பெரியாரின் போராட்ட முறைமைகளும், அரசு ஆதரவு மற்றும் வன்முறை குறித்த கேள்விகளும்தனது அய்ம்பதாண்டுகால வாழ்க்கையைத் தமிழக அரசியல் களத்தில் செலவழித்த பெரியாரின் அரசியற் செயற்பாடுகள் பரப்புரை, போராட்டம் , எழுத்து என பல்வேறு களங்களில் அமைந்தன. தனது வணிக வாழ்க்கையின் போது கடனைத் திருப்பித் தராத பார்ப்பனரை இசுலாமிய அரசு ஊழியரிடம் ஒப்படைத்ததன் மூலம் தந்தையிடம் செருப்படி வாங்கியதிலிருந்து (1902 ஆம் ஆண்டு) தனது இறுதிக்காலக் கட்டங்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்காய்க் கருவறை நுழைவுப் போராட்டம்(1973) அறிவித்தது வரை எழுபதாண்டுகாலம் போராட்டங்களின் மீதான அபிமானியாய் வாழ்ந்தவர் பெரியார் ஈ.வெ.ரா.

தனது பேச்சு, எழுத்துப்பிரதிகளில் அவரால் பயன்படுத்தப்பட்ட சொல்லாடல்களைப் புரிந்துகொள்வதன் மூலம் பெரியாரின் செயல்பாட்டின் உளவியலையும், கருத்தாக்கங்கள் பற்றிய அவரது புரிதலையும் அறிந்து கொள்ள இயலும். போராட்டம் என்னும் வார்த்தைக்குப் பதிலாக அவர் 'கிளர்ச்சி' என்னும் வார்த்தையையே பாவித்தார். 'புரட்சி' என்னும் சொல்லாடலின் இடத்தை 'தலைகீழாய்க் கவிழ்ப்பது' என்று நிரப்பினார். 'வன்முறை' என்னும் சொல்லாடலைப் 'பலாத்காரம்' என்னும் சொல்லாடலின் மூலம் பதிலீடு செய்தார்.

பெரியாரின் போராட்டங்கள் முழுமையுமே குறியீட்டழிப்புப் போராட்டங்களாகவே அமைந்தன. இராமன் உருவப்படம் எரிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு, தமிழ்நாடு தவிர்த்த இந்திய தேசப்படத்தைத் தீயிடுதல், தேசியக் கொடியைக் கொளுத்துதல், இந்திப் பெயர் அழிப்பு, பிராமணாள் கபே பெயரழிப்பு என அவர் அறிவித்த போராட்டங்கள் பெரும்பான்மையும் அழித்தல், கொளுத்துதல், உடைத்தல் எனவாறே அமைந்தன. இந்து பார்ப்பனக் குறியீடுகளால் இட்டு நிரப்பப்பட்ட தமிழ்மனங்களினின்று அக்குறியீடுகளை அகற்றுதல், புனிதமெனக் கட்டமைக்கப்பட்ட குறியீடுகளைப் பலரறிய அவமானப்படுத்துதல் என்பதாகவே அவரது போராட்ட வடிவங்கள் அமைந்தன. எனினும் அவரது போராட்டத்தின் இலக்கு பெருந்தெய்வ மற்றும் பெருஞ்தேசியக் குறியீடுகளை நோக்கியே அமைந்திருந்தன என்பதும் அவரால் இழிவுபடுத்தப்பட்ட தெய்வங்களில் நாட்டார் சிறுதெய்வங்களும் பெண் தெய்வங்களுமில்லை என்பதும் பலரும் கூறியதே.

'தலைகீழாகக் கவிழ்ப்பதுதான் புரட்சி. அதை யாராவது எதிர்த்தால் அந்த வேலையைக் குஷாலாகச் செய்ய வேண்டியதுதான்' என்ற பெரியார், தன்னை 'ஒரு அழிவுவேலைக்காரன்' என்றே பிரகடனப்படுத்தினார். எனவே அவரது போராட்ட வடிவங்கள் தலைகீழாய்க் கவிழ்க்கும் கலகத்தன்மை வாய்ந்ததாய் அமைந்ததில் வியப்பில்லை. ஆனால், அவரது போராட்ட வடிவங்கள் அத்துக்களை மீறுவதாயிருக்க, அவரது போராட்ட முறைமைகளோ அதற்கு நேர்மாறாயிருந்தன.

'அழிவுவேலை' என்பதை நிறுவனங்கள், பிரதிகள் மற்றும் குறியீடுகளை அழித்தொழிப்பதாய் அர்த்தப்படுத்தினாரேயல்லாது தூலமான வன்முறையை அவர் ஆதரித்தாரில்லை. 1953ல் அன்றைய தமிழக முதல்வர் ராஜாஜூ குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, 'திராவிடர் கழகத் தோழர்கள் மண்ணென்ணையும், தீப்பெட்டியும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குலக்கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கு ராஜாஜூக்கு கெடு விதிப்போம். அந்த கெடுவிற்குள் அவர் திரும்பப் பெறாவிட்டால் நான் அறிவித்தவுடன் அக்கிரகாரத்தைக் கொளுத்த வேண்டும்' என்றார்.

3.11.1957 இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தஞ்சை தனி மாநாட்டில் பேசும்போது குறிப்பிடுகிறார். " எனது நாற்பதாண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக் கூட உதைத்ததில்லை, குத்தியதில்லை. ஒருவனுக்குக் கூட ஒரு சிறு காயம் பட்டதில்லை, கலவரமில்லாமல் நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்பவன். வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்கமுடியாது என்ற நிலைமை வருமானால் சும்மா இருந்தால் நான் மடையன்தானே? ஒரு ஆயிரம் பார்ப்பானையாவது கொன்று, ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது கொளுத்தி, ஒரு நூறு பார்ப்பனர்களையாவது அதில் தூக்கிப் போட்டாலொழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்?" என்றெல்லாம் கூடப் பேசினார்.

ஆயினும் இதெல்லாம் அவ்வப்போதைய உணர்ச்சி வெளிப்பாடுகளாய் அமைந்தனவே தவிர பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறையை அவர் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. அதற்கான மகத்தான உதாராணமாய்க் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1948 காலத்திய சூழலைச் சொல்லலாம். பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மண்ணாகிய மகாராட்டிரத்தில் பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்பாடுகள் நிகழ்ந்தன. காந்தியைக் கொன்றது பார்ப்பனர் என்கிற உண்மையின் அடிப்படையில் பார்ப்பனர்களுக்கு எதிராய் வன்முறையை ஏவிவிடுவதற்கானதொரு வாய்ப்பாக பெரியார் நினைத்திருந்தால் இதைப் பயன்படுத்திவிடுக்கலாம்.

ஆனால், அத்தகைய சாத்தியங்களை அறத்தின் அடிப்படையில் மறுக்கவே செய்தார். 31.01.1948 அன்று திருச்சி வானொலியில் காந்தியின் மறைவு குறித்துப் பேசும் போதும் காந்தியின் சிறப்புகள் குறித்துப் பேசினாரேயல்லாது. பார்ப்பன எதிர்ப்பு குறித்துப் பேசவில்லை. 12.02.1948அன்று காங்கிரசார் ஏற்பாடு செய்த 'காந்தியார் அனுதாபக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தவர்களும் கலந்துகொள்ளலாம்' என்று அனுமதியளித்த பெரியார், 'அக்கூட்டங்களில் பேச நேர்ந்தால், அனுதாபம் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு எந்தவிதமான கட்சிப்பேச்சுப் பேசாமல் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்' என்றும் கட்டைளை பிறப்பித்தார்.

