காஞ்சி ஜெயேந்திரனுக்காக...

நான் மீசை வைத்து தாடி மழித்தால்
அவன் தாடி வைத்து
மீசை மழிக்கிறான் என்கிறாய்.
நான் தெற்கு நோக்கி வணங்கினால்
அவன் மேற்கு நோக்கித் தொழுகிறான் என்கிறாய்.
எனக்கும் அவனுக்குமான
வித்தியாசங்களை விவரமாய்
விளக்கிச் சொல்லும் நீயோ
நான் உண்ட இலையில்
பேண்டு தொலைக்கிறாய்.
பின் பேண்ட இலையை
உண்டு முடிப்பாயோ?

வரவணையானும் புத்தரின் மதுக்கோப்பையும்

தீபாவளி இரவு. நானும் வரவணையானும் ஒரு பாரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தோம். எங்களோடு மது அருந்திக்கொண்டிருந்த இன்னொரு நபர், தமிழ்மணத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற இயக்கங்கள், ரசிகர்மன்றங்கள், தற்கொலைப்படைகள், முன்னணிகள், பின்னணிகள், சங்கங்கள் ஆகியவற்றில் ஒரு குழுவின் தலைவர். இப்போதைக்கு நாட்டாமை என்று வைத்துக்கொள்வோம்.


நாட்டாமை 'தமிழ்மணத்தில் பேசப்படும் விசயங்களின் அடிப்படையில் 'பிளாக்கியம்' என்னும் ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கமுடியுமா' என்று தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார். வரவணையானோ " பிளாக்கியம் உருவானால் அடுத்த நாளே 'போலி பிளாக்கியம்' என்று ஒன்று உருவாகிவிடுமே" என்று பதட்டமடைந்தார். ஆனால் நான் பதட்டமடைந்ததோ வரவணையானைப் பார்த்துத்தான். அவர் எதிரில் இருப்பவர் மட்டையாகாமல் விடமாட்டார். அவர் வீட்டில் குடித்துவிட்டுப்போனால் பிரச்சினை இல்லை.

அதுபோல எந்த வீட்டிலும் பிரச்சினை இருக்காது என்று நினைக்கும் அளவிற்கு அவர் ஒரு 'ஜனநாயகவாதி'. நானோ கட்டிங் மட்டுமே அடிப்பவன். 'நைன்டி'தான் என்னுடைய அளவு. அந்த விசயத்தில் நான் ஒரு தீவிர மார்க்சியவாதி. 'அளவு மாற்றம் பண்புமாற்றத்தை உருவாக்கும்'.
இப்படியாக எங்கள் உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த பாரில் புதிதாக குடிக்க வந்த ஒரு நபர் நாட்டாமையைப் பார்த்து "நீங்கள் கேரளாக்காரரா?" என்று வினவினார். நாட்டாமைக்கோ ஒரே ஆச்சரியம். "என்னைவிட நீங்கள் சிவப்பாக இருக்கிறீர்கள். ஆனால் என்னைக் கேரளாக்காரர் என்கிறாரே" என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.

அப்போது அந்த புதிய நபர் 'தன்னுடைய பெயர் பழனிச்சாமி' என்றும் 'தான் தமிழ்நாடு செக்போஸ்டிற்கும் கேரளா செக்போஸ்டிற்கும் இடையில் உள்ள கோவிந்தாபுரத்தில்' பிறந்ததாக குறிப்பிட்டார். கோவிந்தாபுரம் என்பது நாங்கள் குடித்துக்கொண்டிருந்த பாரிலிருந்து மூன்றாவது தெரு. நான் நாட்டாமையிடம் சொன்னேன் " காரல்மார்க்ஸிற்கு அடுத்து இவர் ஒரு சர்வதேசியவாதி. கோவிந்தாபுரம் கேரளாவிலிருந்தால் நீங்கள் கேரளாக்காரராக இருப்பதில் தவறே இல்லை'' என்று.

அப்போது பழனிச்சாமி, தான் புத்தமதத்தைச் சேர்ந்தவன் என்றும் சொன்னார். எனக்கு இரண்டு சந்தேகங்கள் எழுந்தன.

