எதிர்ப்பில் தெளிவாக இருக்கிறார்கள்.அவர்கள் ஆணாதிக்க எதிர்ப்பு தமிழ்தேசியத்தை இன்று இல்லாவிட்டாலும் நாளை முன்னெடுக்கக் கூடும்.ஆனால் பெரியாரியவாதிகள்,அ.மார்க்ஸ்,நீங்கள் - ஒரடி முன்னே, ஈரடி பின்னே போல்தான். தேசியத்தை எதிர்ப்பீர்கள்,மதவாதிகளுடன் குலாவுவீர்கள் . பெரியாரியவாதிகள் குஷ்பு,சைனத் துறவிகள்
  விவகாரத்தில் நடந்து கொண்டது அவர்கள் மீது நம்பிக்கை வைக்க இயலாது என்ப்தை சொல்லுகிறது.ம.க.இ.க - வெறும் வாய்சவடால் இயக்கம்.யாருமே சரியில்லை, நாங்கள்தான் கூறை ஏறி வைகுண்டம் காட்டுவோம் என்று வாய்ப்பந்தல் காட்டும் இயக்கம்.அது ஏட்டுச் சுரைக்காய், கறிக்குதவாது.

  ஆக மொத்ததில் யாரும் சரியில்லை, எதுவும் சரியில்லை.உங்களைப் போன்ற இளைஞர்கள்/இளைஞிகள் இவர்களிடமிருந்து விலகி நிற்க வேண்டும்.இளமைப் பருவத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்ய வேண்டும்.

 8. Anonymous said...

  //தமிழ்த்தேசியம் யாருக்கானது?முகங்கள் மூன்று//

  வெளியே மிதக்கும் அய்யா,

  தமிழ்த்தேசியத்துக்கு சில நாட்களுக்கு முன்பு வரை நாலு முகம் இருந்தது.அந்த நாலாவது முகம் கட்டபொம்மன் மீசை வைத்த,சந்தனகடத்தல் வீரப்பனின் முகம்.இதைத் தவிர ஒரு 0.5 முகம் இருந்தது,இருக்கிறது.அந்த முகம், மஞ்ச துண்டு போட்ட முகம்.மத்த முகங்களெல்லாம் அந்த வீரப்பன் முகம் கொள்ளைஅடித்த பணத்தை பங்கு போட்டுக்கொண்ட முகங்கள்.இப்போ 4.5 போய் 3.5 இருக்கிறது.ஒரு இடம் காலி.நீங்க வேணா போய் உங்க முகத்தை அங்கு வச்சிக்கோங்கய்யா.நொந்து நூலாய் போயிருக்கும் எம் மக்களுக்கு இந்த 4.5 முக வேதாளத்தைப் பார்த்து கொஞ்சம் சிரிப்பாவது வரட்டும்.

  பாலா

 9. மிதக்கும்வெளி said...

  அனானி நண்பரே

  நான் தமிழ்த்தேசியம் குறித்து விமர்சித்திருகிறேன். இங்கே அ.மார்க்ஸ் மற்றும் ம.க.இ.க பற்றிய அங்கலாய்ப்பு ஏன் வந்தது?


  /ஆக மொத்ததில் யாரும் சரியில்லை, எதுவும் சரியில்லை.உங்களைப் போன்ற இளைஞர்கள்/இளைஞிகள் இவர்களிடமிருந்து விலகி நிற்க வேண்டும்.இளமைப் பருவத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்ய வேண்டும்/

  என்ன சொல்ல வருகிறீர்கள்?

 10. Anonymous said...

  //என்ன சொல்ல வருகிறீர்கள்//

  வெளியே மிதக்கும் அய்யா,

  வேறென்ன சொல்றாரு?ஓசியில ம க இ க சந்தா வசூல் பண்ணி சிலி பீஃப்,பிரியாணி,சாராயம் சாப்பிடறதை விட்டுவிட்டு உருப்படியா உழைத்து சாப்பிடுங்கன்னு சொல்றாரு.அவர் மாட்டுக்கு சொல்லிக்கிட்டு போகட்டும்.நீங்க உங்க வழியிலேயே நடங்க.

  பாலா