19.02.1948 அன்று நன்னிலம் அருகிலுள்ள சன்னாநல்லூரில் காந்தி இறந்தபிறகு நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் பெரியாரும் கலைஞர் மு.கருணாநிதியும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். அப்போது மு.கருணாநிதி கோட்சேயின் பார்ப்பன அடையாளம் குறித்து ஆவேசமாகப் பேசும் போது, பெரியார் பேச்சை இடைமறித்து, ' காந்தியைக் கொன்றது ஒரு துப்பாக்கி, அவ்வளவுதான்' என முடித்து வைத்தார். (இந்த சம்பவத்தை மு.கருணாநிதியே பலமுறை தனது உரைகளில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எழுதிய 'உலகத்தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு பாகம்2'ல் இது 'விடுபட்டுள்ளது')

இப்படியான பல்வேறு சம்பவங்களையும், சந்தர்ப்பங்களையும் பெரியாரின் வாழ்க்கையிலிருந்து குறிப்பிட்டுக்கொண்டே போகலாம். அவரது முதலும் முடிவுமான அரசியல் செயற்பாடுகளின் அடிநீரோட்டமாக சாதியழிப்பும் பார்ப்பன எதிர்ப்புமே அமைந்திருந்தன என்பது வெளிப்படை. ஆனாலும் அவரே ஒருமுறை கூறியதுபோல, 'நான் பார்ப்பனர்களை எதிர்ககிறேனே தவிர வெறுக்கவில்லை. நான் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்கிறேனென்றால் நான் மனிதர்களை நேசிக்கிறேன்' என்பதாகவே அவரது மனப்பாங்கு அமைந்தது.

பெரியாரின் இத்தகைய வன்முறைமறுப்பு மனோபாவம் என்பது வெறுமளே பார்ப்பன எதிர்ப்பில் மட்டுமல்லாது ஆளும் வர்க்கக் கருவியாகிய அரசின் வலிமை வாய்ந்த ஆயுதநிறுவனமாம் காவல்துறையை எதிர்கொள்வதிலேயும் பிரதிபலித்தது. இதற்கு ஒரு உதாராணமாக 04.08.1948 'விடுதலை' இதழில் பெரியார் எழுதிய 'விளக்கமும் வேண்டுகோளும்' கட்டுரையைக் குறிப்பிடலாம்.

கட்டாய இந்தித் திணிப்பை அப்போதைய ராஜாஜூ அரசு கொண்டு வந்த பொழுது, அதற்கெதிரான போராட்டத்தில் தனது தோழர்களை ஆயத்தப்படுத்துவதற்கான அறிக்கையில் பெரியார், திராவிடர் கழகத் தோழர்களுக்கு விதித்த 14 நிபந்தனைகளே அவை. அவற்றில் சில நிபந்தனைகளைக் காண்போம்.

1.போலிஸ்காரரிடம் நமக்கு சிறிதும் வெறுப்பு, கோபம், விரோத உணர்ச்சி இருக்கக் கூடாது.

2.போலிஸ்காரர் முன்வந்ததும் அவரைப் பார்த்து புன்சிரிப்பு காட்டவேண்டும்.

3.கூப்பிட்டால், கைதுசெய்வதாய்ச் சொன்னால், உடனே கீழ்ப்படிய வேண்டும்.

4.போலிஸ்காரர் அடித்தால் மகிழ்ச்சியோடு, சிரித்த முகத்துடன் அடிவாங்க வேண்டும். நன்றாய் அடிப்பதற்கு வசதிகொடுக்கவேண்டும்.

5.போலிஸ்காரர் பக்கத்தில் வந்தவுடன் நீங்கள் மெய்மறந்து பக்தியில் இருப்பதுபோல் ஒரு மகத்தான காரியத்தை நாம் சாதிப்பதற்காக இந்த அற்ப அதாவது நமது சரீரத்ததிற்கு மாத்திரம் சிறிது தொந்தரவு, வலிகொடுக்கக் கூடிய காரியத்தை ஏற்கும் வாய்ப்பு(பாக்கியம்) நமக்குக் கிடைக்கிறது என்று வரவேற்கும் தன்மையில் இருக்க வேண்டும்.

6..போலிஸ்காரர் அடிக்கும் போது தடுக்கும் உணர்ச்சியோ, தடியை மறிக்கும் உணர்ச்சியோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.

7.அப்படிப்பட்ட தொண்டர், சர்வாதிகாரி யாராக இருந்தாலும் அவர்கள் அருள்கூர்ந்து கிட்டே வரக்கூடாது.

8.போலிசார் சுடுவார்களானால் பொது ஜனங்கள் ஓடலாம் ஆனால் தொண்டர்கள் மார்பைக் காட்டியே ஆகவேண்டும்.

இத்தகைய நிலைப்பாடுகளே பெரியாரின் எல்லாப் போராட்டங்களிலும் தொடர்ந்தது. இன்னொரு உதாரணம் குறிப்பிட வேண்டுமெனில் 1948ல் தமிழக அரசு கருஞசட்டைப்படையைத் தடைசெய்த நிகழ்வைக் குறிப்பிடலாம். திராவிடர் கழகத்தின் உதயத்தையட்டி முழுநேர இயக்கப்பணியாற்றக் கூடிய தோழர்களைக் கொண்ட ஒரு சார்பமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்பது பெரியாரின் எண்ணமாயிருந்திருக்கிறது. இதனாலேயே 1945ல் கருஞ்சட்டைப்படைக்கான அழைப்பை திராவிடர்கழகம் விடுக்கிறது. என்றபோதும் அந்த திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவராமலேயே கைவிடப்பட்டது. கருஞ்சட்டை அணிதல் என்னும் வழக்கம் அனைத்துத் தோழர்களுக்கும் பரவலாக்கப்பட்டது.

ஆயினும் இல்லாத கருஞ்சட்டைப்படையை 01.03.1948 அன்று தமிழக அரசு தடைசெய்தது.

" நம் இயக்கத்தில் திராவிடர் கழகத்தில் உள்ளோர்க்கு கருஞ்சட்டை அணிய வேண்டுமென்று வேண்டுகோள் விட்டதானது திராவிட சமுதாயத்துக்கு இருந்துவரும் சமுதாய இழிவு நீக்கிக் கொள்ளும் உணர்ச்சியை ஞாபகப்படுத்தவேண்டும் என்பதற்காக ஆகும். இதைக் கழக அங்கத்தினர் பலரும் மற்றும் சில திராவிடர்களும் ஆணும் பெண்ணும் ஆதரித்து அணிந்து வருகிறார்கள்.

இந்தப்படியாகக் கருஞ்சட்டை அணிந்தவர்களுக்கு எந்தவித நிபந்தனையோ எந்தவித ரிஜூஸ்டரோ, சேனைபோன்ற உடையோ யூனிபாரமோ அணிவகுப்போ ஆயுதமோ மற்றும் இவை போன்ற ஒரு சேனைக்கோ படைக்கோ உள்ள பயிற்சிகளோ மேற்கொண்டது கிடையாது.

இருப்பினும் சென்னை அரசாங்கம் இதை ஒர் அமைப்பாகக் கருதி சட்ட விரோதமாக்கியிருக்கின்றது என்ற போதிலும் நான் திராவிடப் பொது மக்களுக்கு அடிக்கடி தெரிவித்து வருவதுபோல் இது விஷயத்தில் நாம் கழக அங்கத்தினரும் திராவிட பொதுமக்களும் பொறுமையைக் கையாண்டு சாந்தமும் சமாதானமுமாய் நடந்து வரவேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன். இதற்கு மாறாக எங்காவது பயிற்சி அணிவகுப்பு இருக்ககுமானால் அதைக் கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும். என்பதைத் தவிர இந்த உத்தரவினால் நமக்குள் எவ்வித மாறுதலும் ஏற்பட்டுவிட்டதாகக் கருதவேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறறேன்." என்று 1.3.1948ல் விடுதலையில் பெரியார் அறிக்கையில் தெளிவுபடுத்துகிறார்.

உண்மையில் கருஞ்சட்டைப்படை மீதான தடை என்பது அடிப்படையில் திராவிடர்கழகத்தைத் தடை செய்வதற்கான முன்திட்டமாகவே இருந்தது. என்றபோதிலும் பெரியார் நிதானம் தவறாது இதை அணுகினார். கருஞ்சட்டைப் படைக்கு தடை விதிக்கப்பட்ட ஒரு வாரத்தில் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்த பெரியார், அதில் பேசும்போது, " இப்படி ஒரு தடையுத்தரவு போடுவதென்றால் சர்க்கார் இக்கழகத்தின்மீது, இதை அழிக்க வேண்டுமென்று கண்வைத்து இருப்பதாகத்தானே அர்த்தம்? பாமரமக்களுக்குத் திராவிடர் கழகத்தின் மீது அநாவசியமான பீதியை உண்டாக்குவானேன்? அவர்களுக்கு எங்கள் கழகத்தின்மீது வெறுப்பு ஏற்படும்படி செய்வானேன்?" என்று மனம் வருந்தியபோதும், "விரைவில் என்னைக் கைது செய்வார்கள். செய்தால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஜெயிலை இடித்து சிறை மீட்கப் போகிறீர்களா? அதெல்லாம் மகாமகா முட்டாள் தனம். என்னைப் போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றால் நீங்கள் அந்தப்பக்கம் ஒருவர்கூட வரக்கூடாது" என்று கூறவும் செய்தார்.