1. 'பழனிச்சாமி' எப்படி பவுத்தராக இருக்கமுடியும்? 'புத்தம் சரணம் கச்சாமி'தானே, 'புத்தம் சரணம் பழனிச்சாமி' இல்லையே?

2. பவுத்தர்கள் குடிக்கலாமா? (இந்த கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வதில் என்னைவிட வரவணையானுக்கு ஆர்வம் அதிகம். அவருக்கு புத்தமதத்திற்கு மாறவேண்டும் என்ற ஆர்வம் அதிகம். ஆனால் அங்கே போனால் குடிக்கமுடியாதே என்ற சஞ்சலமும் உண்டு.)

பழனிச்சாமி சொன்னார். பழனிச்சாமி என்னும் சொல் பழங்கச்சாமி என்னும் பாலிமொழியிலிருந்து வந்ததாகவும் தமிழ்மொழியே பாலிமொழியிலிருந்து தான் வந்ததாகவும் குறிப்பிட்ட அவர் பாலிமொழியில் அந்த பெயருக்குப் பொருள் பழமையான துறவி என்றும் விளக்கினார். மேலும் பழனியில் இருப்பது முருகன் சிலை இல்லையென்றும் பவுத்தத்துறவிகளில் ஒருவரான அநாகரிகதர்மபாலாவின் சிலையென்றும் கூறினார்.

அதேபோல குடிவிசயத்தை எடுத்துக்கொண்டால், புத்தரின் சீடர்களில் ஒருவரான அங்குலிமாலாவின் ஆறாம் தலைமுறையைச் சேர்ந்த சங்கநந்தன் என்னும் துறவி அசோகரையும் புத்தரையும் தந்தை மகனாகப் பாவித்து 'தம்மபுத்திரக்காப்பியம்' என்னும் காவியத்தை எழுதியிருப்பதாகவும் அதில் பல இடங்களில் புத்தரும் அசோகரும் மது அருந்தியபடியே உரையாடுவதாகவும் குறிப்பிட்டார். அப்போது புத்தர் சொல்வதாக வரும் ஒரு கவிதையைப் பாலிமொழியில் சொன்னார். (பழனிச்சாமிக்குப் பாலிமொழியும் தெரியும் என்பது கூடுதல் தகவல்)

அப்போது எனக்கு காப்ரியேல்கார்க்சியாமார்க்வெஸின் 'A woman travelling in oceanwings' என்னும் நாவலில் வரும் மார்த்தா என்னும் தேவதையின் வசனங்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு புள்ளிகளும் குறுக்கே வெட்டிக் கொள்ளும் இடத்தில் ஒரு தமிழ்க்கவிதை எனக்குள் பிறந்தது. நிசயமாக உலகின் மிகச்சிறந்த கவிதைகளுள் ஒன்று அது. இப்போது என் எதிரில் பழனிச்சாமி இல்லை. நாட்டாமையும் விடைபெற்றுப்போயிருந்தார்.

வரவணயான் மட்டும் மண்புழு, மண்வெட்டி, மண்பாண்டம் போன்ற மண் மற்றும் மண்சார்ந்த விசயங்கள் குறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். நானோ கவிதையில் கரைந்திருந்தேன். அந்த கவிதை உருவாகியபோது என் நரம்புகளெங்கும் பட்டாம்பூச்சிகள் பறந்தன. ஒரு பூக்காட்டில் குழந்தையைப் போல வாடைக்காற்று தழுவிக்கொண்டிருக்க நான் நிர்வாணமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன். இப்போது என் மதுக்கோப்பையில் புத்தர் தெரிந்தார். சில்வியாமரிக்கோமா என்னும் லத்தின் அமெரிக்கப் பெண்கவிஞர் சொன்னார் " நிச்சயமாக ஒரு நல்ல கவிஞரால் அய்ந்து நல்ல கவிதைகளுக்கு மேல் எழுத முடியாது. ஆனாலும்கூட ஒரே ஒரு நல்ல கவிதையை எழுதினாலும் கூட அவர் நிச்சயம் ஒரு நல்லகவிஞர்தான்" என்று. தமிழை உலகத்தரத்திற்குக் கொண்டுசெல்லப்போகும் அந்த கவிதை இதுதான்.

