பெரியாரின் போராட்ட முறைமைகளும், அரசு ஆதரவு மற்றும் வன்முறை குறித்த கேள்விகளும்தனது அய்ம்பதாண்டுகால வாழ்க்கையைத் தமிழக அரசியல் களத்தில் செலவழித்த பெரியாரின் அரசியற் செயற்பாடுகள் பரப்புரை, போராட்டம் , எழுத்து என பல்வேறு களங்களில் அமைந்தன. தனது வணிக வாழ்க்கையின் போது கடனைத் திருப்பித் தராத பார்ப்பனரை இசுலாமிய அரசு ஊழியரிடம் ஒப்படைத்ததன் மூலம் தந்தையிடம் செருப்படி வாங்கியதிலிருந்து (1902 ஆம் ஆண்டு) தனது இறுதிக்காலக் கட்டங்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்காய்க் கருவறை நுழைவுப் போராட்டம்(1973) அறிவித்தது வரை எழுபதாண்டுகாலம் போராட்டங்களின் மீதான அபிமானியாய் வாழ்ந்தவர் பெரியார் ஈ.வெ.ரா.

தனது பேச்சு, எழுத்துப்பிரதிகளில் அவரால் பயன்படுத்தப்பட்ட சொல்லாடல்களைப் புரிந்துகொள்வதன் மூலம் பெரியாரின் செயல்பாட்டின் உளவியலையும், கருத்தாக்கங்கள் பற்றிய அவரது புரிதலையும் அறிந்து கொள்ள இயலும். போராட்டம் என்னும் வார்த்தைக்குப் பதிலாக அவர் 'கிளர்ச்சி' என்னும் வார்த்தையையே பாவித்தார். 'புரட்சி' என்னும் சொல்லாடலின் இடத்தை 'தலைகீழாய்க் கவிழ்ப்பது' என்று நிரப்பினார். 'வன்முறை' என்னும் சொல்லாடலைப் 'பலாத்காரம்' என்னும் சொல்லாடலின் மூலம் பதிலீடு செய்தார்.

பெரியாரின் போராட்டங்கள் முழுமையுமே குறியீட்டழிப்புப் போராட்டங்களாகவே அமைந்தன. இராமன் உருவப்படம் எரிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு, தமிழ்நாடு தவிர்த்த இந்திய தேசப்படத்தைத் தீயிடுதல், தேசியக் கொடியைக் கொளுத்துதல், இந்திப் பெயர் அழிப்பு, பிராமணாள் கபே பெயரழிப்பு என அவர் அறிவித்த போராட்டங்கள் பெரும்பான்மையும் அழித்தல், கொளுத்துதல், உடைத்தல் எனவாறே அமைந்தன. இந்து பார்ப்பனக் குறியீடுகளால் இட்டு நிரப்பப்பட்ட தமிழ்மனங்களினின்று அக்குறியீடுகளை அகற்றுதல், புனிதமெனக் கட்டமைக்கப்பட்ட குறியீடுகளைப் பலரறிய அவமானப்படுத்துதல் என்பதாகவே அவரது போராட்ட வடிவங்கள் அமைந்தன. எனினும் அவரது போராட்டத்தின் இலக்கு பெருந்தெய்வ மற்றும் பெருஞ்தேசியக் குறியீடுகளை நோக்கியே அமைந்திருந்தன என்பதும் அவரால் இழிவுபடுத்தப்பட்ட தெய்வங்களில் நாட்டார் சிறுதெய்வங்களும் பெண் தெய்வங்களுமில்லை என்பதும் பலரும் கூறியதே.

'தலைகீழாகக் கவிழ்ப்பதுதான் புரட்சி. அதை யாராவது எதிர்த்தால் அந்த வேலையைக் குஷாலாகச் செய்ய வேண்டியதுதான்' என்ற பெரியார், தன்னை 'ஒரு அழிவுவேலைக்காரன்' என்றே பிரகடனப்படுத்தினார். எனவே அவரது போராட்ட வடிவங்கள் தலைகீழாய்க் கவிழ்க்கும் கலகத்தன்மை வாய்ந்ததாய் அமைந்ததில் வியப்பில்லை. ஆனால், அவரது போராட்ட வடிவங்கள் அத்துக்களை மீறுவதாயிருக்க, அவரது போராட்ட முறைமைகளோ அதற்கு நேர்மாறாயிருந்தன.

'அழிவுவேலை' என்பதை நிறுவனங்கள், பிரதிகள் மற்றும் குறியீடுகளை அழித்தொழிப்பதாய் அர்த்தப்படுத்தினாரேயல்லாது தூலமான வன்முறையை அவர் ஆதரித்தாரில்லை. 1953ல் அன்றைய தமிழக முதல்வர் ராஜாஜூ குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, 'திராவிடர் கழகத் தோழர்கள் மண்ணென்ணையும், தீப்பெட்டியும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குலக்கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கு ராஜாஜூக்கு கெடு விதிப்போம். அந்த கெடுவிற்குள் அவர் திரும்பப் பெறாவிட்டால் நான் அறிவித்தவுடன் அக்கிரகாரத்தைக் கொளுத்த வேண்டும்' என்றார்.

3.11.1957 இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தஞ்சை தனி மாநாட்டில் பேசும்போது குறிப்பிடுகிறார். " எனது நாற்பதாண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக் கூட உதைத்ததில்லை, குத்தியதில்லை. ஒருவனுக்குக் கூட ஒரு சிறு காயம் பட்டதில்லை, கலவரமில்லாமல் நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்பவன். வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்கமுடியாது என்ற நிலைமை வருமானால் சும்மா இருந்தால் நான் மடையன்தானே? ஒரு ஆயிரம் பார்ப்பானையாவது கொன்று, ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது கொளுத்தி, ஒரு நூறு பார்ப்பனர்களையாவது அதில் தூக்கிப் போட்டாலொழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்?" என்றெல்லாம் கூடப் பேசினார்.

ஆயினும் இதெல்லாம் அவ்வப்போதைய உணர்ச்சி வெளிப்பாடுகளாய் அமைந்தனவே தவிர பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறையை அவர் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. அதற்கான மகத்தான உதாராணமாய்க் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1948 காலத்திய சூழலைச் சொல்லலாம். பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மண்ணாகிய மகாராட்டிரத்தில் பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்பாடுகள் நிகழ்ந்தன. காந்தியைக் கொன்றது பார்ப்பனர் என்கிற உண்மையின் அடிப்படையில் பார்ப்பனர்களுக்கு எதிராய் வன்முறையை ஏவிவிடுவதற்கானதொரு வாய்ப்பாக பெரியார் நினைத்திருந்தால் இதைப் பயன்படுத்திவிடுக்கலாம்.

ஆனால், அத்தகைய சாத்தியங்களை அறத்தின் அடிப்படையில் மறுக்கவே செய்தார். 31.01.1948 அன்று திருச்சி வானொலியில் காந்தியின் மறைவு குறித்துப் பேசும் போதும் காந்தியின் சிறப்புகள் குறித்துப் பேசினாரேயல்லாது. பார்ப்பன எதிர்ப்பு குறித்துப் பேசவில்லை. 12.02.1948அன்று காங்கிரசார் ஏற்பாடு செய்த 'காந்தியார் அனுதாபக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தவர்களும் கலந்துகொள்ளலாம்' என்று அனுமதியளித்த பெரியார், 'அக்கூட்டங்களில் பேச நேர்ந்தால், அனுதாபம் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு எந்தவிதமான கட்சிப்பேச்சுப் பேசாமல் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்' என்றும் கட்டைளை பிறப்பித்தார்.