அதேகாலகட்டத்தில் 21.03.1948 அன்று மருங்கூரில் பெரியார் பேசவிருந்த கூட்டத்திற்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் ஆவேசத்தையும் மீறி தடையை மீறப்போவதில்லை என்று அறிவித்த பெரியார்,

"இன்று மருங்கூர் கூட்டத்திற்கு விதித்துள்ள தடை உத்தரவை மீற வேண்டுமென்று மக்கள் கொண்ட எழுச்சியை நீங்கள் அறிந்ததேயாகும். பல தோழர்கள் என் கார் முன்னதாக மறியலும் செய்தனர். அவ்வுத்தரவு நியா£யமோ அல்லது அநியாமோ எவ்வாறிருப்பினும் அதை இன்று உடளே மீறுவதில்லையென்று முடிவு செய்து மக்களுக்கு என்னாலியன்ற சமாதானமும் கூறியுள்ளேன். என்றாலும் உங்களின் மனம் நிம்மதியடையவில்லை என்பதை நான் நன்றாக அறிவேன்.

தடை உத்தரவை மீறவில்லையென்ற காரணத்தால் சிலர் நம்மை வேறுவிதமாகக் கருதலாம். என்னைப் பொறுத்தவரை நான் அவ்விதப் பேச்சுக்களைப் பற்றிக் கவலைப் படுபவனல்லன்.

தடை உத்தரவைச் சர்வ சாதாரணமாக மக்களுக்கு பயமின்றி மீறுவதென்பது வெறும்வீரர் பட்டத்தையோ அதன்மூலம் ஓட்டு பெறுவதற்கு அல்லது பதலி பெறுபவர்களுக்குச் சுலபமாயிருக்கலாம். அதுவே அவர்களுக்குக் கொள்கையாகவும் பிழைப்பாகவுமிருக்கலாம். ஆனால் நமக்கிருக்கும் பொறுப்பும், லட்சியமும் மிகமிக இன்றியமையாததாகும்" என்றார்.

இப்படி பெரியாரின் போராட்டங்கள் சட்டம் ஒழுங்கை மீறாத வரம்பிற்குட்பட்டவையாவே இருந்தன. வன்முறை குறித்த அதிருப்தியும் அவரது பேச்சுகளில் பிரதிபலித்தன. ஆனால், வன்முறை, சட்டம், ஒழுங்கு ஆகிய கருத்தாக்கங்கள் குறித்த பெரியாரின் அளவுகோல்கள், புரிதல்கள் மற்றம் அணுகுமுறைகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாதகமான விளைவுகளையே தந்தன என்றோ எதிர் அரசியல் செயற்பாடுகளுக்கு நீதி செய்தன என்றோ சொல்லிவிட இயலாது. அதற்கான சில உதாரணங்களைக் காண்போம்.

ஈரோட்டில் பெரியார் காங்கிரஸ் சார்பாளராகவும், ராஜாஜூயின் ஆதரவாளராகவும் இயங்கி நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் செயல்பட்டு வந்தாலும், அவரைத் தீவிர காங்கிரஸ்காரராக்கியது ஜாலியன் வாலாபாக் படுகொலைதான். இதை அவரே, 'ஈ.வெ.ரா.வுக்குத் தோன்றியது' என்னும் தனது வாழ்க்கைக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

"பஞசாப் படுகொலை நடந்த சமயம், அதன்பயனாய் நாடெங்கும் ஆத்திரம் பொங்கியெழுந்த காலம். பஞ்சாப் படுகொலையைக் கண்டித்து எங்கும் கண்டனக் கூட்டம். இந்த வருஷம் 1919 என்பது ஞாபகம், இந்த டிசம்பரில் மோதிலால் நேரு தலைமையில் அமிர்தசரசில் காங்கிரஸ் மகாநாடு ஏற்பாடாகியிருந்தது. நானும் ஆச்சாரியாரும் இந்துமித்திரன் கூட்டமும் ஏராளமான மக்களும் சென்றிருந்தோம். அங்குசென்று நேரில் அந்த படுகொலைச் சம்பவங்களைப் பார்த்தபிறகு எனக்கு மிகுந்த ஆத்திரம் வந்தது. நான் தீவிர தேசியவாதியாகிவிட்டேன்."

ஆனால் இத்தகைய கொடூரக் கொலைகளை நிகழ்த்திய ஜெனரல் டயரை உத்தம்சிங் என்னும் இளைஞன் சுட்டுப் பழிதீர்த்தபோது, ''ஒரு அனாமதேய இளைஞன் இவ்வழியான மிருகத்தனமான காரியத்தைச் செய்தான். இக்காரியம் உலகோர்முன் இந்தியர்களுக்கு மானக்கேட்டை உண்டுபண்ணும் ஈனக்காரியமாக முடிந்துவிட்டது. உண்மை இந்தியன் ஒவ்வொருவனும் வெட்கப்படுவான்." என்று கண்டித்து அறிக்கை விடுத்தார்.

அதேபோல் சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு சமஸ்தானங்களையும் இந்தியாவோடு இணைக்கும் முயற்சியில் இந்திய அரசு, குறிப்பாக அன்றைய மய்ய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் தீவிரங்காட்டினார். இந்திய அரசு அப்பகுதிகளில் ராணுவ பலங்கொண்டு ஒடுக்கமுயல, அதற்கெதிரான எதிர்வன்முறைச் செயல்பாடுகளும் வெடித்தன. அத்தகைய எதிர் வன்முறை அய்தராபத்திலும் எதிரொலித்தது.

அய்தராபாத் கலவரத்தை ஆதரிக்காதது மட்டுமல்லாது, இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் பெரியார் தயங்கவில்லை.

"நம்மைப் பொறுத்தவரையில் அய்தராபாத்துடன் இந்திய சர்க்கார் போர் தொடுக்குமானால், திராவிடப் பொதுமக்கள் இந்திய சர்க்காரை ஆதரித்தே தீரவேண்டும் எனக்கூறுவோம். பண உதவி மட்டுமல்ல. பெருவாரியாக இராணுவத்திலும் சேர்ந்து அய்தராபாத் குண்டர்களை விரட்டும் திருப்பணியில் ஈடுபடவேண்டியது அவசரமான தொண்டாகும். இந்திய சர்க்காரிடமிருந்து பிரிந்து தனி அரசாக இருக்கவேண்டும் என்பதே நம் குறிக்கோள் என்றாலும், அதற்காகக் குண்டர்களுக்கு அடிமையாவதையோ, அவர்களுடைய காட்டுமிராண்டித் தனங்களுக்கு இரையாவதையயோ, உண்மையான எந்தத் திராவிடனும் விரும்பவே மாட்டான். ஆகையால் நம் மாகாணம் அய்தராபாத் வெறியர்களின் அட்டகாசச் செயல்களால் அவதிப்படாமலிருக்க வேண்டுமானால், இந்திய சர்க்காரைக் காட்டிலும் அதிகமான பொறுப்பு நமக்குத்தான் ஏற்பட்டிருக்கிறது."(06.08.1948)

நக்சல்பாரிகளை அரசு ஒடுக்கியபோதும் பெரியார் ஆதரித்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. பெரியாரின் இத்தகைய நிலைப்பாடுகளுக்கு அடிப்படை வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்குமீறல் குறித்த அவரது அணுகுமுறையே என்பதை விளக்கத் தேவையில்லை. இதன் உச்சமாக, வெண்மணிச் சம்பவத்தின்போது பெரியார் விடுத்த அறிக்கையைக் குறிப்பிடலாம்.