சொட்டு ஒன்று
சொட்டுச்சொட்டாய்ச்
சொட்டிக்கொண்டிருந்தது.
ஒரே ஒரு சொட்டு
சொட்டுச்சொட்டாய்
எப்படிச் சொட்டும்?

பிளாக்கர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள்

வரவணையான் : ஆட்டோகிராப்

( இந்த படத்தின் கதாநாயகனின் பெயரும் செந்தில்தான். மேலும் அப்பாவின் கையெழுத்தை பிராக்ரஸ்ரிப்போர்ட்டில் போடுவது, சின்ன வயசிலேயே காதலித்து கெட்டுப்போவது, தண்ணியடிப்பது, தம்மடிப்பது என்று சகல கல்யாணகுணங்களும் நிரம்பியிருப்பது போன்றவை உபகாரணங்கள். மேலும் செந்திலுக்குப் பிடித்த தமிழ்சினிமா வசனங்களில் ஒன்று " எங்க தமிழ்ப்பெண்கள் மூக்கு குத்தும் அழகே தனி"( வசனத்தின் பின்பகுதி செந்திலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்))

முத்துதமிழினி : நாட்டாமை (சிலபல பஞ்சாயத்துகளைச் செய்துவருவதால்..)

அசுரன் : நான் சிவப்பு மனிதன்

லிவிங்ஸ்மைல் : ஆறு (சமீபத்தில் வந்த தமிழ்ப்படங்களிலேயே இந்த படத்தில்தான் அதிகமான கெட்டவார்த்தைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். (சும்மா ஒரு ஜாலிக்குத்தான், கோபப்பட்டு என்னை are you a .. என்றெல்லாம் கெட்டவார்த்தையில் திட்டிவிடாதீர்கள்)

we the people : பாரதவிலாஸ்

இட்லிவடை ; ஜெமினிகணேசன் படங்கள் அனைத்தும்

ஞானவெட்டியான் : பட்டினத்தார் ( படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அரைமணி நேரம் 'பிரபுலிங்கலீலை' பற்றி நியூஸ் ரீல் ஓட்டப்படும்)

ஈழபாரதி : தர்மயுத்தம்

வஜ்ரா, கால்கரிசிவா, சமுத்ரா : ராம், ஹேராம், இந்து, கோவில், சாமி, தூரத்து 'இடி'முழக்கம்

ஜெயராமன் : அய்யர் தி கிரேட்

டோண்டு ராகவன் : நான் அவனில்லை

விடாதுகருப்பு : திராவிடன், தமிழன்

குழலி ; அய்யா, மறுமலர்ச்சி

யார் யாரைத் தூக்கில் போடலாம்?

புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர் விஜய் தெண்டுல்கரிடம் ஒருமுறை ஒரு கேள்வி கேட்கப்பட்டது, " யாரையாவது எண்கவுண்டர் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டால் யாரை என்கவுண்டர் செய்வீர்கள்?" என்று. அதற்கு தெண்டுல்கர் உடனே சொன்ன பதில். "நரேந்திரமோடியை". இப்போது அப்சாலைத் தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்று சிலர் அடம்பிடிக்கும் போது எனக்குத்தோன்றியது இதுதான். 'பாராளுமன்றம் என்னும் பைசா பிரயோசனமில்லாத ஒரு கட்டிடத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் என்னும் ஜந்துக்களைக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்சாலைத் தூக்கில் போடலாம் என்றால் 3000 முஸ்லீம்களின் படுகொலைகளுக்குக் காரணமான நரேந்திரமோடியை சுட்டுத்தள்ளுவதில் என்ன தவறிருக்கமுடியும்?

எனக்குத் தமிழ்நாட்டில் யாரையாவது என்கவுண்டர் செய்ய அதிகாரம் கொடுத்தால் நான் சுடப்போவது எழுத்துலகப் பாசிஸ்ட் 'துக்ளக்' சோ.
அப்சாலைத் தூக்கிலிடுவது சரியென்றால் வேறு யார் யாரையெல்லாம் தூக்கிலிடலாம் என்று யோசித்தபோது....