19.02.1948 அன்று நன்னிலம் அருகிலுள்ள சன்னாநல்லூரில் காந்தி இறந்தபிறகு நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் பெரியாரும் கலைஞர் மு.கருணாநிதியும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். அப்போது மு.கருணாநிதி கோட்சேயின் பார்ப்பன அடையாளம் குறித்து ஆவேசமாகப் பேசும் போது, பெரியார் பேச்சை இடைமறித்து, ' காந்தியைக் கொன்றது ஒரு துப்பாக்கி, அவ்வளவுதான்' என முடித்து வைத்தார். (இந்த சம்பவத்தை மு.கருணாநிதியே பலமுறை தனது உரைகளில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எழுதிய 'உலகத்தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு பாகம்2'ல் இது 'விடுபட்டுள்ளது')

இப்படியான பல்வேறு சம்பவங்களையும், சந்தர்ப்பங்களையும் பெரியாரின் வாழ்க்கையிலிருந்து குறிப்பிட்டுக்கொண்டே போகலாம். அவரது முதலும் முடிவுமான அரசியல் செயற்பாடுகளின் அடிநீரோட்டமாக சாதியழிப்பும் பார்ப்பன எதிர்ப்புமே அமைந்திருந்தன என்பது வெளிப்படை. ஆனாலும் அவரே ஒருமுறை கூறியதுபோல, 'நான் பார்ப்பனர்களை எதிர்ககிறேனே தவிர வெறுக்கவில்லை. நான் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்கிறேனென்றால் நான் மனிதர்களை நேசிக்கிறேன்' என்பதாகவே அவரது மனப்பாங்கு அமைந்தது.

பெரியாரின் இத்தகைய வன்முறைமறுப்பு மனோபாவம் என்பது வெறுமளே பார்ப்பன எதிர்ப்பில் மட்டுமல்லாது ஆளும் வர்க்கக் கருவியாகிய அரசின் வலிமை வாய்ந்த ஆயுதநிறுவனமாம் காவல்துறையை எதிர்கொள்வதிலேயும் பிரதிபலித்தது. இதற்கு ஒரு உதாராணமாக 04.08.1948 'விடுதலை' இதழில் பெரியார் எழுதிய 'விளக்கமும் வேண்டுகோளும்' கட்டுரையைக் குறிப்பிடலாம்.

கட்டாய இந்தித் திணிப்பை அப்போதைய ராஜாஜூ அரசு கொண்டு வந்த பொழுது, அதற்கெதிரான போராட்டத்தில் தனது தோழர்களை ஆயத்தப்படுத்துவதற்கான அறிக்கையில் பெரியார், திராவிடர் கழகத் தோழர்களுக்கு விதித்த 14 நிபந்தனைகளே அவை. அவற்றில் சில நிபந்தனைகளைக் காண்போம்.

1.போலிஸ்காரரிடம் நமக்கு சிறிதும் வெறுப்பு, கோபம், விரோத உணர்ச்சி இருக்கக் கூடாது.

2.போலிஸ்காரர் முன்வந்ததும் அவரைப் பார்த்து புன்சிரிப்பு காட்டவேண்டும்.

3.கூப்பிட்டால், கைதுசெய்வதாய்ச் சொன்னால், உடனே கீழ்ப்படிய வேண்டும்.

4.போலிஸ்காரர் அடித்தால் மகிழ்ச்சியோடு, சிரித்த முகத்துடன் அடிவாங்க வேண்டும். நன்றாய் அடிப்பதற்கு வசதிகொடுக்கவேண்டும்.

5.போலிஸ்காரர் பக்கத்தில் வந்தவுடன் நீங்கள் மெய்மறந்து பக்தியில் இருப்பதுபோல் ஒரு மகத்தான காரியத்தை நாம் சாதிப்பதற்காக இந்த அற்ப அதாவது நமது சரீரத்ததிற்கு மாத்திரம் சிறிது தொந்தரவு, வலிகொடுக்கக் கூடிய காரியத்தை ஏற்கும் வாய்ப்பு(பாக்கியம்) நமக்குக் கிடைக்கிறது என்று வரவேற்கும் தன்மையில் இருக்க வேண்டும்.

6..போலிஸ்காரர் அடிக்கும் போது தடுக்கும் உணர்ச்சியோ, தடியை மறிக்கும் உணர்ச்சியோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.

7.அப்படிப்பட்ட தொண்டர், சர்வாதிகாரி யாராக இருந்தாலும் அவர்கள் அருள்கூர்ந்து கிட்டே வரக்கூடாது.

8.போலிசார் சுடுவார்களானால் பொது ஜனங்கள் ஓடலாம் ஆனால் தொண்டர்கள் மார்பைக் காட்டியே ஆகவேண்டும்.

இத்தகைய நிலைப்பாடுகளே பெரியாரின் எல்லாப் போராட்டங்களிலும் தொடர்ந்தது. இன்னொரு உதாரணம் குறிப்பிட வேண்டுமெனில் 1948ல் தமிழக அரசு கருஞசட்டைப்படையைத் தடைசெய்த நிகழ்வைக் குறிப்பிடலாம். திராவிடர் கழகத்தின் உதயத்தையட்டி முழுநேர இயக்கப்பணியாற்றக் கூடிய தோழர்களைக் கொண்ட ஒரு சார்பமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்பது பெரியாரின் எண்ணமாயிருந்திருக்கிறது. இதனாலேயே 1945ல் கருஞ்சட்டைப்படைக்கான அழைப்பை திராவிடர்கழகம் விடுக்கிறது. என்றபோதும் அந்த திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவராமலேயே கைவிடப்பட்டது. கருஞ்சட்டை அணிதல் என்னும் வழக்கம் அனைத்துத் தோழர்களுக்கும் பரவலாக்கப்பட்டது.

ஆயினும் இல்லாத கருஞ்சட்டைப்படையை 01.03.1948 அன்று தமிழக அரசு தடைசெய்தது.

" நம் இயக்கத்தில் திராவிடர் கழகத்தில் உள்ளோர்க்கு கருஞ்சட்டை அணிய வேண்டுமென்று வேண்டுகோள் விட்டதானது திராவிட சமுதாயத்துக்கு இருந்துவரும் சமுதாய இழிவு நீக்கிக் கொள்ளும் உணர்ச்சியை ஞாபகப்படுத்தவேண்டும் என்பதற்காக ஆகும். இதைக் கழக அங்கத்தினர் பலரும் மற்றும் சில திராவிடர்களும் ஆணும் பெண்ணும் ஆதரித்து அணிந்து வருகிறார்கள்.

இந்தப்படியாகக் கருஞ்சட்டை அணிந்தவர்களுக்கு எந்தவித நிபந்தனையோ எந்தவித ரிஜூஸ்டரோ, சேனைபோன்ற உடையோ யூனிபாரமோ அணிவகுப்போ ஆயுதமோ மற்றும் இவை போன்ற ஒரு சேனைக்கோ படைக்கோ உள்ள பயிற்சிகளோ மேற்கொண்டது கிடையாது.

இருப்பினும் சென்னை அரசாங்கம் இதை ஒர் அமைப்பாகக் கருதி சட்ட விரோதமாக்கியிருக்கின்றது என்ற போதிலும் நான் திராவிடப் பொது மக்களுக்கு அடிக்கடி தெரிவித்து வருவதுபோல் இது விஷயத்தில் நாம் கழக அங்கத்தினரும் திராவிட பொதுமக்களும் பொறுமையைக் கையாண்டு சாந்தமும் சமாதானமுமாய் நடந்து வரவேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன். இதற்கு மாறாக எங்காவது பயிற்சி அணிவகுப்பு இருக்ககுமானால் அதைக் கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும். என்பதைத் தவிர இந்த உத்தரவினால் நமக்குள் எவ்வித மாறுதலும் ஏற்பட்டுவிட்டதாகக் கருதவேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறறேன்." என்று 1.3.1948ல் விடுதலையில் பெரியார் அறிக்கையில் தெளிவுபடுத்துகிறார்.

உண்மையில் கருஞ்சட்டைப்படை மீதான தடை என்பது அடிப்படையில் திராவிடர்கழகத்தைத் தடை செய்வதற்கான முன்திட்டமாகவே இருந்தது. என்றபோதிலும் பெரியார் நிதானம் தவறாது இதை அணுகினார். கருஞ்சட்டைப் படைக்கு தடை விதிக்கப்பட்ட ஒரு வாரத்தில் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்த பெரியார், அதில் பேசும்போது, " இப்படி ஒரு தடையுத்தரவு போடுவதென்றால் சர்க்கார் இக்கழகத்தின்மீது, இதை அழிக்க வேண்டுமென்று கண்வைத்து இருப்பதாகத்தானே அர்த்தம்? பாமரமக்களுக்குத் திராவிடர் கழகத்தின் மீது அநாவசியமான பீதியை உண்டாக்குவானேன்? அவர்களுக்கு எங்கள் கழகத்தின்மீது வெறுப்பு ஏற்படும்படி செய்வானேன்?" என்று மனம் வருந்தியபோதும், "விரைவில் என்னைக் கைது செய்வார்கள். செய்தால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஜெயிலை இடித்து சிறை மீட்கப் போகிறீர்களா? அதெல்லாம் மகாமகா முட்டாள் தனம். என்னைப் போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றால் நீங்கள் அந்தப்பக்கம் ஒருவர்கூட வரக்கூடாது" என்று கூறவும் செய்தார்.