கடந்த பத்தாண்டுகளாக ஒரு சில தலித் சிந்தனையாளர்கள் மற்றம் பார்ப்பனர்கள் பெரியாரைத் தலித் விரோதியாகச் சித்தரித்துவந்தனர். பெரியாரின் ஒரு சில கூற்றுகளை முன்னும்பின்னும் தொடர்பின்றித் துண்டித்து இதற்கு ஆகப் பயன்படுத்தினர். மேலும் கீழ்வெண்மணியில் 1968ஆம் ஆண்டு, 42தலித் மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவத்தில் பெரியார் எதிர்வினை எதுவும் ஆற்றாது கள்ள மவுனம் சாதித்தார் என்பது அவர்களின் குற்றச்சாட்டுகளிலொன்றாயிருந்தது.

ஆனால், 'எழுச்சி தலித்முரசு' மாதஇதழ்(மார்ச் 2006) வெண்மணிச் சம்பவத்தையட்டி பெரியார் விடுத்த அறிக்கையை வெளியிட்டது. மீண்டும் அவ்வறிக்கை விசமப்பிரச்சாரங்கள் செய்யவே அவரது எதிரிகளால் பயன்படுத்தப்பட்டது. எனது நோக்கில் அதை ஒரு தலித்விரோத அறிக்கையாக வாசிப்பு நிகழ்த்த எவ்வித முகாந்திரங்களுமில்லை. என்றபோதும் அது ஒரு வரவேற்கத்தக் அறிக்கையுமல்ல என்பதைக் கூறவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அவ்வறிக்கைகள் குறித்த விசாரணைகள் நம்மை வேறுசில மாற்றுப் பார்வைகளுக்கும், புரிதல்களுக்கும் இட்டுச்செல்லும்.

முதலாவதாக, பெரியார் வெண்மணிச் சம்பவத்தை, ஒழுக்கம் தவறிய ஒரு 'காலித்தனமான செயலாகவே' கருதினர் என்பதை அவரது கீழ்கண்ட கூற்றிலிருந்து புரிந்து கொள்ள இயலும்.

"காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி, தான் ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றையதின்ம் மக்களை சட்டம் மீறும்படி(அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்றுமுதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ்நிலைக்குப் போய்விட்டது. சட்டம் மீறுதல் மூலம் சத்தியாக்கிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காரியத்தைச் சாதித்துக் கொள்ள மக்களுக்கு காந்தி என்று வழிகாட்டினாரோ, அன்று முதலே மக்கள் அயோக்கியாகளாகவும் , காலிகளாகவும் மாறிவிட்டார்கள்".
(விடுதலை-28.12.1968)

மேலும், "......நாட்டுக்குச் 'சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்கு பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை, கொலைகாரத்தனம், நாசவேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்கு பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளாந்தன என்றால் 1.காந்தியார் கொல்லப்பட்டார். 2.தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன. 3.போலிஸ்அதிகாரிகள் கட்டிப்போட்டு நெருப்பு வைத்துக்கொளுத்தப்பட்டனர். 4.நீதிஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பலவாகனங்கள்(பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன. 5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம் தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள்.''

பெரியார் மேறகண்ட சமபவங்களை அடுக்குவதன் மூலம், வெண்மணிச் சம்பவத்தைப் 'பல பிரச்சினைகளில் ஒன்றாகப்' பார்ப்பதையும் அதற்கான அடிப்படை ஒழுக்கமும் நீதியும் தவறிய காலித்தனம் என்றே அவர் கருதுவதையும் உணரமுடியும்.

மேலும் இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக அவர் முன் வைப்பது நம்மை இன்னும் திகைப்பிலாழத்தும்.

"இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், 'ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு
'அரசநாயகம்' ஏற்படவேண்டும் " என்பதோடு மட்டும் நிற்கவில்லை.

"...எனவே இன்றைய இந்த நிலை மாறவேண்டுமானால் முதலாவது குறைந்தது.
1.காங்கிரஸ் திராவிட முன்னேற்றக்கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்கவேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகிய தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்றபிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3.எந்தக் கட்சி, ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுகளுக்கு, பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து இந்த ஆறாண்டுகாலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கை பெறுதல் இல்லையானால் தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது., இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேணடும்"

வெண்மணிச் சம்பவம் தி.மு.க ஆட்சியின்போது நடந்தது என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சி கட்டிய விவசாயிகள் சங்கத்திற்கு எதிராக கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் நிலப்பிரபுவால் நிகழ்த்தப்பட்டதே அக்கொடூரம் என்பதையும் கோபாலகிருஷ்ண நாயுடு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டபோது அவரை வரவேற்றவர் அன்றையக் காங்கிரஸ் கட்சிப் பிரமுகரும் இன்னொரு நிலப்பிரபுவுமான கருப்பையா மூப்பனார் என்பதையும் கோபாலகிருஷ்ண நாயுடுவை 'அழித்தொழிப்பு' மூலம் பழிதீர்த்தவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் என்பதையும் அறிந்தவர்களுக்கு பெரியாரின் மேற்கண்ட 'ஆலோசனைகள்' எவ்வளவு அபத்தமானவை மற்றும் ஆபத்தானவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும்.

பெரியாரின் இந்த அறிக்கையிலுள்ள பிரச்சினைகளை இரு சிக்கல்கள் வழியாகப் புரிந்து கொள்ளக் கூடலாம்.

முதலாவதாக வெண்மணிச் சம்பவம் அண்ணாதுரை முதல்வராயிருந்த போது நடைபெற்றது. முதன் முதலாக ஒரு பார்ப்பனரல்லாதார் ஆட்சிக்கு இந்த சம்பவம் பெருந்தீங்காய் அமைந்துவிடக்கூடுமென்ற சங்கடம் பெரியாருக்கு இருந்திருக்கலாம்.
ஏனெனில் அவர் காமராசர் ஆட்சியை அதற்குமுன் ஆதரித்தாலும், அவரே ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருப்பதைப் போல,
"காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருக்கின்ற யார்வாயிலும் சாதி ஒழிய வேண்டுமென்று ஒரு வார்த்தை வராது. சாதி ஒழியவேண்டும், சாதி இல்லை என்கின்ற கருத்துடைய எனது மதிப்பிற்குரிய காமராசர் அவர்களே கூட சாதி ஒழிய வேண்டுமென்று வாயால் சொல்ல முடியாதே, சொன்னால் காங்கிரசிலிருக்க முடியாது" (30.05.1973) என்னும் உண்மையையும் அவர் புரிந்து வைத்திருந்தார்.

பெரியார் எப்போதும் தேர்தல் அரசியலின் மீது மரியாதையோ ஈடுபாடோ கொணடவரல்ல. அவரைப் பொறுத்தவரை, 'அர்ச்சகன் பொறுக்கித் தின்ன கோயில், அதிகாரி பொறுக்கித்தின்ன அரசாங்கம்' என்பதைப்போல, 'அரசியல் வாதி பொறுக்கித்தின்ன அரசியல்'.

தேர்தல் அரசியலின் மீதிருந்த அவரின் ஈடுபாடின்மைக்கு சிறந்த உதாரணம் நீதிக்கட்சி, திராவிடர்கழகமாகப் பெயர் மாற்றமடைந்த வரலாறு, 27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற மாநாட்டிலேயே ஜஸ்டிஸ்கட்சி, திராவிடர் கழகமாக பெயர் மாற்றமடைந்தது என்பதும், இந்த தீர்மானத்தை அண்ணா முன்மொழிந்ததால் இது'அண்ணாத்துரை தீர்மானம்' என்று அழைக்கப்படுகிறது என்பதும் பலரும் அறிந்தது. ஆனால் இந்த 'அண்ணாத்துரை தீர்மான'த்தின் பின்னணியைப் பெரியார் விளக்குகிறார்.(உலகத்தலைவர் பெரியார் பக்155-156)

நீதிக்கட்சிக்குத் 'தென்னிந்திய திராவிடர்கழகம்' என்று பெயர் மாற்றுவது என்பதும், திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாது என்பதும் ஏற்கனவே முடிவுசெய்த ஒன்று. ஆனால், ஜஸ்டிஸ்கட்சியில் பதவி, அதிகாரச் சுகத்தை அனுபவித்தவர்கள் இதைத் தடுக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.'சண்டே அப்சர்வர்' பாலசுப்ரமணியம், கி. ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஒருகட்டத்தில் அண்ணாதுரையும் எதரிகளின் கையாள் என்று பெரியார் அய்யமுற்றார். ஆனால் அண்ணா, அந்த மாற்று அணித்தலைவர் எழுதிய ஒரு ரகசியக் கடிதத்தைப் பெரியாரிடம் காட்டித் தன்னை நிரூபித்தார். அதனாலேயே ஒரு சிறு மாறுதலோடு தீர்மானத்தை எழுதி, அண்ணாவாலேயே முன்மொழியச் செய்கிறார்.