1. கார்கிலில் இறந்தவர்களை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கியதிலிருந்து இஸ்ரேலிடம் ஏவுகணை வாங்கியது வரை ஊழல் செய்துவிட்டு தேசபக்தி பற்றி லெக்சர் அடிக்கும் ஜார்ஜ்பெர்ணாண்டஸ், அடல்பிகாரிவாஜ்பேயி.

2. பாபர்மஜ்ஸித் என்னும் வரலாற்றுச் சின்னம் இடிபடுவதற்குக் காரணமாயிருந்த கடப்பாறைக் காதலன் அத்வானி.

3. அரசியல் தரகன் சூனாசாமி (சுப்பிரமணியசாமி)

4. மனிதனுக்குப் பிறந்ததாக ஒத்துக்கொள்ளாமல் "கோமாதா எங்கள் குலமாதா" என்று அடம்பிடிக்கும், "இந்துக்களின் கடையிலேயே பொருட்களை வாங்குங்கள்" என்று உளறிக்கொட்டி (பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே கடை விரித்து எல்லாவற்றையும் கபளீகரம் செய்யும்போது இந்து என்னடா, பொந்து என்னடா) ஆனால், மறந்தும் கூட "(தலித்துகளாகிய) இந்துக்களின் வீட்டிலேயே பெண் எடுங்கள்" என்று தூக்கத்தில்கூட உளறிவிடாத 'வீரத்தைத் துறந்த'(வீரத்துறவி?) ராமகோபாலன்.

5. காம சூத்திர லிபிகளை தன் எழுத்துகளில் பயன் படுத்துவதாலேயே பெரிய எழுத்தாளராகி விசிறி சாமியார், ஃபேன் சாமியார் என்று காமெடி அடித்து பலரைக் கெடுத்து வைத்திருக்கும் பாலகுமாரன்

6. விஞ்ஞானத்தையே மதத்தைப்போல கற்பிக்கும் சுஜாதா

7. காஷ்மீர் பிரச்சினை பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் 'ரோஜா' என்று படம் எடுப்பது, 'பம்பாய்' என்னும் முஸ்லீம் விரோதக்குப்பையை எடுத்து அதில் தமிழனை(" தமிழா தமிழா! நாளை நம் நாடே!) தேவையில்லாமல் அழைப்பது, 'பம்பாய்' படத்தில் 'துலுக்கன்' என்று வசனம் வைத்து 'கேரக்டர் வாய்ஸ்' என்று சப்பைக்கட்டு கட்டுவது, ஆனால் திராவிட இயக்கம் பற்றி ஒரு படம் எடுத்து அதில் 'பார்ப்பான்' என்ற வார்த்தை ஒரு இடத்திலும் கூட வராமல் கவனமாக பார்த்துக்கொள்வது, திராவிட இயக்க வரலாறே ஏதோ கருணாநிதி படுக்கையறைக்கும் எம்.ஜி.ஆர் படுக்கையறைக்கும் உள்ள தூரம்தான் என்று எத்துவாளித்தனம் செய்வது ஆகியவற்றைச் செய்துவரும் மணிரத்னம்.

8. இதுவரை ஒரே ஒரே கதையை மட்டுமே கைவசம் வைத்துக்கொண்டு கருடபுராணம், புருடாபுராணம் என்று ரீல் விட்டு சகலமும் பார்ப்பனீயத்தின் பக்கம் சாயும் பார்ப்பன அடிவருடி ஷங்கர்

9. 97% பார்ப்பனரல்லாத மக்களின் வாக்குகளை வாங்கிக் கொண்டு சட்டசபையில் அமர்ந்து " நான் ஒரு பாப்பாத்திதான்" என்று வாய்க்கொழுப்பெடுத்துப் பேசிய பார்ப்பன பாசிஸ்ட் ஜெயலலிதா....
இன்னும் நீங்களும் எழுதலாம்