அதேகாலகட்டத்தில் 21.03.1948 அன்று மருங்கூரில் பெரியார் பேசவிருந்த கூட்டத்திற்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் ஆவேசத்தையும் மீறி தடையை மீறப்போவதில்லை என்று அறிவித்த பெரியார்,

"இன்று மருங்கூர் கூட்டத்திற்கு விதித்துள்ள தடை உத்தரவை மீற வேண்டுமென்று மக்கள் கொண்ட எழுச்சியை நீங்கள் அறிந்ததேயாகும். பல தோழர்கள் என் கார் முன்னதாக மறியலும் செய்தனர். அவ்வுத்தரவு நியா£யமோ அல்லது அநியாமோ எவ்வாறிருப்பினும் அதை இன்று உடளே மீறுவதில்லையென்று முடிவு செய்து மக்களுக்கு என்னாலியன்ற சமாதானமும் கூறியுள்ளேன். என்றாலும் உங்களின் மனம் நிம்மதியடையவில்லை என்பதை நான் நன்றாக அறிவேன்.

தடை உத்தரவை மீறவில்லையென்ற காரணத்தால் சிலர் நம்மை வேறுவிதமாகக் கருதலாம். என்னைப் பொறுத்தவரை நான் அவ்விதப் பேச்சுக்களைப் பற்றிக் கவலைப் படுபவனல்லன்.

தடை உத்தரவைச் சர்வ சாதாரணமாக மக்களுக்கு பயமின்றி மீறுவதென்பது வெறும்வீரர் பட்டத்தையோ அதன்மூலம் ஓட்டு பெறுவதற்கு அல்லது பதலி பெறுபவர்களுக்குச் சுலபமாயிருக்கலாம். அதுவே அவர்களுக்குக் கொள்கையாகவும் பிழைப்பாகவுமிருக்கலாம். ஆனால் நமக்கிருக்கும் பொறுப்பும், லட்சியமும் மிகமிக இன்றியமையாததாகும்" என்றார்.

இப்படி பெரியாரின் போராட்டங்கள் சட்டம் ஒழுங்கை மீறாத வரம்பிற்குட்பட்டவையாவே இருந்தன. வன்முறை குறித்த அதிருப்தியும் அவரது பேச்சுகளில் பிரதிபலித்தன. ஆனால், வன்முறை, சட்டம், ஒழுங்கு ஆகிய கருத்தாக்கங்கள் குறித்த பெரியாரின் அளவுகோல்கள், புரிதல்கள் மற்றம் அணுகுமுறைகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாதகமான விளைவுகளையே தந்தன என்றோ எதிர் அரசியல் செயற்பாடுகளுக்கு நீதி செய்தன என்றோ சொல்லிவிட இயலாது. அதற்கான சில உதாரணங்களைக் காண்போம்.

ஈரோட்டில் பெரியார் காங்கிரஸ் சார்பாளராகவும், ராஜாஜூயின் ஆதரவாளராகவும் இயங்கி நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் செயல்பட்டு வந்தாலும், அவரைத் தீவிர காங்கிரஸ்காரராக்கியது ஜாலியன் வாலாபாக் படுகொலைதான். இதை அவரே, 'ஈ.வெ.ரா.வுக்குத் தோன்றியது' என்னும் தனது வாழ்க்கைக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

"பஞசாப் படுகொலை நடந்த சமயம், அதன்பயனாய் நாடெங்கும் ஆத்திரம் பொங்கியெழுந்த காலம். பஞ்சாப் படுகொலையைக் கண்டித்து எங்கும் கண்டனக் கூட்டம். இந்த வருஷம் 1919 என்பது ஞாபகம், இந்த டிசம்பரில் மோதிலால் நேரு தலைமையில் அமிர்தசரசில் காங்கிரஸ் மகாநாடு ஏற்பாடாகியிருந்தது. நானும் ஆச்சாரியாரும் இந்துமித்திரன் கூட்டமும் ஏராளமான மக்களும் சென்றிருந்தோம். அங்குசென்று நேரில் அந்த படுகொலைச் சம்பவங்களைப் பார்த்தபிறகு எனக்கு மிகுந்த ஆத்திரம் வந்தது. நான் தீவிர தேசியவாதியாகிவிட்டேன்."

ஆனால் இத்தகைய கொடூரக் கொலைகளை நிகழ்த்திய ஜெனரல் டயரை உத்தம்சிங் என்னும் இளைஞன் சுட்டுப் பழிதீர்த்தபோது, ''ஒரு அனாமதேய இளைஞன் இவ்வழியான மிருகத்தனமான காரியத்தைச் செய்தான். இக்காரியம் உலகோர்முன் இந்தியர்களுக்கு மானக்கேட்டை உண்டுபண்ணும் ஈனக்காரியமாக முடிந்துவிட்டது. உண்மை இந்தியன் ஒவ்வொருவனும் வெட்கப்படுவான்." என்று கண்டித்து அறிக்கை விடுத்தார்.

அதேபோல் சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு சமஸ்தானங்களையும் இந்தியாவோடு இணைக்கும் முயற்சியில் இந்திய அரசு, குறிப்பாக அன்றைய மய்ய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் தீவிரங்காட்டினார். இந்திய அரசு அப்பகுதிகளில் ராணுவ பலங்கொண்டு ஒடுக்கமுயல, அதற்கெதிரான எதிர்வன்முறைச் செயல்பாடுகளும் வெடித்தன. அத்தகைய எதிர் வன்முறை அய்தராபத்திலும் எதிரொலித்தது.

அய்தராபாத் கலவரத்தை ஆதரிக்காதது மட்டுமல்லாது, இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் பெரியார் தயங்கவில்லை.

"நம்மைப் பொறுத்தவரையில் அய்தராபாத்துடன் இந்திய சர்க்கார் போர் தொடுக்குமானால், திராவிடப் பொதுமக்கள் இந்திய சர்க்காரை ஆதரித்தே தீரவேண்டும் எனக்கூறுவோம். பண உதவி மட்டுமல்ல. பெருவாரியாக இராணுவத்திலும் சேர்ந்து அய்தராபாத் குண்டர்களை விரட்டும் திருப்பணியில் ஈடுபடவேண்டியது அவசரமான தொண்டாகும். இந்திய சர்க்காரிடமிருந்து பிரிந்து தனி அரசாக இருக்கவேண்டும் என்பதே நம் குறிக்கோள் என்றாலும், அதற்காகக் குண்டர்களுக்கு அடிமையாவதையோ, அவர்களுடைய காட்டுமிராண்டித் தனங்களுக்கு இரையாவதையயோ, உண்மையான எந்தத் திராவிடனும் விரும்பவே மாட்டான். ஆகையால் நம் மாகாணம் அய்தராபாத் வெறியர்களின் அட்டகாசச் செயல்களால் அவதிப்படாமலிருக்க வேண்டுமானால், இந்திய சர்க்காரைக் காட்டிலும் அதிகமான பொறுப்பு நமக்குத்தான் ஏற்பட்டிருக்கிறது."(06.08.1948)

நக்சல்பாரிகளை அரசு ஒடுக்கியபோதும் பெரியார் ஆதரித்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. பெரியாரின் இத்தகைய நிலைப்பாடுகளுக்கு அடிப்படை வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்குமீறல் குறித்த அவரது அணுகுமுறையே என்பதை விளக்கத் தேவையில்லை. இதன் உச்சமாக, வெண்மணிச் சம்பவத்தின்போது பெரியார் விடுத்த அறிக்கையைக் குறிப்பிடலாம்.

கடந்த பத்தாண்டுகளாக ஒரு சில தலித் சிந்தனையாளர்கள் மற்றம் பார்ப்பனர்கள் பெரியாரைத் தலித் விரோதியாகச் சித்தரித்துவந்தனர். பெரியாரின் ஒரு சில கூற்றுகளை முன்னும்பின்னும் தொடர்பின்றித் துண்டித்து இதற்கு ஆகப் பயன்படுத்தினர். மேலும் கீழ்வெண்மணியில் 1968ஆம் ஆண்டு, 42தலித் மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவத்தில் பெரியார் எதிர்வினை எதுவும் ஆற்றாது கள்ள மவுனம் சாதித்தார் என்பது அவர்களின் குற்றச்சாட்டுகளிலொன்றாயிருந்தது.