இதன் மூலம் பெரியாருக்குத் தேர்தல் அரசியலின் மீதான நம்பிக்கையின்மையையும், அண்ணாதுரை போன்றவர்களுக்கு இந்தப் போக்கு சங்கடத்தை எறபடுத்தியதையும் அறியலாம்.

இவ்வாறாக வாழ்நாள் முழுவதும் தேர்தல் அரசியலைப் பெரியார் நிராகரித்த போதிலும், சில சமயங்களில் இன நலனுக்காக அரசுகளை ஆதரிக்கவும் பயன்படுத்தவும் செய்தார், இந்த போக்கின் நீட்சியாகவும் வெண்மணி அறிக்கையைக் கருதலாம்.

ஆனால் ஒரு அரசை எப்படிப் பயன்படுத்துவது(அ)கையாள்வது என்னும் சிக்கல் பெரியாருக்கு மட்டுமில்லை, எல்லா எதிர் அரசியல் செயற்பட்டாளர்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் இருந்திருக்கின்றன.

பார்ப்பனியத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சூத்திர, பஞ்சம மக்களை அரவணைத்ததன் மூலம் பவுத்தம் மக்கள் மதமாய் மலர்ந்தது. அது அரசமதமாக மாறிய போது இறுகி நிறுவன மயமானது. "அடிமைகள் பவுத்த சங்கத்தில் சேர்வதால் தனக்கு இடையூறு ஏற்படுகிறது" என்று ஒரு அரசர் முறையிட்ட பிறகு "அடிமைகள் தங்கள் ஒப்பந்த காலத்தை முடித்தபிறகே சங்கத்தில் சேரலாம்" என்றார் புத்தர்.

கம்யூனிச சமூகத்தில் அரசு உலர்ந்து உதிரும் என்றது மாக்சியம் ஆனால் பல் கம்யூனிஸ்டு கட்சிகளின் அரசுகளோ புரட்சிக்குப் பின் இறுகி நிறுவனமயமாகின பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது அபரிதமான நம்பிக்கை கொண்ட அம்பேத்கரால் ஒரு வெற்றிகரமான பாராளுமன்ற அரசியல்வாதியாய் நீடிக்க முடியவில்லை.

பெரியார் அரசுகளை ஆதரித்த போதும் தனது கருத்தியல்களில் சமரசம் செய்துகொண்டவரில்லை 1971ல் சட்டமன்றத் தேர்தலின் போது பெரியார் நடத்திய ராமன் உருவப்பட எரிப்பு போராட்டம் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு இடையூறு கொடுக்கக் கூடிய அளவிற்கு நெருக்கடியை கொடுத்தது. என்ற போதும் பெரியார் போராட்டத்தை கைவிட்டாரில்லை ஆனால் அத்தகைய உறுதித் தன்மையை இன்றைய திராவிடர்கழகம் ஏறக்குறைய கைகழுவிவிட்டது என்றே சொல்லலாம்.

எப்படி இருந்த போதிலும், அரசு ஆதரவு, எப்படி ஒரு அரசை கையாளுவது அல்லது பயன்படுத்துவது (How to handle the state?) என்ற கேள்விகள் இன்னமும் தொடர்கின்றன.

வெண்மணி அறிக்கையின் இன்னொரு பிரச்சினைக்குரிய அடிப்படை அம்சம் வன்முறை, சட்டம் ஒழுங்கு, அதை மீறல் குறித்த பெரியாரின் வழமையான புரிதல்கள்.

காந்தியிடமிருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியபோதும், சில காலங்களிலேயே அவரிடமிருந்து விலகி எதிர்த்திசையில் பயணித்தவர் பெரியார். என்ற போதும் இந்த வன்முறை மறுப்பு மனோபாவம் பெரியாரிடமிருந்த காந்திய அரசியலின் எச்சம் எனலாம்.

அதே நேரத்தில் இன்னொரு அம்சம் குறித்தும் யோசிக்க வேண்டும். காந்தியின் போராட்ட வடிவங்கள் உடலை வருத்தும் முறைமைகளைச் சார்ந்தவை. ஆனால் பெரியார் உடலை வருத்தும் போராட்ட வடிவங்களை நிராகரித்தார். சத்தியாக்கிரகம் சண்டித்தனம் என்பதும், உண்ணாவிரதம் முட்டாள்தனம் என்பதும் அவரது கருத்து.

இருந்த போதும் தூலமான வன்முறையை அவர் நிராகரித்தார். வன்முறை என்கிற சொல்லாடலிலுள்ள குறைந்தபட்ச உடன்பாட்டுத் தன்மையையும், மென்மையையும், பெரியார் பயன்படுத்திய பலாத்காரம் என்னும் சொல்லாடல் பின்னுக்குத்தள்ளி அதற்கு முற்றிலுமான எதிர்மறை அம்சத்தை வழங்குகிறது.

ஆனால், எப்போதும் வன்முறையை நிராகரிப்பது சாத்தியமா, கிளர்ச்சிகளின்போது தன்னெழுச்சியாய் வெளிப்படும் குறைந்தபட்ச வன்முறை, அரச பயங்கரவாதத்திற்கு எதிரான எதிர் வன்முறைச் செயல்பாடுகள் ஆகியவற்றை எப்படி புரிந்துகொள்வது என்கிற கேள்விகள் மிகவும் முக்கியமானவை.

அதே நேரத்தில் 'எல்லா அதிகாரங்களும் வன்முறையுடனேயே தோன்றின, அவை வன்முறையாலேயே நிலைபெற்றன, அவை வன்முறையாலேயே அழிக்கப்படும்' என்கிற புரட்சிகரச் சூத்திரத்தை அப்படியே இந்தியச் சூழலுக்குப் பொருத்திவிட முடியாது. ஏனெனில் இந்திய ஆதிக்கக் கருத்தியலாகிய பார்ப்பனியம் தூலமான வன்முறைகளை விடவும் கருத்தியல் சார்ந்த வன்முறைகளையே பெரிதும் நம்பியிருக்கிறது.

இந்திய ஆளும் வர்க்க வன்முறை கட்புலனாகா வன்முறை (invisible violence) வன்முறையைக் கைக்கொண்டு பார்ப்பனியத்தை அழித்தொழித்த முன்மாதிரிகளும் நமக்கில்லை, இத்தகைய சூழலில் மக்களை நேசிப்பவர்களும், எதிர் அரசியல் செயற்பாட்டாளர்களும் 'வன்முறை' குறித்த உரையாடலைத் தொடங்க வேண்டியது அவசியமென்றே தோன்றுகிறது.


சில குறிப்புகள்:

1. நக்சல்பாரிகளை அரசு ஒடுக்கியபோது பெரியார் ஆதரித்ததான தகவல், புதியகலாச்சாரம் இதழில் வெளிவந்த 'பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்' கட்டுரைத் தொடரில் படித்த நினைவு. ஆண்டு நினைவில்லை.

2.சமீபத்தில் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தைப்' படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1938 தொடங்கி 1969 வரையிலான நிகழ்வுகளைக் கூறும் அந்நூலில் 1938ல் நடைபெற்ற முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிப் பல்வேறு போராட்டங்களில் மு.கருணாநிதி பங்குபெற்றது விவரிக்கப்படுகிறது. ஆனால், கலைஞரும் சரி, அண்ணாதுரை உள்ளிட்ட திமுக முன்னோடிகளும் சரி பெரியார் இயக்கத்தில் இருந்தபோதும் மொழிப் போராட்டங்களிலேயே ஈடுபட்டிருந்தார்களே தவிர சாதியழிப்புப் போராட்டங்களில் அல்ல. "1930களுக்குப் பிறகு மொழிப்போர் பெரியாரியக்கத்தின் தன்மையையே மாறியது" என ஆய்வாளர் வ.கீதா அடிக்கடி கூறுவதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

3.காந்தியின் போராட்ட வடிவங்களைச் சமண மரபோடு இணைத்துச் சொன்னவர், தமிழ் மென்பொருளாளரும், வேறு பெயரில் சில சிறுகதைகளை எழுதியவருமான நண்பர் இரா.துரைப்பாண்டி.