(பின்குறிப்பு : எனக்கு உண்மையில் இந்த பதிவில் விருப்பமில்லை. நான் மரணதண்டனையை முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை பகத்சிங்குக்கு மரணதண்டனை கூடாதென்றால் கோட்சேக்கும் மரணதண்டனை கூடாதென்பதுதான். ஆனால் அப்சலைத் தூக்கில் போட வேண்டுமென்ற பார்ப்பனர்கள் மற்றும் ஜெய்ஹிவ்ந்த் தாசர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை. என்ன செய்வது? தோழர் மாவோவின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன, " மரங்கள் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை")

உலகின் புதிய கடவுளுக்கு ஒரு கடவுள்மறுப்பாளனின் கடிதம்

அன்பு நண்பர் செல்வனுக்கு

சமீபத்தில் சமணமுனிவர்களுக்கு எதிரான பெரியார் திராவிடர்கழகத்தினரின் போராட்டத்தைப் பற்றியும் பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றதைக்குறித்து எழுந்த சர்ச்சைகள் குறித்தும் வாசிக்க நேர்ந்தது. ரோசாவசந்த், திராவிடத்தமிழர்கள், செல்வன் ஆகியோரின் பதிவுகளில் என்னால் செல்வனின் பதிவை மட்டுமே படிக்கமுடிந்தது. அது குறித்து ஒரு சில பகிர்வுகள்...
சமணமுனிவர்கள் விவகாரத்தில் பெரியார் தி.க தோழர்கள் நடந்துகொண்டது முற்றிலும் தவறானதே. பெரியார் நிர்வாணமாக தெருவிலே நின்றாரா, அல்லது தெருவோரத்திலே நின்றாரா என்பது கேள்வியல்ல.பெரியார் ஜெர்மனியில் நிர்வாணச்சங்கத்தில் கையெழுத்திட்டு உறுப்பினரானார். அது மட்டுமல்ல, ஜெர்மனியிலும் சோவியத்ரஷ்யாவிலும் அவர் இருந்தகாலங்களில் பூர்ஷ்வாக்குழுக்கள், தாராளவாதக்குழுக்கள், அனார்கிஸ்ட்கள், டிராட்ஸ்கியக்குழுக்கள் எனப் பல குழுக்களையும் சந்தித்துப்பேசினார். டிராட்ஸ்கியக்குழுக்களோடு தொடர்பு இருந்தததாலேயே பெரியார் சோவியத்யூனியனை விட்டு வெளியேற்றப்படுகிறார். இது எதைக்காட்டுகிறதென்றால், புதிய சிந்தனைகளையும் போக்குகளையும் கற்றுக்கொள்கிற, வரவேற்கிற தன்மை பெரியாரிடம் இருந்தது என்பதையே. இத்தகைய போக்குகள் தமிழில் அருகி வருகின்றன என்பது வருந்தத்தகக்கது

தீவீரப்பெண்ணியம்(radical feminism) மேற்கில் எழுந்தபோது பெண்ணிய ஓவியர்கள் தங்கள் நிர்வாணத்தை வரைய ஆரம்பித்தார்கள். அவர்களை என்ன செய்யலாம்? வெளிப்படையாக பாலியல் குறித்து எழுதும் நம் பெண்கவிஞர்களை சினிமாக்கவிஞர் சினேகன் சொன்னதைப் போல "சென்னை அண்ணாசாலையில் வைத்துக்கொளுத்திவிடலாமா?"

மேலும் பெரியார் நிர்வாணமாக நின்றது ரமேஷ்-பிரேம் சொல்வதைப் போல வெறுமனே துறவுநிலை மட்டுமல்ல, அது உடலின் கொண்டாட்டத்தை வலியுறுத்துவது.