ஆனால், 'எழுச்சி தலித்முரசு' மாதஇதழ்(மார்ச் 2006) வெண்மணிச் சம்பவத்தையட்டி பெரியார் விடுத்த அறிக்கையை வெளியிட்டது. மீண்டும் அவ்வறிக்கை விசமப்பிரச்சாரங்கள் செய்யவே அவரது எதிரிகளால் பயன்படுத்தப்பட்டது. எனது நோக்கில் அதை ஒரு தலித்விரோத அறிக்கையாக வாசிப்பு நிகழ்த்த எவ்வித முகாந்திரங்களுமில்லை. என்றபோதும் அது ஒரு வரவேற்கத்தக் அறிக்கையுமல்ல என்பதைக் கூறவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அவ்வறிக்கைகள் குறித்த விசாரணைகள் நம்மை வேறுசில மாற்றுப் பார்வைகளுக்கும், புரிதல்களுக்கும் இட்டுச்செல்லும்.

முதலாவதாக, பெரியார் வெண்மணிச் சம்பவத்தை, ஒழுக்கம் தவறிய ஒரு 'காலித்தனமான செயலாகவே' கருதினர் என்பதை அவரது கீழ்கண்ட கூற்றிலிருந்து புரிந்து கொள்ள இயலும்.

"காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி, தான் ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றையதின்ம் மக்களை சட்டம் மீறும்படி(அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்றுமுதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ்நிலைக்குப் போய்விட்டது. சட்டம் மீறுதல் மூலம் சத்தியாக்கிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காரியத்தைச் சாதித்துக் கொள்ள மக்களுக்கு காந்தி என்று வழிகாட்டினாரோ, அன்று முதலே மக்கள் அயோக்கியாகளாகவும் , காலிகளாகவும் மாறிவிட்டார்கள்".
(விடுதலை-28.12.1968)

மேலும், "......நாட்டுக்குச் 'சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்கு பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை, கொலைகாரத்தனம், நாசவேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்கு பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளாந்தன என்றால் 1.காந்தியார் கொல்லப்பட்டார். 2.தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன. 3.போலிஸ்அதிகாரிகள் கட்டிப்போட்டு நெருப்பு வைத்துக்கொளுத்தப்பட்டனர். 4.நீதிஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பலவாகனங்கள்(பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன. 5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம் தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள்.''

பெரியார் மேறகண்ட சமபவங்களை அடுக்குவதன் மூலம், வெண்மணிச் சம்பவத்தைப் 'பல பிரச்சினைகளில் ஒன்றாகப்' பார்ப்பதையும் அதற்கான அடிப்படை ஒழுக்கமும் நீதியும் தவறிய காலித்தனம் என்றே அவர் கருதுவதையும் உணரமுடியும்.

மேலும் இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக அவர் முன் வைப்பது நம்மை இன்னும் திகைப்பிலாழத்தும்.

"இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், 'ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு
'அரசநாயகம்' ஏற்படவேண்டும் " என்பதோடு மட்டும் நிற்கவில்லை.

"...எனவே இன்றைய இந்த நிலை மாறவேண்டுமானால் முதலாவது குறைந்தது.
1.காங்கிரஸ் திராவிட முன்னேற்றக்கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்கவேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகிய தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்றபிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3.எந்தக் கட்சி, ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுகளுக்கு, பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து இந்த ஆறாண்டுகாலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கை பெறுதல் இல்லையானால் தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது., இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேணடும்"

வெண்மணிச் சம்பவம் தி.மு.க ஆட்சியின்போது நடந்தது என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சி கட்டிய விவசாயிகள் சங்கத்திற்கு எதிராக கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் நிலப்பிரபுவால் நிகழ்த்தப்பட்டதே அக்கொடூரம் என்பதையும் கோபாலகிருஷ்ண நாயுடு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டபோது அவரை வரவேற்றவர் அன்றையக் காங்கிரஸ் கட்சிப் பிரமுகரும் இன்னொரு நிலப்பிரபுவுமான கருப்பையா மூப்பனார் என்பதையும் கோபாலகிருஷ்ண நாயுடுவை 'அழித்தொழிப்பு' மூலம் பழிதீர்த்தவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் என்பதையும் அறிந்தவர்களுக்கு பெரியாரின் மேற்கண்ட 'ஆலோசனைகள்' எவ்வளவு அபத்தமானவை மற்றும் ஆபத்தானவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும்.

பெரியாரின் இந்த அறிக்கையிலுள்ள பிரச்சினைகளை இரு சிக்கல்கள் வழியாகப் புரிந்து கொள்ளக் கூடலாம்.

முதலாவதாக வெண்மணிச் சம்பவம் அண்ணாதுரை முதல்வராயிருந்த போது நடைபெற்றது. முதன் முதலாக ஒரு பார்ப்பனரல்லாதார் ஆட்சிக்கு இந்த சம்பவம் பெருந்தீங்காய் அமைந்துவிடக்கூடுமென்ற சங்கடம் பெரியாருக்கு இருந்திருக்கலாம்.
ஏனெனில் அவர் காமராசர் ஆட்சியை அதற்குமுன் ஆதரித்தாலும், அவரே ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருப்பதைப் போல,
"காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருக்கின்ற யார்வாயிலும் சாதி ஒழிய வேண்டுமென்று ஒரு வார்த்தை வராது. சாதி ஒழியவேண்டும், சாதி இல்லை என்கின்ற கருத்துடைய எனது மதிப்பிற்குரிய காமராசர் அவர்களே கூட சாதி ஒழிய வேண்டுமென்று வாயால் சொல்ல முடியாதே, சொன்னால் காங்கிரசிலிருக்க முடியாது" (30.05.1973) என்னும் உண்மையையும் அவர் புரிந்து வைத்திருந்தார்.

பெரியார் எப்போதும் தேர்தல் அரசியலின் மீது மரியாதையோ ஈடுபாடோ கொணடவரல்ல. அவரைப் பொறுத்தவரை, 'அர்ச்சகன் பொறுக்கித் தின்ன கோயில், அதிகாரி பொறுக்கித்தின்ன அரசாங்கம்' என்பதைப்போல, 'அரசியல் வாதி பொறுக்கித்தின்ன அரசியல்'.

தேர்தல் அரசியலின் மீதிருந்த அவரின் ஈடுபாடின்மைக்கு சிறந்த உதாரணம் நீதிக்கட்சி, திராவிடர்கழகமாகப் பெயர் மாற்றமடைந்த வரலாறு, 27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற மாநாட்டிலேயே ஜஸ்டிஸ்கட்சி, திராவிடர் கழகமாக பெயர் மாற்றமடைந்தது என்பதும், இந்த தீர்மானத்தை அண்ணா முன்மொழிந்ததால் இது'அண்ணாத்துரை தீர்மானம்' என்று அழைக்கப்படுகிறது என்பதும் பலரும் அறிந்தது. ஆனால் இந்த 'அண்ணாத்துரை தீர்மான'த்தின் பின்னணியைப் பெரியார் விளக்குகிறார்.(உலகத்தலைவர் பெரியார் பக்155-156)

நீதிக்கட்சிக்குத் 'தென்னிந்திய திராவிடர்கழகம்' என்று பெயர் மாற்றுவது என்பதும், திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாது என்பதும் ஏற்கனவே முடிவுசெய்த ஒன்று. ஆனால், ஜஸ்டிஸ்கட்சியில் பதவி, அதிகாரச் சுகத்தை அனுபவித்தவர்கள் இதைத் தடுக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.'சண்டே அப்சர்வர்' பாலசுப்ரமணியம், கி. ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஒருகட்டத்தில் அண்ணாதுரையும் எதரிகளின் கையாள் என்று பெரியார் அய்யமுற்றார். ஆனால் அண்ணா, அந்த மாற்று அணித்தலைவர் எழுதிய ஒரு ரகசியக் கடிதத்தைப் பெரியாரிடம் காட்டித் தன்னை நிரூபித்தார். அதனாலேயே ஒரு சிறு மாறுதலோடு தீர்மானத்தை எழுதி, அண்ணாவாலேயே முன்மொழியச் செய்கிறார்.