உதவியவை:

1. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்- ஆனைமுத்து தொகுப்பு
2. திராவிடர் கழகம் வெளியிட்ட 'பெரியார் களஞ்சியம்' தொகுதிகள்.
3.உலகத்தலைவர் பெரியார்- வாழ்க்கைவரலாறு பாகம்2 - திராவிடர்கழக வெளியீடு.
4.திராவிடத்துவா - சேம்ஜி,
5.அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் ஏன்? - பெரியார் திராவிடர் கழக வெளியீடு.
6. பெரியார்கணிணி - பேராசிரியர் மா. நன்னன்
6.thamilachi.blogspot.com

(16.09.2007 அன்று திருப்பத்தூர் தூயநெஞ்சர் கல்லூரியும் பகுத்தறிவாளர்கழகமும் இணைந்து ஏற்பாடுசெய்த 'தமிழ்ச்சமூகமும் பகுத்தறிவும்' கருத்தரங்கில் பேசியதன் எழுத்துவடிவம்)

சொற்கள் நிரம்பிய தனிமையும் தனிமை நிரம்பிய சொற்களும்ஈழத்தின் போர்ச்சூழல் வாழுமிடத்திடத்தினின்று துரத்தியடிக்க, ஒரு பனிபடர்ந்த பிரதேசத்தில் அடைக்கலமாகிப் பின் அங்கிருந்தும் புலம்பெயர்ந்து மொழி வழியாய்ப் பல்லாயிரம் ஆண்டுகளாய்த்த் தொடர்புடையதாய்ச் சொல்லப்படும் 'தாய்'த்தமிழகத்தின் தலைநகரத்தில் வாழநேர்ந்ததன் மனப்பதிவுகளாய் வெளியாகியுள்ளது கவிஞர் தமிழ்நதியின் முதல் கவிதைத்தொகுதியான 'சூரியன் தனித்தலையும் பகல்'. ஈழம், கனடா, தமிழகம் என வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழ்தலும் வாழ்தலின் நிமித்தமுமான புதிய, பழைய உறவுகள், புறக்கணிப்பு, முகம் முன் நீளும் கேள்விகள், அலைக்கழிப்பு, அங்கீகாரம், வெறுமை, தனிமை, கவிதை, ஆயாசம், இளைப்பாறுதல், கண்ணீர், புன்னகை, பிரிவு என அனைத்தும் பிழிந்த சாற்றின் உப்புச்சுவையும் இனிப்புருசியுமென ஒரு எழுத்துப்பலகாரமாய் மாறியிருக்கிறது இத்தொகுப்பு.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை ஒரு வசதிக்காய்ப் போர் பற்றிப் பாடுபவை, இருப்பற்று அலையும் துயர் குறித்துப் பேசுபவை, மீறலின் வேட்கை குறித்து மயக்கத்துடன் கதைப்பவை எனப் பிரித்துக்கொள்ளலாம். ஆனாலும் இத்தகைய சட்டகங்களையும் தாண்டி சட்டகத்தின் வெளிபிதுங்கும் சதைக்கோளங்களும் இல்லாமலில்லை.

மணிக்கட்டோடு துண்டிக்கப்பட்ட கையை நாய் இழுத்துச்செல்லுமோ என்றஞ்சி, தானே புதைக்கும் அவலம், சக்கரநாற்காலிகளில் வாழ்வினிருப்பு குறுக்கப்படுவதன் துயரம், உடல்கள், உடல்கள், மேலும் உடல்கள், உடல்களா பிணங்களா எனப்பெயர் சூட்ட இயலாது மயங்கிக்கலங்கும் சூன்யக்கணம் என விரியும் போர்க்காட்சிகள் வாசிப்போரின் முகத்திலறைய வல்லவை. பாரதி சொன்னதைப்போல, 'ஈரத்திலேயே பிறந்து ஈரத்திலேயே வாழ்ந்து, ஈரத்திலேயே இருக்கப்பழகிவிட்ட ஈரத்தமிழர்களுக்கு' ஈழத்தமிழர்களின் அவலங்களைச் சொல்லத்தவறவில்லை கவிதைகள்.

அரைநூற்றாண்டாய் எவ்வித அரசியல் போராட்டங்களுமற்று வெற்று மிதப்பில் அலையும் தமிழ்மனங்களின் மனச்சாட்சியின், அப்படியென ஏதேனுமிருப்பின் , அதன் நெஞ்சாங்குலை மீது ஏறிமிதிக்க,

" எந்ததேவதைகளைக் கொன்றழித்தோம்
எல்லாத்திசைகளிலும் இருளின் ஆழத்தில்
'அம்மா' என விசும்பும் குரல்கேட்க'

என்னும் வரிகளே போதுமானவை.

"சூன்யம் நிழலெனப்படந்து வருமித்தெருக்கள்
இருந்தாற்போல விழிக்கலாம்
மிதிவெடியாய்,
நிலக்கண்ணியாய்' என்னும் வரிகளில் படிமம் விரிகிறது.

இவ்வரிகள் ஏதும் நிகழலாம் என்னும் சாத்தியத்தையும் சாத்தியமின்மையையும் ஒருசேரச் சமன்படுத்தும் வரிகளாய் மட்டுமல்லாது இருப்பு அழிபடுவதை எக்கணமும் எதிர்நோக்குவதே வழமையாய்ப் போன வாழ்வுகுறித்தும் பேசுவதாய் விரிகின்றன. மேலும் இன்னொரு கவிதையின் இன்னொரு வரி 'ஏவுகணைகள் கூவிக்கொண்டிருக்கலாம்' என்கின்றது. கண்ணிவெடி, ஏவுகணைகள் போன்ற போர்க்கருவிகளோடு இணைத்துப்பேசப்பயன்படும் 'விழிக்கலாம்', 'கூவிக்கொண்டிருக்கலாம்' என்னும் சொற்களின் பயன்பாடு குறித்து யோசிக்கையில் துயரங்களின் இருப்பில் அழிவுகளினூடாகவே ஒரு எதிர்நிலையில் அழகியல் பிறக்கிறதோ எனத் தோன்றுகிறது.

இருப்பற்று அலையும் துயர்களில் சாட்சியமாகும் போர்க்காட்சிகள், மனிதத்தலைகளை உரலிலிட்டு பற்களால் இடிக்கும் கலிங்கத்துப்பரணியின் மரபை வரித்துக்கொண்ட தமிழ்மரபை யோசிக்கச் செய்பவை. வெற்றி, தோல்வி என்னும் இருமைகளின் அடிப்படைகள் என்பவை அடிப்படையில் ஏதேனுமொரு மரணம் மட்டும்தான் என்னும் உண்மையைப் பரீசீலிக்கத் தூண்டுபவை.

"பாதி எரிந்துபோன மிகச்சிறிய சட்டையை
நடுங்கும்விரல்களால் பற்றுகிறேன்
ஐயோ என் சிறுமொட்டே' என பதறித்துடிக்கும் மனம் வெறுமனே சிறுமொட்டிற்கானதுமட்டாயில்லை. தன் காலுரசும் பட்டுப்பூனைக்குட்டிகள். வால்சுருட்டிப் படுத்திருக்கும் பொன்னி என்னும் நாய்க்குட்டி ஆகியவை குறித்தும் கவலைப்படவும் அவற்றின் இருப்பு என்னாயிற்று என அலைவுறவும் தயங்கவில்லை.

இன்னும் விரிந்த ஒரு பயணத்தில் இந்தவுலகம் வெறுமனே வெறும் மனிதர்களுக்கானதுதானா, போர்களைக் கைக்கொண்ட மனிதர்களின் போர்களால் அழிபடுபவை வெறும் மனித உடல்கள் மட்டும்தானா என்று யோசிப்பு நீள்கிறது. ஒரு குண்டுவெடிப்பில் சிதறிக் குடல்கிழிந்து சாகும் நாய்க்காகவும் கவலையுறும் மனம் இருக்கும்வரை மட்டும்தான் கவிதை எழுதுதல் சாத்தியமாகிறது.