பொதுவாகவே மதம் உள்ளிட்ட ஆதிக்க நிறுவனங்கள் உடலை ஒடுக்கவே சொல்கின்றன. ஒருபுறம் பெண்களை போகப்பொருளாகக் கற்பிக்கும் இந்துமதம் மறுபுறம் பெண்ணுடலை விலக்கிவைக்க வேண்டியதாகவே கருதுகிறது. சுத்தம் x அசுத்தம் என்று கட்டமைக்கப்பட்ட எதிர்வுகளிலிருந்தே தீண்டாமை கற்பிக்கப்பட்டது. தீட்டு, அசுத்தம் என்று பெண்கள் விலக்கி வைக்கப்படுவது குறித்து கொஞ்சம் யோசியுங்கள். இழிவான தொழிலை செய்ய பணிக்கப்பட்டதாலேயே அசுத்தம், தீட்டு என்று தலித்துகள் கோயிலிலிருந்து விலக்கிவைக்கப்பட்டதைப்போலவே பெண்ணுடலும் மாதவிடாயைக் காரணம் காட்டி கருவறையிலிருந்து விலக்கப்பட்டது. இப்படியாக பெண்காமம் வெளியே சொல்லத்தகாதது என்று சொல்லப்படுவது வரை இதை நீட்டித்துக்கொள்ளலாம்.

இப்படியாக அதிகாரமும் ஒடுக்குமுறையும் உடலை ஒடுக்குதல், உடலை இழிவாகக் கருதுதல், உடல் பற்றிப் பேசாதிருத்தல் ஆகியவற்றை முன்வைத்தால் விடுதலையைப் பேசும் உடல் அரசியல் (body politics) நிர்வாணம், உடல் பற்றிப்பேசுதல், உடலைக்கொண்டாடுதல் ஆகியவற்றை முன்வைக்கிறது. இத்தகைய புரிதல்களின் அடிப்படையில் அணுகும்போதுதான் பெரியாரின் நிர்வாணத்தைப் புரிந்ந்துகொள்ளமுடியும். தீவிரப்பெண்ணிய ஓவியர்களின் ஓவியங்களும் அத்தகையதே.

மறுபுறம் சமணமுனிவர்களின் நிர்வாணத்தையும் நாம் பெரியளவில் கொண்டாட முடியாது. ஏனெனில் உடலை ஒடுக்குவதில் அவர்களை யாரும் மிஞ்சமுடியாது. சமணர்களின் இத்தகைய போக்குகளை விரிவாகக் கிண்டலடித்திருப்பார் ஓஷோ. (பிறப்பின் அடிபப்டையில் ஓஷோவும் ஒரு சமணர்தான்) " காந்திதான் உலகின் மிகப்பெரிய வன்முறையாளர். தன் உடலின் மீது அவரளவுக்கு யாரும் வன்முறை செலுத்தியதில்லை" என்பார் ஓஷோ. பெரியாரும் உடலை வருத்தும் போராட்ட வடிவங்களை நிராகரித்தார். "சத்தியாக்கிரகம் சவுண்டித்தனம், உண்ணாவிரதம் முட்டாள்தனம் " என்பது அவரது கருத்து. (ஓஷோவுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒப்புமைகளைப் பற்ரி விரிவாகவே ஆராயலாம். நான் ஒரே ஒரு கட்டுரை மட்டுமே எழுதியிருக்கிறேன்.) உடல் மீதான கடுமையான ஒடுக்குமுறையும் சமணம் அழிவதற்கான காரணங்களில் ஒன்று. மேலும் சமணம் பெண்களை முக்திக்குரியவர்களாக ஏற்றுக்கொள்ளவேயில்லை. முக்தி என்பது என்ன, நிர்வாணம்தானே. எனவே பெண்கள் நிர்வாணத்திற்கு அனுமதிக்கப் படவில்லை. எனவே நண்பர் ஒருவர் கேட்டதற்குப் பதில் கவுந்தி அடிகள் நிர்வாணமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான்.

தேவையற்ற விவகாரங்களுக்குப் போய்விட்டேன் என்று கருதுகிறேன். பெரியார் தி.கவின் நிலைப்பாடு முற்றிலும் தவறானதுதான். பெரியாரின் நிர்வாணம் சரியெனில் சமண முனிவர்களின் நிர்வாணமும் சரிதான்.