இதன் மூலம் பெரியாருக்குத் தேர்தல் அரசியலின் மீதான நம்பிக்கையின்மையையும், அண்ணாதுரை போன்றவர்களுக்கு இந்தப் போக்கு சங்கடத்தை எறபடுத்தியதையும் அறியலாம்.

இவ்வாறாக வாழ்நாள் முழுவதும் தேர்தல் அரசியலைப் பெரியார் நிராகரித்த போதிலும், சில சமயங்களில் இன நலனுக்காக அரசுகளை ஆதரிக்கவும் பயன்படுத்தவும் செய்தார், இந்த போக்கின் நீட்சியாகவும் வெண்மணி அறிக்கையைக் கருதலாம்.

ஆனால் ஒரு அரசை எப்படிப் பயன்படுத்துவது(அ)கையாள்வது என்னும் சிக்கல் பெரியாருக்கு மட்டுமில்லை, எல்லா எதிர் அரசியல் செயற்பட்டாளர்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் இருந்திருக்கின்றன.

பார்ப்பனியத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சூத்திர, பஞ்சம மக்களை அரவணைத்ததன் மூலம் பவுத்தம் மக்கள் மதமாய் மலர்ந்தது. அது அரசமதமாக மாறிய போது இறுகி நிறுவன மயமானது. "அடிமைகள் பவுத்த சங்கத்தில் சேர்வதால் தனக்கு இடையூறு ஏற்படுகிறது" என்று ஒரு அரசர் முறையிட்ட பிறகு "அடிமைகள் தங்கள் ஒப்பந்த காலத்தை முடித்தபிறகே சங்கத்தில் சேரலாம்" என்றார் புத்தர்.

கம்யூனிச சமூகத்தில் அரசு உலர்ந்து உதிரும் என்றது மாக்சியம் ஆனால் பல் கம்யூனிஸ்டு கட்சிகளின் அரசுகளோ புரட்சிக்குப் பின் இறுகி நிறுவனமயமாகின பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது அபரிதமான நம்பிக்கை கொண்ட அம்பேத்கரால் ஒரு வெற்றிகரமான பாராளுமன்ற அரசியல்வாதியாய் நீடிக்க முடியவில்லை.

பெரியார் அரசுகளை ஆதரித்த போதும் தனது கருத்தியல்களில் சமரசம் செய்துகொண்டவரில்லை 1971ல் சட்டமன்றத் தேர்தலின் போது பெரியார் நடத்திய ராமன் உருவப்பட எரிப்பு போராட்டம் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு இடையூறு கொடுக்கக் கூடிய அளவிற்கு நெருக்கடியை கொடுத்தது. என்ற போதும் பெரியார் போராட்டத்தை கைவிட்டாரில்லை ஆனால் அத்தகைய உறுதித் தன்மையை இன்றைய திராவிடர்கழகம் ஏறக்குறைய கைகழுவிவிட்டது என்றே சொல்லலாம்.

எப்படி இருந்த போதிலும், அரசு ஆதரவு, எப்படி ஒரு அரசை கையாளுவது அல்லது பயன்படுத்துவது (How to handle the state?) என்ற கேள்விகள் இன்னமும் தொடர்கின்றன.

வெண்மணி அறிக்கையின் இன்னொரு பிரச்சினைக்குரிய அடிப்படை அம்சம் வன்முறை, சட்டம் ஒழுங்கு, அதை மீறல் குறித்த பெரியாரின் வழமையான புரிதல்கள்.

காந்தியிடமிருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியபோதும், சில காலங்களிலேயே அவரிடமிருந்து விலகி எதிர்த்திசையில் பயணித்தவர் பெரியார். என்ற போதும் இந்த வன்முறை மறுப்பு மனோபாவம் பெரியாரிடமிருந்த காந்திய அரசியலின் எச்சம் எனலாம்.

அதே நேரத்தில் இன்னொரு அம்சம் குறித்தும் யோசிக்க வேண்டும். காந்தியின் போராட்ட வடிவங்கள் உடலை வருத்தும் முறைமைகளைச் சார்ந்தவை. ஆனால் பெரியார் உடலை வருத்தும் போராட்ட வடிவங்களை நிராகரித்தார். சத்தியாக்கிரகம் சண்டித்தனம் என்பதும், உண்ணாவிரதம் முட்டாள்தனம் என்பதும் அவரது கருத்து.

இருந்த போதும் தூலமான வன்முறையை அவர் நிராகரித்தார். வன்முறை என்கிற சொல்லாடலிலுள்ள குறைந்தபட்ச உடன்பாட்டுத் தன்மையையும், மென்மையையும், பெரியார் பயன்படுத்திய பலாத்காரம் என்னும் சொல்லாடல் பின்னுக்குத்தள்ளி அதற்கு முற்றிலுமான எதிர்மறை அம்சத்தை வழங்குகிறது.

ஆனால், எப்போதும் வன்முறையை நிராகரிப்பது சாத்தியமா, கிளர்ச்சிகளின்போது தன்னெழுச்சியாய் வெளிப்படும் குறைந்தபட்ச வன்முறை, அரச பயங்கரவாதத்திற்கு எதிரான எதிர் வன்முறைச் செயல்பாடுகள் ஆகியவற்றை எப்படி புரிந்துகொள்வது என்கிற கேள்விகள் மிகவும் முக்கியமானவை.

அதே நேரத்தில் 'எல்லா அதிகாரங்களும் வன்முறையுடனேயே தோன்றின, அவை வன்முறையாலேயே நிலைபெற்றன, அவை வன்முறையாலேயே அழிக்கப்படும்' என்கிற புரட்சிகரச் சூத்திரத்தை அப்படியே இந்தியச் சூழலுக்குப் பொருத்திவிட முடியாது. ஏனெனில் இந்திய ஆதிக்கக் கருத்தியலாகிய பார்ப்பனியம் தூலமான வன்முறைகளை விடவும் கருத்தியல் சார்ந்த வன்முறைகளையே பெரிதும் நம்பியிருக்கிறது.

இந்திய ஆளும் வர்க்க வன்முறை கட்புலனாகா வன்முறை (invisible violence) வன்முறையைக் கைக்கொண்டு பார்ப்பனியத்தை அழித்தொழித்த முன்மாதிரிகளும் நமக்கில்லை, இத்தகைய சூழலில் மக்களை நேசிப்பவர்களும், எதிர் அரசியல் செயற்பாட்டாளர்களும் 'வன்முறை' குறித்த உரையாடலைத் தொடங்க வேண்டியது அவசியமென்றே தோன்றுகிறது.


சில குறிப்புகள்:

1. நக்சல்பாரிகளை அரசு ஒடுக்கியபோது பெரியார் ஆதரித்ததான தகவல், புதியகலாச்சாரம் இதழில் வெளிவந்த 'பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்' கட்டுரைத் தொடரில் படித்த நினைவு. ஆண்டு நினைவில்லை.

2.சமீபத்தில் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தைப்' படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1938 தொடங்கி 1969 வரையிலான நிகழ்வுகளைக் கூறும் அந்நூலில் 1938ல் நடைபெற்ற முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிப் பல்வேறு போராட்டங்களில் மு.கருணாநிதி பங்குபெற்றது விவரிக்கப்படுகிறது. ஆனால், கலைஞரும் சரி, அண்ணாதுரை உள்ளிட்ட திமுக முன்னோடிகளும் சரி பெரியார் இயக்கத்தில் இருந்தபோதும் மொழிப் போராட்டங்களிலேயே ஈடுபட்டிருந்தார்களே தவிர சாதியழிப்புப் போராட்டங்களில் அல்ல. "1930களுக்குப் பிறகு மொழிப்போர் பெரியாரியக்கத்தின் தன்மையையே மாறியது" என ஆய்வாளர் வ.கீதா அடிக்கடி கூறுவதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

3.காந்தியின் போராட்ட வடிவங்களைச் சமண மரபோடு இணைத்துச் சொன்னவர், தமிழ் மென்பொருளாளரும், வேறு பெயரில் சில சிறுகதைகளை எழுதியவருமான நண்பர் இரா.துரைப்பாண்டி.