"எனக்கு உன்னைத் தெரியாது
நீ நித்திலா, யாழினி, வாசுகி"

இத்தகைய குரல்கள் இரு எதிரெதிர்த்தளங்களினின்றும் வெளிவருவதற்கான சாத்தியங்களைக் கொண்டவை. அதிகார வெறியும் மூலதனப்பசியும் கொண்டலையும் ஆதிக்கக்கருத்தியலுக்கும் பெயர்களும் அடையாளங்களும் தேவையில்லை. எண்கள், பினங்களின் எண்னிக்கைகள், அல்லது அடிமைகளாய் வாழச் சம்மதித்தோர் குறித்த கணக்கீடுகள் மட்டுமே போதுமானவை என்னும்போது பெயரும் அடையாளமும் எவ்வகையிலும் அவசியமற்றதாய் மாறிப் பயனொழிகிறது.

அதேநேரத்தில் அதிகாரத்திற்கெதிராய்க் கிளம்பும் எதிர்க்குரல்களும் பெயர்களையும் அடையாளங்களையும் புறந்தள்ளி ஒன்றிணைப்பைக் கோருகின்றன. ஆனால் இவை வெறுமனே விசித்திர முரண் என எண்ணாது முன்னதின் குரல் அடையாளத்தகர்ப்பை நிகழ்த்துவதையும் பின்னதன் குரல் அடையாளங்களைத் தாண்டி வித்தியாசங்களூடே ஒன்றிணைப்பைக் கோருவதற்கு அன்பையும் பாதிப்பையுமே முன்நிபந்தனையாய் நிறுத்துவதன் இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள ஏலும். இத்தகைய புரிதல்கள் சாத்தியப்படுகிறபோது இந்தப் பட்டியலில் நித்திலா, யாழினி, வாசுகி மட்டுமில்லாது, பாலஸ்தீன, மியான்மர், உகாண்டா, சோமாலியா, குஜராத், சட்டீஸ்கர் என விரியும் ஒடுக்கப்பட்ட மனிதத்தன்னிலைகளையும் சேர்த்து விரிவடையலாம்.

எல்லா யுத்தங்களிலும் அதிகாரக்கொடி நாட்டப்படுகிற நிலங்களாய்ப் பெண்ணுடல்கள் மாற்றப்படுவதையும் மாற்று இனப்பெண்களின் உடலைச் சிதைப்பதை தனது ஆணடையாளத்திற்கும் இனப்பெருமிதத்திற்கும் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடப்படுவதையும் 'ஆண்மை', 'விசாரணைச்சாவடி' என்னுமிவ்விரு கவிதைகள் பதிவுசெய்கின்றன.

போர்துரத்தச் சரணடையும் நிலப்பரப்புகளில் காட்டப்படும் பாரபட்சத்தையும் மொழியால் ஒன்று என்னும் பெருங்கதையாடல்களினடியிலும் ஒதுக்கலின் துகள் படிந்துகிடப்பதையும் உணர்த்துவதற்கு,

"காய்கறிவிற்பவன் கண்களைச் சுருக்கி
நான்காவதுதடவையாகக் கேட்கிறான்
கேரளாவா " என்னும் வரிகளே போதுமானவை.

இந்ததொகுப்பின் ஆகச்சிறந்த கவிதைகளிலொன்றான 'பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது' இப்படி முடிகிறது..

"எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்
இலங்கையில்தான் போர்நடப்பதாக"

போர்நடக்கும் பூமியையும் தாண்டித் தனது கொலைக்கரங்களை விரித்துவைத்திருக்கும் போரின் பெருங்கருணையை என்னென்பது!

அதேபோல் இன்னொரு சிறந்த கவிதையான 'அற்றைத்திங்கள்' தனது வரலாற்றுக் கண்ணியை எதிர்மரபிலிருந்து தேர்ந்துகொள்கிறதெனலாம். போரும் புலம்பெயர்தலும் நேற்றுமுதல்நாளோ அதற்கு முதல்நாளோ தோன்றியதில்லை. அரசு என்னும் ஆளும்வர்க்கக்கருவி உருவானபோதே இவையிரண்டும் தொடங்கிவிட்டன. புலம்பெயர்தலின் துன்பம் பூமியில் வாழும் எல்லாம் மானுட இனக்குழுக்களுக்கும் சொந்தமானவையே. அவை எப்போதாவது வரலாற்றின் எந்தக் காலகட்டங்களிலாவது இதை அனுபவித்திருக்கிறது, என்றபோதும் அதை எழுத்தில் முதன்முதலில் பதிவுசெய்த பெருமை தமிழுக்கே உரியது. அன்றைய ஏகாதிபத்திய அரசுகளான மூவேந்தர் படைகள் பாரியைக் கொன்று, பறம்புமலையை கைப்பற்றி, பாரிமகளிரைத் தனிமைப்படுத்தியபோது, அவ்விரு மனங்களின் அழுகுரலே 'அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்' எனப் போர்வெறியைப் பதிவுசெய்தன. பறம்புமலையில் உடைந்துசிதறிய பாரிமகளிரின் கண்ணீர்த்துளிகள் நூற்றாண்டுகளைக் கடந்துவந்து தமிழ்நதியின் கவிதைகளையும் ஈரப்படுத்துகின்றன இப்படியாக,

"அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
இப்படியா கசிந்தழுதீர் தோழியரே"

புகலிடவாழ்வு குறித்த தமிழ்நதியின் கவிதைகள் குறித்துப் பேசும்போது ஒரு முக்கியமான அம்சத்தையும் கவனிக்கவேண்டும். 'கலாச்சாரம் போச்சு, மதம் போச்சு, பண்பாடு போச்சு, கோவில்போச்சு' என்னும் போச்சுப்புலம்பல்களாயில்லாது புகலிடவாழ்வில் ஏற்படும் அடையாளச்சிக்கல்களையும் தனிமைத்துயரங்களையும் மட்டுமே பேசுவது ஒரு ஆறுதல். 'எப்படியும் நாடுதிரும்புவோம்' என்பது வெறுமனே விருப்புசார்ந்த விஷயம் என்பதிலிருந்து சபதங்களாய், ஆவேசங்களாய்ச் சவால்களாய் மாறுவதன் அபத்தத்தை 'ஊருக்குத்திரும்புதல்' என்னும் கவிதை பகிடிசெய்கிறது.

"நதியின்மேற்பரப்பில்
தாகித்தமான்களைப்
புலிகள் பசியாறிய
குருதிகலந்து கூடவே ஓடிவரும்" என்னும் அதிர்வுவரிகளைத் தாங்கிய 'நதியின் ஆழத்தில்' என்னும் கவிதை,

" எத்தனைபேர் உமிழ்ந்த எச்சில் / எத்தனைபேர் எறிந்த கற்கள்/ சிறுநீர் மலம் விந்து'.... எனத் தொடர்வதன்மூலம் பட்டினத்தாரின் 'எத்தனைபேர் தொட்டமுலை, எத்தனைபேர் நட்ட குழி எத்தனைபேர் பற்றியிழுத்த இதழ்' என்னும் மொழிகளைத் தலைகீழாய்ப் பிரதியிடுகிறது.

பட்டினத்தாரின் குரல் ஆண்மய்யக்குரலாவும் உடலொடுக்கம் சார்ந்ததாவுமிருக்க, கவிஞரின் குரலோ உடலைகொண்டாடுவதாய் ஆண்மய்யச்சமூகம் உருவாக்கிவைத்த அத்துக்களை மீறும் எத்தனங்களையும் விருப்பையும் கொண்டதாயுள்ளது. ஒருநாளும் இரண்டு அறைகளும், வண்ணங்களாலான நீர்க்குமிழி, துரோகத்தின் கொலைவாள் எனப் பலகவிதைக்ளைச் சுட்டலாமெனினும் 'காதல் காலிடுக்கில் வழிகிறது அன்பே' என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பினது மட்டுமில்லாது தமிழில் பதிவுசெய்யப்பட்ட வரிகளில் சிறந்த வரிகளிலொன்றாகத் திகழும் வரியைச் சுட்டினாலே போதும். 'கலவி முடிந்தபெண்னின் கண்களென கிறங்கிக்கிடக்கிறது மழைதோய்ந்த இக்காலை' என விரவிப்பரவுகிறது வேட்கையின் மொழி.

