மண்


அவர்கள் வாழும் மண் உங்களுடையதா
அல்லது நீங்கள் வாழும் மண் அவர்களுடையதாஅல்லது
பொதுவாக நீங்கள் இருவரும் வாழும் மண் யாருடையது என்பது குறித்த ஆய்வுகள், விவாதங்கள்,கருத்துரைகள் தயாரிக்கப்படுகின்றன உங்களால்,
அவர்களாலும்கூட
மண்ணில் பொதித்த கண்ணிவெடியால் சொச்சம் முதியவர்களைக் கொன்றீர்கள்..
அவர்கள் விண்ணிலிருந்து மண் நோக்கிப்
பொழிந்த குண்டுகளால் சொச்சம் பிஞ்சுகளைக் கொன்றார்கள். எப்படியாயினும் பிணங்கள் போகப்போவது மண்ணிற்குத்தானே. (மண்ணிலிருந்து காணாமல் போனவர்களின் பட்டியல் தனி)
ஒவ்வொரு மண்ணும் கைப்பற்றும்போதோ
அல்லது மீட்கப்படும்போதோ
அழிவதென்னவோ மாற்றினத்து
பெண்ணுடல்கள்தான்.
யோனி மூடிய மண்
பெண்
மண்
பூமிமாதா
உங்கள் மண்ணிற்கான பேச்சுவார்த்தைக்கு
அயல் மண்ணிலிருந்து தூதுவர்கள் வருவார்கள்.
நீங்களோ எதிரியோ
வெற்றி பெறும்போது
கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் மண்ணை
அவர்களுக்கு விற்கத்தொடங்குவீர்கள்.
இன்னமும் உங்களுக்கு மண் மீதுதான் பிரியம் எனில்
சில பொட்டலங்களில் சேகரித்துக்கொள்ளுங்கள்.
பலவற்றிற்கு அவை பயன்படும்.
துப்பாக்கி ரவைகள் தயாரிக்க
தேனீரில் கலந்து குடிக்க
முகாம்களுக்கான அடித்தளம் அமைக்க
சில நேரங்களில் பிணங்களின் வாய்களை மூடவும் கூட

மேதகு தாகம்


தலைவருக்குத் தாகம்
மிகும் வேளை போர்.
குறையும் வேளையோ பேச்சுவார்த்தை.
மிகுந்தால் அவர் போராளி,
குறைந்தாலோ அவர் ஒருராஜதந்திரி
.குறைகிறதோ மிகுகிறதோ
கோப்பை கோப்பையாய்க்குடிக்க கொடுக்க வேணும்.

நாடு


நாடு உனக்கு என்ன செய்தது
என்று கேட்காதே
(ஏனெனில் அது ஒன்றும் செய்யாது.)நாட்டிற்கு நீ என்ன செய்தாய்
என்று கேள்.
(நீதான் கேட்கவேண்டும்.பின் என்ன பூர்ஷவாக்களா கேட்பார்கள்?)