உதவியவை:

1. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்- ஆனைமுத்து தொகுப்பு
2. திராவிடர் கழகம் வெளியிட்ட 'பெரியார் களஞ்சியம்' தொகுதிகள்.
3.உலகத்தலைவர் பெரியார்- வாழ்க்கைவரலாறு பாகம்2 - திராவிடர்கழக வெளியீடு.
4.திராவிடத்துவா - சேம்ஜி,
5.அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் ஏன்? - பெரியார் திராவிடர் கழக வெளியீடு.
6. பெரியார்கணிணி - பேராசிரியர் மா. நன்னன்
6.thamilachi.blogspot.com

(16.09.2007 அன்று திருப்பத்தூர் தூயநெஞ்சர் கல்லூரியும் பகுத்தறிவாளர்கழகமும் இணைந்து ஏற்பாடுசெய்த 'தமிழ்ச்சமூகமும் பகுத்தறிவும்' கருத்தரங்கில் பேசியதன் எழுத்துவடிவம்)

14 உரையாட வந்தவர்கள்:

 1. லக்கிலுக் said...

  உ.த. ஸ்டைலில் கொஞ்சம் பெரிய பதிவாக இருப்பதால் நேரம் கிடைக்கும்போது படித்துவிட்டு பின்னூட்டம் போடுகிறேன்.

 2. கே.என்.சிவராமன் said...

  தக்க சமயத்தில் வந்திருக்கும் உரையாடலுக்கான பதிவு இது.

  ஆனால், சில கேள்விகள் எழுகின்றன.
  //இந்திய ஆளும் வர்க்க வன்முறை கட்புலனாகா வன்முறை (invisible violence) வன்முறையைக் கைக்கொண்டு பார்ப்பனியத்தை அழித்தொழித்த முன்மாதிரிகளும் நமக்கில்லை //

  இதை நான் ஏற்கவில்லை. பார்ப்பனீயம் தோன்றிய விநாடியே அதற்கான எதிர்வினையும் தோன்றிவிட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு ஆதிக்க சாதியின் தோளை தொற்றிக் கொண்டுத்தான் பார்ப்பனீயம் பயணம் செய்திருக்கிறது. செய்தும் வருகிறது. எனவே அந்தந்த காலகட்டத்து சூழலையும், பார்ப்பனீயர்கள் அப்போது வகித்த பங்கையும் கருத்தில் கொண்டே அந்தந்த காலகட்டத்து 'போர்' முறைகள் அமைந்தன.

  பெரியாரின் காலகட்டத்தில் சட்டமும், நீதியும், அரசும் பார்ப்பனீயமாக இருந்தன. இன்றும் உச்சநீதி மன்றம் உச்சிக் குடுமி மன்றமாக இருப்பதை பார்க்கும்போது பெரியாரின் காலகட்டத்தை நினைவில் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது.

  அதனால்தான் அந்த மூன்று இடங்களிலும் கொட்டமடித்த பார்ப்பனீயத்தை அப்புறப்படுத்த நடவடிக்கைகளில் இறங்கினார். அதில் உணர்ச்சிகளுக்கு அவர் இடம் தரவில்லை. தந்திருந்தால் இப்போது 'தமிழ்மணம்' இருந்திருக்காது. 'அவாள்மணம்'தான் இருந்திருக்கும். கும்மியடிக்க பஞ்சகச்ச மாமாவும், மடிசார் மாமியும்தான் வந்திருப்பார்கள். லக்கிலுக்கின் டவுசர் கிழியாமலேயே போயிருக்கும். நிதானத்தை கடைப்பிடித்ததுதான் அவரது பலம்.

  //ஜெயிலை இடித்து சிறை மீட்கப் போகிறீர்களா? அதெல்லாம் மகாமகா முட்டாள் தனம்.//

  //தடை உத்தரவைச் சர்வ சாதாரணமாக மக்களுக்கு பயமின்றி மீறுவதென்பது வெறும்வீரர் பட்டத்தையோ அதன்மூலம் ஓட்டு பெறுவதற்கு அல்லது பதலி பெறுபவர்களுக்குச் சுலபமாயிருக்கலாம். அதுவே அவர்களுக்குக் கொள்கையாகவும் பிழைப்பாகவுமிருக்கலாம். ஆனால் நமக்கிருக்கும் பொறுப்பும், லட்சியமும் மிகமிக இன்றியமையாததாகும்//

  என்ற பெரியாரின் இந்த கருத்துக்களை அந்தவகையில்தான் புரிந்து கொள்கிறேன்.

  இப்போதைய காலகட்டத்தில் பெரியாரின் அணுகுமுறையை மட்டுமே ஆயுதமாக கொள்ள முடியாது. உடன் வேறொரு 'போர்'முறை அவசியம். அது எந்தமாதிரி என்பதற்கான உரையாடலாக இந்தப்பதிவு அமையும் என நம்புகிறேன்.

 3. இறக்குவானை நிர்ஷன் said...

  நன்றாக இருக்கிறது.இன்னும் நிறைய எழுதுங்கள்.

 4. மிதக்கும்வெளி said...

  தோழர் பைத்தியக்காரன், (நீங்கள் பெயர் வைத்திருக்கிறீர்கள், நாங்கள் வைக்கவில்லை, அவ்வளவுதான் ((- )

  யோசிப்பதற்கான விசயமும் நேரமும்கூட/ தொடர்ந்து உரையாடுவோம்.

 5. K.R.அதியமான் said...

  then what is the alternative to parliamentary democracy ? oligraphy, millitary dictatorship,
  communist regimes ?

  it takes centuries for a proper evolution of basic and full democracy. Switzerland evolved into a most decentralised democry from being a feudal oligarchy thru the centuries. but first for that people's ethics and participation is a must.

  In this blooging world i rarely find sensible and balanced posts about anti-brahminsim like yours.
  most of the posts are personal attacks and induce hatred and revulsion and solve nothing.

  Can you compare the present state of Andhra or Kerala which did not have any Periyar or DK movments ?
  industrialisation (and abolition of feudalism), literacy, and media, combined with reservation has transformed these states like in TN, without any overt 'hatred' for 'paarpanarhal' as it seems in TN..(as opposed to anti-brahminsim)

  and the rise of BJP in TN, esp in Coimbatore and Kanyakumari regions ?

  Periyar statue in Srirangam was damaged by non-brahmin OBCs of Hindu munnani of Coimbatore. unimaginable a few decades ago ?
  how did it happen ?

 6. ஜமாலன் said...

  தோழர் சுகுணாவிற்கு,

  முக்கியமான உரையாடலை துவக்குவதற்கான ஒரு நீண்ட கட்டுரையை பதிவாக இட்டிருக்கிறீர்கள். நான் தங்கள் அளவிற்கு பெரியாரை வாசித்தவன் இல்லை. அதனால், தாங்கள் தோகுத்துளள பெரியார் பற்றிய பல செய்திகள் எனக்கு புதியவை. இருப்பினும் தங்களது கட்டுரை உருவாக்கிய சில கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன்.

  //போராட்டம் என்னும் வார்த்தைக்குப் பதிலாக அவர் 'கிளர்ச்சி' என்னும் வார்த்தையையே பாவித்தார். 'புரட்சி' என்னும் சொல்லாடலின் இடத்தை 'தலைகீழாய்க் கவிழ்ப்பது' என்று நிரப்பினார். 'வன்முறை' என்னும் சொல்லாடலைப் 'பலாத்காரம்' என்னும் சொல்லாடலின் மூலம் பதிலீடு செய்தார்//

  வன்முறை போன்ற சொற்களை சொல்லாடல் என்று கூறமுடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை. பெரியார் ஒரு புரட்சியாளர் இல்லை. அவர் ஒரு கலகக்காரர். இவ்வேறுபாடு உங்களுக்கு புரியும். அடிப்படை சமூகமாற்றம் குறித்து அவர் சிந்திக்கவில்லை. அதற்கான முன்நிபந்தனையாக சுயமரியாதை அதாவது சுயமாக சிந்திக்கக்கூடிய ஒரு தன்னிலை உருவாக்கத்தின் தேவையை அவர் உணர்ந்தார். அல்லது ஒரு புரட்சிகர தன்னிலை உருவாக வேண்டுமென்றால் முதலில் அத்தன்னிலை கட்டுண்டு கிடக்கும் ஆதிக்க கருத்தியல்களில் இருந்து விடுபடவேண்டும். அல்லது புரட்சி என்கிற கருத்தை தனக்கு அடிப்படை மாற்றம் தேவை என்பதை உணரக்கூடியதான அல்லது சிந்திக்கக்கூடியதான மனிதனாக மாற்ற வேண்டும். இதனை பெரியார் செய்தார். மத, புராண குறியீடுகளின் ஆதிக்கத்திலிருந்து தன்னிலையை விடுவிக்க முயன்றார். இதன் பொருள் பெரியார் புரட்சிகுறித்த சிந்தனையுடன் இதனை செய்தார் என்பதல்ல. பெரியாரின் செயல்பாடு தன்னறிவின்றி இதனை செய்தது. அல்லது பெரியார் அன்றைக்கான கருத்தாக்கச் சட்டமாக அதாவது அறிவுககுவியமாக இருந்த பார்ப்ணீயத்தை எதிர்த்து சிதைத்து பகுத்தறிவு என்கிற அறிவுக்குவியத்தை கட்டமைத்தார்.