வித்தைக்காரன் என்னும் கவிதை, புரிதலின் பின்னுள்ள பிரச்சினை, கோபத்தின் ஊற்றுக்கால், தான் மற்றும் மற்றமைக்கான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுதல், பித்தநிலையின் ஒருமை மற்றும் மற்றமையோடு ஒன்றுபடல் எனப் பல்வேறு பாதைகளில் பயணித்து நம்மை மயக்குகிறது.

தமிழின் மிகமுக்கியமான தொகுப்பு, முதல்தொகுப்பிலேயே கவித்துவத்தின் உச்சபட்ச சாத்தியங்களைப் பரிசோதித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுசொல்லும் அதேவேளையில் பிதாமகனின் வருகை, கலகக்காரன், தண்டோராக்காரன், எழுது இதற்கொருபிரதி போன்ற கவிதைகள் வாசிப்பின் சுகானுபவத்தைத் தடைசெய்து ஏமாற்றமளிக்கின்றன என்பதையும் பதிவுசெய்யவேண்டியிருக்கிறது, உணர்வுகள் கவிதையாய்ப் பரிணாமம் அடையாது வெறுமனே வரிகளாய் நின்றுவிடும்போது அதை எதிர்கொள்வதில் வாசகனுக்கு எந்தப் பயனுமில்லை. சில கேள்விகளை முன்வைத்து பலவிசாரணைகளை நிகழ்த்துவது படைப்பின் சாத்தியம்தானெனினும் பல்வேறு தளங்களில் கேள்விகளை முன்வைத்துப் பரீசீலிக்காதபோது கவிதை வெறுமனே பொலிட்டிகல் ஸ்டேண்ட்மெண்டாகவே முடிந்துவிடும் என்பதற்கு உதாரணம் 'யசோதரா'.

தமிழ்நதியின் இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது மண்டோவும் ஷோபாசக்தியும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. வாதை, பிரிவு, அலைக்கழிப்பு, அடையாளச்சிக்கல், இருப்பின் சாத்தியம் குறித்த நிச்சயமின்மை என எல்லாம் தொடர்ந்தபோதும் தனது அவலங்களுக்குக் காரணமான அல்லது காரணமெனத் தான் நம்புகிற அதிகாரங்களையும் நிறுவனங்களையும் 'கலாய்க்கிற' மனோபாவம் கொண்டாட்டப்பெருவெள்ளமாய்ப் பெருக்கடுப்பது மண்டோவுக்கும் ஷோபாவுக்கும் சாத்தியமானது. ஆனால் 'இன்றொருநாள் எனினும்' என்னுமொரு கவிதையும் ஆங்காங்கே சில சிதறல்களும் தவிர அத்தகைய வாசிப்பனுவத்தை நிகழ்த்துவதற்குத் தமிழ்நதி அனுமதிக்கவில்லை.

எல்லோருக்குமிருப்பதைப் போல எனக்கு இந்தக் கவிதைத்தொகுப்பில் மிகமிகவும் பிடித்த கவிதை 'இன்றொருநாள் எனினும்'.

வாழ்வு, அரசியல், போராட்டம், மரணம், கலவி, காதல் என அனைத்தும் கணக்குகளாகவும் சூத்திரங்களாகவும் மாற்றப்படும் கணங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் ஒரு கறாரான கணக்காளனாயிருந்து இத்தொகுப்பை அளந்துபார்த்தால் இத்தொகுப்பில் அதிகம் புழங்கப்பட்டிருக்கும் சொற்களிரண்டு. 'சொற்கள்' மற்றும் 'தனிமை'யே அவை.

'நேற்றிரவையும் குண்டுதின்றது' எனத்துவங்கும் தொகுப்பு, 'என்னதான் இருக்கிறது தான் கவிதையென நம்பும் ஒன்றைத்தவிர' என்றவாறு முடிகிறது.

சொற்களைத் தனிமையாலும் தனிமையைச் சொற்களாலும் இட்டு நிரப்பமுயலும் எத்தனங்களினூடே வென்றும் தோற்றும் விளையாட்டை நிகழ்த்தியவாறே பட்டப்பகலில் தனித்தலைகிறது சூரியன்.


சூரியன் தனித்தலையும் பகல் - கவிஞர் தமிழ்நதி
வெளியீடு : பனிக்குடம் பதிப்பகம்
பக்கங்கள் : 64
விலை : ரூ 40/-

ஞாநியின் வக்கிரம்

எழுத்தாளர் ஞாநி விகடன் இதழில் தமிழகமுதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நிலை குறித்து எழுதிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. கருணாநிதி முதுமையின் இயலாமையாலும் தள்ளாமையாலும் அவதிப்படுகிறார் என்றும் அவர் முதல்வர் பொறுப்பை விட்டு விலகவேண்டுமென்னும் ரீதியிலும் எழுதியிருக்கிறார்.

நான்குபக்கங்களுக்கு நீளும் அக்கட்டுரை மேலோட்டமாக கரிசனமும் அக்கறையும் கொண்டதாகத் தோன்றினாலும் அதன் அடியாழத்தில் தன் வக்கிரத்தைக் காட்டிப் பல்லிளிக்கிறது. கருணாநிதியின் முதுமை குறித்து முழுநீளத்திற்கு விவரித்திருக்கிறார். கருணாநிதி 'ஒண்ணுக்குக்கு போக முடியாமல் வேட்டியை ஈரமாக்கிக்கொண்டார்' என்று ஞானி எழுதுகிறார். இது 'சமீபத்தில் கேட்ட வீடீயோகாட்சியில் பதிவான உரையாடல்' என்கிறார். அது என்ன வீடியோகாட்சி என்பதைக் குறிப்பிடவில்லை. எந்த ஆதாரமும் காட்டாமல் போகிற போக்கில் மனவிகாரத்தைக் கொட்டிவிட்டுப்போவதுதான் ஒரு எழுத்தாளருக்கு அழகா?

கருணாநிதியின் உடல்நிலை குறித்துக் கவலைப்படவேண்டியவர்கள் கருணாநிதியும் அவர் குடும்பத்தாரும் அவர் கட்சிக்காரர்களும்தானே தவிர ஞானியோ நாமோ அல்ல. இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் ரவிக்குமார் 'கருணாநிதிக்குப் பிறகு திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு யார் வரவேண்டும்' என்று எழுதியிருந்தார்.

இந்த அக்கறையெல்லாம் அறிவுஜீவிகளுக்கு எதற்கு? வயதானாலேயே ஒருவர் பொதுவாழ்க்கையில் ஈடுபடமுடியாதென்றால் காந்தி என்ன செய்தார்? பெரியார் மூத்திரப்பையைச் சுமந்துகொண்டு நாலுபேர் தூக்கிவந்து மேடையில் அமர்த்தித்தான் பேசினார். பெரியாரின் செயல்பாடுகளையும் கருணாநிதியின் செயல்பாடுகளையும் ஒப்பிடமுடியாதென்றாலும் வயதுமுதுமையைக் காரணம் காட்டியே ஒருவரது பொதுவாழ்க்கையை நிராகரித்துவிட முடியாது என்பதற்காகவே இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஞாநி ஒரு பார்ப்பனர் என்பதாலேயே அவரது கருத்துக்களைப் புறந்தள்ளவேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஜெயேந்திரன் விவகாரத்திலும் குஷ்பு பிரச்சினையிலும் அவரது நிலைப்பாடுகள் நேர்மையானவையாகவும் உறுதிமிக்கவையாகவுமிருந்தன. ஆனால் அவர் சமீபகாலமாக ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

கருணாநிதிக்குச் சொன்ன அறிவுரையை ஞாநி ஏன் அடேல்பிகாரி வாஜ்பேயிக்கும் சங்கர்தயாள்சர்மாவிற்கும் சொல்லவில்லை என்று கேள்வியெழுப்புவது தவிர்க்கவியலாதது.