ஆனால் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த பெரியாரிஸ்ட்களையும் பெரியார் இயக்கங்களையும் வசைபாடுவது கண்டிக்கத்தக்கது. (ஒருவர் தி.க முண்டங்கள் என்று உங்கள் பின்னூட்டத்தில் திட்டியிருந்தார்). அதிலும் பெரியார் தி.க விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு சனநாயக ரீதியான அமைப்பு. குஷ்பு விவகாரத்தில் முழுக்க முழுக்க குஷ்புவுக்கு ஆதரவாக நின்ற ஒரு இயக்கம். இந்த மாதிரியான விவகாரங்களை பார்ப்பனர்கள் மிகச்சாமர்த்தியமாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். உதாரணமாக இந்த சமண முனிவர்கள் விவகாரத்திலேயே பெரியார்தி.கவைக் கடுமையாக விமர்சித்து தனது தலையங்கத்திலே எழுதிய காலச்சுவடு என்னும் இதழின் ஆசிரியர் கண்ணன் ஒரு பார்ப்பனர், மட்டுமல்ல முன்னாள் ஏ.பி.வி.பி உறுப்பினரும் கூட.

இதே பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றதையும் அவர் மைனராக இருந்தபோது வேசி வீடுகளுகளுக்குச் சென்றதையும் இணைத்து "பெரியார் ஒரு பொம்பளைப்பொறுக்கி" என்று ரவிக்குமார் என்ற தலித் எழுத்தாளரை ஒரு கட்டுரை எழுதவைத்து வெளியிட்டு தன் பார்ப்பன மன வக்கிரங்களைத் தணித்துக்கொண்டார். எனவே இந்த மாதிரியான ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெரியார் பற்றி வலைத்தளங்களில் படித்தே தெரிந்து கொண்டதாக எழுதியிருந்தீர்கள். நேரடியாக பிரதியைத் தேடிப்பிடித்து வாசிப்பதே நல்லது. திரிபுகளே நிஜமென உலவும் காலமிது.

கடவுளுக்கு எதிரானவர்கள் பார்ப்பனர்கள்

"பொதுவாக பார்ப்பனர்களைப் போல வேறு நாத்திகர்கள் இல்லை" என்பார் தோழர்.பெரியார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

எல்லா பார்ப்பன அர்ச்சகர்களும் எல்லா அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்வது கடவுள் சிலை முன்னால்தான்.
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்றவை பெண் தெய்வங்கள்தானே? அதற்கு ஏன் ஒரு ஆண் பூசாரி சேலை மாற்றிவிடுகிறார்? ஏனென்றால் அதெல்லாம் வெறும் டுபாக்கூர் என்று அந்த பார்ப்பனருக்குத் தெரியும்.

இன்னொன்றை யோசித்துப் பாருங்கள். கடவுள் இந்த உலகில் அனைத்து உயிர்களையும் படைத்ததாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு உயிருக்கும் பற்களையும் கடவுள்தானே படைத்தார்? ஒவ்வொரு உயிரியின் உணவுப்பழக்கவழக்கத்திற்கு ஏற்றாற்போலத்தான் பற்கள் அமைப்பும் இருக்கிறது. மனிசி/தனின் பற்கள் அமைப்பு மாமிசத்தைக் குத்திக்கிழிப்பதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த இயற்கைநியதிக்கு மாறாக மாமிசம் சாப்பிடாத ஒரு இனம் இருக்கிறதென்றால் அது பார்ப்பனர்கள்தான்.உலகில் மாமிசம் சாப்பிடாத இனக்குழுவும் இருக்கிறதா என்ன?

பஞ்சமனின மொழியில்

வயிறுவெடித்துப் பிணங்கள் மிதக்கும்
கங்கைநீர் தெளித்து புனிதப்படுத்துவீர்
உன் கக்கங்களின் மயிர்சிரைத்து
ஆடைகளின் அழுக்ககற்றி
சிதைந்துபோன உங்கள்
செருப்புகளைச் செப்பனிட்ட
எமதால் தொடப்பட்ட இடங்களை.
பல்லிமூத்திரத்தால் வீச்சமடிக்கும்
கர்ப்பக்கிரகத்தின் இருட்டுமூலையில்
பொருள்புரியா பார்ப்பானின்
மந்திரமுணுமுணுப்பு செவிமடுத்திருப்பது
உன்னைப் பொறுத்தவரை சாமி.
எனக்கு அது என்
துரட்டியில் அள்ளித்
தூரக்கொட்டப்படும் மலம்