  //'அழிவுவேலை' என்பதை நிறுவனங்கள், பிரதிகள் மற்றும் குறியீடுகளை அழித்தொழிப்பதாய் அர்த்தப்படுத்தினாரேயல்லாது தூலமான வன்முறையை அவர் ஆதரித்தாரில்லை. //

  பெரியார் கருத்தியலையும் பெரியார் நடைமுறைகளையும் நாம் பிரித்துணர்வது அவசியம். பெரியாரின் கருத்தியல் முன்குறிப்பிட்ட அறிவுக் குவியத்துடன் தொடர்பு கொண்டது. அவரது போராட்ட மற்றும் இயக்க வடிவங்களோ ஆதிக்கத்தின் அதிகார விளையாட்டுடன் உறவு கொண்டது. கருத்தியல் புரட்சிகரமான உள்ளடக்கத்தை கொண்டிருந்தாலும், போராட்ட இயக்க வடிவங்கள அதிகாரத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிகழ் பரப்பிற்குள் நிகழ்த்தப்படுகிறது. அதனால் வன்முறையை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் குறியீட்டுரீதியலான போராட்டத்தில் வன்முறை என்பது உடலியல் தளத்தில் நடைபெறுவதில்லை, உளவியல்தளத்தில் நடைபெறுகிறது. இதனை பெரியார் சரியாக செய்தார். பார்ப்னீயர்கள் உளவியலில் ஒரு இருப்பியல் பயத்தை கட்டமைத்தார்.

  //' காந்தியைக் கொன்றது ஒரு துப்பாக்கி, அவ்வளவுதான்'//

  இதில்துவங்கி கீழவென்மனிவரை பெரியாரின் கருத்துக்கள் மிகவும் சமரசத்தன்மை வாய்ந்தவை. இச்சமரசம் அவரது போர்த்தந்திர யுத்தியைச் சார்ந்த சமரசமா? அல்லது அவரது கொள்கை அளவிலான சமரசமா? என்பதற்கான ஆதரங்களை பெரியார் குறித்த ஆழ்ந்த வாசிப்பின் மூலமே அறியமுடியும்.

  //அவரது முதலும் முடிவுமான அரசியல் செயற்பாடுகளின் அடிநீரோட்டமாக சாதியழிப்பும் பார்ப்பன எதிர்ப்புமே அமைந்திருந்தன என்பது வெளிப்படை//

  உங்களின் இந்த பார்வை சரியானதுதான். இது அவரது கருத்தியல் சார்ந்த செயற்பாடு. ஆனால் அதிகாரத்துடன் ஆன அவரது வினை என்பது மிகவும் கெள்விக்குரியதாகவே உள்ளது.

  காவல்துறைக்குறித்து பெரியாரின் கண்ணோட்டம் பொதுபுத்திசார்ந்தது அரசு, அரசாங்கம் மற்றும் அதிகாரம் குறித்த அவரது பார்வை சமரசம் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அரசையும் அரசாங்கத்தையும் அவர் ஒன்றாக குழப்பிக் கொண்டிருக்கிறார். பெரியார் ஒரு சீர்திருத்தவாதி என்பதையே இவை காட்டுகின்றன. அவர் அரசதிகாரத்தை இருக்கும் நிலையில் சீரமைக்க முனைந்தவராகவே காணப்படுகிறார். தங்களது குறிப்புகளில் இருந்து அந்த முடிவிற்கே வரவேண்டி உள்ளது. இக்கண்ணோட்டம் உத்தம்சிங் பாராளுமன்றத் தாக்குதல்வரை நீண்டுச் செல்கிறது.

  //"இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், 'ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு 'அரசநாயகம்' ஏற்படவேண்டும் " //

  இதுதான் பெரியாரியம் தர்க்கரீதியாக அடையும் இடம். இது பி.ஜே.பி-யின் தற்போதைய நிலைபாடு என்பது சொல்லாமலே புரியும். இத்தகைய முரண்பாடுகள் பெரியாரை மறுவாசிப்பு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன. பெரியாரின் இத்தகைய முரண்பட்ட போக்குகளை அதன் காலத்துடன் இனைத்தே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவையெல்லாம் பெரியாரின் அளப்பறிய கருத்தியல் பணியை மறுப்பதாகிவிடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  //கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது//

  பெரியார் ரஷிய பயணத்திற்கு பிறகு 1924-ல் என்று நினைக்கிறேன் கம்யூணிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் கொண்டுவந்து கம்யூணிஸ்ட் அடையாளத்தை வெளிப்படுத்தியதாகவும் அதன்பின் அவர் காங்கிரஸில் சமசரமாகிக் காண்டதாகவும் அவரது வர்க்கப் பிண்ணனியைக் கொண்டு ஒரு ஆய்வைப்படித்த நினைவிருக்கிறது. எதில் படித்தேன் என்று நினைவில் இல்லை. அப்படிப்பட்ட பெரியார் மேற்கண்ட வாசகத்தை சொல்லியிருப்பதன் பிண்ணனி புரியவில்லை. தமிழ் ஓட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர் காலத்தில் பெரும்பாலும் பார்ப்பனத் தலைமையைக் கொண்டிருந்ததால் இருக்கலாம்.

  //காந்தியின் போராட்ட வடிவங்கள் உடலை வருத்தும் முறைமைகளைச் சார்ந்தவை//

  காந்தியின் போராட்டமுறை என்பது உடலியல் தளத்திலானது என்றாலும் அவரது குறி எதிரியின் உளவியல் தளத்தை குறிவைத்தே செய்யப்பட்டது. காந்தி ஆதிக்கத்துடன் வேறுவிதமான அதிகார விளையாட்டை நிகழ்த்தியவர். அவரது போராட்டம் என்பது கணவனுக்கு எதிரான மணைவியின் போராட்டத் தன்மையைக் கொண்டது. அதாவது உள்ளிருப்பு வேலைநிறுத்தம், உண்ணாவிரதம், ஆணைகள் மீறுதல் போன்ற செயல்கள் மூலம் கணவனின் உளவியல்தளத்தில் ஒரு அழுத்தத்தை உருவாக்கி போராட்டத்தில் வெற்றியடைதல். காந்தியின் இந்தவகை போராட்டம் பெண்தன்மை என்று சொல்லமாட்டேன் மணைவிதன்மை கொண்ட போராட்ட வடிவமாகும். வெள்ளையனின் ஜனநாயக உணர்வு காந்தியின் பேராட்டத்தை மனரீதியாக எதிர்கொள்ள சங்கடப்பட்டது. ஆணால், இன்றைய இந்திய அதிகாரவர்க்கம் காந்தியின் போராட்ட வடிவங்களை எந்த சங்கடமும் இல்லாமல் சாகடித்தவிடும். காந்தியை பட்டினிப்போட்டு கொன்றுவிடும்.

  தாங்கள் இதில் குறிப்பிடும் எதிர்அரசியல் எனபதை தூலமாக விளக்கினால் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். புத்தர், கம்யூனிஸம், அம்பேத்கர். பெரியார் ஆகிய இயக்க்ங்களை எதிர் அரசியல் என்கிறீர்கள், அதாவது எதிர்ப்பு அரசியல் என்கிற அர்த்தத்திலா? அல்லது மாற்று அசியல் என்கிற அர்த்தத்திலா?

  //கம்யூனிச சமூகத்தில் அரசு உலர்ந்து உதிரும் என்றது மாக்சியம் ஆனால் பல் கம்யூனிஸ்டு கட்சிகளின் அரசுகளோ புரட்சிக்குப் பின் இறுகி நிறுவனமயமாகின //

  இதில் சில முரண்பாடுகள் உண்டு. கம்யூனிஸ சமூகம் என்கிற ஒன்று இதுவரையில் வரலாற்றில் இல்லை. சோஷலிஸ மற்றும் மக்கள் ஜனநாயக அரசுகள்தான் உள்ளன. இவை இறுகுவதற்கும் நிறுவனமயமாவதற்கும் பல காரணங்கள் உள்ளன. ஆணால், அக்காரணங்கள் மார்க்ஸ் மற்றும் கம்யூனிஸ சித்தாந்தங்களில் இருந்து வரவில்லை. ஒருவேளை கம்யூனிஸம் என்பதே ஒரு உடோப்பியா அதாவது கற்பணார்த்தமான சமூகம் என்று கூறலாம். அது வேறுதளத்திலான விவாதம். அரசு உலர்ந்து உதிரும் என்கிற லெனினியக் கோட்பாடு அதன் சாத்தியமாவதற்கான காலகட்டத்தை அல்லது அதற்கான நிபந்தனையை இன்னும் அடையவில்லை.

  அம்பேத்கரால் வெற்றிகரமாக பாராளுமன்ற அரசியல்வாதியாக முடியாமைக்கு காரணம் இந்திய பாராளுமன்றம் என்பது முதலாளிய ஜனநாயக உணர்வை அடிப்படையாகக் கொண்டதல்ல அது பார்ப்பனீய வர்ணதர்மத்தை உளளார்ந்த நிலையில் கொணட ஒரு அமைப்பாகும்.

  //எப்படி இருந்த போதிலும், அரசு ஆதரவு, எப்படி ஒரு அரசை கையாளுவது அல்லது பயன்படுத்துவது (How to handle the state?) என்ற கேள்விகள் இன்னமும் தொடர்கின்றன//

  மேற்கண்ட கேள்விகள் எந்தவகையில் எதிர் அரசியலுடன் தொடர்பு கொண்டது என்பதை விரிவான அலசலுக்கு உட்படுத்த வேண்டும். அரசையும், அரசு ஆதரவையும் கையாளுவது அல்லது பயன்படுத்துவது நெர்மறையாகவா? அல்லது எதிர்மறையாகவா? நேர்மறையாக என்றால் அது கம்யூணிஸ்ட் அல்லாத பாராளுமன்றக் கட்சிகளாகவும் எதிர்மறையாக என்றால் ஓட்டுவாங்கி வலது இடது கம்யூனிஸ்ட் கட்சிகளாகவும் மாற வேண்டும். இரண்டும் ஒன்றுதான். புரட்சி என்பது மேற்கண்ட கேள்வியை தூக்கி எறிவதுதான்.

  // 'எல்லா அதிகாரங்களும் வன்முறையுடனேயே தோன்றின, அவை வன்முறையாலேயே நிலைபெற்றன, அவை வன்முறையாலேயே அழிக்கப்படும்' என்கிற புரட்சிகரச் சூத்திரத்தை அப்படியே இந்தியச் சூழலுக்குப் பொருத்திவிட முடியாது. ஏனெனில் இந்திய ஆதிக்கக் கருத்தியலாகிய பார்ப்பனியம் தூலமான வன்முறைகளை விடவும் கருத்தியல் சார்ந்த வன்முறைகளையே பெரிதும் நம்பியிருக்கிறது.//

  இறுதியாக, இக்கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். இதுதான் இந்திய புரட்சிக்கான குறிஇலக்காக அம்பேதகர் முன்வைத்த பார்வை. முதலளிகளுடன் பார்பனியமும் அழித்தொழக்கப்படாமல் இந்தியப் புரட்சி சாத்தியமில்லை. அம்பேத்கர் யுத்ததந்திரரீதியாக இதனைப் பார்த்தார். போர்த்தந்திரரீதியாக தலித் பிரச்சனைகளை முன்வைத்தார். பெரியாரிடம் யுத்ததந்திரம் இல்லை அதனால் அவரது பார்ப்பனீய எதிர்ப்பு என்கிற போர்த்தந்திரம் இலக்கற்ற ஒன்றாக மாறியது என்பதே வரலாற்றின் சோகம்.

  பின்னோட்டம் உரையாடலுக்கானது என்பதால் நீண்டுவிட்டது.

  அன்புடன்
  ஜமாலன்

 7. Anonymous said...

  ஒரு வர்கத்தின் மக்களை கொளுத்துவதால் வர்கம் அழிந்துவிடாது என்ற உண்மையை அறிந்து வைத்திருந்தவர் பெரியார்.
  இதயப்பூர்வமாக ஒரு உன்னதமான சமுதாயத்தின் நிர்மாணத்தில் நாட்டம் இருக்குமானால் நாம் ஒருவர்க எதிர்ப்பில் வலுவில்லை என்பதை உணர்ந்திருப்போம். பார்ப்பனீயத்தை நாம் ஏசுவதாயினும் அது ஒவ்வொறு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் "நான் மேதாவி, என்னை வணங்குங்கள்" என்ற விகாரத்தின் வெளிப்பாடே என்பதை அறிந்து அந்த விதத்தில் நம் "போர்" முறை அமைந்திருக்கட்டும். "நீ தவறு, நான் சரி" என்ற போர் முரசுகள் "மனநோயாளிக்கு" நம்பூதிரி சிகிச்சை போலது.

  - ராஜி

 8. ROSAVASANTH said...

  http://rozavasanth.blogspot.com/2006/06/blog-post_04.html

 9. மு. சுந்தரமூர்த்தி said...

  Suguna,
  Very good article. It should be read with Rosavasanth's article to understand Periyar's position on non-violence.

  In one of his last essays in 'layam' or 'meeRal', Pramil wrote about Periyar's adherence to non-violent methods to achieve his objectives. Pramil claimed that Periyar's meeting with J. Krishnamurthy had a stong influence. I don't have those magazines handy.

 10. ஜமாலன் said...

  //ஒரு வர்கத்தின் மக்களை கொளுத்துவதால் வர்கம் அழிந்துவிடாது என்ற உண்மையை அறிந்து வைத்திருந்தவர் பெரியார். //

  கீழ்வெண்மனி பிரச்சனையில் பெரியார் மெளனம் சாதித்தது என்பதும் கண்டிக்காததும் பெரியரின் ஜனநாயகம் குறித்த பார்வை அடிப்படையிலானது. யூதர்களை ஹிட்லர் கொன்று குவித்தான் அதனையும் இப்படி நியாயப்படுத்தலாமா? அது பாசிச கொலைவெறி. இனச்சுத்தகரிப்பு. மனிதகுலத்திற்கு எதரானது. காஷ்மீரில் 36 பூஜாரிகளை தீவிரவாதிகள் கொன்றதையும் இப்படி நியாயப்படுத்தலாமா?

 11. Anonymous said...

  தோழர் ஜமாலன்,
  என் பின்னுட்டத்தை வாசித்ததற்கு மிக்க நன்றி. ஆனால் என்னுடைய எந்த கருத்து நீங்கள் குறிப்பிட்ட மிருகத்தன்மை வாய்ந்த செயல்களை நியாயப்படுத்துகிறது என்று புரியவில்லை.

  - ராஜி

 12. ஜமாலன் said...

  தோழர் ராஜிக்கு,

  உங்களது வாசகத்தை குறித்துள்ளேன். தாங்கள் வாசகத்தின் பொருள் இப்படி ஒரு தவறான அர்த்தத்தை தருவதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளேன். மற்றபடி நீங்கள் நேரடியாக மிருக வெறி பற்றிக் குறிப்பிடவில்லை.
  ஆணால், ஒர வர்க்கத்தின் மக்களை கொழுத்துவதால் ... என்கிற வாசகம் இந்த வன்முறையை வெளிப்படுத்தவில்லையா?

 13. bhushan said...

  Suguna Diwakar avargalukku, View my profile engira idathil Marx matrum Jenny-in photo-vai vaithirukkeereergale ! Adharkku artham enna? Marxisathin abimani enra? Vungal blog-il idhu varai naan Marxistha patri naan padithadhillai.

 14. முரளிகண்ணன் said...

  nice post informative and thought provoking